செவ்வாய், டிசம்பர் 27, 2005

தெரியாமல் தெரிந்தது

சென்ற வாரம் இராமநாதன் ‘தத்து(பி)த்துவம் - 2: பிஸியாலஜி’ என்ற தலைப்பில் நம் உடலினுள் இருக்கும் அறிவைப் பற்றி எழுதியிருந்தார். நம்மால் வார்த்தைகளால் சொல்ல முடியாவிட்டாலும், உடலினுள் நடக்கும் நிறைய விஷயங்கள் (உதாரணமாக 'பார்ப்பது') சிக்கலானவை; இந்த மாதிரி செயல்கள் (உள் அறிவுகள்) நமக்கு வார்த்தைகளால் (வெளி அறிவு) விளக்க முடியாமல் ஒரு விதமான 'கம்யூனிகேஷன் கேப்' இருக்கிறது என்றும், இந்த 'பார்டிஷண்' பற்றி கவலைப்படவேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

அவர் பதிவில் கூறியிருந்த சில விஷயங்கள் பற்றி நான் யோசித்ததுண்டு. அந்த மாதிரி யோசித்தவைகளை (குருட்டு யோசனையை) ஒரு பதிவாகவே போட்டு விட்டேன்.

நமக்கு தெரிந்த அறிவை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று புற அரிவு (தெரிந்து தெரிந்தது - வெளியறிவு); நம்மால் வார்த்தைகளால் விளக்க முடிந்தால் அது இவ்வகையைச் சாரும். இரண்டாவது உள்ளறிவு (தெரியாமல் தெரிந்தது) - இராமநாதன் எழுதிய 'பார்ப்பது' இந்த வகையைச் சாரும். நம்முடலில் நம் வெளியறிவின் ஆணையை எதிர்பாராமல், இருதயம் துடிப்பது, நுரையீரலில் காற்றிலிருந்து பிராணவாயுவைப் பிரித்து இரத்தத்துடன் கலப்பது போன்ற காரியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த மாதிரி காரியங்களில் ஏதாவது சின்னத் தடங்கல்கள் வந்தால் கொஞ்சம் மாற்றிக் கொண்டு (கொட்டாவி - நம்முடலின் பிராணவாயு அளவைக் கூட்டிக் கொள்ள என்று படித்ததாக ஞாபகம்) தொடர்ந்து தொந்தரவில்லாமல் நடத்திக்கொள்ளும் சாமர்த்தியமும் உண்டு. இதெல்லாம் நம் புற அறிவுக்கு தெரிந்திருக்கவேண்டும் என்றில்லை; நிறையப் பேருக்கு இது தெரியாது (நான் உள்பட). அதே சமயத்தில் நம்முடலில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கிறபடியால், நமக்கு இது பற்றித் தெரிந்திருக்க வேண்டும்; இந்த அறிவு நம் உடலின் ஒரு பாகத்தில் பதிந்திருக்க வேண்டும்.

இந்த உள்ளறிவில் இருக்கும் விபரங்கள் நம் புற அறிவோடு சேராமல் ஒரு தடுப்பு இருக்கிறது. இந்த தடுப்பைப் பற்றி - முக்கியமாக இந்த தடுப்பை நீக்குவது பற்றி தெரிந்துவிட்டால் எவ்வளவோ நல்லதாகப் போய்விடும். என் மருத்துவ நண்பர் ஒருவர் சொன்னது - 'யார் வேண்டுமானாலும் மருந்து கொடுத்துவிடலாம்; வியாதி என்ன என்று தெரிந்து கொண்டுவிட்டால். அங்கே தான் சிக்கலே ஆரம்பம்'. இந்த 'Diagnosis’ சிக்கலுக்கு நாம் ஒரு தீர்வு கொண்டுவந்து விடலாம். நாம் மருத்துவரிடம் போய் 'கண் மங்கலாகத் தெரிகிறது, வலிக்கிறது' என்றெல்லாம் சொல்வதற்குப் பதிலாக 'Na+ (sodium) stay open in photoreceptor when LIGHT is being absorbed' என்று சொல்லலாம் :-] (நன்றி இராமநாதன்!)

இது முதல் கட்டம் - நாம் 'எப்படி' என்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளலாம் (கண் எப்படிப் பார்க்கிறது? காது எப்படிக் கேட்கிறது). அடுத்த கட்டமாக பிற உயிர்களில் உள்ள சில சக்திகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் (நம்மை விட நாய் ஏன் அதிகமாக மோப்பம் பிடிக்கிறது?); அடுத்து தாவரம் (எப்படி சூரிய ஒளியிலிருந்து உணவு தயாரிப்பது?).

இந்த மாதிரி 'எப்படி' கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்தால் 'ஏன்' என்ற கேள்விக்கும் விடை கிடைக்கலாம் (காது ஏன் சில ஒலியலைகளை மட்டும் கேட்கிறது?) இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் தேடத் தேட நம் புற அறிவும் வளரும்; நமக்கும் நன்மையுண்டாகும் - உண்மைதானே? ஆகையால் இந்த உள்ளறிவு - வெளியறிவு தடுப்பின் கதவு எங்கே? எப்படித் திறப்பது என்று யாராவது ஆராய்ந்து சொன்னால் தேவலை.

இங்கே இலக்கு 'பார்ப்பது'. அதை நான் எப்போதோ அடைந்துவிட்டாலும், 'பார்ப்பது' என்ற பயணத்தை ஆராய்ந்ததில் சில சிந்தனைச் சந்தோஷங்கள்.

வெள்ளி, டிசம்பர் 16, 2005

ஒரு தெற்குப் பயணம்!

சென்ற வாரம் ஒரு ஜோலியாக முதல் முறையாக தெற்குப் பக்கம் (தெற்கு கரோலினா) சென்று வந்தேன். முதல் நாள் மாலை வீட்டம்மாவின் உதவியுடன் காரில் ரயில் நிலையத்தை அடைந்து, நியூஜெர்ஸி ட்ரான்சிட் தயவால் நூவர்க் விமான நிலயத்திற்கும் (பெரிய ரயிலிலிருந்து குட்டி மோனோ ரயில் மாறி) நேரத்தோடு போய் சேர்ந்தேன். வழக்கமான பாதுகாப்பு பரிசோதனை (கோட், பெல்ட், காலணி கழற்றி, மாட்டி) எல்லாம் முடித்து, இருக்கை வரிசையை கூப்பிடும் வரை காத்திருந்து போய் உட்கார்ந்து, ஒரு சுகமான பயணம். ஒன்றரை மணி நேரத்தில் சார்லெட் சென்றாயிற்று.

அங்கிருந்து ஃப்ளாரென்ஸ்க்கு ஒரு குட்டி விமானம் - டாஷ் 8 வகை. மொத்தமே பதினைந்து வரிசை தான் இருக்கும். இறக்கைகளில் பெரிய விசிறி (ப்ரொபெல்லர்); ஒரு கயற்றால் கட்டிப் போட்டிருந்தார்கள். படிக்கட்டுக்கு (கதவு தான் - திறந்தால் படி) அருகிலேயே இந்தப் பிரம்மாண்டமான விசிறி இருந்ததால், கயற்றால் கட்டியிருந்தது ஒரு தைரியத்தைக் கொடுத்தது. தெற்கில் உள்ளவர்கள் பேசும் ஆங்கிலம் புரிவது கஷ்டமாயிருந்தது. பதிலுக்கு ஒரே அல்ப சந்தோஷம் நான் பேசியதும் அவர்களுக்குப் புரியவில்லை என்பது தான்.

அதிகம் பிரயாணிகள் இல்லை என்பதால், விமானப் பணியாளர் கிடுகிடுவென்று தலைகளை எண்ணி (நம்மூரில் ஆம்னி பஸ் இரவில் ஏதாவது ஒரு இடத்தில் சாப்பிட நிறுத்தி பின் கிளம்புகையில், கிளீனர் வந்து எண்ணுவாரே அது போல்) தன் பேப்பரில் சரிபார்த்து, காக்பிட்டில் உள்ள பைலட்டிடம் 'ரைட்' கொடுத்தார். அவரும் ஒரு முறை வந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு இவரிடம் ஏதோ சொல்ல, விமானப் பணியாளர் முதல் மூன்று வரிசைகளில் அமர்ந்திருந்தவர்களை பின் வரிசைகளுக்கு போகச் சொன்னார். மொத்தம் பதினைந்து பேர்தான் பயணம் என்பதால், விமானத்திற்கு பின் பாரம் வேண்டும் என்று இவ்வாறு செய்வதாகச் சொன்னார். எனக்கு கிராமத்திலிருந்து டவுனுக்கு வண்டி கட்டிக் கொண்டு போனது ஞாபகம் வந்தது. வைக்கோலை எல்லாம் சரி பண்ணி, ஜமுக்காளம் போட்டு (சாய்ந்து கொள்ள சிவப்பு குஷண் எல்லாம் இருக்கும், சின்னச் சின்ன கண்ணாடிகள் தைத்து), ஏறி உட்கார்ந்தால், பெரியவர்கள் வந்தவுடன், வண்டிக்காரர் நம்மை எழுப்பி, கொஞ்சம் 'முன்னேவா - பின்னே போ' என்றெல்லாம் பாரம் சரி பண்ணியது நினைவுக்கு வந்தது.

இருபது நிமிடப் பிரயாணம் என்பதால் கடலை, காப்பி எல்லாம் கிடையாது. ஃப்ளாரன்ஸ் போய் இறங்கினால் ஒரே மழை. என்னிடம் ஒரே ஒரு கைப்பெட்டிதான்; எடுத்துக் கொண்டு சற்று மெதுவாக ஓடி (தண்ணீர் வழுக்கும் என்று பயம்) விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டேன். முன் கதவைத் திறந்து கொண்டு நாம் வந்தால், பின் கதவை (விமானத்தின் தொப்பை) திறந்து பொட்டியை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். பெரிய பெட்டி கொண்டுவந்தவர்கள் பாடு கொஞ்சம் திண்டாட்டம். எல்லாப் பொட்டிகளையும் இறக்கும் வரை காத்திருப்பதா (மழையில் பொட்டி நனைந்து கொண்டிருந்தது வேறு கவலை), அல்லது பேசாமல் ஓடிப் போய் பொட்டியைத் தூக்கிக் கொண்டுவருவதா என்று யோசித்துக் கொண்டு ஒதுங்கி இருந்தார்கள்.

அங்கிருந்து காரில் ஹார்ட்ஸ்வில் பயணம். 40 நிமிடப் பயணம் எனக்கு ஒரு மணி ஆயிற்று - இரவில் திருப்பம் தெரியாமல் தவறாக 6 மைல் போய் திரும்பியதால். மறுநாள் மாலை ஜோலியெல்லாம் முடித்து வெயிலிலேயே திருப்பம் - கார் (இந்த முறை 35 நிமிடங்களில் வந்தாயிற்று), குட்டி விமானம் (திரும்பும் போது மொத்தமே 12 பேர் தான் விமானப் பணியாளரையும் சேர்த்து - மறுபடி முன் பாரம் பின் பாரம் தமாஷ்), பெரிய விமானம், மோனோ ரெயில், பெரிய ரெயில், வீட்டம்மா கார் என்று குளிரில் நடுங்கிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டு (ஒரே பசி), குழந்தைகளோடு அரை மணி விளையாடி, படுத்துத் தூங்கினால் எட்டு மணி கழித்துதான் எழுந்திருந்தேன். இருந்தும் அலுப்பு போகவில்லை. யோசித்துப் பார்த்தால், சிறு வயதில் மாதவனூரிலிருந்து வண்டி கட்டி தேவிப் பட்டணம் போய், பஸ்ஸில் இராமனாதபுரம், பின் குதிரை வண்டியில் பஸ் ஸ்டாண்டிலிருந்து வடக்கு வீதி வீட்டுக்கு போனதிலிருந்த களைப்பை விட மிக அதிகமாக இருந்தது ஏன் எனப் புரியவில்லை.

வியாழன், டிசம்பர் 15, 2005

திருமுகம் சொல்வதென்ன?

கணிப்பொறியெல்லாம் வெச்சு ஆராச்சியெல்லாம் பண்ணி படத்தில அவங்க மகிழ்ச்சியா இருக்காங்களா இல்லையான்னு சொல்லியிருக்காங்க. 83 சதவீதம் மகிழ்ச்சி, 9 சதவீதம் அருவெறுப்பு, 6 சதவீதம் பயம் மற்றும் 2 சதவீதம் கோபம் இருக்காம் இவங்க முகத்துல.

இந்த மூன்று முன்னாள் இந்திய பிரதம மந்திரிகள் உணர்ச்சிகளையும் ஆராய்ந்து சொன்னாங்கன்னா தேவலாம்.

திரு நரசிம்ம ராவ்

திரு வி.பி. சிங்

திரு தேவ கவுடா

அவங்க சொல்லாட்டாலும் நீங்க என்ன சொல்லுறீங்க?

செவ்வாய், டிசம்பர் 13, 2005

எலிக்குள் மனிதன்!

ஆராச்சிக்காக 2000-ம் ஆண்டில் விஞ்ஞானிகள் எலியின் மூளைக்குள் மனித செல்களைப் புகுத்தியிருக்கிறார்கள். ஸ்டெம் செல் ஆராச்சித் தடை அமெரிக்காவில் ஒரு முக்கியமான பிரச்சனை - கடந்த தேர்தலில் இது மிகவும் அதிகமாகப் பேசப்பட்ட ஒன்று. இப்போது சான் டியாகோவில் உள்ள சால்க் பல்கலைக் கழகத்தில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. இந்த செய்தி ஒரு விட்டலாச்சார்யா படம் பார்ப்பது போல் இருக்கிறது.

இது சரியா தவறா என்ற வாதத்தை தவிர்த்து பல கேள்விகள் எழுகின்றன. ஒரு மூளை எப்போது 'எலி' யிலிருந்து 'மனிதன்' ஆகிறது? 50% - 50% எலி, மனித செல்கள் இருந்தால் அது என்ன? சதவீத கணக்கில் 10% மனிதன் 90% எலி செல்கள் மூளையில் இருப்பது, 100% எலி செல்கள் இருப்பதை விட எலிக்கு அதிகம் உதவுமா? உதாரணமாக எலிகள் பூனைக்கு பயப்படும். மனித செல்கள் இருந்தால் அந்த பயம் போய்விடுமா? அப்படிப் போய்விட்டால் அது எலிக்கு நல்லதா?

மூளைக்குள் மனித செல்கள் இருந்தால் அந்த எலியின் சிந்தனை மாறுமா? மனம் என்று ஒன்று வருமா? அல்லது மாறுமா? அந்த எலிக்கு ஒரு ஆண் மீதோ அல்லது பெண் மீதோ பாசம், காதல் வருமா?

ஒரு மனித மூளை எலியின் உடலில் மாட்டிக்கொள்வது நல்லதா? சரியா? இந்த மாதிரி ஆராய்ச்சிகளினால் வரும் நன்மை, தவிர்க்கமுடியாத பக்க விளைவுகளால் வரும் தீமைகளை விட அதிகமா?

பதில் தெரியவில்லை!

திங்கள், டிசம்பர் 12, 2005

எனக்கு கேட்கத்தான் தெரியும்!

"நீ கேட்காதே - நானே கேட்கிறேன்! எனக்கு கேட்கத்தான் தெரியும்!"

திருவிளையாடலில் தருமி சொல்லும் பிரபலமான வசனம். நகைச்சுவையுடன் அலுவலகத்திலும், படிக்கும் போது பள்ளி/கல்லுரியிலும் உபயோகித்த வசனம். இப்போது அதற்கு ஒரு புது அர்த்தம் வந்திருக்கிறது! மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இந்த மாதிரி சொன்னால் அதற்கு காரணமே தனி!! ஒவ்வொரு கேள்வியும் வருமானம் தான்!

பிரச்சனைகளுக்கு தீர்வான பதில்களை எதிர்பார்க்கும் மக்களுக்கு, பிரச்சனைகளை எடுத்து வைக்குமாறு இருக்கும் கேள்விகளையே கேட்பதற்கு பணம் வாங்குவது ஒரு விதமான முன்னேற்றம்தான். இதில் எல்லாக் கட்சிக்காரர்களும் இருப்பதுதான் ஜனநாயகமோ?

கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதிலேதையா?

சனி, டிசம்பர் 03, 2005

எந்த சட்டம் நியாயம்?

சமீபத்தில் ஸ்ரீகாந்த் மீனாட்சி அபு சலேம் இந்தியாவுக்கு விசாரணைக்காக கொண்டு வரப்பட்டதைப் பற்றி எழுதியிருந்தார் (குற்றம் இங்கே, தண்டனை எங்கே?) . இந்த வாரம் இராமநாதனும், ஷ்ரேயாவும், சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தியதற்காகான குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியக் குடிமகனைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

இந்த வழக்குகளில் முக்கியமான பிரச்சனை 'எந்த சட்டம் செல்லும்?' என்பதுதான். குற்றம் நடைபெற்ற நாட்டு சட்டமா? அல்லது, குற்றமிழைத்தவர் நாட்டு சட்டமா? அபு சலேம் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும், அவருக்கு இந்திய சட்டத்தில் கிடைக்க வேண்டிய தண்டனை கிடைக்காது - அதாவது குற்றம் நடந்த நாட்டு நீதி/தண்டனை கிடைக்காது! வான் ஙுவென்க்கு கிடைத்தது குற்றம் நடந்த நாட்டு நீதி/தண்டனை. எது சரி?

எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும், மெக்ஸிகோ நாட்டு போதை மருந்து கடத்தும் கூட்டங்களுக்கு எதிராக அமெரிக்க அரசு நிறைய நடவடிக்கைகள் எடுத்தது. அதில் மெக்ஸிகோ நாட்டு சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் உண்டு. 1992ல் அமெரிக்க உயர் நீதி மன்றம் 6க்கு 3 என்ற பெரும்பான்மையில் மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்க ஏஜென்ட்களால் கடத்தி வரப்பட்ட ஹம்பர்டோ அல்வாரிஸ்-மக்கெய்ன் மீதுள்ள "குற்றச்சாட்டை விஜாரித்து தீர்ப்பளிக்கும் உரிமை, மெக்ஸிகோ சட்டத்திற்கு விரோதமாக கடத்தப்பட்டதால் குறைந்துவிடாது" என்று தீர்ப்பளித்தது. அப்போது தலைமை நீதிபதி சமீபத்தில் காலமான வில்லியம் ரென்குயிஸ்ட் இதை ஆதரித்து தீர்ப்பளித்தார். விபரங்களுக்கு: http://www.crf-usa.org/bria/bria10_4.html

அதாவது, அமெரிக்க சட்டத்திற்கு எதிராக ஒருவர் செயல்பட்டதாக ஒருவர் மீது குற்றமிருந்தால் அவர் எந்த நாட்டிலிருந்தாலும், அவரை அமெரிக்க உளவுப் பிரிவோ அல்லது எந்த ஒரு அரசு சம்பந்தப்பட்ட ஊழியரோ குற்றம் சாட்டப்பட்டவரை கடத்தி வந்தால், அமெரிக்க நீதிமன்றங்கள் அந்த வழக்குகளை விசாரிப்பதோ அல்லது தீர்ப்பு வழங்குவதோ தவறில்லை; குற்றம் சாட்டப்பட்டவரை கடத்துவது தவறில்லை. இந்த தீர்ப்பின் உண்மையான விளக்கம், நாடுகளுக்கு இடையே இருக்கும் ஒப்பந்தங்கள் (அபு சலேமுக்கு இந்த மாதிரி ஒப்பந்தம் தான் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது) மீறப்படலாம் என்பதுதான். கடத்தல் குற்றம்; ஆனால் குற்றம் விசாரிக்கவே கடத்த வேண்டிய நிலை கொஞ்சம் பயமூட்டத்தான் செய்கிறது.

உலகம் முழுவதற்கும் ஒரு பொதுப் படையான சமூக சட்டம் வந்தால் இது போன்ற பிரச்சனைகள் அதிகம் வராது. அந்த மாதிரி ஒரு நிலை வருமா? ஒரு நாட்டுக்குள்ளேயே பொது சட்டம் கொண்டுவர முடியவில்லை - மதங்களின் ஆக்கிரமிப்பு, ஓட்டுக்காக அரசியல்வாதிகளின் பாரபட்சம் என்பவை எல்லா நாட்டிலும் இருந்து வருகிறது. அதுவரையில் இந்த மாதிரி குழப்பங்கள் இருந்து கொண்டு தான் இருக்கும்.

வியாழன், டிசம்பர் 01, 2005

தாடகையும் தாரகையே!

விஷ்ணுசித்தரைப் பற்றி (குமரன்) படித்து விட்டு, செய்திகளைப் படிக்கையில் 'எண்ணை உழல்' முதலில் வந்தது - அதனால் இந்தக் கவிதை!

தாடகையும் தாரகையே பெற்றவருக்கு
பெற்றவரும் மற்றவரே இதயமற்றவருக்கு

காதலியும் அம்புலியே செங்கவிக்கு
வெண்ணிலவும் பணியாரமே எம்பசிக்கு

மருந்தே விருந்தாகும் நோயாளிக்கு
விருந்தே மருந்தாகும் பாட்டாளிக்கு

திருமால்தான் தெய்வம் நம்மாழ்வாருக்கு
தரும்'மால்'தான் தெய்வம் ஆள்பவருக்கு!

திங்கள், நவம்பர் 21, 2005

(நெய்வேலி) விச்சுவின் இடைவேளை!

ஒரு மாதமாகி விட்டது விச்சு வலைத்தளத்தில் பதிந்து. வேலை விச்சுவை அட்லாண்டாவிற்கு அழைத்துக் கொள்ள அவனோடு பேசுவதும் குறைந்து போனது. தினம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்துவிட்டது மாதக்கணக்கில் பேசாமல் இருப்பது வித்தியாசமாக இருக்கிறது.

தீபாவளி மலருக்காக தமிழோவியம் தளத்திற்கு அவன் எழுதிய 'காரணம்'கதை பிரசுரமாயிருக்கிறது. அவனுக்கு அருகிலிருக்கும் நண்பன் என்ற சலுகையினால் அந்தக் கதை அவன் எழுதியவுடனேயே படித்துவிட்டேன். தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது விச்சு சொன்னது 'இன்னம் ஒரு பத்து/பதினைந்து நாட்களில் திரும்ப எழுத ஆரம்பித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்'. அப்பாடா!

சமீபத்திய கணக்கெடுப்பில் அமெரிக்காவில் உள்ள பத்து மோசமான (குற்றங்களின் எண்ணிக்கையை வைத்து) நகரங்களில் அட்லாண்டாவும் ஒன்று என்று சொல்லி பயமுறுத்தலாமா என்று ஒரு கணம் யோசித்தேன் - வெறுப்பேற்ற வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

ஞாயிறு, நவம்பர் 20, 2005

தினமலருக்கு நன்றி!

என் வலைப்பக்கத்தை தினமலரில் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று அலெக்ஸ் பாண்டியனும், நிலவு நண்பனும் பதிவின் மூலம் தெரிவித்தனர். நன்றி அலெக்ஸ்/நிலவு :-)

முதல் உணர்ச்சி ஆச்சரியம்! 'அட நம்ம எழுத்துக்குக் கூட அங்கீகாரமா?' என்று! இரண்டாவது மகிழ்ச்சி - 'ஆகா நாமும் ஏதோ சாதித்துவிட்டோம்' என்று. மூன்றாவது ஒரு நகைச்சுவை உணர்வு (விபரம் கீழே!).

தமிழ் செய்தித்தாள்கள், பத்திரிகைகள் தவறாமல் படிக்கும் பழக்கம் நின்று போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. கடைசியாகப் படித்த தமிழ் பத்திரிகை/செய்தித்தாள் என்று யோசித்தால், அம்மா/அப்பா இந்த முறையும் இந்தியாவிலிருந்து வரும் போது வாங்கி வந்த பாக்குப் பொட்டலத்தை கட்டிய காகிதம் தான்! எந்தப் பத்திரிகை என்று தெரியாமல் (எழுத்தைப் பார்த்து பத்திரிகையைக் கண்டுபிடித்ததும் ஒரு காலம் - இப்போது இல்லை!) மீதி செய்தி என்னவென்றும் புரியாமல் (சிறு வயதில் முடி வெட்டிக் கொள்வதற்காகக் காத்து இருக்கையில் அங்கிருக்கும் பழைய பத்திரிகைகள்/செய்தித் தாள்கள் படித்ததும், படித்து முடிக்கு முன் நம் முறை வந்துவிட, கதையின் முடிவு தெரியாமல் தவித்ததும் ஞாபகம் வருகிறது) ஒரே அவஸ்தை. அப்போதெல்லம் தோன்றும் ஒரு கேள்வி, 'எப்படி இவர்கள் எல்லாருக்கும் எழுத முடிகிறது?' என்பதுதான். அப்படி ஆச்சர்யமான ஒரு நிகழ்சி - அட என் பேரும் பத்திரிகையிலா? - எனக்கும் வந்திருக்கிறது!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் வளர்ந்து வந்த ஒரு அணிலையும், அதை எடுத்து வளர்த்து வந்த என் அப்பவையும் படம் பிடித்து வாரமலரில் வந்த செய்திக்குப் பிறகு பத்திரிகையில் என் எழுத்தும் வந்தது ஒரு மகிழ்ச்சி. என் ஈகோ அரிப்பை சற்று சொறிந்து கொடுப்பதாக இருந்தாலும், ஒரு மகிழ்ச்சிதான்!

அலெக்ஸ்/நிலவு கொடுத்த இணைப்பைக் கொண்டு போய் பார்த்தால் நகைச்சுவை! என் வலைப்பக்கத்தை 'அறிவியல் ஆயிரம்' பகுதியில் 'அமெரிக்க நிறுவனங்களில் ஆட்குறைப்பு' என்ற தலைப்பின் கீழ், 'நான் யார்?' என்ற கேள்விக்கு அருகில் குறிப்பிட்டு இருந்தார்கள். பாண்டவர்கள் எத்தனை பேர் என்ற கேள்விக்கு பதிலாக ஒருவன் 'கட்டில் கால்களைப் போல் மூன்று பேர்' என்று சொல்லிக்கொண்டே ஒரு கையில் இரு விரலைக் காட்டி மறு கையால் சுவற்றில் ஒன்று என்று எழுதிய கதை ஞாபகம் வந்தது.

இருந்தாலும் இந்த ஞாயிறை ஒரு மகிழ்சியான தினமாக ஆக்கிய, வெவ்வேறு உணர்ச்சிகளை வழங்கிய தினமலருக்கு நன்றி.

வியாழன், நவம்பர் 17, 2005

நான் யார்?

வெகு நாட்களாக (வருடங்களாக) மனதைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது. இப்போதைக்கு இதற்கு விடை கிடைக்கும் என்று தோன்றவில்லை. இந்தக் கேள்விக்காக இது வரை தேடி நான் தெரிந்து கொண்டது இதுதான்!

பொருட்களை வைத்து 'நான்' என்பதை விளக்க முடியாது. இந்த வேலை இல்லாவிட்டாலும் 'நான்' இருக்கிறேன். என் கார், வீடு, பணம் இல்லாவிட்டாலும் 'நான்' இருக்கிறேன்! உறவுகளை வைத்தும் 'நான்' என்பதை விளக்க முடியாது. என் தாத்தா பாட்டிக்கு 'நான்' பேரன். இப்போது அவர்கள் இல்லாவிட்டாலும், 'நான்' இருக்கிறேன்! என் உடல் 'நான்' அல்ல - என் முடி தான்; மொட்டை அடித்த பின்னும் 'நான்' இருக்கிறேன். பேசும் போது கூட 'என் கை', 'என் கால்' என்றுதான் கூறுகிறேன் - என் அவயங்கள் ‘என்னுடையது’ – ஆகவே 'நான்' என்பது என் உடலிலிருந்து வேறு பட்டது.

சரி. டெஸ்கர்ட்ஸ் சொன்னது போல 'நான் யோசிக்கிறேன்; அதனால் இருக்கிறேன்' என்று எடுத்துக் கொண்டால், தூங்கும் போது நான் யோசிப்பது இல்லை. (என் மனைவியின் கூற்றுப்படி விழித்திருக்கும் போதே நான் அதிகம் யோசிப்பது இல்லை!). ஆனாலும் தூங்கும் போது 'நான்' இருக்கிறேன் - அதனால் சிந்தனை 'நான்' இல்லை!

மனம் (இதை எப்படி விவரிப்பது? என் எண்ணங்களின் பிறப்பிடம்?) என்பதும் 'நான்' இல்லை - என் மனம் என்று அழைப்பதிலிருந்தே, அதுவும் 'என்' அங்கங்களில் ஒன்று - கால், கையைப் போல என்று புரிகிறது! ஆத்மா? நினைவஞ்சலி எழுதும் போது கூட 'அவருடைய ஆத்மா சாந்தியடைவதாக' என்று எழுதுவதால், ஆத்மாவும் மனதைப்போல ஒரு அங்கமா? 'நான்' என்பது என் ஆத்மாவையும் தாண்டியா?

சிவவாக்கியர் எழுதிய செய்யுள் புரிந்தும் புரியாதது போல் இருக்கிறது:
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.

இதில் அந்த 'ஒன்று' பிடிபட மாட்டேன் என்கிறது! விளக்க உரைகளைப் படித்தாலும் புரிபடுவதில்லை :-( புத்தகங்களைத் தேடிப் படிக்கும் போது ஔவையார் (நல்வழி: வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை...) ஞாபகம் வருகிறது. 'நான் யார்?' கேள்விக்கு படித்து விடை காணலாம் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது.

பாதி இடங்களிலே 'நான்' ஒரு எண்தான் (social security no., employee id, bank account number, ticket number in post office) - சில இடங்களில் இரண்டு எண்கள்!! ( login id and password, bank card number and pin). "என்னடா இது இத்தனை வருடம் படித்து, உழைத்து வந்ததெல்லாம் ஒரு எண்ணாக மாறத்தானா?" என்று ஒரு கோபம் வருகிறது. 'நான் யார்' என்று தெரியாமலே வாழ்க்கை முடிந்து விடுமோ என்று அச்சமும் இருக்கிறது.

இப்படியெல்லாம் இருந்தாலும், வீட்டிற்கு சென்றவுடன் மூன்று வயது மகள் கண்களில் சந்தோஷத்துடன் ஓடி வந்து கட்டிக் கொண்டு, கன்னத்தோடு கன்னம் வைத்து 'அப்பா!' என்று கொஞ்சும் போதும், ஒரு வயது மகன் வேகமாகத் தவழ்ந்து வந்து காலைக் கட்டிக் கொள்ளும் போதும் 'நான் யாராயிருந்தால் என்ன? – Does it matter? - தெரிந்து கொண்டு என்ன சாதிக்கப் போகிறேன்?' என்று தான் எண்ணத் தோன்றுகிறது!!

செவ்வாய், நவம்பர் 15, 2005

சரஸ்வதி சபதம்

சென்ற வாரம் 'சரஸ்வதி சபதம்' திரைப்படம் பார்த்தேன். மூன்று தெய்வங்களுக்கு (சரஸ்வதி, லக்ஷ்மி மற்றும் சக்தி) இடையே நடக்கும் போட்டி - யார் சிறந்தவர் என்று. நடிகர் திலகத்தின் நடிப்பு - முக்கியமாக வசன உச்சரிப்பு அருமை. ஜெமினி கணேசன் வீரமல்லனாக (சேனாபதி) கோபித்து பேசும் போது நகைச்சுவையாக இருக்கிறது. போன மாதம் பார்த்த படங்களில் (திருவிளையாடல், மிஸ்ஸியம்மா) இருந்த பொலிவு சாவித்திரிக்கு இந்தப் படத்தில் இல்லை.

போட்டி மூன்று பேருக்கு இடையே என்றாலும், படத்தை நகர்த்துவது புலவனுக்கும், அரசிக்கும் இடையே நடக்கும் தகராறைப் பற்றித்தான். 'தெய்வத்தைப் பாடுவேன்; அரசியைப் பாட மாட்டேன்' என்ற கொள்கையினால் (பிடிவாதம்?) தான் கதையே நகருகிறது. இந்த விஷயம் ஒன்றும் புதிதல்ல.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இரு செய்யுள்கள் இதே போன்ற தொனியில்:
1] 1559 - ஓடாவாளரியி ன்...பாடேன் தொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு...
2] 2456 - நாக்கொண்டு மானிடம் பாடேன் ...

இதற்குப் பின் பொய்யமொழிப் புலவரின் 'வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ?' (இதற்காக முருகப் பெருமான் சிறுவனாக வந்து அவரை முட்டையைப் பற்றிப் பாடச் சொன்னதும், பாடிய பின் - 'முட்டையைப் பாடுகிறீர், ஆனால் கோழிக்குஞ்சைப் பாட மாட்டீரோ?' என்று கேட்டு திருத்தி ஆட்கொண்டதும் வேறு கதை).

இந்த விஷயத்தை கொள்கைப் பிடிப்பு என்று பாராட்டுவதா அல்லது வீண் பிடிவாதம் என்று கூறுவதா என்று புரியவில்லை. இப்போதும் இந்த மாதிரித்தான் நடந்து கொண்டிருக்கின்றது.

நேற்றைய செய்திதாள் சொன்னது: 'மகாராஷ்டிர முதல்வர் நாராயண மூர்த்திக்கு அழைப்பு'.
கர்நாடகம், மகாராஷ்டிரம் இரண்டிலும் காங்கிரஸ் (கூட்டணியோடுதான்) ஆட்சி. இருந்தும் வெவ்வேறு நிலை. இந்தப் பிரச்சனைக்கும் மூல காரணம் மூர்த்தியின் "கிருஷ்ணாவைப் பாடும் வாயால் தேவ கவுடாவைப் பாடுவேனோ?" என்ற கொள்கைதான் என்கிறார்கள். அட தே(வ க)வுடா!

புதன், நவம்பர் 09, 2005

ஹாலோவின் பயங்கரம்

மூன்று வாரங்களாக வேலைப்பளு அதிகம் - அதைவிட மனத்தின் பளு அதிகம். அலுவலகத்தில் சிக்கனம் கடைபிடிக்கும் நிகழ்சிகளைப் பற்றிய அறிவிப்புகள் - முக்கியமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகள். இந்த 'ஹாலோவின்' பண்டிகை ஆரம்பத்திலிருந்து வருட இறுதி வரை இந்த மாதிரி நடவடிக்கைகளால், அலுவலகத்தில் அதிகமான சிரிப்போ, சந்தோஷமோ இல்லை!

இது எங்கள் நிறுவனத்தில் மட்டுமல்ல, அமெரிக்காவிலுள்ள முக்கால் வாசி நிறுவனங்களில் நடப்பவை தான். பெரும் நிறுவனங்கள் எல்லாவற்றிலும், நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கு அந்த நிறுவனங்களின் லாபத்தை ஒட்டி, அந்த நிறுவனப் பங்குகள் (shares), மற்றும் சலுகை விலையில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் (options) மற்றும் சிறப்பு ஊதியங்கள் (bonus) நிர்ணயிக்கப்படுகின்றன. சம்பளத்தை விட இம்மாதிரி சலுகைகளின் மதிப்பு பல லட்சங்களைத் தாண்டும். முக்கால் வருடம் போன பின், நிறுவனங்களின் வருடாந்திர லாபங்களைப் பற்றிய ஒரு மதிப்பீடு நிறுவன அதிகாரிகளுக்குத் தெரிந்துவிடுகிறது. இலக்கை எட்டுவதற்கான முயற்சியில், செலவுக் குறைப்பு ஒரு சுலபமான வழியாகத் தென்படுகிறது.

ஒவ்வொரு நிறுவனமும் வேலை நீக்கத்திற்கு எத்தனை நாள் முன்பாக சீட்டு கொடுக்கவேண்டும் என்று விதித்திருக்கும். அனேகமாக முழு நேர ஊழியர்களுக்கு எட்டு வாரம், அல்லது நான்கு வாரம் என்றெல்லாம் இருக்கும். தற்காலிக வேலைக்கு ஒரு நாள் கிடைத்தாலே அதிகம்! இந்த மாதிரி அறிவிப்பெல்லாம் ஒரு வார இறுதியில் தான் நடக்கும். ஹலோவின் வருட இறுதியிலிருந்து அறுபது நாட்களுக்கு முன்னால் வருவதால், ஆட்குறைப்பு அறிவிப்பெல்லாம் இந்தப் பண்டிகைக்கு அருகாமையில் ஆரம்பிக்கும். இந்தப் பண்டிகையே பயமுறுத்தும் உடையணிந்து இனிப்பு வாங்குவதுதான்! நிறையப் பேர்களுக்கு பயம் ஒன்று தான் மிஞ்சுகிறது!!

இந்த மாதிரி அறிவிப்பில் வேலை போகாமலிருந்தாலும், பாதிக்கப்பட்ட மற்ற ஊழியர்களுக்கு இடையே நம்மால் சகஜமாக நடந்து கொள்ள முடியாது. அதிலும் பாதிப் போது யார் யார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியாததால், மொத்த அலுவலுகமும் சோபையிழந்து இருக்கும்.

என் சக ஊழியர் ஒருவர் தன் மகனோடு (நான்கு வயது) தனியாக (single Mom) வசிக்கிறார். கிரிஸ்த்மஸ் பண்டிகைக்காக அவர் காசு சேர்க்கும் முறையே தனி! ஒவ்வொரு நாளும் மதிய காப்பிக்கு ஒரு டாலர் கொடுத்து, மீதி சில்லறையை ஒரு பாட்டிலில் போட்டு வைப்பார். வருட இறுதியில் அந்த பெரிய பாட்டிலிலிருக்கும் பணத்தை பரிசுக்காக உபயோகிப்பார். இந்த வருடம் அவரும் பாதிப்புக்கு உள்ளானார். நேற்று காப்பி குடிக்கையில் 'சேமிப்பதற்காக காப்பியை நிறுத்தினால், மகனின் பரிசுக்கான பணம் குறைந்திடுமே' என்று சோகப் புன்னகையோடு சொன்னது வருத்தமாய் இருந்தது. வீட்டில் சென்று வலைத்தளத்தில் (யாஹூ) நிர்வாக அதிகாரிகளின் பங்கு இருப்பைப் பார்த்தால் கோபம் வந்தது. இந்த பிரச்சனைக்கு என்று தீர்வு வருமென்று தெரியவில்லை.

செவ்வாய், நவம்பர் 01, 2005

கௌடா vs. மூர்த்தி

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பெங்களூரில் முன்னாள் பிரதமர் தேவ கௌடாவிற்கும், இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் ஸ்தாபனர் நாராயண மூர்த்திக்கும் நடந்து வரும் சர்ச்சை இன்னும் தீவிரமாயிருக்கிறது. ஒரு பொது விழாவில் பேசிய மூர்த்தி, தன் அரசியல் எதிரி கிருஷ்ணாவைப் புகழ்ந்தது பொறுக்காமல் தான் தேவ கௌடா மூர்த்திக்கு எதிராகக் கிளம்பியிருக்கிறார் என்று பரவலாகச் செய்தி வந்தது. இப்போது தொலைக்காட்சி பேட்டியில் (என்.டி. டி.வி.) 'பத்தாயிரம் பேர் வேலை செய்யும் நிறுவனத்திற்காக கோடிக் கணக்கில் பணம் ஏன் செலவு செய்ய வேண்டும்? அதிலும் அந்த நிறுவனத்தில் கன்னடர்கள் அதிகம் இல்லையே? இதற்கு பதில் கிராமத்தில் உள்ள ஏழைகளுக்கு அந்தத் தொகையை செலவு செய்தால் புண்ணியமாய் இருக்குமே!' என்றெல்லாம் அரசியல்வாதிகள் பேச்சு.

இந்த கௌடா - மூர்த்தி விஷய நியாய அநியாய வாதங்களைப் பார்ப்பதற்கு முன்னால் இதனோடு சம்மந்தப்பட்ட மற்ற விஷயங்களையும் சற்று பார்ப்போம்.

1. மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் மக்கள் ஏற்கனவே தாக்குதலுக்கு இலக்காகி வர ஆரம்பித்தனர். இந்த மாதிரி வழிப்பறி மற்றும் ஏமாற்றுதல்கள் 'இருப்பவர் - இல்லாதவர்களுக்கு' இடையே உள்ள பிரச்சனை என்று நினைத்தாலும், பல் நாட்டு நிறுவனங்கள், கணினி மென்பொருள் நிறுவனங்கள், மற்றும் அந்நிறுவன ஊழியர்கள் குறித்து மற்றவர்களிடையே நிலவும் அதிருப்தியும் ஒரு காரணம்.

இங்கு நான் தந்திருக்கும் நிறைய விஷயங்களைப் பற்றி அலெக்ஸ் பாண்டியன் தன் இணையத்தில் விரிவாக எழுதியிருக்கிறார்.
http://alexpandian.blogspot.com/2005/10/vs-1.html
பார்க்க: http://www.ryze.com/posttopic.php?topicid=563043&confid=366
http://www.deccanherald.com/deccanherald/oct52005/index2042432005104.asp
http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=1548


2. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் மெல்லிசை நிகழ்ச்சியில் கன்னட பாடல் பாட விடாமல் அதன் ஊழியர்கள் எதிர்த்து கூச்சலிட்டு கலாட்டா செய்ததும், அதை காரணம் காட்டி தர்ணா நடந்ததும் தெரிந்த விஷயமே.
சுட்டி: http://thadagam.blogspot.com/2005/10/blog-post_112833346297857573.html

3. சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரை 'எப்படி கன்னடமில்லாத பிற மாநிலத்தவர் - குறிப்பாக மற்ற தென்னிந்தியர்கள் பெங்களூரில் அதிகமான வேலை வாய்புகளை நிறப்புகிறார்கள்'. இது ஏற்கனவே இருந்து வந்த கசப்புணர்வை அதிகரித்து விட்டது.
சுட்டி: http://tinypic.com/e8v98z.png

4. சில மாதங்களுக்கு முன்னால் பல நாடுகளுக்கு இடையே இருக்கும் ஸ்திரத்தன்மையையும், கடல் கடந்த தொலை தூர வேலையமைப்பிற்கு உகந்த சுற்றுசூழல் பற்றியும் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மையிலும், வர்த்தகத்திற்கு ஆதரவான சுற்றுச் சூழலிலும் குறைந்த எண்ணிக்கை வழங்கப்பட்டது. குறிப்பிட்ட இந்தப் பகுதியில் கனடா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்தியாவை விட அதிக எண்ணிக்கை பெற்றன.

5. விப்ரோ நிறுவன உரிமையாளர் பிரேம்ஜி, அந்நிறுவன விஸ்தரிப்புகள் இனி பெங்களூரில் நடக்காது என்று அறிவித்து விட்டார்.
http://www.expressindia.com/fullstory.php?newsid=53698

6. பெங்களூரில் நடக்க இருந்த கணினித்துறை மாநாட்டை பல்வேறு நிறுவனங்கள் புறக்கணிப்பு செய்து, இப்போது ஒரு மாதிரியான சமரசம் ஏற்பாடகியிருக்கிறது. பெங்களூரின் உள்கட்டுமான நிலைமையே இதற்கு காரணமென்றும், அரசின் மெத்தனத்தை எதிர்த்து இந்த புறக்கணிப்பு என்றும் கூறப்பட்டது. போதாதற்கு இந்த மழையால் ஏற்பட்ட தடைகள் சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் அளவில் உள்கட்டுமான குறைகளைப் பற்றிய கேள்விகளை எழுப்பியது.
http://www.thehindubusinessline.com/2005/09/23/stories/2005092302100900.htm

இந்த மாதிரி பிரச்சனைகள் இருப்பது போதாதென்று, சொந்த ஆதாயங்களுக்காகவும், சுயநலத்திற்காகவும், மேலும் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவது போல் நடந்து கொள்வது ஒரு முன்னாள் பிரதமருக்கு அழகல்ல. தேவகௌடா போன்ற அரசியல்வாதிகள் ஓட்டுக்காக உணர்ச்சிபூர்வமாக பேசுவதன் மூலம் உருப்படியாக ஏதும் சாதிப்பதில்லை. பெங்களூரின் உள்கட்டுமானத்திற்காக செலவு செய்வது, எல்லா மக்களுக்கும் உதவிதான்.

முன்னாளில் விவசாயத்தினால் மட்டும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வந்தது. பின்பு இயந்திர தொழிற்சாலைகளினால் அதன் வளர்ச்சி பெருகியது; இப்போது இது போன்ற மென்பொருள் தொழிற்சாலைகளினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மாதிரி நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் சமுதாயத்தின் மற்ற பிரிவினருக்கும் நன்மை செய்ய முடியும்.

ஒரு தனிமனிதனுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியினால் பொறுப்பிலிருக்கும் அரசு இயங்க ஆரம்பித்தால், பல்தேச நிறுவங்களிடம் 'இந்தியாவின் சமூகச் சூழல் நிச்சயமற்றது' என்ற எண்ணம் வலுக்க ஆரம்பிக்கும். இது தொலைநோக்குப் பார்வையில் நல்ல விஷயமல்ல. இது போன்ற கண்மூடித்தனமான எதிர்ப்பு 'பொன் முட்டையிடும் வாத்தை அறுத்தது' போல் தான்.

இந்த விவகாரத்தில் மென் பொருள் நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு. ஒரு இடத்தில் இருக்கும் போது அவ்விடத்திலிருக்கும் சமூகத்திற்கு தங்களாலான உதவிகளையும் செய்ய வேண்டும். இங்கு (அமெரிக்காவில்) நான் பணிபுரியும் நிறுவனத்தில், 'சேவை தினங்கள்' அனுசரிக்கப்படுகின்றன. மாதத்தில் இரண்டு மணி நேரமோ அல்லது எட்டு மணி நேரமோ ஒரு சமூக சேவைக்காக ஊழியர்கள், குழுவாகவும், தனியாகவும் செலவு செய்வது சகஜம். இதை நிறுவனமும் ஆதரிக்கிறது. இது போன்ற நிகழ்சிகள் இந்தியாவில் எந்த ஆளவு நடத்தப் படுகிறது, பிரசாரம் செய்யப் படுகிறது என்பது பற்றி தெரியவில்லை. அதே சமயத்தில், இது போன்ற மென்பொருள் நிறுவனங்களில் உள்ள வசதிகள் (இலவச இரவு உணவு, வேலைக்கு சென்று திரும்ப வாகன உதவி) பற்றி பத்திரிகைகளில் நல்ல விளம்பரம்.

கன்னட பாடல்களை எதிர்த்து கூச்சலிட்டது நாகரீகமில்லாதது மட்டுமல்ல, விபரீதமானதும் கூட. ஒரு பக்கம் இந்த நிறுவனங்களின் வளர்ச்சி பற்றி விளம்பரம், மறுபக்கம் பொறுப்பற்ற மொழி மரியாதைக்குறைவு. இந்த மாதிரி செயல்களினால் இந்நிறுவனங்கள் தங்கள் தரப்பு வாதங்களை பலவீனமாக்குகிறார்கள்.

மொத்தத்தில் இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம். இப்போது மலையிலிருந்து கீழே வரும் பனியுருண்டைபோல் பெரிதாக்கப்பட்டிருக்கிறது. விஷயம் முற்றி, உலக வர்த்தகப் படத்திலிருந்து பெங்களூர் மறையாமல் இருக்க வேண்டும்!

திங்கள், அக்டோபர் 24, 2005

450 ரூபாய் கேள்வி!

அரிசோனாவில் இருக்கும் என் நண்பர் கூலநாதனுடன் சென்ற வாரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் மகன் பள்ளி முடித்து, கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பங்கள் வாங்கி வந்திருந்ததாகவும், அதில் கண்ட சில கேள்விகள் மிகவும் யோசிக்க வைத்ததாகவும் சொன்னார். அவர் சொன்ன ஒரு கேள்வியை இங்கே தருகிறேன். ஒரு 17 - 18 வயது மாணவனாக (அல்லது மாணவியாக) நினைத்து இதற்கு பதில் தேடவும்! உங்கள் பதிலை இங்கு பின்னூட்டமிடவும்.

கேள்வி: உங்களுக்கு $10.00 (இந்திய ரூபாய் - 450.00, அல்லது பிரிட்டன் பவுண்ட் 7:00) தரப்படுகிறது. அதை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு நாளை வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாகக் கழிக்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்?

சனி, அக்டோபர் 22, 2005

வெண்டைக்காய்!

வழக்கம் போல் இந்த வாரமும் சனிக்கிழமை காலை காய்கறி வாங்க ஓக் மரச் சாலையில் உள்ள இந்தியக் கடைக்கு சென்றேன். கோவைக்காய்களைப் பொறுக்கி கொண்டிருக்கையில், அருகே மற்றொரு தேசி. செல் பேசியில் யாருடனோ உணர்ச்சிப்பூர்வமான உரையாடல். மறுபுறம் பேசுபவரின் குரல் கேட்காவிட்டாலும் இவர் குரல் அருகிலிருந்த எல்லோருக்கும் கேட்டது. உணர்ச்சிகரமாக எப்படி 'எந்த விஷயத்திற்கும் ஒரு ஒழுங்கு வேண்டும்' என்று போதித்துக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டே வெண்டைக்காய்களின் முனைகளை ஒடித்து ஒடித்துப் பார்த்து, பொறுக்கி பையில் போட்டுக் கொண்டிருந்தார். எடுத்துக் கொண்ட காய்களை விட ஒடித்தவை அதிகம். முடிந்ததும் நகர்ந்து போகையில் கீழே கிடந்த ஒரு வெண்டைக்காய் மிதிபட்டது (அவர் பொறுக்குகையில் கீழே விழுந்ததுதான்). திட்டிக் கொண்டே சென்றார் - செல் பேசியின் எதிர் முனையில் இருந்தவருக்கு எப்படி 'காய்கறி வாங்குமிடம் சுத்தமாக இல்லை' என்ற விபரமான வர்ணனையோடு!

எனக்கு காய்கறி வாங்கும் போது உடைத்துப் போடப்பட்ட வெண்டைக்காய்களை எடுக்கப் பிடிக்காது! முக்கியமான காரணம் மற்றொருவர் நிராகரித்ததை ஏன் எடுக்க வேண்டும் என்பதுதான். அதைவிட அதிகமன கோபம் உடைப்பவர் மீது வரும். செல்பேசியில் போதித்துக் கொண்டிருந்த அவரை நிறுத்தி சூடாக ஏதாவது சொல்லலாம் என்று ஒரு நிமிட யோசனை. ஆனால் 'வேலியோடு போகிற ஓணான்' ஞாபகம் வந்தது - அதனால் வெண்டைக்காய் எடுக்காமல் மற்ற காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்

புதன், அக்டோபர் 19, 2005

பிரதிபிம்பம் - கண்ணாடி மனிதன்

பல ஆண்டுகளுக்கு முன் படித்து மனதில் தங்கிய ஒரு ஆங்கிலக் கவிதை. முயன்றவரை மொழிபெயர்த்து தந்திருக்கிறேன்.

பிரதிபிம்பம் - கண்ணாடி மனிதன்


வாழ்க்கையில் வேண்டியதை போட்டியிட்டு வென்றாலும்
வையகமே உன்னையிங்கு மன்னவனாய் வரித்தாலும்
கண்ணாடி முன்னின்று தெரிபவனை சற்றுப்பார்
தோன்றுபவன் உன்னிடம் தெரிவிப்பது என்னவென்று.

தந்தையுமல்ல, தாயுமல்ல, தாலிகட்டிய தாரமுமல்ல
தக்கதொரு தீர்ப்பதனைத் தந்துன்னை தயவிக்க
உண்மையிலே பெருந்தீர்ப்பு தயங்காமல் தருபவன்
உறங்காமல் பார்க்கின்றான் கண்ணாடி உள்ளிருந்து.

பொறுப்போடு நீதுதிக்க மற்றல்லர்; நீமதிக்க
இறுதிவரை வருவதனால் அறுதியிட்டு கூறுபவன்.
பழியில்லை வாழ்வினிலே கடுந்துயரை வென்றிட்டாய்,
விழிபார்த்து உன்மதிபார்த்து நண்பனாயவன் வந்திட்டால்.

சூதிட்டு ஆட்டத்தால் நாட்டையே நீவென்றாலும்
வாதிட்டு நாட்டமுடன் புகழையே நீபெற்றாலும்
நின்றவனின் கண்நோக்கி நிற்கநீயும் தவறினால்
தோன்றியவன் கருத்தினிலே கழிசடையே ஆகிடுவாய்.

உலகத்தின் கண்மறைத்து வளமுடனே வளர்ந்தாலும்
தலைமுறையாய் பெருமைகளை உவப்புடனே பெற்றாலும்
உறுதியற்று அஞ்சிநீ தோன்றியவனைத் துரோகித்தால்
இறுதியாய் மிஞ்சுவதோ கண்ணீரும் கனநெஞ்சும்.


ஆங்கில மூலம் இங்கே: http://www.rayhunt.com/man.htm

வியாழன், அக்டோபர் 06, 2005

'திருவிளையாடல்'

சென்ற வாரம் நான் பார்த்த தமிழ்ப் படம் 'திருவிளையாடல்'. நடிகர் திலகம், நடிகையர் திலகம், திரு. பாலையா நடித்த ஒரு அருமையான படம். தருமியாக வந்து சிரிக்க வைத்த நாகேஷ், ஔவையாக வந்த திரு. கே.பி. சுந்தராம்பாள் இன்றும் மனதில் நிற்கிறார்கள். முக்கியமாக சிவாஜியின் முகபாவம் (குறிப்பாக பாட்டும் நானே பாடும் போதும், நக்கீரரோடு வாதிடும் போதும்), அருமையான இசையோடு கூடிய பாடல்கள். பாதிப் படத்திற்கு நானும் என் மனைவியும் வசனம் சொல்லிக்கொண்டே வந்தோம்!

இம்முறை படத்தைப் பார்த்தபின் ஐந்து நாட்களாக ஒரே யோசனை. இறைவன் இந்த மாதிரியெல்லாம் விளையாடுவாரா? படத்திற்காக கதை கொஞ்சம் ஜனரஞ்சகமாக மாறியிருந்தாலும் 'இறைவன் ஏன் சோதிக்க வேண்டும்? ஏன் சுற்றி வளைத்து காரியங்கள் செய்ய வேண்டும்?' என்றெல்லாம் யோசனை. உதாரணமாக ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்க எண்ணினால், போட்டியில் பாடும் போது அவர் குரலைக் கெடுத்திருக்கலாம்! தருமிக்கு பணம் வேண்டுமென்றால் ஒரு புதையல் கிடைத்திருக்க வழி செய்திருக்கலாம். ஒரே குழப்பம்.

நடுவில் திரு. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசம் (சி.டி.) கேட்டேன். அதில் அவர் ஓரிடத்தில் 'இறைவன் செய்யும் எல்லா விஷயங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அவர் ஸ்வாமி - நாமெல்லாம் தொண்டர்கள். ஸ்வாமி செய்யும் எல்லாமும் நமக்குப் புரிந்துவிட்டால் நமக்கும் அவருக்கும் தொண்டன் - ஸ்வாமி என்னும் உறவே இல்லாமல் போய்விடும்' என்கிறார். உண்மைதான்.

யோசித்ததில் என் வாழ்க்கையில், பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் சொல்வது போல:
"கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துள்ளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை" வரை வந்தாயிற்று. இனிமேல் எப்படிப் போகுமோ? யாருக்குத் தெரியும்?

சனி, செப்டம்பர் 24, 2005

மிஸ்ஸியம்மா

மிஸ்ஸியம்மா

நேற்று இரவு மிஸ்ஸியம்மா படத்தை குடும்பத்தோடு வீட்டில் பார்த்தோம்.

முதன் முதலாக அந்தப் படத்தை மன்னார்குடி செண்பகா டாக்கீஸில் நண்பர்களோடு பார்த்தேன். தியேட்டரில் ஒரே ஒரு புரொஜெக்டர் தான். ஆதலால் படத்திற்கு மூன்று இடைவேளை! படச்சுருள் தீர்ந்தவுடன் தியேட்டரின் நடுவில் மேலே இருக்கும் ஒரு பல்ப் எரியும்; ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் மறுபடியும் படம் தொடரும். தரை, பெஞ்ச், சேர் என்றெல்லாம் வகுப்புகள். ஆண்கள் பக்கம், பீடி, சுருட்டு, புகையிலை, வெற்றிலை எல்லாம் சேர்ந்து ஒரு கதம்பமான வாசனை. இந்த மாதிரி இடைவேளை வரும் போதெல்லாம் போய் கோலி சோடா - அதுவும் பன்னீர் சோடா குடிப்போம்!

மிகவும் நகைச்சுவையான ஒரு கதை. நடிகயையர் திலகம் சாவித்திரியின் முகபாவம் மிகவும் அருமையாக இருக்கும். கதையில் முதல் பாடல் அவருடையது தான். தியாகரஜர் கீர்த்தனை - ராக சுதா ரஸ - தமிழ்ப் படுத்திப் பாடுவார் (கதையில் அவர் கிறிஸ்துவ மததைச் சேர்ந்தவர்களால் ஒரு கிறிஸ்துவராக வளர்க்கப் படுவதாகக் காட்டுவார்கள்; ஆனால் அவர் ராக சுதா ரஸ பாடுவார்!).

படத்தை நேற்று பார்த்த போது, மனம் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்று திரும்பியது. பக்கத்தில் இருந்த என் அப்பாவிடம் அதைப் பற்றிப் பேச, அவர் உடனே தான் அந்தப் படத்தை முதன் முதலாக எப்போது பார்த்தேன் என்று பேச ஆரம்பிக்க - அப்புறம் தான் தெரிந்தது நான் இருபது ஆண்டுகள் சென்றால் அவர் ஐம்பது ஆண்டுகள் சென்றிருக்கிறார் என்று! 1950 களில் மகாமகத்திற்கு அப்புறம் கும்பகோணத்தில் அவர் இந்தப் படத்தை தன் அத்தை, தாத்தாவுடன் பார்த்த கதையைச் சொன்னார்.

படத்தில் சாரங்கபாணி ஒரு பாடல் பாடிக்கொண்டு வருவார் - 'சீதா ராம் ஜெய சீதா ராம்' என்று ஆரம்பிக்கும். நாட்டு நடப்பைப் பற்றி அவர் அன்று பாடியது இன்றைக்கும் பொருந்தும். படத்தின் பாடல்கள் மிகவும் அருமை - முக்கியமாக 'வாராயோ வெண்ணிலாவே', 'பிருந்தாவனமும் நந்த குமாரனும்' பாடல்கள் இன்றைக்கும் கேட்க இனிமை! மன்னார்குடியில் திரைப்படச் சுவரொட்டிகளில் முக்கியமான பாடல் வரிகளைப் போடுவார்கள் - முக்கியமான நடிகர், நடிகைகள் படங்களோடு. இந்த இரு பாடல்களும் சுவரொட்டியில் இருக்கும்.

வேலைக்காக கணவன் மனைவி போல் இருவர் நாடகமாடி பின் கல்யாணம் பண்ணிக் கொள்வதுதான் கதை. சென்ற வாரம் செய்தியில் சட்டப் படி வயது பத்தாததால் தம்பியைக் காதலித்தும் அண்ணனைக் கல்யாணம் செய்து கொண்டதைப் பற்றி படித்தேன். ஸ்ரீகாந்த் மீனாட்சியும் இதைப் பற்றி ஒரு திரைக்கதை போல் எழுதியிருந்தார். ஐம்பது வருடத்தில் கதை அதிகம் மாறவில்லை.

ஒவ்வொரு வாரமும் ஒரு பழைய படம் பார்ப்பது என்று தீர்மானம். தாய் தந்தை மற்றும் மாமனார் மாமியார் வாங்கி வந்திருக்கும் விசிடிகளின் உபயத்தில்!

வியாழன், செப்டம்பர் 01, 2005

தலைகீழ் பூமி?

சென்ற வாரம் இரவில் தூக்கம் கலைந்து குருட்டு யோசனை செய்து கொண்டிருந்த போது சுவற்றில் இருந்த உலகப் படம் மங்கலாக தென்பட்டது. பலமுறை இப்படத்தைப் பார்த்திருந்தாலும், புதிதாக ஒன்று தோன்றியது. சிறு தீவுகள் தவிர எல்லா நிலப்பரப்பும் வடக்கே அகலமாகவும், தெற்கே குறுகலாகவும் இருக்கிறது. இது என்னவோ சரியாகப் படவில்லை. இயற்கையில் மேலிருந்து கீழே வருகிற எல்லாப் பொருள்களும் கீழே அதிகமாகவும், மேலே குறுகலாகவும் இருக்க, உலகப் படத்தில் மட்டும் இது ஏன் வித்தியாசமாக இருக்க வேண்டும்?

உதாரணமாக, கடுகை ஒரு கண்ணாடி பாட்டிலில் கொட்டும் போது அது ஒரு குவியலாகத்தான் விழுகிறது. இதை நாம் மணலைக் கொட்டும் போதும் (வீடு கட்டும் போது லாரியிலிருந்து கொட்டுவார்களே?) பார்க்கலாம். இந்தக் குவியல்களின் வடிவம் ஒரு 'நார்மல் டிஸ்ட்ரிபியூஷன்' போல் இருக்கும். ஆனால் உலகப் படத்தில் (வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, இந்தியா) பெரும்பான்மையானவை மேலே அகலாமாயும், கீழே குறுகியும் இருக்கின்றன. ஏன் இவைகள் மட்டும் முரணாக இருக்கின்றன என யோசனை வந்தது! ('சுத்த லூஸோ' என்று நீங்கள் நினைப்பது புரிகிறது!). இரண்டு நாள் தீவிர யோசனைக்குப் பிறகு என் நினைப்பு இதுதான்.

நம்முடைய பார்வையில்தான் கோளாறு. முதலில் வரைபடம் எழுதியவர் வடக்கு திசையை (பூமியின் வடக்கு) மேலே வைத்து விட்டார். பிரபஞ்சத்தில் மேல்-கீழ் எது என்பது தெரியாததால் இந்தக் குழப்பம். உண்மையில் தெற்கு திசை (பூமியின் தெற்கு) தான் பிரபஞ்சத்தின் மேல் பகுதி. உலகப் படத்தை தலைகீழாக வரைந்தால் இயற்கைக்கு முரணாக இருக்காது. காலங்கள் வருவதிலும் (கோடை, இலையுதிர், குளிர், வசந்தம்), சூரியன் தோன்றுவதிலும்/மறைவதிலும் ஒரு மாற்றமும் வராது!

விஞ்ஞானத்தில் இதற்கு விளக்கம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. பழம் நூல்களில் இதைப் பற்றி ஏதாவது குறிப்பு உள்ளதா என அறிய ஆவல். இணைய நண்பர்கள், நண்பிகள் இதைப் பற்றி கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் வாழ்க!

கடந்த மாதம் வேலைப்பளு அதிகம். எழுத நேரமில்லாவிட்டாலும், கொஞ்சம் படிக்க முடிந்தது. ஒருவிதமான ஒழுங்கும் இல்லாமல் - ஏதாவது ஒரு தமிழ் வார்த்தையை கூகுளில் தேடி, வரும் பக்கங்களைப் படிப்பதை ஒரு விளையாட்டாகக் கொண்டு படித்த பக்கங்கள் இவை. கூகுள் வாழ்க!

ஸ்ரீகாந்த் மீனாட்சியின் 'மன இறுக்கம்' பற்றிய தொடரும், சஞ்சீத்தின் 'என் பெயர் சித்ரா' - டைரிக் குறிப்பும் மனத்தை தொட்டன. பவித்ரா சென்ற வருடம் எழுதிய 'சில நேரங்களில் சில பயணங்கள்' தொடர் பழங்காலத்தைப் பற்றி நிறைய சிந்திக்க தூண்டியது. மொத்தத்தில் அதிகம் படிக்க முடிந்தது.

இந்தக் கவிதை பாலகுமாரன் கதையில் படித்தது என்று நினைவு:
“வாங்குபவர் கை வானம் பார்க்கும்
கொடுப்பவர் கை பூமியை மறைக்கும்
கொட்டிக் கிடக்கிறது; வெட்டி எடுத்துக்கொள்”
இந்த மாதிரி தேடல்களில் நிறைய தென்படுகிறது! கவிதையில் சொன்னதைப் போல் 'வெட்டி', 'ஒட்டிக்' (Copy – Paste) கொண்டிருக்கிறேன்!

அப்புறம், இன்று விச்சுவுடன் கன்சல்டன்ட், ஸ்பேர் டயர் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த போது தோன்றிய கவிதை எண்ணம் இதோ.

மாற்றுச் சக்கரம்

வாழ்க்கைப் பயணத்தில்
இணைந்து செல்வோமென்றாள்
நம்பினேன்!
பின்புதான் புரிந்தது
அவள் வாழ்க்கை வண்டியோட
நானொரு மாற்றுச் சக்கரம்.

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2005

மேலும் சில வார்த்தை தொகுப்புகள் (கவிதைகள்!)

மேலும் சில வார்த்தை தொகுப்புகள் (கவிதைகள்!)

எட்டு வரிக் கவிதைப் போட்டி அறிவித்தபின், அத்தனை கவிதைகளையும் படித்த பின், எனக்குள்ளும் ஒருவிதமான அரிப்பு! பல்லிடுக்கில் மாட்டிய தேங்காய்த் துண்டுபோலாகி விட்டது இப்போது. கவிதை இலக்கணம் தெரியாது - அரைகுறையாக தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் ஞாபகம் இருக்கிறது. வெண்பா எல்லாம் எழுதியதில்லை! வேலையில், எல்லாம் ஆங்கிலம் என்பதால் அதிகமாக தமிழில் பேசக்கூட இல்லை! திடீரென ஒரு உந்தல் - நமக்கும் எழுத வருகிறதே; வரும்போது எழுதிவிடுவோம் என்று! கவிதையே இல்லை என்று கூறினால்கூடப் பரவாயில்லை - கோவையாக எழுத முடிகிறதே என்ற சந்தோஷம் இருக்கிறது. இந்தக் கவிதைகள் (அல்லது வார்த்தைத் தொகுப்புகள்) காரில் போகும் போது, குளிக்கும் போது மற்றும் அலுவலகத்தில் போரடிக்கும் மீட்டிங்கில் இருக்கும் போது வந்த நினைப்புகளில் செதுக்கியது.

கால் சென்டர் வேலை

“தமிழுக்கு அழகே 'ழ'வில்தான் குப்பா” -
அனுபவித்து சொன்னார் ஆசிரியர் அப்பா
“நுனிநாக்கில் பேசாதே! அழுத்தம் தா!!” -
சினந்து திட்டியது திண்ணையில் தாத்தா

படிக்கும்போது என் பேச்சுமுறை நகைச்சுவை
இப்போது நினைக்கையில் எனக்குள் புன்னகை
என் உச்சரிப்பினால் கிடைத்ததே இவ்வேலை
தொலைபேசியை வாஞ்சையாக தடவியது என்கை


வளைவு நிறுத்தமில்லை!

நடந்த சாலை தொலைவில் முடிந்தது
அருகில் சென்றதும் வளைவு தெரிந்தது
'வளைவு நிறுத்தமில்லை' அர்த்தம் புரிந்தது
வாழ்க்கையில் நடக்கத் தெம்பும் வந்தது


பெயர் என்ன?

வேலைக்காக தொலைபேசியில் சிகாகோ ஜான்
ரயிலில் மாற்றுசீட்டுக்காக கோடிவீட்டு ஜமால்
சனிக்கிழமை சீட்டாடும் நண்பர்களுக்கு ஜக்கு
இருந்தாலும் கோபத்தில் அப்பாவிற்கு ஜடம்!

திங்கள், ஆகஸ்ட் 08, 2005

இரண்டு வரிக் கவிதைகள்?!

சென்ற வாரம் விச்சுவுடன் இரண்டு வரிக் கவிதைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். இரண்டு வரிகளில் துக்கடாவாக எழுதப் படும் இவைகளைக் கவிதைகள் என என்னால் கூற முடியவில்லை. எந்தப் பேரால் அழைத்தால் என்ன? ஹைக்கூ? புதுக்கவிதை? படிக்க இதமாகத்தான் இருக்கிறது. போன வார முடிவில் தோன்றிய நினைப்புகள் இங்கே - கவிதையா இல்லையா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்:

1. காதல்
நம்காதல் வளரத் தண்ணீர் வேண்டுமென
என்னைக் கண்ணீர் விடச் செய்தாயோ?

2. பயனென்ன?
என்றும் அடையாக் கதவாம்!
பின் இருந்தென்ன லாபம்?

3. 'கால் சென்டர்' முரண்பாடு
வேலைக்காக பொய்யுரை தொலைபேசியில்; மேஜையில்
பிறநாட்டு நேரம் காட்டும் கடிகாரம் சொன்னது: "நீ நீயாக இரு!"

செவ்வாய், ஜூலை 26, 2005

நம்பிக்கை வை!

திரு. நாரயணன் வெங்கிட்டு கவிதைப் போட்டி அறிவித்தார் - "நம்பிக்கை" என்ற தலைப்பில். அதிக பட்சம் எட்டு வரி என்று சொல்லியிருக்கிறார். "எட்டு வரியா? கஷ்டமாயிருக்குமே!" என்று யோசித்து எழுத ஆரம்பிக்க, இப்போது இருபத்தைந்து வரிகள். போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும், எழுத வருகிறதே என்று நினைத்தேன். ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு இடம் - இராக், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இலங்கை. எழுதி முடித்ததும் ஒரு பாரம் இறங்கியது போல உணர்வு. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நம்பிக்கை வை

"நம்பிக்கை வை!" திடமாக வந்தது தாத்தாவின் வார்த்தைகள்
குவைத் போரில் இறந்த வாப்பாவைப் பார்த்துத் தேம்பியழுதபோதும்
பின்பு அமெரிக்க குண்டுபட்டுக் காலிழந்த அண்ணனைத் தேற்றவும்
குடும்பத்தின் பசிபோக்க வேலைதேடி காவல்படையில் சேரவந்தவனுக்கு
இரான் போரில் கண்ணிழந்த தாத்தாவின் வார்த்தைகள் "நம்பிக்கை வை!"

"நம்பிக்கை வை!" வாஞ்சையோடு பாட்டியின் தலைக்கோதல்
'பாப்பி' பயிர்ப் போரில் குண்டுபட்டு இறந்த ஆசை அண்ணன்
கண்ணிவெடியால் கையிழந்து ஊமையான அம்மா மூலையில்
வேலைதேடிச் சென்ற அப்பா திரும்புவாரா என யோசிக்கையில்
அழுத்தமாகப் பாட்டி சொன்ன வார்த்தைகள் "நம்பிக்கை வை!"

"நம்பிக்கை வை!" நிதானமாக வந்தது பாதிரியின் வார்த்தைகள்
மனது குண்டுவெடிப்பில் காயமாகிப் படுத்திருக்கும் மகளிடம்
கையில் பிறந்தநாள் பரிசு இராக்கிலிருக்கும் மகனுக்கு அனுப்ப
கைப்பை சோதனைக்காக காத்திருக்கையில் கர்த்தரை ஜபிக்க
மறுபடி காதில் ஒலித்தது இரண்டு வார்த்தைகள் "நம்பிக்கை வை!"

"நம்பிக்கை வை!" பெரிதான எழுத்தில் சுவற்றை மூடிய துணியில்
கூட நடந்து வரும் சிறுமி, செப்டம்பர் 11ல் இறந்த அக்காள் மகள்
'தீவிரவாத எதிர்ப்புப் போர்' முடிக்கச் சென்ற ஆசைக் கணவன்
எப்போது வருவான்? எப்படி வருவான்? இந்நிலை எப்போது மாறும்?
கேள்விகளோடு நிமிர்கையில் சுவற்றில் மறுபடி "நம்பிக்கை வை!"

"நம்பிக்கையாய் இருக்கோணும்!" சொன்னது அருகிருந்த பெரியவர்
கொழும்பு கலவரத்தில் தாயிழந்து, தந்தையிழந்து
ராணுவத்தால் கற்பிழந்து, சுனாமியால் வீடிழந்து பொருளிழந்து
தற்காலிக இருப்பு என்னும் தகரத் தட்டிகளுக்கிடையே கதைக்கயில்
விசனப் பட, பெரியவர் சொன்னார் "நம்பிக்கையாய் இருக்கோணும்!"

திங்கள், ஜூலை 25, 2005

அது அந்தக் காலம் - இது இந்தக் காலம்!

சிறு வயதில் கேட்ட ஒரு திரைப்படப் பாடல் - அது அந்தக் காலம்; இது இந்தக் காலம். திரு. N. S. கிருஷ்ணன் பாடியது என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்னால் மன்னார்குடியில் படிக்கும் போது இருந்த வாழ்க்கைக்கும், தற்போதைய அமெரிக்க வாழ்க்கைக்கும் இடையே நிறைய மாறுதலைக் காணுகிறேன். அதன் விளைவே இந்தக் கவிதை!

அது அந்தக் காலம் - இது இந்தக் காலம்!

ரேஷன் கடையில் காத்து நின்று
சண்டை பிடித்து சாமான் வாங்கியது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

'ஒன்று வாங்கினால் இரண்டாவது இலவசம்'
கூவினாலும் வாங்காமல் ஒதுங்குவது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

நடமாடும் நூலகம் ‘பழயது ஒன்று
புதியது ஒன்று’ வாங்கிப் படித்தது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

வலைத் தளத்திலிருந்து இறக்கி
வெளியில் போகையில் கேட்டுமுடிப்பது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

மின்வெட்டினாலே வாடகை சைக்கிளெடுத்து
ஒலிச்சித்திரம் கேட்கத்தெருக்கள் தாண்டியது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

வசதிக்காக விரும்பும்போது கேட்டுமகிழ
சிடியை இரண்டு மூன்று காப்பி எடுப்பது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

தொலைக்காட்சியில் இரண்டாவது சேனல்
வந்ததனாலே சந்தோஷத்தில் துள்ளியது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

இருநூறு சேனல் இருந்தபோதும்
சேனலை மாற்றி அலுத்துக் கொள்வது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

குச்சி ஐசுக்கு ஆலாய்ப் பறந்து
கைநிறைய வாங்கி நக்கித் தின்றது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

ப்ரீஸருக்குள்ளே ஐந்துவகை இருந்தும்
யோசித்துப் பார்த்துத் திரும்ப வைப்பது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

சிலபஸ் மாறி புதுப்புத்தகம் கிடைக்காமல்
பழைய புத்தகத்தைத் திருத்திப் படித்தது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

எதற்கும் இருக்கட்டும் வீட்டுக்கு ஒன்று
பள்ளிக்கு ஒன்றென்று இரண்டாய் வாங்குவது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

வாத்தியார் அடித்தாரென்று வீட்டில் சொல்ல,
போதாதென்று வீட்டிலும் அடி வாங்கியது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

சத்தமாய் மிரட்டினாலே ‘போலீஸில்
புகார் செய்வேன்’ என பதிலுக்கு மிரட்டுவது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

திருவிழா இரவில் நண்பர்களோடு
ஓசி சினிமா பார்க்க ஓடிப் போனது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

வீட்டிலேயே திரையரங்குபோலிருந்தும்
சேர்ந்து பார்க்க நண்பர்கள் இல்லாதது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

வேலையில் சேர்ந்து மேசையோடு தேய்ந்து
நாற்பது வருடத்தில் ரிடையரானது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

பணியில் கூட வேலைபார்ப்பவர் யாரென
தெரியும்முன்பே உத்தியோகம் மாறுவது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

வானொலி வர்ணனை கேட்டு நன்றாக
விளையாடிய வீரரைக் கொண்டாடிப் பேசியது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

போட்டிக்கு எத்தனை பணம்வாங்கித்
தோற்றிருப்பார் என்று ஆராய்ச்சிசெய்வது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

ஞாயிறு, ஜூலை 24, 2005

பயணமே இலக்கு!

பள்ளியில் படிக்கும் போது மனதைப் பற்றிய கவிதைகளில் ஒன்று கண்ணதாசனின் "நீ மணி - நான் ஒலி!" பின்பு கல்லுரியில் படிக்கையில் ஸென் புத்தக் கதைகள் மற்றும் சித்தர் பாடல்கள் (முக்கியமாக சிவவாக்கியர்) என்னை யோசிக்க வைத்தன. இவைகளின் பாதிப்புதான் இந்தக் கவிதை.

பயணமே இலக்கு

இலக்கை நோக்கி பயணித்தேன்
பயணத்தில் வந்தது தெளிவு
இப்போது பயணமே இலக்கு

தேர்வில் வெல்லப்பாடம் படித்தேன்
வென்றபின் வந்தது அறிவு
வெல்ல வேண்டியது தேர்வல்ல

பதில்தேடிப் படிக்க ஆரம்பித்தேன்
படிக்கப்படிக்க வளர்ந்தது கேள்வி
இப்போது படிப்பே கேள்வி

மற்றவர் பாராட்டவே ஆசைப்பட்டேன்
ஆசைப்பட்டு உழைத்ததில் புரிந்தது
உழைப்பே உண்மைப் பாராட்டு

குடும்பத்திற்காக செல்வம் சேர்த்தேன்
சேர்த்தபின் வந்தது தெளிவு
இப்போது குடும்பமே செல்வம்

குழந்தையைக் கடிந்தேன் பொறுமையில்லையென்று
அழுகை நின்றபின் புரிந்தது
எனக்குத்தான் இல்லை பொறுமை

நிம்மதிதேடி வெளியில் அலைந்தேன்
அலைந்து களைத்தபின் புரிந்தது
உள்ளே பெறுவதுதான் நிம்மதி

சுத்தம்வேண்டி கங்கையில் மூழ்கினேன்
மூழ்கி எழுந்ததும் தெரிந்தது
சுத்தம் கங்கையில் இல்லை

முன்னேற்றம் வேண்டி நாகரீகமானேன்
மாறியபின் வந்தது தெளிவு
நாகரீகத்தில் இல்லை முன்னேற்றம்

தனிமைக்கு பயந்து கூட்டம் தேடினேன்
கூட்டத்தில் இருக்கையில் புரிந்தது
தனிமை மனதினுள்ளே என்று

விரதங்களிருந்து மலைகளேறினேன் இறைவனைத்தேடி
தேடிக்களைத்தபின் வந்தது ஞானம்
தேடவேண்டிய இடம் உள்ளேயென்று

வியாழன், ஜூலை 21, 2005

அவசரம்!

அவசரம்

அதிகாலை தலைக்கருகில்
கடிகார அழைப்பில் அவசரம்

பல் விளக்கவும், குளிக்கவும்
சுடுநீர் வரும்முன் அவசரம்

காரில் சாலை விளக்கு
பச்சைக்கு மாறுமுன் அவசரம்

பேசுகையில் கேள்வியை முடிக்குமுன்
பதில் சொல்ல அவசரம்

வேலையில், மதிய உணவில்,
மாலை காப்பியில் அவசரம்

வேலை முடிக்க, வீடு திரும்ப,
தொலைக்காட்சி பார்க்க அவசரம்

வலைத்தளத்தில் சுட்டியை சொடுக்கி
பக்கம் வரும் முன் அவசரம்

குழந்தையோடு விளையாட, உணவூட்ட,
தூங்கவைக்க அவசரம்

எல்லாம் முடித்து படுக்கையில் படுக்க
விளக்கை அணைக்கும் முன்

சுவற்றில் இந்த வாசகம்
"வாழ்க்கை ஒரு நிறுத்தமில்லா பயணம் - இறப்பை நோக்கி"

பார்த்தபின் அவசரமாக முள் திருப்பி
கடிகாரத்தில் 'எழுப்பு மணி' நிறுத்துகிறேன்!

செவ்வாய், ஜூலை 12, 2005

முனுசாமியின் பண்ணை! (McDonald’s Farm)

அரிசோனாவில் (பீனிக்ஸ்) இருந்த போது ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் தன் மகள்களுக்கு, ஆங்கிலப் பாடல்களை தமிழில் வேடிக்கையாக மொழிபெயர்த்து சொல்லுவார். குழந்தைகளும் ஒரு விளையாட்டுப் போல தமிழில் பேச அது உதவியாக இருந்தது. அப்படி மொழிபெயர்த்துப் பாடிய ஒரு பாட்டு இதோ! நன்றி மோகன்!

(English rhyme: Old McDonald had a farm!)

முனுசாமியின் பண்ணை!

கிழட்டு முனுசாமி பண்ணை வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
பண்ணையிலே கொஞ்சம் மாடு வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
'மா மா' இங்கே, 'மா மா' அங்கே, இங்கே 'மா' அங்கே 'மா', எங்கேயும் 'மா மா'
(கி. மு.)

கிழட்டு முனுசாமி பண்ணை வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
பண்ணையிலே கொஞ்சம் ஆடு வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
'பா பா' இங்கே, 'பா பா' அங்கே, இங்கே 'பா' அங்கே 'பா' எங்கேயும் 'பா பா'
(கி. மு.)

கிழட்டு முனுசாமி பண்ணை வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
பண்ணையிலே கொஞ்சம் வாத்து வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
'க்வாக் க்வாக்' இங்கே, 'க்வாக் க்வாக்' அங்கே, இங்கே 'க்வாக்' அங்கே 'க்வாக்' எங்கேயும் 'க்வாக் க்வாக்'
(கி. மு.)


கிழட்டு முனுசாமி பண்ணை வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
பண்ணையிலே கொஞ்சம் கோழி வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
'கொக் கொக்' இங்கே, 'கொக் கொக்' அங்கே, இங்கே 'கொக்' அங்கே 'கொக்' எங்கேயும் 'கொக் கொக்'
(கி. மு.)

கிழட்டு முனுசாமி பண்ணை வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
பண்ணையிலே கொஞ்சம் பன்னி வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
'ஒய்ங்க் ஒய்ங்க்' இங்கே, 'ஒய்ங்க் ஒய்ங்க்' அங்கே, இங்கே 'ஒய்ங்க்' அங்கே 'ஒய்ங்க்' எங்கேயும் 'ஒய்ங்க் ஒய்ங்க்'
(கி. மு.)

கிழட்டு முனுசாமி பண்ணை வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
பண்ணையிலே கொஞ்சம் நாய் வச்சுருந்தான் அம்மாடி அம்மாடி அம்மாடியோ
'லொள் லொள்' இங்கே, 'லொள் லொள்' அங்கே, இங்கே 'லொள்' அங்கே 'லொள்' எங்கேயும் 'லொள் லொள்'
(கி. மு.)

வெள்ளி, ஜூலை 08, 2005

அயல் நாட்டுக் குழப்பங்கள்!

அயல் நாட்டுக் குழப்பங்கள்!

1997 ஜூலையில் முதன் முறையாக அமெரிக்காவில் வந்து இறங்கினேன். முதல் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இப்பொது நினைத்துப் பார்க்கும் போது சிரிப்பாக வந்தாலும், அவைகள் நடந்த காலத்தில் கோபம், வருத்தம், சந்தோஷம் எல்லாம் இருந்தது!

தொலைபேசிக் கட்டணம்: நான் ஆஸ்திரேலியாவில் ஆறு மாதம் இருந்திருந்தாலும், பிறந்து வளர்ந்தது என்னமோ தமிழ் நாட்டில் மட்டும் தான்! பரீட்சைக்கு மட்டும் பிரெஸிலில் வளரும் காப்பி பற்றியும், சகாரா பாலைவனத்தைப் பற்றியும் படித்தும், அதிகமாக உலக விஷயங்கள் தெரியாமல் வளர்ந்து விட்டதன் குறை, இங்கு வந்தபின் தான் தெரிந்தது. இந்தியாவில் (ஆஸ்திரேலியா உட்பட மற்ற பிற நாடுகளிலும்) தொலைதூர எண்களுக்கு முதலில் முதலில் 0 சுற்றி (அல்லது அழுத்தி) பின் தொலைபேசி எண்ணை சுற்றுவோம். அதே முறையில் இங்கு வந்ததும் தொலைபேசியை உபயோகித்தால் யாரோ ஒருவர் குறுக்கே வந்து எண்ணைக் கேட்பார். மற்றவர்களை கேட்கக் கூச்சப்பட்டுக் கொண்டு, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு இதே போல் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு பேசிக் கொண்டிருந்தேன்! ஊரில் இருந்து வரும் போது உறவினர், நண்பர், தெரிந்தவர் எல்லாம் கொடுத்து அனுப்பியிருந்த எண்களுக்கு போன் பண்ணி முடித்தாயிற்று.

மாதம் முடிந்த பின் தொலைபேசிக் கட்டணத்திற்கான சீட்டு வந்ததும் தான் தெரிந்தது ஏதோ தவறு இருக்கிறது என்று! கட்டணம் $250க்கும் மேலே! மாத ஆரம்பத்தில் தொலை பேசி இணைப்புக்காக பேசிய போது சொல்லப்பட்ட கட்டணத்தை விட மிக அதிகம்! அரக்கப் பரக்க அவர்களைக் கூப்பிட்டு (தொலைபேசியில் தான்) பேசிய பிறகு தான் தெரிந்தது என் தவறு. என்னுடைய இதர மாநில பேச்சு அனைத்தும் "இணைப்பர் உதவி பெற்றவை" என்று. (Operator Assisted Calls). அமெரிக்காவில் தொலைதூர எண்களுக்கு 0க்கு பதிலாக 1ஐ அழுத்த வேண்டும் என்பது அப்போது தான் தெரிந்தது! மூக்கால் அழுதுகொண்டே கிட்டத்தட்ட $220 அதிகமாகக் கொடுத்தேன்!

இன்று அமெரிக்காவில் இருக்கும் தொலைபேசி மூலமான உதவி சேவைகளில் பெரும்பான்மையானவை இந்தியாவிலிருந்து தான் நடக்கின்றன. அங்கு வேலை செய்யும் இளைஞர்கள், இளைஞிகள் இதைப் படித்தால் வாய் விட்டு சிரிப்பார்கள் - 'இவனுக்கெல்லாம் அமெரிக்கா வாழ்வு' என்று.

மின்சார விளக்கை எரிய வைக்கத் திணறியதும், என் மனைவி இங்குள்ள சுவிட்ச்சைப் பற்றி விளக்கியது (அறிவாளி படத்தில் தங்கவேலு - சரோஜா பேசும் 'சொஜ்ஜி, இடியாப்பம், முருக்கு, மசால்வடை' வசனம் ஞாபகம் வருகிறதா?), முதல் முறையாக காரை ஓட்ட ஆரம்பித்து, சாலையில் எந்தப்பக்கம் போவதென்று திணறியது (நல்ல வேளை யாரையும் இடிக்கவில்லை), குளியலறைக்குள் போய்விட்டு, தாழ்ப்பாளை போடத் தடவியது, ‘உன் நடுப்பெயர் என்ன?’ (middle name) என்ற கேள்வியைப் புரிந்து கொள்ளத் திண்டாடியது, எல்லாமே தமாஷ்தான்!

எல்லாவற்றையும் விட அதிகமான சிரிப்பும், வெறுப்பும் வந்தது என் ஆங்கில மொழி உச்சரிப்பும், வார்த்தைப் பிரயோகமும் தான். என் மனைவி ஓட்டிய கார் விபத்தில் அடிபட்டதும், அதை சரி செய்ய போன் செய்து காரை எப்போது 'கராஜில்' (Garage) கொண்டு விடுவது எனக் கேட்க, அவர் 'பாடி ஷாப்?' (body shop) எனத் திருப்பி கேட்க, நான் குழம்பி 'நான் வேலை தேடவில்லையே' என்றேன்! அப்புறம் தான் புரிந்தது - நம்மூர் 'கராஜ்' - அவர்களின் 'பாடி ஷாப்'; நம்மூரின் 'பாடி ஷாப்' அவர்களின் 'கன்சல்டிங் கம்பெனி' என்று. ஒருவழியாக புரிந்து கொண்டு, புரிய வைப்பதற்குள் போதும்-போதும் என்றாயிற்று.

கடந்த முறை இந்தியா சென்ற போது, என் ஆங்கிலத்தைக் கேட்ட கல்லூரி நண்பன் என்னுடைய உச்சரிப்பு மாறி விட்டது (அதாவது முன்பு போல் நன்றாக இல்லை) என்று குறைப்பட்டுக்கொண்டான். இங்கு இன்னமும் சில சமயம் என் உச்சரிப்பு சரியல்ல எனக் கூறுகிறார்கள். என் ஆங்கில உச்சரிப்பு இப்போது இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் பசிபிக் கடலில் மிதந்து கொண்டு இருக்கிறது என நினைக்கிறேன்!

செவ்வாய், ஜூலை 05, 2005

தொலைந்து போன தமிழ் நயம்

இப்பொதெல்லாம் திரைப்படங்களில், தொலைக்காட்சியில் (இன்னும் வானொலியில் அவ்வளவாக இந்த பாதிப்பு இல்லை), தமிழில் பேசுபவர்கள் வார்த்தைகளை உப்யோகிக்கும் முறை அவ்வளவு நன்றாக இல்லை. அந்நிய மொழிக் கலப்பு, உச்சரிப்பு மோசம் என்பது போக, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், தரக்குறைவான வார்த்தைப் பிரயோகம் என்பது மிகச் சாதாரணமாகி விட்டது. இதில் முக்கியமாக ஒரு சராசரி அரசியல்வாதியின் பேச்சை கட்சி ஈடுபாடு இல்லது வார்த்தை உபயோகத்தை மட்டும் கணித்தால் மனம் மிகவும் வருத்தப்படும்!

ஒரு மொழியின் வளர்ச்சி, அந்த மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. தற்போதைய சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் பெரும்பாலான வார்த்தைகள் ஒன்று மனதைப் புண்படுத்தும் வகையில் அநாகரீகமாகவோ, அல்லது அசிங்கமாகவோ இருப்பது ஒவ்வொரு தமிழனும் வருந்த வேண்டிய விஷயம்.

நான் பள்ளியில் படிக்கும் போது தமிழ் ஆசிரியர் திரு. வெங்கடராமன் ஒரு பழம் தமிழ் செய்யுளை உதாரணம் காட்டியது நினைவிற்கு வருகிறது. ஒருவரை அவலட்சணம், எருமை, கழுதை என்றெல்லாம் திட்டுவதற்கு பதிலாக அந்தச் செய்யுளின் முதல் வரிகள் இதோ:
"எட்டேகால் லட்சணமே
எமனேறும் பரியே
மட்டிற் பெரியம்மை வாகனமே..."

தமிழில் எண்களை எழுதும் போது 8க்கு 'அ'வையும், 1/4க்கு 'வ'வையும் உபயோகிப்பதைக் கொண்டு "எட்டேகால் லட்சணமே" என்றும் (அதாவது அவலட்சணம்), எமன் எறும் பரி (குதிரை - அதாவது எருமை) என்றும், மூதேவி (லக்ஷ்மியின் அக்கா என்ற முறைப்படி - பெரியம்மை) வாகனமான கழுதை என்றும் அழைப்பதாக இந்தச் செய்யுளுக்கு விளக்கம் கொடுத்தார்! திட்டுவதற்கு கூட நயமான வார்த்தைகளை உபயோகித்தனர் அக்காலத்தில்.

போன நூற்றாண்டிலே கூட பாரதியார் தன் சக மாணவன் கிண்டலாக "பாரதி சின்னப் பயல்" என்று முடிக்குமாறு வெண்பா எழுதச் சொல்ல, அவர் "கார் மேகம் போலிருண்ட காஞ்சிமதி நாதனைப் பாரதி சின்னப் பயல்" என்று முடியுமாறு எழுதினார்! (பார் அதி சின்னப் பயல் எனப் பிரித்து பொருள் கொள்ள வேண்டும்).

இப்படியெல்லம் சிலேடையும், நயமுமாய் இருந்த தமிழ்ப் பிரயோகம், இப்பொது தாழ்ந்து போனதற்கு யார் காரணம்? அரசியலா? திரைப்படமா? அல்லது நாமா? எனக்கென்னமோ இதன் முக்கிய காரணம் மக்களாகிய நாம் தான் எனத் தோன்றுகிறது.

என்னால் முடிந்தது தரக்குறைவான வார்த்தைகளை உபயோகிப்பதில்லை என்றும், அப்படி உபயோகிப்பவரை முடிந்தால் திருத்தவும், இல்லாவிடில் கண்டு கொள்வதில்லை என்றும் உறுதி!

திங்கள், ஜூலை 04, 2005

பழம் நூல்களில் கணிதம் - பகுதி இரண்டு

சுலப சூத்திரங்கள்

இந்து மதத்தில் ஒரு தனி ஆசிரியரின் படைப்பாய் இல்லாமல், வாய் வழியாக குருகுல முறையில் கேட்டு, மனனம் செய்து, ஒரு தொகுப்பாக எழுதப்பட்ட நூல்கள் நிறைய உண்டு. அதே வழியில் இதுவும் ஒரு தொகுப்பு. இதன் காலம் கி.மு. 2000லிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்! திரு சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி தன்னுடைய புத்தகத்தில், இதைப் பற்றிய விளக்கம் அளித்திருக்கிறார். (Geometry in Ancient India by Satya Prakash Sarasvati)

இந்த இணைப்பும் சில விபரங்களைத் தருகிறது.
http://www.indolink.com/Forum/Arts-Culture/messages/1129.html

இதன் தொடக்கம் முதலில் ஆன்மீக விஷயங்களுக்காக - ஒரு வழிபாட்டுத் தலத்தை நிர்மாணிக்க, திசைகள், அளவுகள், மற்றும் தூரங்களை நிர்ணயிக்கும் விதமாக இருந்தது. அதனால், கோணங்களைப் பற்றியும், தூரங்களைப் பற்றியும் இதன் விதிகள் மிக தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த விதிகள் 'துல்லியத்தை' கணிப்பதை விடவும், முக்கியமாக வாழ்க்கையின் நடைமுறைக்கு ஏற்ற தெளிவையும், எளிமையையும் பின்பற்றி எழுதப்பட்டுள்ளன என்பதுதான். (Practicality and Simplicity over Precision).


ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களைப் பற்றிய 'பிதாகரஸ்' விதியை எல்லோருக்கும் தெரியும். சுலப சூத்திரங்களில் இதைப் பற்றிய விபரங்கள் உள்ளன. விபரங்களுக்கு அம்மா, மற்றும் ஸரஸ்வதி எழுதிய, மோதிலால் பனார்சிதாஸ், தில்லி பதிப்பகத்தாரின் (1979) புத்தகத்தைப் பார்க்கவும். [Amma, T. A. Sarasvati. Geometry in Ancient and Medieval India. Motilal Banarsidass. Delhi: 1979.]


சுஸான்னா காங் என்பவர் எழுதிய இந்த வலைத்தளமும் இது பற்றி தெரிவிக்கிறது.
http://www.math.ubc.ca/~cass/courses/m309-01a/kong/sulbasutra_geometry.htm

இந்த சூத்திரங்கள் பெரும்பாலும் ஆன்மிகம் சம்பந்தமாகவே இருந்ததால், சில சமயம் தெய்வ வழிபாடு போன்று எழுதப்பட்டாலும், அதில் சில விஷயங்களைப் பொதிந்து வைத்திருந்தனர். வடமொழியில் ஒவ்வொரு சப்தமும் (எழுத்தின் ஒலி) ஒரு எண்ணைக் குறிக்கும் படி வைத்து, வழிபாட்டுச் செய்யுள் எழுதியுள்ளனர். இந்த செய்யுளில் உள்ள சப்தங்களின் வரிசை - அதாவது, சப்தங்கள் குறிக்கும் எண்களின் வரிசை 'பை' [Pi] என்னும் இலக்கத்தின் மதிப்பீடை குறிப்பதாக அறியப்பட்டுள்ளது. இது மாணாக்கர்கள் மனப்பாடம் செய்ய மிக ஏதுவாக இருந்தது.
விபரங்களுக்கு மறுமொழியப்பட்ட இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும். http://www.geocities.com/CapeCanaveral/7348/math.html?200527

மொழி பெயர்க்க நேரமில்லாததால், மேலும் சில வலைத்தளங்களை இங்கே தந்திருக்கிறேன்.
http://www.tamil.net/node/476
http://azorion.tripod.com/bose_concentric_circles.htm
http://www.rediff.com/news/2004/aug/16rajeev.htm
http://www.world-mysteries.com/awr_7.htm
http://www-groups.dcs.st-and.ac.uk/~history/Indexes/Indians.html

திங்கள், ஜூன் 27, 2005

பழம் நூல்களில் கணிதம் - பகுதி ஒன்று

நான் திருச்சி தேசியக் கல்லூரியில் படித்து கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றது பதினேழு வருடங்களுக்கு முன்னால். தேர்வு முடிவு வந்து முதல் வகுப்பில் தேர்ந்தது தெரிந்ததும் ஒரு மகிழ்ச்சி. கணிதத்தையே கரைத்துக் குடித்ததாக, ஒரு சாதனை படைத்தது போன்ற உணர்வு! வருடங்கள் ஆக ஆக, எவ்வளவு விஷயங்கள் தெரியவில்லை எனப் புரிய ஆரம்பித்தது - சமீபத்தில், அதாவது சில வருடங்களுக்கு முன் தான் 'எனக்கு எவ்வளவு தெரியாது என்பதே தெரியாது' ( I don’t know what I don’t know!)என்ற உண்மை புலப்பட்டது. நேரம் கிடைக்கும் போது விஞ்ஞானத்தைப் பற்றியும், கணிதத்தைப் பற்றியும், வலைத் தளங்களை தேடி படிக்கும் ஆர்வம் வந்து, பின் படிக்கவும் ஆரம்பித்த பிறகே இந்த ஞானோதயம்! அப்படிப் படித்த போது கிடைத்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசை.

முதலாவதாக வேதக் கணிதம்.

1884ல் பிறந்த திரு. வெங்கடராமன் (பின்நாளில் இவரை குருதேவர் என்றும் அழைத்தார்கள்) வட மொழியில் நிறைய ஆராய்ச்சிகள் செய்து, பழைய நூல்களில் அறிவியலைப் பற்றியும், கணிதத்தைப் பற்றியும் எழுதப்பட்ட செய்யுள்களை ஆராய்ந்து, அவற்றின் சாரத்தை விளக்கியுள்ளார். இவர் படித்த அதே தேசியக் கல்லூரியில் தான் நானும் படித்தேன் என்பதில் எனக்கு மகிழ்சி.

தசம எண்கணித முறையில் ஒரு மூன்றிலக்க எண்ணை மற்றொரு மூன்றிலக்க எண்ணால் எப்படி சுலபமாகப் பெருக்குவது என்பதை இவரின் விளக்கம் மூலமாக அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, 114ஐ 104ஆல் பெருக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம். முதலில் இந்த எண்களின் "நிகில"த்தை கண்டு பிடிக்க வேண்டும்.

சரி - நிகிலம் என்றால் என்ன? தசம முறையில், அடிப்படை எண்கள், பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லக்ஷம், போன்றவைகளாகும். மூன்றிலக்க எண்களுக்கு அடிப்படை எண் நூறாகவோ, அல்லது ஆயிரமாகவோ இருக்கலாம். எது அருகில் இருக்கிறதோ, அதை எடுத்துக் கொள்ளவும். இந்த உதாரணத்தில், அடிப்படை எண் நூறு. நிகிலம் என்பது நம்முடைய எண்ணுக்கும், அதன் அடிப்படை எண்ணுக்கும் உள்ள வித்தியாசம். அதாவது 104ன் நிகிலம் 4 (104-100); அதேபோல் 114ன் நிகிலம் 14 (114-100).

இரண்டாவதாக, ஒரு எண்ணோடு மற்ற எண்ணின் நிகிலத்தை கூட்டவும். இந்த உதாரணத்தில் 104 உடன் 14 ஐ (114ன் நிகிலம்) கூட்டவும். வரும் விடை - 118 - இறுதி விடையின் முதல் பகுதி. (எந்த எண்ணை வேண்டுமானாலும் எடுக்கலாம் - 114 ஐ எடுத்துக் கொண்டால், அதனோடு மற்ற எண்ணின் - அதாவது 104ன் - நிகிலத்தைக் கூட்டவும் - விடை அதே 118 தான்).

மூன்றாவதாக, இரண்டு நிகிலங்களையும் பெருக்கவும் - இங்கு 4 ஐ 14 ஆல் பெருக்க வெண்டும். விடை 56. இது இறுதி விடையின் இரண்டாம் பாகம். ஆக 114ஐ 104 ஆல் பெருக்கினால் வரும் விடை 11856 - நமது விடை ஒன்றையும் - 118, விடை இரண்டையும் – 56, சேர்த்து எழுதினால் வந்து விட்டது!

இதுபோல் மற்ற பெரிய எண்களையும் பெருக்க முடியும்.

இது ஒரு உதாரணம் தான். பெரிய கடலின் ஒரு துளி. இதைப் போல மேலும் கணிதத்தைப் பற்றி அறிய விபரங்களுக்கு இங்கே: http://www.ssmkerala.org/ICTS_Senior.pdf

புதன், ஜூன் 15, 2005

நாகரீகமும் கலாச்சாரமும்

நாகரீகமும் கலாச்சாரமும்
(Civilization and Culture)

தமிழ் நாட்டில் கலாச்சார முன்னேற்றம் பற்றியும் அதைக் காப்பது பற்றியும் இப்போது நிறைய அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள். இதில் தமிழை “வளர்ப்பது”, “காப்பது” என்ற இரண்டும் பேசுவதற்கு மிகவும் பிரபலமான விஷயங்கள். பொதுவாகவே இதைப் பற்றி அறிக்கைகளும், சுய தம்பட்டங்களும் சர்வ சாதாரணமாகி விட்டன. கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் தமிழும், அதன் நாகரீகமும், கலாச்சாரமும் தங்களால் தான் வளர்ந்து வருகிறது என்றும், தாங்கள் தான் இவ்விஷயங்களுக்கெல்லாம் பாதுகாவலர்கள் என்றும் காட்டிக் கொள்ளத் தவறுவதே இல்லை! நாகரீகத்தைப் பற்றியும், கலாச்சாரத்தைப் பற்றியும் எப்போதோ படித்த ஒரு ஆங்கிலக் கட்டுரை நினைவிற்கு வந்தது; அதனால் இந்தப் பதிவு.

இரண்டுக்கும் இடையே என்ன வித்தியாசம்? நாகரீகத்தின் அடையாளமாக, வாழ்க்கையின் நிலமையை நிர்ணயிக்கும் சாதனங்களை, அமைப்புகளைக் கூறலாம். உதாரணமாக, கணிப்பொறி, தொலைபேசி போன்ற சாதனங்களும், கிராம நிர்வாக அமைப்பு (பஞ்சாயத்து), பொதுத் தேர்தல் முறை போன்ற அமைப்பு முறைகளும் ஒரு நாகரீகத்தின் வளர்ச்சியையும், அடையாளத்தையும் காட்டுகின்றன. இதில் தொழில் நுட்ப வளர்ச்சியும் அடங்கும். ஆனால் பெரும்பாலான மக்களின் மதிப்பில் தொழில் நுட்ப வளர்ச்சி மட்டுமே பெரிதாகத் தெரிகிறது. அதனால் தொழில் நுட்ப வளர்ச்சியை வைத்து நாகரீகத்தை அளக்கிறார்கள் - தவறாக!.

கலாச்சாரம் என்பது தினசரி வாழ்க்கையில், வாழும் விதத்தில், சிந்தனையில் தெரியும் தனிமனித வெளிப்பாடு. சமய, மொழி, இலக்கிய மற்றும் கலை வாயிலாக எப்படி தனி மனித உணர்ச்சிகள், சிந்தனைகள் வெளிப்படுகின்றதோ அதை கலாச்சாரம் எனக் கூறலாம்.

நிறைய விஷயங்களில் நாகரீகமும் கலாச்சாரமும் சேர்ந்தே இருக்கின்றன. ஒரு விஷயம் நாகரீகமா? அல்லது கலாச்சாரமா? என்பதை இக் கேள்வியின் மூலமாக சோதித்துப் பார்க்கலாம். "ஒரு விஷயத்தை அவ்விஷயத்திற்காக மட்டும் விரும்புகிறோமா அல்லது அவ்விஷயத்தின் மூலமாக வேறு ஒன்றை அடைய முயல்கிறோமா" என்று ஆராய்வதன் மூலம் ஒரு தெளிவிற்கு வரலாம். இது 'இலக்கிற்கும்' - 'வழிக்கும்' (End and Means) உள்ள தொடர்பைப் போன்றது. எந்த விஷயங்கள் இலக்குகளாக இருக்கின்றதோ - அதாவது நேரடியாக நம் வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றதோ, அவைகளை கலாச்சாரம் என்றும், எந்த விஷயங்கள் இலக்குகளை அடைய உதவியாக இருக்கின்றதோ அவற்றை நாகரீகம் என்றும் கூறலாம்.

கலாச்சாரம் இலக்கு - நாகரீகம் அதன் வழி!

சரி - எதற்காக இந்த விளக்கம்? முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கும் போது - அது ஒரு நாட்டின் முன்னேற்றமாக இருந்தாலும் சரி அல்லது ஒரு தனி மனிதனின் முன்னேற்றமாக இருந்தாலும் சரி - நாம் அனேகமாக நாகரீக வளர்ச்சியை மட்டும் பெரிதாக எண்ணுகிறோம். ஆனால் கலாச்சாரம் தான் உண்மையான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.

இப்போது இருக்கும் வாழ்க்கை முறையை ஐநூறு வருடங்களுக்கு முன்னால் இருந்த வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டால், நாம் நாகரீகத்தில் - அதிலும் முக்கியமாக தொழில் நுட்பத்தில் - முன்னேறியிருக்கிறோம் எனக் கூறலாம். அதே சமயத்தில் நாம் உண்மையாகவே கலாச்சாரத்தில் முன்னேறியிருக்கிறோம் எனக் கூற முடியுமா?

அப்போது மன்னர்கள் ஆண்டு வந்தாலும், நீதி என்பது சாதாரண மக்களுக்கும் எட்டும் உயரத்தில் இருந்தது. கண்ணகியின் கதை உடனே நினைவிற்கு வருகிறது. அதை இன்று காண முடியுமா? வருடக் கணக்கில் செயலாக்கப் படாத கைது வாரண்டோடு இருக்கும் காவல் துறை அதிகாரியைப் பற்றியும், தீர்ப்பாகாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றித்தான் படிக்கிறோம்.

மன்னர்கள் சுக போக வாழ்க்கை வாழ்ந்தாலும், பொறுப்போடு எதிர்காலத்திற்காக நிறைய காரியங்களைச் செய்து விட்டுச் சென்றார்கள் - வரலாற்றுப் பாடத்தில் எத்தனை முறை "சாலை ஓரங்களில் மரம் நட்டதையும், நீருக்கு குளம் வெட்டியதையும்" படித்து இருக்கிறோம்? அக்காலத்தோடு ஒப்பிடும் போது, இன்று கட்சிகள் மரம் வெட்டியது பற்றியும், நீர் கொண்டு வருவதற்கான ஊழல் பற்றியும் தான் அதிகம் படிக்கிறோம்.

அந்தக் காலப் படைப்புகள் அறிவை வளர்ப்பதிலும் சரி, அல்லது மனதைத் தொடும் இலக்கியத்திலும் சரி, சிறந்து விளங்கின. ஒரு திருக்குறள், ஒரு சிலப்பதிகாரம், ஒரு மணிமேகலை, அல்லது பக்தியை வளர்க்கும் பிரபந்தங்கள் - எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்றும் நிலைத்து நிற்கின்றன. ஆசிரியர்களுக்கும், புலவர்களுக்கும்தான் எத்தனை மதிப்பு இருந்தது? அதே சமயத்தில் மன்னர்கள் மற்ற மொழிப் புலவர்களைத் தண்டித்ததாகப் படித்ததில்லை. இன்று தமிழில் ஆங்கிலம் கலக்காமல் எழுதுவது குறைவு. எழுதும் ஒரு சிலர் மறைந்த போது அவர்கள் இறுதி ஊர்வலத்திற்கு ஐம்பது பேர் கூட வருவதில்லை! ஆனால் அரசியல்வாதிகள், வாக்குகளுக்காக, மற்ற மொழிகளைப் பழிப்பது மிகவும் சாதாரணமாகி விட்டது.

தினசரி வாழ்க்கை முறையை மேம்படுத்துவது நாகரீகத்தின் அடையாளம். சக மனிதனுக்குச் சங்கடம் உண்டாக்குவது நாகரீகமல்ல! இன்று அரசியலில் கலாச்சாரப் பாதுகாப்பு என்ற பெயரில் ஏராளமான மக்களின் தினசரி வாழ்க்கையில் சங்கடங்களை உருவாக்கி வருகிறோம். யோசித்துப் பார்த்தால் ஐநூறு ஆண்டுகளில் நாம் முன்னேறவில்லை எனத் தோன்றுகிறது.

தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் பத்திரிகைகள் நாகரீகம் என்ற பெயரில் தரக்குறைவான வாழ்க்கை விதத்தைப் பிரபலப் படுத்தி வருகின்றன. நாகரீகம் என்ற பெயரில், போலியான வாழ்க்கை விதத்தில், கலாச்சாரத்தை இழந்து வந்து கொண்டிருக்கிறோம். அதேபோல அரசியலின் தயவால் கலாச்சாரப் பாதுகாப்பு என்ற பெயரில் நாகரீகத்தையும் இழக்க ஆரம்பித்திருக்கிறோம்!

செவ்வாய், ஜூன் 14, 2005

பிரபஞ்சத்தின் வயது - மேலும் சில விபரங்கள்

பிரபஞ்சத்தின் வயது - மேலும் சில விபரங்கள்

நல்லடியார் பழம் நூல்களைப் பற்றிக் கேட்டிருந்தார். இது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு: http://www.mcremo.com/vedic.htm

சுலப சூத்திரங்களிலிருந்து மேலும் பல விபரங்கள் அறியலாம். உதாரணமாக, பிதாகரஸ் விதி (செங்கோண முக்கோணத்தின் பக்கங்களின் நீளம் பற்றிய விதி) பற்றி சுலப சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதெல்லாவற்றைப் பற்றியும் எழுத ஆவல்.

அது மட்டுமல்ல. மதங்களுக்கு இடையே உள்ள ஒத்துப்பாட்டைப் பற்றியும் எழுத எண்ணம் - நேரம் கிடைத்தால் :-)

வெள்ளி, ஜூன் 10, 2005

பிரபஞ்சத்தின் வயது என்ன?

பிரபஞ்சத்தின் வயது என்ன?

இந்த வருடம் பிப்ரவரியில் லாரன்ஸ் க்ராஸ் மற்றும் பிரயன் (ச்)சபோயர் என்கிற இரண்டு இங்கிலாந்து விஞ்ஞானிகள் இப்பிரபஞ்சத்தின் வயதைப் பற்றிய அனுமானத்தை வெளியிட்டனர். அவர்கள் இப்பிரபஞ்சத்தின் வயது கிட்டத்தட்ட (95 சதவிகித நம்பிக்கையுடன்) 11.2ல் இருந்து 20 பில்லியன் வருடங்களுக்குள் இருக்கும் என அனுமானிக்கிறார்கள்.

விபரங்களுக்கு:
http://www.space.com/scienceastronomy/map_discovery_030211.html
http://www.space.com/scienceastronomy/age_universe_030103.html

நம்முடைய முன்னோர்களின் கணக்கு இந்த அனுமானத்தோடு ஒத்துப் போகிறது. பழம் பெரும் இந்து நூல்களில் இந்தப் பிரபஞ்ஞத்தின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் அழிவை ஒரு சுழற்சி எனக் கணித்து, அதை பிரம்மாவின் ஒரு நாள் - ஒரு பகலும், ஒரு இரவும் - கொண்டது எனக் கூறப்பட்டுள்ளது. பிரம்மாவின் நாள் பொழுது 4,320,000,000 வருடங்களுக்கு சமம். இதில் தான் நான்கு யுகங்கள் உள்ளன:
யுகம் : வருடங்கள்
கிருதி யுகம்: 1,728,000
த்ரேதா யுகம்: 1,296,000
த்வாபர யுகம்: 864,000
கலி யுகம்: 432,000

இதற்குப் பின் பிரளயத்தினால் பிரபஞ்ஞம் அழிவதாகவும், அப்போது பிரம்மா உறங்குவதாவதும் சொல்லப்படுகிறது. அவரின் உறக்கம் அவரின் விழித்திருக்கும் நாளுக்குச் சமம் - அதாவது 4,320,000,000 வருடங்கள். இதைப் போன்ற கணக்குகளின் மூலமாக பிரபஞ்ஞத்தின் வயதை 19.252 பில்லியன் வருடங்கள் என அனுமானித்திருக்கிறார்கள். இது விஞ்ஞானிகளின் கணக்கோடு ஒத்துப் போகிறது என்பது தான் ஆச்சரியமான விஷயம்.

விபரங்களுக்கு:
http://www.stnews.org/articles.php?article_id=608&category=commentary

அது மட்டுமல்ல. பழைய நூல்களில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம், சூரியனின் விட்டத்தைப் போல நூற்றியெட்டு மடங்கு எனவும், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம், சந்திரனின் விட்டத்தைப் போல நூற்றியெட்டு மடங்கு எனவும் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் கணக்கு 107.6ல் இருந்து 110.6 என்பதாகும்.

சந்திரனின் விட்டம்: 3479 (கிமீ)
பூமிலிருந்து தூரம் (பூமிக்கு): 384,400 (கிமீ)
சூரியனின் விட்டம்: 1,390,000 (கிமீ)
சூரியனிலிருந்து தூரம் (பூமிக்கு): 149,600,000 (கிமீ)

விபரங்களுக்கு:
http://www.solarviews.com/eng/earth.htm
http://www.solarviews.com/eng/moon.htm
http://hypertextbook.com/facts/2002/SamuelBernard1.shtml

இன்னும் எத்தனை விஷயங்கள் இருக்கின்றதோ? ஆச்சர்யம்தான்!!

மேலும் சில இணைப்புகள்:
http://1stholistic.com/Prayer/Hindu/hol_Hindu-calendar.htm
http://1stholistic.com/Prayer/Hindu/hol_Hindu-creation-of-the-universe.htm
http://www.hindunet.org/alt_hindu/1995_May_1/msg00002.html

திங்கள், ஜூன் 06, 2005

நாணய மதிப்பிறக்கம்: 39 ஆண்டுகளுக்குப் பிறகு

6 - 6 - 1966

அப்படி என்ன விசேஷம் இந்த நாளுக்கு? 1966ல் இதே நாளில் தான் (ஜூன் ஆறு) இந்தியாவின் முதலாவது நாணய மதிப்பிறக்கம் (currency devaluation) நடந்தது. அந்த மதிப்பிறக்கத்திற்கு முன்னால் ஒரு அமெரிக்க டாலர் ரூபாய் 4.76 ஆக இருந்தது. 37.5 சதவிகித மதிப்பிறக்கத்திற்குப் பின்னால் ஒரு அமெரிக்க டாலர் ரூபாய் 7.50 ஆயிற்று. நிதிப் பற்றாக்குறை, வாணிபப் பற்றாக்குறை மற்றும் அன்னிய நாணய இருப்பு இந்த மதிப்பிறக்கத்திற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டன. (விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட இணைப்புகளுக்குச் செல்க!)

இன்று, அதே ஜூன் ஆறில் ஒரு அமெரிக்க டாலர் ரூபாய் 43.60! இந்த முப்பத்தியொன்பது வருடங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட பத்து மடங்கு குறைந்திருந்தாலும், எத்தனை மாற்றங்கள்?

66ல் உலக வங்கி நிதிக்காக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வாஷிங்டனுக்குச் சென்று பேசிய போது வேறு வழியில்லாமல், நிர்பந்தத்தினால் இந்த மதிப்பிறக்கத்தை செய்ய வேண்டியிருந்தது! http://www.ieo.org/world-c2-p3.html
இப்போது அதே உலக வங்கி இந்தியாவில் (சென்னை) தன் அலுவலகத்தை விரும்பி வைத்துள்ளது! http://www.elcot.com/cm/nfe160302.htm
http://www.domain-b.com/finance/banks/world_bank/20020316_office.html


இன்றைய நாளிதழில் தலைப்பிலிருந்து மூன்று செய்திகள்: நன்றி இந்துஸ்தான் டைம்ஸ்.

1. அமெரிக்காவில் இந்திய மாணாக்கர்களின் தேர்ச்சி http://www.hindustantimes.com/news/5967_1389319,00160006.htm
2. இந்திய அலுவலகங்களில் சேர அன்னிய நாட்டவர்கள் ஆர்வம் http://www.hindustantimes.com/news/181_1389630,001300460000.htm?headline=Indian~call~centers~to~swell~with~foreigners

3. இந்திய மருத்துவர்கள் மேல் ஐரோப்பிய நோயாளிகளின் நம்பிக்கை http://www.hindustantimes.com/news/181_1388714,0005.htm?headline=Brits~love~young~Indian~lady~docs

எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும், இந்தியர்கள் பெருமைப் பட வேண்டிய விஷயம்.

இதர இணைப்புகள்:

http://www.ccsindia.org/Intern2002_12_devaluation.pdf
http://www.findarticles.com/p/articles/mi_qa3680/is_200010/ai_n8903841

வியாழன், ஜூன் 02, 2005

விடியலே பூமிக்கு அழகு!

விடியலே பூமிக்கு அழகு!

இந்தத் தலைப்பு என்னதில்லை. நான் திருச்சியில் கல்லூரியில் படிக்கும் போது (1984)எதிர் வீட்டிற்கு இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த ஒரு தமிழ்க் குடும்பத்தின் வீட்டில் படித்தது. ஒரு பெரிய விஷயத்தை மூன்றே வார்த்தைகளில் அழகாகச் சொல்ல முடியும் என்று நினைத்தும் பார்த்ததில்லை.

இலங்கையில் தங்களுக்கு வந்த பெரும் கஷ்டங்களை மட்டும் நினைத்துக் கொண்டிருக்காமல், ஒரு புன்முறுவலோடு எதிர்காலத்தை நேராய் பார்க்கும் மனப்பாங்கு அந்தக் குடும்பத்தில் - தாய், ஒரு மகன், ஒரு மகள் - எல்லொருக்கும் இருந்தது. அவர்களின் நகைக் கடை அழிந்தாலும், சொத்து சேதம் ஏற்பட்டாலும், தன்னம்பிக்கையோடு வாழ்வைப் பற்றி எழுதிய வாக்கியம். இரண்டு பக்கங்களுக்கு 'ஏன் வாழ வேண்டும்? எப்படி வாழ வேண்டும்?' என்று அந்தக் குடும்பத்து உறவினர் இந்தத் தலைப்பில் தன் எண்ணங்களை இவர்களுக்கு இலங்கையிலிருந்து எழுதியது.

ஒரு புது தினத் தொடக்கம் எப்படி பூமிக்கு அழகூட்டுகிறதோ, எப்படி இருளை நீக்கி ஒளி கொடுக்கிறதோ, அதே போல வாழ்க்கையிலும் புதுத் தொடக்கங்கள் முக்கியம் என்பதை, பொருளிழந்து நாடு விட்டு நாடு பெயர்ந்த அக்குடும்பத்திற்கு மிக அழகாக விளக்கிய கடிதம். அக் கடிதத்தைப் படித்த போது 'பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்' என்ற கவிதை ஞாபகம் வந்தது.

இந்தத் தலைப்பும், கடிதமும் அப்போது புரிந்தாலும், நான் வளர, வளர, அதன் அர்த்தமும், அதன் பாதிப்பும் எனக்குள்ளே இன்னும் வளர்கின்றது. என் மகள் பிறந்த போது, அந்த தொடக்கம் என் வாழ்க்கைகு மேலும் ஒரு அர்த்தம் கற்பித்தது. முழு அர்த்தமும் புரிந்துவிட்டது என நினைத்தேன்; இரண்டாவதாக மகன் வந்த போது இன்னும் கொஞ்ஞம் புரிந்தது! முக்கியமாக உணர்ந்தது புரிதலில் முழுமை என்பதே கிடையாது என்பது தான்!

பள்ளிப் பருவத்தில் படித்த கவிதை ஞாபகம் வந்தது! எழுதியவர் பெயர் மறந்துவிட்டலும் (முதுமை காரணம்?) நன்றியுடன் அந்தக் கவிதை.

"தொடுவானத்தில் என் லட்சியக் கொடி, தொட்டுவிடுவாயா? எனக் கேள்வி
மனிதன் நடப்பது நிஜம், பறப்பது கனவுதான்
என் நினைவுகள் நடக்குமெனில் நான் நிஜத்திலே பறப்பேன்
இல்லையெனில் கவலையில்லை நான் நடந்து கொண்டே இருப்பேன்"

இயற்கையின் கல்வி

இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்பாக மன்னார்குடியில் தேசியப் பள்ளியில் (நேஷனல்) அறிவியல் ஆசிரியர் பென்சீன் வேதியல் அமைப்பு (மாலிக்யூல் ஸ்ட்ரக்சர்) கண்டுபிடிக்கப்பட்ட விதத்தை விளக்கினார். விஞ்ஞானி ஒரு பாம்பு தன்னுடைய வாலைத் தானே விழுங்குவது போல கனவிலே கண்டாராம். அது அவருக்கு பென்சீன் வேதியல் அமைப்பை விளக்கியதாம். பென்சீன் ஆறு கார்பன் அணுக்கள் கொண்டது. விபரங்களுக்கு இங்கே போகவும். http://www.worldofmolecules.com/solvents/benzene.htm


மூன்று விஞ்ஞானிகளுக்கு 1996ல் வேதியல் நோபெல் பரிசு, அறுபது கார்பன் அணுக்கள் கொண்ட அமைப்பை கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டது. இந்த விஞ்ஞானிகள் இதை "பக்மின்ச்டெர் புல்லர்" என்ற பிரபல கட்டட அமைப்பாளரின் கட்டடங்கள் ஞாபகார்த்தமாக "பக்மின்ஸ்டர்புலரன்ஸ்" என்றும் "புல்லெரீன்” என சுருக்கமாகவும் அழைத்தனர். கட்டடங்கள் அமைப்பு இவர்களுக்கு கார்பன் அணுக்கள் அமைப்புக்கு கோடி காட்டியது! விபரங்களுக்கு: http://www.ul.ie/elements/Issue6/Nobel%20Prize%201996.htm
http://www.godunov.com/Bucky/fullerene.html


சில நாள் முன்பு காப்பி ஆற்றிக் கொண்டிருக்கையில் அந்த நுரையில் இதே "பக்மின்ஸ்டர்புலரன்ஸ்" அமைப்பைப் பார்க்க முடிந்தது!
(நன்றி) http://www.istockphoto.com/file_closeup.php?id=92275

இயற்கையை கூர்ந்து கவனித்தால் பல விஷயங்கள் புலப்படும். கவனிக்கத்தான் தெரியவில்லை!
இதைப்போல் வேறு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்களேன்!

புதன், ஜூன் 01, 2005

"தண்ணீரில் நடக்க முடிந்தால், படகினை உபயோகி"

மனதைக் கவர்ந்த புத்தகங்கள் - 1

"தண்ணீரில் நடக்க முடிந்தால், படகினை உபயோகி"
(When you can walk on water, take the boat)

"ஜான் அரிச்சரண்" (John Harricharan) கிட்டத்தெட்ட இருபது வருடங்களுக்கு முன்னால் எழுதியது. "மதங்கள் பல இருந்தாலும் கடவுள் ஒன்று" என்ற பலமான கருத்தை மிகவும் அழகாகவும், ஆழமாகவும் எடுத்துக்காட்டிய புத்தகம்.

இதை இலவசமாக இந்த வலைப்பதிவிலிருந்து http://www.waterbook.com/ எடுத்துக் கொள்ளலாம். ஒரு முறையாவது படிக்கவேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.

கர்னாடக இசைப் பாடல்கள் - தமிழ் எழுத்தில்

இந்தப் பகுதியில் என்னால் முடிந்த வரைக்கும் கர்னாடக இசைப் பாடல்களை தமிழ் எழுத்தில் தர உத்தேசம். ஏதாவது பிழை மற்றும் உரிமைப் பிரச்சனை (copyright) இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.


பாடல்: கான மழை
ராகம்: ராகமாலிகா
தாளம்: ஆதி
இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணா
மொழி: தமிழ்

பல்லவி பேகாக்
கான மழை பொழிகின்றான் கண்ணன் யமுனா தீரத்தில் யாதவ குலம் செழிக்க

அனுபல்லவி
ஆனந்தமாகவே அருள் பெருகவே முனிவரும் மயங்கிடும் மோகன ரூபன்

சரணம் 1
தேன்சுவை இதழில் வைங்குழல் வைத்தே திகட்டா அமுதாய் தேவரும் விரும்பும் வேணு-

சரணம் 2 பெளளி
குயிலினம் கூவிட மயிலினம் ஆடிட ஆவினம் கரைந்திட அஞ்சுகம் கொஞ்ச
கோவலர் களித்திட கோபியர் ஆட கோவிந்தன் குழல் ஊதி

சரணம் 3 மணிரங்கு
அம்பரம் தனிலே தும்புரு நாரதர் அரம்பையரும் ஆடல் பாடல் மறந்திட
அச்சுதன் அனந்தன் ஆயர்குல திலகன் அம்புஜனாபன் ஆர்வமுடன் முரளி

-------------------------------------------------------

பாடல்: ஆடும் சிதம்பரமோ
ராகம்: பேகாக்
தாளம்: ஆதி
இயற்றியவர்: கோபாலகிருஷ்ண பாரதியார்
மொழி: தமிழ்

பல்லவி

ஆடும் சிதம்பரமோ அய்யன் கூத்தாடும் சிதம்பரமோ(ஆடும்)

அனுபல்லவி

ஆடும் சிதம்பரம் அன்பர் களிக்கவே நாடும் சிதம்பரம் நமசிவாயவென்று (ஆடும்)

சரணம் 1

யாரும் அறியாமல் அம்பல வாணனார் ஸ்ரீரடியார் பார்க்க சேவடி தூக்கி நின்று (ஆடும்)

சரணம் 2

பாலகிருஷ்ணன் போற்றும் பனிமடி சடையினார் தாள மத்தளம் போட தா தை தித்தை என்று (ஆடும்)

செவ்வாய், மே 31, 2005

முதல் கவிதை

"உள்ளத்து வார்த்தைகளை உதடுகள் சொல்லச் சொல்ல
பொங்கி வரும் உணர்ச்சிகளின் பொய்கையாய் மனதிருக்க
வாங்கி விடும் மூச்சைப் போல் வார்த்தைகள் வந்து விழ
செந்தமிழ்ச் சொற்களால் சொர்க்கத்தைச் சொந்தமாக்கும்
ஆற்றல் மிகு அறிவின் அரசே கவிஞ்ஞனடா!"


இருபது வருடங்களுக்கு முன்பாக கல்லூரியில் படிக்கும் போது எழுதியது!

வெள்ளி, மே 27, 2005

Just created the account in Blogger. Did not want to be left behind in this information age! Hope to post few of my thoughts here in the near future!!