திங்கள், மே 29, 2017

ஆடிசிதள யசோதா!

ஆடிசிதள யசோதா!

சிறு வயதில் கேட்ட, மனதுக்குப் படித்த பாடல்களில் 'ஜகதோ தாரணா' என்ற புரந்தர தாசரின் பாடல் குறிப்பிடத்தகுந்த ஒன்று. பட்டுக்கோட்டை, மன்னார்குடி வாசத்தில் வீட்டில் வானொலி மட்டும் தான்; தொலைக்காட்சிப் பெட்டி இல்லை. மன்னார்குடியில் ஒலிநாடா வாங்கினோம். அப்பா வேலையிலிருந்து வீடு வரும்வரைதான் திரைப்படப் பாடல், இலங்கை வானொலி தயவில். அதற்குப் பிறகு கர்நாடக இசைப் பாடல்கள் தான். கண்ணன் பாடல்கள் என்று வீட்டில் இரண்டு 'டேப்' (ஒலி நாடா).  திரு எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ஒன்று, மற்றொன்றில் வானொலியில் 'இசை அமுதம்' நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்து வைத்த கதம்பம். அந்தக் கதம்பத்தில் இந்தப் பாடல், தவிர தமிழில் என்ன தவம் செய்தனை, அலை பாயுதே கண்ணா போன்ற வேறு சில கண்ணன் பாடல்கள். திருமதி எம். எஸ். சுப்புலக்ஷ்மியின் குரலில் ஜகதோ தாரணா என்று கேட்ட போது அதன் அர்த்தம் புரியாவிட்டாலும் மனதுக்கு இதமாக இருந்தது. இலங்கை வானொலியில் மாலை ஆறு மணிக்கு மேல் திரை இசை இல்லாத காரணத்தாலும், அப்பாவின் மேலிருந்த பயம் கலந்த மரியாதையினாலும், கர்நாடக சங்கீதம் கேட்க ஆரம்பித்தாலும் நாளாவட்டத்தில் மனது தாமாக இஷ்டப்பட்டு கண்ணன் பாடல்களை கேட்க ஆரம்பித்தது.

2010-ல் இந்தியா சென்ற போது என் அத்தையின் தயவில் அவர்கள் குடும்ப்பத்துடன் பெங்களூருக்கு அருகிலுள்ள அப்ரமேய சுவாமி கோவிலுக்குச் சென்றோம். சென்னப்பட்டனத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தோடா மல்லுர் என்ற இடம். இங்கிருக்கும் கிருஷ்ணர் கோவிலில் தான் புரந்தர தாசர் இந்த 'ஜகதோ தாரணா' என்ற பாடலை இயற்றினார் என்றார் என் அத்தை. காலையில் சென்று, அபிஷேகம் முடித்து, கோவிலிலேயே முழுச்சாப்பாடும் சாப்பிட்டு மதியத்திற்கு மேலேதான் வீடு திரும்பினோம். என் அத்தையில் குடும்பம் இருபது வருடங்களுக்கும் மேலாக பெங்களூரிலேயே வசித்து வருவதால் அவர்களுக்கு கன்னடம் நன்றாகவே தெரியும்; தமிழிலும் ஆர்வம் அதிகமாதலால், இந்தப் பாட்டைப் பற்றி முதல் முறையாக விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். உலகில் உள்ள மற்றவர்களுக்கெல்லாம் தெய்வமாகத் தெரிந்தாலும், யசோதைக்கு கண்ணன் குழந்தைதான் என்ற கருத்தை வைத்து எழுதப்பட்ட ஒரு அருமையான பாடல். 'ஆடிசிதள' என்றால் ஆட்டுகின்ற, ஆட்டிவைக்கின்ற என்ற பொருள். ஒவ்வொரு பத்தியிலும், தெய்வத்தின் உயர்குணங்களைச் சொல்லிவிட்டு, அப்படிப்பட்ட தெய்வத்தை ஆட்டிவைக்கின்ற யசோதா என்று புரந்தர தாசர் வியக்கின்றார்.

இதே போன்ற கருத்தை ஒட்டி தமிழில் 'என்ன தவம் செய்தனை' (பாபநாசம் சிவன்) பாடல். இந்த விடுமுறையில் எங்கும் வெளியே செல்லாமல், வீட்டில் புத்தகம் படிக்கவும், பாட்டுக் கேட்கவும் (சாப்பாடு, தூக்கம் தவிர) நேரத்தை செலவழித்தேன். இந்த இரண்டு பாடல்களையும் கேட்கையில் இவைகளுக்கு இடையே இருந்த ஒத்த கருத்தையும், அதில் உள்ள வித்தியாசத்தையும் மனது அலச ஆரம்பித்தது. இதே போன்று தினசரி வாழ்க்கையில் ஒருவர் பிரபலமாகும் போது அவர் தாய், தந்தை, சகோதர, சகோதரிகளின் உறவில் எந்த மாதிரியான மாற்றம் வரும் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன்.

புரந்தரதாசர் பாடல் முழுவதும் ஒரு விதமான வர்ணனை - அவர் கருத்தில். கண்ணனை குழந்தையாகப் பெற்றதற்கு யசோதை தவம் செய்திருக்க வேண்டும், கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற மாதிரி சொல்லப்படவில்லை. மற்றவர் பார்வையில் கண்ணன் தெய்வம், யசோதைக்கு கண்ணன் குழந்தைதான். பாபநாசம் சிவன் வர்ணனையோடு நிற்கவில்லை - 'என்ன தவம் செய்தனை' பாட்டில் ஒரு விதமான நிர்ணயம் இருக்கிறது. கண்ணனை குழந்தையாகப் பெற்றது கிடைப்பதற்கு அரிய ஒரு பெரிய விஷயம் அதற்கு தவம் செய்திருக்க வேண்டும் என்ற தீர்மானம் தெரிகிறது. இது ஒரு நிச்சயமான விஷயம் தானா என்ற யோசனை வந்தது. முன்னாளில் படித்த ஒரு புத்தகம் 'சங்கர் வேதாந்தம்' எழுதிய "The Hidden Brain".  அதில் 'Spotlight effect' பற்றி அலசியிருக்கிறார்.  அதை படித்தபோது இந்த இரு பாடல்களையும் ஒப்பிட்டு வந்த யோசனை தான் இங்கே.

பாபநாசம் சிவன் எண்ணத்தில் முழு ஆக்கிரமிப்பும் கண்ணன் மட்டும் தான்.  அவர் இந்தப் பாடலை எழுதும் போது அவருக்கு கண்ணனின் பெருமைகள் மட்டுமே அவருடைய spotlight.    எப்படி மேடையில் கதாநாயகி மேல் மட்டும் பிரகாசமான விளக்கின் ஒளி விழும் போது மேடையில் இருக்கும் மற்ற துணை நாயகிகள் கன்னுக்குத் தெரிவதில்லையோ அதே போல அவருக்கு கண்ணனைத் தவிர மற்றவர்களைத் தெரியவில்லை.  அதனால்தான் தீர்மானமாக அவர் 'யசோதை தவம் செய்திருக்க வேண்டும்' என்று சொல்கிறார்.

புரந்தரதாசர் எண்ணம்  வேறு.  அவர் எண்ணத்தில் யசோதையும் இருக்கிறார்.  ஒரு தாய்க்கு மகனின் நலத்தில் இருக்கும் பிடிப்பு, மகனின் வெற்றியில் இருக்கும் பிடிப்புக்கு சமமானது.  தமிழ் இலக்கியங்களில் போர்க்களத்தில் இறந்த மகனுக்கு மார்பில் புண்ணா அல்லது முதுகில் புண்ணா என்று கேட்ட அன்னையைப் பற்றி படித்தாலும், மகன் நலத்தில்தான் அன்னைக்கு  அக்கறை.  அதனால் தான் புரந்தரதாசர் எழுதிய பாட்டில் 'யசோதையின் தவம்' பற்றி அவர் சொல்லவில்லை.  அன்னைக்கு மகனின் வெற்றியும் முக்கியம்; மகன் ஆபத்து இல்லாமல், நலமாக இருக்க வேண்டும் என்ற ஆசையும் முக்கியம்.  கண்ணன் வெற்றிகளுக்கு அவன் சந்தித்த ஆபத்துகளும், அவனுக்கு இருந்த பொறுப்புகளுக்கு, சந்தித்த தர்மசங்கடங்களுக்கும் யசோதையின் மனத்தில் நிறைய கவலைகளும் இருந்திருக்க வேண்டும்.  இப்படி ஒரு கதம்பமாக உணர்ச்சிகள் இருக்கையில் தீர்மானமாக 'இது ஒரு பெரிய தவம், பாக்கியம்' என்று சொல்ல புரந்தரதாசரால் முடியவில்லை.  அதனால் தான் அவர் பாடல் வரிகள் 'ஆதிசிதள யசோதா' என்று மட்டும் சொல்கிறது.

ஆட்டிவைக்கின்ற யசோதாவின் மனதில் கண்ணனை வளர்த்தது ஒரு தவமா, பொறுப்பா, கவலையா, என்று யார் தீர்மானமாக சொல்ல முடியும்?