தொழிற்சாலையில் இருந்து மொத்த வினியோகஸ்தர்களுக்கு பொட்டலங்களை அனுப்புவதும் ஒரு கலை தான். இதில் இருப்பவர்களை தூங்க விடாமல் பயமுறுத்தும் விஷயம் ஒன்றுதான்: போக்குவரத்து நிறுத்தம் (TRANSPORT STRIKE). இதைத் தவிர இவர்கள் கவலைப்படுவது பொட்டல இருப்புக்கு மட்டும்தான். ஆனால் முதன் முதலாக இந்தப் பிரிவில் தொழில் கற்ற பொழுது நான் நிரம்பவும் யோசித்து ஆச்சரியமாகப் பார்த்தது இவர்கள் ஒரு வண்டிக்கு (சின்ன லாரி, டிரக், பெரிய லாரி என்று பல வகை உண்டு) தகுந்த மாதிரி எத்தனை விதமான பொட்டலங்களை அனுப்ப முடியும் என்று வெகு எளிதாக சொன்னதோடு மட்டுமல்லாமல் எந்த வழியாகப் போனால் அதிகமான மொத்த வினியோகஸ்தர்களை குறைந்த தூரத்தில், சீக்கிரமாக அடையலாம் என்றும் சொன்னதுதான். கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்.
ஆலையில் பொட்டலங்களை அட்டை டப்பாவில் போட்டுத்தான் (CARTONS) அனுப்புவார்கள். இந்த அட்டை டப்பாக்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்காது – உயரம், அகலம், நீளம் எல்லாமே வெவ்வேறு வகை. ஒவ்வொரு வண்டிக்கும் சில குணங்கள் உண்டு. இத்தனை உயரத்துக்கு மேல் போகக் கூடாது; இத்தனை எடைக்கு மேல் போகக் கூடாது என்றெல்லாம் விதிகள் உண்டு. ஒரு மொத்த வினியொகஸ்தர் கேட்கும் வகைகள் இந்தமாதிரி அட்டை டப்பா கணக்கில் தான் இருக்கும். இதில் பெரிய வினியொகஸ்தர்கள் சமயத்தில் ஒரு லாரி டீ கேட்பார்கள். அது ரொம்ப சுலபம்; ஏற்றி அனுப்ப வேண்டியதுதான். ஆனால் அதிகபட்சமான ‘தேவை சீட்டுகள்’ (DEMAND SHEETS) கால் வண்டி, அரை வண்டிதான் வரும். குறைந்த செலவில் இதை அனுப்ப வேண்டுமென்றால், இரண்டு, மூன்று வினியொகஸ்தர்களுக்கான டீயை ஒரு பெரிய வண்டியில் அனுப்பி, ஒவ்வொரு இடத்திலும் அவர்களுக்கு வேண்டியதை இறக்கிவிடுமாறு பார்த்துக் கொள்வது தான்.
கேட்க எளிதாக இருந்தாலும், செய்வது அவ்வளவு சுலபமாக இதை செய்ய முடியாது. எந்த வினியொகஸ்தர்களுக்கு முதலில் அனுப்புவது, இரண்டாவது எங்கே? போன்ற கேள்விகளுக்கு விடை தேவை. இதைப் பொறுத்து வண்ண்டியில் டீயை ஏற்ற வேண்டும். கடைசியாக நிறுத்தும் இடத்திற்கான பொட்டலங்களை முதலில் ஏற்ற வேண்டும். அப்போதுதான் முதல் இடத்தில் உள்ள பொட்டலங்களை இலகுவாக இறக்கலாம். ஓவ்வொரு இடத்திலும், தேவையில்லாமல் அட்டைப் பெட்டிகளை இறக்கி ஏற்றினால் செலவும் அதிகம், நேரமும் விரயம். டீசல் விற்ற (விற்கிற) விலையில் செல்லும் வழியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம், செலவைக் குறைக்க.
இதில் அத்தனை வினியோகஸ்தர்களின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாது. எதையாவது குறைக்க நேரிடும். அவர்கள் கேட்கின்ற வகை இருப்பில் இருக்காது; இரண்டு நாள் கழித்துத்தான் பொட்டலம் போடுவதாக திட்டம் இருக்கும். அல்லது வண்டியின் உயரத்தாலோ, அல்லது எடையாலோ சில டப்பாக்களை ஏற்ற முடியாமல் போகலாம். எதை விடுப்பது அல்லது எடுப்பது என்ற முடிவும் அவ்வளவு சுலபமானதல்ல. விற்பனைப் பிரிவைப் பொறுத்தவரை எதையுமே விட முடியாது. டீ இருப்பில்லை என்று சொல்வது பொட்டலப் பிரிவுக்கு பிடிக்காது. இந்த அனுப்பும் பிரிவில் இருப்பவர்களுக்கு உயரத்தாலோ, எடையாலோ அனுப்ப முடியவில்லை என்று சொல்லப் பிடிக்காது. காரணம் அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு தன்மானப் பிரச்சனை - வண்டியைத் தேர்வு செய்வது அவர்கள் கையில்தானே இருக்கிறது. மற்றவர்கள் அவர்களைக் கேட்கலாமே 'ஏன் பெரிய வண்டியை எடுக்கவில்லை?' என்று! ஆகையால் வண்டியின் அளவு சரியில்லை என்று சொல்ல மாட்டார்கள்.
இத்தனையும் ஒரு மாதிரி சமாளித்து அனுப்ப நினைக்கையில் அவர்களுக்கு அதிகம் வெறுப்பேற்றும் விஷயம் - ஆலையில் உள்ள கணக்கர்கள். அவர்கள் இந்தப் பயணத்துக்கு தேவையான சீட்டு மற்றும் இதர ஆவணங்களைப் பெற்றுத்தான் வண்டியை அனுப்ப வேண்டும். இல்லையென்றால் ஏதாவதொரு செக் போஸ்டில் வண்டியை நிறுத்திவிடுவார்கள்; சேதம் அதிகமாகி விடும். வண்டியில் எந்த டப்பாவை ஏற்றுவது என்ற முடிவை சரியான நேரத்துக்குள் தெரிவிக்கவில்லை என்றால் கணக்கர்கள் வீட்டுக்கு சென்றுவிட வாய்ப்பு உண்டு. இதுவும் ஒரு பிரச்சனை.
'ஏன் வண்டி வரவில்லை' என்று தொலைபேசியில் கத்தும் விற்பனைப் பிரிவு, 'வண்டியில் ஏற்ற சில வகைகள் இன்னமும் தயாரில்லை' என்று சொல்லும் பொட்டலப் பிரிவு, 'வண்டியில் என்ன ஏற்றப்போகிறாய்? நான் வீட்டுக்குப் போக வேண்டாமா?' என்று கோபிக்கும் கணக்கர், இவர்களுக்கிடையே, வண்டியின் உயரம்/கொள்ளளவு பற்றியும், போகும் வழி பற்றியும் யோசித்து 95% சரியான சமயத்திற்குள் டீயை அனுப்பும் இந்தப் பிரிவில் உள்ளவர்களையும் நான் மதிப்போடுதான் பார்த்தேன்!
முந்தைய பதிவுகள்
தேநீர் – 10
தேநீர் – 9
தேநீர் – 8
தேநீர் – 7
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1
4 கருத்துகள்:
OR படித்த ஞாபகம் வருதே வருதே....
ஆமாங்க இ.கொ.
நிச்சயம் அது நினைவுக்கு வந்தது. என்னதான் Equation போட்டு கணக்குப் பண்ணாலும், நேரிலே பிரச்சனையைத் தீர்க்கும் விதம் தனிதான்.
ரங்கா.
கொஞ்சம் தடம் மாறிய கேள்வி??
மொத்த கொள்முதல் பண்ணும் வியாபாரிகள் பொருள் விற்பனையானவுடன் பணம் கொடுப்பார்களா? அல்லது விற்பனைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாமல்,நான் கொடுக்கிறேன் நீ வாங்குகிறாய், உடனே பணம் கொடுத்துவிடு என்று நிர்வாகம் நெருக்குமா?எப்படி இந்த சந்தேகம் ஏன் வந்ததென்றால், உதாரணத்திற்கு..
காலை வரும் செய்தித்தாள் வாங்கி விற்பவர்கள் மீதமுள்ள செய்திதாளை என்ன செய்வார்கள்?அச்சிடும் நிறுவனமே திரும்ப எடுத்துக்கொள்ளும் என்று கேள்விப்பட்டேன்.சரியா என்று தெரியாது.
இதே மாதிரி எங்கும் கடைபிடிக்கப்படுகிறதா?
முடிந்தால் விளக்கவும் அல்லது ஒரு பதிவா போட்டுடுங்க!!
தனிப் பதிவாகவே போட்டு விடுகிறேன் குமார் :-)
ரஙகா.
கருத்துரையிடுக