இந்த இறுதிப் பகுதியில் தேநீர் பற்றிய சில பொது விஷயங்களைத் தந்திருக்கிறேன். முதலில் வடுவூர் குமாரின் கேள்வி பற்றி.
இந்தியாவில் டீ ஏலம் நிலைநிறுத்தப்பட்ட ஒரு அமைப்பு. இந்த அமைப்பில் பங்கேற்க சில சட்ட திட்டங்கள் உண்டு – ஏலம் எடுப்போரும், டீயை விற்போரும் இந்த சட்ட திட்டத்திற்கு உட்பட்டே ஆக வேண்டும். யார் வேண்டுமானாலும் ஏலம் எடுக்கலாம், இந்த சட்ட திட்டங்களௌக்கு உட்பட்டு இருக்கும் வரை. ஏலம் எடுத்தவருக்கும், விடுபவருக்கும் சில பொறுப்புகள் உண்டு – ஏலம் விடுபவர், குறிப்பிட்ட அளவு தேயிலையை ஏலம் எடுத்தவருக்கு இத்தனை நாட்களுக்குள் (சாதாரணமாக 72 மணி நேரம்; ஏலம் எடுப்பவருடன் பேசி ஒத்துக்கொண்டால் இந்த கால நிர்ணயம் மாறலாம்) கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கனவே ஒத்துக்கொண்ட அளவு அபராதம் கட்ட வேண்டும். அதே போல ஏலம் எடுத்தவர், அதே போல குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பணத்தையும் செலுத்த வேண்டும் – தவறினால் அதற்கும் அபராதம் (வட்டி) உண்டு. ஏலம் நடத்தும் அமைப்பு இதையெல்லாம் அதன் செயல்பாட்டு ஆவணங்களில் விபரமாக விளக்கியிருக்கும். ஏதாவது பிரச்சனை வந்தால் ஆர்பிட்ரெஷன் (Arbitration) என்று சொல்லப்படும், ஒரு நடு நிலை வகிப்பவர் கூறும் தீர்ப்பை இரு தரப்பாரும் ஏற்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரை அதனுடைய டீ பொட்டலங்கள் எப்போது விற்பனையாகிறது என்பது மிக முக்கியம். தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட தேயிலையின் சுவை, ருசி ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் – இது இயற்கை. முதலில் தோட்டத்தில் டீத் தூளாக்கப் பட்டு, ஏலத்தின் மூலமாக தொழிற்சாலைக்கு வந்து, பொட்டலமாகி, மொத்த வினியோகஸ்தரிடம் வந்து, பின் அங்கிருந்து சில்லறை வினியோகஸ்தர்கள் மூலமாக உங்கள் தெருமுனை கடைக்கு வருகிறது. பின் நீங்கள் வாங்கி தினம் இரண்டு-நான்கு ஸ்பூன் கணக்கில் டீயாக அருந்தப் படுகிறது. இதில் நேரம் முக்கியம் – இரண்டு காரணங்களால். ஒன்று டீயின் சுவை குறைவு. இரண்டாவது நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்த 72 மணி நேரத்தில் பணத்தை கொடுத்தாக வேண்டும். நம் போன்ற உபயோகிப்பவர்கள் டீ வாங்கி பணம் கொடுக்கும் வரை நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும் – காலம் அதிகமாக முதலுக்கு வட்டியும் அதிகம்.
நிறுவனங்களே உங்களுக்கு விற்பது என்று எடுத்துக் கொண்டால் ரொம்ப நாள் காத்திருக்க வேண்டும். ஆதலால் அவர்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு தன் பொட்டலங்களை விற்று விடுவார்கள். அந்த மாதிரி விற்கும் போதே பணமும் நிறுவனத்துக்கு வந்து விடும். முக்கால் வாசி நிறுவனக்கள் சில்லறை வினியோகஸ்தர்களிடம் இருந்து நிறுவனத்தின் பெயரில் முன்னமேயே கையொப்பமிட்ட காசோலைகளை வங்கி பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். மொத்த வினியோகஸ்தர்களிடம் இருந்து பொட்டலங்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு அனுப்பப் படும் போது இந்த காசோலைகள் வங்கிகளில் நிறுவனங்கள் கணக்கில் போடப்படும். பொருளை காசு கொடுத்து வாங்கி கடைகளுக்கு விற்பதால் இந்த சில்லறை வினியோகஸ்தர்களுக்கு வரும்படி வேண்டும்; அதே போல் தெரு முனையில் இருக்கும் கடைக்காரரும், தன் சொந்தக் காசைப் போட்டு பொட்டலம் வாங்குவதால் அவருக்கும் வரும்படி வேண்டும். இதை எல்லாம் கணக்கில் வைத்து, கடையில் நீங்களும் நானும் வாங்கும் விலையிலிருந்து, கொஞ்சம் குறைவாகவே நிறுவனக்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு விற்கும். இது போதாதென்று, நிறுவன இருப்பு அதிகமானால் ‘தற்காலிக விலைக் குறைப்பு’, மற்றும் ‘சிறப்புத் தள்ளுபடி’ என்றெல்லாம் சொல்லி நிறுவனக்கள் விற்பனையைப் பெருக்க முயலும்.
இது மட்டுமல்லாமல் இந்த பொட்டலங்களை ஒவ்வொரு இடமாக அனுப்பி, ஏற்றி இறக்குவதால் வரும் சேதம், நாள் கடந்து போனதால் விற்க முடியாமல் திரும்பி வரும் சரக்கு (அனேகமாக அனைத்து நிறுவனங்களும், கடைக்காரர்களிடம் இருந்து இதை ஏற்றுக் கொள்ளும்; இதை கமிஷனாக (அளவைப் பொறுத்து) கடையிலிருந்து திரும்ப பெற்றுக் கொள்ளும் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு நிறுவனங்கள் தந்து விடும்), என்றெல்லாம் வேறு செலவு. உற்பத்தி செய்யும் செலவோடு, இவற்றையெல்லாம் அனுமானித்து, விற்கும் விலையை நிர்ணயிப்பது அவ்வளவு சுலபமல்ல. அடிக்கடி விலயையும் மாற்ற முடியாது. ஒட்ட வேண்டிய லேபலில் இருந்து எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். இத்தனையும் மீறி இந்த வியாபாரத்தில் பணம் பண்ணுவதற்கு கொஞ்சம் திறமை வேன்டும்.
என்னுடைய பயிற்சியின் போது இரண்டு வாரங்கள் விற்பனைப் பிரிவில் இருந்தேன். விற்கும் அதிகாரியுடன் (Sales Manager) மொத்த வினியோகஸ்தர் (C&FA), சில்லறை வினியோகஸ்தர் (Distributor), மற்றும் கடைகள் (Shops) எல்லாம் போயிருக்கிறேன். இந்த அதிகாரி அவர்களோடு விற்பனைக்காக ஹிந்தியில் பேசுவதை (மிரட்டல், கெஞ்சல், கொஞ்சல், புகழ்ச்சி, பேரம் - எல்லாம் உண்டு) கேட்டு பிரமித்துப் போயிருக்கிறேன். அவரோடு சேர்ந்து டீ விளம்பரத் தோரணம் (YELLOW LABEL) கட்டியிருக்கிறேன். அவர் தொலைபேசியில் உயர் அதிகாரிகளுடன் தற்காலிக விலைக் குறைப்புக்காக போராடியதைக் கேட்டிருக்கிறேன் (உயர் அதிகாரி மறுத்தது வேறு விஷயம்; போதாக் குறைக்கு உங்களுக்கு - என்னையும் சேர்த்துத்தான் - விற்கத் தெரியவில்லை என்று அவர் கோபிக்க வேறு செய்தார்). இந்த இரண்டு வார பயிற்சி முடிந்ததும் எனக்கு நிச்சயமாய் தெரிந்த ஒரு விஷயம் - என்னால் இந்த விற்பன வேலையை செய்ய வராது, முடியாது என்பதுதான்!
இந்தியாவில் தேயிலை உற்பத்தி கிட்டத்தட்ட 9 லக்ஷம் மெட்ரிக் டன் (90,00,00,000 கிலோ - 90 கோடி கிலோ). 2003-ம் வருடத்தில் வட இந்தியாவில் 66.36 கோடி கிலோவும், தென் இந்தியாவில் 19.34 கோடி கிலோவும் விளைந்தது (மொத்தம் 85.7 கோடி கிலோ). இதில் பெரும்பான்மை சதவீதம் ஏலத்தின் மூலமாகத் தான் விற்பனையாகின. கிட்டத்தட்ட 20 கோடி கிலோ ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த விற்பனை முறை ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. எத்தனையோ சின்னச் சின்ன மாற்றங்கள் வந்தாலும், இந்த அடிப்படை விற்பனை முறை நூறு வருடங்களுக்கும் மேலாக மாறாமல் இருக்கிறது. அதே போல தேயிலையிலிருந்து டீத் தூள் செய்வதிலும் மிகப் பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை – க்ரீன் டீ என்று சொல்லப்படும் நீராவி மூலம் பதப்படுத்தப்படும் முறையைத் தவிர.
இருபது – முப்பது வருடங்களுக்கு முன் இந்தியா உலகிலேயே அதிக டீ உற்பத்தி பண்ணும் நாடாகவும், ஏற்றுமதி பண்ணும் நாடகவும் இருந்தது. சமீப காலங்களில் கென்யா, இலங்கை போன்ற நாடுகள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. 2004ல் இந்தியாவின் டீ உற்பத்தி 4.3% குறைந்திருக்கிறது – முக்கிய காரணங்கள் தட்பவெப்ப நிலை மாறுதல் மற்றும் அஸ்ஸாமில் கிட்டத்தட்ட 70 தோட்டங்கள் மூடப்பட்டது. ஏற்றுமதியில் க்ரீன் டீ உற்பத்தியினால் சீனா முன்னணிக்கு வந்திருக்கிறது. விபரங்களுக்கு இங்கே. இந்தியாவில் விளையும் டீ உலக உற்பத்தியில் கால் பங்குக்கும் சிறிது அதிகம். இணையத்தில் டீ பற்றி அனேகச் செய்திகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு டீ பற்றிய ஒரு ப்ளாக்.
பொறுமையாக இத்தனை பதிவையும் படித்தவர்களுக்கு என் அனுதாபம் கலந்த நன்றி :-).
தேநீர் – 12; தேநீர் – 11; தேநீர் – 10; தேநீர் – 9; தேநீர் – 8; தேநீர் – 7; தேநீர் – 6; தேநீர் – 5; தேநீர் – 4; தேநீர் – 3; தேநீர் – 2; தேநீர் – 1
4 கருத்துகள்:
இவ்வளவு விபரங்களை கொடுத்த உங்களுக்குத்தான் நாங்கள் நன்றி சொல்லவேண்டும்.
பல பயனுள்ள தகவல்கள்.
ஒன்று மட்டும் மறு உறுதி செய்துகொள்ள முடிந்தது.
மென்மையாக பழகுபவர்கள், பேசுபவர்களுக்கு வியாபாரம்,விற்பனை செய்ய வராது,முடியாது என்று.
பொய் சொல்வது,உண்மையை மறைத்துப்பேசுவது கூட ஒரு கலை?!
இத்தனை நாள் எங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்ததற்கும் நன்றி.
நல்ல தகவல்கள் தந்தீர்கள் ரங்கா. காபி, தேநீர் ஆயிற்று. அடுத்தது என்ன குளிர் பானமா? :)
தொடர்ந்து படித்து, பின்னூட்டமிட்டதற்கு நன்றி குமார்.
//மென்மையாக பழகுபவர்கள், பேசுபவர்களுக்கு வியாபாரம்,விற்பனை செய்ய வராது,முடியாது//
நான் இது போல நினைக்கவில்லை. எனக்கு பேசுவதில் திறமை இல்லை என்பதால் தான் விற்பனை வேலையை என்னால் செய்ய முடியாது என்று சொன்னேன். நான் அதே நிறுவனத்தில் மாட்டுத்தீவனப் பிரிவில் வேலை பார்த்த போது கூட வேலை பார்த்த ஒரு அதிகாரி மிக மென்மையாகப் பேசி பழகக்கூடியவர் - அதே சமயத்தில் மிகச் சிறந்த விற்பனை அதிகாரியும் கூட. நான் என்னுடைய இச்சை, என் திறமையைப் பற்றிய சுய மதிப்பீட்டினால் அப்படிச் சொன்னேன்.
ரங்கா.
இல்லை இ.கொ.
கொஞ்ச நாளைக்கு விடுப்பு. அப்புறம் தான் யோசிக்கணும்.
ரங்கா.
கருத்துரையிடுக