ஞாயிறு, ஜூன் 28, 2009

இரயில் - 8

இரயில் - 8

ரயில் பயண உறவுகள் என்றவுடன் முன்பு தொலைக்காட்சியில் வந்த 'ரயில் சினேகம்' போன்ற ஏதாவது கதை இருக்கும் என்று நினைக்க வேண்டாம். ரயில் பயணங்களில் பார்த்த, பேசிய மனிதர்கள் நிறைய பேர்களை பயணம் முடிந்த சில நாட்களில் (பல சமயம் சில நிமிஷங்களுக்குள்) மறந்திருக்கிறேன். அபூர்வமாக சில முகங்கள், வார்த்தைகள் இன்னமும் நினைவில் இருக்கின்றன. அனேகமாக இந்த மாதிரி பாதித்த நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட மனிதர்கள் பெயர் தெரியாது; அல்லது மறந்திருக்கும்.

ரயில் பயண சந்திப்புகள் இரண்டு வகை: தொலைதூர பயணத்தில் - குறைந்தது ஒரு நாள், ஒரு இரவு - அதே பெட்டியில் கூட வருபவர்களோடு நடக்கும் சம்பாஷணைகள், முதல் வகை. குறைந்த தூர, ஆனால் தினப்படி நடத்தும் பயணங்களில் (உதாரணமாக அலுவலகம் சென்று வர) சந்திப்புகள், கருத்துப் பறிமாறல்கள் - இரண்டாம் வகை. முதலாம் வகை பெரும்பான்மையாக ஒரு வித கட்டாயத்தால், பொழுது போக வழியில்லாமல் நடப்பவை. இது ஒரு விதமான புகைப்படம் போல - படம் அழகாயிருந்தால், வித்தியாசமாக இருந்தால் நினைப்பில் இருக்கும். இரண்டாம் வகையில் ஒரு விதமான தொடர்ச்சி, வளர்தல், மாற்றம் உண்டு; கிட்டத்தட்ட ஒரு தொலைக்காட்சி சீரியல் போல. பிடிக்கவில்லை என்றால் பெட்டி, நேரம் மாற்ற முடியும்.

விபரம் புரியாத (நான் மூன்றாவது அல்லது நான்காவது படித்த போது என்று நினைக்கிறேன்) வயதில் எழும்பூர்-தாம்பரம் தடத்தில், மின் வண்டியில் என் வயதே ஒத்த ஒரு சிறுவன், கண்ணில்லாத ஒரு பெண்மணியுடன் (அம்மா?), பாடிக் கொண்டே மற்றவர்களிடம் காசுக்காக டப்பாவை குலுக்கிக் கொண்டே போனது இன்னமும் நினைவில் இருக்கிறது (பாட்டு:அச்சமயம் புதிதாக வந்த 'மேலும் கீழும் கோடுகள் போடு, அதுதான் ஓவியம்'). இப்பவும் அந்தப் பாட்டு கேட்கையில் மனதில் ஒரு விதமான குழப்பம் கேள்விதான் – “ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? என்ன காரணம்?” என்று! இன்னமும் விடை கிடைக்கவில்லை.

93 - 96 வட நாட்டு வாசத்தில் வருடா வருடம் சென்னை-டில்லி ரயில் பிரயாணம் இரு முறையாவது வரும். நடுப் பயணத்தில் (வண்டி அனேகமாக நாக்பூருக்கு அருகே இருக்கும்), கால் நடக்க முடியாத (போலியோ) வாலிபர் ரயில் பெட்டி தரையை ஒரு பிரஷ் கொண்டு சுத்தம் செய்து காசு கேட்பார் - சலனம் அதிகம் இல்லாத முகம், தாடி; சோகம், வருத்தம் தெரியாது; ஒரு விதமான 'கடமையைச் செய்கிறேன்' என்பது போல பாவம். பெயர் தெரியாது; அதே பிரயாணங்களில் காப்பி, வடை போன்று சாப்பாடு கொண்டு வரும் ஊழியர் ஒருவருடைய முகமும் நினைப்பில் இருக்கிறது. நெற்றியில் விபூதி, சிறிய மீசை, எப்போதும் சிரித்த முகம்; சில்லறை இல்லாவிட்டாலும் கடுப்படிக்காமல், நினைவில் வைத்துக் கொண்டு பாக்கி கொண்டு கொடுப்பது இல்லை, வந்து பாக்கி காசை வாங்கிக் கொள்வது என்று பொறுமையாக செய்பவர். இருவருமே கீதையில் வரும் சிதப்பிரஞ்ஞன் சுலோகம் நினைப்புக்கு வரவழைப்பார்கள்.

2003ல் பிரிட்ஜ்வாட்டர் நிலையத்திலிருந்து நூவர்க் செல்கையில் தினமும் பார்த்த ஒரு வித்தியாசமான பேர்வழி. பெட்டியில் யாராவது தும்மினால், இருமினால் கோபம் பொத்துக் கொண்டு வரும் இவருக்கு (சுத்தம், சுகாதாரத்தில் அளவு கடந்த பைத்தியம் என்று சொல்லலாம்). இவரைப் பற்றி தெரிந்தவர் எவரும் அருகே அமர மாட்டார்கள். அது மட்டுமல்ல, வண்டி நூவர்க் நிலையம் அருகே செல்கையில் அந்தப் பெட்டியில் முதல் ஆளாக இறங்க வேண்டும் என்பதற்காக முன்னமேயே எழுந்து கதவருகே நின்று கொள்வார். ஒரு முறை இன்னுமொரு பிரயாணி தெரிந்தோ, தெரியாமலோ முதலில் சென்று நின்று கொள்ள, இவர் முகத்தைப் பார்ர்க சகிக்கவில்லை (உண்மையில் கொஞ்சம் பயமே வந்தது; ஏதாவது இசகு பிசகாக செய்து வைக்கப் போகிறாரே என்று).

மொத்தத்தில் ரயில் என்ற வாகனம் என் வாழ்க்கையில், சிந்தனையில் நிறைய பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று. தில்லி ரயில் மியூசியம், மற்றும் லண்டன் அறிவியல் மியூசியம் என்று சென்று பார்த்து மகிழ்ந்த நினைப்புகள் இன்னமும் பசுமையாக இருக்கிறது. ரயில் பற்றிய இந்தப் பதிவும் நிலையத்திற்கு வந்து விட்டது.

அடுத்த வாரம் வேறு விஷயம் பார்க்கலாம்.

முந்தைய பதிவுகள்:
இரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5 இரயில் - 6 இரயில் - 7

ஞாயிறு, ஜூன் 21, 2009

இரயில் - 7

இரயில் - 7

டீசலோடு கிரசின் கலந்து புகை கக்கும் லொட்டை பேருந்துகள் தரும் எரிச்சலோடு கலந்த வாசனையைத் தவிர பேருந்து நிலையத்திற்கு என்று தனித்த வாசனை இல்லை. ஆனால் ரயில் நிலைய மணமே தனி. இந்த மணத்தை விபரிப்பது கடினம்; இருந்தாலும் முயற்சிக்கிறேன். மூடிய, பெரிய நிலையங்களில் இந்த மணம் தூக்கலாக இருக்கும். அதிலும் கரி வண்டிகள் அதிகமாக இருந்தால் இதை சுலபமாக உணரலாம். உதாரணமாக திருச்சி ஜங்க்ஷன் நிலையத்தில் இருக்கும் மணம் (இது திறந்த வெளி நிலையமாக இருப்பினும்), கொஞ்ச தொலைவில் இருக்கும் பேருந்து நிலைத்தில் இருக்காது. இது கொஞ்சம் கொல்லப் பட்டறை வாசனை, குமிட்டி அடுப்பு வாசனை (அதிலும் கரிதான்) எல்லாம் கலந்து இருக்கும்.

சென்னையில் எழும்பூர் நிலையமானாலும் சரி அல்லது சென்ட்ரல் நிலையமாக இருந்தாலும் சரி, மணம் ஒன்று தான். இந்த மணத்தில் ஒரு விதமான 'ரேஞ்ஜ்' - விகிதாசார வித்தியாசம், இருக்கும். சென்ட்ரல் அல்லது எழும்பூர் நிலையத்தில் நிற்கும் எந்த தொலைதூர பயண ரயிலிலும் இதை நீங்கள் உணர முடியும். ரயில் கிளம்பும் முன் பிளாட்பாரத்தில் ஒரு முனையிலிருந்து அடுத்த முனை வரை நீங்கள் நடக்கையில் இந்த வித்தியாசத்தை உணரலாம். அதிலும் கண்ணையும், காதையும் மூடிக்கொண்டு நடந்தால் அதிகமாகவே இந்த வாசனை வித்தியாசம் தெரியும். எது மேலாவது இடித்துக் கொண்டு விழுந்தால் நான் பொருப்பல்ல.

இஞ்ஜினைக் கடக்கையில் வரும் கொல்லப் பட்டறை வாசனை, நீராவி அல்லது வெப்பம் தரும் வாசனை வித்தியாசம், சரக்குப் பெட்டியைத் தாண்டும் போது வரும் வாசனை (அதிலும் மீன், கருவாடு போன்ற சரக்கு இருக்கையில் வரும் வாசனை), சமையல் வண்டியைத் (அல்லது பிளாட்பாரத்தில் இருக்கும் சாப்பாட்டுக் கடையைத்) தாண்டுகையில் வரும் வாசனை, குளிர் பதன பெட்டியைத் தாண்டுகையில் மட்டுப் படும் வாசனை என்றெல்லாம் வகை பிரித்து உணர முடியும். அதிலும் இரவு நேர ரயில் நிலைய வாசனை, தூக்கலானது. காரணம் சப்தம் குறைவு; வெப்பம் குறைவு என்று என் ஊகம்.

இத்தனை வித்தியாசம் சரக்கு ரயிலில் வராது. அதில் வரும் வாசனை பெரும்பான்மையாக அதில் வரும் சரக்கைப் பொருத்தது. உரங்கள் ஏற்றி வரும் சரக்குப் பெட்டிக்கும், இரும்பு சாமான்கள் கொண்டு வரும் பெட்டிக்கும் உள்ள வித்தியாசம் கொஞ்சம் அருகே சென்றால் தான் தெரியும். ரயில் பெட்டிக்குள் ஏறினால் ரயில் இருக்கும் இடம், பருவம் பொருத்து வித்தியாசம் வேறுபடும். உதாரணமாக குளிர்காலத்தில் தெற்கே (தமிழ்நாட்டில்) ரயில் பெட்டியின் வாசம், வடக்கே (சண்டீகர்) இருக்கும் வாசத்தில் இருந்து அதிகம் வேறுபடும். மத்தியப் பிரதேசத்தில் தகிக்கும் கோடையில் குளிர் பதனப் படுத்தப் படாத பெட்டியில் பிரயாணம் செய்தால் வியர்வை வாசனை தவிர வேறு எதுவும் தெரியாது. அதே வண்டி ரயில் நிலையத்தை அடைந்தவுடன் கீழே இறங்கி பிளாட்பாரத்தில் உலவுகையில் வரும் வாசனை - சுகந்தம்!!

ரயில் தான் இப்படி என்றால் நிலையத்தின் வாசனை வேறுபாடுகள் அருமை. அதிலும் சாப்பாட்டுக் கடைகள், உணவு வாசனைகள் மிகவும் ரசிக்க வேண்டியவை. சிலருக்கு சில வாசனைகள் பிடிக்காது; அதனால் வாசனை மட்டம், கெட்ட வாசனை என்பார்கள். நானும் அப்படித்தான் பேசியிருக்கிறேன். ரொம்ப வருடம் கழித்து அரிசோனா பீனிக்ஸில் வியட்நாமிலிருந்து குடிபெயர்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் "வாசனையில் நல்லது கெட்டது இல்லை. உனக்கு சில வகை பிடித்திருக்கிறது; சில வகை பிடிக்கவில்லை. வாசனையில் மொத்தம் இரண்டு வகை தான் - இருக்கிறது; இல்லை - No good or bad smell; just there is smell or no smell" என்றார். அது மனதில் ஆழமாகப் பதிந்து போனது. அதனால் தான் இந்தப் பதிவில் வியர்வையும், கருவாடும் 'வாசனை'!

ஸ்ரீரங்க ரயில் நிலையத்தில் கிடைக்கும் பூரி-உருளைக் கிழங்கு வாசனை, சென்னை-தில்லி தடத்தில் ரயிலில் கிடைக்கும் மசால் வடை வாசனை, பீகார் ரயில்களில் கிடைக்கும் குடுவை டீ வாசனை என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியாவில் அனுபவித்த வித்தியாசமான அனேக வாசனைகளை நியூயார்க் ரயில் நிலையங்களில் என்னால் உணர முடியவில்லை. அனைத்து வண்டிகளும் குளிர் பதனப் படுத்தப் பட்டு, மூடியே இருக்கின்றன. சரக்கு ரயிலை தூர இருந்து தான் பார்க்க முடிகிறது. என் கணிப்பில் அறிவியல் ஆராய்ச்சியில் கண், காது புலன்கள் சம்பந்தப்பட்ட விஷங்களுக்கு தந்த முக்கியத்துவம் மூக்கு சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு இல்லை. அதனால் என்னால் முடிந்த தொண்டு, வாசனைக்கென்று ஒரு பதிவு.

அடுத்த பதிவில் ரயில் பயணத்தில் பார்த்த, பாதித்த உறவுகள் பற்றி.

முந்தைய பதிவுகள்:இரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5 இரயில் - 6

ஞாயிறு, ஜூன் 14, 2009

இரயில் - 6

இரயில் - 6

ரயில் என்ற வார்த்தை எனக்கு உணர்த்திய இன்னுமொரு பரிமாணம் 'வலிமை'. ரயில் சம்பந்தப்பட்ட (பெரும்பான்மையான) பொருள்கள் திடத்தில், சக்தியில் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். உதாரணமாக வீட்டில் இருக்கும் மின் விளக்கு/மின் விசிறியின் சுவிட்சை இயக்க (அழுத்த) வேண்டிய விசையை விட, ரயில் பெட்டியில் இருக்கும் சுவிட்சை இயக்க அதிக விசை தேவை. வீட்டில் நாற்காலியில் இடித்துக் கொண்டால் வரும் வலியை விட, ரயில் நிலையத்தில் உள்ள இருக்கையிலோ அல்லது ரயில் பெட்டியிலுள்ள இருக்கையிலோ இடித்துக் கொண்டால் வரும் வலி அதிகம்.

சாலை போட உபயோகிக்கும் சரளைக் கல்லை விட ரயில் தண்டவாளம் போட உபயோகிக்கும் சரளைக் கல் வலிமை அதிகம். ஜன்னல் கம்பியிலிருந்து ஆரம்பித்து தண்டவாளம் வரை கிட்டத்தட்ட அனைத்து பாகங்களும் அதை ஒத்த மற்ற வாகன பாகங்களோடு பார்க்கையில் பெரிதாகவோ, வலிமையாகவோ தான் இருக்கும். ஐம்பது சரக்குப் பெட்டிகளை இரண்டு டீசல் என்ஜின்கள் இழுத்துச் செல்வதைப் பார்க்கையில் அந்த வலிமையை நினைத்து வியந்தது அதிகம். இந்த வலிமை சம்பந்தமான ஒரு கதை என் அப்பா சொன்னது (அவருக்கு அவர் தாத்தா சொன்னது).

கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் ஒப்பிலியப்பன் கோவிலின் மூலவர் விக்கிரகம் முதலில் அத்தி மரத்தில் செய்ததாம். கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன், ஒப்பிலியப்பன் கோவிலுக்கு அருகில் இருக்கும் பவுண்டரீகபுரம் கிராமத்தில் இருந்த அண்ணு அய்யங்கார் கனவில் ஒப்பிலியப்பன் வந்து தான் மயிலம் பக்கத்தில் இருக்கும் ஒரு குளத்தில் இருப்பதாகவும், தன்னை எடுத்து வந்து நிர்மாணிக்க வேண்டும் என்று கட்டளையிட்டாராம். மயிலம் உளுந்தூர்பேட்டைக்கும், விழுப்புரத்திற்கும் இடையே உள்ள இடம்; அப்போது விருத்தாசலம் அருகே இருந்த இரயில் நிலையம்.

இவரும் கொஞ்சம் பணம் சேர்த்து மயிலம் சென்று அங்கிருந்த உள்ளூர் மக்கள் உதவியுடன் குளத்திலிருந்த கல்லை எடுத்து விருத்தாசலம் ரயில் நிலையம் சென்றார். வழியில், கல்லின் கனம் தாளாமல், பல முறை வண்டியின் அச்சு முறிந்து போக, புது வண்டி, புது அச்சு என்றெல்லாம் மாற்றி மாற்றி மிகவும் சிரமப்பட்டு விருத்தாசலம் வந்தடைந்தார். நடந்த கதையெல்லாம் சொல்லி ரயில் பார்சல் ஆபீசில் கல்லை கும்பகோணம் அனுப்பி வைத்து விட்டு, இவரும் ஊர் வந்து சேர்ந்தார்.

கும்பகோணம் வரும் வழியில், ரயில் சரக்குப் பெட்டியும் கல்லின் கனம் தாளமல் சக்கர அச்சு முறிந்து போக, ரயில்வேயிலிருந்து இவருக்கு ஆயிரக் கணக்கில் அபராதத் தொகையுடன் நோட்டீசு வந்து விட்டது. இது நடந்தது சுதந்திரத்திற்கு முன்னால்; ரயில் நிர்வாகம் ஆங்கிலேய அரசின் கையில். வட்டாரத் தலைமயகம் திருச்சியில், ஒரு ஆங்கிலேயர் தான் தலைமை. இவரிடமோ கையில் அபராதத் தொகை கட்ட பணமில்லை.

அண்ணு அய்யங்காரும் திருச்சிக்கு சென்று நிலைமையை விளக்கினார். விருத்தாசலம் ரயில் நிலையம் வருவதற்குள் பலமுறை மாட்டு வண்டி அச்சு முறிந்ததையும், இதை விபரமாக விருத்தாசல ரயில் நிலையத்தில் விளக்கியதையும் சொல்லி, ஒரு சரக்கு ரயிலின் வலிமையை, அதன் பளு தாங்கும் திறமையை, கிராமத்தில் வசிக்கும் தம்மால் எப்படி ஊகிக்க முடியும் என்று கேட்டாராம். இதை வட்டார அலுவலக நிர்வாகியும் ஒப்புக் கொண்டு, அபராதத் தொகையை ரத்து செய்ததோடு இல்லாமல், கல்லை கொண்டு வருவதில் ஏற்பட்ட தாமதத்திற்கும் மன்னிப்புக் கோரி கடிதம் எழுதினாராம். இப்பொதும் ஒப்பிலயப்பன் கோவில் சென்று வழிபடும் போதெல்லாம், இந்தக் கதை நினைப்புக்கு வரும்.

ரயில் நிலையம் சம்பந்தமான வாசனை பற்றிய விஷயங்கள் அடுத்த பதிவில்.

முந்தைய பதிவுகள்:
இரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5

ஞாயிறு, ஜூன் 07, 2009

இரயில் – 5

இரயில் – 5

வில்லிவாக்கத்தில் ஒரு வருடத்திற்குப் பிறகு தேவர் தெருவிலிருந்து, தாமோதரப் பெருமாள் காலனிக்கு மாற்றி வந்தோம். அதிலும், வீட்டிற்குப் பின்புறம் தண்டவாளங்கள் தான். அதிலும் அம்பத்தூர் செல்லும் பாதை தவிர, பாடி வீல்ஸ் இன்டியா தொழிற்சாலையை ஒட்டி, ரயில் வண்டிகளுக்கு பூச்சு அடிக்கும் நிலயத்திற்கு செல்வதற்கான இன்னுமொரு பாதையும் உண்டு. இந்த பெயிண்ட் அடிக்கும் நிலையத்திற்கு செல்வதற்காக முழுவதும் முடிக்கப்படாத வண்டிப் பெட்டிகளை அழைத்துச் செல்வதற்காக சின்ன டீசல் இன்ஜின்கள் இயங்கும்.

இந்த இன்ஜின்கள் மொத்தம் இரண்டு வகை (அப்போது). டீசல் மற்றும் கரி. டீசலில் பெரிசு, சிறிசு உண்டு. இந்த சிறிசு அம்பத்தூர் - பீச் லோகல் வண்டிக்கு அதிகம் உபயோகிப்பார்கள். கரி இன்ஜினில் இரண்டு வகை - முகம் தட்டையான வகை; மற்றும் முகம் ஒரு கூம்பு போல முடிந்த வகை. மின் வண்டி அப்போது இந்த தடத்தில் கிடையாது. ஒவ்வொரு இன்ஜின் சப்தமும் தனி.

கரிவண்டி நிலையத்தை விட்டு கிளம்புவது, ஒரு அழகான கர்நாடக சங்கீதப் பாட்டின் ஆரம்பம் போல. ஸ்வரம் நிதானமாக ஆரம்பித்து, ஒரு சீராக வேகம் எடுக்கும். நிலையத்தின் வெளியே கொஞ்ச தூரத்தில் சாலை தண்டவாளத்தைக் கடக்கும்; அதற்கு முன்பாக அனேகமாக அனைத்து வண்டிகளும், ஓசை (விசில்) எழுப்பி விட்டுத்தான் செல்லும். இந்த விசிலும் ஒரு விதமான தாளத்தோடுதான் - கரிவண்டிகள் அனேகமாக இரண்டு விசில் அடிக்கும், ஒரு சின்னது, தொடர்ந்து கொஞ்சம் நீளமான விசில். இந்த சின்ன விசில் முடிவதற்கு முன் பெரியது ஆரம்பித்துவிடும் - இரண்டுக்கும் நடுவில் நிசப்தம் இருக்காது.

இந்த இன்ஜின் சக்கரங்கள் அளவும், சக்கரங்களுக்கு இடையே உள்ள தூரமும் வண்டிப் பெட்டிகளில் இருக்கும் சக்கரங்களை விட மாறுபட்டது. நீராவிப் பெட்டியிருந்து (அதான் பிஸ்டன் இருக்கும் டப்பா) வரும் இரும்பு உருளை இரண்டு அல்லது மூன்று பெரிய சக்கரங்களோடு (ஆரங்கள் உள்ள சக்கரங்கள்) இணைந்திருக்கும். நீராவி இந்த இரும்பு உருளையைத் தள்ளும் போது அந்த விசை ஒரு சக்கரத்திற்கு மட்டும் செல்லாமல் இந்த இரண்டு/மூன்று சக்கரங்களுக்கும் செல்லத்தான் இந்த அமைப்பு. இதில் சமயத்தில் நிலையத்திலிருந்து கிளம்புகையில் இன்ஜின் சக்கரத்தில் தண்டவாளத்தோடு அதிக பிடிப்பு இல்லாமல், சக்கரம் ஒரே இடத்தில் வேகமாகச் சுற்றுவதைப் பார்க்கலாம். அப்போது வரும் சப்தம் (கிட்டத்தட்ட அபஸ்வரம்) நிச்சயாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

அந்த நான்கு வருடங்களில் வெவ்வேறு விதமான சப்தங்களையும் அந்த வண்டிகளையும் கேட்டு/பார்த்து, அடையாளம் காண்பதில் தேர்ச்சி வந்தது. அதிலும் தாமோதரன் காலனி வீட்டில் மொட்டைமாடி - அதனால் வண்டிகளைப் பார்ப்பதும் கேட்பதும் அதிகமானது. அப்போது நாங்களாய் தென்னங் குறும்பையில் இரண்டு தென்னங்குச்சியை சொருகி (ஒரு பெரிய குச்சியை வளைத்து - ஆங்கில தலைகீழ் U, நடுவில் இரண்டாவது சின்ன குச்சியை சொருகி, மூன்றாவது குச்சியை இந்த குறும்பைக் குச்சிகளுக்கு இடையே நுழைத்து சுழற்றினால் ஒரு விதமான கிலுகிலுப்பை சத்தம் - Rattler) சுழற்றினால் வரும் சத்த தாளத்தை ரயில் வண்டியின் தாளத்தை ஒட்டி வரவழைப்பது ஒரு விளையாட்டு.

இது தவிர ஒரு ஊதல் - புல்லாங்குழல் போல. அதில் ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி, தண்ணீரில் நனைத்து, அந்த குச்சியை குழலின் உள்ளே மேலும் கீழும் அசைத்து, ஊதலின் சப்தம் மாறுவதை (சப்தம் கீழ் ஸ்தாயி, மேல் ஸ்தாயி என்று மாறும்) கேட்போம். இந்த மேலிருந்து கீழ் அசைவை ஒரு தாள வேகத்தோடு செய்தால் கரிவண்டிகள் எழுப்பும் முன்னால் சொன்ன அந்த இரண்டு விசில் போல வரும். இந்த விசில் சப்தம் ஏன் அளவில் வேறுபடுகிறது என்று புரிந்தது, மன்னார்குடியில் திரு ஸ்ரீதரன் அவர்கள் இசைக் கவை பற்றி சொல்லிக் கொடுத்த போது கொஞ்சம் புரிந்தமாதிரி இருந்தது. ஊதுபத்தி டப்பாவை (ஒரு உருளை அட்டை) காதில் வைத்து ரயில் ஊதலைக் கேட்கையில் தெரிந்த வித்தியாசத்த்தை விவரிப்பது கடினம்; இசைக் கவைப் பாடம் நிச்சயம் உதவியது.

முந்தைய பதிவுகள்
இரயில் - 1
இரயில் - 2

இரயில் - 3
இரயில் - 4