வெள்ளி, டிசம்பர் 08, 2006

ஒரு இரயில் பயணத்தில்...

ரயிலில் நியூயார்க் வரும் போது கணிப்பொறித் துறையில் வேலை செய்யும் இரு தமிழ் பேசும் வாலிபர்கள் என் காதில் விழுகிற மாதிரி பேசிக் கொண்டு வந்த உரையாடல்.

“கொஞ்சம் முன்னாலேயே கிளம்பலாம்னு இதுக்குதான் சொன்னேன். இப்படி மூச்சு வாங்க ஓடி வரவேண்டாமில்லையா?”

“கொஞ்சம் வேகமா நடந்தாக் கூட ஒனக்கு மூச்சு வாங்கும்; ஒழுங்கா சாப்பிட்டாத்தானே?”

“சாப்பாட்டைப் பத்தி பேசி வெறுப்பேத்தாதே. அந்தக் குழந்தையைப் பாரு; நம்மைப் பார்த்து சிரிக்கிற மாதிரி இருக்கு”.

“அழகா இருக்குல்ல – அது சிரிக்கறச்சே. நல்ல ஆப்பிள் மாதிரி கன்னம்”

“மறுபடியும் சாப்பாடா? ஏன் கன்னத்தில 440-ஸ்டிக்கர் ஒட்டிருக்கா?”

“ஆங் – ஆப்பிள்ன்ன ஒடனே நினைவுக்கு வருது, சப்ஜி மண்டில இனிமே 440 வாங்க கூடாது – ஒரு பவுண்டு 99 சென்ட்; இருந்தாலும் ஆப்பிள் ஒரே மாவா இருக்கு. பவுண்டுக்கு 1.19 கொடுத்தாலும், 460 தான் வாங்கணும்”.

“எனக்கு தெரிஞ்சு கடையில இருக்கிற காஷியரத் தவிர இந்த லேபிள் ஸ்டிக்கர் எல்லாம் பார்க்கிற ஒரே ஆள் நீதாம்ப்பா. எப்படித்தான் சாப்பாட்டு விஷயத்தில மட்டும் இதெல்லாம் கரெக்டா நினைப்புல வச்சுக்கறயோ?”

“பின்ன – உன்னோட ஒரே ரூம்ல இருந்தா யாருக்குத்தான் சாப்பாடு விஷயம் மறக்கும். காலைல பிரேக் ஃபாஸ்ட்ன்னு சொல்லிட்டு, அரை டம்ளர் ஜூஸ் – அதுவும் எல்லாப் பழத்தையும் ஒண்ணா போட்டு கலக்கி கொடுக்கற பன்ச். அப்புறம் சீரியல்ன்னு சொல்லிட்டு சோளச் சீவல். கொஞ்சம் ஏமாந்தா வெறும் டப்பாவைக் காட்டியே அனுப்பிடுவே”

“கார்ன்பிளேக்குன்னு சொல்லேன் - சோளச்சீவல்ன்னு சொன்னா குழப்பமா இருக்குல்ல?”

“கார்ன்பிளேக்குன்னு சொன்னா ரொம்ப பெரிசா ஏதோ சாப்பிடறா மாதிரி தோணும். சோளச்சீவல்ன்னு சொன்னாத்தான் அது சாப்பிடப் பத்தாதுன்னு புரியும்”

“இங்க இருக்கப்போறது ஐந்து மாசமோ அல்லது ஆறு மாசமோ. கொஞ்சம் காசு சேர்த்தால் ஊருக்கு போய் செலவழிக்கலாம் இல்லையா?”

“அதுக்குன்னு இப்படியா? ஒரு டோஸ்ட், பேகல் இல்ல மப்பின் இப்படின்னு எதையாவது சாப்பிடலாம்ல”

“நீயும் நானும் சைவம். மத்தியானத்துக்கு காண்டீன்ல சான்ட்விச்னு இதே பிரட்டும், தக்காளி வெங்காயமும்தான். அதை காலையிலயும் சாப்பிடணுமா? சரி விடு. எப்பப் பார்த்தாலும் நீ சாப்பாட்டைப் பத்தி மட்டும் தான் யோசிக்கற. ஆமா நேத்து மத்தியானம் உன் சீட்டுக்கு வந்தப்போ நீ இல்லையே – ஓபியா?”

“அதெல்லாம் இல்லை, நம்ப சுக்வீந்தருக்கு கோடெழுத கொஞ்சம் ஹெல்ப் பண்ண போயிருந்தேன்”

“நீ அவனுக்கு கோடெழுத போனியா? நீயே காப்பி-பேஸ்ட் கேசு – சொந்தமா என்னிக்கு கோடெழுதியிருக்கே?”

“என்னோட பாலிசியே ‘DON’T REINVENT THE WHEEL’ தான். எவ்வளவு அழகா நான் ரீயூஸ் பண்றேன்?”

“ஆமா – எல்லாத்தையும் வகைக்கு தகுந்தா மாதிரி வோர்டுல காப்பி-பேஸ்ட் பண்ணி வச்சுருக்கே. அதைத் தவிர்த்து கூகுள்ல தேடி கோடு சேக்கற! கேட்டா ‘பெஸ்ட் பிராக்டீஸ் லைப்ரரின்னு’ பந்தவா சொல்றே. அதுவும் ஒரு பிளாஷ் டிரைவ்ல வேற. டிப் டாப்பா பேன்ட், சட்டை, கோட்டு. அவனவன் ஒனக்குத்தான் எல்லாந் தெரியும்ன்னு வந்து நிக்கறான். எல்லாம் நேரம்.”

“ஆள் பாதி ஆடை பாதின்னு நீ கேட்டதில்லையா? ஆமா நீ ஏன் ரெகுலரா ஷேவ் கூட பண்ணறதில்லை? காசு செலவாயிடுமின்னா? இல்ல காதல் தோல்வியா?”

“கிண்டலா? நான் ஷேவ் பண்ணாததற்கு ரெண்டு காரணம். ஒண்ணு குளிர் – காலங்கார்த்தால எவன் சில்லுன்னு தண்ணிய மூஞ்சில அப்பிக்கறது? இரண்டாவது – நீ சொன்ன மாதிரி ‘ஆள் பாதி ஆடை பாதி’ - வேலைக்கு ஏத்த ஒப்பனை”

“வேலைக்கு ஏத்த ஒப்பனையா?”

“ஆமா – நான் பண்றது டெஸ்டிங். ஒன்னை மாதிரி காப்பி-பேஸ்ட் கோடன்க கிட்ட போய் ‘நீ பண்ணது தப்பு’ன்னு சொல்லற வேலை! அப்ப போய் டிப்-டாப்ப ஷேவ், டிரஸ் பண்ணிக்கிட்டு ‘ஹாய்!, உன் கோடுல மிஸ்டேக்’ன்னு சொன்னா அவனவனுக்கு பத்திக்கும். அதுக்காகத்தான் நானே ரெண்டு நாள் தாடியோட போயி ‘தப்பு நடந்துடுச்சுன்னு’ சோகமா சொன்னா, என்னை திட்ட மாட்டானுங்க”

“ஏதோ இஷ்டத்துக்கு பீலா வுடரே – காலையில பாத்ருமுக்குள்ள போனா வர ஒரு மணி நேரம் ஆவுது வெளிய வர. ஆனா ஷேவ் பண்ண தண்ணி சில்லுன்னு இருக்குன்னு ரீல் விடர”

“சத்தமா பேசாத; அந்த சின்னப் பையன் நம்மையேபாத்து சிரிச்சுக்கிட்டு இருக்கான்”

“யாரு அந்த ஆப்பிள் கன்னமா”

“மறுபடியும் சாப்பாடா?”

ரயில் நியுவர்க் நிலையத்திற்கு வந்து சேர, அவர்கள் இருவரும் இறங்கினார்கள். மறுமுறை அந்த இருவரையும் பார்த்தால் சொல்கிறேன்.

22 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//சப்ஜி மண்டில இனிமே 440 வாங்க கூடாது – ஒரு பவுண்டு 99 சென்ட்; இருந்தாலும் ஆப்பிள் ஒரே மாவா இருக்கு. பவுண்டுக்கு 1.19 கொடுத்தாலும், 460 தான் வாங்கணும்”//

வாவ்.. பேச்சுலர் பசங்க விலை ஸ்டிக்கர் கூடப் பார்க்கமாட்டங்க சிலசமயம், இவர் ஆப்பிள் வகையோட நம்பர் ஸ்டிக்கர் கூடப் பார்க்கிறாரா? வித்தியாசமானவர் தான்.

சுவாரசியமான உரையாடலைத் தான் ஒட்டுக்கேட்டிருக்கீங்க :-)

ரங்கா - Ranga சொன்னது…

அனானிமஸ்,

உண்மை என்னன்னா, இது என்னோட கற்பனை. நகைச்சுவையா (அதே சமயத்தில கற்பனையா) ஏதாவது எழுதணும் அப்படின்னு ரொம்ப நாளா நினைச்சு, இதை எழுதினேன். நிஜத்துல நடக்கல ;-)

ரங்கா.

துளசி கோபால் சொன்னது…

ரங்கா,
அதென்ன அங்கே ஆப்பிள்க்கு எல்லாம் கோட் # தானா? பேர் ஒண்ணும் இல்லையா?
ஸ்பெளண்டர், ராயல் காலா, ஃப்யூஜி, க்ரானி ஸ்மித், பஸிஃபிக் ரோஸ், ப்ரேபர்ன் ன்னு வகைவகையா
பேர் இருக்கேப்பா.

வடுவூர் குமார் சொன்னது…

நான் நிஜமோ என்று நினைத்தேன்.
நல்ல நகைச்சுவை கற்பனை.

இலவசக்கொத்தனார் சொன்னது…

அது நானும் என் நண்பனும்தான். நல்ல வேளை போட்டோ எல்லாம் எடுத்துப் போட்டு மானத்தை வாங்காம விட்டீங்களே.

Seemachu சொன்னது…

ரங்கா நல்லா வந்திருக்கு..
கார்ன்ப்ளேக்ஸுக்கு சோளச்சீவல் தமிழாக்கம் அருமை..


சீமாச்சு

ரங்கா - Ranga சொன்னது…

துளசி,

நீங்க சொல்றது உண்மைதான். நான் இந்த ஊருக்கு வந்த புதுசுல என் மனைவியிடம் 'இங்க எல்லாமே நம்பரா இருக்கே' அப்படின்னு சொல்லியிருக்கேன்; பழத்துல இந்த கோடெல்லாம் ஸ்டிக்கரா ஒட்டியிருக்கறத கிண்டல் பண்ணியிருக்கேன். அதனோட பாதிப்பு தான் இது.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி குமார்.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

இ.கொ.

நிஜம் போல வந்திருக்குன்னு சொல்றீங்கன்னு நினைக்கிறேன். :-) நன்றி.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

வாங்க சீமாச்சு. ஊரை விட்டு கிளம்பி சார்லெட்டுல போய் உட்கார்ந்திருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். ஊர் எப்படி?

பாராட்டுக்கு நன்றி.

ரங்கா.

Senthil சொன்னது…

உரையாடல் ரொம்ப செயற்கை.better luck next time.


துளசிக்கா நீங்க சொன்ன ப்ராண்ட் பேர்களிலேயும் பலவித நம்பர்கள் இருக்கே.

ரங்கா - Ranga சொன்னது…

பின்னூட்டத்திற்கு நன்றி செந்தில். இன்னும் இயற்கையா எழுத முயற்சி செய்கிறேன்.

ரங்கா.

பெயரில்லா சொன்னது…

துளசியக்கா இங்கே ஆப்பிளில் கோட் எண்ணும் உள்ளன, பெயர்களும் உள்ளன. பில் போடுகையில் கோட் எண்ணை உபயோகிப்பர்.

குமரன் (Kumaran) சொன்னது…

ஏன்டா பின்னூட்டமெல்லாம் படிச்சோம்ன்னு ஆயிடிச்சு. பதிவை மட்டும் படிச்சுட்டு 'அருமையான உரையாடல். தெள்ளத் தெளிவா ஒட்டுகேட்டிருக்கீங்க'ன்னு சொல்ல வந்தேன். கற்பனைன்னு சொன்னவுடனே புஸ்ஸுன்னு போயிருச்சு. உடனே மனசு கற்பனைன்னு நமக்குச் சொன்னது எது எதுன்னு ஆராய்ச்சி வேற பண்ணுது. :-)

மிகச் சிறப்பான கற்பனை உரையாடல் ரங்கா அண்ணா. :-)

ரங்கா - Ranga சொன்னது…

பின்னுட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி குமரன்.

கற்பனை உரையாடல் தான் :-) ஒட்டுக் கேட்கவில்லை. பதிவிலேயே சொல்லியிருந்தால் உங்களுக்கு ஏமாற்றம் வந்திருக்காது.

ரங்கா.

Boston Bala சொன்னது…

நீங்களும் உங்க நண்பரும், அடுத்த முறை உரையாடுவதையும் இதே போல் தொகுக்கவும் ; )
நன்றி!

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி பாலா. என்னுடைய கற்பனை நண்பனோடு நிறைய விவாதித்துக் கொண்டிருக்கிறேன். இதே போல உரையாடலாக, எனக்குள் இருக்கும் குழப்பமான விஷயங்களைக்கூட எழுதுவதாக எண்ணமிருக்கிறது.

ரங்கா.

ச.சங்கர் சொன்னது…

வளமான,சுவையான கற்பனை :)

ரங்கா - Ranga சொன்னது…

பாராட்டுக்கு நன்றி சங்கர்.

ரங்கா.

ஜீவா (Jeeva Venkataraman) சொன்னது…

செயற்கையெல்லாம் இல்லை...கற்பனைதான்னு நான் முடியும்போது ஊகிச்சுட்டாலும், நல்லா சிரிக்க முடிஞ்சது, நல்ல கற்பனை, வாழ்த்துக்கள்!

ரங்கா - Ranga சொன்னது…

வாங்க ஜீவா.

பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி.

ரங்கா.

Lady Peare சொன்னது…

அருமையான கற்பனை ...சுவையான சம்பாஷனை !தொடர்ந்து எழுதவும்