செவ்வாய், டிசம்பர் 26, 2006

ஒரு இரயில் பயணத்தில் - 2

"சும்மா சொல்லக்கூடாது, இந்த குளிர் விடுமுறையும், சின்ன வயசில நாம பள்ளியிலே படிக்கறச்சே அனுபவிச்ச கோடை விடுமுறை மாதிரி நல்லாவே இருக்கு"

"ஆமா. ரயில்ல உட்கார இடம் கிடைக்குது; அலுவலகத்தில ஆள் இல்ல. என்ன எக்கச்சக்கமா கோட், மப்ளர், ஸ்வெட்டர்ன்னு ஒரு குட்டி பீரோ துணி போட்டுக்கிட்டு போக வேண்டியிருக்கு"

"ரொம்ப அலுத்துக்காதே. வெள்ளிக்கிழமை மீட்டிங்ல என்ன சொன்னாங்க?"

"ஆங் - சொல்ல மறந்துட்டேனே. இந்த வார மீட்டிங்ல பாதுஷா சூப்பர்!"

"என்ன சொன்னாங்கன்னுதானே கேட்டேன்; என்ன மென்னாங்கன்னா கேட்டேன்? அது சரி உனக்கு சாப்பாட்டப் பத்தி யோசிக்காம இருக்க முடியாதே. டோனட்ன்னு சொல்லேன்; பாதுஷாவாம்!"

"இரண்டையும் ஒரே மாதிரி தான் செய்யறாங்க. என்ன பாதுஷா கொஞ்சம் வெயிட்டா இருக்கும்; டோனட் கொஞ்சம் லேசு. எதோ நட் போல்ட திங்கறா மாதிரி சொல்ல வேண்டாமேன்னு பாதுஷான்னு தமிழ்ல சொல்றேன். மீட்டிங்ல ஒண்ணும் பெரிசா சொல்லல. வழக்கம் போல 'ஹாப்பி ஹாலிடேஸ்; சீ யூ இன் த நியூ இயர்' அப்படின்னு சொன்னாங்க. ஏன் கேக்கற?"

"இல்ல செலவக் குறைக்க நம்ம மாதிரி கான்ட்ராக்டருக்கெல்லாம் கட்டாய விடுமுறை தரப் போறாங்கன்னு ஒரு வதந்தி இருந்தது"

"என்னடா அக்குறும்பு. இவங்களுக்குத்தானே பண்டிகை; நமக்கு இல்லையே? நமக்கு ஆபீஸ் வந்தாத்தானே துட்டு?"

"அதான் தெரியுமே. ஆபீஸ்ல இவங்க ஆளே இருக்கறதில்லே; நம்மை மாதிரி கான்ட்ராக்டர் வேலை செய்யாம சம்பளம் வாங்கறதப் பார்க்க பொறுக்கலே!"

"அவ்வளவு சந்தேகமா இருந்தா இவங்கள்ல நாலு பேர் வேலைக்கு வரட்டுமே. நானா வேணாங்கறேன்?"

"சரி அதை விடு. இந்த வருடம் இந்த மாதிரி ஏதும் பண்ணலை. அடுத்த வருடம் நாம் இங்க இருக்கமோ இல்லையோ!"

"இன்னுமொரு முக்கியமான விஷயம். அடுத்த மீட்டிங்ல இருந்து 'சுகர் ப்ரீ' சாமானும் இருக்குமாம்! நம்ம டிப்பார்ட்மென்ட்ல புதுசா வந்திருக்கற மக்கள்ல யாருக்கோ சுகர் இருக்காம். கேட்டவுடனே இனிமே பத்திய மீட்டிங்தானோன்னு கொஞ்சம் பயந்துட்டேன். அதனாலே நைசா விசாரிச்சுட்டேன்; நல்ல வேளை சக்கரை சாமானும் உண்டு."

"என்னதான் இருந்தாலும் இந்த ஊரிலே எல்லாரையும் அனுசரிச்சுத்தான் போறாங்க. மற்றவங்களோட சாப்பாட்டுப் பிரச்சனைகளையும் யோசிக்கிறாங்க. அப்படி இருக்கறப்பவே, காப்பியை மேல கொட்டிக்கிட்டு கம்பெனி மேல கேஸ் போடறாங்க"

"கேஸ்னு சொன்னதும் நினைவுக்கு வருது. இங்கிலாந்துல ஒரு வேர்ஹவுஸ்ல வேல செஞ்ச மனுஷன் தலையில அடிபட்டிடுச்சாம். அதுக்கப்புறம் அந்தாளு பலான படம் பார்க்கறது, பொண்ணுங்கள டாவடிக்கறதுன்னு ஆரம்பிச்சுட்டானாம். இந்த மாதிரி பண்ணத்துக்கு காரணமே தலைல அடிபட்டதுதான், அதனால கம்பெனிதான் நஷ்ட ஈடு கொடுக்கணும்னு கேசும் போட்டு ஜெயிச்சுட்டானாம்"

"அடப்பாவி. இவன் டாவடிக்கறத்துக்கு இவன் காரணம் இல்லையா? இது மட்டும் நம்மூர் அரசியல் வாதிகளுக்கு தெரிஞ்சது, போச்சு. பண்ற அத்தனை அயோக்கியத்தனத்துக்கும் காரணம் நான் கீழ விழுந்து அடி பட்டுக்கிட்டதுதான் காரணம்னு சொல்லி தப்பிச்சுக்குவாங்க"

"ஏன் அரசியல்வாதிகளை மட்டும் சொல்ற. வீட்டில சின்னப்பசங்கள்ல இருந்து கிழங்கட்டை வரை எல்லோரும் ‘தலைல இடிச்சுக்கிட்டேன்; அதனால நான் காரணம் இல்லை’ன்னு சொல்லிக்கிட்டு எல்லா விதமான தப்பும் பண்ணுவாங்க"

"சரி அதை விடு. சுக்வீந்தர ஏன் பிராஜக்ட்லேர்ந்து எடுத்துட்டாங்க? இத்தனைக்கும் அவனுக்கு இங்க்லீஷ் நல்லா பேச/எழுத வரும்l தவிர அவனுக்கு ரிகொயர்மென்ட்டெல்லாம் நல்லாப் புரியுமே?"

"ஆனா கோடெழுத வரலையே? கோடும் எழுதாம, நல்லாவும் பேசினா இவனுக்கு கோடெழுத தெரியலங்கறது மத்தவங்களுக்கு நல்லா தெரிஞ்சுடுதே! நம்ம இர்பான் பதான் மாதிரி தான். போலிங் போட டீம்ல எடுத்தா 'நான் நல்லா பேட் பண்றேன்' அப்படின்னு சொன்னா வச்சுக்குவாங்களா?"

"சரி. ஸ்டேஷன் வந்தாச்சு, இறங்கலாம் வா."

4 கருத்துகள்:

சேதுக்கரசி சொன்னது…

//"என்னடா அக்குறும்பு. இவங்களுக்குத்தானே பண்டிகை; நமக்கு இல்லையே? நமக்கு ஆபீஸ் வந்தாத்தானே துட்டு?"//

:-) தொடராவே எழுத ஆரம்பிச்சிட்டீங்க போலிருக்கு.. நல்லா இருக்கு.

ரங்கா - Ranga சொன்னது…

ஆமாங்க சேதுக்கரசி. தொடராக எழுதத்தான் எண்ணம். பாராட்டுக்கு நன்றி.

ரங்கா.

jeevagv சொன்னது…

படிக்க சுவையா இருந்தது, புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ரங்கா - Ranga சொன்னது…

ஜீவா,

பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ரங்கா.