சனி, ஆகஸ்ட் 29, 2009

குப்பை - 3

குப்பை - 3

இந்தத் தொடர் எழுத ஆரம்பிக்கையில் எனக்குள்ளே நிறைய கேள்விகள். அதில் ஒன்று: 'உண்மையிலேயே சிறு வயதில் வீட்டில் குப்பை இல்லாமல் இருந்ததா?; அல்லது நானும் என் பாட்டி அடிக்கடி சொல்லி வந்தது போல "அந்தக் காலம் போல இல்லை" என்ற ரீதியில் பழையதை மிகைப்படுத்தி, நிகழ்வைப் புறக்கணிக்கிறேனா' என்பது தான். நன்கு ஞாபகப்படுத்திப் பார்க்கையில், பட்டுக்கோட்டையிலும், மன்னார்குடியிலும் வீட்டின் பின்புறம் இருந்த சாக்கடை நினைவுக்கு வந்தது. அவை எல்லோருக்கும் தெரிகிறமாதிரி திறந்த வெளிச் சாக்கடைகள். தண்ணீரில் அடித்துச் செல்லப் படும் வீட்டுக் குப்பைகள் எல்லாம் அதில் தான் சென்று சங்கமித்தன. கரையாத திடக் குப்பைகளுக்கு அங்கு இடமில்லை. தப்பி யாராவது அந்த மாதிரி குப்பையைப் போட்டால், சாக்கடை தேங்கி நாற்றம் மட்டுமல்லாமல் கொசுவும் சேர்ந்து அனைவருக்கும் தொந்தரவு. அதனால் அனைவருமே இந்த எழுதாத சட்டத்தைப் பின்பற்றி, சாக்கடை ஒடுகிற மாதிரியே வைத்துக் கொண்டிருந்தார்கள்.

வீட்டுக் குப்பைகள் இப்படி என்றால், வெளியே மனக் குப்பைகளைத் தூண்டும், சேர்க்கும் விஷங்களிலும், ஒரு விதமான் அளவுத் தடுப்பு இருந்தது. அப்போதெல்லாம் வீட்டில் வானொலி மட்டும்தான்; தொலைக் காட்சி இல்லை. இது இயல்பிலேயே ஆபாசக் குப்பைகள் வருவதைக் குறைத்தன. வெளியே சினிமா போஸ்டர்கள், தெருவில் எழுதப்பட்ட கரி வாசகங்கள் கொஞ்சம் குப்பைகளைக் கொடுத்தாலும், சுவர்கள் எண்ணிக்கைகளில் அளவு இருந்ததால், இந்த மாதிரிக் குப்பைகள் அளவிலே குறைவாக இருந்தன. மொத்த நகரத்தில் இருந்த சுவர்களில் வித விதமான கருத்துகள் - அது ஜவுளிக் கடை விளம்பரமாகட்டும், அல்லது அரசியில் கட்சியின் பிராசரமாகட்டும் (தேர்தல் சமயத்தில் இந்த எண்ணிக்கை பன்மடங்காகப் பெருகும்), அல்லது முனிசிபாலிடியின் சுகாதாரப் பிரசாரமாகட்டும் - மொத்தத்தில் தகவல் தெரிவிக்கும் விதமாகவே இயங்கி வந்ததால், அதிகம் குப்பைகள் இல்லை. பைபிள் போதனைகளைச் சொல்லும் பெண்கள் பள்ளியின் சுவரை பார்க்கையில், மனது கொஞ்சம் சமனப்பட்டுப் போனது.

கொஞ்சம் அரிதாக சுவற்றில் குப்பைகளையும் பார்க்கலாம் - ஒரு ஜாதியைத் திட்டியோ, அல்லது ஒரு வர்கத்தை, கட்சி/அரசியல்வாதியைத் திட்டியோ எழுதப்பட்டிருக்கும். என் வகுப்பில் கூடப் படித்த இராஜகோபாலுக்கும், கருணாநிதிக்கும் இடையில் இந்தமாதிரி ஒரு குப்பை சுவர் வாக்கியம்தான் அவர்களின் நட்புக்கு இடையில் வந்தது. ஊர் முழுதும் இருக்கும் சுவரொட்டிகள், சுவர் வாசகங்களில் இந்த மாதிரி குப்பைகள் விகிதாசாரப்படி மிகக் குறைவு; ஆனால் ஒரு குப்பைச் சுவரால் வந்த தீங்கை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

தற்போதைய காலத்தில், தொழில் நுட்ப வளர்ச்சியால் சில மாற்றங்கள். வீட்டில் இருக்கும் தண்ணீர்க் குப்பைகளை நகர பொதுக் கழிவுக் குழாய்களுக்கு பூமிக்கடியில் மறைத்து எடுத்துச் செல்வதால் அதன் அளவோ, அதிலுள்ள மற்ற சங்கடங்களோ (தேக்கம், அதனானால் வரும் நாற்றம், கொசு) தெரிவதில்லை. சங்கடங்கள் குறைவு என்பதால் இதை முன்னேற்றம் என்றுதான் சொல்லவேண்டும். அதே தொழில்நுட்பம் தொலைக்காட்சி மற்றும் இணையத்தைத் தந்திருக்கிறது. வானொலி அதிகம் கேட்பதில்லை; அதனால் அதில் எந்த அளவு குப்பை இருக்கிறது என்று நிச்சயமாகத் தெரியாது. எப்போதாவது காரில் செல்கையில், சில 'டாக் ஷோ' என்று சொல்லப் படும் பேச்சு மேடைகளில் பேசப் படுவதை கேட்ட போது, குப்பைகள் வானொலியிலும் வந்து விட்டன என்று புரிந்தது.

தொலைக் காட்சியைப் பற்றி சொல்ல வேண்டாம்; அது சினிமாவினால் உந்தப் பட்டு, வரும் பொருளாதாயத்தால் நிலை தடுமாறி, குப்பைகளை விகிதாசாரத்தில் அதிகமாகவே தருகிறது. வெளியே சுவரில் எழுத செலவு அதிகம்; அதனால் அந்த மாதிரிக் குப்பைகள் குறைவு. மாற்றாக வந்தது இணையம். இது ஒரு விதமான பெருச்சுவர்; அளவில் குறைவில்லை. அது மட்டுமல்ல - அனைவர் கைகளிலும் எழுத எடுக்க எடுக்க குறையாமல் வரும் கரித்துண்டுகள். மொத்தத்தில் இயற்கையாக இருந்த சுவர் எண்ணிக்கைத் தடை இப்போது இல்லை - கணினி மூலமாகச் சென்றால் உலகச் சுவர் அனைத்தும் தெரியும். இதில் கரித் துண்டால் மற்றவரைத் திட்டி எழுதியதையும் படிக்கலாம்; அல்லது அழகான வண்ணத்தோடு வரைந்த ஓவியங்களையும் பார்க்கலாம். வரைவது கடினம்; திட்டுவது சுலபம். அதிகப் படியான பக்கங்கள் சுலபமாக வருவதையே தருகின்றன.

இந்த இணையப் பக்கங்கள் நிரந்தரமாக நின்று விடுகின்றன. பொங்கலுக்கு முன் வெள்ளையடித்து, குப்பைகளை அழிக்க முடியவில்லை. மன்னார்குடியில் ஒரு குப்பைச் சுவரால் வந்த கேடு இன்னமும் நினைவில் இருக்கிறதால், இந்த இணையச்சுவர்களால் எத்தனை கேடு வருமோ என்று பயம் வருகிறது. சிறு வயதில் இருபது சுவர்களில் தொடர்ச்சியாக பைபிள் வாசகம் இருந்தாலும், கரித்துண்டால் அசிங்கமான படம் வரைந்து திட்டி எழுதப்பட்ட ஒரு சுவரைத்தான் பார்க்க ஆவல் (curiosity) இருந்தது. இப்போதும் அதே போல அதிகமான் மக்கள் ஒருவிதமான் ஆவலால் இந்த இணையக் குப்பைச் சுவர்களைப் பார்க்கிறார்கள்; படிக்கிறார்கள். இந்தச் சுவர்கள் நிரந்தரமாக இணையத்தில் நிற்பதால், குப்பைகள் தேங்க ஆரம்பித்து விட்டது. ஒரு பழைய திரைப் பாடலில் சொன்னது:
"தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ?
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ?"

இணையத்தில் தமிழ் மூலமாக வரும் குப்பைகளைப் படிக்கையில் தமிழும் பாவம்தானே என்று வருத்தம் வருகிறது. "தமிழினிய தெய்வதமே" என்று பெருமையோடு பாடியவர் இப்போது கணினியில் பதியப்படும் குப்பைகளைப் படித்தால் தன்னுயிரை விட்டுவிடுவார். இந்தக் குப்பைகள் தேங்காமல் எப்படி வெள்ளையடித்து சுவரைச் சுத்தம் செய்வது? எனக்குத் தோன்றியதை அடுத்த பதிவில் எழுதி, தொடரை முடிக்க உத்தேசம்.

வியாழன், ஆகஸ்ட் 20, 2009

குப்பை - 2

குப்பை - 2

'என்னடா இது ஒரு குப்பை விஷயத்துக்கு தொடரா'ன்னு நினைக்க வேண்டாம். இந்த 'குப்பை' வேறு விதமானது. வீட்டில் இருக்கும் பொருள் குப்பைகள் (புறக் குப்பைகள்) எப்படி வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கிறதோ அதே போல வளர்ந்து வருகையில், மனதிலும் குப்பைகள் (அகக் குப்பைகள்) பின்னிப் பிணைந்திருக்கின்றன. என் வாழ்க்கையில் புறக் குப்பைகள் எப்படி மாறி வளர்ந்தனவோ, அதே போலத்தான் அகக் குப்பைகளும் மாறி வந்திருக்கின்றன.

சிறு வயதில் வீட்டில் குப்பை பார்த்ததாக நினைவில்லை; மனதிலும் மற்றவரைப் பற்றிய பொறாமை, வன்மம், இன்னபிற கெட்ட எண்ணங்கள் இருந்ததாக நினைவில் இல்லை. கொஞ்சம் வளர்ந்தபின், சண்டை, கோபம் நிச்சயமாக வந்தன; ஆனால் அவைகள் நினைத்து நிற்கவில்லை. எப்படி பட்டுக்கோட்டையில், மன்னார்குடியில் வீட்டுக் குப்பைகள் தினமிருமுறை வெளியே சென்றனவோ, அதேபோல மனதிலும் கோபம், வருத்தம், போன்ற குப்பைகள் சீக்கிரம் காலியானது. தாமரை இலை தண்ணீர் போல உடனே கோபம் வெளியேறிப் போனது. நினைப்பிலும் தங்காமல், அது மனதில் ஊறி வன்மம், பொறாமை என்றேல்லாம் உருவேறாமல், காணாமல் போனது.

எனக்கு மட்டுமல்ல, கூடப் படித்த அனைவருமே கிட்டத்தட்ட அதே போலத் தான். 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' - சொல்லுக்கு அவசியம் இல்லாமல் போனது - அனைவருக்குமே 'உள்ளே' அதிகமாக ஒளித்து வைக்க குப்பைகள் இல்லாததால். வளர்ந்து கல்லூரிக்கு செல்கையில், கொஞ்சம் கொஞ்சமாக குப்பைகள் அதிகமானது. விடலைப் பருவ எண்ணங்கள் இப்போது யோசிக்கையில் குப்பைதான்; அப்போது அவை முக்கியமான விஷயம்! மூளையில் நினைவில் தேக்கி வைக்க விரும்பிய குப்பைகள்.

எப்படி நகரத்தில் வாசம் செய்கையில் குப்பைகள் சில மணி நேரம் அதிகம் வீட்டில் இருந்தனவோ, அதே போல வளர வளர கோபம், பொறாமை, கடுப்பு என்றெல்லாம் குப்பைகள் மனதிலும் நினைவிலும் அதிக நேரம் இருக்க ஆரம்பித்தன. குப்பைகள் அதிக நேரம் குப்பைத் தொட்டியில் தங்கி, வீட்டின் வாசம் கெட, குப்பைத்தொட்டியை மாற்ற வேண்டியிருந்தது. பழைய பிளாஸ்டிக் தொட்டியைத் தூக்கியெறிந்து விட்டு, முதிதாக மாற்றவும் முடிந்தது. ஆனால் இந்த மனக்குப்பைகளை வைத்திருக்கும் மனக் குப்பைத்தொட்டியை தூக்கியெறிந்து புதிதாக மாற்ற முடியவில்லை.

அலுவலகம் செல்ல ஆரம்பித்தவுடன் கற்றுக் கொண்ட முதல் பாடம் 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்' கலை! மனதில் குப்பைகள் இருக்கும்; வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்ற பாடம்தான் சரி என்று நம்மை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் சொல்வதை புரிந்து கொள்ளவும் ஒத்துக் கொள்ளவும் நாளாகினாலும், கடைசியில் அது தான் பாடமாகிப் போனது.

இப்போது நாடு விட்டு நாடு வந்ததில் வீட்டில் வாரக் குப்பை; அதற்காக பள பள தொட்டி, வாசனைப் பை என்றெல்லாம் உபயோகிக்கையில் மனதின் குப்பைகளுக்கும் இதே போல ஒப்பனை செய்யும் நாகரீகமும், வார்த்தை ஜாலமும் அத்தியாவசியமாகிப் போனதை நினைத்து வருத்தம் தான் வருகிறது. மறுபடியும் குப்பைகளில்லாத சிறுவயதுக் குழந்தை, சிறுவர் காலத்திற்கு செல்ல மாட்டோமா என்ற ஏக்கமும் வருகிறது.

குழந்தைகள் பேசும் பேச்சைக் கேட்கையில் குப்பைகளை தேக்காமல் அவர்களால் இருக்க முடிகிறதே என்ற சந்தோஷம் வருகிறது. அதே சமயத்தில் அவர்கள் பேசும் பேச்சு 'மற்றவர்களுக்குப் பிடிக்காது, பின்னாளில் சமூகத்தில் அவர்கள் இயங்குவதற்கு தடையாகும்' என்று நினைத்து பெற்றோர்கள் (நான் உள்பட) 'பண்பாகப் பேச' கற்றுக் கொடுப்பதைப் பார்க்கையில் நாமே குப்பைத்தொட்டியை வளர்க்கிறோமோ என்ற குற்றவுணர்வும் வருகிறது.

குப்பைகளே இல்லாமல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அது தேங்கி, மற்றவற்றையும் நாசம் செய்யாமல், தேங்காமலாவது இருக்கட்டுமே என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2009

குப்பை - 1

குப்பை – 1

இது உண்மையிலேயே 'குப்பை/குப்பைத் தொட்டி' பற்றிய பதிவுதான். சிறு வயதில் பார்த்ததெல்லாம் தெருவில் ஒரு சிமென்ட் சிலின்டர். மூலையில் நிறுத்தி வைத்திருப்பர்கள். வாரம் ஒரு முறை முனிசிபாலிடி குப்பை வண்டி வந்து அந்த சிமென்ட் குழாயைச் சாய்த்து விட்டு, கூடையில் சேர்த்து, வண்டியில் (மாட்டு வண்டி) போட்டு எடுத்துச் செல்வார்கள். மன்னார்குடியில் நாங்கள் இருந்த தெருவில் புழுதி அதிகம்; குப்பை வண்டி வந்து போகும் போது தெரு முழுதும் ஒரே தூசி படலம் தான். காரணம் அந்த தொழிலாளர்கள் துடைப்பத்தால் - நீண்ட கழியின் முனையில் முக்கோண வடிவில் சிறு தட்டி - பெருக்கி குவித்தபடியே போவார்கள்; பெண் தொழிலாளிகள் அதையும் எடுத்து வண்டியில் போட்டுக் கொண்டே தொடர்வார்கள். வீட்டின் அருகிலேயே குப்பைத்தொட்டி இருந்ததால், வீட்டிற்குள் குப்பை சேகரம் இல்லை.

இது வட நாட்டில் (சண்டீகர்/தில்லி) வாசம் செய்த போது 'கூடா'வாக மாறியது. ப்ளாட்டில் இருந்ததால், வீட்டிற்குள்ளேயே ஒரு சிறு குப்பைத் தொட்டியில் முதலில் சேகரம்; தினமும் காலையில் அந்த ப்ளாட்டுகளுக்குப் பொதுவான ஒரு 'கூடா' சேகரம் பண்ணும் பணியாளர் வந்து தன்னுடைய பெரிய பிளாஸ்டிக் கூடையில் ஒவ்வொரு வீட்டு 'கூடா'வையும் போட்டு எடுத்துச் செல்வார். அது ஒரு பெரிய வண்டிக்கு (இது இயந்திர வண்டி; மாடு தப்பித்தது) மாறி நகரத்தை விட்டு வெளியே செல்லும். 'கூடா' மனிதர் வராத நாளில் (அது வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள்), வீட்டுக் குப்பை அளவு அதிகமாகும். ஆக ஒரு விதமான கிராம/நகர இடத்திலிருந்து மாநகரத்துக்கு மாறுகையில், வீட்டுக் குப்பை அதிகமாயிற்று. வீட்டிலே குப்பை சேகரத்திற்கென்று தனியான குப்பைத் தொட்டி - பிளாஸ்டிக்கில்! குப்பையை வீட்டிலே சேமித்து வைப்பது, முன்னேற்றத்திற்கு அடையாளமானது!!


பின் நாடு விட்டு நாடு வந்து அமெரிக்க வாசத்தில் வீட்டுக் குப்பை தொட்டி அளவிலே பெருத்தது - காரணம், இங்கு தினந்தோரும் வீட்டுக் குப்பையை யாரும் எடுத்துச் செல்வதில்லை. வாரம் ஒரு முறை அல்லது இரு முறை - இரண்டுக்கும் தனித் தனிக் கட்டணம். அதிலும், நேரத்திற்கு (முதல் நாள் மாலையே) குப்பைத் தொட்டியை வீட்டு வாசலில், அதற்குறிய இடத்தில் வைக்க வேண்டும். வேளை தப்பினால் வீட்டிலே இருவாரக் குப்பை. எடுத்துச் செல்லும் இயந்திர வண்டி (பெரிய லாரி), தன் இயந்திரக் கரத்தால் குப்பைத் தோட்டியைத் தூக்கி, கவிழ்த்து குப்பை வண்டியில் விழுந்த பின், தொட்டியை வைத்துவிட்டு செல்லும். அதனால் தொட்டி எந்தப் பக்கம் பார்த்து இருக்கிறது என்றெல்லாம் சரிபார்த்து வைக்க வேண்டும்! இல்லையென்றால் பாதி குப்பை பெட்டிக்குள்ளேயே இருக்கும்.

இந்தப் பெரிய குப்பைத்தொட்டி அனேகமாக எல்லா வீட்டு காரேஜிலோ அல்லது வீட்டுப் பின்புறமோ தனியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் விட்டிற்கு வெளியே வந்து குப்பையைப் போடுவது இயலாத ஒன்று - அதுவும் பனி பெய்யும் குளிர் காலத்தில். அதனால் வீட்டிற்குள்ளே சிறு குப்பைத் தொட்டிகள். அதுவும், குப்பை வாரியாக - சமையலறை குப்பைத் தொட்டி தனி விதம்; குளியலறை குப்பைத்தொட்டி வேறு விதம்; தவிர பாட்டில், காகிதம் என்று மறுசுழற்சி (recycle) செய்யும் பொருள்களுக்கான குப்பைத் தொட்டி வேறு. நம்மூர் சாப்பாடு சாப்பிட்டு, தட்டில் உள்ள கருவேப்பிலை, முருங்கைக்காய் சக்கை எல்லாம் தட்டைக் கழுவும் தொட்டியில் போட முடியாது - அங்கு 'garbage dispenser' இருந்தாலும் கூட. முருங்கைக்காய் தொட்டியில் மாட்டிக் கொண்டு அதை சுத்தம் பண்ணுவதற்கு முன் பசி வந்து இன்னுமொரு முறை சாப்பிட வேண்டிருக்கும்..


தவிர, இந்தக் குப்பைத் தொட்டி மூன்று-நான்கு நாட்களுக்கான குப்பை சேகரம் பண்ணுவதால், அளவிலும் பெரிதாக இருக்க வேண்டும், மூடியோடு கூட வேறு இருக்க வேண்டும் – இல்லையென்றால் நம் சுவாசம் பாதிக்கும்! குப்பையை நேரடியாக பெட்டியில் போடவும் முடியாது; அப்புறம் பெட்டியை யார் அலம்பி சுத்தம் செய்வது? இதற்கென்று ஒரு பிளாஸ்டிக் பை! அதிலும் வகை வகையாய் இருப்பதால் (நல்ல வாசனையோடு இருக்கும் பைகளும் உண்டு), கடையில் இதைத் தெரிந்தெடுக்கவே நேரமாகும். இதெல்லாம் போதாதென்று குப்பைத் தொட்டியை இளப்பமாகவும் வாங்க முடியாது - வீட்டிற்கு ஏற்ற சமையலறை; சமையலறைக்கேற்ற குப்பைத் தொட்டி. இந்தியாவில் இருக்கையில் உபயோகித்த பிளாஸ்டிக் போய் பள பளபளவென்றிருக்கும் எவர்சில்வர் குப்பைத் தொட்டி வாங்கியாகிவிட்டது. அனேகமாக முக்கால்வாசி வீட்டில் இது தான் சமையலறையில் இருக்கும்.

சாப்பிட்ட கையோடு மூடியைத் திறக்க முடியாதென்று, தொட்டியின் அடியில் ஒரு பெடல். அழுத்தினால் மூடி திறக்கும். நம்மூரில் பிளாஸ்டிக் பெட்டி அதிக நாள் வராது; உடைந்து போகும், வேறு வாங்க வேண்டும். இங்கு நிறைய நாள் உபயோகிக்கலாமே என்று நினைக்க வேண்டாம். அழுத்தும் பெடல் - பிளாஸ்டிக். கொஞ்ச நாளில் உடைந்து போகும் - அப்போது மூடியை கையால் தான் தூக்க வேண்டும். தூக்கிப் போட்டு புதிது வாங்கி விட மனசு வரவில்லை. நான் வளர்ந்த விதம் தனி! பள பளவென்றிறுக்கும் இதை தூக்கிப் போடுவதா என்று யோசனை. இதனால் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக பெடல் இல்லாத தொட்டி. சரி நாம் தான் இப்படி என்றால் ஒரு நண்பர் (அவரும் நம்மூரிலிருந்து குடி பெயர்ந்தவர்) வீட்டுக்குப் போயிருந்த போது அவர் வீட்டு சமையலறையிலும் இதே போன்று ஒரு பெடல் இல்லாத எவர் சில்வர் தொட்டி!!

சரி ஒரு பொது விஷயம் இருக்கிறதே என்று பேசிக் கொண்டிருந்தோம். இந்த குப்பைத் தொட்டி தயாரிக்கும் நிறுவனங்களை திட்டினோம் - வருமானத்துக்காக வேண்டுமென்றே இப்படி செய்கிறார்களே என்று. வீட்டிற்கு வந்திருந்த மூன்றாவது நண்பர் - அவரும் நம்மூர் தான் - புதிதாக எவர்சில்வர் பெடலோடு வந்த தொட்டி வாங்கியதாகவும், அதுவும் கொஞ்ச நாளில் உடைந்து போய் விட்டது (காரணம் பெடலை தொட்டியோடு இணைக்கும் கம்பி பிளாஸ்டிக்!!) என்றும், அந்தப் பெடல் எவர் சில்வர் என்பதால் அதை தூக்கிப் போடாமல் கராஜில் வைத்திருப்பதாகவும் சொன்னார்! சரி நாமே தேவலை என்றுதான் தோன்றியது.

வாழ்க்கையில் அதிக விஷயங்களில் முன்னேற்றம் இருந்தாலும் இந்த குப்பை மட்டும் முந்நாளை விட இந்நாளில் ரொம்பவும் நெருங்கி இருப்பதை நினைக்கும் போது மனது கொஞ்சம் வருத்தப்படத்தான் செய்கிறது. ஒப்பிட்டுப் பார்க்கும் போது சிறு வயதில் சராசரியாக வீட்டில் இருந்த குப்பையை விட, இப்போது மூன்று அல்லது நான்கு மடங்கு - அதுவும் மிக அருகே! இது ஒரு விதமான பின்னிறக்கம் தான்!! தொடர்ச்சி அடுத்த பதிவில்.

சனி, ஆகஸ்ட் 08, 2009

பார்வை வேறு, கோணம் வேறு.

பார்வை வேறு, கோணம் வேறு.

"மேக மூட்டம் இல்லாத நாளில் இங்கிருந்து பார்க்கையில் அமெரிக்கா தெரியும்", எங்கள் பேருந்தில் இருந்த ஸ்பீக்கரில், பயண கைடு வர்ணித்துக் கொண்டு வந்ததை "ஓ" என்று பஸ்ஸின் பின்புறத்தில் இருந்து ஒரு வந்த சப்தம் பாதியில் நிறுத்தியது. கூட வந்திருந்த ஒரு குடும்பத்தில் (அப்பா, அம்மா - ஒரு பத்து வயது பையனோடு வந்திருந்தார்கள்), அப்பா மெதுவாக அந்த சிறுவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். தடங்கலுக்குப் பிறகு - முன்னால் அமர்ந்திருந்த சில தலைகள் திரும்பிப் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டன - வர்ணனை தொடர்ந்தது.

கனடாவில் விடுமுறைக்கு சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்று எனக்கும் என் மனைவிக்கும் ரொம்ப நாளாக எண்ணம்; இப்போதுதான் நிறைவேறியது. இருவருக்கும் வேலை வேலை என்று ஓடி, கொஞ்சம் அலுப்பும் சேர, திடீரென்று ஒரு விடுமுறை யோசனை தோன்றியதில் இந்தப் பயணம். விடுமுறையில் உடம்பை அலட்டிக் கொள்ளாமல் யாராவது வண்டி ஒட்டி எல்லா இடத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று முதலிலேயே முடிவெடுத்து வந்து விட்டோம் - தினசரி வாழ்க்கையில் அதிகமான நேரம் டிராபிக்கில் கார் ஒட்டியதால், ஒரு வாரம் சும்மா சுற்ற வேண்டும் என்றுதான் தீர்மானம். சப்தம் இல்லாமல், அதிக வேலை இல்லாமல் நாளைக் கழிப்பதே இந்த வார இலக்கு எங்களுக்கு!

பயணத்தின் மூன்றாவது நாள் - குபெக். மான்டிரியாலில் இருந்து ஒரு மூடிய ஏ.ஸி. பஸ்ஸில் வந்து, பின் ஒரு திறந்த பஸ்ஸில் குபெக்கிற்குள் சுற்றி வந்து கொண்டிருந்தோம். பயண ஆரம்பத்திலிருந்தே இந்த சிறுவனின் செய்கைகளும், சப்தங்களும் தொந்தரவாகவே இருந்து வந்தன. பஸ் மலையில் ஏறி நிறுத்தத்தில் நின்றது - எங்களைப் போன்று வந்திருந்த பிற சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க, சிரம பரிகாரம் செய்து கொள்ள. இறங்குகையில் சப்தம் போட்ட சிறுவனையும், அந்த குடும்பத்தையும் ஒரு நோட்டம் விட்டுக் கொண்டே இறங்கினேன், மற்ற பயணிகளைப் போலவே. அதிக காசு கொடுத்து கொஞ்சம் ஜாலியாக சுற்றலாம் என்று வந்தால் இத்தனை இடைஞ்சலா என்று தோன்றினாலும், இதற்கு முன் சொந்தக் காரர் ஒருவர் வீட்டுப் பிள்ளையையும் இதே போல பார்த்ததால் எங்களுக்கு அவர்கள் மேல் கொஞ்சம் பரிதாபம் வந்தது.

எங்கள் சீட்டுக்கு முன்னாலிருந்த ஒரு முதிர் தம்பதியினர் இதை தங்களுக்குள் வெளிப்படையாகவே கொஞ்சம் கடுப்போடு (மற்றவர்களுக்கு கேட்காத மாதிரிதான்) பேசிக்கொண்டு வந்தார்கள். பஸ் கிளம்பும் நேரம் வந்தது; பயணிகள் அனைவரும் வந்து விட்டார்கள் அந்த ஒரு குடும்பத்தைத் தவிர. ஐந்து நிமிட தாமத்திற்குப் பிறகு அவர்களையும் ஏற்றிக் கொண்டு மற்ற பயணிகளின் முணுமுணுப்புகளோடு வண்டி கிளம்பியது.

மலையிலிருந்து இறங்குகையில் சப்தம் கொஞ்சம் அதிகமாகவே வந்தது அந்த சிறுவனிடமிருந்து. நல்ல வேளையாக பஸ்ஸில் காலி இடம் கொஞ்சம் இருந்தது. எல்லா பயணிகளும் பஸ்ஸின் முன்புறம் உள்ள சீட்டுகளுக்கு மாற, அந்தக் குடும்பமும் கடைசி சீட்டுக்கு மாற, நடுவில் இரண்டு/மூன்று வரிசை காலி சீட்டுகளோடு வண்டி சென்றது. பஸ்ஸில் கைடு உட்பட அனைவர் முகத்திலுமே கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது - இந்த குடும்பத்தைப் பார்க்கையில்.

அடுத்த நிறுத்தம் குபெக்கிற்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சியைப் பார்க்க. அங்கிருந்த விஞ்ச் மூலமாக மலைக்கு செல்ல வேண்டும். விஞ்ச்சில் அதிகபட்சம் ஆறு அல்லது எட்டு பேர்தான் செல்ல முடியும்; அதனால் பஸ்ஸின் பயணிகளை இரண்டு/மூன்று குழுவாகப் பிரித்து விஞ்சில் அனுப்பிக் கொண்டிருந்தார் கைடு. எங்கள் முறை வருகையில் நாங்களும், அந்தக் குடும்பமும் மட்டும். விஞ்சில் செல்கையில் எங்கள் பார்வைக்கு பதில் சொல்லும் வகையில் அப்பா சொன்னார் - சிறுவனுக்கு Autism என்று.

கொஞ்சம் பேசிக் கொண்டே வந்தோம்; பின் திரும்பி வருகையிலும், மற்ற பயணிகள் கொஞ்சம் விலகிச் செல்ல, நானும் என் மனைவியும் இவர்களோடேயே விஞ்சில் வந்து, பஸ்ஸில் ஏறினோம். இம்முறை அவர்களுக்கு அடுத்த சீட்டில் அமர்ந்தோம்; அந்த அம்மாவின் முகம் 'நன்றி' என்று பார்வையில் சொன்னது. பஸ்ஸில் முன்னாலிருந்த பயணிகள் முகத்தில் கேள்வி - எங்களைப் பார்க்கையில், 'ஏன் முன்னால் அமரவில்லை' என்று.

மான்டிரியால் திரும்புகையில் சிறுவன் உறங்கி விட, அவர்களோடு பேசிக் கொண்டே வந்ததில் அந்த குடும்பத்தைப் பற்றி தெரிந்தது. மனைவி ஒரு டாக்டர். கணவர் நல்ல வேலையில் இருந்து விட்டு, வீட்டு நிலைமைக்காக வேலையை விட்டு விட்டார். விடுமுறைக்காக கனடா வந்திருக்கிறார்கள். பையனுக்கு வயது பத்தாகி விட்டாலும், மனதளவில் ஒன்றரை வயது; பேச்சு வரவில்லை; இன்னமும் Diaper தான் உபயோகிக்கிறான் (அதனால் தான் குபெக்கில் ஐந்து நிமிட தாமதம்). மான்டிரியாலில் இறங்குகையில் அவரிடம் ஆறுதலாகச் சொன்னேன் "உங்கள் நல்ல மனதிற்கு ஆண்டவன் உங்களை சோதித்திருக்க வேண்டாம்" என்று.

அது வரை இயல்பாக பேசிக் கொண்டிருந்த அவர் முகத்தில் வருத்தம். "நீங்கள் எனக்கு ஆறுதல் என்ற முறையில்தான் சொல்கிறீர்கள்; ஆனால் அடிப்படையில் நீங்களும் மற்ற பயணிகளும் இதை ஒரே மாதிரி தான் பார்க்கிறீர்கள். என் மகனை கடவுள் எங்களுக்கு அளித்த சோதனையாகவோ, தண்டனையாகவோ நாங்கள் கருதவில்லை. என் மகனுக்கு கடவுள் எங்களைப் பரிசாக அளித்திருக்கிறர், அதை எந்த விதத்திலும் குறைத்துவிடக் கூடாது; அவனுக்கு கிடைத்த உயர்ந்த பரிசாக எங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதுதான் எங்கள் நோக்கம். தயவு செய்து அதைப் புரிந்து கொள்ளுங்கள்", என்றார்.

மற்ற பயணிகள் முகத்தில் தெரிந்த எரிச்சலையும், கடுப்பையும் குறையாக நினைத்து என்னை அவர்களை விட உயர்வாக நினைத்த எனக்கு அவர் சொன்னது ஆழமாகப் பதிந்தது. அவரிடம் மன்னிப்பு கேட்டு, அவர் நிச்சயம் அவர் மகனுக்கு உயர்ந்த பரிசுதான் என்று சொல்லி, மனைவியுடன் ஓட்டல் திரும்பினேன்.

பிகு:
இது என் நூறாவது பதிவு. ரொம்ப நாளாக மனதில் இருந்த விஷயத்தை சொல்வதா வேண்டாமா என்று போராடி சொல்வது என்று தீர்மானித்து பதிந்திருக்கிறேன்.