திங்கள், நவம்பர் 21, 2005

(நெய்வேலி) விச்சுவின் இடைவேளை!

ஒரு மாதமாகி விட்டது விச்சு வலைத்தளத்தில் பதிந்து. வேலை விச்சுவை அட்லாண்டாவிற்கு அழைத்துக் கொள்ள அவனோடு பேசுவதும் குறைந்து போனது. தினம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்துவிட்டது மாதக்கணக்கில் பேசாமல் இருப்பது வித்தியாசமாக இருக்கிறது.

தீபாவளி மலருக்காக தமிழோவியம் தளத்திற்கு அவன் எழுதிய 'காரணம்'கதை பிரசுரமாயிருக்கிறது. அவனுக்கு அருகிலிருக்கும் நண்பன் என்ற சலுகையினால் அந்தக் கதை அவன் எழுதியவுடனேயே படித்துவிட்டேன். தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது விச்சு சொன்னது 'இன்னம் ஒரு பத்து/பதினைந்து நாட்களில் திரும்ப எழுத ஆரம்பித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்'. அப்பாடா!

சமீபத்திய கணக்கெடுப்பில் அமெரிக்காவில் உள்ள பத்து மோசமான (குற்றங்களின் எண்ணிக்கையை வைத்து) நகரங்களில் அட்லாண்டாவும் ஒன்று என்று சொல்லி பயமுறுத்தலாமா என்று ஒரு கணம் யோசித்தேன் - வெறுப்பேற்ற வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

ஞாயிறு, நவம்பர் 20, 2005

தினமலருக்கு நன்றி!

என் வலைப்பக்கத்தை தினமலரில் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று அலெக்ஸ் பாண்டியனும், நிலவு நண்பனும் பதிவின் மூலம் தெரிவித்தனர். நன்றி அலெக்ஸ்/நிலவு :-)

முதல் உணர்ச்சி ஆச்சரியம்! 'அட நம்ம எழுத்துக்குக் கூட அங்கீகாரமா?' என்று! இரண்டாவது மகிழ்ச்சி - 'ஆகா நாமும் ஏதோ சாதித்துவிட்டோம்' என்று. மூன்றாவது ஒரு நகைச்சுவை உணர்வு (விபரம் கீழே!).

தமிழ் செய்தித்தாள்கள், பத்திரிகைகள் தவறாமல் படிக்கும் பழக்கம் நின்று போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. கடைசியாகப் படித்த தமிழ் பத்திரிகை/செய்தித்தாள் என்று யோசித்தால், அம்மா/அப்பா இந்த முறையும் இந்தியாவிலிருந்து வரும் போது வாங்கி வந்த பாக்குப் பொட்டலத்தை கட்டிய காகிதம் தான்! எந்தப் பத்திரிகை என்று தெரியாமல் (எழுத்தைப் பார்த்து பத்திரிகையைக் கண்டுபிடித்ததும் ஒரு காலம் - இப்போது இல்லை!) மீதி செய்தி என்னவென்றும் புரியாமல் (சிறு வயதில் முடி வெட்டிக் கொள்வதற்காகக் காத்து இருக்கையில் அங்கிருக்கும் பழைய பத்திரிகைகள்/செய்தித் தாள்கள் படித்ததும், படித்து முடிக்கு முன் நம் முறை வந்துவிட, கதையின் முடிவு தெரியாமல் தவித்ததும் ஞாபகம் வருகிறது) ஒரே அவஸ்தை. அப்போதெல்லம் தோன்றும் ஒரு கேள்வி, 'எப்படி இவர்கள் எல்லாருக்கும் எழுத முடிகிறது?' என்பதுதான். அப்படி ஆச்சர்யமான ஒரு நிகழ்சி - அட என் பேரும் பத்திரிகையிலா? - எனக்கும் வந்திருக்கிறது!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் வளர்ந்து வந்த ஒரு அணிலையும், அதை எடுத்து வளர்த்து வந்த என் அப்பவையும் படம் பிடித்து வாரமலரில் வந்த செய்திக்குப் பிறகு பத்திரிகையில் என் எழுத்தும் வந்தது ஒரு மகிழ்ச்சி. என் ஈகோ அரிப்பை சற்று சொறிந்து கொடுப்பதாக இருந்தாலும், ஒரு மகிழ்ச்சிதான்!

அலெக்ஸ்/நிலவு கொடுத்த இணைப்பைக் கொண்டு போய் பார்த்தால் நகைச்சுவை! என் வலைப்பக்கத்தை 'அறிவியல் ஆயிரம்' பகுதியில் 'அமெரிக்க நிறுவனங்களில் ஆட்குறைப்பு' என்ற தலைப்பின் கீழ், 'நான் யார்?' என்ற கேள்விக்கு அருகில் குறிப்பிட்டு இருந்தார்கள். பாண்டவர்கள் எத்தனை பேர் என்ற கேள்விக்கு பதிலாக ஒருவன் 'கட்டில் கால்களைப் போல் மூன்று பேர்' என்று சொல்லிக்கொண்டே ஒரு கையில் இரு விரலைக் காட்டி மறு கையால் சுவற்றில் ஒன்று என்று எழுதிய கதை ஞாபகம் வந்தது.

இருந்தாலும் இந்த ஞாயிறை ஒரு மகிழ்சியான தினமாக ஆக்கிய, வெவ்வேறு உணர்ச்சிகளை வழங்கிய தினமலருக்கு நன்றி.

வியாழன், நவம்பர் 17, 2005

நான் யார்?

வெகு நாட்களாக (வருடங்களாக) மனதைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது. இப்போதைக்கு இதற்கு விடை கிடைக்கும் என்று தோன்றவில்லை. இந்தக் கேள்விக்காக இது வரை தேடி நான் தெரிந்து கொண்டது இதுதான்!

பொருட்களை வைத்து 'நான்' என்பதை விளக்க முடியாது. இந்த வேலை இல்லாவிட்டாலும் 'நான்' இருக்கிறேன். என் கார், வீடு, பணம் இல்லாவிட்டாலும் 'நான்' இருக்கிறேன்! உறவுகளை வைத்தும் 'நான்' என்பதை விளக்க முடியாது. என் தாத்தா பாட்டிக்கு 'நான்' பேரன். இப்போது அவர்கள் இல்லாவிட்டாலும், 'நான்' இருக்கிறேன்! என் உடல் 'நான்' அல்ல - என் முடி தான்; மொட்டை அடித்த பின்னும் 'நான்' இருக்கிறேன். பேசும் போது கூட 'என் கை', 'என் கால்' என்றுதான் கூறுகிறேன் - என் அவயங்கள் ‘என்னுடையது’ – ஆகவே 'நான்' என்பது என் உடலிலிருந்து வேறு பட்டது.

சரி. டெஸ்கர்ட்ஸ் சொன்னது போல 'நான் யோசிக்கிறேன்; அதனால் இருக்கிறேன்' என்று எடுத்துக் கொண்டால், தூங்கும் போது நான் யோசிப்பது இல்லை. (என் மனைவியின் கூற்றுப்படி விழித்திருக்கும் போதே நான் அதிகம் யோசிப்பது இல்லை!). ஆனாலும் தூங்கும் போது 'நான்' இருக்கிறேன் - அதனால் சிந்தனை 'நான்' இல்லை!

மனம் (இதை எப்படி விவரிப்பது? என் எண்ணங்களின் பிறப்பிடம்?) என்பதும் 'நான்' இல்லை - என் மனம் என்று அழைப்பதிலிருந்தே, அதுவும் 'என்' அங்கங்களில் ஒன்று - கால், கையைப் போல என்று புரிகிறது! ஆத்மா? நினைவஞ்சலி எழுதும் போது கூட 'அவருடைய ஆத்மா சாந்தியடைவதாக' என்று எழுதுவதால், ஆத்மாவும் மனதைப்போல ஒரு அங்கமா? 'நான்' என்பது என் ஆத்மாவையும் தாண்டியா?

சிவவாக்கியர் எழுதிய செய்யுள் புரிந்தும் புரியாதது போல் இருக்கிறது:
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.

இதில் அந்த 'ஒன்று' பிடிபட மாட்டேன் என்கிறது! விளக்க உரைகளைப் படித்தாலும் புரிபடுவதில்லை :-( புத்தகங்களைத் தேடிப் படிக்கும் போது ஔவையார் (நல்வழி: வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை...) ஞாபகம் வருகிறது. 'நான் யார்?' கேள்விக்கு படித்து விடை காணலாம் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது.

பாதி இடங்களிலே 'நான்' ஒரு எண்தான் (social security no., employee id, bank account number, ticket number in post office) - சில இடங்களில் இரண்டு எண்கள்!! ( login id and password, bank card number and pin). "என்னடா இது இத்தனை வருடம் படித்து, உழைத்து வந்ததெல்லாம் ஒரு எண்ணாக மாறத்தானா?" என்று ஒரு கோபம் வருகிறது. 'நான் யார்' என்று தெரியாமலே வாழ்க்கை முடிந்து விடுமோ என்று அச்சமும் இருக்கிறது.

இப்படியெல்லாம் இருந்தாலும், வீட்டிற்கு சென்றவுடன் மூன்று வயது மகள் கண்களில் சந்தோஷத்துடன் ஓடி வந்து கட்டிக் கொண்டு, கன்னத்தோடு கன்னம் வைத்து 'அப்பா!' என்று கொஞ்சும் போதும், ஒரு வயது மகன் வேகமாகத் தவழ்ந்து வந்து காலைக் கட்டிக் கொள்ளும் போதும் 'நான் யாராயிருந்தால் என்ன? – Does it matter? - தெரிந்து கொண்டு என்ன சாதிக்கப் போகிறேன்?' என்று தான் எண்ணத் தோன்றுகிறது!!

செவ்வாய், நவம்பர் 15, 2005

சரஸ்வதி சபதம்

சென்ற வாரம் 'சரஸ்வதி சபதம்' திரைப்படம் பார்த்தேன். மூன்று தெய்வங்களுக்கு (சரஸ்வதி, லக்ஷ்மி மற்றும் சக்தி) இடையே நடக்கும் போட்டி - யார் சிறந்தவர் என்று. நடிகர் திலகத்தின் நடிப்பு - முக்கியமாக வசன உச்சரிப்பு அருமை. ஜெமினி கணேசன் வீரமல்லனாக (சேனாபதி) கோபித்து பேசும் போது நகைச்சுவையாக இருக்கிறது. போன மாதம் பார்த்த படங்களில் (திருவிளையாடல், மிஸ்ஸியம்மா) இருந்த பொலிவு சாவித்திரிக்கு இந்தப் படத்தில் இல்லை.

போட்டி மூன்று பேருக்கு இடையே என்றாலும், படத்தை நகர்த்துவது புலவனுக்கும், அரசிக்கும் இடையே நடக்கும் தகராறைப் பற்றித்தான். 'தெய்வத்தைப் பாடுவேன்; அரசியைப் பாட மாட்டேன்' என்ற கொள்கையினால் (பிடிவாதம்?) தான் கதையே நகருகிறது. இந்த விஷயம் ஒன்றும் புதிதல்ல.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இரு செய்யுள்கள் இதே போன்ற தொனியில்:
1] 1559 - ஓடாவாளரியி ன்...பாடேன் தொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு...
2] 2456 - நாக்கொண்டு மானிடம் பாடேன் ...

இதற்குப் பின் பொய்யமொழிப் புலவரின் 'வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ?' (இதற்காக முருகப் பெருமான் சிறுவனாக வந்து அவரை முட்டையைப் பற்றிப் பாடச் சொன்னதும், பாடிய பின் - 'முட்டையைப் பாடுகிறீர், ஆனால் கோழிக்குஞ்சைப் பாட மாட்டீரோ?' என்று கேட்டு திருத்தி ஆட்கொண்டதும் வேறு கதை).

இந்த விஷயத்தை கொள்கைப் பிடிப்பு என்று பாராட்டுவதா அல்லது வீண் பிடிவாதம் என்று கூறுவதா என்று புரியவில்லை. இப்போதும் இந்த மாதிரித்தான் நடந்து கொண்டிருக்கின்றது.

நேற்றைய செய்திதாள் சொன்னது: 'மகாராஷ்டிர முதல்வர் நாராயண மூர்த்திக்கு அழைப்பு'.
கர்நாடகம், மகாராஷ்டிரம் இரண்டிலும் காங்கிரஸ் (கூட்டணியோடுதான்) ஆட்சி. இருந்தும் வெவ்வேறு நிலை. இந்தப் பிரச்சனைக்கும் மூல காரணம் மூர்த்தியின் "கிருஷ்ணாவைப் பாடும் வாயால் தேவ கவுடாவைப் பாடுவேனோ?" என்ற கொள்கைதான் என்கிறார்கள். அட தே(வ க)வுடா!

புதன், நவம்பர் 09, 2005

ஹாலோவின் பயங்கரம்

மூன்று வாரங்களாக வேலைப்பளு அதிகம் - அதைவிட மனத்தின் பளு அதிகம். அலுவலகத்தில் சிக்கனம் கடைபிடிக்கும் நிகழ்சிகளைப் பற்றிய அறிவிப்புகள் - முக்கியமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகள். இந்த 'ஹாலோவின்' பண்டிகை ஆரம்பத்திலிருந்து வருட இறுதி வரை இந்த மாதிரி நடவடிக்கைகளால், அலுவலகத்தில் அதிகமான சிரிப்போ, சந்தோஷமோ இல்லை!

இது எங்கள் நிறுவனத்தில் மட்டுமல்ல, அமெரிக்காவிலுள்ள முக்கால் வாசி நிறுவனங்களில் நடப்பவை தான். பெரும் நிறுவனங்கள் எல்லாவற்றிலும், நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கு அந்த நிறுவனங்களின் லாபத்தை ஒட்டி, அந்த நிறுவனப் பங்குகள் (shares), மற்றும் சலுகை விலையில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் (options) மற்றும் சிறப்பு ஊதியங்கள் (bonus) நிர்ணயிக்கப்படுகின்றன. சம்பளத்தை விட இம்மாதிரி சலுகைகளின் மதிப்பு பல லட்சங்களைத் தாண்டும். முக்கால் வருடம் போன பின், நிறுவனங்களின் வருடாந்திர லாபங்களைப் பற்றிய ஒரு மதிப்பீடு நிறுவன அதிகாரிகளுக்குத் தெரிந்துவிடுகிறது. இலக்கை எட்டுவதற்கான முயற்சியில், செலவுக் குறைப்பு ஒரு சுலபமான வழியாகத் தென்படுகிறது.

ஒவ்வொரு நிறுவனமும் வேலை நீக்கத்திற்கு எத்தனை நாள் முன்பாக சீட்டு கொடுக்கவேண்டும் என்று விதித்திருக்கும். அனேகமாக முழு நேர ஊழியர்களுக்கு எட்டு வாரம், அல்லது நான்கு வாரம் என்றெல்லாம் இருக்கும். தற்காலிக வேலைக்கு ஒரு நாள் கிடைத்தாலே அதிகம்! இந்த மாதிரி அறிவிப்பெல்லாம் ஒரு வார இறுதியில் தான் நடக்கும். ஹலோவின் வருட இறுதியிலிருந்து அறுபது நாட்களுக்கு முன்னால் வருவதால், ஆட்குறைப்பு அறிவிப்பெல்லாம் இந்தப் பண்டிகைக்கு அருகாமையில் ஆரம்பிக்கும். இந்தப் பண்டிகையே பயமுறுத்தும் உடையணிந்து இனிப்பு வாங்குவதுதான்! நிறையப் பேர்களுக்கு பயம் ஒன்று தான் மிஞ்சுகிறது!!

இந்த மாதிரி அறிவிப்பில் வேலை போகாமலிருந்தாலும், பாதிக்கப்பட்ட மற்ற ஊழியர்களுக்கு இடையே நம்மால் சகஜமாக நடந்து கொள்ள முடியாது. அதிலும் பாதிப் போது யார் யார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியாததால், மொத்த அலுவலுகமும் சோபையிழந்து இருக்கும்.

என் சக ஊழியர் ஒருவர் தன் மகனோடு (நான்கு வயது) தனியாக (single Mom) வசிக்கிறார். கிரிஸ்த்மஸ் பண்டிகைக்காக அவர் காசு சேர்க்கும் முறையே தனி! ஒவ்வொரு நாளும் மதிய காப்பிக்கு ஒரு டாலர் கொடுத்து, மீதி சில்லறையை ஒரு பாட்டிலில் போட்டு வைப்பார். வருட இறுதியில் அந்த பெரிய பாட்டிலிலிருக்கும் பணத்தை பரிசுக்காக உபயோகிப்பார். இந்த வருடம் அவரும் பாதிப்புக்கு உள்ளானார். நேற்று காப்பி குடிக்கையில் 'சேமிப்பதற்காக காப்பியை நிறுத்தினால், மகனின் பரிசுக்கான பணம் குறைந்திடுமே' என்று சோகப் புன்னகையோடு சொன்னது வருத்தமாய் இருந்தது. வீட்டில் சென்று வலைத்தளத்தில் (யாஹூ) நிர்வாக அதிகாரிகளின் பங்கு இருப்பைப் பார்த்தால் கோபம் வந்தது. இந்த பிரச்சனைக்கு என்று தீர்வு வருமென்று தெரியவில்லை.

செவ்வாய், நவம்பர் 01, 2005

கௌடா vs. மூர்த்தி

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பெங்களூரில் முன்னாள் பிரதமர் தேவ கௌடாவிற்கும், இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் ஸ்தாபனர் நாராயண மூர்த்திக்கும் நடந்து வரும் சர்ச்சை இன்னும் தீவிரமாயிருக்கிறது. ஒரு பொது விழாவில் பேசிய மூர்த்தி, தன் அரசியல் எதிரி கிருஷ்ணாவைப் புகழ்ந்தது பொறுக்காமல் தான் தேவ கௌடா மூர்த்திக்கு எதிராகக் கிளம்பியிருக்கிறார் என்று பரவலாகச் செய்தி வந்தது. இப்போது தொலைக்காட்சி பேட்டியில் (என்.டி. டி.வி.) 'பத்தாயிரம் பேர் வேலை செய்யும் நிறுவனத்திற்காக கோடிக் கணக்கில் பணம் ஏன் செலவு செய்ய வேண்டும்? அதிலும் அந்த நிறுவனத்தில் கன்னடர்கள் அதிகம் இல்லையே? இதற்கு பதில் கிராமத்தில் உள்ள ஏழைகளுக்கு அந்தத் தொகையை செலவு செய்தால் புண்ணியமாய் இருக்குமே!' என்றெல்லாம் அரசியல்வாதிகள் பேச்சு.

இந்த கௌடா - மூர்த்தி விஷய நியாய அநியாய வாதங்களைப் பார்ப்பதற்கு முன்னால் இதனோடு சம்மந்தப்பட்ட மற்ற விஷயங்களையும் சற்று பார்ப்போம்.

1. மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் மக்கள் ஏற்கனவே தாக்குதலுக்கு இலக்காகி வர ஆரம்பித்தனர். இந்த மாதிரி வழிப்பறி மற்றும் ஏமாற்றுதல்கள் 'இருப்பவர் - இல்லாதவர்களுக்கு' இடையே உள்ள பிரச்சனை என்று நினைத்தாலும், பல் நாட்டு நிறுவனங்கள், கணினி மென்பொருள் நிறுவனங்கள், மற்றும் அந்நிறுவன ஊழியர்கள் குறித்து மற்றவர்களிடையே நிலவும் அதிருப்தியும் ஒரு காரணம்.

இங்கு நான் தந்திருக்கும் நிறைய விஷயங்களைப் பற்றி அலெக்ஸ் பாண்டியன் தன் இணையத்தில் விரிவாக எழுதியிருக்கிறார்.
http://alexpandian.blogspot.com/2005/10/vs-1.html
பார்க்க: http://www.ryze.com/posttopic.php?topicid=563043&confid=366
http://www.deccanherald.com/deccanherald/oct52005/index2042432005104.asp
http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=1548


2. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் மெல்லிசை நிகழ்ச்சியில் கன்னட பாடல் பாட விடாமல் அதன் ஊழியர்கள் எதிர்த்து கூச்சலிட்டு கலாட்டா செய்ததும், அதை காரணம் காட்டி தர்ணா நடந்ததும் தெரிந்த விஷயமே.
சுட்டி: http://thadagam.blogspot.com/2005/10/blog-post_112833346297857573.html

3. சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரை 'எப்படி கன்னடமில்லாத பிற மாநிலத்தவர் - குறிப்பாக மற்ற தென்னிந்தியர்கள் பெங்களூரில் அதிகமான வேலை வாய்புகளை நிறப்புகிறார்கள்'. இது ஏற்கனவே இருந்து வந்த கசப்புணர்வை அதிகரித்து விட்டது.
சுட்டி: http://tinypic.com/e8v98z.png

4. சில மாதங்களுக்கு முன்னால் பல நாடுகளுக்கு இடையே இருக்கும் ஸ்திரத்தன்மையையும், கடல் கடந்த தொலை தூர வேலையமைப்பிற்கு உகந்த சுற்றுசூழல் பற்றியும் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மையிலும், வர்த்தகத்திற்கு ஆதரவான சுற்றுச் சூழலிலும் குறைந்த எண்ணிக்கை வழங்கப்பட்டது. குறிப்பிட்ட இந்தப் பகுதியில் கனடா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்தியாவை விட அதிக எண்ணிக்கை பெற்றன.

5. விப்ரோ நிறுவன உரிமையாளர் பிரேம்ஜி, அந்நிறுவன விஸ்தரிப்புகள் இனி பெங்களூரில் நடக்காது என்று அறிவித்து விட்டார்.
http://www.expressindia.com/fullstory.php?newsid=53698

6. பெங்களூரில் நடக்க இருந்த கணினித்துறை மாநாட்டை பல்வேறு நிறுவனங்கள் புறக்கணிப்பு செய்து, இப்போது ஒரு மாதிரியான சமரசம் ஏற்பாடகியிருக்கிறது. பெங்களூரின் உள்கட்டுமான நிலைமையே இதற்கு காரணமென்றும், அரசின் மெத்தனத்தை எதிர்த்து இந்த புறக்கணிப்பு என்றும் கூறப்பட்டது. போதாதற்கு இந்த மழையால் ஏற்பட்ட தடைகள் சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் அளவில் உள்கட்டுமான குறைகளைப் பற்றிய கேள்விகளை எழுப்பியது.
http://www.thehindubusinessline.com/2005/09/23/stories/2005092302100900.htm

இந்த மாதிரி பிரச்சனைகள் இருப்பது போதாதென்று, சொந்த ஆதாயங்களுக்காகவும், சுயநலத்திற்காகவும், மேலும் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவது போல் நடந்து கொள்வது ஒரு முன்னாள் பிரதமருக்கு அழகல்ல. தேவகௌடா போன்ற அரசியல்வாதிகள் ஓட்டுக்காக உணர்ச்சிபூர்வமாக பேசுவதன் மூலம் உருப்படியாக ஏதும் சாதிப்பதில்லை. பெங்களூரின் உள்கட்டுமானத்திற்காக செலவு செய்வது, எல்லா மக்களுக்கும் உதவிதான்.

முன்னாளில் விவசாயத்தினால் மட்டும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வந்தது. பின்பு இயந்திர தொழிற்சாலைகளினால் அதன் வளர்ச்சி பெருகியது; இப்போது இது போன்ற மென்பொருள் தொழிற்சாலைகளினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மாதிரி நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் சமுதாயத்தின் மற்ற பிரிவினருக்கும் நன்மை செய்ய முடியும்.

ஒரு தனிமனிதனுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியினால் பொறுப்பிலிருக்கும் அரசு இயங்க ஆரம்பித்தால், பல்தேச நிறுவங்களிடம் 'இந்தியாவின் சமூகச் சூழல் நிச்சயமற்றது' என்ற எண்ணம் வலுக்க ஆரம்பிக்கும். இது தொலைநோக்குப் பார்வையில் நல்ல விஷயமல்ல. இது போன்ற கண்மூடித்தனமான எதிர்ப்பு 'பொன் முட்டையிடும் வாத்தை அறுத்தது' போல் தான்.

இந்த விவகாரத்தில் மென் பொருள் நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு. ஒரு இடத்தில் இருக்கும் போது அவ்விடத்திலிருக்கும் சமூகத்திற்கு தங்களாலான உதவிகளையும் செய்ய வேண்டும். இங்கு (அமெரிக்காவில்) நான் பணிபுரியும் நிறுவனத்தில், 'சேவை தினங்கள்' அனுசரிக்கப்படுகின்றன. மாதத்தில் இரண்டு மணி நேரமோ அல்லது எட்டு மணி நேரமோ ஒரு சமூக சேவைக்காக ஊழியர்கள், குழுவாகவும், தனியாகவும் செலவு செய்வது சகஜம். இதை நிறுவனமும் ஆதரிக்கிறது. இது போன்ற நிகழ்சிகள் இந்தியாவில் எந்த ஆளவு நடத்தப் படுகிறது, பிரசாரம் செய்யப் படுகிறது என்பது பற்றி தெரியவில்லை. அதே சமயத்தில், இது போன்ற மென்பொருள் நிறுவனங்களில் உள்ள வசதிகள் (இலவச இரவு உணவு, வேலைக்கு சென்று திரும்ப வாகன உதவி) பற்றி பத்திரிகைகளில் நல்ல விளம்பரம்.

கன்னட பாடல்களை எதிர்த்து கூச்சலிட்டது நாகரீகமில்லாதது மட்டுமல்ல, விபரீதமானதும் கூட. ஒரு பக்கம் இந்த நிறுவனங்களின் வளர்ச்சி பற்றி விளம்பரம், மறுபக்கம் பொறுப்பற்ற மொழி மரியாதைக்குறைவு. இந்த மாதிரி செயல்களினால் இந்நிறுவனங்கள் தங்கள் தரப்பு வாதங்களை பலவீனமாக்குகிறார்கள்.

மொத்தத்தில் இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம். இப்போது மலையிலிருந்து கீழே வரும் பனியுருண்டைபோல் பெரிதாக்கப்பட்டிருக்கிறது. விஷயம் முற்றி, உலக வர்த்தகப் படத்திலிருந்து பெங்களூர் மறையாமல் இருக்க வேண்டும்!