வெள்ளி, செப்டம்பர் 29, 2006

ஆறு வார்த்தைக் கவிதைகள்!

1. கோழி
கூண்டிலே கோழி
காய்ச்சலோ இல்லையோ
கொல்லத்தான் போகிறார்கள்!

2. வள்ளலின் கொடை
முல்லைக்குப் பெருமை
வள்ளலின் தேராம்.
தேருக்கோ வருத்தம்தான்!

3. ஜனநாயகப் போர்
போரிட்டு வென்ற ஜனநாயகம்
ஓட்டுக்கும் ஆட்சிக்கும் ஆள்தானில்லை.

பிகு: காப்பி குடிப்பதை நிறுத்தி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப் போகிறது. வித்தியாசமும் தெரியவில்லை; சபலமும் வரவில்லை.

ஞாயிறு, செப்டம்பர் 03, 2006

காப்பி – 9

காப்பியின் காரணமாக எனக்குள் எழுந்த உணர்ச்சிகள் அதிகம். முதலில் என்னை வெறுப்பேற்றும் சில விஷயங்கள். சிலர் காப்பி அருந்தும் போது 'சர்ர்ர்'ரென்று உறிஞ்சுவார்கள். எனக்கு, சிறு வயதில் மாதவனூர் கிராமத்தில், மாட்டுக்கு தவிட்டுத்தண்ணீர் காட்டுகையில் அது நாக்கை நீக்கி உறிஞ்சிக் குடிக்கும் நினைவுதான் வரும். நிச்சயம் எனக்கு கோபம் வரும்; கட்டுப் படுத்திக் கொள்வேன். இரண்டாவதாக சிலர் காப்பியை நிரம்பக் குடித்துவிட்டு, மிக அருகே நின்று பேசுவார்கள். அவர்கள் வார்த்தையெல்லாம் காப்பி மணம். இதுவும் எனக்கு கோபத்தை வரவழைக்கும் ஒரு விஷயம். இந்த இரண்டைத் தவிர இப்போதெல்லாம் வரும் மற்ற உணர்ச்சிகள் ஒரு விதமான சந்தோஷமும், ஆச்சரியமும் தான். நான் விரும்பிக் குடிக்கையிலே சந்தோஷம்; இந்தக் காப்பி சம்பந்தமான நினைவுகள் தரும் ஆச்சரியம்.

மன்னார்குடியில் இந்தக் காப்பிக்காக, சீக்கிரமே எழுந்து, பால் காரர் தெரு முனையில் வரும் போதே மடக்கி பால் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அவசரமாக வருவோம். காப்பியின் மேல் அவ்வளவு ஒரு பற்று (வெறி). இது எனக்கு மட்டுமல்ல; தெருவில் உள்ள முக்கால்வாசி வீடுகளில் அந்த சொசைட்டி பால் தான். பால் வர கொஞ்சம் தாமதமாகிவிட்டால், தெரு முனையில் ஒரு பெரிய கும்பலே பாத்திரங்களோடு காத்திருக்கும்! எல்லொருக்கும், காலைக் காப்பியின் மேல் அவ்வளவு ஒரு பிடிப்பு. பண்டிகைக் காலங்களில், பால் தட்டுப் பாடு காரணமாக, பால் காரர் கொஞ்சம் கடுபிடியாக இருப்பார். மற்ற நாளில் அவர் முகத்தில் இருக்கும் சிரிப்பு மறைந்து, கோபம் தெரியும். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டு வாசலில் தான் வந்து பால் வாங்க வேண்டும் என்று சொல்லிவிடுவார்! தெருவில் அனேகம் பேர் முகத்தில் கோபம் தான் தெரியும். அதைப் பார்க்கும் போது ஒரு டம்ளர் காப்பி எப்படி மனிதர்களை மாற்றுகிறது என்று மிக நன்றாகத் தெரிந்து கொள்ளலாம்.

சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது காப்பி சூடாக இல்லை என்றலோ, அல்லது பாலோ, சக்கரையோ குறைவு (அல்லது அதிகம்) என்றோ அம்மாவோடு சண்டை போட்டிருக்கிறேன், கோபித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்க்கையில் கொஞ்சம் குற்ற உணர்வும், அதிக வருத்தமும் வருகிறது - இப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று. இப்போது, முதல் வேளை போட்ட காப்பி (சமயத்தில் முதல் நாள் மாலை பொட்டதாக் கூட இருக்கும்), அதிகமாக இருந்து விட்டால், அதிகம் யோசிக்காமல், அதை எடுத்து, பால் கலந்து, மைக்ரோவேவ் செய்து சாப்பிடுகிறேன். இதை 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்று எடுத்துக் கொள்வதா, அல்லது, நான் வளர்ந்து கொஞ்சம் மனிதனாயிருக்கிறேன் என்று எடுத்துக் கொள்வதா என்று தெரியவில்லை.

அலுவலகத்தில் எத்தனை முறை “I am not in a good mood; I need coffee” என்று ஒரு சாக்கு வார்த்தையைக் கேட்டிருப்பேன்! சிறு குழந்தையாக் இருக்கையில் யாரும் காப்பி குடித்ததில்லை. அப்போது மட்டும் மூடு நன்றாக இல்லையா என்ன? இந்த காப்பி பழக்கமும், மூக்குப் பொடி அல்லது புகையிலை போடும் பழக்கமும் ஒன்றே! மனித உடம்பில், மனத்தில் ஒரு தேவையை ஏற்படுத்திக் கொண்டு, அந்த தேவைக்கு கடைசியில் அடிமை போலாகி, தேவை பூர்த்தியாகாத போது கோபம் வந்து, அதனால் கூட இருப்பவர்களின் நிம்மதியையும் குலைத்து தன்னையும் வருத்திக் கொள்வது ஒரு விதமான பைத்தியக்காரத்தனம். இதை நானும் செய்திருக்கிறேன். உணர்ந்து ஒப்புக் கொள்ள கொஞ்ச வருடங்கள் ஆகி விட்டன. இருந்தாலும், இந்த வஸ்து தந்த சந்தோஷங்களை பொய் என்று ஒதுக்கவும் முடியவில்லை. அதன் விளைவே இந்தத் தொடர்.

இப்போது மனம் கொஞ்சம் பக்குவப் பட்டு இருக்கிறது. இதற்காக 'வீட்டிலே யாருக்கும் காப்பி கிடையாது; இருந்தால் தானே குடிக்கிறோம்' என்றெல்லாம் கிளம்பப் போவதில்லை. அது 'சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்னும் நரியின் கதைதான். சென்ற பதினெட்டு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக சக்கரையை நிறுத்தி, அளவையும் குறைத்து, இப்போது ஒரு நாளைக்கு ஒரு கோப்பை என்று வந்திருக்கிறேன். ஒரு முடிவுரை போல் காப்பியைப் பற்றி பதிந்து விட்டு, பழக்கத்தை விட்டு விடலாம் என்று எண்ணம். இந்தப் பதிவோடு, காப்பி தொடரும் முடிகிறது - ஒரு விதத்தில் என் காப்பிக் கடையும் மூடுகிறது. இதில் வருத்தம் இல்லை :-) உணர்ந்து, அறிந்து எடுத்த முடிவு - ஆகையால் ஒரு விதமான அமைதியும் முழுமையும் தெரிகிறது.

பின்னூட்டமிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

முந்தைய பதிவுகள்
காப்பி - 8
காப்பி - 7
காப்பி - 6
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1

சனி, செப்டம்பர் 02, 2006

காப்பி – 8

இந்தக் காப்பி வெறும் குடிக்கும் திரவமாக மட்டும் இல்லை. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இது ஒரு சமூக கலாச்சார விஷயம். வீட்டுக்கு வருபவர்களுக்கு அனேகமாக முதல் உபசாரம் - 'காப்பி சாப்பிடுகிறீர்களா?' என்பது தான். கிராமங்களில் இன்னமும் நிறைய பேர் 'மோர் குடிக்கிறீகளா?' என்று கேட்டாலும், காப்பி குடிப்பதை விசாரிப்பவர்கள் அதிகம். காப்பி திரவமாதலால், 'குடி' என்கிற வார்த்தைதான் சரியானது. ஆனால் தமிழ்நாட்டில் காப்பிக்கு ஒரு முக்கியத்துவம் - அதனால் 'சாப்பிடு' என்கிற வார்த்தையை அதிகம் பேர் உபயோகிக்கிறார்கள். டீயையும் 'சாப்பிடுகிறீர்களா?' என்று கேட்பவர் அதிகம் இருப்பினும், விகிதாசாரத்தில் (என் கணக்குப் படி) காப்பியை விட அது குறைவுதான். சிறு வயதில் இந்த மாதிரி ஒரு உபசரிப்பில், மதுரையில் ஒரு வீட்டில், சுக்கு காப்பி குடித்திருக்கிறேன்; ஜிவ்வென்று மிக வித்தியாசமான ருசி.

கல்யாணப் பரிசு படத்தில் கூட, அக்கம் பக்கத்து பெண்களை மனைவி வீட்டிற்கு அழைத்தபோது டணால் தங்கவேலு இப்படித்தான் கூறுவார்: "காப்பி கீப்பி சாப்பிடறீங்களா? என்னத்துக்கு வீட்டில சாப்பிட்டு வந்திருப்பீங்க". தமிழ் திரைப்படங்களில் காப்பி ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. இரு கோடுகள் படக் கதையே ஜெமினி கணேசன் சௌகார் ஜானகியிடம் காப்பி கேட்டு வாங்காவிட்டால் வந்திருக்காது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு படத்தில் பாடிய பாடலில் டி.ஏ. மதுரம் இந்த மாதிரி பதில் பாட்டு பாடுவார்:
"பட்டனத் தட்டி விட்டா
இரண்டு தட்டுல இட்டிலியும்,
காப்பி நம்ம பக்கத்தில் வந்திடணும்".

இது போல இன்னுமொரு பழைய பாடலில் (திரைப் படம் மறந்து விட்டது) இந்த வரிகள் வரும்:
“மாப்பிள்ளை டோய், மாப்பிள்ளை டோய், மணியான மதறாசு மாப்பிள்ளை டோய்
காப்பியில பல் தேய்க்கிற மாப்பிள்ளை டோய், கோப்பையில தீனி திங்கிற மாப்பிள்ளை டோய்"
இங்கே அமெரிக்காவில் பெரும்பான்மையானா வீட்டிலே உள்ள ஆண்களுக்கு இவ்வரிகள் பொருந்தும். இன்னும் எத்தனையோ படங்களில் காப்பி ஒரு முக்கியமான இடம் பிடித்திருக்கிறது.


காப்பி சம்பந்தப் பட்ட விளம்பரங்களில் மனதிற்கு மிகவும் பிடித்து, நினைவில் இன்னமும் பசுமையாக இருப்பது, உசிலை மணியின் "பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு" நரசுஸ் காப்பிதான். இதைத் தவிர, 'பில்டர் காப்பியா?" என்று வியந்து கேட்கும் அம்மணியின் முகபாவம் (ப்ரூ), அரவிந்த்சாமி வரும் காப்பி விளம்பரம் (ப்ரூ?) இதெல்லாமும் நினைவில் இருக்கிறது. கும்பகோணத்தில் ஒரு முறை தீபாவளி சமயத்தில் (எண்பதுகளில்), ஒரு பிரபலமான காப்பிக் கடையில், ஒவ்வொரு முறை காப்பி வாங்கியவுடன் ஒரு கூப்பன் தந்து (எடைக்குத் தகுந்த மாதிரி), ஒரு குறிப்பிட்ட அளவு கூப்பன் சேர்ந்தவுடன் 'எவர்சில்வர் டம்ளர் டபரா தருகிறோம்' என்று சொல்லி விளம்பரப்படுத்த, விடுமுறைக்காக கும்பகோணம் சென்றிருந்த நாங்கள் காப்பிப் பொடி வாங்கி, கூப்பனை உறவினரிடம் டம்ளருக்காகக் கொடுத்து வந்தது ஞாபகம் இருக்கிறது.

காப்பி முதன் முறையாக எப்போது மனிதர்களால் அருந்தப் பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை. மறைந்த என் பாட்டி சிறுமியாக இருக்கும் போது அவர் தாத்தவே காப்பி குடித்திருக்கிறார் என்பது அவர் (பாட்டி) சொல்லித் தெரியும். சூடான காப்பி டம்ளரை, தன் அங்கவஸ்திரத்தால் (என் பாட்டியின் தாத்தா) பிடித்துக் கொண்டு சாப்பிடுவாராம். எனக்குத் தெரிந்த வரையில் வேறு எந்த ஒரு தாவரத்தையும் இப்படி சாப்பிடுவதில்லை. ஒரு பழத்தின் கொட்டையை எடுத்து, உலர்த்தி, வறுத்து, அரைத்து, அதில் வென்னீரை ஊற்றி, பின் அந்த கொட்டையின் பொடியை விலக்கி, வெறும் தண்ணீரை, அப்படியோ, அல்லது பால், சக்கரை கலந்தோ சாப்பிடுவது என்பது மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு சான்று. மற்ற கொட்டைகளை உணவாக எடுத்துக் கொண்டாலும் (உ.ம். பலாக் கொட்டை, மாங்கொட்டை) இது போன்று ஒரு விஸ்தாரமான முறையில் எந்தத் தாவரத்தையும் மனிதன் உண்பதாகத் தெரியவில்லை. டிகாஷன் போட்ட பொடித் தூளை, மற்ற தாவரத்துக்கு உரமாகவும், அல்லது பாத்திரம் தேய்ககவும் இப்போதும் நிறையப் பேர் உபயோகப் படுத்துகிறார்கள்.

இந்த காப்பி தாவரத்தில் எக்கச்சக்க வகைகள் இருந்தாலும், மூன்று பிரிவுகளாகப் பிரிப்பார்கள் - அந்தப் பயிர் வளரும் சூழ்நிலையைப் பொறுத்து. 'அராபிகா' என்னும் பிரிவு அதன் மணத்துக்காக உயர்ந்தது என்று கூறுவார்கள். கடல் மட்டத்திற்கு 600 - 2000 மீட்டர் உயரத்தில் வளரும். பதினைந்திலிருந்து இருபது டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் வளரும். 'ரொபஸ்டா' எனப்படும் பிரிவு கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரம் வரை வளரும். 20 டிகிரி செல்ஸியஸ்க்கும் அதிகமான வெப்பம் தாங்கும். இந்த்ப் பிரிவு தான் இன்ஸ்டன்ட் பொடி தயாரிக்க மிகவும் உகந்தது. மூன்றாம் பிரிவில் 'லைபேரிகா' எனப்படும் மிகக் கசப்பான வகை; மழை வெப்பம், இரண்டும் தாங்கும். காப்பி வளரும் நாடுகளில் பிரேசில் தான் முதலிடம் என்று நினைவு.

இன்ஸ்டன்ட் காப்பி தயாரிக்கும் முறையைக் கண்டு பிடித்தது யார் என்பதில் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. 1906ல் ஜ்யார்ஜ் சி. வாஷிங்டன் தான் கண்டு பிடித்தார் என்று சிலரும், 1901ல் சர்டோரி கடோ என்னும் ஜப்பானிய விஞ்ஞானி சிகாகோவில் இருக்கையில் கண்டு பிடித்தார் என்றும் சொல்கிறார்கள். எது சரி என்று எனக்குத் தெரியவில்லை; யாராயிருந்தாலும், அவர்களுக்கு என் நன்றி!

இந்த துக்கடா விஷயங்களே பதிவைப் பெரிதாக்கி விட்டதால், அடுத்த பதிவில் காப்பி குடிக்கும் மக்களைப் பார்த்து நான் பெற்ற அனுபவங்களைத் தருகிறேன்.

முந்தைய பதிவுகள்
காப்பி - 7
காப்பி - 6
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1