வியாழன், ஜனவரி 12, 2006

நினைப்பில் நன்மை தீமை உண்டா?

ஏனோ தெரியவில்லை இந்த வாரம் முழுதும் ஒரே கையரிப்பு - ஏதாவது எழுத! இரண்டு நாட்கள் முன்பு வழக்கம் போல் இல்லாமல் காரில் அலுவலகம் வரும்போது ஈ.எஸ்.பி.என். ரேடியோ கேட்டுக்கொண்டு வந்தேன். எனக்கு அமெரிக்க கால்பந்தாட்டம் தெரியாது; பார்க்கவும் விருப்பமில்லை. வானொலியில் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு முக்கியமான ஆட்டத்தில் ஒரு அணியின் முக்கியமான விளையாட்டுவீரர் காயமடைந்து ஆட்டத்திலிருந்து வெளியேற (ஸ்ரெச்சரில்) அந்த அணி தோற்றது.

நிகழ்ச்சியில் வர்ணனையாளர் கேட்ட கேள்வி: அடிபட்ட அந்த வீரர் வெளியேறும் போது, எதிர் அணியின் ஆட்டக்காரர்கள், ரசிகர்கள் 'நடந்தது நம் நன்மைக்கே; இனி ஆட்டத்தில் வெற்றி நிச்சயம்' என்று நினைத்தால் அவர்கள் எல்லோரும் கெட்ட மனிதர்களா?

எனக்கு சிறு வயதில் தெருவில் கிரிக்கெட் ஆடும் போது எதிர் அணியில் இருப்பவரை அவுட்டாக்க செய்த கோமாளித்தனமான செய்கைகள் (மூடநம்பிக்கை) ஞாபகம் வந்தது. அதை விட இது தீவிரமானது!

நிகழ்ச்சி தொகுப்பாளர் மேலும் விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட கேள்விகள்:
அடிபட்டு விழுந்ததும் 'அப்பாடா! இனி நம்மணி வெற்றி பெறலாம்' என்று நினைப்பதற்கும், ஆட்டத்திற்கு முதல்நாள் இந்த மாதிரி எதிர் அணியில் இருப்பவர் காயம் பட்டால் நன்றாக இருக்குமே என்ற நினைப்பதற்கும் (ஏன் சில சமயம் பிராத்தனைகள் கூட) வித்தியாசம் உண்டா?

வேண்டாதவருக்கு தீங்கு வந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டால் கெட்ட மனிதனா? அல்லது மனத்தால் மற்றொருவருக்கு தீங்கு வந்தால் நல்லது என்று நினைத்தால், கெட்ட மனிதனா?

இப்படியெல்லாம் நிகழ்ச்சியில் கேள்விகள் கேட்கப்பட, வானொலி ரசிகர்கள் தொலைபேசியிலும், மின் மடலிலும் தங்கள் கருத்துகளை சொன்னார்கள். அப்படிச் சொல்லப்பட்ட கருத்துகளிலிருந்து குறிப்பிடும்படியான சில கருத்துகள் :
1. நான் எதிர் அணியின் முக்கிய ஆட்டக்காரர் ஆட முடியாமற் போனதற்கு சந்தோஷப் படவில்லை என்றால் என் அணிக்கு ஒரு நல்ல ஆதரவாளனே அல்ல.
2. எதிர் அணியின் ஆட்டக்காரருக்கு அடி பட வேண்டும் என்று பிரார்த்திப்பது தவறு; ஆனால் அடி பட்டு விளையாட முடியாமல் போனால் அதற்கு சந்தோஷப் படுவது தவறில்லை.
3. ஒருவர் அடிபட்டதற்கு சந்தொஷப்பட்டால் அவன் நல்ல மனிதன் அல்ல.
4. அடிபடுவதற்காக பிராத்தனை செய்வதற்கும், அடிபட்டபின் சந்தோஷப்படுவதற்கும் வித்தியாசம் இல்லை; அடிப்படையில் அவர்கள் நல்ல மனிதர்கள் அல்ல.
5. மறுமுறை விளையாடவே முடியாதவாறு அடிபட்டால், அதற்கு மகிழக்கூடாது; ஒன்று அல்லது இரண்டு ஆட்டங்கள் ஆட முடியாது, அதனால் நம் அணிக்கு நன்மை என்றால் மகிழ்வதில் தவறில்லை.
6. தமக்கு வேண்டாதவர் அடி பட்டால் எவராயிருந்தாலும் மகிழ்ந்து தான் போவார்; அப்படி மகிழமாட்டோம் என்று சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள்.
7. தமக்கு வேண்டாதவர் அடி பட வேண்டும் என்று நினைப்பதும், அடிபட்டால் மகிழ்ந்து போவது இயற்கை; சரியா தவறா என்பது பற்றி தெரியாது. உலகத்தில் பெரும்பான்மையான மக்கள் இப்படித்தான் நினைப்பார்கள். இயற்கையே இப்படித்தான் என்றால் அது சரி என்று தான் நினைக்கிறேன்.

இதற்கு முந்திய பதிவில் நான் எழுதியது வார்த்தைகளினால் சொல்வதும், அதன் விளைவுகளும். இது ஒருவரின் நினைப்பு பற்றியது. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா? எனக்கு மேலே சொன்ன ஏழாவது கருத்தோடுதான் அதிகம் ஒத்துப் போகிறது.

புதன், ஜனவரி 11, 2006

உண்மையா அல்லது (பெரும்பான்மை) நன்மையா?

பொய் சொல்வது என்பது கிட்டத்தட்ட பேசத் தெரிந்தவுடனேயே ஆரம்பித்துவிடுகிறது. பொய் சொல்வது சரி என்று நான் சொல்லவில்லை - இயல்பாகவே வந்து விடுகிறது என்றுதான் சொல்கிறேன். பொய்யை யார் சொன்னாலும், அதை நியாப்படுத்துவதற்கு நிறைய வாதங்கள், காரணங்கள் இருக்கின்றன. தமிழில் இம்மாதிரி நியாயப்படுத்த, காரணமாக மேற்கோள் காட்ட நிறைய பழமொழிகளும், ஏன் திருக்குறளே கூட இருக்கின்றன. “பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.” (292)

புரைதீர்ந்த என்றால் குற்றமற்ற என்று பொருள் (புரை - குற்றம்; தீர்ந்த - முடிந்த, இல்லாத). ‘பொய் குற்றமற்ற நன்மை விளைவிக்கிறதா’ என்று யார் தீர்மானிப்பது?

பொய் சொல்லும் எவரும் தனக்கு தீமை வரும் என்று எண்ணினால் பொய் சொல்லப் போவதில்லை; குறைந்தபட்சம் தற்காலிக நன்மை வரும், அல்லது வரப்போகும் தீமை தற்காலிகமாகவாவது போகும் என்று எண்ணித்தான் சொல்கிறார்கள். அது மட்டுமல்ல - பொய் சொல்வது குற்றம் என்று கொண்டால், குற்றமில்லாத நன்மை பொய் சொல்வதால் வர முடியாது.

முதற் குறளில் வள்ளுவரே இவ்வாறு சொல்லியிருக்கிறார்:
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொல்.” (291)

இங்கேயும் இதே பிரச்சனை - யார் தீமை எது என்று தீர்மானிப்பது. எப்போது மாற்றம் வருகிறதோ, அப்போது நன்மை, தீமை இரண்டும் வரும். ஒருவரின் உணவு மற்றவருக்கு விஷம். இது தவிர்க்க முடியாதது. நன்மை தீமை இரண்டும் வராமல் பேச முடியும்; ஆனால் சுவாரசியம் அல்லது மாற்றம் இருக்காது. ஒரு நல்ல துணுக்குக்குக் கூட கொஞ்சம் கற்பனை - பொய் - தேவையாயிருக்கிறது.

இந்த இரண்டு குறள்களையும் இப்படி மாற்றியும் எழுதலாம்:

“பொய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
நன்மை இலாத சொல்.” (291-அ)
“வாய்மையும் பொய்மை யிடத்த புரைசேர்ந்த
தீமை பயக்கும் எனின்.” (292-அ)

சில சமயங்களில் உண்மையைச் சொல்வதால் ஏற்படும் கஷ்டங்கள், சங்கடங்கள் தீயனவாகவும் போகலாம். என் அனுபவத்தில் தேவையில்லாத சமயத்தில் சொல்லப்பட்ட உண்மைகள் விளைவித்த சங்கடங்கள் அதிகம் (உதாரணம், அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போது, சட்ட திட்டங்களுக்காக மருத்துவர் அறுவை சிகிச்சையில் என்ன மாதிரி தீமைகள் வருமென்று 10 நிமிடங்கள் விவரித்தார் - எனக்கோ 'அபசகுனம் பிடித்த மாதிரி இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே' என்று வருத்தமாயிருந்தது). அவர் சொன்னது எல்லாம் உண்மைதான் - எனக்கு வருத்தம் விளைவித்ததால் அதை 291ம் குறளில் (அல்லது 291 – அ) சொன்னது போல் வாய்மை இல்லை என்று கொள்ளலாமா?

இதைவிட அடிப்படையாக - விளைவுகள் (நன்மை - தீமை) குணத்தை (வாய்மை - பொய்மை) விளக்குவது சரியானதா? விளைவுகள் தான் முக்கியமென்றால் குணத்தை குறைந்து மதிப்பிடுகிறோமா? உண்மையைவிட (பெரும்பான்மை) நன்மை முக்கியமானதா? அல்லது உண்மை பேசுவதே, உண்மையாய் இருப்பதே பெரும் நன்மையா? சரியாகத் தெரியவில்லை.

செவ்வாய், ஜனவரி 10, 2006

கறுப்பும் - வெளுப்பும்

சென்ற வாரம் தொலைக்காட்சியில் இரண்டு நிகழ்ச்சிகள் பார்த்தேன்: ஒன்று கறுப்பு மற்றது வெளுப்பு. முதலாவது அண்டங்காக்கைகள் பற்றி (ஆங்கிலத்தில் ரேவன்); இரண்டாவது பனிக்கரடிகள் பற்றி. இதற்கு முன்பு தெரியாத நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

முதலில் அண்டங்காக்கைகள் பற்றி:
1. இவைகள் 40 வருடம் வரை கூட உயிர்வாழும்.
2. துணை ஒன்றைப் பெற்றுவிட்டால் கடைசி வரை துணையை மாற்றாது (டைவர்ஸ் எல்லாம் இல்லை)
3. 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற சித்தாந்தத்தில்தான் நம்பிக்கை! (இது வர்ணனையாளர் கொஞ்சம் சுற்றி வளைத்து சொன்னது! நிகழ்ச்சியில் பனியில் உருண்டு புரண்டு விளையாடுகிறது - நாய்க்குட்டி போல)
4. மிகவும் புத்திசாலி - நிகழ்ச்சியில் என்னதான் சிக்கலோடு கயிறுகள் இருந்தாலும், மாமிசம் கட்டியிருக்கும் கயிறை சரியாகக் கொத்துகிறது; காலால் கதவைத் திறக்கிறது! (எனக்கு 'ஸ்ப்ரைட்' காக்கை ஞாபகம் வந்தது)
5. இளவயதுக் காக்கைகள் கூடித்தான் வாழ்கின்றன; தினமும் இரவில் கூடிப் பேசுகின்றன! (வர்ணனையாளர் சொன்னது: ‘தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றன, எங்கு இரை கிடைத்தது என்பது பற்றியெல்லாம் பேசிக் கொள்கின்றன’)
6. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் சில இடங்களில் மக்கள் இவற்றை பாதுகாத்து உணவளிப்பது நெடுங்காலமாய் வழக்கத்தில் இருக்கிறது - பார்க்க/கேட்க அழகாக இல்லை; அதிகம் உபயோகம் இல்லை என்றாலும்.
7. திருடித் தின்பதில் இவற்றிற்கு ஈடு இல்லை - ஒவ்வொரு விலங்கிற்கும் அதன் பலம், பலவீனத்திற்கு தகுந்தாற்போல் தனி யுக்தி வைத்திருக்கிறது (உ.ம். காட்டுப் பன்றி தீனி திங்கும் போது, அதன் மேல் அமர்ந்து கொண்டு அதன் கழுத்தில் ஒரு கொத்து; பன்றி நகர்ந்ததும் அதன் தீனியை எடுத்துக் கொண்டு பறந்துவிடுகிறது)
8. தங்களை விட பெரிய விலங்குகளையும் உபயோகிக்கும் திறன் படைத்தது - வர்ணனையாளர் சொன்னது: சில இடங்களில் (ஸ்காட்லாந்து) ரேவன்கள் ஓநாய்க் கூட்டத்திற்கு முன்பாகப் பறந்து சென்று இரையைக் காட்டிக் கொடுப்பதும், ஓநாய்கள் இரையைக் கொன்றதும், கூட்டமாக வந்து இரையில் பங்கு போட்டு உண்பதும் வழக்கம். (சமீபத்தில் இணையத்தில் இரண்டு அண்டங்காக்கைகள் ஒரு சாதாக் காக்கையை கைமா பண்ணுவதைப் படம் பிடித்துப் போட்டிருந்ததைப் பார்த்தேன்)!
9. காலத்திற்கு ஏற்றவாரு மாறும் திறமை (லண்டனில் ஒரு ஓட்டல் வெளியே இருக்கும் குப்பைப் பையை ஒட்டை போட்டு, அதில் இருந்த மாமிசத் துண்டுகளை தனியாக கொத்தி எடுத்துப் போகிறது! மிருகக் காட்சி சாலையில் எப்போது உணவளிப்பார்கள் என்று காத்திருந்து வந்து கொத்திப் போகிறது!)
10. காட்டில் தனியாக தீனி கிடைத்தாலும், கூச்சல் போட்டு மற்ற காக்கைகளையும் சாப்பிடக் கூப்பிடுகிறது ('இது ஏன் எனப் புரியவில்லை' என்றார் வர்ணனையாளர்)

பனிக்கரடிகள்
1. உண்மையிலேயே ரொம்பப் பெரிசு! (ஓகே சோப் விளம்பரம் ஞாபகம் வருதா?)
2. வளர்ந்த கரடிகள் அண்டங்காக்கைகளுக்கு நேர் எதிர் - சேர்ந்து இருப்பதில்லை; தப்பித் தவறிப் பார்த்துக் கொண்டால் சண்டைதான்!
3. நன்றாக வேட்டை ஆடுகிறது (நிகழ்சியில் ஒரு கன்று தன்னையும் விட கனமான ஒரு திமிங்கிலக் குட்டியை எப்படி வேட்டையாடுகிறது என்று காட்டினார்கள்; வேட்டையாடி அதை சாப்பிட ஆரம்பித்ததும், ஒரு பெரிய கரடி வந்துவிட இரையை விட்டுவிட்டு அந்த இளம் கரடி சோகமாய்ப் போனது பாவமாய் இருந்தது - காக்கைக்கு நேர் எதிர்)
4. குட்டிகளை அம்மாக் கரடி நன்கு பார்த்து வளர்க்கிறது (கோக்க கோலா எல்லாம் கொடுக்கலை!)
5. நன்கு மோப்பம் பிடிக்கிறது (நிகழ்ச்சியில் திமிங்கில வாசனையையும், வால்ரஸ் வாசனையையும் நன்கு மோப்பமிட்டு வேட்டையாடுவதைக் காட்டினார்கள். இருபது முப்பது கரடிகள் புகுந்து விளையாடி ஒரு வால்ரஸ் கூட்டத்தையே துவம்சம் செய்தன. வெள்ளைக் கரடிகள் மேல் அத்தனை வால்ரஸ் இரத்தம் - மனது ரொம்பக் கஷ்டப்பட்டது!)
6. அத்தனை பெரிய உடலை வைத்துக் கொண்டும், சர்வ சாதாரணமாக பனிப் பாளத்தில் நடக்கிறது - உடைந்து விடுமோ என்று எனக்குத் தோன்றினாலும், அதற்கு கவலையே இல்லை.
7. கரடிகளை கிட்டத்தில் படம் எடுக்க வேண்டும் என்று ஒரு இரும்புக் கூண்டுக்குள் ஒருவர் காமெராவுடன் உட்கார்ந்து கொள்ள, கரடிகள் அந்தக் கூண்டை போட்டு உருட்டியது (கூண்டுக்குள் இரை இருக்கிறதே!) எனக்கு பயமாய் இருந்தது.

சதா போரையும், உயிர் இழப்பையும் பார்த்துக் கொண்டிருப்பதற்கு ஒரு மாறுதலாய் இருந்தன இவ்விரு நிகழ்சிகளும். அதிலும் கூட வேட்டையாடுவதைப் பார்த்ததுதான் கொஞ்சம் வேதனை.

திங்கள், ஜனவரி 09, 2006

வாலில் தீ!

'நல்லது உரைத்தாய், நம்பி! இவன் நவையே செய்தான் ஆனாலும்,
கொல்லல் பழுதே' - 'போய் அவரைக் கூறிக் கொணர்தி கடிது' என்னா,
'தொல்லை வாலை மூலம் அறச் சுட்டு, நகரைச் சூழ்போக்கி,
எல்லை கடக்க விடுமின்கள்' என்றான்; நின்றார் இரைத்து எழுந்தார்.

அனுமன் வாலைச் எரியூட்டுமாறு இராவணன் ஆணையிட்டது - கம்ப ராமாயணம், சுந்தர காண்டம். இதன் பலனை அன்று இலங்கை அனுபவித்தது. லூசியானோ மாரெஸ்க்கு கம்பராமாயணம் தெரியததால் தன் வீட்டையும் பொருட்களையும் இழக்க வேண்டிய துர்பாக்கியம்!

நியூமெக்ஸிகோவில் தன் வீட்டில் பிடித்த எலியை கொல்ல வெளியே எரிந்து கொண்டிருந்த தீயில் தூக்கியெறிய, அது எரிந்து கொண்டே திரும்ப வீட்டிற்குள் ஓடி வந்து ஓளிய, வீடு தீப்பற்றி எல்லாப் பொருளும் நஷ்டம்! தேவையா?!

ஞாயிறு, ஜனவரி 08, 2006

எதற்காக கொடுக்க வேண்டும் கிஸ்தி?


இந்த வருடம் (2006) ஜனவரியிலிருந்து நியூயார்க் மாநிலத்தில் ஒரு சிறு சட்ட திருத்தம் - மாநில வருமான வரிவிதிப்பில்.  செப்டம்பர் 11, 2001க்குப் பிறகு நியூயார்க் நகரத்திலிருந்த பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் பாதுகாப்பு கருதி தங்கள் அலுவலகப் பிரிவுகளை அண்டை மாநிலங்களான நியூஜெர்ஸிக்கும், கன்னக்டிகட்டுக்கும் பிரித்து அனுப்பின.  நியூயார்க் நகரத்தில் வேலை பார்க்கும் பலரும் (முக்கியமாக உயர் பதவியிலிருப்பவர்கள்) அருகிலிருக்கும் இவ்விரு மாநிலங்களிலும் தான் குடியிருக்கிறார்கள்.  முன்பெல்லாம் அவர்கள் இரு மாநிலங்களின் வருமான வரியும் கட்ட வேண்டியிருந்தது (வசிக்கும் மாநிலம், பணி புரியும் மாநிலம்).  இப்போது அவர்கள் வசிக்கும் மாநிலத்திலேயே அலுவலகப் பிரிவுகள் வந்து விட்டதால் வேலைக்காக நியூயார்க் நகரம் வருவது குறைந்து போய்விட்டது.  பணிக்காக வாரம் ஒரு முறை நியூயார்க் நகரம் வந்து போனாலும், அவர்களின் பிரதான அலுவலகம் அவர்கள் வசிக்கும் மாநிலத்திலேயே இருந்து விட்டதால் வரியும் இல்லை

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக நியூயார்க் மாநிலத்தின் வருமான வரி எதிர்பார்த்ததை விடக் குறைந்து போய்விட்டது. நிதிப் பற்றாக்குறையை சரிசெய்ய இந்த வருடம் முதல் நியூயார்க் மாநிலம் தீர்மானித்தது.  வேற்று மாநிலங்களில் பணி புரிபவர்கள் தங்கள் வேலை நிமித்தமாக வருடத்திற்கு பதிநான்கு நாட்களுக்கு மேல் நியூயார்க் வந்தால் வருமான வரி செலுத்த வேண்டும் என்று சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.  இந்த 'வேலை நாள்' கணக்கிற்கு, ஒரு நாள் முழுதும் நியூயார்க்கில் இருக்க வேண்டும் என்றில்லை - ஒரு மணி நேரம் போதும்!  பயிற்சி, கல்வி என்பது போன்ற விதிவிலக்கு இருந்தாலும், பெரும்பான்மையானவர்கள் இந்த பதிநான்கு நாள் இலக்கை எட்டிவிடுவார்கள், வருமானம் பெருகும் என்று நியூயார்க் மாநில அரசு நினைக்கின்றது.

பாதுகாப்பு செலவுகள் என்றெல்லாம் கூறப்படும் காரணங்களை கேட்டு, மேலோட்டமாகப் பார்த்தால் இது சரி என்று தோன்றினாலும், இதே போன்ற முடிவுகளை மற்ற மாநிலங்களும், ஏன் மற்ற நாடுகளும் எடுத்தால் என்னவாகும்?  அமெரிக்காவில் நிறைய இடங்களில் வசிப்பது ஒரு மாநிலம், பணி புரிவது ஒரு மாநிலம் என்று இருக்கிறது.  இதைத் தவிர்த்து பணிக்காக வேறு மாநிலங்களுக்குப் போவது என்பதும் மிக அதிகம்.  இப்படி ஒவ்வொரு மாநிலமும் வரி விதித்தால், வரியும் அதிகம், இதை மேற்பார்வை பார்த்து கணக்கு வைத்துக்கொள்ள வேண்டிய பணியும், இடைஞ்சல்களும் அதிகம்.

இதனால் உத்தியோக நிமித்த பயணங்கள் குறையும், வர்த்தகம் குறையும்.  மொத்தத்தில் இந்த மாதிரி வரி விதிப்பினால் வரும் வருமானத்தை விட, பயணக் குறைவால் ஏற்படும் வருமான இழப்பு அதிகம்.  இதைப் பார்த்து விட்டு நாடுகளும் இந்த மாதிரி முடிவெடுத்தால் குழப்பமும், கோபமும் தான் வரும். உதாரணத்திற்கு இந்தியாவிற்கு வரும் மேல்நாட்டு அதிகாரிகள் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது முக்கியமாக மென் பொருள் வியாபார நிறுவனங்களினால்.  இந்தியாவும், இம்மாதிரி பணி நிமித்தமாக இந்தியா வரும் அதிகாரிகள், இந்தியாவில் தங்கும் நாட்களுக்கு வரும் சம்பளத்தில் இந்திய வருமான வரி கட்ட வேண்டும் என்று கூறினால்?

வரும் வருமானத்தை வைத்து நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க முயற்சிப்பதை விடுத்து இம்மாதிரி புது வரிகள் விபரீதமான நினைப்பையும், விளைவுகளையும்தான் உருவாக்கும்.