வியாழன், மார்ச் 24, 2011

இலக்கு – 6

இலக்கு – 6

வாழ உணவு அவசியம். உணவில்லாமல் வாழ முடியும் என்று நிரூபித்தவர்களை நான் சந்தித்ததில்லை. உணவைப் பெற அனேக வழிகள் இருக்கின்றன. மாதவனூர் வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் எனக்கும் என் குடும்பத்துக்கும் தேவையான உணவில் பத்து சதவிகிதம் கூட எடிசனில் தயாரிக்கப்படுவதில்லை. பாலுக்கு மாடு இல்லை; வீட்டைச் சுற்றியுள்ள மரம், செடிகளில் உண்ணபதற்கான காய், கனிகள் இல்லை. வீட்டில் கிணறு கிடையாது; நெல் வயல் இந்த மாநிலத்திலேயே இல்லை. ஆனால் உணவைப் பெறும் விதத்தில் வசதிகள், வகைகள் அதிகம். இதில் முக்கியமான வசதி நேரம், மற்றும் சக்தி சம்பந்தப்பட்டது. என்னளவில் நேரம்/சக்தி அதிகம் செலவாகாமல் உணவைப் பெற முடிகிறது. எனக்கு பதிலாக வேறு சிலருடைய உழைப்பில் தயாரான உணவை, என் சொந்த உழைப்புக்கும் நேரத்திற்கும் பதிலாக, பணத்தை மாற்றாகத் தந்து எனக்கும் என் குடும்பத்துக்கும் தேவையான அளவில் பெறுகிறேன். இதில் எது சரி, எது தவறு என்று எப்படி நிர்ணயிப்பது?

சிறு வயதில் உயிரியல் பாடம் படிக்கையில் 'உணவுச் சுழற்சி' பற்றி படித்ததுண்டு. தாவரங்களைத் தின்னும் விலங்குகள், பறவைகள்; அந்த விலங்குகளை, பறவைகளைத் தின்னும் விலங்குகள், பின் அந்த விலங்குகள் இறந்து அதன் உடல் உரமாக மண்ணுக்கு செல்வது என்றெல்லாம் படமும், அம்புக் குறியும் போட்டு விளக்கியிருப்பார்கள். ஒரு விதத்தில் மண்ணும், தாவரமும், விலங்கினமும் ஒன்றையொன்று எப்படிச் சார்ந்திருக்கிறது என்பது அந்தப் பாடம் படிக்கையில் புரிந்தது. மொத்ததில் மனிதனுக்கு மரத்தைப் போன்று தண்ணீர், சூரியன் தயவோடு மட்டும் உணவைத் தயாரிக்க முடியாது – மற்ற தாவர, விலங்கினத்தைச் சார்ந்து தான் இருக்க முடியும். அதனால் நானே பயிரிட்டு உண்பதற்கும், மற்றவர் பயிரிட்டதை பணத்திற்கு மாற்றாகப் பெற்று உண்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அதே போல தாவரத்தை மட்டும் உண்டு வாழும் மானுக்கும், மானை உண்டு வாழும் புலிக்கும் இடையில் அதன் உணவு உண்ணும் முறையால் மட்டும் சரி, தவறு என்று நிர்ணயிக்க முடியும் என்றும் தோன்றவில்லை. தாவரத்தை உண்பது மானின் இயல்பென்றால், மானை உண்பது புலியின் இயல்பாகிறது.

உணவைத் தேர்ந்தெடுக்கும், பெறும் முறையில் எது சரி, எது சரியல்ல என்ற நிர்ணயம் கடினமானதாக இருந்தாலும், உணவை விரயம் செய்வது சரியல்ல என்பது தெளிவு. அதனால் உணவு விரயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. உணவு விரயம் பலவகைப்படும். சாப்பிட்டு முடித்தவுடன் மிச்சம் மீதி நிறைய இருந்து அதைக் குப்பையில் எறிவதில் விரயம் தெளிவாகத் தெரிந்தாலும், மற்ற வகை விரயங்கள் அவ்வளவு தெளிவாகத் தெரிவதில்லை. சிறு வயதிலிருந்தே வீட்டில் பெரியவர்கள் கண்டிப்பினால் உணவை வீணாக்காமல், சமைப்பதிலும், பறிமாறுவதிலும், அளவு பார்த்து இருக்கக் கற்றுக் கொண்டாலும், வேறு விதமான விரயங்களைப் பற்றி சமீப காலங்களில் தான் யோசனை அதிகரித்திருக்கிறது.

உணவு ஒரு எரிபொருள், சக்தி! பள்ளியில் படிக்கும் போது, இயற்பியல் பாடங்களில் இந்த "Law of conservation of Energy" (சக்தி பேணுகை விதி?) பற்றி படித்திருக்கிறேன். சுருக்கமாகச் சொல்லப் போனால் இதைப் பற்றி நான் புரிந்து கொண்டது இதுதான். பிரபஞ்சத்தில் சக்தியை உண்டாக்கவோ, அழிக்கவோ முடியாது. இங்குள்ள மொத்த சக்தியைக் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. சக்தியை (அல்லது ஆற்றலை) ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்ற முடியும். இந்த மாறுதலில் சக்தியின் ஒரு பகுதி உபயோகிக்க முடியாத வெப்பமாகவோ அல்லது வேறு விதமான சக்தியாகவோ வெளிப்படலாம். இதை சக்தி விரயம் என்றழைக்கலாம். அந்த மாதிரி விரயமாகும்/மாறும் சக்தியும் பிரபஞ்சத்திலேயே இருப்பதால், மொத்த சக்தியில் கூடுதலோ, குறைவோ இல்லை. இதைப் படிக்கும் போது கீதா சாரம் நினைவுக்கு வரும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் “பொருளும் ஒரு விதமான சக்தியே - Mass is a form of Energy” - என்று நிரூபித்திருக்கிறார். ஒரு இயந்திரத்தின் உயர்வு அது எந்த அளவுக்கு சக்தி விரயமில்லாமல் இயங்குகிறது என்பதைப் பொறுத்துத்தான் நிர்ணயிக்கப் படுகிறது. உதாரணமாக ஒரு லிட்டர் டீசலுக்கு பத்து கிலோமீட்டர் செல்லும் பேருந்தின் திறத்தை விட, ஐம்பது கிலோமீட்டர் செல்லும் பேருந்தின் திறம் உயர்ந்தது. ஒரு விதத்தில் அந்த ஒரு லிட்டர் டீசலின் மதிப்பும் ஐம்பது கிலோமீட்டர் சென்ற பேருந்தினால் உயர்கிறது!


வாழ்வதற்காக உணவைச் சேர்க்கையிலும் இதே விதிதான் - சாப்பிட்ட உணவின் சக்தி என் மூலமாக வெளிப்படுகிறது. என் மூலமாக வெளிப்படும் சக்தி எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு சாப்பிட்ட உணவின் சக்தியின் வெளிப்பாடு உயர்கிறது. இல்லையென்றால், அந்த சாப்பாட்டின் சக்தி விரயம்தான்! கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள் நினைப்புக்கு வரலாம்:
“தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால், தீபத்தின் பெருமையன்றோ?
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால், தீபமும் பாவமன்றோ?”

வாழ்கையை உபயோகமாக எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி எத்தனையோ பெரியவர்கள் எழுதிவிட்டார்கள்; இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதில் பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் எழுதிய ஒரு கட்டுரை என்னை நிரம்பவும் யோசிக்க வைத்த ஒன்று. அதில் ஒரு பகுதியின் தமிழ் மொழியாக்கம் இங்கே: "வாழ்க்கை என்பது வெகு சிலரே அடையக் கூடிய இலக்கை நோக்கிய ஒரு இரவு நேர, கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் சூழ்ந்த, வலி மிகுந்த, களைப்புதரும் நெடுந்தூர நடைப் பயணம். இதில் நம்மோடு நடப்பவர்கள் என்றுமிருக்கும் மௌனமான மரண விதியின் ஆணையின் கட்டுண்டு ஒருவர் பின் ஒருவராக நம் கண்ணிலிருந்து மறைவர். அவர்களின் சுக துக்கங்களில் உதவ நமக்கிருக்கும் அவகாசம் குறைவு. அந்த அவகாசத்தை அவர்களுக்கு ஒளிகாட்டுவதற்கோ, கருணையினால் அவர் துயர் துடைப்பதற்கோ, என்றும் தளரா பாசத்தால் மகிழ்விக்கவோ, தளரும் மனத்துக்கு தைரியம் அளிப்பதற்கோ அல்லது நம்பிக்கையூட்டுவதற்கோ பயன்படுத்துவோம்." [Bertrand Russell – Mysticism and Logic and Other Essays – A Free Man’s Worship]

வாழ்கையை உபயோகமாக நடத்துவது என் உணவின் மதிப்பை உயர்த்தும்; வாழ்தல் என்ற இலக்கை அடைய நான் எடுத்துக் கொண்டிருக்கிற முறை சரியா என்ற நிர்ணயிக்கவும் அது உதவும். நான் உண்ட, உண்கிற உணவின் மதிப்பை உயர்த்தியிருக்கிறேனா என்று தெரியவில்லை; இருந்தாலும், இந்தக் கேள்வியைக் கேட்க ஆரம்பித்ததே என் வாழ்க்கையின் சுய தேடலில் ஒரு திருப்புமுனை என்று தோன்றுகிறது. மற்ற புலன்களின் பசித் தேவை பூர்த்தி, அதன் வழிமுறை பற்றி அடுத்த வாரம்.

வியாழன், மார்ச் 10, 2011

இலக்கு - 5

இலக்கு - 5

இலக்குகளை பற்றி நான் முதன் முதலாக யோசிக்க ஆரம்பித்தது கல்லூரியில் படிக்கும் காலத்தில் - இருபது வருடங்களுக்கும் முன்பாக! இந்த யோசனை இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சில வருடங்கள் கழித்து வேறு ஏதாவது இலக்காகத் தோன்றலாம்; அல்லது இந்த நான்கு இலக்குகளில் சில இல்லாமல் போகலாம். இன்றைய தேதியில் இவை நான்கும் என் இலக்குகள். இவைகளை நான் தனித்தனியாக நான்கு இலக்குகளாகப் பார்ப்பதில்லை. ஒருவிதத்தில் இவையனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. புரிந்து கொள்ள எளிதாக இருப்பதற்காக நான்காகப் பிரித்து விவரித்திருந்தாலும், இவை நான்கும் ஒரு முழுமையை நோக்கிச் செல்ல உதவுவதாகவே நான் எண்ணுகிறேன்.

கல்லூரியில் படிக்கும் போது ராமகிருஷ்ணா மடம் பதிப்பித்த விவேகாநந்தர் உரைகளை, புத்தகங்களை விரும்பிப் படித்திருக்கிறேன். அவர் 1900ல் அமெரிக்கா வந்த பொழுது தந்த உரைகள் (லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா) ஒன்றில் இந்த மாதிரி குறிப்பிட்டிருக்கிறார்: "பெரும்பான்மையான மக்கள் இலக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இலக்குதான் முக்கியம்; அதை அடையும் முறை, வழி முக்கியமல்ல என்று கூறுவது தவறு. சரியான இலக்கை நிர்ணயித்தபின் நாம் அதை அடையும் வழியில், முறையில் கவனம் செலுத்த வேண்டும். இலக்கைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்காமல் அதை அடையும் வழிமுறையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் இலக்கை அடைய முடியும். வழியும், முறையும் சரியாக இருந்தால் இலக்கை மறந்தாலும் பாதகமில்லை; இலக்கைத் தாமாகவே சென்றடையலாம்!". இது என்னை மிகவும் கவர்ந்த ஒரு விளக்கம். பின்னாளில் பகவத் கீதை உரைகளைப் படிக்கையில், சிதப்பிரஞ்ஞன் பற்றிய விளக்கத்தையும் இந்த உரையின் தொடர்ச்சியாகப் பார்க்கத் தோன்றியது. மூலத்தைப் பொருத்தே விளைவு - பாதையைப் பொருத்தே பயணம்.

இந்தக் கருத்து தொடர்பான கவியரசர் கண்ணதாசனின் திரைப்பாடல்:
"பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்? அதில்
பயணம் நடத்தி விடு மறைந்திடும் பாவம்"
(வாணி ஜெயராம் குரலில், எம். எஸ். விஸ்வநாதனின் இசையில், அபூர்வ ராகங்கள் திரைப்படப் பாடல் - முழுப்பாடலும் அருமை!)

என் வாழ்க்கையின் சுய தேடலில் இரு நிலைகள். என் இலக்கு(கள்) என்ன? அவை சரியா? இது முதல் நிலை. சரியான இலக்குகள் நிர்ணயமான பின் அவைகளை அடையும் முறை, வழி சரியானதா? இது இரண்டாவது நிலை. நான் முன்பெழுதிய நான்கு இலக்குகளையும் சரியா என்றும், அதை அடைய நான் எடுத்த, எடுத்துக் கொண்டிருக்கிற வழிகளைப் பற்றியும் சுயவிசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறேன். இந்த சுயதேடல்/விசாரணை இன்னமும் முடியவில்லை; எப்போது முடியும் என்றும் தெரியவில்லை.

முதலாவதாக 'வாழ்தல்'. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்று சொல்வதைப் போல 'நான் வாழ்வது' என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்று தோன்றுகிறது. இதில் சரி/தவறு என்று பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. இந்த இலக்கு தவறு என்று வாதிட எந்த விதமான காரணமும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த 'வாழ்தலுக்கு' உள்ள முறை பற்றி, இந்த இலக்கை அடைய நான் எடுத்த, எடுத்துக் கொண்டிருக்கிற முடிவுகளில், வழியில் எது சரி, எது சரியல்ல என்பதில் அனேக குழப்பம். இந்த 'வாழ்தல்' இலக்கின் முதல் பாகம் பசித் தேவைப் பூர்த்தி. உணவைப் பெறும் முறையில் ஏகப்பட்ட மாற்றம்; காலத்தின் போக்கில் இது மாறிக் கொண்டே வருகிறது.

அறுபது, எழுபது வருடங்களுக்கு முன் என் தாத்தா, பாட்டி (அம்மா வழி) ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிப்பட்டினம் அருகிலுள்ள மாதவனூர் கிராமத்தில் வசித்து வந்தார்கள். அவர்கள் வாழ்ந்த முறைக்கும் இப்போது எடிசனில் நான் வாழும் முறைக்கும் நிறைய வித்தியாசம் - முக்கியமாக உணவு, வாழ்க்கை வசதி சம்பந்தப்பட்ட விஷயங்களில். அப்போது மாதவனூர் கிராமத்தில் மின்சாரம் கிடையாது. சிறிய தெரு; ஓட்டு வீட்டிற்கு எதிராக மாட்டுத் தொழுவம். பாலுக்காக நான்கு, ஐந்து பசு மாடுகள்; வயலுக்கும், வண்டித் தேவைக்கும் சில எருதுகள். ஒரு கன்றுக் குட்டியாவது எப்போதும் தொழுவத்தில் இருக்கும்! வீட்டின் கொல்லையில் மாதுளம், எலுமிச்சை மற்றும் தென்னை மரங்கள்; சில கொடிகள் (பறங்கி, பூசணி, மல்லி), கீரைப்பாத்தி. கிணறு தாண்டி கத்திரிக்காய் செடி பார்த்ததாக நினைவு. தெருமுனை தாண்டி கொஞ்ச தூரத்தில் ஊரணி (சிறு குட்டை). துணி துவைக்க, மாடு குளிக்க மற்றும் இதர தண்ணீர் உபயோகத்திற்கு. சமையலுக்கும், குடிநீருக்கும் வீட்டுக் கொல்லைக் கிணறு. ஊரணிக்கருகே நிறைய கருவேல மரங்கள், சகதி என்று ஒரு குழப்பமான வாசனை. இன்னமும் கொஞ்ச தூரத்தில் வயல். மாதத்தைப் பொறுத்து பச்சை நாற்றுகள் அல்லது முற்றிய கதிர்கள்.

வீட்டிற்குத் தேவையான உணவு அனேகமாக கிராமத்திலேயே உருவானது - கருப்பட்டி உட்பட. வண்டி கட்டி டவுனுக்கு (தேவிப்பட்டினம் அல்லது எப்போதாவது திருவாடானை) சென்று வருகையில் தாத்தா சர்க்கரை, ஓலைப்பெட்டியில் மிட்டாய்/பட்சணங்கள் அல்லது பிஸ்கட் என்று வாங்கி வருவார். வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த உணவுப் பொருட்களை சேகரிப்பது, பெறுவது எப்படி என்றும் தெரியும். தாத்தா, பாட்டி இருவருமே பால் கறக்க, பசுவைப் பாதுகாக்க (தவிடு, தண்ணீர் காட்டுவது, பசுவை ஊரணிக்கு ஒட்டிச் சென்று குளித்து விடுவது) எல்லாம் தெரியும். சிறு வயதில் தாத்தா வயலிலும் வேலை செய்திருப்பதாகச் சொல்லக் கேள்வி. மாச்சட்டியில் விளக்கெண்ணை விளக்கு வைத்து, மை தயாரித்த கதையும் பாட்டி/அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். மொத்தத்தில் என் கணிப்பில் கிட்டத்தட்ட 75 சதவீத உணவுத் தேவைகளை கிராமத்திலேயே அவர்களே தயாரித்துக் கொண்டார்கள்.

அடுத்த பதிவில் தொடர்கிறேன்.