வெள்ளி, டிசம்பர் 23, 2011

பேசு மனமே பேசு! - 3

பேசு மனமே பேசு! - 3

ஃபோனில் தொழில்நுட்ப முன்னேற்றம் மிகத் தெளிவாகத் தெரிந்தாலும், பேசுதல் என்று யோசிக்கையில் முன்னேற்றம் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. முதலில் அளவு. இளவயதில் பேசுவதற்கு ஆசை அதிகம்; பேச விஷயமும் அதிகம் இருந்தது. அரை மணி, ஒரு மணி நேரம் பேசிவிட்டு, 'அப்படி என்னதான் பேசினீங்க?' என்ற அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல், சமாளிப்பதற்காக 'நாங்க என்ன பேசினா என்ன?' என்று எதிர்க் கேள்வி கேட்டுத் தப்பித்ததுண்டு. இப்போது யாராவது தெரிந்தவர் ஃபோன் செய்தால் 'நான் சௌக்கியம்; நீங்க சௌக்கியமா?' என்று கேட்டு ஒரு நிமிஷத்தில் ஃபோனை வைத்து விடுகிறேன். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று பேசுவதற்கு விஷயம் அதிகம் இல்லை.

கடந்த இருபது வருடங்களில் அதுவும் குறிப்பாக கடந்த பத்து வருடங்களில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் குடும்பங்களில் எந்த விதமான விஷயங்கள் செய்தியாக வரும் என்று யூகிப்பதில் தேர்ச்சி வந்து விட்டது. எனக்கு ஞான திருஷ்டி வந்து மற்றவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று தெரிகிறது என்று நான் சொல்லவில்லை. யார் யார் எந்தெந்த மாதிரியான விஷங்களைச் செய்தியாக ஃபோனில் கூப்பிட்டு சொல்வார்கள் என்று யூகிக்க முடிகிறது என்று சொல்கிறேன். முதலில் இதில் ஒரு சந்தோஷம் வந்தாலும், நாளாக நாளாக இது ஃபோனில் பேசுகின்ற சுவாரசியத்தைக் குறைத்து விட்டது. இதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தவுடன், மற்றவர்களும் நாம் ஃபோன் செய்யும் போது இதே போல சரியாக யூகிப்பார்களோ என்று தோன்ற ஆரம்பித்தது. அந்த மாதிரியான யோசனை வந்ததிலிருந்து நான் ஃபோன் செய்வது குறைய ஆரம்பித்தது. வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற பழமொழியின் பொருள் கொஞ்சம் வேறு விதமாகப் புரிந்தது.

தவிர அலுவலகத்தில் ஃபோனில் பேசுவது அதிகமாகிப் போனது. முதன் முதலாக லிப்டனில் வேலை செய்யும் போது, செலவுச் சிக்கனம் என்று பார்த்துப் பார்த்துப் பேசியது போக இப்போது வேலையில் சகட்டு மேனிக்குப் பேச வேண்டிய கட்டாயம். அதிலும் கடந்த ஆறு/ஏழு வருடங்களில் சராசரியாக தினமும் 3 மணி நேரம் ஃபோனில்! இதில் நான் பேசுவது குறைவு; இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதில் செல்லும். முக்கால்வாசி நேரம் இந்த 'கான்ஃப்ரன்ஸ் கால்' என்று ஐந்திலிருந்து ஐம்பது பேர்கள் வரை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஒரே ஃபோன் காலில்! வீட்டுக்கு வரும் போது ஃபோன் மணி அடித்தாலே எரிச்சல் வரும்!

இந்த மாதிரியான ஃபோன் கால்களில் மனது பேசுகின்ற விஷயத்திலிருந்து தாவி வேறெங்காவது அலைபாய்வதைத் தவிர்க்க முடியாது. சிலர் குரலைக் கேட்டாலே தூக்கம் வரும்; சில சமயம் சிலரின் பேசும் விதம் நம்மை அறியாமலேயே மற்ற விஷயங்களை யோசிக்க வைக்கும். முகம் தெரியாமல், குரலை மட்டும் கேட்கையில், அதிலும் அனேகம் பேர் பேசும் பொழுது, கவனம் அதிகம் தேவையாக இருக்கிறது; ஆனால் அப்போது தான் மனமும் எங்காவது சென்று விடுகிறது. ஃபோனில் மற்றவர்கள் பேசுவதைக் கேட்கையில், அவரின் குரல், பேச்சை மட்டும் வைத்து அவர்களை மதிப்பீடு செய்வது தாமாக வர ஆரம்பித்தது. ஒருவரை நேரில் பார்க்காமல், அவருடன் பழகாமல், அவர் தரம், நாணயம் பற்றி எல்லம் அவர்களின் பேச்சை மட்டும் வைத்துக் கொண்டு முடிவுக்கு வருவது சரியல்ல என்று தெரிந்திருந்தாலும், அந்த மாதிரியான நிர்ணயங்களுக்கு மனது தாமாகச் சென்றது. இதே போன்று என் பேச்சை, குரலை மட்டும் வைத்து என்னைப் பற்றி மற்றவர்கள் எடை போடலாம் என்ற யோசனை வந்ததிலிருந்து தெரியாதவர்களோடு பேச நாட்டம் குறைந்து போனது.

தெரிந்தவர்கள் கூப்பிட்டால் என்ன விஷயமாக இருக்கும் என்ற யூகம்; தெரியாதவராக இருந்தால் அவர் யாரோ? எப்படியோ? என்ற மதிப்பீடு - இரண்டுமே தேவையில்லாதது என்று தெரிந்திருந்தாலும் தவிர்க்க முடியவில்லை. மற்றவர்கள் பேசுகையில் எனக்குள்ளேயே நடக்கும் சம்பாஷணையைத் தவிர்க்கத் தெரியாததால், பேசுவதே குறைந்து போனது. நினைத்துப் பார்க்கையில் இளவயதிலும் மற்றவர்கள் பேசுவதைக் கேட்ப்பதை விட, நான் பேசுவதில் தான் எனக்கு நாட்டம் இருந்தது. ஆனால் என் பேச்சைக் கேட்க யாராவது வேண்டுமே! அதற்காக அவர்கள் பேச்சை நான் கேட்பது ஒரு விதமான 'கொடுக்க வாங்கல்' விஷயமாகிப் போனது. மற்றவர்களின் பேச்சை கேட்க விரும்பிப் ஃபோன் செய்ததை விட, நான் பேசுவதைக் கேட்க யாராவது வேண்டும் என்பதற்காகப் ஃபோன் செய்தது தான் அதிகம். இப்போது அந்த மாதிரியான எண்ணம் குறைந்து போனதால், நானாக முயன்று ஃபோன் செய்வது குறைந்து போனது.

ஃபோனில் பேச நாட்டம் குறைந்தாலும், நேரில் பார்க்கையில் தெரிந்தவர்களுடன் பேசுவதில் நாட்டம் குறையவில்லை. முகம் பார்த்து நேரில் பேசுவதில் இருக்கும் நிறைவும் திருப்தியும் ஃபோனில் கிடைப்பதில்லை என்பது ஒரு முக்கிய காரணம். இது முன்னேற்றமா இல்லையா என்று தெரியவில்லை. அதே சமயத்தில் கருத்துப் பறிமாற்றம் என்று பார்த்தால் சிறுவயதில் இருந்ததை விட இன்னாளில் அதிகம், இணையத்தின் தயவில். முகம் தெரியாதவர் ஃபோனில் பேசுவதைக் கேட்பதைக் காட்டிலும், எழுதுவதைப் படிப்பது சுலபமாக இருக்கிறது.

மாடு சாப்பிட்டுவிட்டு நிதானமாக அசை போடுவது போல இணையத்தில் எழுதியதைப் படிப்பதில் ஒரு சௌகரியம். ஃபோனில் பேசுகையில் உடனுக்குடன் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இணையத்தில் அந்த நிர்பந்தம் இல்லை. இரவில் தூக்கம் கலைந்து நடு இரவில் வேதாந்தமும் படிக்கலாம் அல்லது அரசியலும் படிக்கலாம். யாரையும் தொந்திரவு செய்ய வேண்டாம். இப்போது என் செல் ஃபோனில் இதைச் செய்ய முடிகிறது. அந்த விதத்தில் முன்னேற்றம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ட்விட்டர் போன்ற தளங்களில், 'எனக்குப் பல் வலி' அல்லது 'கடைக்குப் போகிறேன்' என்றெல்லாம் எழுதுகிறார்கள். நான் தினசரி வாழ்க்கையில் என்ன செய்கிறேன் என்பது பற்றி தெரிந்து கொள்ள யாரும் இருப்பதாகத் தெரியவில்லையாதலால் இன்னமும் அது போன்ற தளங்களில் எனக்கு கணக்கு இல்லை. அதே போல மற்றவர்களின் தினசரி வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள எனக்கு விருப்பமில்லாததால் அம்மாதிரியான தளங்களுக்கு அதிகம் செல்வதும் இல்லை. தொழில் நுட்ப முன்னேற்றம் நிச்சயம் மனதை அதிகம் பேச வைத்திருக்கிறது. இந்தப் பேச்சினால் முன்னேற்றம் வந்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கொஞ்சம் நாளாகும் என்றுதான் தோன்றுகிறது.