புதன், நவம்பர் 29, 2006

தேநீர் – 11

தொழிற்சாலையில் இருந்து மொத்த வினியோகஸ்தர்களுக்கு பொட்டலங்களை அனுப்புவதும் ஒரு கலை தான். இதில் இருப்பவர்களை தூங்க விடாமல் பயமுறுத்தும் விஷயம் ஒன்றுதான்: போக்குவரத்து நிறுத்தம் (TRANSPORT STRIKE). இதைத் தவிர இவர்கள் கவலைப்படுவது பொட்டல இருப்புக்கு மட்டும்தான். ஆனால் முதன் முதலாக இந்தப் பிரிவில் தொழில் கற்ற பொழுது நான் நிரம்பவும் யோசித்து ஆச்சரியமாகப் பார்த்தது இவர்கள் ஒரு வண்டிக்கு (சின்ன லாரி, டிரக், பெரிய லாரி என்று பல வகை உண்டு) தகுந்த மாதிரி எத்தனை விதமான பொட்டலங்களை அனுப்ப முடியும் என்று வெகு எளிதாக சொன்னதோடு மட்டுமல்லாமல் எந்த வழியாகப் போனால் அதிகமான மொத்த வினியோகஸ்தர்களை குறைந்த தூரத்தில், சீக்கிரமாக அடையலாம் என்றும் சொன்னதுதான். கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்.

ஆலையில் பொட்டலங்களை அட்டை டப்பாவில் போட்டுத்தான் (CARTONS) அனுப்புவார்கள். இந்த அட்டை டப்பாக்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்காது – உயரம், அகலம், நீளம் எல்லாமே வெவ்வேறு வகை. ஒவ்வொரு வண்டிக்கும் சில குணங்கள் உண்டு. இத்தனை உயரத்துக்கு மேல் போகக் கூடாது; இத்தனை எடைக்கு மேல் போகக் கூடாது என்றெல்லாம் விதிகள் உண்டு. ஒரு மொத்த வினியொகஸ்தர் கேட்கும் வகைகள் இந்தமாதிரி அட்டை டப்பா கணக்கில் தான் இருக்கும். இதில் பெரிய வினியொகஸ்தர்கள் சமயத்தில் ஒரு லாரி டீ கேட்பார்கள். அது ரொம்ப சுலபம்; ஏற்றி அனுப்ப வேண்டியதுதான். ஆனால் அதிகபட்சமான ‘தேவை சீட்டுகள்’ (DEMAND SHEETS) கால் வண்டி, அரை வண்டிதான் வரும். குறைந்த செலவில் இதை அனுப்ப வேண்டுமென்றால், இரண்டு, மூன்று வினியொகஸ்தர்களுக்கான டீயை ஒரு பெரிய வண்டியில் அனுப்பி, ஒவ்வொரு இடத்திலும் அவர்களுக்கு வேண்டியதை இறக்கிவிடுமாறு பார்த்துக் கொள்வது தான்.

கேட்க எளிதாக இருந்தாலும், செய்வது அவ்வளவு சுலபமாக இதை செய்ய முடியாது. எந்த வினியொகஸ்தர்களுக்கு முதலில் அனுப்புவது, இரண்டாவது எங்கே? போன்ற கேள்விகளுக்கு விடை தேவை. இதைப் பொறுத்து வண்ண்டியில் டீயை ஏற்ற வேண்டும். கடைசியாக நிறுத்தும் இடத்திற்கான பொட்டலங்களை முதலில் ஏற்ற வேண்டும். அப்போதுதான் முதல் இடத்தில் உள்ள பொட்டலங்களை இலகுவாக இறக்கலாம். ஓவ்வொரு இடத்திலும், தேவையில்லாமல் அட்டைப் பெட்டிகளை இறக்கி ஏற்றினால் செலவும் அதிகம், நேரமும் விரயம். டீசல் விற்ற (விற்கிற) விலையில் செல்லும் வழியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம், செலவைக் குறைக்க.

இதில் அத்தனை வினியோகஸ்தர்களின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாது. எதையாவது குறைக்க நேரிடும். அவர்கள் கேட்கின்ற வகை இருப்பில் இருக்காது; இரண்டு நாள் கழித்துத்தான் பொட்டலம் போடுவதாக திட்டம் இருக்கும். அல்லது வண்டியின் உயரத்தாலோ, அல்லது எடையாலோ சில டப்பாக்களை ஏற்ற முடியாமல் போகலாம். எதை விடுப்பது அல்லது எடுப்பது என்ற முடிவும் அவ்வளவு சுலபமானதல்ல. விற்பனைப் பிரிவைப் பொறுத்தவரை எதையுமே விட முடியாது. டீ இருப்பில்லை என்று சொல்வது பொட்டலப் பிரிவுக்கு பிடிக்காது. இந்த அனுப்பும் பிரிவில் இருப்பவர்களுக்கு உயரத்தாலோ, எடையாலோ அனுப்ப முடியவில்லை என்று சொல்லப் பிடிக்காது. காரணம் அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு தன்மானப் பிரச்சனை - வண்டியைத் தேர்வு செய்வது அவர்கள் கையில்தானே இருக்கிறது. மற்றவர்கள் அவர்களைக் கேட்கலாமே 'ஏன் பெரிய வண்டியை எடுக்கவில்லை?' என்று! ஆகையால் வண்டியின் அளவு சரியில்லை என்று சொல்ல மாட்டார்கள்.

இத்தனையும் ஒரு மாதிரி சமாளித்து அனுப்ப நினைக்கையில் அவர்களுக்கு அதிகம் வெறுப்பேற்றும் விஷயம் - ஆலையில் உள்ள கணக்கர்கள். அவர்கள் இந்தப் பயணத்துக்கு தேவையான சீட்டு மற்றும் இதர ஆவணங்களைப் பெற்றுத்தான் வண்டியை அனுப்ப வேண்டும். இல்லையென்றால் ஏதாவதொரு செக் போஸ்டில் வண்டியை நிறுத்திவிடுவார்கள்; சேதம் அதிகமாகி விடும். வண்டியில் எந்த டப்பாவை ஏற்றுவது என்ற முடிவை சரியான நேரத்துக்குள் தெரிவிக்கவில்லை என்றால் கணக்கர்கள் வீட்டுக்கு சென்றுவிட வாய்ப்பு உண்டு. இதுவும் ஒரு பிரச்சனை.

'ஏன் வண்டி வரவில்லை' என்று தொலைபேசியில் கத்தும் விற்பனைப் பிரிவு, 'வண்டியில் ஏற்ற சில வகைகள் இன்னமும் தயாரில்லை' என்று சொல்லும் பொட்டலப் பிரிவு, 'வண்டியில் என்ன ஏற்றப்போகிறாய்? நான் வீட்டுக்குப் போக வேண்டாமா?' என்று கோபிக்கும் கணக்கர், இவர்களுக்கிடையே, வண்டியின் உயரம்/கொள்ளளவு பற்றியும், போகும் வழி பற்றியும் யோசித்து 95% சரியான சமயத்திற்குள் டீயை அனுப்பும் இந்தப் பிரிவில் உள்ளவர்களையும் நான் மதிப்போடுதான் பார்த்தேன்!

முந்தைய பதிவுகள்
தேநீர் – 10
தேநீர் – 9
தேநீர் – 8
தேநீர் – 7
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

திங்கள், நவம்பர் 27, 2006

தேநீர் – 10

பொட்டலம் போடுவதிலேயே இவ்வளவு விஷயம் இருக்கிறதே என்று நினைத்தீர்களானால், பொட்டலம்போடுவதற்கான திட்டம் தீட்டுவது இதை விட சிக்கலானது. முதலில் இருப்பையும் (STOCK), எதிர்பார்ப்பையும் (DEMAND) சேர்க்க வேன்டும். இது திருவிளையாடல் தருமி கேட்டு (சேராதிருப்பது?) இறைவன் சொல்லும் பதிலைப் (அறிவும் பணமும்) போன்றது – இரண்டும் சேராது!

தொழிற்சாலையில் டீத்தூள்களை மூன்று வித நிலைகளில் வகைப் படுத்துவார்கள். முதலாவது கொள்முதல் செய்த டீ (UNBLENDED); இரண்டாவது கலவை (BLENDED); மூன்றாவது பொட்டலம் (PACKED). உற்பத்தி சங்கிலியில் (PROCESS CHAIN) நான்கு பிரிவுகள் – கொள்முதல் பிரிவு (PURCHASE), கலவை (BLENDING), பொட்டலம் (PACKING), அனுப்பும் பிரிவு (DISPATCH OR LOGISTICS).

 கொள்முதல் டீ இருப்புக்கு, கொள்முதல் பிரிவே பொறுப்பு.
 கலவைப் பிரிவின் கடமை, கலவையின் இருப்பு நிலைமை.
 பொட்டலங்களின் இருப்பு நிலையே, ப்ளோர் சூப்பர்வைசரின் தலையே.

(“அப்பா என்ன ஒரு சந்தம்! எங்கேயோ போயிட்டடா ரங்கா!!” என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது)

எல்லோரையும் திருப்திப் படுத்த யாராலும் முடியாது. ஒவ்வொரு பிரிவுக்கும் இலக்குகள் உண்டு – தங்கள் பிரிவின் செலவைக் குறைப்பது இதில் முக்கியமானது. உதாரணமாக பொட்டலங்களை அனுப்பும் பிரிவில் (LOGISTICS) அவர்கள் எத்தனை வேகமாக அனுப்புகிறார்கள் என்பது ஒரு முக்கியமான இலக்கு. ஒரு ‘தேவையை’ (DEMAND) பூர்த்தி செய்ய அவர்களுக்கு ‘தேவைச் சீட்டில்’ (DEMAND SHEET) இருக்கும் அத்தனை விதமான பொட்டலங்களும், தயாராக இருந்தால் தான் சீக்கிரம் அனுப்ப முடியும். இந்த தேவை சீட்டில் எந்த விதமான பொட்டலங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு ஆலையில் ஐம்பதுக்கும் மேலான பொட்டல வகைகள் உண்டு. அனைத்துமே தயாராக இருப்பில் இருக்காது.

ஒரு பேச்சுக்காக பொட்டலப் பிரிவு (ப்ளோர் சூப்பர்வைசர் - அவர்தானே பொட்டல இருப்புக்கு பொறுப்பு!) இதற்கு ஒத்துக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதை செயலாக்குவதற்கு, அவருக்கு கலவைப் பிரிவின் தயவு தேவை. பொட்டலங்கள் தயாராவதற்கு ஒரு நாள் முன்பாக அவருக்கு அந்தக் கலவை வேண்டும் (பொட்டலம் போடுவதற்கு நேரம் வேண்டுமே). இதற்கு கலவைப் பிரிவு ஒத்துக்கொள்ள வேண்டுமானால் அவர்களுக்கு கொள்முதல் டீத்தூள் இன்னமும் முன்னதாக வேண்டும். அதற்கு வாங்கும் பிரிவு ஒத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஏலம் தினமும் நடக்காது – வாரத்துக்கு ஒரு முறை (அல்லது இரண்டு முறை). ஏலத்தில் இன்று எடுத்தாலும், டீத் தூள் ஆலைக்கு வருவதற்கு நேரம் ஆகும். இது தவிர ஒவ்வொரு பிரிவிலும் உள்ள சரக்கின் விலையின் பொறுப்பு அந்தந்தப் பிரிவின் இலக்கை பாதிக்கும் – இலக்கைத் தாண்டி அதிகமாக இருப்பு வைத்துக் கொள்ளக் கூடாது. எப்படி இத்தனை பிரிவுகளையும் ஒருங்கிணைத்து செல்வது? மொத்தத்தில் ஒரு குழாயடி நிலைமை – அதே போல சண்டைகளும் உண்டு. ஓரே வித்தியாசம்: அனைவரும் கொஞ்சம் பதவிசாக, நாசூக்காக திட்டுவார்கள்.

ஒவ்வொரு பிரிவிலும், அந்தப் பிரிவின் மூலப் பொருள் இருப்பு நிலை, பிரிவின் உற்பத்தி நேரம், அந்தப் பிரிவின் இறுதிப் பொருளின் இருப்பு நிலை மதிப்பீடு, எல்லாவற்றையும் நன்கு புரிந்து கொண்டு, அந்த அந்தப் பிரிவின் வேலையை திட்டமாகத் தீட்டுவது ஒரு நிரந்தர புலி-ஆடு-புல்லுக்கட்டு விளையாட்டுதான். ஆலையின் மேலாண்மையில் இருப்பவருக்கு வரும் தலைவலி பற்றி சொல்லவே வேண்டாம். இந்தப் பிரிவுகளில் இந்த மாதிரி திட்டம் தீட்டுபவர்களைப் பார்த்தால் ஒரு தனி விதமான மதிப்பு. எப்படித்தான் பைத்தியம் பிடிக்காமல், இரத்த அழுத்தம், மாரடைப்பு என்றெல்லாம் வராமல் இத்தனை காலம் இந்த வேலையை செய்கிறார்கள் என்று எனக்கு மிகுந்த வியப்பு கலந்த மதிப்பு. எந்த போதி மரத்துக்கும் போகாமல் அந்த சிறு வயதில் (இப்போது நான் பெரிசு ; அப்போது நான் சிறுசுதானே) எனக்கு வந்த ஞானம்: “வாழ்க்கையில் பிரச்சனைகளுக்காக கவலைப்பட்டு வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் இழப்பு நிச்சயம்” என்பதுதான்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 9
தேநீர் – 8
தேநீர் – 7
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

வெள்ளி, நவம்பர் 24, 2006

தேநீர் – 9

பொட்டலம் எடையில் விற்றாலும், பெரும்பான்மையான பொட்டல இயந்திரங்களில் டீ கொள்ளளவைக் கொண்டு நிரப்பப்படும். தரத்தை (முக்கியமாக சரியான எடை இருக்கிறதா என்று பார்க்க) கண்காணிக்க கட்டப்பட்ட பொட்டலங்களை மாதிரிக்கு எடுத்து (ஒரு மணிக்கு ஐந்து என்பது போல) எடை பார்த்து குறிப்பெடுப்பார்கள். இந்த மாதிரி வேலையை நானும் செய்திருக்கிறேன்! ஒரு தொழிற்சாலை முழுதும் நடந்து வந்து, ஒவ்வொரு இயந்திரமாய்ப் போய் மாதிரி எடை பார்ப்பது - அதுவும் ஒரு 8 மணி நேர ஷிப்டில் செய்வது என்றால் வெறுத்து விடும் (எனக்கு அப்போது 23 வயது). எடையைத் தவிர, பொட்டலம் பிய்ந்து போகாமல் சரியாக இருக்கிறதா, பசை வழிந்து பொட்டலத்தை நாசமாக்காமல் இருக்கிறதா, மற்றும் பொட்டலம் செய்த தேதி/மாதம்/வருடம் ஒழுங்காகப் பதிவாயிருக்கிறதா என்றும் சோதிக்க வேண்டும். இயந்திரத்தை இயக்குபவர்கள் என்னை திருவிளையாடல் தருமி நக்கீரரைப் பார்ப்பது போல வேறு பார்ப்பார்கள்; 'வந்துவிட்டான் குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் பிரகஸ்பதி' என்று கண்ணாலேயே சொல்வார்கள்.

இந்த மாதிரி சரியாக கட்டப்பட்ட பொட்டலங்களை ஒரு அட்டை டப்பாவில் (CARTON என்று சொல்வார்கள்) போட்டு, ஒரு காகித டேப்பால் ஒட்டி அருகிலுள்ள கன்வேயர் பெல்ட்டில் போட்டு அனுப்பி விடுவார்கள். ஒரு ஷிப்டுக்கு இவ்வளவு பொட்டலம் போட்டால் இத்தனை பணம்; அதற்கு மேல் போனால் இவ்வளவு அதிகப் பணம் என்றெல்லாம் ஊதிய நிர்ணயம் உண்டு. இந்த ஊதிய கணக்கு விஷயம் அவ்வளவு நேரானதல்ல. யூனியன் ஒப்பந்தத்தைப் புரிந்து கொள்ளவே ஒரு அசாத்திய திறமை வேண்டும். சில வகைகளுக்கு மூன்று ஷிப்டையும் சேர்த்து ஊதியம் நிர்ணயிப்பார்கள். சில இயந்திரங்களில் முதல் இரண்டு ஷிப்டுகளிலேயே மொத்த பொட்டலமும் கட்டப்பட்டு, மூன்றாவது ஷிப்டில் வருபவர்கள் சீட்டாடுவதை நான் பார்த்திருக்கிறேன். இப்போது எப்படி என்று தெரியாது!

இந்த தர நிர்ணயம் செய்பவரின் மதிப்பீடு ஊதிய நிர்ணயத்திற்கும் எடுத்துக் கொள்வதால், இயந்திரத்தை இயக்குபவர்களுக்கு இவர்களைக் கண்டாலே பிடிக்காது. அனேகமாக அத்தனை இயந்திர இயக்குனர்களும் பெங்காலியைத் தவிர வேறு எதுவும் பேச மாட்டார்கள். சொல்ப பேர் ஹிந்தி பேசுவார்கள். எனக்கு வங்காள மொழி தெரியாது; ஹிந்தி அரை குறை.

தமிழ்நாட்டில் பள்ளியில் படிக்கும் போது ஹிந்தி பிரசார் சபா மூலமாக தேர்வு எழுதியது தான். படத்தைப் பார்த்து 'மேஜ் பர் க்யா ஹை? மேஜ் பர் தவாத் ஹை' என்று சொல்லத் தெரியும்; பேசியதில்லை. கொஞ்சம் முயற்சி செய்தால் தட்டுத் தடுமாறி தப்பும் தவறுமாய் ‘ஆம் கே பேடு பர் கும்ஹடே’ கதையை சொல்லத் தெரியும் (ஒரு வழிப்போக்கன், மாமரத்தடில் படுத்துக் கொண்டு ‘இத்தனை பெரிய மாமரத்தில் சிறு மாங்காயைக் காய்க்க வைத்துவிட்டு, கீழே இருக்கும் சிறு கொடியில் பெரிய பூசணிக்காயை வைத்தானே இறைவன்’ என்று கேலி செய்வான். ஒரு மாங்காய் அவன் தலையில் விழும். ‘இறைவன் எதையும் தெரிந்து தான் செய்திருக்கிறான்; பூசணிக்காய் விழுந்தால் என் தலை என்னவாயிருக்கும்?’ என்று யோசித்து அவன் ஞானம் பெறுவான்). வானொலியில் கிரிக்கெட் வர்ணனையில் 'அக்லி கேந், டப்பா கானே கே பாத்', பின்பு தொலைக்காட்சியில் ராமாயணம் காண்பிக்கையில் அதில் வரும் 'பரந்து, கிந்து, விராஜியே' - இதெல்லாம் தெரியும்.

இதையெல்லாம் வைத்துக் கொண்டு பார்வையாலேயே திட்டும் இவர்களிடம் - அதுவும் மூன்றாவது ஷிப்டில், நடு ராத்திரியில் - என்ன பேசுவது? இந்த இரண்டு வார தர நிர்ணயப் பணி முடிந்ததும் 'அப்பாடா - விடுதலை' என்று இருந்தது.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 8
தேநீர் – 7
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

வியாழன், நவம்பர் 23, 2006

தேநீர் – 8

அடுத்ததாக CTC வகை. CTC வகைகள் இரண்டு வகைகளிலும் - பாப்புலர், பிரீமியம் – வரும். இந்த டீத் தூள்களை உன்னிப்பாகப் பார்த்தால் ஒரு விதமான உருண்டை போலத் தெரியும். இதை ஒரு ஊசியால் நெம்பினால் நீளமான இலை போல விரியும். அழுத்தினால் இவைகள் பொடியாக வாய்ப்பு உண்டு. இவற்றை பிளாஸ்டிக் பைகளில் பொட்டலம் போடுவது சுலபமானது. காகிதப் பொட்டலமும் போடலாம் – பொட்டலம் போடும் இயந்திரம் உயர் தரமானதாக இருந்தால். பிளாஸ்டிக் பொட்டலம் போடும் மிஷினையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பிளாஸ்டிக் தாள் ஒரு உருளையாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இயந்திரத்தின் மேலே டீத்தூள் இருக்கும். இயங்கும் போது, பிளாஸ்டிக் தாளை ஒரு பை போல மடித்து, டீத்தூளை அளந்து கொட்டி, பின் சூடான கம்பியின் மூலம் பிளாஸ்டிக் பையை உருக்கி ஒட்டி பையை அனுப்பும். ஆங்கிலத்தில் இதை HEAT SEALING என்று சொல்வார்கள். இதிலும் வெப்பம் இருந்தாலும், இயந்திர அமைப்பினால் டீத்தூளுக்கு பாதிப்பு இருக்காது. இந்தப் பிளாஸ்டிக் பைகள் ஒரு மாலை போல வந்து கொண்டிருக்கும். பத்து, பத்தாக எண்ணி, இயந்திரத்தை இயக்குபவர்கள் அதை பிரித்து, காகித அட்டை டப்பாக்களில் போட்டு மூடி அனுப்புவார்கள்.

முழு இலை தேயிலை வகைகள் விலை அதிகம். அவற்றின் தனி சிறப்பு மணம்தான். ஆதலால் இந்த வகைகளை காற்றுப் புகாத வகையிலேயே பொட்டலம் போடுவார்கள். அது மர டப்பாவோ அல்லது தகர டப்பாவோ – உள்ளே காற்று செல்லக் கூடாது. காகிதப் பொட்டலங்களும் உண்டு. இது சாதாரணக் காகிதமாய் இருக்காது – அலுமினியப் பூச்சுடன் கூடிய உயர் வகைக் காகிதம். காகித அட்டையின் தரமும் உயர்வாகவே இருக்கும். இந்த டப்பா வகைகள் ரொம்பவும் அதிகம் செய்ய மாட்டார்கள். மற்ற வகைகள் மாதிரி இவைகள் டன் கணக்கில் விற்காது - வாங்க ஆளும் பணமும் வேண்டுமே! பொட்டலம் போட உபயோகிக்கும் இயந்திரத்தை நன்கு கண்காணிப்பார்கள். தவிர தேர்ந்த தொழிலாளிகள் மட்டுமே இந்த வகைகளுக்கு பொட்டலம் போட வருவார்கள். தரக் குறைவும், இழப்பும் இருக்கக் கூடாது என்பதற்காக.

நான் அப்போது இந்த ‘டிப் டிப்’ வகை பொட்டலங்களை உருவாக்குவதைப் பார்க்கவில்லை; சில வருடங்கள் கழித்து வேறு ஒரு ஆலையில் தான் பார்த்தேன். காகித பொட்டலங்களின் இயந்திரங்களுக்கும், இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை. ‘டிப்’ பையும் ஒரு விதமான காகிதத்தில் தான் செய்யப் படுகிறது. இயந்திரமே காகிதப் பையில் டீத்தூளைப் போட்டு, நூலை வைத்து, ஸ்டேப்லரால் பின்னைக் குத்தி அனுப்பி விடும். ஐம்பதோ, நூறோ வந்தவுடன், ஒரு டப்பாவில் போட்டு அனுப்பி விடுவார்கள்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 7
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

செவ்வாய், நவம்பர் 21, 2006

தேநீர் – 7

இந்தப் பொட்டலங்களை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். காகிதம், பிளாஸ்டிக் மற்றும் இதர வகைகள் (மர டப்பா, இரும்பு/தகரம் டப்பாக்கள் போன்றவை). காகிதப் பொட்டலங்களில் அனேக வகைகள் உண்டு – முழுவதும் காகிதத்தால் ஆன பொட்டலத்திலிருந்து, காகிதத்தை மற்ற பொருட்களோடு சேர்த்து பொட்டலம் தயாரிப்பது வரை. இதில் சிறு வயதில் எனக்குப் பிடித்தது தோரணம் போல தொங்க விடப்படும் சிறு காகிதப் பொட்டலங்கள். உள்ளங்கை அளவே இருக்கும் சிறு காகிதப் பையில் டீத்தூள் இருக்கும், இந்தப் பைகளை மாவிலைத் தோரணம் போல ஒரு கயிற்றால் கட்டி கடைக் காரர்கள் தொங்க விட்டிருப்பார்கள். காகிதப் பையில் ஐந்து பைசா, பத்து பைசா சித்திரங்கள் இருக்கும். இந்தக் காகிதப் பைகளில் முக்கியமான இரண்டு விஷயங்கள் – செலவு குறைவு; ஆனால் சுவையையும், மணத்தையும் அதிகம் பாதுகாக்காது.

டீ வகைகளை விற்பனையில் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிப்பார்கள் – பாப்புலர் (POPULAR) மற்றும் பிரீமியம் (PREMIUM). வித்தியாசம் விலையில்; முதலாவது விலை குறைவு, வரும் லாபமும் குறைவு. டீத்தூள் தயாரிக்கும் முறையில் மூன்று வகைகள் – டஸ்ட் (DUST), CTC (CUT/TURN/CURL), மற்றும் முழு இலை (WHOLE LEAF) வகை. டஸ்ட் வகைகள் காகிதப் பொட்டலம் தான் – வெகு அரிதாக வேறு ஏதாவது வகையில் பொட்டலம் கட்டுவார்கள். CTC வகைகள் பெரும்பான்மையாக பிளாஸ்டிக்; முழு இலை வகைகள் அதிகமாக விற்பனையாவது உயர்தரக் காகிதம், மற்றும் இதர வகைகள் – டப்பாக்களில் (மரம், இரும்பு/தகரம் போன்றவை). இதுமாதிரி அமைவதற்கும் பொட்டலம் போடும் முறையும், அந்த டீத்தூள்களின் இயல்பும் ஒரு காரணம். அனேகமாக ‘பாப்புலர்’ என்று வகைப்படுத்தப்படும் குறைந்த விலைத் தேயிலைகள் இந்த மாதிரி காகிதப் பொட்டலங்களில்தான் வரும்.

காகிதப் பொட்டலம் போடும் இயந்திரங்கள் பொட்டலத்தை மடிக்கும் போது வரும் அழுத்தம் டீத்தூளையும் கொஞ்சம் பாதிக்கும். CTC மற்றும் முழு இலை வகைகள் இந்த அழுத்தத்தில் உடைய, பொடியாக வாய்ப்புக்கள் உண்டு. காகிதப் பொட்டலங்களின் உற்பத்தி செலவும் சற்று குறைவு. ஆதலால் டஸ்ட் டீ வகைகளை காகிதப் பொட்டலங்களில் போடுவது செலவையும் குறைக்கும் (பாப்புலர் வகைகளுக்கு இது முக்கியம் – டஸ்ட் டீ வகைகள் அனேகமாக பாப்புலர் வகைகள் தான் விலையில்), பொட்டல இயந்திரங்களினால் தரக் குறைவும் வராது.


இதிலேயே கொஞ்சம் அதிகம் விலைபோகும் தேயிலைக்கு, காகித டப்பா/பொட்டலத்திற்குள் அலுமினியப் பூச்சுடன் உள்ள தாளை வைத்து, அதனுள் டீத் தூளை வைத்து பொட்டலம் கட்டுவார்கள். இது காற்றுப்புகா வண்ணம் இருக்குமாதலால், சுவையும் மணமும் கொஞ்ச நாள் அதிகம் இருக்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் காகிதத்தை ஒட்டப் பயன்படுத்தப்படும் கோந்து. இந்த பசை சரியான அளவோடு இருப்பதோடு இல்லாமல், உள்ளே இருக்கும் டீத்தூளின் சுவையையோ, மணத்தையோ பாதிக்காமல் இருக்க வேண்டும். பொட்டலம் கட்டும் இயந்திரங்களில் இந்தப் பசை வைக்கப் பட்டிருக்கும். காகிதம் வெறும் தாளாகவே இயந்திரத்தில் வரும்; இயந்திரமே தாளை மடித்து பொட்டலம் ஆக்கி, டீத்தூளைப் போட்டு, பசை தடவி ஒட்டி விடும். பார்க்க மிகவும் அழகாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

ஞாயிறு, நவம்பர் 19, 2006

தேநீர் – 6

கலவை நிர்ணயம் செய்த பிரிவிலிருந்து, கலவையின் விகிதங்கள் - எந்தெந்த லாட்டிலிருந்து எத்தனை டீ டப்பாக்களை சேர்க்க வேண்டும் என்ற விபரம் - கலவை கலக்கும் பிரிவுக்கு வரும். இதை தயாரிப்பதும் அவ்வளவு சுலபம் அல்ல; முதலில் தொழிற்சாலையில் எத்தனை டப்பாக்கள் வந்திருக்கின்றன, அதன் எடை எவ்வளவு, தொழிற்சாலையின் பொட்டல இருப்பு நிலை, பொட்டல திட்டத்திற்கு எத்தனை டீ வேண்டியிருக்கும் என்று எல்லாவற்றையும் யோசித்து, இந்த 'கலவைக் காகிதம்' – Blend Sheet, தயாரிக்கப்படும். சரி இது வந்துவிட்டால், அத்தனை டப்பாவையும் எடுத்துக் கவிழ்த்தால் கலவை தயார்தானே என்று எண்ண வேண்டாம்.

கலவை நிர்ணயம் செய்ய அரைக் கிலோ டீ போதும். இது தொழிற்சாலையில் பொட்டலம் போட வரும் போது அரை டன் - அதாவது 500 கிலோவாகக் கூட மாறும். வீட்டில் பூச்சு வேலை செய்யும் போது கலவை போடுவது கொஞ்சம் எளிதாகத் தோன்றும். கொத்தனார் ஒரு பாண்டில் (பாண்டு - ஒரு குழிவான இரும்புத் தட்டு) கொஞ்சம் சிமின்ட், கொஞ்சம் மணல் என்று போட்டு, தண்ணீர் விட்டு கலந்து எளிதாகப் பூசிவிடுவார். இதே ஒரு தளத்திற்கான கான்க்ரீட் கலவை என்றால், பத்து பதினைந்து உதவியாளர்கள் (சித்தாள்), ஒரு தலைமைக் கொத்தனார் மற்றும் அவருடைய உதவிக் கொத்தனார்கள், ஒரு கலவை மிஷின், பல மூட்டை சிமின்ட், லாரி மணல், என்றெல்லாம் விரிவாகப் போகும். அதே போல தொழிற்சாலையில் டீ கலவை போடும் போது, ஆள் பலம், இயந்திர பலம் எல்லாமே பெருகியிருக்கும்; அதனால் நிறைய விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும்.

முதலில் தோட்டத்திலிருந்து ஏலத்தில் எடுத்த டீயை டப்பாக்களிலிருந்து (Chest) எடுத்து சேகரிப்பது. இது வரும் மர டப்பாக்களில் சமயத்தில் காலி டப்பா எடையை விட அதிகமாக ஆணிகள் இருக்கும்! சில சமயம் ஒரு தகரப் பட்டியாலும் டப்பாவை சுற்றி இறுக்கிக் கட்டியிருப்பார்கள்; தகரம் ஆதலால், இதில் துரு இருக்க வாய்ப்பு உண்டு. இந்த ஆணிகள் அனைத்தையும் எடுத்து விடுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. தப்பித் தவறி ஒரு ஆணி பொட்டலத்திற்குள் வந்துவிட்டால் மிகப் பெரும் பிரச்சனை வந்துவிடும். ஆதலால், முக்கியமான ஒரு வேலை மர டப்பாக்களில் உள்ள ஆணிகளை எடுப்பது.

முதலில் மூடியை ஒரு கம்பியால் நெம்பி எடுத்துவிட்டு, அந்த டப்பாவை அப்படியே ஒரு இயந்திரத்தில் கவிழ்த்து விடுவார்கள். அத்தனை டீயும், ஒரு இரும்பு உருளையில் வந்து சேரும். இந்த உருளைக்கு வரும் வழியிலும், உருளையிலும் பலமான சக்திவாய்ந்த காந்தங்கள் இருக்கும்; இந்த உருளை உருளும் போது, தப்பித் தவறி வந்திருந்த ஆணிகள் மற்றும் இரும்புத் துகள்களை கவர்ந்து விடும் - வெறும் டீ மட்டும், உருளையிலிருந்து டீ சேகரிக்கப்படும் பெரிய பாத்திரங்களுக்கு செல்லும். கிராமத்தில் அரிசியை சுத்தப்படுத்த நாம் எந்த முறையைக் கையாள்கிறோமோ, அதே விதி இங்கும் உபயோகப்படுத்தப் படுகிறது. எப்படி முறத்தால் அரிசியைப் புடைப்போமோ, அதே போல சீராக ஆடும் இரும்புத் தளங்கள் மூலமாக டீயை அனுப்புவார்கள். இந்த ஆட்டத்தில் டீயுடன் வந்திருக்கும் மணல் துகள்கள் மற்றும் இதர பொருட்களை சலித்து எடுத்து விடும்; வெறும் டீ மட்டும் பெரிய பாத்திரங்களில் சேகரிக்கப்படும்.

கலவை செய்யத் தேவையான டீ வகைகள் அதிகமாக இருந்தால் இந்த உருளையின் நேரமும் அதிகமாகும் - கலவை சீராகக் கலப்பதற்கு. அதே போல ஒரு கலவைக்கு அதிகமான அளவு வேண்டியிருந்தாலும், கலக்கும் நேரம் அதிகமாகும். இதில் கவனிக்க வேண்டிய இன்னுமொரு விஷயம் வெப்பம். இயந்திரங்கள் வேலை செய்யும் போது உராய்வால் வெப்பம் வருவதை தவிர்க்க முடியாது. வெப்பம் அதிகமாகி விட்டால் டீத்தூளைக் கருக்கிவிடும்; ருசி குறைந்துவிடும் ஆதலால், இந்தப் பகுதியில் இயந்திரத்தை வெகுநேரம் இயக்க முடியாது. இதற்காகவே டீப் பொட்டலம் கட்டும் ஆலைகளில் இரண்டு அல்லது மூன்று இயந்திரங்களை டீ சுத்தம் செய்து கலக்க வைத்திருப்பார்கள். ஒரு லோடு முடிந்ததும், இயந்திரத்திற்கு கொஞ்சம் ஓய்வு - அதன் சூடு தணிக்க! அப்போது இரும்புத் துகள்களையும், ஆணிகளையும் எடுத்துவிட்டு, அதை சுத்தம் செய்து விடுவார்கள்.

இப்படியாக கலக்கப் பெற்ற டீ ஒரு பெரிய பாத்திரத்திலிருந்து, சின்னப் பொட்டலங்களாக மாறும் கதையை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

வியாழன், நவம்பர் 16, 2006

தேநீர் - 5

இப்படி ஒரு வழியாக தேயிலைத் தோட்டத்திலிருந்து கிளம்பி, ஏலத்தில் கூவாமல், விரல், கை தூக்கி, தலையாட்டி எடுக்கப்பட்டு, மூன்று பேரால் மதிப்பிடப்பட்டு தொழிற்சாலையில் வந்திறங்கிய தேயிலைத் தூள்/இலை பொட்டலம் ஆவதற்குமுன் தேற வேண்டிய இன்னுமொரு தேர்வு - கலவை (அதாங்க BLENDING). நாம் கடையில் வாங்கும் டீப் பொட்டலம் ஒரே ஒரு தோட்டத்திலிருந்து வரும் ஒரே வகை டீயாக இருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு. காரணம் ஒரு பிராண்ட் என்று வரும் போது, அதனுடைய சுவை, மணம், நிறம் போன்ற குணங்கள் ஒரே சீராக இருக்க வேண்டும். ஒரு தோட்டத்தில் இந்த அளவு தேயிலை வளர வாய்ப்பில்லை. அதனால் எல்லா வகை (BRAND) டீப் பொட்டலங்களும் ஒரு குறிப்பிட்ட கலவைதான்.

இதைப் பற்றி சொல்வதற்கு முன்னால் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பௌதீக விளக்கம் - பல்க் டென்சிடி - (உள்ளடர்த்தி?). ஒரு லிட்டர் குவளையில் நீங்கள் வேர்க்கடலையை நிரப்பி, மற்றொரு லிட்டர் குவளையில் கோலிக்குண்டுகளை நிரப்பி இரண்டையும் எடை பார்த்தால், அனேகமாக கோலிக்குண்டுகள் இருக்கும் தட்டு கீழே போகும். கோலி, கடலை இரண்டும் ஒரு லிட்டர் அளவு தான் இருந்தாலும் அவற்றின் உள்ளடர்த்தி வேறுபடுவதால் இந்த விளைவு - கோலிக்குண்டின் எடை அதிகம். சரி இதற்கும் டீக்கும் என்ன சம்பந்தம்? இருக்கே! ஒவ்வொரு தோட்டத் தேயிலையும் இந்த உள்ளடர்த்தியில் வேறுபடும். டீப் பொட்டலங்களை நாம் எடை போட்டு வாங்கினாலும், ஒரு பொட்டலத்தில் டீ குறைவாக - அதாவது பத்து ஸ்பூனுக்கு பதிலாக ஒன்பது ஸ்பூன் டீ இருந்தால், உடனே நமக்கு கோபம்தான் வரும். டீக் கம்பெனியில் இருந்து ஆரம்பித்து, தெருமுனையில் இருக்கும் டீ விற்ற பெட்டிக்கடைக்காரர் வரை எல்லோரையும் திட்டித் தீர்த்திருப்போம் - ஏமாற்றுகிறார்கள் என்று. அந்த டீப் பொட்டலத்தை எடை போட்டுப் பார்த்தால் ஒன்றும் குறைவு இருக்காது - அளவு குறைந்ததற்கு காரணம் அந்த டீ வகை உள்ளடர்த்தி அதிகமாய் இருப்பதால் தான். என்னதான் பௌதீக விளக்கமெல்லாம் கொடுத்தாலும், வீட்டில் டீ போடும் அம்மாவின் முடிவுக்கு அப்பீலேது? அதனால் எல்லாக் கம்பெனியும், பௌதீகப் பாடம் எடுப்பதற்கு பதிலாக, இந்த டீக் கலவை கலப்பதற்கு முன்பாக ஒரு சாம்பிள் எடுத்து, இந்த உள்ளடர்த்தியை நிர்ணயம் செய்வார்கள். பொட்டலத்தில் எடையும், அளவும் கொஞ்சம் சீராக இருக்குமாறு வருவதற்கு உள்ளடர்த்தி ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் இருந்தால் நலம் என்று இதை நிர்ணயிப்பார்கள்.

ஆக ஒரு கலவைக்கு வேண்டிய முக்கியமான மூன்று குணங்கள்: சுவை, உள்ளடர்த்தி, விலை! இந்த சுவையில் நீங்கள் மணம், நிறம் போன்ற டீத் தன்மைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு விலை இருக்கும். மக்கள் மனதில் இந்த பிராண்ட் பற்றிய ஒரு நிர்ணயமும் இருக்கும் - இதன் மணம் நன்றாக இருக்கும், ஆனால் ஒன்றரை ஸ்பூன் போட வேண்டியிருக்கும் - என்றெல்லாம் வீட்டில் சொல்வார்கள். அந்த குறிப்பிட்ட பிராண்ட் கலவை செய்யும் போது, அதற்கு ஏற்ற சுவையும் (மணம், நிறம் உட்பட), உள்ளடர்த்தியும், விலையும் (அதாவது உற்பத்தி செய்ய ஆகும் செலவு - COST) வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உள்ளடர்த்தி மிகவும் குறைந்து போனால், பொட்டலத்தின் அளவை விட அதிகம் டீ போட வேண்டிய நிலை வந்து, பொட்டலம் கட்டுவதில் பிரச்சனை வரும்.

ஒரு கலவைக்கு இத்தனை தோட்டத் தேயிலைதான் என்று வரையறை கிடையாது - எத்தனை வேண்டுமானாலும் கலக்கலாம். ஆனால் கலவையில் தேயிலை வகைகள் அதிகம் ஆக ஆக, கலக்கும் நேரமும் அதிகமாகும். காரணம் கலவைகள் செஸ்ட் அளவில் நடக்கும்; ஒரு செஸ்ட் நாற்பது கிலோவுக்கும் அதிகம் - பொட்டலம் 250 கிராம்! ஒவ்வொரு பொட்டலத்திலும் சீரான கலவை வருவிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. வீட்டில் ஒரு டப்பா ரவா லாடு செய்ய ரவையும் சக்கரையும் கலப்பதிலேயே சமயத்தில் குளறுபடி வந்து, லாடு ரவையாகவோ, அல்லது சக்கரையாகவோ வந்து சேரும்! தொழிற்சாலையில் ஒரு லாரி நிறையா 250 கிராம் பொட்டலம் கட்ட வேண்டும் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இது எவ்வளவு கடினமான விஷயம் என்று புரியும்!
கிட்டத்தட்ட புலி, ஆடு, புல்லுக்கட்டு கதைதான்! இது சரியாக வரவில்லை என்றால் நஷ்டம் தான் - அது சுவை சரியில்லாததாலோ, அல்லது உற்பத்தி செய்யும் செலவு விற்கும் விலையை விட அதிகமாவதாலோ, அல்லது பொட்டலம் கட்டுவதில் பிரச்சனை வருவதாலோ இருக்கலாம். தொழிற்சாலையில் இந்த கலவையை நிர்ணயிப்பது ஒரு முக்கியமான வேலை என்பதை இன்னும் விபரமாகச் சொல்லத் தேவையில்லை.

இப்படியாக பதம் நிர்ணயம் செய்யப்பட்டு இந்த கலவை விகிதாசாரம் தொழிற்சாலையில் உள்ள சூப்பர்வைசருக்குப் போகும். அவரின் பொறுப்பு, அரைக் கிலோவிற்கு இவர்கள் செய்த கலவையை, ஒரு லாரி, அல்லது இரண்டு லாரி அளவுக்கு செய்து, பொட்டலம் போட அனுப்புவது! இதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

முந்தைய பதிவுகள்

தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

செவ்வாய், நவம்பர் 14, 2006

தேநீர் – 4

ஒரு வழியாக எலத்தை முடித்து விட்டு தொழிற்சாலை வந்து சேர்ந்தோம். மறு நாள் அவர் சொன்ன மாதிரியே என்னை டீ டெஸ்டிங் பிரிவுக்கு அழைத்து சென்று நடப்பதை விளக்கினார். இந்த ருசி பார்க்கும் பிரிவில் நிறைய டீ குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். சொல்லப்போனால் இது ஒரு கொடுமையான வேலை - முக்கியமாக டீயை ருசித்துக் குடிப்போருக்கு. முதலில் இங்கு டீ வெறும் டீத் தண்ணீர்தான் – அதாவது தேத்தண்ணீர் (நன்றி குமரன்) - சக்கரை, பால் போன்று எதுவும் கலந்திருக்காது. இரண்டாவதாக, ஒரு பெரிய ஸ்பூன் அளவுக்கு தேத்தண்ணீரை எடுத்து வாயில் வைத்து கொஞ்சம் கொப்பளிப்பது போல செய்து, துப்பி விடுவார்கள். அந்த கொஞ்ச நேரத்தில் அந்த டீயின் சுவையை நிர்ணயம் செய்து மார்க் கொடுப்பார்கள். ஒரு சமயத்தில் இருபதிலிருந்து நாற்பது கோப்பைகள் வரை தேத்தண்ணீர்கள் சாம்பிளாக இருக்கும்.

இந்த மாதிரியான சுவை நிர்ணயம் செய்ய ஒருவர் மட்டும் போதாது, அந்தப் பிரிவில் இருக்கும் அதிகாரிகளில் குறைந்தது மூன்று பேராவது அதே சாம்பிள்களை சுவைத்து தனித் தனியே மதிப்பெண்கள் போடுவார்கள். அப்புறமாக அதை கொஞ்சம் அலசிப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவார்கள். இந்த மாதிரி சுவை நிர்ணயம் செய்யும் அதிகாரிகள் சுவைப்பதற்கு முன்னால் கொஞ்ச நேரத்திற்கு (ஒன்று அல்லது இரண்டு மணி நேரம்) சுவை தூக்கலான பண்டம் எதுவும் சாப்பிட மாட்டார்கள்; புகை பிடிக்க மாட்டார்கள்.

இந்த சுவை பார்க்கும் இடமே கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு பெரிய அறையில் மேசையில் அத்தனை சாம்பிள்களும் (கோப்பையில் டீத் தண்ணீராக) வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு சாம்பிளுக்கும் சமயத்தில் இரண்டு கோப்பைகள் (அல்லது மூன்று கோப்பைகள் கூட) இருக்கும். சுவை பார்க்கும் அதிகாரி ஒரு வெள்ளைத் துணியை முன்புறம் கட்டிக்கொண்டு படு சீரியசாக மூஞ்சியை வைத்துக் கொண்டு வருவார். சிலருக்கு சத்தம் இருக்கக் கூடாது - அதனால் கதவெல்லாம் மூடியிருக்கும். அவருக்கு துணையாக இரண்டு பேர் வருவார்கள். ஒருவர் கையில் ஒரு காகிதக் கத்தை (அட்டையோடு); அதில் அவர் ருசிபார்ப்பவர் சொல்லும் எண்ணை அல்லது ரகத்தைக் குறித்துக் கொள்வார். அந்த காகிதக் கத்தையில் அனைத்து சாம்பிள் நம்பரும், அது எந்த இடத்திலிருந்து வந்தது என்றும் எழுதியிருக்கும். ஆனால் ருசிபார்ப்பவருக்கு சாம்பிள் நம்பர் எழுதியிருக்கும் கோப்பை லேபிள் மட்டும் தான் தெரியும்.

கூட வரும் மற்றொருவர் கையில் ஒரு பெரிய பாத்திரம் இருக்கும். திருவிளையாடல் படத்தில் ஹேமநாத பாகவதராக வரும் பாலையா வெற்றிலை துப்புவதற்காக, அவர் சிஷ்யர் ஒருவர் ஒரு பாத்திரத்தை எடுத்து வருவாரே - நினைவிருக்கிறதா? அதே போலத் தான் இவரும் பாத்திரத்தை எடுத்து வருவார். ருசிபார்ப்பவர் வரிசையாக இருக்கும் கோப்பைகளில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் விட்டுக் கொண்டு கொஞ்சம் கொப்பளித்து, இந்த பாத்திரத்தில் துப்பிவிட்டு ஒரு எழுத்தையும், எண்ணிக்கையையும் சொல்வார்; அதை மற்றொருவர் குறித்துக் கொள்வார். இந்த அதிகாரி அத்தனை கோப்பையையும் முடித்தவுடன், அதே பிரிவிலுள்ள மற்றொரு அதிகாரி இதே போல ருசிபார்த்து சொல்வார். இது போல குறைந்தது மூன்று முறை நடக்கும். பின் அத்தனை முடிவையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். மூன்று பேரும் ஒரே மதிப்பு தந்திருந்தால் வேலை சுலபம். சமயத்தில் இருவர் ஒரே மதிப்பு தந்திருப்பார்; ஒருவர் கொஞ்சம் மாற்றி மதிப்பு தந்திருப்பார். அவர் மறுமுறை அந்த சாம்பிளை ருசிபார்த்து மற்றவர்களோடு ஒத்துக் கொண்டால் பெரும்பான்மை மதிப்பு செல்லும். மூவருமே ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தலைமை ருசிபார்க்கும் அதிகாரி வந்து ருசிபார்த்து அவர் தரும் நிர்ணயமே முடிவாகும். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கே எக்கச்சக்க டென்ஷன்! இத்தனைக்கும் எனக்கு டீ சாப்பிட அவ்வளவாகப் பிடிக்காது - அதுவும் பால், சக்கரை இல்லாமல்! ருசிபார்ப்பவருக்கும் எண்ணிக்கையை அலசி ஆராய்பவருக்கும் எப்படி இருந்திருக்கும்!!

இந்த மாதிரி ருசிபார்க்கப் படும் தேநீர் சாம்பிள்கள் வருவதை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். ஏலத்திற்கு வரும் தோட்டத் தேயிலை, பின் தொழிற்சாலையில் பிளண்ட் என சொல்லப்படும் கலவை நிர்ணயம் செய்யும் போது பிராண்ட் (வகை) ருசி வருகிறதா என்று நிர்ணயம் செய்ய வருபவை, பின் மற்ற நிறுவன பிராண்ட்கள், அதிலும் புதிதாக வந்த வகைகளின் சுவை நிர்ணயம் செய்ய வருபவை. இவற்றில் உள்ள முக்கியமான வித்தியாசம் - முதல் வகையில் வருபவை ஒரு தோட்டத் தேயிலை, இரண்டாம் மூன்றாம் வகையில் பல தோட்டத் தேயிலை வகைகள் கலந்திருக்கும். அதைத் தவிர சில வகைகளில் டீ மசாலா எல்லாம் வேறு கலந்திருப்பார்கள். இப்படி வாரத்திற்கு நூற்றுக்கும் மேல் சுவை பார்ப்பது என்பது என்னைப் பொறுத்தவரை கொஞ்சம் கடினமான வேலைதான். என்னை 'ருசிபார்க்கிறாயா' என்று கேட்டார்கள் - 'வேண்டாம்' என்று வேகமாகத் தலையாட்டிக் கொண்டே சொன்னேன்...சிரித்துக் கொண்டே 'சரி' என்று சொல்லிவிட்டார்கள்.

அடுத்த பதிவில் கலவை போடுவது பற்றி.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

ஞாயிறு, நவம்பர் 12, 2006

தேநீர் – 3

முன் குறிப்பு:
சென்ற பதிவின் பின்னூட்டத்தில் குமரன் தேநீர் என்பதே சரி என்று விளக்கியிருந்தார். ஆகையால் இப்போதிலிருந்து தேனீர் தேநீர் ஆகிறது!

வாழ்க்கையில் அதற்கு முன் ஏலத்திற்கு சென்றதில்லை; ஆகையால் ஒரு பெரிய எதிர்பார்ப்பு. போதாக் குறைக்கு எனக்கு பயிற்சி தரும் அதிகாரி திருப்பித் திருப்பி எக்கச்சக்கமான விதிகளை (அதான், தலையாட்டாதே, கை தூக்காதே) வேறு சொல்லி கொஞ்சம் பயத்தையும் கிளப்பி விட்டார். கையில் ஏற்கனவே தயார் பண்ணிய திட்டப் பட்டியல், பேனா, கணக்குப் பொறி (அதான் Calculator) என்று அவரோடு ஏலம் எடுக்கச் சென்றேன். கொஞ்சம் பெரிய ஒரு அறை, வரிசையாக மேஜை-நாற்காலிகளோடு. அறையே சமதளமாக இல்லாமல் படிப் படியாக உயர்ந்து கொண்டு போனது - திரையரங்கு போல. அந்த அறையில் டீத்தூளே இல்லை. வந்திருந்த அனைவரிடமும் ஏலத்தில் வரும் டீ பற்றிய விபரம் - காகிதக் குப்பை!

டீ வாங்க ஏலத்திற்கு வந்திருந்தாலும், டீயை நேரில் பார்க்க முடியாது; வெறும் காகித விபரம்தான்! டீத்தூளை 'செஸ்ட்' (Chest) என்று சொல்லப்படும் தக்கையான மர டப்பாக்களில்தான் வைத்திருப்பார்கள். ஒரு டப்பா கிட்டத்தட்ட நாற்பதிலிருந்து நாற்பத்திமூன்று கிலோ வரை இருக்கும். ஏலம் எடுக்கக் குறிப்பிடும் அளவு ஒரு 'லாட்' (Lot) - ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை டப்பாக்கள் 'லாட்' என்று சொல்லப் படும்; அது பத்து டப்பாவாகவும் இருக்கலாம், அல்லது கொஞ்சம் அதிகமோ, குறைவாகவோ இருக்கலாம். அது டீத் தோட்டத்தைப் பொறுத்தது. குறைந்தபட்ச விலையில் ஏலம் ஆரம்பிக்கும்; சிலர் தலையை ஆட்டுவார்கள் - விலை ஐம்பது பைசா ஏறும். சிலர் கையைத் தூக்குவார்கள் - விலை இன்னும் ஏறும். ஏலம் விடுபவர் எப்படி விலையை ஏற்றுகிறார் என்று - சில சமயம் ஐந்து பைசா; சில சமயம் ஐம்பது பைசா - கடைசி வரையில் பிடிபடவில்லை.

என் பயிற்சி அதிகாரி வாங்கியதை எழுதி, கணக்குப் பார்த்து அவரிடம் காட்டிக் கொண்டிருந்தேன் - கூடிய மட்டும் ஆடாமல், அசையாமல் உட்கார்ந்து கொண்டே! எனக்கு ஒரு கெட்ட பழக்கம் - பேனா மூடியை வாயில் கடித்துக் கொண்டிருப்பேன். பேனாவைத் தூக்கினால் எங்கே நான் அதிகம் விலை கேட்கிறேன் என்று சொல்லி விடுவார்களோ என்று பயந்து மூடியை பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன்; எழுதியவுடனேயே பேனாவை மேஜையில் வைத்து விடுவேன் - கையில் இருந்தால் தானே பிரச்சனை என்று! இருபத்தி இரண்டு வயதில் ஆடாது அசங்காது உட்கார்ந்திருப்பது என்பது கொஞ்சம் கடினமான வேலை! ஒரு வழியாக ஏலம் முடிந்து வருகையில் 'டீ சாப்பிடுகிறாயா' என்று கேட்டார் - 'வேண்டாம்; காப்பிதான்’ என்று சொன்னதைக் கேட்டு சிரித்துக் கொண்டே 'ஒரு சின்ன ஏலத்திற்கு வந்ததற்கே டீ வேண்டாம் என்கிறாயே, உன்னை அடுத்ததாக டீ டேஸ்டிங் டிபார்ட்மென்ட்டுக்குத் தான் அனுப்ப வேண்டும்' என்றார்! தோராயமாக கணக்குப் பண்ணியதில் அந்த ஏலத்தில் 10 லக்ஷம் ரூபாய்க்கு மேல் மொத்த விற்பனை ஆகியிருக்கும் என்று தோன்றியது - இது சின்ன ஏலமாம்!! வாழ்க்கையில் அதுவரை சில்லறையையே அதிகமாய்ப் பார்த்தறியாத சின்னப் பையனிடம் பத்து லக்ஷம் ரூபாய் ஏலத்தை 'சின்னது' என்று வர்ணித்த அந்த அதிகாரியின் முகத்தை இன்னமும் மறக்க முடியவில்லை!

ருசிபார்க்கும் படலம் அடுத்த பதிவில்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 2
தேநீர் – 1

பின் குறிப்பு:
சென்ற பதிவில் சொல்ல மறந்த ஒரு விஷயம். 'டஸ்ட்' மற்றும் CTC தவிர முழுஇலை (Whole Leaf) வகையும் உண்டு. இது டார்ஜிலிங் பகுதியில் மற்றும் சில குளிரான மலைப் பகுதிகளில் வளரும் வகை. இந்த வகையை வென்னீரில் ஊற வைத்து (Brew) பருக வேண்டும். நம்மூரில் செய்வது போல இதை தண்ணீரோடு கொதிக்க வைத்தால் சுவையாக இருக்காது.

வியாழன், நவம்பர் 09, 2006

தேனீர் – 2

என்னுடைய பயிற்சியில் நான் செல்லாத இடம் - டீ எஸ்டேட் தான். நேராகப் போகாவிட்டாலும், டீ வளர்க்கும் முறை, இலை பறித்து டீ யாக அந்த இலைகளை மாற்றுவதை சித்திரப் படமாகப் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் நேரில் இன்னமும் பார்க்கவில்லையே என்ற குறை இருக்கத்தான் செய்கிறது.

டீ யில் நிறைய வகைகள் உண்டு. சிலவற்றிற்கு மணம் கூடுதலாக இருக்கும்; சிலவற்றிற்கு ருசி கூடுதலாக இருக்கும். இது ஒரு வசதி; எல்லோருக்கும் ஒரே சுவை பிடிக்கும் என்று சொல்ல முடியாதே. இப்படிப் பலவகைகள் இருந்தால் தான், பல கம்பெனிகள், பல வகைகள் (பிராண்டு), என்று எல்லோரும் கொஞ்சம் பணம் பண்ணலாம். சில டீ வகைகள் கனமாக இருக்கும்; சிலவற்றிற்கு இலை பெரிசு. இந்த டீ இலைகளை காய வைத்து, அதை ஒரு மாதிரியாக பொடி பண்ணினால் அதை 'டஸ்ட்' டீ என்பார்கள். இதே இலையை சீராக வெட்டி, முறுக்கி, சுருட்டினால் அது சி.டி.சி. (CTC = Cut, Turn, Curl) வகை. டீ வாங்கும் போது இது பற்றியெல்லாம் தெரியாது. கடையில் வாங்கும் போது, கடைக்காரர் விலை அதிகமான ஒரு வகையைக் காண்பித்து 'இது சி.டி.சி' என்று பெருமையாக சொன்னபோது, 'அப்படின்னா என்னாங்க?' என்று கேட்கக் கூச்சப்பட்டு, 'அப்ப அதே கொடுங்க' என்று ஜம்பமாய் பெருமையோடு வாங்கி வந்திருக்கிறேன்! வேலைக்கு சேர்ந்து, கல்கத்தாவில் கிதேர்புர் தொழிற்சாலையில், இது பற்றி 'ப்ளோர் சூப்பர்வைசர்' ரமேஷ் விளக்கியவுடன், 'அடச்சே - இதுக்காகவா அப்போது அதிகம் பைசா கொடுத்தேன்' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

முதலில் டீ ஏலம் பற்றி. ஏலத்திற்கு முன்னாலேயே, ஒவ்வொரு கம்பெனிக்கும், அந்த ஏலத்தில் வரும் டீ வகைகள் (எந்த தோட்டம், என்ன ரகம், எத்தனை கிலோ, குறைந்தபட்ச விலை) பற்றி விபரமாக செய்தி வந்து விடும். இதோடு, டீ தொழிற்சாலையில் உள்ள டீ இருப்பு நிலை, வரும் வார/மாத டீ திட்டம் (அதாங்க எந்த பிராண்ட் டீ எத்தனை பொட்டலம் போட வேண்டும் என்கிற பிளான்) எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, டீ வாங்கும் பிரிவில் உள்ள அதிகாரிகள் ஒரு திட்டம் தீட்டுவார்கள். அதில் ஏலத்திற்கு யார் போவது என்றும் முடிவெடுப்பார்கள். வழக்கமாக ஏலம் எடுக்கச் செல்லும் அதிகாரிக்கு 'உதவி' என்ற பெயரில் நான் கல்கத்தாவில் டீ ஏலத்திற்கு சென்றேன்.

இந்த ஏலத்திற்கு செல்லும் முன், எத்தனை கிலோ டீ வாங்க வேண்டும், எத்தனை ரூபாய் வரை செல்லலாம், எந்த எந்த வகை டீ வாங்க வேண்டும் என்றெல்லாம் டீ வாங்கும் பிரிவின் அதிகாரிகள் கலந்தாலோசித்து உருவாக்கிய திட்டத்தைப் பற்றி எனக்கு விளக்கினார், ஏலத்திற்கு செல்லும் அதிகாரி. இது ஒரு லேசான விஷயம் இல்லை. எல்லாவற்றிற்கும் - அதாவது, வாங்க வேண்டிய அளவு, வகை, விலை - குறைந்தபட்சம், அதிகபட்சம் என்றெல்லாம் ஒரு அட்டவணை போட்டு எடுத்துக் கொள்வோம். என் வேலை, டீ வாங்கும் அதிகாரி ஏலம் எடுத்தவுடன், எடை, விலை எல்லாவற்றையும் குறித்துக் கொண்டு, கணக்குப் போட்டு மொத்த திட்டத்தின் படி இருக்கிறோமா, இல்லையா என்று சரிபார்த்துக் கொண்டிருப்பது. இதை விட எனக்கு அந்த அதிகாரி சொன்ன ஒரு கண்டிப்பான விதி - 'தப்பித் தவறிக்கூட தலையை ஆட்டாதே, கையைத் தூக்காதே (மூக்கு அரித்தாலும் சொரியாதே!), ஒரு சிலையைப் போல இரு' என்பதுதான். ஒன்றும் புரியாவிட்டாலும், தலையை வேகமாக ஆட்டி விட்டு அவரோடு சென்றேன்.

அடுத்த பதிவில் நான் ஏலத்திற்குப் போன கதை.

முந்தைய பதிவு

தேனீர் – 1

புதன், நவம்பர் 08, 2006

தேனீர் – 1

இப்போதெல்லாம் காப்பிக்கு பதிலாக ஒரு நாளைக்கு ஒரு கோப்பை தேனீர் குடிக்கிறேன். டீ, சாய், சாயா என்றெல்லாம் பாசமாக அழைக்கப் படும் தேனீருக்கும், தேனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. சொல்லப் போனால் இரண்டும் எதிரெதிர் - ஒன்று கசக்கும், மற்றொன்று இனிக்கும். ஒன்றை சூடாகத்தான் குடிக்க வேண்டும், மற்றொன்றை அப்படியே குடிக்கலாம் (தேன் கூட்டிலிருந்து - தேனடையிலிருந்து - எடுத்த பிறகுதான்). இருந்தாலும், பால் கலக்காத தேனீரில், தேனைக் கலந்து குடித்தால் ஜலதோஷத்திலிருந்து விடுதலை என்று சொல்வார்கள். நான் பரிசோதனை செய்து பார்த்ததில்லை.

சிறுவயதில் வீட்டில் டீ கிடையாது; காப்பிதான். கொஞ்சம் வளர்ந்து பள்ளியில் படிக்கும் காலத்தில் வீட்டில் டீ வந்தது. அதுவும் 'டஸ்ட்’ டீ. காரணம் பட்டுக்கோட்டையில் வசிக்கும் போது அருகே ஒரு தூரத்து உறவினரும் பட்டுக்கோட்டைக்கு உத்தியோக மாற்றலாகி வந்தார். அவர் ப்ரூக்பாண்ட் கம்பெனியில் வேலை செய்ததால், வீட்டிற்கு வந்த போது டீயின் பெருமைகளை சொல்ல, முதல் முதலாக என் வாழ்வில் நுழைந்தது டீ. பாத்திரத்தில் தண்ணீரை வைத்து, டீத்தூளைப் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, பால், சக்கரை கலந்து குடித்தோம். இருந்தாலும், இது வழக்கமாக ஆகாமல், உறவினர் வீட்டிற்கு வரும்போது அவருக்கு கொடுப்பதற்காக என்று மட்டும் டீ உபயோகப்பட்டது. அப்போது தெரியாது, இந்த டீதான் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பொருளாக மாறப் போகிறது என்று.

அக்கவுன்டன்சி (C.A.) முடித்து முதல் வேலை ஹின்துஸ்தான் லீவரில் மேலாண்மை பயிற்சியாளராக (அதாங்க Management Trainee) சேர்ந்தேன். மும்பாயில் சேர்ந்த உடனேயே என்னை லிப்டன் நிறுவனத்திற்கு மாற்றினார்கள். அப்போது லிப்டனில் இருந்த இரண்டு பெரிய பிரிவுகள் - டீயும், எண்ணை சம்பந்தமான (டால்டா, வனஸ்பதி, மில்கானா மற்றும் இன்ன பிற பொருட்கள்) பிரிவும் தான். இதைத் தவிர மாட்டு/கோழித் தீவனப் பிரிவும் இருந்தது. இந்த பதினெட்டு மாத பயிற்சியில் பெரும்பான்மையான காலத்தை தேனீர்ப் பிரிவிலேயே கழித்தேன். ஏலத்தில் டீ வாங்குவது, பின் தொழிற்சாலையில் 'ப்ளெண்ட்' (Blend) என்று சொல்லப் படும் கலவை நிர்ணயிப்பது, கலப்பது, பொட்டலம் கட்டுவது (அதாங்க Packing), பின் பொட்டலத்தை வினியோகஸ்தர்களுக்கு எந்த வழியாக அனுப்பி வைப்பது (Logistics), எப்படி கொள்முதல் வினியோகஸ்தர்களிடமிருந்து (C&FA), டிஸ்ட்ரிபியூட்டர்கள் (Distributors) என்று சொல்லப்படும் சிறு வினியோகஸ்தர்களுக்கு, பின் அங்கிருந்து கடைகளுக்கு அனுப்புவது, இந்த மொத்த விஷயத்தையும் எப்படி கண்காணித்து கணக்கு எழுதுவது (Accounting) என்று ஒவ்வொன்றாகப் பயிற்சி.

கம்பெனியின் வியாபார ரகசியங்களைத் தராமல், இங்கு சில பகுதிகளாக தேனீர் பொட்டலம் பிறக்கும் கதையையும், சில சுவாரசியமான சங்கதிகளையும் தரலாம் என்று எண்ணம். முன்பு என் பதிவுக்கு வந்து காப்பி குடித்த (படித்த) அனைவரும் இந்த தேனீர் கடை(தை)க்கும் வருவீர்கள் என்று நம்புகிறேன்.

பின் குறிப்பு: இது ஒரு நினைவஞ்சலி அல்ல; இந்த தொடர் முடிந்ததும் டீ குடிப்பதை நிறுத்துவதாக இல்லை.