சனி, செப்டம்பர் 24, 2005

மிஸ்ஸியம்மா

மிஸ்ஸியம்மா

நேற்று இரவு மிஸ்ஸியம்மா படத்தை குடும்பத்தோடு வீட்டில் பார்த்தோம்.

முதன் முதலாக அந்தப் படத்தை மன்னார்குடி செண்பகா டாக்கீஸில் நண்பர்களோடு பார்த்தேன். தியேட்டரில் ஒரே ஒரு புரொஜெக்டர் தான். ஆதலால் படத்திற்கு மூன்று இடைவேளை! படச்சுருள் தீர்ந்தவுடன் தியேட்டரின் நடுவில் மேலே இருக்கும் ஒரு பல்ப் எரியும்; ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் மறுபடியும் படம் தொடரும். தரை, பெஞ்ச், சேர் என்றெல்லாம் வகுப்புகள். ஆண்கள் பக்கம், பீடி, சுருட்டு, புகையிலை, வெற்றிலை எல்லாம் சேர்ந்து ஒரு கதம்பமான வாசனை. இந்த மாதிரி இடைவேளை வரும் போதெல்லாம் போய் கோலி சோடா - அதுவும் பன்னீர் சோடா குடிப்போம்!

மிகவும் நகைச்சுவையான ஒரு கதை. நடிகயையர் திலகம் சாவித்திரியின் முகபாவம் மிகவும் அருமையாக இருக்கும். கதையில் முதல் பாடல் அவருடையது தான். தியாகரஜர் கீர்த்தனை - ராக சுதா ரஸ - தமிழ்ப் படுத்திப் பாடுவார் (கதையில் அவர் கிறிஸ்துவ மததைச் சேர்ந்தவர்களால் ஒரு கிறிஸ்துவராக வளர்க்கப் படுவதாகக் காட்டுவார்கள்; ஆனால் அவர் ராக சுதா ரஸ பாடுவார்!).

படத்தை நேற்று பார்த்த போது, மனம் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்று திரும்பியது. பக்கத்தில் இருந்த என் அப்பாவிடம் அதைப் பற்றிப் பேச, அவர் உடனே தான் அந்தப் படத்தை முதன் முதலாக எப்போது பார்த்தேன் என்று பேச ஆரம்பிக்க - அப்புறம் தான் தெரிந்தது நான் இருபது ஆண்டுகள் சென்றால் அவர் ஐம்பது ஆண்டுகள் சென்றிருக்கிறார் என்று! 1950 களில் மகாமகத்திற்கு அப்புறம் கும்பகோணத்தில் அவர் இந்தப் படத்தை தன் அத்தை, தாத்தாவுடன் பார்த்த கதையைச் சொன்னார்.

படத்தில் சாரங்கபாணி ஒரு பாடல் பாடிக்கொண்டு வருவார் - 'சீதா ராம் ஜெய சீதா ராம்' என்று ஆரம்பிக்கும். நாட்டு நடப்பைப் பற்றி அவர் அன்று பாடியது இன்றைக்கும் பொருந்தும். படத்தின் பாடல்கள் மிகவும் அருமை - முக்கியமாக 'வாராயோ வெண்ணிலாவே', 'பிருந்தாவனமும் நந்த குமாரனும்' பாடல்கள் இன்றைக்கும் கேட்க இனிமை! மன்னார்குடியில் திரைப்படச் சுவரொட்டிகளில் முக்கியமான பாடல் வரிகளைப் போடுவார்கள் - முக்கியமான நடிகர், நடிகைகள் படங்களோடு. இந்த இரு பாடல்களும் சுவரொட்டியில் இருக்கும்.

வேலைக்காக கணவன் மனைவி போல் இருவர் நாடகமாடி பின் கல்யாணம் பண்ணிக் கொள்வதுதான் கதை. சென்ற வாரம் செய்தியில் சட்டப் படி வயது பத்தாததால் தம்பியைக் காதலித்தும் அண்ணனைக் கல்யாணம் செய்து கொண்டதைப் பற்றி படித்தேன். ஸ்ரீகாந்த் மீனாட்சியும் இதைப் பற்றி ஒரு திரைக்கதை போல் எழுதியிருந்தார். ஐம்பது வருடத்தில் கதை அதிகம் மாறவில்லை.

ஒவ்வொரு வாரமும் ஒரு பழைய படம் பார்ப்பது என்று தீர்மானம். தாய் தந்தை மற்றும் மாமனார் மாமியார் வாங்கி வந்திருக்கும் விசிடிகளின் உபயத்தில்!

வியாழன், செப்டம்பர் 01, 2005

தலைகீழ் பூமி?

சென்ற வாரம் இரவில் தூக்கம் கலைந்து குருட்டு யோசனை செய்து கொண்டிருந்த போது சுவற்றில் இருந்த உலகப் படம் மங்கலாக தென்பட்டது. பலமுறை இப்படத்தைப் பார்த்திருந்தாலும், புதிதாக ஒன்று தோன்றியது. சிறு தீவுகள் தவிர எல்லா நிலப்பரப்பும் வடக்கே அகலமாகவும், தெற்கே குறுகலாகவும் இருக்கிறது. இது என்னவோ சரியாகப் படவில்லை. இயற்கையில் மேலிருந்து கீழே வருகிற எல்லாப் பொருள்களும் கீழே அதிகமாகவும், மேலே குறுகலாகவும் இருக்க, உலகப் படத்தில் மட்டும் இது ஏன் வித்தியாசமாக இருக்க வேண்டும்?

உதாரணமாக, கடுகை ஒரு கண்ணாடி பாட்டிலில் கொட்டும் போது அது ஒரு குவியலாகத்தான் விழுகிறது. இதை நாம் மணலைக் கொட்டும் போதும் (வீடு கட்டும் போது லாரியிலிருந்து கொட்டுவார்களே?) பார்க்கலாம். இந்தக் குவியல்களின் வடிவம் ஒரு 'நார்மல் டிஸ்ட்ரிபியூஷன்' போல் இருக்கும். ஆனால் உலகப் படத்தில் (வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, இந்தியா) பெரும்பான்மையானவை மேலே அகலாமாயும், கீழே குறுகியும் இருக்கின்றன. ஏன் இவைகள் மட்டும் முரணாக இருக்கின்றன என யோசனை வந்தது! ('சுத்த லூஸோ' என்று நீங்கள் நினைப்பது புரிகிறது!). இரண்டு நாள் தீவிர யோசனைக்குப் பிறகு என் நினைப்பு இதுதான்.

நம்முடைய பார்வையில்தான் கோளாறு. முதலில் வரைபடம் எழுதியவர் வடக்கு திசையை (பூமியின் வடக்கு) மேலே வைத்து விட்டார். பிரபஞ்சத்தில் மேல்-கீழ் எது என்பது தெரியாததால் இந்தக் குழப்பம். உண்மையில் தெற்கு திசை (பூமியின் தெற்கு) தான் பிரபஞ்சத்தின் மேல் பகுதி. உலகப் படத்தை தலைகீழாக வரைந்தால் இயற்கைக்கு முரணாக இருக்காது. காலங்கள் வருவதிலும் (கோடை, இலையுதிர், குளிர், வசந்தம்), சூரியன் தோன்றுவதிலும்/மறைவதிலும் ஒரு மாற்றமும் வராது!

விஞ்ஞானத்தில் இதற்கு விளக்கம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. பழம் நூல்களில் இதைப் பற்றி ஏதாவது குறிப்பு உள்ளதா என அறிய ஆவல். இணைய நண்பர்கள், நண்பிகள் இதைப் பற்றி கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் வாழ்க!

கடந்த மாதம் வேலைப்பளு அதிகம். எழுத நேரமில்லாவிட்டாலும், கொஞ்சம் படிக்க முடிந்தது. ஒருவிதமான ஒழுங்கும் இல்லாமல் - ஏதாவது ஒரு தமிழ் வார்த்தையை கூகுளில் தேடி, வரும் பக்கங்களைப் படிப்பதை ஒரு விளையாட்டாகக் கொண்டு படித்த பக்கங்கள் இவை. கூகுள் வாழ்க!

ஸ்ரீகாந்த் மீனாட்சியின் 'மன இறுக்கம்' பற்றிய தொடரும், சஞ்சீத்தின் 'என் பெயர் சித்ரா' - டைரிக் குறிப்பும் மனத்தை தொட்டன. பவித்ரா சென்ற வருடம் எழுதிய 'சில நேரங்களில் சில பயணங்கள்' தொடர் பழங்காலத்தைப் பற்றி நிறைய சிந்திக்க தூண்டியது. மொத்தத்தில் அதிகம் படிக்க முடிந்தது.

இந்தக் கவிதை பாலகுமாரன் கதையில் படித்தது என்று நினைவு:
“வாங்குபவர் கை வானம் பார்க்கும்
கொடுப்பவர் கை பூமியை மறைக்கும்
கொட்டிக் கிடக்கிறது; வெட்டி எடுத்துக்கொள்”
இந்த மாதிரி தேடல்களில் நிறைய தென்படுகிறது! கவிதையில் சொன்னதைப் போல் 'வெட்டி', 'ஒட்டிக்' (Copy – Paste) கொண்டிருக்கிறேன்!

அப்புறம், இன்று விச்சுவுடன் கன்சல்டன்ட், ஸ்பேர் டயர் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த போது தோன்றிய கவிதை எண்ணம் இதோ.

மாற்றுச் சக்கரம்

வாழ்க்கைப் பயணத்தில்
இணைந்து செல்வோமென்றாள்
நம்பினேன்!
பின்புதான் புரிந்தது
அவள் வாழ்க்கை வண்டியோட
நானொரு மாற்றுச் சக்கரம்.