செவ்வாய், ஜூலை 26, 2005

நம்பிக்கை வை!

திரு. நாரயணன் வெங்கிட்டு கவிதைப் போட்டி அறிவித்தார் - "நம்பிக்கை" என்ற தலைப்பில். அதிக பட்சம் எட்டு வரி என்று சொல்லியிருக்கிறார். "எட்டு வரியா? கஷ்டமாயிருக்குமே!" என்று யோசித்து எழுத ஆரம்பிக்க, இப்போது இருபத்தைந்து வரிகள். போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும், எழுத வருகிறதே என்று நினைத்தேன். ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு இடம் - இராக், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இலங்கை. எழுதி முடித்ததும் ஒரு பாரம் இறங்கியது போல உணர்வு. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நம்பிக்கை வை

"நம்பிக்கை வை!" திடமாக வந்தது தாத்தாவின் வார்த்தைகள்
குவைத் போரில் இறந்த வாப்பாவைப் பார்த்துத் தேம்பியழுதபோதும்
பின்பு அமெரிக்க குண்டுபட்டுக் காலிழந்த அண்ணனைத் தேற்றவும்
குடும்பத்தின் பசிபோக்க வேலைதேடி காவல்படையில் சேரவந்தவனுக்கு
இரான் போரில் கண்ணிழந்த தாத்தாவின் வார்த்தைகள் "நம்பிக்கை வை!"

"நம்பிக்கை வை!" வாஞ்சையோடு பாட்டியின் தலைக்கோதல்
'பாப்பி' பயிர்ப் போரில் குண்டுபட்டு இறந்த ஆசை அண்ணன்
கண்ணிவெடியால் கையிழந்து ஊமையான அம்மா மூலையில்
வேலைதேடிச் சென்ற அப்பா திரும்புவாரா என யோசிக்கையில்
அழுத்தமாகப் பாட்டி சொன்ன வார்த்தைகள் "நம்பிக்கை வை!"

"நம்பிக்கை வை!" நிதானமாக வந்தது பாதிரியின் வார்த்தைகள்
மனது குண்டுவெடிப்பில் காயமாகிப் படுத்திருக்கும் மகளிடம்
கையில் பிறந்தநாள் பரிசு இராக்கிலிருக்கும் மகனுக்கு அனுப்ப
கைப்பை சோதனைக்காக காத்திருக்கையில் கர்த்தரை ஜபிக்க
மறுபடி காதில் ஒலித்தது இரண்டு வார்த்தைகள் "நம்பிக்கை வை!"

"நம்பிக்கை வை!" பெரிதான எழுத்தில் சுவற்றை மூடிய துணியில்
கூட நடந்து வரும் சிறுமி, செப்டம்பர் 11ல் இறந்த அக்காள் மகள்
'தீவிரவாத எதிர்ப்புப் போர்' முடிக்கச் சென்ற ஆசைக் கணவன்
எப்போது வருவான்? எப்படி வருவான்? இந்நிலை எப்போது மாறும்?
கேள்விகளோடு நிமிர்கையில் சுவற்றில் மறுபடி "நம்பிக்கை வை!"

"நம்பிக்கையாய் இருக்கோணும்!" சொன்னது அருகிருந்த பெரியவர்
கொழும்பு கலவரத்தில் தாயிழந்து, தந்தையிழந்து
ராணுவத்தால் கற்பிழந்து, சுனாமியால் வீடிழந்து பொருளிழந்து
தற்காலிக இருப்பு என்னும் தகரத் தட்டிகளுக்கிடையே கதைக்கயில்
விசனப் பட, பெரியவர் சொன்னார் "நம்பிக்கையாய் இருக்கோணும்!"

திங்கள், ஜூலை 25, 2005

அது அந்தக் காலம் - இது இந்தக் காலம்!

சிறு வயதில் கேட்ட ஒரு திரைப்படப் பாடல் - அது அந்தக் காலம்; இது இந்தக் காலம். திரு. N. S. கிருஷ்ணன் பாடியது என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்னால் மன்னார்குடியில் படிக்கும் போது இருந்த வாழ்க்கைக்கும், தற்போதைய அமெரிக்க வாழ்க்கைக்கும் இடையே நிறைய மாறுதலைக் காணுகிறேன். அதன் விளைவே இந்தக் கவிதை!

அது அந்தக் காலம் - இது இந்தக் காலம்!

ரேஷன் கடையில் காத்து நின்று
சண்டை பிடித்து சாமான் வாங்கியது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

'ஒன்று வாங்கினால் இரண்டாவது இலவசம்'
கூவினாலும் வாங்காமல் ஒதுங்குவது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

நடமாடும் நூலகம் ‘பழயது ஒன்று
புதியது ஒன்று’ வாங்கிப் படித்தது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

வலைத் தளத்திலிருந்து இறக்கி
வெளியில் போகையில் கேட்டுமுடிப்பது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

மின்வெட்டினாலே வாடகை சைக்கிளெடுத்து
ஒலிச்சித்திரம் கேட்கத்தெருக்கள் தாண்டியது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

வசதிக்காக விரும்பும்போது கேட்டுமகிழ
சிடியை இரண்டு மூன்று காப்பி எடுப்பது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

தொலைக்காட்சியில் இரண்டாவது சேனல்
வந்ததனாலே சந்தோஷத்தில் துள்ளியது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

இருநூறு சேனல் இருந்தபோதும்
சேனலை மாற்றி அலுத்துக் கொள்வது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

குச்சி ஐசுக்கு ஆலாய்ப் பறந்து
கைநிறைய வாங்கி நக்கித் தின்றது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

ப்ரீஸருக்குள்ளே ஐந்துவகை இருந்தும்
யோசித்துப் பார்த்துத் திரும்ப வைப்பது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

சிலபஸ் மாறி புதுப்புத்தகம் கிடைக்காமல்
பழைய புத்தகத்தைத் திருத்திப் படித்தது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

எதற்கும் இருக்கட்டும் வீட்டுக்கு ஒன்று
பள்ளிக்கு ஒன்றென்று இரண்டாய் வாங்குவது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

வாத்தியார் அடித்தாரென்று வீட்டில் சொல்ல,
போதாதென்று வீட்டிலும் அடி வாங்கியது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

சத்தமாய் மிரட்டினாலே ‘போலீஸில்
புகார் செய்வேன்’ என பதிலுக்கு மிரட்டுவது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

திருவிழா இரவில் நண்பர்களோடு
ஓசி சினிமா பார்க்க ஓடிப் போனது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

வீட்டிலேயே திரையரங்குபோலிருந்தும்
சேர்ந்து பார்க்க நண்பர்கள் இல்லாதது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

வேலையில் சேர்ந்து மேசையோடு தேய்ந்து
நாற்பது வருடத்தில் ரிடையரானது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

பணியில் கூட வேலைபார்ப்பவர் யாரென
தெரியும்முன்பே உத்தியோகம் மாறுவது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

வானொலி வர்ணனை கேட்டு நன்றாக
விளையாடிய வீரரைக் கொண்டாடிப் பேசியது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

போட்டிக்கு எத்தனை பணம்வாங்கித்
தோற்றிருப்பார் என்று ஆராய்ச்சிசெய்வது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

ஞாயிறு, ஜூலை 24, 2005

பயணமே இலக்கு!

பள்ளியில் படிக்கும் போது மனதைப் பற்றிய கவிதைகளில் ஒன்று கண்ணதாசனின் "நீ மணி - நான் ஒலி!" பின்பு கல்லுரியில் படிக்கையில் ஸென் புத்தக் கதைகள் மற்றும் சித்தர் பாடல்கள் (முக்கியமாக சிவவாக்கியர்) என்னை யோசிக்க வைத்தன. இவைகளின் பாதிப்புதான் இந்தக் கவிதை.

பயணமே இலக்கு

இலக்கை நோக்கி பயணித்தேன்
பயணத்தில் வந்தது தெளிவு
இப்போது பயணமே இலக்கு

தேர்வில் வெல்லப்பாடம் படித்தேன்
வென்றபின் வந்தது அறிவு
வெல்ல வேண்டியது தேர்வல்ல

பதில்தேடிப் படிக்க ஆரம்பித்தேன்
படிக்கப்படிக்க வளர்ந்தது கேள்வி
இப்போது படிப்பே கேள்வி

மற்றவர் பாராட்டவே ஆசைப்பட்டேன்
ஆசைப்பட்டு உழைத்ததில் புரிந்தது
உழைப்பே உண்மைப் பாராட்டு

குடும்பத்திற்காக செல்வம் சேர்த்தேன்
சேர்த்தபின் வந்தது தெளிவு
இப்போது குடும்பமே செல்வம்

குழந்தையைக் கடிந்தேன் பொறுமையில்லையென்று
அழுகை நின்றபின் புரிந்தது
எனக்குத்தான் இல்லை பொறுமை

நிம்மதிதேடி வெளியில் அலைந்தேன்
அலைந்து களைத்தபின் புரிந்தது
உள்ளே பெறுவதுதான் நிம்மதி

சுத்தம்வேண்டி கங்கையில் மூழ்கினேன்
மூழ்கி எழுந்ததும் தெரிந்தது
சுத்தம் கங்கையில் இல்லை

முன்னேற்றம் வேண்டி நாகரீகமானேன்
மாறியபின் வந்தது தெளிவு
நாகரீகத்தில் இல்லை முன்னேற்றம்

தனிமைக்கு பயந்து கூட்டம் தேடினேன்
கூட்டத்தில் இருக்கையில் புரிந்தது
தனிமை மனதினுள்ளே என்று

விரதங்களிருந்து மலைகளேறினேன் இறைவனைத்தேடி
தேடிக்களைத்தபின் வந்தது ஞானம்
தேடவேண்டிய இடம் உள்ளேயென்று

வியாழன், ஜூலை 21, 2005

அவசரம்!

அவசரம்

அதிகாலை தலைக்கருகில்
கடிகார அழைப்பில் அவசரம்

பல் விளக்கவும், குளிக்கவும்
சுடுநீர் வரும்முன் அவசரம்

காரில் சாலை விளக்கு
பச்சைக்கு மாறுமுன் அவசரம்

பேசுகையில் கேள்வியை முடிக்குமுன்
பதில் சொல்ல அவசரம்

வேலையில், மதிய உணவில்,
மாலை காப்பியில் அவசரம்

வேலை முடிக்க, வீடு திரும்ப,
தொலைக்காட்சி பார்க்க அவசரம்

வலைத்தளத்தில் சுட்டியை சொடுக்கி
பக்கம் வரும் முன் அவசரம்

குழந்தையோடு விளையாட, உணவூட்ட,
தூங்கவைக்க அவசரம்

எல்லாம் முடித்து படுக்கையில் படுக்க
விளக்கை அணைக்கும் முன்

சுவற்றில் இந்த வாசகம்
"வாழ்க்கை ஒரு நிறுத்தமில்லா பயணம் - இறப்பை நோக்கி"

பார்த்தபின் அவசரமாக முள் திருப்பி
கடிகாரத்தில் 'எழுப்பு மணி' நிறுத்துகிறேன்!

செவ்வாய், ஜூலை 12, 2005

முனுசாமியின் பண்ணை! (McDonald’s Farm)

அரிசோனாவில் (பீனிக்ஸ்) இருந்த போது ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் தன் மகள்களுக்கு, ஆங்கிலப் பாடல்களை தமிழில் வேடிக்கையாக மொழிபெயர்த்து சொல்லுவார். குழந்தைகளும் ஒரு விளையாட்டுப் போல தமிழில் பேச அது உதவியாக இருந்தது. அப்படி மொழிபெயர்த்துப் பாடிய ஒரு பாட்டு இதோ! நன்றி மோகன்!

(English rhyme: Old McDonald had a farm!)

முனுசாமியின் பண்ணை!

கிழட்டு முனுசாமி பண்ணை வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
பண்ணையிலே கொஞ்சம் மாடு வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
'மா மா' இங்கே, 'மா மா' அங்கே, இங்கே 'மா' அங்கே 'மா', எங்கேயும் 'மா மா'
(கி. மு.)

கிழட்டு முனுசாமி பண்ணை வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
பண்ணையிலே கொஞ்சம் ஆடு வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
'பா பா' இங்கே, 'பா பா' அங்கே, இங்கே 'பா' அங்கே 'பா' எங்கேயும் 'பா பா'
(கி. மு.)

கிழட்டு முனுசாமி பண்ணை வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
பண்ணையிலே கொஞ்சம் வாத்து வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
'க்வாக் க்வாக்' இங்கே, 'க்வாக் க்வாக்' அங்கே, இங்கே 'க்வாக்' அங்கே 'க்வாக்' எங்கேயும் 'க்வாக் க்வாக்'
(கி. மு.)


கிழட்டு முனுசாமி பண்ணை வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
பண்ணையிலே கொஞ்சம் கோழி வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
'கொக் கொக்' இங்கே, 'கொக் கொக்' அங்கே, இங்கே 'கொக்' அங்கே 'கொக்' எங்கேயும் 'கொக் கொக்'
(கி. மு.)

கிழட்டு முனுசாமி பண்ணை வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
பண்ணையிலே கொஞ்சம் பன்னி வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
'ஒய்ங்க் ஒய்ங்க்' இங்கே, 'ஒய்ங்க் ஒய்ங்க்' அங்கே, இங்கே 'ஒய்ங்க்' அங்கே 'ஒய்ங்க்' எங்கேயும் 'ஒய்ங்க் ஒய்ங்க்'
(கி. மு.)

கிழட்டு முனுசாமி பண்ணை வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
பண்ணையிலே கொஞ்சம் நாய் வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
'லொள் லொள்' இங்கே, 'லொள் லொள்' அங்கே, இங்கே 'லொள்' அங்கே 'லொள்' எங்கேயும் 'லொள் லொள்'
(கி. மு.)

வெள்ளி, ஜூலை 08, 2005

அயல் நாட்டுக் குழப்பங்கள்!

அயல் நாட்டுக் குழப்பங்கள்!

1997 ஜூலையில் முதன் முறையாக அமெரிக்காவில் வந்து இறங்கினேன். முதல் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இப்பொது நினைத்துப் பார்க்கும் போது சிரிப்பாக வந்தாலும், அவைகள் நடந்த காலத்தில் கோபம், வருத்தம், சந்தோஷம் எல்லாம் இருந்தது!

தொலைபேசிக் கட்டணம்: நான் ஆஸ்திரேலியாவில் ஆறு மாதம் இருந்திருந்தாலும், பிறந்து வளர்ந்தது என்னமோ தமிழ் நாட்டில் மட்டும் தான்! பரீட்சைக்கு மட்டும் பிரெஸிலில் வளரும் காப்பி பற்றியும், சகாரா பாலைவனத்தைப் பற்றியும் படித்தும், அதிகமாக உலக விஷயங்கள் தெரியாமல் வளர்ந்து விட்டதன் குறை, இங்கு வந்தபின் தான் தெரிந்தது. இந்தியாவில் (ஆஸ்திரேலியா உட்பட மற்ற பிற நாடுகளிலும்) தொலைதூர எண்களுக்கு முதலில் முதலில் 0 சுற்றி (அல்லது அழுத்தி) பின் தொலைபேசி எண்ணை சுற்றுவோம். அதே முறையில் இங்கு வந்ததும் தொலைபேசியை உபயோகித்தால் யாரோ ஒருவர் குறுக்கே வந்து எண்ணைக் கேட்பார். மற்றவர்களை கேட்கக் கூச்சப்பட்டுக் கொண்டு, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு இதே போல் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு பேசிக் கொண்டிருந்தேன்! ஊரில் இருந்து வரும் போது உறவினர், நண்பர், தெரிந்தவர் எல்லாம் கொடுத்து அனுப்பியிருந்த எண்களுக்கு போன் பண்ணி முடித்தாயிற்று.

மாதம் முடிந்த பின் தொலைபேசிக் கட்டணத்திற்கான சீட்டு வந்ததும் தான் தெரிந்தது ஏதோ தவறு இருக்கிறது என்று! கட்டணம் $250க்கும் மேலே! மாத ஆரம்பத்தில் தொலை பேசி இணைப்புக்காக பேசிய போது சொல்லப்பட்ட கட்டணத்தை விட மிக அதிகம்! அரக்கப் பரக்க அவர்களைக் கூப்பிட்டு (தொலைபேசியில் தான்) பேசிய பிறகு தான் தெரிந்தது என் தவறு. என்னுடைய இதர மாநில பேச்சு அனைத்தும் "இணைப்பர் உதவி பெற்றவை" என்று. (Operator Assisted Calls). அமெரிக்காவில் தொலைதூர எண்களுக்கு 0க்கு பதிலாக 1ஐ அழுத்த வேண்டும் என்பது அப்போது தான் தெரிந்தது! மூக்கால் அழுதுகொண்டே கிட்டத்தட்ட $220 அதிகமாகக் கொடுத்தேன்!

இன்று அமெரிக்காவில் இருக்கும் தொலைபேசி மூலமான உதவி சேவைகளில் பெரும்பான்மையானவை இந்தியாவிலிருந்து தான் நடக்கின்றன. அங்கு வேலை செய்யும் இளைஞர்கள், இளைஞிகள் இதைப் படித்தால் வாய் விட்டு சிரிப்பார்கள் - 'இவனுக்கெல்லாம் அமெரிக்கா வாழ்வு' என்று.

மின்சார விளக்கை எரிய வைக்கத் திணறியதும், என் மனைவி இங்குள்ள சுவிட்ச்சைப் பற்றி விளக்கியது (அறிவாளி படத்தில் தங்கவேலு - சரோஜா பேசும் 'சொஜ்ஜி, இடியாப்பம், முருக்கு, மசால்வடை' வசனம் ஞாபகம் வருகிறதா?), முதல் முறையாக காரை ஓட்ட ஆரம்பித்து, சாலையில் எந்தப்பக்கம் போவதென்று திணறியது (நல்ல வேளை யாரையும் இடிக்கவில்லை), குளியலறைக்குள் போய்விட்டு, தாழ்ப்பாளை போடத் தடவியது, ‘உன் நடுப்பெயர் என்ன?’ (middle name) என்ற கேள்வியைப் புரிந்து கொள்ளத் திண்டாடியது, எல்லாமே தமாஷ்தான்!

எல்லாவற்றையும் விட அதிகமான சிரிப்பும், வெறுப்பும் வந்தது என் ஆங்கில மொழி உச்சரிப்பும், வார்த்தைப் பிரயோகமும் தான். என் மனைவி ஓட்டிய கார் விபத்தில் அடிபட்டதும், அதை சரி செய்ய போன் செய்து காரை எப்போது 'கராஜில்' (Garage) கொண்டு விடுவது எனக் கேட்க, அவர் 'பாடி ஷாப்?' (body shop) எனத் திருப்பி கேட்க, நான் குழம்பி 'நான் வேலை தேடவில்லையே' என்றேன்! அப்புறம் தான் புரிந்தது - நம்மூர் 'கராஜ்' - அவர்களின் 'பாடி ஷாப்'; நம்மூரின் 'பாடி ஷாப்' அவர்களின் 'கன்சல்டிங் கம்பெனி' என்று. ஒருவழியாக புரிந்து கொண்டு, புரிய வைப்பதற்குள் போதும்-போதும் என்றாயிற்று.

கடந்த முறை இந்தியா சென்ற போது, என் ஆங்கிலத்தைக் கேட்ட கல்லூரி நண்பன் என்னுடைய உச்சரிப்பு மாறி விட்டது (அதாவது முன்பு போல் நன்றாக இல்லை) என்று குறைப்பட்டுக்கொண்டான். இங்கு இன்னமும் சில சமயம் என் உச்சரிப்பு சரியல்ல எனக் கூறுகிறார்கள். என் ஆங்கில உச்சரிப்பு இப்போது இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் பசிபிக் கடலில் மிதந்து கொண்டு இருக்கிறது என நினைக்கிறேன்!

செவ்வாய், ஜூலை 05, 2005

தொலைந்து போன தமிழ் நயம்

இப்பொதெல்லாம் திரைப்படங்களில், தொலைக்காட்சியில் (இன்னும் வானொலியில் அவ்வளவாக இந்த பாதிப்பு இல்லை), தமிழில் பேசுபவர்கள் வார்த்தைகளை உப்யோகிக்கும் முறை அவ்வளவு நன்றாக இல்லை. அந்நிய மொழிக் கலப்பு, உச்சரிப்பு மோசம் என்பது போக, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், தரக்குறைவான வார்த்தைப் பிரயோகம் என்பது மிகச் சாதாரணமாகி விட்டது. இதில் முக்கியமாக ஒரு சராசரி அரசியல்வாதியின் பேச்சை கட்சி ஈடுபாடு இல்லது வார்த்தை உபயோகத்தை மட்டும் கணித்தால் மனம் மிகவும் வருத்தப்படும்!

ஒரு மொழியின் வளர்ச்சி, அந்த மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. தற்போதைய சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் பெரும்பாலான வார்த்தைகள் ஒன்று மனதைப் புண்படுத்தும் வகையில் அநாகரீகமாகவோ, அல்லது அசிங்கமாகவோ இருப்பது ஒவ்வொரு தமிழனும் வருந்த வேண்டிய விஷயம்.

நான் பள்ளியில் படிக்கும் போது தமிழ் ஆசிரியர் திரு. வெங்கடராமன் ஒரு பழம் தமிழ் செய்யுளை உதாரணம் காட்டியது நினைவிற்கு வருகிறது. ஒருவரை அவலட்சணம், எருமை, கழுதை என்றெல்லாம் திட்டுவதற்கு பதிலாக அந்தச் செய்யுளின் முதல் வரிகள் இதோ:
"எட்டேகால் லட்சணமே
எமனேறும் பரியே
மட்டிற் பெரியம்மை வாகனமே..."

தமிழில் எண்களை எழுதும் போது 8க்கு 'அ'வையும், 1/4க்கு 'வ'வையும் உபயோகிப்பதைக் கொண்டு "எட்டேகால் லட்சணமே" என்றும் (அதாவது அவலட்சணம்), எமன் எறும் பரி (குதிரை - அதாவது எருமை) என்றும், மூதேவி (லக்ஷ்மியின் அக்கா என்ற முறைப்படி - பெரியம்மை) வாகனமான கழுதை என்றும் அழைப்பதாக இந்தச் செய்யுளுக்கு விளக்கம் கொடுத்தார்! திட்டுவதற்கு கூட நயமான வார்த்தைகளை உபயோகித்தனர் அக்காலத்தில்.

போன நூற்றாண்டிலே கூட பாரதியார் தன் சக மாணவன் கிண்டலாக "பாரதி சின்னப் பயல்" என்று முடிக்குமாறு வெண்பா எழுதச் சொல்ல, அவர் "கார் மேகம் போலிருண்ட காஞ்சிமதி நாதனைப் பாரதி சின்னப் பயல்" என்று முடியுமாறு எழுதினார்! (பார் அதி சின்னப் பயல் எனப் பிரித்து பொருள் கொள்ள வேண்டும்).

இப்படியெல்லம் சிலேடையும், நயமுமாய் இருந்த தமிழ்ப் பிரயோகம், இப்பொது தாழ்ந்து போனதற்கு யார் காரணம்? அரசியலா? திரைப்படமா? அல்லது நாமா? எனக்கென்னமோ இதன் முக்கிய காரணம் மக்களாகிய நாம் தான் எனத் தோன்றுகிறது.

என்னால் முடிந்தது தரக்குறைவான வார்த்தைகளை உபயோகிப்பதில்லை என்றும், அப்படி உபயோகிப்பவரை முடிந்தால் திருத்தவும், இல்லாவிடில் கண்டு கொள்வதில்லை என்றும் உறுதி!

திங்கள், ஜூலை 04, 2005

பழம் நூல்களில் கணிதம் - பகுதி இரண்டு

சுலப சூத்திரங்கள்

இந்து மதத்தில் ஒரு தனி ஆசிரியரின் படைப்பாய் இல்லாமல், வாய் வழியாக குருகுல முறையில் கேட்டு, மனனம் செய்து, ஒரு தொகுப்பாக எழுதப்பட்ட நூல்கள் நிறைய உண்டு. அதே வழியில் இதுவும் ஒரு தொகுப்பு. இதன் காலம் கி.மு. 2000லிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்! திரு சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி தன்னுடைய புத்தகத்தில், இதைப் பற்றிய விளக்கம் அளித்திருக்கிறார். (Geometry in Ancient India by Satya Prakash Sarasvati)

இந்த இணைப்பும் சில விபரங்களைத் தருகிறது.
http://www.indolink.com/Forum/Arts-Culture/messages/1129.html

இதன் தொடக்கம் முதலில் ஆன்மீக விஷயங்களுக்காக - ஒரு வழிபாட்டுத் தலத்தை நிர்மாணிக்க, திசைகள், அளவுகள், மற்றும் தூரங்களை நிர்ணயிக்கும் விதமாக இருந்தது. அதனால், கோணங்களைப் பற்றியும், தூரங்களைப் பற்றியும் இதன் விதிகள் மிக தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த விதிகள் 'துல்லியத்தை' கணிப்பதை விடவும், முக்கியமாக வாழ்க்கையின் நடைமுறைக்கு ஏற்ற தெளிவையும், எளிமையையும் பின்பற்றி எழுதப்பட்டுள்ளன என்பதுதான். (Practicality and Simplicity over Precision).


ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களைப் பற்றிய 'பிதாகரஸ்' விதியை எல்லோருக்கும் தெரியும். சுலப சூத்திரங்களில் இதைப் பற்றிய விபரங்கள் உள்ளன. விபரங்களுக்கு அம்மா, மற்றும் ஸரஸ்வதி எழுதிய, மோதிலால் பனார்சிதாஸ், தில்லி பதிப்பகத்தாரின் (1979) புத்தகத்தைப் பார்க்கவும். [Amma, T. A. Sarasvati. Geometry in Ancient and Medieval India. Motilal Banarsidass. Delhi: 1979.]


சுஸான்னா காங் என்பவர் எழுதிய இந்த வலைத்தளமும் இது பற்றி தெரிவிக்கிறது.
http://www.math.ubc.ca/~cass/courses/m309-01a/kong/sulbasutra_geometry.htm

இந்த சூத்திரங்கள் பெரும்பாலும் ஆன்மிகம் சம்பந்தமாகவே இருந்ததால், சில சமயம் தெய்வ வழிபாடு போன்று எழுதப்பட்டாலும், அதில் சில விஷயங்களைப் பொதிந்து வைத்திருந்தனர். வடமொழியில் ஒவ்வொரு சப்தமும் (எழுத்தின் ஒலி) ஒரு எண்ணைக் குறிக்கும் படி வைத்து, வழிபாட்டுச் செய்யுள் எழுதியுள்ளனர். இந்த செய்யுளில் உள்ள சப்தங்களின் வரிசை - அதாவது, சப்தங்கள் குறிக்கும் எண்களின் வரிசை 'பை' [Pi] என்னும் இலக்கத்தின் மதிப்பீடை குறிப்பதாக அறியப்பட்டுள்ளது. இது மாணாக்கர்கள் மனப்பாடம் செய்ய மிக ஏதுவாக இருந்தது.
விபரங்களுக்கு மறுமொழியப்பட்ட இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும். http://www.geocities.com/CapeCanaveral/7348/math.html?200527

மொழி பெயர்க்க நேரமில்லாததால், மேலும் சில வலைத்தளங்களை இங்கே தந்திருக்கிறேன்.
http://www.tamil.net/node/476
http://azorion.tripod.com/bose_concentric_circles.htm
http://www.rediff.com/news/2004/aug/16rajeev.htm
http://www.world-mysteries.com/awr_7.htm
http://www-groups.dcs.st-and.ac.uk/~history/Indexes/Indians.html