திங்கள், ஜூலை 31, 2006

சுயநலம்

பள்ளியில் படிக்கும் போது மோசமான குணங்களில் ஒன்று சுயநலம் என்று பெரும்பான்மையான ஆசிரியர்கள் சொன்னார்கள். பாடங்களிலும், சுயநலம் எவ்வளவு மோசமானது என்பதை விளக்கும் கதைகள் இருந்தன. போதாதற்கு, வீட்டிலும், பழகிய ஏனைய பெரியவர்களும் இது தவறு என்பது போன்றே சொன்னார்கள். பொதுவாக மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்; அதுமாதிரி இல்லாமல் நாமே அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தால் அது சுயநலம் என்ற மாதிரி விளக்கம் வந்தது. அதிகமாக யோசிக்காமல், இதர பழக்க வழக்கங்கள், குணங்கள் போன்று (உ.ம். நகம் கடிக்காமல் இருத்தல், போய் பேசாது இருத்தல்) சுயநலம் பற்றிய ஒரு முடிவையும், அதிகம் விவாதிக்காமல் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையில் இது வரை வந்தாயிற்று.

வெளியுலகில், முக்கியமாக அலுவலக வாழ்க்கையில், பொய், சுயநலம் போன்றவற்றிற்கு எக்கச்சக்கமான விளக்கங்கள் கிடைத்தன. வயது ஏற ஏற, வரும் அனுபவங்கள் இது போன்று கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்ட குணங்களையும், வழக்கங்களையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வைத்தன. ஏற்கனவே பொய்/உண்மை பற்றி எனக்குத் தோன்றியவற்றை ஒரு பதிவாக எழுதியிருக்கிறேன். இங்கு சுயநலம் பற்றி நான் புரிந்து கொண்டதையும், பார்த்ததையும், புரியாததையும் பற்றி பதிந்திருக்கிறேன்.

என்னுடைய எந்த செயலும் ஒரு எதிர்பார்ப்பை ஒத்தே எடுக்கப் படுகிறது. எனக்கு சொந்தமாக ஒரு லாபத்தைத் தரா விட்டாலும் கூட, ஒரு எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கிறது. அது எனக்கு 'கடமையச் சரிவர செய்துவிட்டோம்' என்கிற திருப்தியையோ, அல்லது எனக்கு ஒரு நல்ல நினைவை, மன சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது என்பதாலேயோதான் ஒரு செயலைச் செய்கிறேன். நிர்பந்தமாய் எனக்குப் பிடிக்காத செயலைச் செய்வதற்கும் என்னுள் இருக்கும் ஒரு எதிர்பார்ப்பே காரணம். ஒரு உதாரணத்துக்கு வைத்துக் கொண்டால் கூட, ஒருவர் என்னை ஒரு கத்திமுனையில் மிரட்டி பணத்தை திருடிக் கொள்ளும் போதும், நான் பணத்தைக் கொடுக்க 'பணத்தைக் கொடுத்தால், கத்தியால் குத்து விழாது' என்ற ஒரு எதிர்பார்ப்பு முக்கியமான காரணம். எதிர்பார்ப்பு இல்லாமல் காரியங்கள் செய்ததாக நினைவில்லை. இந்த எதிர்பார்ப்பையும், என் மனமகிழ்ச்சியையும், நல்ல நினைவையும், சுயநலம் என்று சொன்னால் என்னுடைய எல்லாச் செயல்களும் சுயநலத்தை எண்ணியே செய்ததாக அர்த்தம் (பொருள்) வருகிறது.

என்னுடைய எல்லாக் காரியத்திலும் கொஞ்சம் சுயலநம் இருப்பதால் விளக்கத்தை சற்று மாற்ற வேண்டியிருக்கிறது. நான் செய்யும் ஒரு காரியத்தில் எனக்கு வரும் நலம், என்னைத் தவிர மற்றவர்களுக்கு வரும் நலத்தை விட அதிகமாக இருந்தால் அது சுயநலம்; மற்றவருக்கு நலம் அதிகமாகக் கிடைத்தால் அது சுயநலம் இல்லை. (நாயகன் திரைப்படத்தில் வரும் வசனம் போல: "நாலு பேருக்கு நல்லது கிடைச்சுதுன்னா எதுவுமே தப்பில்லை"). அதாவது ஒரு செயலில் மற்றவருக்கு கிடைக்கும் நலத்தைவிட சுயநலம் குறைவாக இருக்கிறது.

ஆனால் இந்த இரண்டு விளக்கங்களுமே எனக்கு சரி என்று தோன்றவில்லை. பெரும்பான்மையான மக்கள் வலியப் போய் குற்றங்கள் செய்வது இல்லை; யாரும் கண்டுபிடிக்கப் போவதில்லை என்றால், மற்றவர்களுக்கு அதிகம் நஷ்டம் வராத ஒரு செயலை, அதிலும் அந்த செயலினால் சுயலாபம் வரும் என்றால், செய்யத் தயாராகவே இருக்கிறார்கள். முதல் விளக்கத்தைப் பார்த்துவிட்டு 'எல்லோருமே சுயநலவாதிகள் தான்; ஆகையால் நான் லஞ்சம் வாங்குவது தவறில்லை' என்று நியாப்படுத்தி விடுவார்களோ என்ற பயம் இருக்கிறது. இரண்டாவது விளக்கம் அதைவிட மோசம். ஒரு மந்திரி 'ரோடு போடும் பணியை அனுமதித்தால், லட்சக்கணக்கான மக்களுக்கு நலம் வரும், ஆகையால் காண்ட்ராக்டரிடம் 10% வாங்கினால் என் சுயநலத்தின் மதிப்பு பொதுநலத்தின் மதிப்பை விடக் குறைவானதுதானே. என்ன தவறு?' என்று சொல்லலாம்.

இதற்கு 'சுயநலம் இருப்பது தவறில்லை; அது அதிகமாகப் போய், ஒருவரின் அடிப்படைத் தேவைகளைத் தாண்டி செயல்களைச் செய்யச் சொன்னாலோ அல்லது, மற்றவரின் வாழ்வை, அமைதியைக் குலைக்கும் வண்ணம் இருந்தாலோ தவறு' என்று சொல்வது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதே சமயம், பாலகனாய் இருந்த போது இருந்த தெளிவு, இப்போது - அனுபவமும், அறிவும் அதிகமான போது - இல்லையே என்ற வருத்தமும் வருகிறது. 60 அல்லது 70 வயதிலாவது சரி, தவறு என்ற வித்தியாசம் புரிந்து, தெளிவும் வருமா? தெரியவில்லை; ஆனால் எதிர்பார்ப்பு இருக்கிறது.

செவ்வாய், ஜூலை 25, 2006

பணம் தரும் (உருப்படாத?) யோசனைகள்

அலுவல் நிமித்தமாக கொலம்பஸ் (ஒஹாயோ) செல்ல வேண்டியிருந்தது. பயணம் ஒன்றரை மணி நேரம் என்றால், விமானத்தில் ஏறி ரன்வே செல்லவே ஒன்றேகால் மணி ஆகிவிட்டது! போய் இறங்கினால் கூட வந்த ஒரு பயணியின் பெட்டி வரவில்லை என்று கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்! வெறுத்துப் போய் மற்ற விமானங்களையும் (நியுவர்க்), விமான நிலயத்தையும் (கொலம்பஸ்) வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது வந்த இரு யோசனைகள். இந்த ஐடியாக்களை வைத்துப் பணம் பண்ணலாம் என்று நினைக்கிறேன் (ஒரு நப்பாசைதான்). பணம் தருமா, இல்லை பத்தோடு பதினொன்று என்ற கணக்கில் உருப்படாத யோசனைகள் தலைப்பின் கீழ் போகுமா என்று தெரியவில்லை.

ஒன்று.

சரக்கு விமானத்திலிருந்து சரக்கை வேகமாக இறக்கக் கையாளும் உத்தியை ஏன் பயணிகளுக்கும் உபயோகிக்கக் கூடாது? சரக்கு விமானத்தில் அதன் மூக்கு மேல் நோக்கித் திறந்து கொள்ள (சமயத்தில் அதன் அடி வயிறும் திறந்து கொள்ள), உள்ளே இருக்கும் பிரம்மாண்டமான பெட்டிகள் (கன்டெய்னர்) சுலபமாக கிரேன்களாலும், கன்டெய்னர்கள் இருக்கும் தண்டவாளங்களினாலும் இறக்கப் படுகிறது.

அதே போல விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கையில், விமான இருக்கைகளை ஒரு பெரிய அடித்தளத்தோடு வைத்து, அதில் முதலிலேயே பயணிகளையெல்லாம் உட்கார்த்தி, சீட் பெல்டால் கட்டி வைத்து விட்டு, விமானத்தின் மூக்கையோ அல்லது அடி வயிறையோ திறந்து, இந்த இருக்கைகளை அப்படியே தண்டாவாளத்தின் மூலமாக விமானத்தின் உள் ஏற்றி, விமானத் தளத்தோடு பூட்டு ஒன்று போட்டு இணத்து விட்டால் எல்லோருக்கும் சௌகரியமாக இருக்கும் அல்லவா? காத்து நிற்கும் நேரமும் குறைவு; விமானம் வந்து நின்றவுடன், உள்ளே இருப்பவர்கள் இருக்கைகளோடு மூக்கு வழியாக வெளியேறவும், ஏற வேண்டியவர்கள் வயிற்றின் வழியாக இருக்கைகளுடன் உள்ளே போகவும், பத்து நிமிடங்களில் விமானம் மறுமுறை பயணத்திற்கு ரெடி!

இரண்டு.

விமானப் பயணத்தில் பெட்டிகள் தொலைந்து போவது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. மும்பாயில் மதிய உணவு அலுவலகங்களுக்கு எடுத்துப் போகும் 'டப்பா வாலா'க்கள் கலர் கலரான பெயிண்டால் எழுதும் குறிகளை வைத்து அடையாளம் கண்டு கொண்டு அருமையாக சாப்பாடை கொண்டு சேர்க்கிறார்கள். அவர்களில் சிலரை இங்கு (அமெரிக்கா) கூட்டி வந்து விமான நிறுவனங்களுக்கு பயிற்சி நடத்தலாம்! தொலையும் பெட்டிகளின் எண்ணிக்கை குறையும்.

இன்னமும் யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறேன்: கூட்ட நேரத்தில் இரயிலில் உட்கார இடம் பிடிப்பது எப்படி, ஹைவேயில் எக்ஸிட் எடுக்க முடியாமல் வாகனங்கள் அதிகம் இருந்தால் சுலபமாக வெளியேருவது எப்படி, என்றெல்லாம். உங்களுக்கு ஏதாவது ஐடியா வந்தால் சொல்லுங்கள்.

செவ்வாய், ஜூலை 04, 2006

மனதில் நின்ற ஆசிரியர் - திரு சந்தானம் ஸார்

சிறு வயதில் இருந்து இன்றும் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள், அதிலும் முக்கியமாக பள்ளி ஆசிரியர்கள் எத்தனையோ பேர். எல்லோரைப் பற்றியும் எழுத வேண்டும் என்று ஆசை. இந்த வாரம் அமெரிக்க விடுதலை நாளுக்காக வாண வேடிக்கைகள் வீட்டுக்கு அருகில் எங்கு இருக்கும் என்று இணையத்தில் தேடுகையில், இந்த மத்தாப்பு, வெடியில் இருக்கும் இரசாயனப் பொருள்கள் பற்றியும் ஒரு இணையப் பக்கத்தில் பார்த்தேன். எனக்கு +1 / +2 வில் வேதியல் சொல்லிக் கொடுத்த மறைந்த திரு சந்தானம் ஸார் ஞாபகம் வந்தது.

சந்தானம் ஸார் சொல்லிக் கொடுத்த வேதியலை விட, உலக/நாட்டு நடப்புகள், மனோதத்துவம் பற்றிய அவர் 'பொன் மொழிகள்', இன்னமும் நினைவில் நிற்கிறது. ஒரு சந்தோஷமான வித்தியாசமான மனிதர். சாந்துப் பொட்டு இட்டுக் கொண்டுதான் வருவார். அனேகமாக அத்தனை மாணவர்களையும் பற்றி தெரிந்து வைத்திருப்பார். இவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை; மாணவரை அடித்தும் நான் பார்த்தில்லை. வழக்கமாக முதல் வகுப்பு (பீரியட்) அவருடையது தான். மன்னார்குடி தேசியப் பள்ளியில் அப்போது முதல் இரண்டு வகுப்புகள் 45 நிமிடங்கள்; மற்ற வகுப்புகள் எல்லாம் 40 நிமிடங்கள். முதல் வகுப்பில் தான் இந்த பதிவேடு (அட்டென்டன்ஸ்), லீவ் லெட்டர் (விடுப்பு விண்ணப்பம் என்று எழுதினால் கொஞ்சம் செயற்கையாகத் தோன்றுகிறது; தமிழ் வித்தகர்கள் மன்னிக்க!) சமாச்சாரமெல்லாம். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று லீவ் லெட்டராவது இருக்கும். ஒவ்வொன்றாகப் படித்து ரசித்து சிரிப்பார்; விமர்சிப்பார்!

லீவ் லெட்டரைப் பொறுத்தவரை ஒரு எழுதாத சட்டம், அது ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும். பெரும்பான்மையான மாணவர்கள் தமிழ் வகுப்பில் படித்து விட்டு, +1 ல் ஆங்கில வகுப்புக்கு மாறியிருப்பார்கள் (நானும் எட்டாவது வரைக்கும் தமிழ் மீடியம் தான்; பத்தாவது வரைக்கும் ஆங்கிலத்தில் கொஞ்சம் தயக்கம் இருந்தது; அப்புறம் தயக்கம் பழகி விட்டது!). ஆறாவது/ஏழாவது வகுப்பில் ஆங்கிலப் பாட வகுப்பில் இந்த லீவ் லெட்டர் ஒரு கட்டுரை மாதிரி இருக்கும். ஆகையால் எல்லா மாணவருக்கும் இது தெரியும். இவர் கிண்டலுக்கு பயந்தே எல்லோரும் எந்த காரணமாக இருந்தாலும், இந்த கட்டுரையில் வந்தது போல் லீவ் லெட்டர் எழுதிவிடுவோம்! “As I am suffering from fever, I humbly request you to grant me leave for two days”. நாள் மட்டும் தான் மாறும். இதை சுட்டிக்காட்டி சிரிப்பார். "கல்யாணத்துக்காக திருச்சி போயிருக்கான்; இருந்தாலும் அதே லெட்டர்! அது மட்டுமில்லை. Father’s signature என்று எழுதி ஒரு X குறி வேறு போட்டிருக்கான். நல்லாப் படிச்சு கவர்மெண்ட் உத்தியோகத்தில் அப்பா இருக்கார்; இருந்தாலும் அப்பன் தற்குறின்னு இவனே சொல்றான்!" என்று சொல்லி சிரிப்பார்.

தினசரி நடக்கும் விஷயங்களிலும் ஒரு வித்தியாசமான அணுகுமுறை இவரிடம் உண்டு. "பாத்திருக்கியாடா?" என்று தான் ஆரம்பிப்பார். "ஒரு ரூபாய் கடன் கொடுக்கிறியா? என்று கேட்டால், 'என்னிடம் பணம் இல்லை' என்று மட்டும் சொல்ல மாட்டான்! சட்டைப் பையையோ, பர்ஸையோ திறந்தும் பார்த்துவிட்டு காட்டுவான். ஏன் தெரியுமா? எங்கே நமக்கே தெரியாமல் ஒரு ரூபாய் வந்திருக்குமோ? என்று ஒரு நப்பாசைதான். இவன் கிட்ட ரூபாய் இருக்காது என்று கேட்பவனுக்குத் தெரியாதா என்ன? இரண்டு பேரும் கிளாசுக்கு மட்டம் போட்டுட்டு சேர்ந்து தானே மாட்னி போனாங்க?!"

எங்கள் வகுப்பு மாடியில் இருந்தது, ஜன்னலிலிருந்து ரோடை பார்க்கிற மாதிரி. ஒரு முறை ரோட்டில் ஏதோ ஊர்வலம் போனது. எல்லொரும் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னது: "பாத்தியாடா? 'வரி கொடுக்க மாட்டோம்'ன்னு சொல்றத்துக்கு ஒரு ஊர்வலம். கொஞ்ச தூரம் போனதும் பள்ளம் தடுக்கி கீழே விழுவான்! அப்ப முனிசிபாலிடியைத் திட்டுவான் - 'ரோடு ஒழுங்காப் போடலை'ன்னு. ஏண்டா - நீ வரி கொடுத்தாத் தானே அவன் ரோடு போட முடியும்?!"

எனக்கு வேதியல் சுத்தமாக மறந்து போனாலும், வாழ்க்கையை 'ஓவர் சீரியஸாக' எடுத்துக் கொள்ளாமல், ஒரு நகைச்சுவையோடு பார்க்கக் கற்றுத் தந்த திரு சந்தானம் ஸார் எப்போதும் என் நினைவில் நிற்பார்.