ஞாயிறு, நவம்பர் 19, 2006

தேநீர் – 6

கலவை நிர்ணயம் செய்த பிரிவிலிருந்து, கலவையின் விகிதங்கள் - எந்தெந்த லாட்டிலிருந்து எத்தனை டீ டப்பாக்களை சேர்க்க வேண்டும் என்ற விபரம் - கலவை கலக்கும் பிரிவுக்கு வரும். இதை தயாரிப்பதும் அவ்வளவு சுலபம் அல்ல; முதலில் தொழிற்சாலையில் எத்தனை டப்பாக்கள் வந்திருக்கின்றன, அதன் எடை எவ்வளவு, தொழிற்சாலையின் பொட்டல இருப்பு நிலை, பொட்டல திட்டத்திற்கு எத்தனை டீ வேண்டியிருக்கும் என்று எல்லாவற்றையும் யோசித்து, இந்த 'கலவைக் காகிதம்' – Blend Sheet, தயாரிக்கப்படும். சரி இது வந்துவிட்டால், அத்தனை டப்பாவையும் எடுத்துக் கவிழ்த்தால் கலவை தயார்தானே என்று எண்ண வேண்டாம்.

கலவை நிர்ணயம் செய்ய அரைக் கிலோ டீ போதும். இது தொழிற்சாலையில் பொட்டலம் போட வரும் போது அரை டன் - அதாவது 500 கிலோவாகக் கூட மாறும். வீட்டில் பூச்சு வேலை செய்யும் போது கலவை போடுவது கொஞ்சம் எளிதாகத் தோன்றும். கொத்தனார் ஒரு பாண்டில் (பாண்டு - ஒரு குழிவான இரும்புத் தட்டு) கொஞ்சம் சிமின்ட், கொஞ்சம் மணல் என்று போட்டு, தண்ணீர் விட்டு கலந்து எளிதாகப் பூசிவிடுவார். இதே ஒரு தளத்திற்கான கான்க்ரீட் கலவை என்றால், பத்து பதினைந்து உதவியாளர்கள் (சித்தாள்), ஒரு தலைமைக் கொத்தனார் மற்றும் அவருடைய உதவிக் கொத்தனார்கள், ஒரு கலவை மிஷின், பல மூட்டை சிமின்ட், லாரி மணல், என்றெல்லாம் விரிவாகப் போகும். அதே போல தொழிற்சாலையில் டீ கலவை போடும் போது, ஆள் பலம், இயந்திர பலம் எல்லாமே பெருகியிருக்கும்; அதனால் நிறைய விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும்.

முதலில் தோட்டத்திலிருந்து ஏலத்தில் எடுத்த டீயை டப்பாக்களிலிருந்து (Chest) எடுத்து சேகரிப்பது. இது வரும் மர டப்பாக்களில் சமயத்தில் காலி டப்பா எடையை விட அதிகமாக ஆணிகள் இருக்கும்! சில சமயம் ஒரு தகரப் பட்டியாலும் டப்பாவை சுற்றி இறுக்கிக் கட்டியிருப்பார்கள்; தகரம் ஆதலால், இதில் துரு இருக்க வாய்ப்பு உண்டு. இந்த ஆணிகள் அனைத்தையும் எடுத்து விடுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. தப்பித் தவறி ஒரு ஆணி பொட்டலத்திற்குள் வந்துவிட்டால் மிகப் பெரும் பிரச்சனை வந்துவிடும். ஆதலால், முக்கியமான ஒரு வேலை மர டப்பாக்களில் உள்ள ஆணிகளை எடுப்பது.

முதலில் மூடியை ஒரு கம்பியால் நெம்பி எடுத்துவிட்டு, அந்த டப்பாவை அப்படியே ஒரு இயந்திரத்தில் கவிழ்த்து விடுவார்கள். அத்தனை டீயும், ஒரு இரும்பு உருளையில் வந்து சேரும். இந்த உருளைக்கு வரும் வழியிலும், உருளையிலும் பலமான சக்திவாய்ந்த காந்தங்கள் இருக்கும்; இந்த உருளை உருளும் போது, தப்பித் தவறி வந்திருந்த ஆணிகள் மற்றும் இரும்புத் துகள்களை கவர்ந்து விடும் - வெறும் டீ மட்டும், உருளையிலிருந்து டீ சேகரிக்கப்படும் பெரிய பாத்திரங்களுக்கு செல்லும். கிராமத்தில் அரிசியை சுத்தப்படுத்த நாம் எந்த முறையைக் கையாள்கிறோமோ, அதே விதி இங்கும் உபயோகப்படுத்தப் படுகிறது. எப்படி முறத்தால் அரிசியைப் புடைப்போமோ, அதே போல சீராக ஆடும் இரும்புத் தளங்கள் மூலமாக டீயை அனுப்புவார்கள். இந்த ஆட்டத்தில் டீயுடன் வந்திருக்கும் மணல் துகள்கள் மற்றும் இதர பொருட்களை சலித்து எடுத்து விடும்; வெறும் டீ மட்டும் பெரிய பாத்திரங்களில் சேகரிக்கப்படும்.

கலவை செய்யத் தேவையான டீ வகைகள் அதிகமாக இருந்தால் இந்த உருளையின் நேரமும் அதிகமாகும் - கலவை சீராகக் கலப்பதற்கு. அதே போல ஒரு கலவைக்கு அதிகமான அளவு வேண்டியிருந்தாலும், கலக்கும் நேரம் அதிகமாகும். இதில் கவனிக்க வேண்டிய இன்னுமொரு விஷயம் வெப்பம். இயந்திரங்கள் வேலை செய்யும் போது உராய்வால் வெப்பம் வருவதை தவிர்க்க முடியாது. வெப்பம் அதிகமாகி விட்டால் டீத்தூளைக் கருக்கிவிடும்; ருசி குறைந்துவிடும் ஆதலால், இந்தப் பகுதியில் இயந்திரத்தை வெகுநேரம் இயக்க முடியாது. இதற்காகவே டீப் பொட்டலம் கட்டும் ஆலைகளில் இரண்டு அல்லது மூன்று இயந்திரங்களை டீ சுத்தம் செய்து கலக்க வைத்திருப்பார்கள். ஒரு லோடு முடிந்ததும், இயந்திரத்திற்கு கொஞ்சம் ஓய்வு - அதன் சூடு தணிக்க! அப்போது இரும்புத் துகள்களையும், ஆணிகளையும் எடுத்துவிட்டு, அதை சுத்தம் செய்து விடுவார்கள்.

இப்படியாக கலக்கப் பெற்ற டீ ஒரு பெரிய பாத்திரத்திலிருந்து, சின்னப் பொட்டலங்களாக மாறும் கதையை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

8 கருத்துகள்:

இலவசக்கொத்தனார் சொன்னது…

இந்த இயந்திரங்களின் கொள்ளளவு என்ன? இரு நாளைக்கு எவ்வளவு டன் பிராஸஸ் செய்ய முடியும்?

பத்மா அர்விந்த் சொன்னது…

அருமையான பதிவுகள். இப்ப்போதெல்லாம் தேநீர் அருந்தும்போதும் காப்பி அருந்தும் போதும் உங்கள் பதிவு நினைவுக்கு வந்து புன்னகையை தருகிறது. நன்றி

நிர்மல் சொன்னது…

தொடருங்கள்.

பல தெரிந்திராத தேநீர் விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன்

வடுவூர் குமார் சொன்னது…

"இயந்திரம்- சூடு" இதை படிந்தவுடன்,மாவு அரைக்கும் மிஷின்கள் தான் ஞாபகம் வந்தது.தீபாவளிக்கு சில சமயம் ஜீனி அரைப்பதற்கு கூட சூடு பார்த்து அரைப்பார்கள்.

ரங்கா - Ranga சொன்னது…

இ.கொ.

கொள்ளளவு கொஞ்சம் கடினமான விஷயம். மொத்த கொள்ளவு அதிகமாகவே இருந்தாலும், உருளையில் கலக்கும் தேநீர்த் தூளின் அளவு குறைவு. Gross capacity is about 1.4-1.5 times the net capacity. உருளைக்குள் ஒரு டன்னுக்கும் மேல் டீத்துள் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் கலவைக்கு 500 அல்லது 600 கிலோ உபயோகிப்பார்கள்.

ஒரு நாளைக்கு ப்ராசஸ் என்று சொன்னால் இரண்டு விதங்களில் பதிலளிக்கலாம். Blending process, packing process. முதலாவது உருளைகளைப் பொறுத்தது. இரண்டாவது பொட்டலம் போடும் இயந்திரங்களைப் பொறுத்தது. ஒரு தொழிற்சாலையில் மொத்த அளவு இந்த இரண்டையும் பொறுத்தது.

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி பத்மா :-)

இதற்குப் பின்னால் நான் வேலை செய்த கோழி/மாட்டுத்தீவன ஆலையைப் பற்றி பதிய எண்ணம். அதைப் படித்தால் சிக்கன், பர்கர் சாப்பிடும் போதும், சைவமானால், கோழி, மாட்டைப் பார்க்கும் போதும், சிரிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி நிர்மல்.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

ஆமாம் குமார்.

உங்கள் பதிவில் கட்டடம் கட்டுவதைப் பற்றி எழுதியிருந்தீர்கள். கான்க்ரீட் கலவையில் தண்ணீர் இருப்பதால், இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. பொதுவாகவே எந்த இயந்திரத்திலும் வெப்பம் வருவது (உராய்வால்) தடுக்க முடியாயது. சில இடங்களில் கூலன்ட் வைத்து சமாளிக்கலாம். உணவுப் பண்டங்களில் அது முடியாது.

ரங்கா.