ஞாயிறு, நவம்பர் 12, 2006

தேநீர் – 3

முன் குறிப்பு:
சென்ற பதிவின் பின்னூட்டத்தில் குமரன் தேநீர் என்பதே சரி என்று விளக்கியிருந்தார். ஆகையால் இப்போதிலிருந்து தேனீர் தேநீர் ஆகிறது!

வாழ்க்கையில் அதற்கு முன் ஏலத்திற்கு சென்றதில்லை; ஆகையால் ஒரு பெரிய எதிர்பார்ப்பு. போதாக் குறைக்கு எனக்கு பயிற்சி தரும் அதிகாரி திருப்பித் திருப்பி எக்கச்சக்கமான விதிகளை (அதான், தலையாட்டாதே, கை தூக்காதே) வேறு சொல்லி கொஞ்சம் பயத்தையும் கிளப்பி விட்டார். கையில் ஏற்கனவே தயார் பண்ணிய திட்டப் பட்டியல், பேனா, கணக்குப் பொறி (அதான் Calculator) என்று அவரோடு ஏலம் எடுக்கச் சென்றேன். கொஞ்சம் பெரிய ஒரு அறை, வரிசையாக மேஜை-நாற்காலிகளோடு. அறையே சமதளமாக இல்லாமல் படிப் படியாக உயர்ந்து கொண்டு போனது - திரையரங்கு போல. அந்த அறையில் டீத்தூளே இல்லை. வந்திருந்த அனைவரிடமும் ஏலத்தில் வரும் டீ பற்றிய விபரம் - காகிதக் குப்பை!

டீ வாங்க ஏலத்திற்கு வந்திருந்தாலும், டீயை நேரில் பார்க்க முடியாது; வெறும் காகித விபரம்தான்! டீத்தூளை 'செஸ்ட்' (Chest) என்று சொல்லப்படும் தக்கையான மர டப்பாக்களில்தான் வைத்திருப்பார்கள். ஒரு டப்பா கிட்டத்தட்ட நாற்பதிலிருந்து நாற்பத்திமூன்று கிலோ வரை இருக்கும். ஏலம் எடுக்கக் குறிப்பிடும் அளவு ஒரு 'லாட்' (Lot) - ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை டப்பாக்கள் 'லாட்' என்று சொல்லப் படும்; அது பத்து டப்பாவாகவும் இருக்கலாம், அல்லது கொஞ்சம் அதிகமோ, குறைவாகவோ இருக்கலாம். அது டீத் தோட்டத்தைப் பொறுத்தது. குறைந்தபட்ச விலையில் ஏலம் ஆரம்பிக்கும்; சிலர் தலையை ஆட்டுவார்கள் - விலை ஐம்பது பைசா ஏறும். சிலர் கையைத் தூக்குவார்கள் - விலை இன்னும் ஏறும். ஏலம் விடுபவர் எப்படி விலையை ஏற்றுகிறார் என்று - சில சமயம் ஐந்து பைசா; சில சமயம் ஐம்பது பைசா - கடைசி வரையில் பிடிபடவில்லை.

என் பயிற்சி அதிகாரி வாங்கியதை எழுதி, கணக்குப் பார்த்து அவரிடம் காட்டிக் கொண்டிருந்தேன் - கூடிய மட்டும் ஆடாமல், அசையாமல் உட்கார்ந்து கொண்டே! எனக்கு ஒரு கெட்ட பழக்கம் - பேனா மூடியை வாயில் கடித்துக் கொண்டிருப்பேன். பேனாவைத் தூக்கினால் எங்கே நான் அதிகம் விலை கேட்கிறேன் என்று சொல்லி விடுவார்களோ என்று பயந்து மூடியை பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன்; எழுதியவுடனேயே பேனாவை மேஜையில் வைத்து விடுவேன் - கையில் இருந்தால் தானே பிரச்சனை என்று! இருபத்தி இரண்டு வயதில் ஆடாது அசங்காது உட்கார்ந்திருப்பது என்பது கொஞ்சம் கடினமான வேலை! ஒரு வழியாக ஏலம் முடிந்து வருகையில் 'டீ சாப்பிடுகிறாயா' என்று கேட்டார் - 'வேண்டாம்; காப்பிதான்’ என்று சொன்னதைக் கேட்டு சிரித்துக் கொண்டே 'ஒரு சின்ன ஏலத்திற்கு வந்ததற்கே டீ வேண்டாம் என்கிறாயே, உன்னை அடுத்ததாக டீ டேஸ்டிங் டிபார்ட்மென்ட்டுக்குத் தான் அனுப்ப வேண்டும்' என்றார்! தோராயமாக கணக்குப் பண்ணியதில் அந்த ஏலத்தில் 10 லக்ஷம் ரூபாய்க்கு மேல் மொத்த விற்பனை ஆகியிருக்கும் என்று தோன்றியது - இது சின்ன ஏலமாம்!! வாழ்க்கையில் அதுவரை சில்லறையையே அதிகமாய்ப் பார்த்தறியாத சின்னப் பையனிடம் பத்து லக்ஷம் ரூபாய் ஏலத்தை 'சின்னது' என்று வர்ணித்த அந்த அதிகாரியின் முகத்தை இன்னமும் மறக்க முடியவில்லை!

ருசிபார்க்கும் படலம் அடுத்த பதிவில்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 2
தேநீர் – 1

பின் குறிப்பு:
சென்ற பதிவில் சொல்ல மறந்த ஒரு விஷயம். 'டஸ்ட்' மற்றும் CTC தவிர முழுஇலை (Whole Leaf) வகையும் உண்டு. இது டார்ஜிலிங் பகுதியில் மற்றும் சில குளிரான மலைப் பகுதிகளில் வளரும் வகை. இந்த வகையை வென்னீரில் ஊற வைத்து (Brew) பருக வேண்டும். நம்மூரில் செய்வது போல இதை தண்ணீரோடு கொதிக்க வைத்தால் சுவையாக இருக்காது.

4 கருத்துகள்:

இலவசக்கொத்தனார் சொன்னது…

தேனீர் என எழுதி இருந்ததை எப்படி மிஸ் பண்ணினேன். பொதுவாகவே, நம் நாட்டை தவிர மற்ற இடங்களில் வென்னீரில் தேயிலையையோ, தேத்தூளையே ஊற வைத்துப் பருகிறார்களே தவிர, அவற்றை அடுப்பிலேற்று கொதிக்க வைப்பதே இல்லை. அப்படி கொதிக்க வைப்பது தேயிலையில் இருக்கும் சத்துக்களை அழிக்கிறது எனவும் படித்த ஞாபகம்.

அது பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

வடுவூர் குமார் சொன்னது…

ஒஹோ!! இது தான் ஏலத்தில் உள்ள விஷ(ய)மமோ!!அதுக்கு தான் கையை,தலையை ஆட்டாமல் இருக்கச்சொன்னாரா?

ரங்கா - Ranga சொன்னது…

இ.கொ.

நிச்சயம் இதைப் பற்றியும் சொல்கிறேன். இப்போது தானே ஏலத்திலே எடுத்திருக்கிறோம். இன்னமும், கலவை கலந்து, பொட்டலம் போட்டு அனுப்பி, கணக்கெழுதி அப்புறமாய் குடிப்பது பற்றி ;-)

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

ஆமாம் குமார்.

எங்கேயாவது தலையை ஆட்டி விலை 50 பைசா ஏறினாலும், மொத்த லாட்டுக்கும் (கிட்டத்தட்ட 500 கிலோ) விலை ஏறிவிடுமே!

ரங்கா.