திங்கள், மார்ச் 27, 2006

பந்து!

சனிக்கிழமை என் 18 மாத மகனுக்கும், மூன்றரை வயதான என் மகளுக்கும் போட்டி, சண்டை. இருவருக்கும் ஒரே பந்து தான் வேண்டும். வீட்டில் வித விதமான பந்துகள் - பெரிதும் சிறிதுமாக, ரப்பர், பிளாஸ்டிக், தோல், துணி என்று விதவிதமான வகைகள் - பல வண்ணங்களோடு. இருந்தாலும், இருவருக்கும் ஒரே சமயத்தில் ஒரே பந்துதான் வேண்டும். சர்ச்சைக்குரிய பந்தை நான் எடுத்து ஒளித்து வைத்தேன். என் பெற்றோர்களின் யோசனை – ‘அதே மாதிரி இன்னுமொரு பந்து வாங்க வேண்டியதுதானே’ என்று என்னைக் கேட்கிறார்கள்!! நான் சிறுவனாக இருக்கும் போது வருடத்திற்கு ஒரு பந்து வாங்கிக் கொடுக்கவே யோசனை செய்தவர்களா இவர்கள்?! பேரன் பேத்தி என்று வந்து விட்டால் எல்லாம் மாறி விடும் போல் இருக்கிறது.

சிறு வயதில் கிரிக்கட் விளையாட பந்தில்லாமல் நாங்கள் செய்த வேலைகள் தான் எத்தனை? ரப்பர் பந்து சீக்கிரம் பிய்ந்து போய் விடும். வாடகை சைக்கிள் கடை வைத்திருப்பவரிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு பழைய சைக்கிள் டியூப் கேட்போம். கொஞ்சமாகத்தான் கொடுப்பார் - அவருக்கு பங்க்சர் ஒட்ட அந்த டியூப் உதவுமே! டியூபை ஒரு விரற்கடை அகலத்திற்கு துண்டு துண்டாக (ஒரு வளையம் போல்) வெட்டிக் கொள்வோம். பந்து கனமாக இருக்க வேண்டும் என்றால் சிறு கல்லை எடுத்து, அதன் மேல் காகிதத்தை சுற்றிக் கொள்வோம். பந்து இலேசாக இருக்க வேண்டும் என்றால் வெறும் காகிதம் தான் - கல் கிடையாது. பின்பு இந்த ரப்பர் வளையங்களை ஒவ்வொன்றாக காகித உருண்டையின் மேல் இறுக்கமாகப் போட்டு விட்டால் பந்து தயார்.

இந்த மாதிரி பந்து செய்வதற்கும் திறமை வேண்டும். தெருவில் இரண்டு, மூன்று பேர் - இணையத்தில் எழுதும் அலெக்ஸ்பாண்டியன் உட்பட - இதில் கை தேர்ந்தவர்கள்! இந்த மாதிரிப் பந்து கொஞ்ச நாள் தாங்கும். அவ்வப்போது இதற்கு 'மெயின்டெனன்ஸ்' உண்டு. அறுந்த ரப்பர் வளையங்களை எடுத்து புதிதாகப் போடுவது, தண்ணீரில் நனைந்து போனால் எல்லாவற்றையும் எடுத்து விட்டு உள்ளே உள்ள காகிதத்தை மாற்றுவது, என்று எல்லாம் சரியாக நடக்க வேண்டும். இந்தப் பந்தோடு விளையாட கொஞ்சம் திறமை வேண்டும் - அடிபட்டால் வலிக்கும். சமயத்தில் பந்து வரும் போது மேலே உள்ள ரப்பர் விண்டு போய் தனியாக வந்து மூஞ்சியில் அடிக்கும். கிரிக்கட்டில் அருகே உள்ள பீல்டர்களுக்கு இது ஒரு தொந்திரவு. ஸ்பின் அதிகம் ஆகும்! கொஞ்சம் பார்த்து விளையாட வேண்டும்.

செலவில்லாவிட்டாலும் இந்தப் பந்தை எல்லா விளையாட்டுகளுக்கும் உபயோகிக்க முடியாது. தெருவில் அனேகமாக எல்லா வீடுகளும் ஓட்டு வீடு தான் - அதிலும் நாட்டு ஓடு தான் அதிகம். ரப்பர் பந்தை கூரையில் விட்டெறிந்து, அது கீழே வரும் போது ஒருவர் மாற்றி ஒருவர் கையால் மறுபடியும் கூரையில் தட்டி விளையாடுவோம். பந்து ஒட்டில் பட்டு சட்டென்று திசை மாறி வரும்; அதனால் விளையாட்டில் சுவாரசியம் அதிகம். கிட்டத்தட்ட ஸ்குவாஷ் அல்லது ராக்கெட் பால் என்று சொல்லப்படும் விளையாட்டுகள் போல; ஆனால் மட்டை கிடையாது. அதற்கு இந்த வகை சைக்கிள் டியூப் பந்து ஒத்து வராது - ஓடு உடைந்து விடும்; வீட்டில் திட்டு/அடி கிடைக்கும். அதே போல் 'புட்டு', 'பே-பே' போன்ற விளையாட்டுகளுக்கும் இந்தப் பந்து உதவாது - இவ்விரு விளையாட்டுகளிலும் எதிர் அணியில் உள்ளவர்களை பந்தால் அடிக்க வேண்டும் என்பதால்.

மன்னார்குடியில் ஒரு டென்னிஸ் கிளப் உண்டு. அங்கிருந்து பழைய பந்தை எப்போதாவது தெருவில் உள்ள நண்பர்கள் யாரேனும் வாங்கி வருவார்கள். அது கிடைத்தால் சந்தோஷம் தான். பந்து தொலைந்து போகும் வரை அல்லது கிழியும் வரை விளையாடுவோம். சமயத்தில் பந்தில் மேலுள்ள உறையெல்லாம் தேய்ந்து போய், வழ வழ என்று சாதா ரப்பர் பந்து போல் ஆகிவிடும். ஒரு காலத்தில் அது டென்னிஸ் பந்து என்று இருந்ததற்கு சாட்சியாக அதன் மேல் ஒரு வெளிர் கோடு மட்டும் தெரியும் - அணில் முதுகில் இருக்கும் கோட்டைப் போல். இருந்தாலும் தீர்மானமாக அதை வைத்துக் கொண்டு விளையாடுவோம்.

இதில் சண்டைகளும் அடிக்கடி வரும். எனக்கும் என் தம்பிக்கும் இடையேயும் சண்டைகள் வந்திருக்கின்றன. ஒரு முறை கிரிக்கட் விளையாடும் போது, வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவரை என் மட்டை பதம் பார்த்துவிட, அவர் என்னைத் துரத்திக் கொண்டு ஓடி வர, என் தம்பி அவர் பின்னால் என்னைக் காப்பாத்த ஓடி வந்தது இன்னமும் நினைவில் நிற்கிறது. 'சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து; அதை மாற்ற யாராலும் முடியாது' என்று சிவாஜியின் திருவிளையாடல் வசனம் ஞாபகம் வந்தது. இது உடன்பிறந்தவர்களுக்கும் பொருந்தும். இதையெல்லாம் நினைத்துப் பார்த்து, ஒளித்து வைத்த பந்தை எடுத்து மறுபடியும் என் மகனுக்கும் மகளுக்கும் இடையே போட்டேன் - தொடரட்டும் சண்டை என்று!

வெள்ளி, மார்ச் 24, 2006

ஓட்டுனர்கள்!

இரண்டு வருட இடைவேளைக்குப் பிறகு இந்த வருட ஆரம்பத்தில் வேலை நிமித்தம் இரண்டு வாரம் பெங்களூர் சென்றிருந்தேன். அலுவலகத்திலிருந்து வீடு (கம்பெனியின் அபார்ட்மென்ட்) செல்ல அலுவலகக் கார் - கார் சோபையிழந்து இருந்தாலும், ஓட்டுனர் களையாக இருந்தார்! (தப்பான கற்பனைக்குப் போக வேண்டாம்!). என்னிடம் “என்ன 'சிடி' வேண்டும் - பாப்? ஹிந்துஸ்தானி? கன்னடம்?” என்றெல்லாம் நேயர் விருப்பம் போல் கேட்டார். அவரிடம் இருந்த செல்போன் வித விதமாய் சத்தம் போட்டது ('இது என் வீட்டிலிருந்து, இது என் மானேஜர்' என்றெல்லாம் விளக்கம் கிடைத்தது). வீடு திரும்புகையில் களைத்து உட்கார்ந்து இருக்கும் என்னையும், அவரையும் தூரத்திலிருந்து யாராவது பார்த்தால், ஓட்டுனர் யார் என்ற சந்தேகம் கட்டாயமாக வரும்! எனக்கு சிறு வயதிலிருந்து பார்த்த வித விதமான ஓட்டுனர்களின் ஞாபகம் வந்தது!

முதலாக பரமக்குடியில் என் பெரியப்பா வீட்டு 'டிரைவர் சந்தானம்'. ஊருக்குள்ளேயே சற்று தொலைவு போவதற்கும் (சினிமா, தெரிந்தவர் வீடு), மற்றும் முக்கியமாக மதுரை மற்றும் அக்கம் பக்கம் உள்ள கோர்ட்டுகளுக்கு (என் பெரியப்பா ஒரு வக்கீல்) போவதற்கும்தான் கார். அருமையாகப் பேசுவார்; கதை சொல்லுவார்; எல்லா விஷயமும் பேசுவார்! ஒரு ஐந்து வயதுப் பையனுக்கு வேறு என்ன வேண்டும்.

பின்பு பள்ளியில் படிக்கும் காலத்தில் (பட்டுக்கோட்டை, மன்னார்குடி) வெளியூருக்கு செல்லும் போது பார்த்த பேருந்து ஓட்டுனர்கள். அப்போது இருந்த முக்கியமான பஸ் பயணம் எல்லாம் சென்னைக்கு (திருவள்ளூவர் - இரவுப் பேருந்து); அல்லது திருச்சி, மதுரை போற 'லோக்கல்' பயணங்கள். அனேகமாக சற்று பருமனாகவும், முறுக்கு மீசை வைத்துக் கொண்டும், வழியில் நிற்கையில் ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு, ஒரு பீடி வலிப்பவராகவும் இருப்பார்.

அடுத்ததாக கல்லூரியில் (திருச்சி) படிக்கையில் தனியார் பேருந்துகள், எப்போதாவது 'தீரன் சின்னமலை'. பெரிய முறுக்கு மீசை, பீடி எல்லாம் இல்லை; சிகரெட்தான்! இந்த ஓட்டுனர்கள் எல்லாம் கொஞ்சம் ஒல்லி - ஆனால் ரொம்பவும் போட்டி மனப்பான்மை நிறைந்தவர்கள். மெயின்கார்ட்கேட்டிலிருந்து மாலையில் (அல்லது காலையில்) செல்லும் எல்லாப் பேருந்தும் ரொம்பி வழியும். அதிலும் இராசநாயக்கன்பட்டி செல்லும் 45ம் நம்பர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டிய ஒரு பேருந்து - ஒரு வண்டியில் இத்தனை மனிதர்கள் போக முடியுமா?!? என் நண்பன் ஒருவன் சொன்னது 'இந்த கண்டக்டர்களுக்கும், ஓட்டுனர்களுக்கும் நம் முகம் தெரியாது; நம்மையெல்லாம் ஒரு எட்டணா, அல்லது ஒரு ரூபாய் என்றுதான் அவர்களுக்குத் தெரியும்!'

பின்பு சென்னைக்கு வந்த பின் தினமும் 'பல்லவன்' ஓட்டுனர்கள் - இவர்களுக்கு வசூல் கவலையெல்லாம் கிடையாது; அதனால் கிளம்ப வேண்டிய நேரத்திற்கு முன்பாகவே கிளம்பிவிடுவார்கள் அல்லது சில நிறுத்தங்களை விட்டு விடுவார்கள். நகைச்சுவை உணர்வு நிறம்பியவர்கள். நமக்கு உடற்பயிற்சி தருவதற்காக, நிறுத்த வேண்டிய இடத்த்ற்கு முன்பாகவோ அல்லது தாண்டியோ நிறுத்துவார்கள். நாம் ஓடி வருவதைப் பார்த்தாலும் கிளம்பி விடுவார்கள்.

அமெரிக்கா வந்த பின் நானே என் வீட்டுக்கு (முக்கியமாக வீட்டு அம்மாவிற்கு) ஓட்டுனராகி விட்டதால் அதிகம் மற்ற ஓட்டுனர்களைப் பார்க்க முடிவதில்லை! வயதாகி வருவதால் இப்போதெல்லாம் முதன்மை ஓட்டுனரை - அர்ஜுனனின் சாரதியை - அதிகம் நினைக்கத் தொடங்கியிருக்கிறேன்!

ஞாயிறு, மார்ச் 19, 2006

ஆரோக்கியம்!

சிறு வயதில் கேட்ட ஒரு கதை. வயதானாலும் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு கிராமத்துப் பெரியவரை, 'உங்கள் ஆரோக்கியத்திற்கு காரணம் என்ன?' என்று கேட்ட போது இவ்வாறு பதில் கூறினாராம்.

‘ஓரடி நடவேன்
ஈரடி நில்லேன்
இருந்து உண்ணேன்
கிடந்து உறங்கேன்’

இதன் பொருள்:
ஓரடி நடவேன் - அதாவது என் நிழல் ஓரடியாக இருக்கும் காலத்தில் - மதியம் (உச்சி வெயில் காலம்) வெளியே நடக்க மாட்டேன்.
ஈரடி நில்லேன் - ஈரப்பதமான இடத்தில் (வெறுங்காலுடன்) நிற்க மாட்டேன்
இருந்து உண்ணேன் - முதல் வேளை உண்ட உணவு வயிற்றில் இருக்கையில் உண்ண மாட்டேன்
கிடந்து உறங்கேன் - தூக்கம் வருவதற்கு முன் படுக்கையில் புரண்டு கிடந்து உறங்க மாட்டேன் (அதாவது, நன்கு உழைத்து களைப்போடு வந்து படுத்தவுடன் உறங்கி விடுவேன் - உறக்கம் வராத போது படுக்கையில் கிடந்து உறங்க மாட்டேன்).

என்னுடைய தற்போதைய வாழ்க்கையிலும் இதை நான் கடைபிடிக்கிறேன் - அந்தப் பெரியவரின் ஆரோக்கியம் இருப்பதாகத் தெரியவில்லை.

நானும் ஓரடி நடப்பதில்லை - காலை வேலைக்கு வரும் போது அனேகமாக சூரியன் உதித்திருப்பதில்லை; மாலை வீடு திரும்பும் போது அஸ்தமனம் ஆகியிருக்கும். இருக்கும் இருபதாவது மாடியிலிருந்து மதியம் வெளியே போவது கிடையாது!

ஈரடி நிற்பதில்லை - வெறுங்காலுடன். வேறு வழியே இல்லாமல் வீட்டின் வாசலில் இருக்கும் இரண்டடிப் பனியை எடுத்துப் போடுவதற்கு, இரண்டு-மூன்று சட்டைகள், கோட்டு, குல்லா, மப்ளர், கையுறை, காலுறை (இரண்டு), ரப்பர் பூட்ஸ் என்றெல்லாம் மாட்டிக் கொண்டுதான் போகிறேன்.

இருந்து உண்பதில்லை - காலையில் அலுவலகத்திற்கு வரும் அவசரத்தில் ஒரு காப்பியைத் தவிர உண்பதில்லை; மதியம் மீட்டிங்குகளுக்கு இடையில், சமயம் கிடைக்கும் போது உணவு! இரவு வீட்டிற்கு போகும் வழியிலேயே பசிக்க ஆரம்பித்து விடுகிறது!

கிடந்து உறங்குவதில்லை! நிறைய நாட்கள் வீட்டில் சாப்பிட்டு முடித்த உடனேயே தூக்கம் வந்து விடுகிறது - மனைவி, குழந்தைகள் பேச்சுக்கு அந்த அரைகுறை தூக்கத்திலேயே பதில். கிடந்து உறங்குவதற்கு பதில் உட்கார்ந்தே உறக்கம்.

மொத்தத்தில் நானும், ‘ஓரடி நடவேன்; ஈரடி நில்லேன்; இருந்து உண்ணேன்; கிடந்து உறங்கேன்’. ஆனால் ஆரோக்கியம்?!

புதன், மார்ச் 08, 2006

வல்லினப் பழம்? மெல்லினப் பழம்?

சென்ற வாரம் என் மகளுக்கு படம் பார்த்து வார்த்தைகள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆப்பிள் என்று சொன்னதும் என்னை 'ஆப்பில்' என்று திருத்தினாள் - நான் படித்துக் கொண்டிருந்தது ஆங்கிலப் புத்தகம்; சிறிது நேரம் கழித்து தமிழ் ஆத்திச்சூடியில் நான் ஆப்பில் என்றவுடன் 'ஆப்பிள்' என்று திருத்தினாள்! மனதுக்கு சந்தோஷமாய் இருந்தது - உச்சரிப்பு வித்தியாசம் புரிந்து திருத்துகிறாள் என்று. அப்புறம் தோன்றியது இந்தக் கேள்வி - எது சரி? ஆப்பிலா? ஆப்பிளா?

சிறிது நேரம் (2 - 3 நாள்) யோசனை பண்ணியபின் நான் புரிந்து கொண்டது இங்கே. இது போன்ற நிறைய வார்த்தைகள் மற்ற மொழியிலிருந்து வரும் போது உச்சரிப்பில் வேறுபடுகிறது. சில வேறுபாடுகள் பொருத்தமான எழுத்துக்கள் இல்லாத காரணத்தால் - உதாரணமாக 'தமிழ்' என்பதே 'டமில்' என்று மாறுகிறது - ஆங்கிலத்தில் 'ழ்' இல்லாததால்.

பாங்ளா (பெங்கால்) என்பது வங்காளம் என்று மாறுகிறது, தமிழில். வங்காள மொழியில் 'வ' இல்லை என்று பள்ளியில் தமிழ் ஆசிரியர் சொன்ன ஞாபகம். அது சரி என்றாலும், ஒரு மொழியிலிருந்து வார்த்தையை உபயோகிக்கும் போது, மாற்றப்படுகின்ற மொழியில் அந்த உச்சரிப்பு இல்லை என்றால் தானே மாற்ற வேண்டும்? தமிழில் 'ப'வும் இருக்கிறது, 'ல்' ம் இருக்கிறது - பெங்கால் என்று எழுதினால் என்ன? வங்காள மொழியில் 'வ' இல்லை என்ற காரணம் காட்டி அங்குள்ள அத்தனை 'ப' வையும் 'வ' என்றாக்குவது சரியா? அதே போல் தமிழில் 'ல்' இருப்பதால் ஆப்பில் என்று எழுதுவதில் என்ன தவறு?

தமிழ் இலக்கணப்படி புள்ளி எழுத்தில், ஆய்த எழுத்தில் வார்த்தை தொடங்கக் கூடாது. புளோரிடா என்பதை விட ப்ளோரிடா அல்லது ஃப்ளோரிடா என்று எழுதினால் என்ன? தமிழ் எழுத்துக்கள் வடிக்கப்பட்ட காலத்தில் எழுதிய இலக்கணத்தை, அப்போது அவர்களுக்கு தெரிந்திராத ஊர்களுக்கும், வார்த்தைகளுக்கும் உபயோகப் படுத்துவது சரியானதுதானா? (தொல்காப்பியர் மன்னிக்க!).

இவைகளெல்லாம் வார்த்தைகளை அப்படியே தமிழ் எழுத்தில் எழுதுவது பற்றி. மொழி பெயர்த்து எழுதுவது இன்னும் குழப்பமானது. 'Bell Road' என்பதை ‘பெல் தெரு’ என்று சொல்லலாம். இதையே மணித் தெரு என்று மொழி பெயர்த்தால்?! இங்கு ‘பெல்’ என்பது ஒரு மனிதரின் பெயர். அவரை மணி என்று விளிப்பதை அவர் ஆட்சேபிக்கலாம்!

கல்லூரியில் படிக்கும் போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களின் பெயர்களை சுவரொட்டிகளில் பார்த்து ரசித்து சிரித்ததுண்டு. 'சூரிய பகவானின் வளைவு', 'சாவுக்கு முன் சாமி கும்பிடு' என்ற படங்களின் சுவரொட்டிகள் இன்னமும் நினைவில் நிற்கின்றன. முடிந்தால் மூலப் படங்களின் ஆங்கிலப் பெயர்களை ஊகியுங்கள் பார்ப்போம்!

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் 'ஒரு கம்ப்யூட்டரின் கதை' என்ற புத்தகத்தின் முன்னுரையில் இந்த மாதிரி மொழிபெயர்த்த வார்த்தைகளை ஏன் உபயோகிக்கவில்லை என்று காரணம் காட்டியிருந்தார். BASIC என்ற ஒரு மென்பொருள் மொழி ' Beginners’ All-purpose Symbolic Instruction Code ' என்ற சொற்றொடரின் முதலெழுத்துகளால் ஆனது - இதையே தமிழில் 'ஆபகுசம்' – ‘ஆரம்பிப்போரின் பல்திறமை குறியீட்டு சங்கேதம்’ என்று மொழிபெயர்த்தால் எப்படியிருக்கும்? என்று கேட்டிருந்தார்!

எனக்கு அவர் கருத்தோடு ஒத்துப்போகிறது. இருந்தாலும், இந்த மாதிரி மொழிபெயர்ப்புகளில் ஒரு நகைச்சுவை இருக்கிறது என்பதால் மொழிபெயர்ப்புகளைப் படிக்கவும் தோன்றுகிறது.

பின் குறிப்பு: ஆங்கிலப் படங்களை ஊகிக்க முடியவில்லையா?
1. Arc of the Sun God
2. Pray before death.