ஞாயிறு, மே 31, 2009

இரயில் - 4

இரயில் - 4

ஒரு விஷயத்தை உணர்ந்து அனுபவிக்க, அந்த விஷயத்தைப் பற்றிய அறிவு இருந்தால் உதவியாக இருக்கும். அதே சமயத்தில் அந்த அறிவு, அல்லது ஞானம் கொஞ்சம் அதிகமாக இருந்துவிட்டால் சமயத்தில் அந்த ஞானமே அனுபவ முழுமைக்குத் தடையாக இருந்துவிடுகிறது.

சிறு வயதில் ரயில் செல்லும் ஓசையை நான் அனுபவித்து ரசித்திருக்கிறேன். பார்க்காமலேயே வண்டி கொரட்டூர் பக்கத்திலிருந்து பெரம்பூர் செல்கிறதா, அல்லது பெரம்பூர் பக்கத்தில்ருந்து கொரட்டூர் செல்கிறதா என்று சொல்வது கொஞ்சம் சுலபம். திசை மட்டுமில்லாமல், இது கூட்ஸ் (சரக்கு ரயில்); இது பாசஞ்சர்; இது எக்ஸ்ப்ரஸ்; இது பெரிய கூட்ஸ் பெட்டி; இது சிறியது என்றெல்லாம் சொல்லி தம்பியையும், அக்கம் பக்கத்து சிறுவர்களையும் போட்டி விளையாட்டுக்கு அழைத்திருகிறேன். அனேகமாக நான் தான் வெல்வேன்; அதனால் யாரும் அதிகமாக இந்த விளையாட்டுக்கு வர மாட்டார்கள்.

அப்போது யாராவது என்னை 'எப்படி உன்னால் பார்க்காமலே சரியாகச் சொல்ல முடிகிறது' என்று கேட்டிருந்தால், எனக்கு பதில் சொல்லத் தெரிந்திருக்காது. பின்னால், மன்னார்குடியில் படிக்கையில், டாப்ளர் விதி பற்றி திரு சேதுராமன் சொல்லிக் கொடுக்கையில் - இந்த வில்லிவாக்க விளையாட்டு நினைப்புக்கு வந்து 'அட இதானா அது' என்று புரிந்தது. தண்டவாள துண்டுகளுக்கு இணைப்பு கொடுக்கையில் விடும் இடைவெளியில் (வெப்பத்தில் இரும்பு விரியும் போது ரயில் தடம் புரளாமல் இருக்க), சக்கரம் செல்லும் போது வரும் ஓசை ஒருவிதமான தாளம். ரயில் பெட்டிகளின் சக்கர அமைப்பு - இரண்டு இரண்டாக இருக்கும் சக்கரங்களுக்கு இடைப்பட்ட தூரம் எப்போதும் ஒரே அளவில் இருக்கும். முதல் பெட்டியின் கடைசி சக்கரத்திற்கும், இரண்டாம் பெட்டியின் முதல் சக்கரத்திற்கும் இடைய உள்ள இடைவெளி ஒரே சீராக இருக்கும். இதனால் ரயில் செல்லும் போது சீரான தாள கதியில் ஓசை வருகிறது. 'தடக்-தடக்' என்னும் இந்த சுருதி, தம்புராவில் இரண்டு மீட்டுதல்களை ஒத்திருக்கும்.

பெரிய சரக்குப் பெட்டியில் முன்-பின் சக்கர தூரம், சிறிய சரக்குப் பெட்டியிலிருப்பதை விட அதிகம் - அதனால் இந்த தாள அமைப்பு சற்று மாறும். முதல் 'தடக்-தடக்'க்கும் இரண்டாம் ‘தடக்-தடக்'கிற்கும் அதிக இடைவெளி இருந்தால் அது பெரிய பெட்டி; இல்லையென்றால் சிறிய பெட்டி. திறந்த பெட்டியில் காற்று புகுந்து செல்லும் விதமும், மூடிய சரக்குப் பெட்டியைத் தாண்டி வரும் விதமும் பயணிகள் ரயிலுக்கும், சரக்கு ரயிலுக்கும் ஓசை வித்தியாசம் ஏற்படுத்தும்.

இந்த மாதிரி சீரான தாள ஓசைகளை கேட்க வேண்டும் என்று ஒரு வெறி; அளவு கடந்த ஆர்வம். வீட்டின் பின்புறம் குடித்தனம் இருந்தவர்கள் தயிர் கடைய ஒரு தூணில் கயற்றை வளையமாகக் கட்டி, அதில் மத்தை வைத்து, மத்தை மற்றொரு கயற்றால் சுழற்றி தயிரை கடைவார்கள். தச்சர்கள் மரத்தில் துளை போட இதே போன்று கயற்றால் சுழற்றி இயக்குவதைப் பார்த்திருக்கிறேன். இவை அனைத்திலுமே ஒரு சீரான தாள அமைப்பைக் கேட்கலாம். எங்கள் வீட்டில் மத்தை அம்மா கையால் சுழற்றுவார்கள். அதில் ஓசை சீராக வரவில்லை என்றால், அம்மாவை 'நீ சரியாக சுற்றவில்லை' என்றெல்லாம் சொல்லி வெறுப்பேத்தியிருக்கிறேன்.

நல்ல வேளை என் அம்மா கொஞ்சம் அதிகமாகவே பொறுமை சாலியாக இருந்ததால், இந்த ஆர்வம் எந்த விடத்திலும் தடங்கலில்லாமல் அதிகமான அனுபவத்தைப் பெற முடிந்தது. இந்தக் காலத்தில் இருக்கும் 'அறிவும்' 'ஞானமும்' இருந்திருந்தால், எனக்கு 'OCD – Obsessive Compulsive Disorder' இல்லை ‘ADD – Attention Deficit Disorder’ என்றெல்லாம் சொல்லி 'தெரபி' கொடுத்திருப்பார்கள். இப்படியெல்லாம் செய்யாமல், பொறுமையுடன் என்னை வளர்த்த அம்மாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.


திரு சேதுராமன் அறிவியல் வகுப்பில், டாப்ளர் விதியையும், அதன் சமன்பாடுகளையும் ரொம்பவும் விபரமாக பாடம் நடத்திய போது, அதை நன்றாகப் புரிந்து கொள்ள உதவியது இந்த சிறுவயது 'உணர்தல்' தான். அந்த அனுபவம் இல்லாமல் இந்த விதியை நான் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்க முடியாது. அறிவியலால் புரிந்தது பத்து வருடங்களுக்குப் பின்னால்; ஆனால் சிறுவயதில் இந்த வித்தியாசத்தை உண்ர்ந்ததோடு அல்லாமல் அதை அடையாளமும் கண்டு கொண்டதை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் வேலை விஷயமாக வில்மிங்டன் செல்ல 'Acela’ எக்ஸ்ப்ரசில் போகையில், பெட்டியின் வாசலில் கண்ணை மூடிக் கொண்டு நின்று கொண்டு இந்த தாளத்தை ரசிக்கையில், அம்மாவின் மத்தும், டாப்ளர் விதியின் சமன்பாடும், வில்லிவாக்க ரயில் நிலையமும் தான் நினைப்புக்கு வந்தது. அனுபவத்தையும், அறிவியலையும் முழுமையாக உணர வைத்தை அம்மாவிற்கும், ஆசிரியருக்கும் நன்றி.

முந்தைய பதிவுகள்
இரயில் - 1
இரயில் - 2
இரயில் - 3

சனி, மே 23, 2009

இரயில் - 3

இரயில் - 3

நான் வளர்ந்த காலத்தில் விளையாட்டு பொம்மைகள் வீட்டில் அதிகம் கிடையாது. வாங்கித்தந்த பொம்மைகளைவிட நாங்களாய் உருவாக்கிக் கொண்ட விளையாட்டு பொம்மைகளைத் தான் அதிகம் விரும்பி உபயோகித்தோம் - நான் மட்டுமல்ல, தெருவில் வசித்த முக்கால் வாசி சிறுவர்கள் வீட்டு நிலைமையும் இதே போலத்தான். மொட்டைமாடியில் நின்று பட்டம் (வீட்டில் வரும் செய்தித்தாளில் செய்தது) விடுவது, மற்றும் விதவிதமான வண்டிகள் செய்து விளையாடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி - பட்டமோ, வண்டியோ, செய்தது நாம் தானே! விளையாடுவதை விட செய்த பொருள் நன்றாக இயங்கினால் சந்தோஷம் அதிகம்.

பட்டம் அனேகமாக கோடையில்தான். ரயில் வண்டி செய்வது அதிகமாக மழைக்காலத்தில் - வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அடைந்து கிடக்கையில் சிகரெட்டு டப்பா, தீப்பெட்டி கொண்டு வண்டிகள் செய்வோம். தீபாவளி சமயத்தில் அதிகம் தீப்பெட்டி கிடைக்கும். உள்ளிருக்கும் பெட்டியை பாதி திறந்து அடுத்த தீப்பெட்டியுடன் இணைத்தால் தொடர் வண்டி ரெடி. துணி தைக்கும் ஊசியால் (ஊசி முக்கியம்; குச்சியால் நேரடியாக ஓட்டை போட முயன்றால், பெட்டி உடைய வாய்ப்பு உண்டு) தீப்பெட்டியில் ஓட்டை போட்டு, தென்னங்குச்சியை நுழைத்து (அது தான் ஆக்சில் - Axle) சக்கரத்துக்கு எது கிடைக்கிறதோ - அது வெண்டைக்காயின் காம்பாக இருக்கட்டும், அல்லது சப்போட்டா பிஞ்சு இல்லை தென்னங்குறும்பை! - அதை இரண்டு பக்கங்களிலும் சொருகி எந்த வண்டி வேகமாகப் போகிறது என்று போட்டி போட்டுக் கொண்டிருப்போம்.

ஒரு முறை பள்ளியில் சாக்பீஸ் டப்பா ஒன்று - தக்கையான மர டப்பா - கிடைக்க, அதிலும் இதே போன்ற வித்தை காட்டி வண்டி செய்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. இந்த வண்டி விளையாட்டில் நிஜத்தை பிரதிபலிக்க சேர்த்த டிக்கட், வண்டியின் டிரைவர் வண்டி நிற்கும் நிலையப் பெயர் சொல்வது (வரிசையான பெயர்கள் - அது எழும்பூர் - தாம்பரம், அல்லது அம்பத்தூர் - பீச் வழித்தடமாக இருக்கும்) என்றெல்லாம் விதிமுறைகள் ஏற்படுத்தி விளையாடினோம்!

ஒரு முறை - 75ல் என்று நியாபகம் - வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு ரயில் புத்தக நிலையம் ஒன்று வந்து ஒரு வாரம் இருந்தது. இரண்டு/மூன்று பெட்டிகளை ஒரு புத்தகக் கடை போல மாற்றி ஒரு வாரம் நிலையத்தில் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்பா எங்களை அழைத்து சென்று புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். அதில் ஒன்று 'யார் அதிக பலசாலி?' - பத்து/பதினைந்து பக்கங்கள், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு படம், ஒரு சிறுவன் அப்பாவிடம் 'உலகிலேயே யார் அதிக பலசாலி' என்று கேட்க, அப்பா ஒவ்வொரு இடமாக ஆழைத்துச் செல்வது போல கதை - முதலில் யானை, பஸ், பின் ரயில் நிலையம், கிரேன், கப்பல் என்றெல்லாம் பார்த்து விட்டு கடைசில் இதை எல்லாம் இயக்கும் மனிதன் தான் அதிக பலசாலி என்று முடியும்.. அங்கு வாங்கின இன்னுமொரு புத்தகம் உள்ளங்கை அளவுதான் - ஆனால் நிறைய பக்கங்கள். எல்லாமே பாட்டுதான் - ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இல்லை நான்கு வரிகள். அதில் படித்த ஒரு ரயில் பாட்டு இன்னமும் நினைவில் இருக்கிறது.

ரயிலே ரயிலே ரயிலே
ரயிலும் சிறிது வேகமாய்ப் போனால்
மெயிலே மெயிலே மெயிலே

டிக்கட் டிக்கட் டிக்கட்
டிக்கட் இன்றி பயணம் சென்றால்
இக்கட் இக்கட் இக்கட்

பாலம் பாலம் பாலம்
பாலத்தின் மேல் பாராது போனால்
ஓலம் ஓலம் ஓலம்

என்று ஆரம்பிக்கும் - மொத்தம் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் ஒரு பாட்டுக்கு.

ரயிலைப் பார்த்து, கேட்டு, நுகர்ந்து அந்த அனுபவத்தை பின்னாளில் பள்ளி/கல்லூரியில் படித்த பாடங்களோடும், புத்தகங்களோடும் பொருத்தி புரிந்து கொண்டதையும் அடுத்த பதிவில் தருகிறேன்.

முன்பதிவுகள்
இரயில் – 1
இரயில் – 2

சனி, மே 16, 2009

இரயில் – 2

இரயில் – 2

இராமநாதபுரத்தில் வீடு இரயில் நிலையம் அருகில் இல்லை; அதனால் பார்ப்பதே அபூர்வம். அனேகமாக வீதியில் (வடக்கு வீதி) செல்லும் மாட்டு வண்டிதான். எப்போதாவது கார், ஜீப். திண்ணையில் உட்கார்ந்து அதிகம் பார்த்தது சைக்கிள் தான். அதே தெருவில் எங்கள் பெரியப்பாவும் இருந்தார்; அவரிடம் ஒரு ஜீப் இருந்தது (உப்பளத்துக்கு சென்று வர). அதில் ஏறி அமர்ந்து ஓட்டுவது போல கற்பனை செய்து விளையாடுவது ஒரு முக்கியமான பொழுதுபோக்கு.

சென்னை வந்து முதலில் குடிபுகுந்தது, வில்லிவாக்கம் தேவர் தெருவில். அந்தத் தெருவின் வடக்கு வரிசையில் எங்கள் வீடு - வீடு என்றால் ஒரு வீட்டில் வீட்டுக்காரரையும் சேர்த்து நான்கு குடித்தனங்கள்; அதில் நாங்களும் ஒன்று. வீட்டிற்கு கொல்லைப்புறம் ஒரு பாதை; அதைத் தாண்டி இரயில் நிலையம். வீட்டுக்காரருக்கும் மற்றுமொரு குடித்தனக்காரருக்கும் இந்திய ரயில்வேயில் தான் வேலை - பெரம்பூர் லோகோவொர்க்ஸ். இருவரும் ரயில் தண்டவாளத்தை ஒட்டி நடந்தே வேலைக்குச் செல்வார்கள். வீட்டின் கொல்லையில் சில தென்னை மரங்கள், ஒரு மாமரம் (சின்னது) இரண்டு பெரிய சப்போட்டா மரங்கள், ஒரு பவழ மல்லி, மற்றும் சில பெயர் தெரியாத சில்லறை மரங்கள். இதைத் தவிர கொத்து கொத்தாக சிவப்பு நிறத்தில் பூக்கும் ஒரு புதர் போன்ற பெரிய செடி/மரம் - பேரெல்லாம் நினைவில்லை. யாராவது கேட்டால் பெரிய மரம், சின்ன மரம் என்றுதான் சொல்லத் தெரியும் - டெனிஸ் த மெனஸ் கார்ட்டூனில் டெனிஸ் சொல்வது போல! அங்கு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு இரயிலை வேடிக்கை பார்ப்பது ஒரு விளையாட்டு.

அப்போதெல்லாம் இரயில் எண்ணிக்கை அதிகம் கிடையாது; மொத்தமாக நான்கு அல்லது ஐந்து, இல்லை அதிக பட்சம் ஆறு இரயில் தான் பார்க்க முடியும் மாலை வேளையில். அதிலும் இரண்டு சரக்கு வண்டியாக இருக்கும். அதில் என்ஜினையும், கார்டு பெட்டியையும் தவிர பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது. ஆனால் எண்ணிக்கை அதிகம்; அதிலும் எப்போதாவது ஒரு டாங்கரோ, அல்லது இராணுவ வண்டிகளை ஏற்றி செல்லும் திறந்த வெளிப்பெட்டிகள் (open carriages) வந்தால் ஒரு குஷி.

என் அப்பாவிற்கு பாரிஸ் கார்னர் அருகே அலுவலகம்; அதனால் வில்லிவாக்கத்தில்ருந்து இரயில் பிடித்து 'பீச்' நிலையம் போவார். எனக்கும் என் தம்பிக்கும் காலை அவர் கிளம்பும் ரயிலை கண்டிப்பாகப் பார்த்தே ஆக வேண்டும். ஒரு வருடம் கழித்து அவர் வேலை நேரம் இரண்டாவது ஷிப்ட் மாற, அவர் போவதும் தெரியாது, வருவதும் தெரியாது! நாங்கள் பள்ளியில் இருக்கையில் அவர் வீட்டிலிருந்து புறப்படுவார். எட்டு அல்லது எட்டரைக்கு நாங்கள் தூங்கிவிடுவோம்; அவர் வருவதோ 'அறிவாளி' படத்தில் தங்கவேலு மனைவி சொல்வது போல 'பேய் அலையற' நேரம்!

சென்னையில் உறவினர்கள் அதிகம்; மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது விசேஷம்! அவர் எங்களை குடும்பத்தோடு குரோம்பேட்டை, அல்லது நங்கநல்லூர், மாம்பலம் என்று அழைத்து செல்வார். ரயில் - பஸ் என்று மாற்றி மாற்றி அழைத்துப் போக வேண்டும் என்று சொல்லிவிடுவோம் - அப்போது தானே நிறைய டிக்கட் கிடைக்கும். டிக்கட் சேர்ப்பதில் எனக்கும் என் தம்பிக்கும் போட்டி வேறு உண்டே! எங்களுக்காக பேருந்தில் வில்லிவாக்கத்திலிருந்து எழும்பூர் (பல்லவன் - எண் பதினாறு); எழும்பூரிலிருந்து மாம்பலம், மீனம்பாக்கம் (அப்போது பழவந்தாங்கல் ரயில் நிலையம் வரவில்லை) அல்லது கிரோம்பேட்டை (ரயில் நிலையத்தில் 'கி', கடைகளில் 'கு' - இப்பவும் இந்த பெயர் குழப்பத்தைப் பார்க்கலாம்) வரையில் மின் வண்டியில் செல்ல வேண்டும்! எனக்கும் என் தம்பிக்கும் எழும்பூரிலிருந்து தாம்பரம் வரை உள்ள அனைத்து ரயில் நிலையப் பெயர்களும் வரிசையாக அத்துப்படி. எங்கள் ரயில் விளையாட்டில் நிஜத்தைப் பிரதிபலிக்க இது உதவியாக இருந்தது.

தீப்பெட்டி, சிகரெட் டப்பா ரயில் வண்டிகள் செய்த கதைகளையும் டிக்கட் சம்பந்தமான அனுபவத்தையும் (பாட்டு கூட உண்டு) அடுத்த வார பதிவில் தருகிறேன்.

முன்பதிவு
இரயில் – 1

சனி, மே 09, 2009

இரயில் - 1

இரயில் - 1

ரயில், ரெயில், ரயிலு என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த ஊர்தி என்னை மிகவும் கவர்ந்த வாகனம். சிறு வயதில் என் கற்பனையெல்லாம் என்ஜினில் - அதுவும் கரி வண்டியில் - ஒரு தடவையாவது சவாரி செய்ய வேண்டும் என்பதுதான். இன்று வரை நடக்கவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் இந்த கரி வண்டியே காணாமல் போகும்; அதற்கு முன் ஒரு தடவையாவது அதில் ஏறி விட வேண்டும் என்று ஆசை. காபி, தேனீர் வரிசையில் இரயிலைப் பற்றி எழுத வேண்டும் என்று ரொம்ப நாளுக்கு முன்னால் யோசித்து வைத்திருந்தேன். இப்போது ஆரம்பித்துவிட்டேன்.

எழுத்தாளர் பாலகுமாரன் கல்கியில் "இரும்பு குதிரைகள்" எழுத ஆரம்பித்த போது எனக்கு கொஞ்சம் வருத்தம் - லாரியை இரும்பு குதிரையாக எழுதுகிறாரே; ரயிலை விட்டு விட்டாரே என்று. இந்த ரயில் மோகம் எனக்கு வந்தது நாங்கள் வில்லிவாக்கத்தில் வசித்த காலத்தில் (என்னுடைய ஆறிலிருந்து பத்து வயது வரை). வீட்டிற்கு பின்புறம் வில்லிவாக்கம் ரயில் நிலையம். வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு ரயில் போவதை வேடிக்கை பார்ப்பது ஒரு முக்கியமான விளையாட்டு (அப்போது தொலைக்காட்சி இல்லை).

என் முதல் நியாபகம், இராமனாதபுரம் ரயில் நிலையம்தான். அதிலும் கண்ணால் பார்த்து நினைவில் இருக்கும் சித்திரத்தை விட, நுகர்ந்து அனுபவித்த மணம் தான் இன்னமும் பசுமையாக இருக்கிறது. என் தந்தைக்கு உத்தியோக மாற்றம்; இராமனாதபுரத்திலிருந்து சென்னைக்கு. வங்கியில் மாற்றல் ஆனதால், முதல் வகுப்பில் பயணம். மேலிருக்கும் மெத்தைக்கு செல்ல ஜன்னலுக்குப் பக்கத்தில் கால் வைத்து ஏற ஒரு இரும்புப் படி - மூடியிருந்தது. எனக்கு ஐந்தரை வயது; அதை திறக்க முயற்சிக்க, வலு இல்லாததால், அது சடக்கென்று மூடி என் கை விரல்களை பதம் பார்க்க, அப்பா திட்டுவாரே என்று பயந்து வந்த அழுகையை அடக்கிக் கொண்டது இன்னமும் நினைவில் இருக்கிறது!

இரயில் மெதுவாகக் கிளம்பி பின் வழியில் பரமக்குடி நிலையத்தில் நின்றது. பரமக்குடி தான் நான் பிறந்த ஊர்; என் பெரியம்மா வீட்டில். அவர்கள் குடும்பத்துடன் இரயில் நிலையத்திற்கு வந்து எங்களை வழியனுப்பியதும், வண்டி கிளம்புகையில் என் அம்மாவும் பெரியம்மாவும் அழுததும் இன்னமும் நினைப்பில் இருக்கிறது. என் அம்மா பள்ளியில் படித்தது, வளர்ந்தது என் பெரியம்மா வீட்டில் தான்; அதனால் இருவருக்கும் ஒட்டுதல் அதிகம். பெரும்பான்மையான பயணம் முழுதும் இரவில் இருந்ததால், அப்பா ஜன்னலை எல்லாம் மூடிவிட, கரு நீல இரவு விளக்கைப் பார்த்துக் கொண்டே தூங்கிப் போனேன்; என் தம்பி முதலிலேயே தூங்கிவிட்டான். இப்பவும் எனக்கு அந்த கருநீல விளக்கைப் பார்த்தால் ஒரு இனம் புரியாத சோகம் வருகிறது - காரணம் அந்தப் பயணம் தானோ என்னவோ!

மறுநாள் மதிய வாக்கில் சென்னை வந்து கருப்பு டாக்சியில் ஏகப்பட்ட சாமானோடு (கூரையில், பின் டிக்கியை மூட முடியாமல் கயற்றால் கட்டி) வில்லிவாக்கம் (இன்னுமொரு பெரியம்மா வீடு) வந்து சேர்ந்தோம். வில்லிவாக்க வாசம், ரயில் மோக வளர்ச்சி பற்றி அடுத்த வாரம்.

பிகு:
பின்னாளில் பட்டுக்கோட்டை தமிழ் ஆசிரியர் இரயில் என்றுதான் எழுத வேண்டும் (என் பெயரையும் அவர் அரங்கநாதன் என்று தான் வகுப்பு பதிவேட்டில் எழுதி முதல் வரிசையில் உட்கார வைத்தார், பெயர் 'அ'வில் ஆரம்பித்ததால்) என்று சொன்னதால் தலைப்பில் இரயில் என்று எழுதினாலும், பழக்கம் விடாமல் பதிவு முழுதும் ரயில் என்றே எழுதியிருக்கிறேன். தமிழாசிரியர் மன்னிக்க.

ஞாயிறு, மே 03, 2009

தந்தனத்தோம் கோமாளி (திரும்பி) வந்தானையா!

தந்தனத்தோம் கோமாளி (திரும்பி) வந்தானையா!

இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது நான் இணையத்தில் பதிந்து. முக்கிய காரணம் 2007ல் வேலை மாற்றம் (அதே அலுவலகம்; பணி வேறு). ஒரு வருடத்திற்குள் வேலை புரிந்து போய், அலுவலகத்தில் செலவழிக்கும் நேரம் குறைந்து போனாலும், திரும்பி வராததற்கு காரணம் சோம்பல். தவிர என் இணைய விடுப்பு யாருக்கும் பெரிய இழப்பாகத் தெரியவில்லை. இந்த இரண்டு வருடத்தில் அதிக பட்சம் ஐந்து அல்லது ஆறு விசாரணைகள் - ஏன் எழுதுவதில்லை என்று.

கடந்த ஒரு மாதத்தில் இரண்டு பேர் ரொம்பவும் வற்புறுத்தினார்கள் - அவர்கள் சொன்ன காரணங்கள் நிறைய இருந்தாலும், ஒரு காரணம் நிரம்பவும் ஆழமாக இருந்தது. "முயற்சி செய்யாத போது நூறு சதவீத வாய்ப்பையும் இழக்கிறாய்" என்பது தான் அது. You miss 100% of shots you don’t take! அதனால் தான் இந்த மறு நுழைவு!

சொந்த வாழ்க்கையில் இந்த இரண்டு வருடங்களில் பெரிய மாறுதல் ஏதும் இல்லை. அதே வீடு, வேலை (ஆண்டவன் புண்ணியத்தில் இன்னமும் வேலை இருக்கிறது!), தினசரி வாழ்க்கை. பிள்ளைகள் பெரிதாகி வருகிறார்கள் - அதில் அனேக மாற்றங்கள்; வாழ்க்கையில் பெற்றோர் பணி சம்பந்தமான கல்வி இன்னமும் தொடருகிறது - பிள்ளைகளின் தயவால்.

வெளியே மாற்றங்கள் அதிகம் - புது ஜனாதிபதி இங்கே! உலகமும் முழுவதும் இந்த "எகானமி" படுத்தும் பாடு தாங்கவில்லை. பொருளாதாரத்தில் (பொருள் + ஆதாரம்) - பொருளும் இல்லை; ஆதாரமும் இல்லை போல் தெரிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விண்கலத்தில் ஏறி 'வியாழன்' கோளுக்குச் (குரு - ஜாதக கணிப்பில் அவர் தான் செல்வத்தை குறிப்பவர்) சென்று, இப்போது திரும்பினால், விண்வெளியில் இருந்து பார்க்கும் போது பூமி அப்படியே தான் இருப்பது போல் தெரியும். இந்த இரண்டு வருடங்களில் புதிதாக பெரிய மலையோ, கடலோ வரவில்லை - இயற்கையின் செயலில் இரண்டு வருடங்களில் பெரிய மாற்றம் இல்லை; குரு தந்த செல்வத்தில் குறைவு இல்லை.

ஆனால் மனித இனத்தால் உருவாக்கப் பட்ட இந்த பொருளாதரம், பணம் என்ற விஷயங்களில் தலைகீழ் மாற்றம். மொத்த உலக சொத்து இருப்பில் (GDP) பத்து சதவீதம் குறைந்து போயிற்று என்கிறார்கள். எங்கே போயிற்று என்று யாரும் புரியும்படி சொல்ல மாட்டேன் என்கிறார்கள். கீதாசாரம் தான் துணைக்கு வருகிறது!

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்!
இந்த மாற்றம் உலக நியதியாகும்.