வியாழன், ஆகஸ்ட் 31, 2006

காப்பி – 7

அப்படி இப்படி என்று அமெரிக்கா வந்தது 1997ல். வந்த முதல் வருடத்தில் வெறும் இன்ஸ்டன்ட் காப்பிதான் - டேஸ்டர்ஸ் சாய்ஸ். சுலபமாக ஒரு பீங்கான் கப்பில் பாதி தண்ணீர், பாதி பால், முக்கால் ஸ்பூன் சக்கரை, முக்கால் ஸ்பூன் காப்பிப் பொடி போட்டு, மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைத்தால் காப்பி தயார். நானும் என் மனைவி மட்டும் தான் வீட்டில், வேலைக்கு போகும் அவசரம் வேறு. அதனால் பில்டர் என்றெல்லாம் யோசிக்கக் கூட இல்லை. இந்த திடீர் தயாரிப்பிலும், கொஞ்சம் மாற்றங்கள் செய்தால், சுவை கூட வருவது போலத் தோன்றும். முதலில் தண்ணீரில் காப்பிப் பொடியைப் போட்டு மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைக்க வேண்டும். பின் தனிப் பாத்திரத்தில் (கண்ணாடி) பாலை கொஞ்சம் பொங்கும் வரை கொதிக்க வைத்து (ஒரு கப் பாலுக்கு கிட்டத்தட்ட மூன்று நிமிடம்), வெளியே எடுத்து ஆறியவுடன் பாலின் மேலிருக்கும் ஏட்டை எடுத்து விட வேண்டும். பின் இருக்கும் இன்ஸ்டன்ட் டிகாஷனையும், பாலையும் கலந்து சக்கரை போட்டு குடித்தால், கிட்டத்தட்ட பில்டர் காப்பி நினைவுக்கு வரும். இந்த முறை வார இறுதியில் பொழுது போகாமல் இருக்கும் போது தான் - மற்ற சமயங்களில் ஒரு நிமிடக் காப்பிதான்.

ஒரு வருடம் கழித்து இன்ஸ்டன்ட் போரடித்தவுடன், ஒரு காப்பி பில்டர் (மின்சார இயக்கம்) வாங்கினோம் - நான்கு கப் அளவில். பில்டரின் பின் பக்கம் மூடியைத் திறந்து தண்ணீர்; மேல்பக்கம் திறந்து, அங்கு இருக்கும் அறையில் முதலில் ஒரு தாளை வைத்து (பேப்பர் பில்டர்), வெறும் காப்பிப் பொடி (ஒரு கப்புக்கு ஒரு ஸ்பூன்) போட்டு, மறக்காமல் பில்டரின் அடியில் கண்ணாடிப் பாத்திரத்தையும் வைத்து, ஸ்விட்சைத் தட்டினால் மூன்று நிமிடங்களில் டிகாஷன் ரெடி. பின் அதில் பாலை ஊற்றி (பாலைக் காய்ச்சுவது நின்று போய், நேரே குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து ஊற்றுவது வந்து விட்டது), இன்னமும் சூடு வேண்டுமானால் முப்பது விநாடி மைக்ரோவேவ் செய்து குடிப்பது வழக்கத்திற்கு வந்தது. இந்த மின்சார பில்டரிலும் ஏகப்பட்ட வகைகள். ஒரு முறை கண்ணாடிப் பாத்திரம் தவறி விழுந்து உடைய வேறு ஒன்று வாங்கப் போனால், அந்த விலைக்கு புது பில்டரே வாங்களாம் என்று தோன்றி வேறு பில்டர் வாங்கினோம்.

இந்த மின்சார பில்டர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லியே ஆக வேண்டும். ஐந்து டாலரிலிருந்து நூற்றைம்பது டாலர் வரை பில்டர்கள் பாத்திருக்கிறேன் - அதைவும் விட அதிகமான விலையில் இருக்கின்றன என்றார் நண்பரொருவர். சில வெறும் காப்பி மட்டும் தான், சில காப்பசினோ, எஸ்பிரசோ என்று தினுசு தினுசாகக் கொடுக்கும். பில்டரில் கீழே டிகாஷன், சில மிஷினில் மேலே டிகாஷன் என்றெல்லாம் வகைகள். சாதாரண பில்டர்களுக்கு அனேகமாக தாள் தான் (பேப்பர் பில்டர்). சில டாலர் கடைகளில் ஒரு டாலருக்கு சீனாவில் செய்த பிளாஸ்டிக் பில்டர்கள் கிடைக்கும். முக்கால் வாசி பிராண்ட் பில்டர்களுக்கு அந்த பிராண்ட் கண்ணாடிப் பாத்திரம் தான் வேண்டும், டிகாஷனை எடுத்துக் கொள்ள - அதில் நிறைய காசு பண்ணுகிறார்கள். இன்னம் சிலவற்றுக்கு தாள் கூட அதே பிராண்டில் தான் வாங்க வேண்டும் (விலை மற்ற சாதாரண தாள்களை விட அதிகம்). பில்டர் ரிப்பேர் செய்யும் இடம் என்று எங்கும் நான் பார்த்தது இல்லை. வேலை செய்யவில்லை என்றால் தூக்கி குப்பையில் போட வேண்டியதுதான். கொஞ்ச நாட்களில் தண்ணீரில் இருக்கும் உப்பு படிந்து எப்படியும் ஒன்று அல்லது இரண்டு வருடத்துக்குள் மாற்ற வேண்டியிருக்கும் (உங்கள் வீட்டில் Water Softener இருந்தால் இன்னும் கொஞ்சம் அதிக நாள் வரும்).

நடுவில் ஒரு ஐந்து ஆறு மாதத்திற்கு, கடையிலிருந்து வறுத்த காப்பிக் கொட்டை வாங்கி ஒரு குட்டி மின்சார அரவை இயந்திரத்தில் அரைத்து காப்பி போட்டுக் குடித்தோம். இரண்டு பேர்தான் என்பதால் அது கொஞ்சம் போரடித்து, மறுபடி பொடியாகவே வாங்க ஆரம்பித்தோம். அந்த அரவை இயந்திரத்தில் சமயலுக்கு வேண்டிய பருப்பு, மிளகாய் எல்லாம் அரைத்துக் கொண்டிருந்தோம், அது ஒரு ‘நாள் இயங்க மாட்டேன்’ என்று நிற்கும் வரை. வெவ்வேறு பிராண்ட் காப்பிப் பொடி - வெவ்வேறு நாட்டுப் பொடி என்றெல்லாம் பரிசோதனை பண்ணிப் பார்த்துவிட்டு, இப்போது காஸ்ட்கோவில் போய் கொலம்பியா பொடி (பெரிய டப்பா) வாங்கி வருவது என்று வழக்கமாகிவிட்டது.

வீட்டில் இப்படி என்றால் வெளியே காப்பி குடிப்பது என்பது முதலில் உற்சாகமாக இருந்தது. அமெரிக்காவில் முதல் முறையாக வெளியே கடையில் காப்பி குடித்தால் முதலில் தாக்குவது அளவுதான் - உண்மையிலேயே ரொம்பப் பெரிசு. அதுவும் முக்கால் வாசி இடங்களில் அவர்கள் தருவது வெறும் டிகாஷன் தான். அதுவும் விளிம்பு வரை தந்துவிடுவார்கள். தனியாக வெளியே நாமே போய் பாலும் (அல்லது கிரீமோ), சக்கரையும் போட்டு ஒரு குச்சியால் சுற்றி சுற்றிக் கரைத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் எப்போது ஒரு கோப்பை வாங்கி இரண்டாகப் பகிர்ந்து தான் குடிப்பது வழக்கம். அதே சமயத்தில் கிட்டத்தட்ட அரை லிட்டர் காப்பி (அதுவும் கறுப்பு காப்பி - டிகாஷன்) குடிக்கும் பேர்வழிகளையும் பார்த்திருக்கிறேன்.

இதிலே காப்பியோடு கலந்து கொள்ள என்று எத்தனையோ சாமான்கள். சிலவற்றை (உ.ம். சின்னமன்) போட்டுக் கொண்டால், குடிப்பது காப்பியா, பாயசமா, அல்லது கஷாயமா என்று தெரியாமல் போய் விடும். நாங்கள் வந்த புதிதில் இந்த ஸ்டார்பக்ஸ் இவ்வளவு பிரபலம் இல்லை. இப்போது எங்கு பார்த்தாலும், அது தான். என்னவோ தெரியவில்லை நான்கு, ஐந்து முறை போய் குடித்த பிறகு (அப்பாடி என்ன விலை!) மறுமுறை போக ஆசை வரவில்லை.

நாங்கள் அரிசோனாவில் இருந்த போது நண்பர் ஒருவர் சொன்னது: "மாணவனாக வரும் போது டங்கின் டோனட், அல்லது தெருக் கடைகளில் காப்பி; பின் வீட்டிற்கு வந்தவுடன் இன்ஸ்டன்ட், அப்புறம் பில்டர், பின் கொட்டை அரைத்து பில்டர் காப்பி, கொஞ்ச நாளில் காடலாக் எல்லாம் பார்த்து, கூப்பன் சேகரித்து, கப்பசினோ மிஷின். இது ஒரு பரிணாம வளர்ச்சி. அப்புறம் டாக்டர் பார்த்து, ட்ரைகிளசரைட், சக்கரை என்றெல்லாம் பயமுறுத்த, சக்கரை இல்லாத காப்பி, ஒரு வேளை மட்டும் காப்பி, பின் மிஷினைப் பார்த்தாலே எரிச்சல் என்று முடியும்". இதற்காகவே நான் கப்பசினோ மிஷின் வாங்கவில்லை. ஆனால் இந்த வருட ஆரம்பத்தில் டாக்டர் ட்ரைகிளசரைட் என்று சொல்லிவிட்டார்! நானும் இந்த பரிணாம வளர்ச்சியிலிருந்து தப்ப முடியாதோ என்று தோன்றுகிறது!

அடுத்த பதிவில் காப்பி குடிக்கும் மக்களைப் பார்த்து நான் பெற்ற அனுபவங்கள்.

முந்தைய பதிவுகள்
காப்பி - 6
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1

புதன், ஆகஸ்ட் 30, 2006

காப்பி – 6

கல்லூரிப் படிப்பு முடித்து அக்கவுன்டன்சி (சிஏ) படிக்க ஆரம்பித்தேன். தணிக்கைக்காக வெவ்வேறு ஊர்களுக்கு செல்லும் வாய்ப்பு வந்தது. சோளிங்கர், பொள்ளாச்சி, மும்பாய், தில்லி, மொராதாபாத், ராம்பூர், என்று பல இடங்கள் சென்றேன். ஒவ்வொரு இடத்திலும் காப்பியின் சுவை மாறுபட்டது. வடக்கே அதிகமாக இன்ஸ்டன்ட் தான். பின் வேலையில் சேர்ந்ததும், பிரயாணம் இன்னும் அதிகமாயிற்று. கல்கத்தா, பீகார், சண்டீகர், ஈடா (உ.பி.), ஹைதராபாத் (காட் கேசர்) என்று இன்னும் எத்தனையோ. ராம்பூர், ஈடா போன்ற இடங்களில் பெரிய லோட்டாவில் காப்பி; பீகாரில், கல்கத்தாவில் சில இடங்களில், மண்குடுவையில் காப்பி. இங்கேயெல்லாம் அதிகமாக கிடைப்பது தேனீர்தான். மசாலா, இஞ்சி எல்லாம் ஒரு துணியில் வைத்து குழவியால் நசுக்கி, அந்த துணியையும் டீயோடு கெட்டிலில் போட்டு கொதிக்க வைத்துக் கொடுப்பார்கள். வித்தியாசமான சுவையோடு ஜிவ்வென்று நன்றாக இருக்கும். காப்பியை மட்டும் இந்த மாதிரி கலக்காமல் வெறும் காப்பியாகவே தருவார்கள்.

டீ குடிக்கும் கண்ணாடி டம்ளரிலோ, அல்லது லோட்டாவிலோ தந்துவிட்டால், சக்கரையைக் கரைப்பது ஒரு வித்தைதான். காப்பியும் சுடும்; டம்ளர்/லோட்டாவில் கிட்டத்தட்ட விளிம்பு வரை இருக்கும். அந்த மண்ணின் மைந்தர்கள் சாப்பிடும் விதத்தைப் பார்த்து நான் கற்றுக் கொண்டது ‘எப்படி அந்த லோட்டாவைப் பிடித்து சுழற்றியவாறே சக்கரையைக் கரைப்பது’ என்பது தான். பூமத்திய ரேகைக்கு வடக்கே தண்ணீரின் சுழற்சி பிரதக்ஷணமானது (கடிகாரம் போல் - கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு). அதனால் காப்பி லோட்டாவையும் அப்படியே பிரதக்ஷணமாக சுற்றினால் கீழேயும் சிந்த வாய்ப்பு குறைவு; சக்கரையும் கரையும். இந்த சுழற்சி விதியை கொரியோலிஸ் விசை - Coriolis Force - என்பார்கள்.

முதல் முறையாக சிட்னி சென்றதும், காப்பியை ஒரு டம்ளரில் எடுத்து வழக்கம் போல் சுற்றிப் பார்த்தேன்; பின் வலமிருந்து இடமாக - கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு - என்றும் சுற்றிப் பார்த்தேன். கொஞ்சம் வித்தியாசம் இருக்கத் தான் செய்தது. கடிகார சுழற்சியில் காப்பி சற்று தளும்பியது; ஆனால் வலமிருந்து இடமாக சுற்றிய போது சீராக இருந்தது. பூமத்திய ரேகைக்கு வடக்கேயும், தெற்கேயும் இருந்து பார்த்தவர்கள் (துளசி கோபால் போல) வேறு யாரேனும் இதை செய்து பார்த்து நான் சொன்னது எத்தனை தூரம் சரி என்று சொல்லவும். ஒருவர் என்னைப் போல், வலக்கைப் பழக்கம் உள்ளவரா அல்லது இடக்கைப் பழக்கம் உள்ளவரா, என்பதும் இந்த சுழற்சியை பாதிக்கும் என்று நினைக்கிறேன்; ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இந்த விதி பற்றி தெரியாமலேயே ராம்பூரில் இருந்த கிழவர் லோட்டாவை சுற்றி சுற்றி டீ சாப்பிட்டது இன்னமும் நினைவில் இருக்கிறது.

காட்கேசரில் (ஹைதராபாத்) ப்ரூக் பான்ட் (இப்போது லீவர் இந்தியா) ஆலைக்கு தணிக்கைக்காக சென்ற போது அங்கு இன்ஸ்டன்ட் காப்பி தயாரிக்கும் முறை பற்றி நேராகப் பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டேன். இரண்டு முறைகள் உண்டு – freeze drying and spray drying. இதில் காட்கேசரில் நடந்தது spray drying முறை. சுறுக்கமாக சொன்னால், முதலில் காப்பிக் கொட்டைகளை சுத்தம் செய்து, வறுத்து, ஒரு வகையில் டிகாஷன் போடுவார்கள் - மிகவும் அடர்த்தி மிகுந்ததாக இருக்கும். பின் இந்த டிகாஷனை ஒரு நன்கு பாதுகாக்கப்பட்ட, சுத்தமான (மூடியிருக்கும்; உள்ளே விட மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்) அறையின் மேலிருந்து சிறு குழாய் வழியாக விடுவார்கள். பக்க சுவற்றில் இருக்கும் குழாய்களிலிருந்து வெப்பமான காற்று வரும். மேலிருந்து சொட்டும் திரவத்தில் இருக்கும் ஈரப்பதத்தை இந்தக் காற்று உறிஞ்சிவிட, போடி போல காப்பி கீழே அறையின் தரையில் படியும். இதை சேகரித்து, காற்று புகாதவண்ணம் பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள். இந்த வர்ணனையில் நிறைய நுணுக்கமான விபரங்களை வேண்டுமென்றே விட்டு விட்டேன்; எனக்கு தெரியாத விஷயங்களும் மிக அதிகம். இந்த மாதிரி ஆலையை நிர்மாணிப்பது கடினமானது; செலவும் அதிகம். உலகிலேயே இன்ஸ்டன்ட் காப்பி தயாரிக்கும், லாபம் தரும் சின்ன ஆலை இந்தியாவில் தான். வருடத்திற்கு ஆயிரம் டன் (அதாவது பத்து லட்சம் கிலோ) பொடி தயாரிக்கும் ஆலை.

சிட்னியில் அலுவலகத்தில் முக்கால் வாசிப் பேர் தங்கள் மேசையிலேயே குட்டி பில்டர் வைத்திருந்தார்கள். முதன் முதலாக பில்டரின் மேல் புறத்திலிருந்து டிகாஷன் எடுப்பதை அங்கேதான் பார்த்தேன் (மனதில் உறுதி வேண்டும் விவேக் போல: 'என்னடா இந்த விஞ்ஞான முன்னேற்றம்; அப்பல்லாம் பொடி மேல இருக்கும், டிகாஷன் கீழ இருக்கும். இங்க என்னடான்னா கீழ பொடி, மேல டிகாஷன்!’). பில்டர் வெறும் கண்ணாடி டம்ளர் - பொடியைப் பொட்டு, வென்னீரை விட்டு, கண்ணாடிப் டம்ளரோடு கொடுக்கப் பட்டிருக்கும் ஒரு ஜல்லடை தட்டை (நீண்ட தண்டோடு இருக்கும்) மெதுவாக டம்ளரில் அழுத்த, மேலே டிகாஷன், கீழே பொடி. பின்பு போய் பாலையோ, அல்லது பவுடரையோ கலந்தால் காப்பி ரெடி. இங்கேதான் முதன் முதலாக பாலை கொதிக்க வைத்து கலக்காமல், அப்படியே கலப்பதை பார்த்தேன்.

டிகாஷன் போடும் முறையில் தான் முன்னேற்றமே தவிர, சுவை கொஞ்சம் சுமார்தான். எனக்கு 'சிறு வயதிலிருந்தே பழகி விட்டதால் எனக்கு அதிகம் பிடிக்கவில்லை; கொஞ்ச நாள் இருந்து விட்டால் இதுதான் பிடிக்கும்' என்று சிட்னியிலே பல வருடம் தங்கிவிட்ட என் உறவினர் சொன்னார். எனக்கு என்னமோ அது நம்மூர் காப்பி போல இல்லை என்றுதான் தோன்றியது.

அடுத்த பதிவில் அமெரிக்க வாசத்தில் நான் அனுபவித்த காப்பி கணங்களைத் தருகிறேன்.

முந்தைய பதிவுகள்
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2006

காப்பி – 5

சிறு வயதில் கல்யாணத்திற்கு போவதென்றால் படு குஷி. விதவிதமான சாப்பாடு, விளையாட்டு, முக்கியமாக எப்போது வேண்டுமானாலும் காப்பி! இந்தக் கல்யாணக் காப்பியின் ருசியே தனி. இருபது வருடங்களுக்கு முன்னால், தஞ்சாவூர் ஜில்லாவில் கல்யாணத்திற்கு கோட்டை அடுப்பு என்று ஒன்று போடுவார்கள். ஒன்று, ஒன்றரை அடி அகலமும், இரண்டு அடி ஆழமும் இருக்கும். நீளம் எத்தனை அண்டாக்களை வைத்து சமையல் நடக்கும் என்பதைப் பொறுத்து - ஒரு பத்து, பதினைந்தடியாவது இருக்கும். இந்த வாய்க்கால் போன்ற குழியின் மேல் அண்டா போன்ற பெரிய பாத்திரங்களை வைத்து, கீழே குழியில் விறகை எரித்து சமைப்பார்கள். அடுப்பில் முதலாவதாக ஆரம்பித்து, கடைசியாய் முடிப்பது காப்பியைத்தான். ஒரு அண்டாவில் வென்னீர் கொதிக்கும், அருகிலேயே பால். பெரிய பாத்திரத்தில், நல்ல வெள்ளைத்துணியைக் கட்டி, காப்பிப் பொடி போட்டு, டிகாஷன் இறங்கிக் கொண்டிருக்கும். சில சமயம் ஸ்பெஷலாக ஒரு பெரிய பித்தளை பில்டர் - ஒரே சமயத்தில் கால் கிலோ பொடி போடும் அளவு பெரிசு - ஒரு மூலையில் டிகாஷன் இறக்கிக் கொண்டிருப்பார்கள். கேட்டால் அது மாப்பிள்ளைக்கும், சம்பந்திக்கும் என்று சொல்வார்கள்.

இந்த கல்யாணக் காப்பியில் ஒரு பிரச்சனை என்னவென்றால், நமக்கு வேண்டிய தனிப் பாணியில் காப்பி கிடைக்காது. ஒரு வாளியிலோ, அல்லது கூஜாவிலோ போட்டு, எல்லோருக்கும் வினியோகம் செய்வார்கள். அதிலே ஏற்கனவே பாலும், சக்கரையும் கலந்திருப்பார்கள். கொஞ்சம் அதிகம் பாலோ, டிகாஷனோ வேண்டுமென்றால் அடுக்களையில் யாரையாவது தெரிந்து வைத்திருப்பது நல்லது. சிறு வயதிலேயே சட்ட திட்டங்களில் எங்கு ஓட்டை இருக்கிறது என்று பார்ப்பதில் நானும், என் ஒன்றுவிட்ட சகோதரனும் மிகுந்த ஆர்வம் காட்டுவோம். இருவருக்குமே காப்பி பிடிக்கும். இருவரும் யோசித்து, அடுக்களைக்கு சென்று, இல்லாத இரண்டு சம்பந்தி மாமாக்களுக்கு சக்கரை இல்லாத காப்பி வேண்டும் என்று கேட்டு, அவர்கள் அந்த ஸ்பெஷல் காப்பியைக் கொடுக்க, அதை நான் எடுத்து வந்தேன். இதே சமயத்தில் காப்பிக்கு கொஞ்சம் சக்கரை வேண்டும் என்று என் கஸின் வாங்கி வர, இருவருக்கும் சூப்பர் காப்பி. இந்த தகிடுதத்தம் எவரும் அறியாமல், குறைந்தது நான்கு கல்யாணங்களுக்கு தொடர்ந்தது.


புதிதாகப் போட்ட டிகாஷனில் கலந்த காப்பிக்கும், முன்னமேயே போட்டு அது ஆறிப் போய், மறுமுறை சுடவைக்கப்ப்பட்ட காப்பிக்கும் வித்தியாசம் உண்டு. கல்யாணத்தில், எப்போது பார்த்தாலும், அடுப்பு எரிந்து கொண்டிருப்பதாலும், அவர்கள் சூடு செய்யும் முறை கொஞ்சம் வித்தியசமானதாலும், அதைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம். முன்னமேயே போட்ட காப்பி ஆறிவிட்டால், அதை நேரடியாக அடுப்பில் சுட வைக்கக் கூடாது. வென்னீரைக் கொதிக்க வைத்து, அதில் காப்பியிருக்கும் பாத்திரத்தை வைத்து காப்பியை சூடாக்க வேண்டும். கல்யாணத்தில், காப்பியைப் போட்டு ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து விடுவார்கள். வினியோகிக்க வருபவர் அந்தக் காப்பியை ஒரு வாளியிலோ, கூஜாவிலோ எடுத்துக் கொண்டு வருவார். சூடு ஆறாமலிருக்க, அந்தப் பாத்திரத்தை அதை விட ஒரு பெரிய அண்டாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, மூடி வைத்து விடுவார்கள். இந்த வென்னீர் அண்டா அடுப்பில் இருக்கும்; ஆகையால் காப்பியும் எப்போதும் சூடாக இருக்கும். இது ஓரளவு காப்பி மணத்தினைப் பாதுகாப்பதால் அவ்வளவாக வித்தியாசம் தெரியாது.

ஆனால் காப்பியை சாப்பிடுகையில் வித்தியாசம் கொஞ்சம் தெரியும் - சாப்பிடுபவருக்கு காப்பியின் வெவ்வேறு ருசிகள் புரிந்திருந்தால். புதிதாகப் போட்ட காப்பியின் சூடும் சுவையும் வாய் முழுதும், முக்கியமாக நாக்கின் நுனியிலிருந்து, அடி வரை தெரியும். மறுமுறை சுடவைக்கப் படும் போது, சுவை கொஞ்சம் குறையும்; சூடும் முழுவதுமாகப் பரவாது. முக்கியமாக நுனிநாக்கில் காப்பியின் சூடு தெரியும்; முழுங்குகையில், வாயில் இருக்கும் கடைசி காப்பி தொண்டைக்குள் இறங்குகையில், அடி நாக்கில் சூடு தெரியாது. இது கிட்டத்தட்ட காப்பியின் வெளிப்புறம் சுடுவது போலவும், உட்புறம் சூடு இழந்து விட்டது போலவும் தோன்றும் (காப்பி திரவம், அதனால் உள் - வெளி என்பது கிடையாது என்றாலும், இதை வேறு எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை). இது விறகு அடுப்பினால் மட்டும் வருகிறது என்றில்லை; இங்கு 'மைக்ரோவேவ்' ஓவனில் வைத்து எடுத்தாலும், அதே நிலை தான். இது காப்பியின் தன்மை என்று நினைக்கிறேன். காப்பிக் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் டிகாஷன் கொஞ்ச நேரம் கழித்து வேறு நிலையை அடைகிறது; அதை மறு முறை மாற்ற இயலாது என்பது என் கருத்து. யாராவது விஞ்ஞானி ஆராச்சி செய்து சொன்னால் தேவலை.

காப்பி சாப்பிடுவதற்கு முன்னால் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் காப்பியின் சுவையை மாற்றுகிறது. இது முக்கியமாக கல்யாணத்திலும், ஓட்டல்களிலும் அனுபவித்திருக்கிறேன். காப்பிக்கு முன்பாக இனிப்பை சாப்பிட்டால், காப்பி அதிகம் கசக்கும் என்பது நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். அதே போல காப்பிக்கு முன்னால் அதிகமான காரம் சாப்பிட்டிருந்தால், சூடான காப்பி நாக்கில் உள்ள சுவை உணரும் செல்களைத் தாக்கும். இது எரியும் உணர்ச்சியை ஏற்படுத்தும். சமயத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தால் இரண்டு மூன்று வேளைகளுக்கு காப்பியின் சுவை வேறுபட்டு இருக்கும். அதே போல அதிகமான சூடோடு காப்பியை குடித்தால், நுனி நாக்கில் சுட்டு விடும்; இதனால் சிறு கரும் புள்ளிகளை நுனிநாக்கில் பார்க்கலாம். இது சரியாக 24 மணி நேரம் ஆகலாம். அது வரை காப்பியின் சுவை கோவிந்தா!

காலைக் காப்பியின் சுவை, நீங்கள் என்ன பற்பொடி, அல்லது பற்பசை உபயோகிக்கிறீர்கள் என்பதைப் பொருந்த்தது. நீங்கள் தினம் காலையில் பல் துலக்கிய பின்னால் தான் காப்பி குடிக்கிறீர்கள் என்றால் ஒரு நாள் இதை செய்து பாருங்கள். பற்பசையோ, பல் பொடியோ உபயோகிக்காமல், வாயை நன்கு தண்ணீரால் (முடிந்தால் வெது வெதுப்பான வென்னீரில்) கொப்பளித்து அலம்பி, பின் காப்பியை பருகிப் பாருங்கள். சுவை அதிகமாகத் தெரியும். பற்பசைகளில் இருக்கும் ப்ளோரைட் போன்ற சமாசாரங்கள், மற்றும் 'மௌத் பிரஷ்னர்' எனப்படும் வாசனை வஸ்துகள் வாயில் தங்கி விடுகின்றன. இவை நாக்கின் சுவையறியும் செல்களின் திறனை பாதிக்கிறது. ஆதலால், காப்பியின் சுவையும் மாறுகிறது. சிறு வயதில் ஒரு பரிசோதனை போல கோபால் பல்பொடி, வீக்கோ வஜ்ரதந்தி, கோல்கேட் பவுடர், கோல்கேட் பேஸ்ட், பினாகா (பின்னாளில் இதுவே சிபாகா), போர்ஹான்ஸ் என்றெல்லாம் உபயோகித்து காப்பி சாப்பிட்டு, வரும் வித்தியாசத்தை ஆராய்ந்திருக்கிறேன். இவைகளில் எதையாவது ஒன்றைத்தான் உபயோகிக்க வேண்டும் என்றால், வீக்கோ வஜ்ரதந்திக்குத் தான் என் ஓட்டு. இது எதுவுமே வேண்டாம் என்று வென்னீர் கொப்பளித்து காப்பி குடிப்பது அதை விட அருமை. குடித்து கொஞ்ச நேரம் கழித்து பல் துலக்கிக் கொள்ளலாம்.

அடுத்த பதிவில் இந்தியாவில் வேலை காரணமாக நான் சென்ற இடங்களில் குடித்த காப்பி பற்றியும், காப்பி பொடி (இன்ஸ்டன்ட்) தயார் செய்த ஒரு ஆலையில் தணிக்கைக்காக சென்றது பற்றியும் தருகிறேன்.

முந்தைய பதிவுகள்
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1

சனி, ஆகஸ்ட் 26, 2006

காப்பி – 4

ஓட்டல்களில் காப்பி என்றவுடன் நினைவுக்கு வருவது அளவுதான்! எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும், பயணங்கள் அதிகமானதால் ஓட்டல்களில் சாப்பிடுவது அதிகமானது. தமிழ்நாட்டில் அதிகமான ஓட்டல்களில் உள்ள டம்ளர், டபரா மிக மிக சின்னது. சொல்லப் போனால் குழந்தைகள் விளையாடும் சொப்பு விளையாட்டில் இருக்கும் அளவுதான். போதாக்குறைக்கு, அந்த டம்ளரிலும், "இந்த டம்ளர் XXX ஓட்டலிலிருந்து திருடப்பட்டது" என்று பொறித்திருப்பார்கள். ஒரு முறை வேலூரில் சாப்பிட்ட ஒட்டலில் இருந்த டம்ளரில் வேறு ஒரு ஓட்டல் பெயர் இருந்தது. விசாரித்ததில் பில் கொண்டுவந்த பணியாளர், முதலில் அந்தப் பெயர் தான் இருந்ததாகவும், பின் உரிமையாளர் புதுப் பெயர் மாற்றியதால், வெளியே போர்டில் வேறு பெயரும், டம்ளரில் வேறு பெயரும் இருப்பதாகவும் விளக்கினார்.

சரி அளவு தான் சின்னதாக இருக்கிறதே என்று பார்த்தால், காப்பியை அவர்கள் தரும் முறையும் வித்தியாசமானது. முதலில் டம்ளர் நிறைய காப்பியை ஊற்றி, பின் டபராவை கவிழ்த்து டம்ளரை மூடி, மொத்தத்தையும் தலை கீழாக கவிழ்துக் கொண்டு வருவார்கள். நம்மிடம் வந்து இருப்பது ஒரு டபரா, அதில் தலைகீழாக ஒரு டம்ளர்; டம்ளருக்குள்ளே படு சூடாக காப்பி! எடுப்பது அவ்வளவு சுலபமில்லை. டம்ளர் முழுதும் காப்பியிருப்பதால் வெளியே இருக்கும் காற்றின் அழுத்தம் காரணமாக விசையோடு தான் டம்ளரை எடுக்க வேண்டும் (வெறுப்பேற்றும் பௌதீக விதி). சூடு, வேகமாய் இழுப்பதால் காப்பி நம் சட்டை/வேட்டியில் கொட்டும் அபாயம், எல்லாம் தாண்டி எடுத்தால், சக்கரையை கரைப்பதற்காகவும், சூட்டைக் குறைப்பதற்காகவும், ஆற்ற வேண்டியிருக்கும். இந்த வேலையைகள் அனைத்தையும் செய்து முடித்து சாப்பிட ஆரம்பித்தால், இரண்டு வாயோடு காப்பி காலி! இந்த வேலைக் களைப்புக்கே இன்னுமொரு காப்பி சாப்பிட வேண்டும் போல் இருக்கும்.

அமெரிக்காவில் காப்பி சூடாக இருக்கிறது என்று சொல்லவில்லை; கப்பில் எழுதவில்லை என்று காரணம் காட்டி, வழக்குத் தொடுத்து, காசு பண்ணிவிட்டார்கள்! நம்மூரில் சூடான காப்பியைக் கொட்டிக் கொண்டால், எல்லோரும் நக்கலாச் சிரிப்பார்கள். அங்கே டம்ளரில் எந்த ஓட்டலில் திருடப்பட்டது என்று எழுதினால், இங்கே ‘குடிக்கும் பானம் சூடாக இருக்கும்; கொட்டிக் கொண்டால் வலிக்கும் என்று எழுதுகிறார்கள். அமெரிக்க சட்டங்கள் போல இந்தியாவிலும் வந்துவிட்டால், டம்ளரில் இந்த மாதிரி வாக்கியங்களையும் பார்க்க நேரிடலாம்: "எச்சரிக்கை: இந்த டம்ளரை வாயில் வைத்துக் குடித்தால், வாயில் எந்த பாகமும் அறுபட்டு ரத்தம் வரலாம்". காரணம் இந்த எவர்சில்வர் டம்ளர்களில் விளிபுகள் மிகவும் கூரானவை, சமயத்தில் வெட்டுப் பட்டும் இருக்கும். உதடோ, நாக்கோ அறுபடும் சாத்தியக்கூறு உண்டு.

இரயில் பயணத்தில் நிலையத்தில் கிடைக்கும் காப்பி ஒரு தனி வகை. இங்கு காப்பி மட்டும் அனேகமாக பீங்கான் கோப்பையில் தான் கிடைக்கும். ஆனால் டீ கண்ணாடி டம்ளரில் தான். இரயில் நிலையம் ஒரு முக்கியமான பெரிய ஜங்க்ஷனாக இருந்து விட்டால், காப்பி டிகாஷன் முறையிலும், இன்ஸ்டன்ட் முறையிலும் கிடைக்கும். ஒரு எவர்சில்வர் பாத்திரத்திலிருந்தோ, அல்லது ஒரு பெரிய கெட்டிலிலிருந்தோ கப்பில் ஊற்றிக் கொடுப்பார்கள். ஒரு வசதி என்னவென்றால், இதற்காக இரயிலிலிருந்து கீழே இறங்க வேண்டாம். இந்திய இரயில்வேயில் (ஏ சி பெட்டி தவிர), ஜன்னலின் இடையே இறுக்கும் குறுக்குக் கம்பிக்குள் இந்த கப்பும், சாசரும் (பீங்கான் தட்டு) வந்து விடும். இரயில் கிளம்புவதற்கும் முன் குடித்து கப்பை திரும்பத் தருவதற்கு வசதியாக, காப்பி அதிக சூடாக இருக்காது; தவிர சாசரில் காப்பியை ஊற்றி 'சர்'ரென்று உறிஞ்சிக் குடித்துவிடலாம். சமயத்தில் வண்டி கிளம்பிவிட்டால், பெட்டியோடு கூட ஓடி வந்து கப்பைப் பெற்றுக் கொள்ளும் புண்ணியவான்களும் உண்டு. இந்த காப்பியில் ஒரு விதமான கரி வாசனை வரும் - நான் பள்ளியில் படிக்கும் போது (பள்ளியில் படிக்கும் போது பயணங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்குள் மட்டும் தான்; வடமாநிலங்களில் அமைப்பு வேறு - அது பற்றி பின்னொரு பதிவில்) குறைந்த அளவு டீசல் வண்டிகள் தான்; பெரும்பான்மையானவை கரி எஞ்ஜின்கள். அது ஒரு காரணமாக இருக்கலாம். வீட்டில் குடும்பத்தோடு பயணம் செய்யும் போது, அப்பா அனேகமாக கீழே இறங்கிப் போய், ஒரு கூஜாவில் ஐந்து கோப்பை வாங்கி வருவார்.

பஸ் பயணங்களில், முக்கியமாக தொலைதூர, இரவுப் பயணங்களில், வழியில் இருக்கும் தெருவோர டீக் கடைகளில் இருக்கும் காப்பி அனேகமாக 'இன்ஸ்டன்ட்' வகை. அனேகம் பேர் தேனீர் தான் சாப்பிடுவதால், காப்பி டிகாஷன் போட்டு சரிப்படாது என்பதால் எளிதான வழியில் காப்பி. பெரும்பான்மையான கடைகளில் 'புரூ' தான். டீயை ஆற்றும் அதே தகர டப்பாவில் மேலிருந்து கீழே வேகமாக ஆற்றி, நுரையோடு தருவார்கள். டீயோ, காப்பியோ, இந்த ஆற்றும் முறையே அலாதியானது. புவியீர்ப்பு விசையின் தாக்கத்தை மிக அனாயாசமாக சமாளித்து, ஒரு சிறிய இடத்துக்குள் படு சூடான திரவத்தை ஊற்றுவது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். இந்த மாதிரி இரவுக் கடைகள் அனேகமாக பஸ் டிரைவருக்கும், கண்டக்டருக்கும் சலுகைகள் தருவதால், அவசரப் பட்டு குடிக்க வேண்டிய அவசியமில்லை. கடைக்காரரே சமயத்தில் நமக்கு வண்டி கிளம்புவதை அறிவிப்பதோடு, டிரைவருக்கும் ஒரு 'ரெகமண்டேஷன்' தருவார், கொஞ்சம் தாமதமாகக் கிளம்ப! இந்தக் காப்பியில் மிக மிக லேசான டீசல் வாசனை - இன்ஸ்டன்ட் என்பதால் அதிகமாகத் தெரியாது. பாலும் தண்ணியாக இருப்பதால், கொஞ்சம் டிகாஷன் சாப்பிடுவது போலத் தோன்றும்.

அடுத்த பதிவில் கல்யாணக் காப்பி பற்றியும், காப்பி குடிக்கும் முறையில் நான் பார்த்த விஷயங்களையும் தருகிறேன்.

முந்தைய பதிவுகள்
காப்பி – 3
காப்பி – 2
காப்பி – 1

செவ்வாய், ஆகஸ்ட் 22, 2006

காப்பி - 3

என்னுடைய ஆறாவது/ஏழாவது வகுப்புகள் பட்டுக்கோட்டையில், எட்டாவதிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை மன்னார்குடியில், வழக்கம் போல் அப்பாவின் உத்தியோக மாற்றம் காரணமாக. இந்த இரண்டு இடங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காப்பி முறை, ஆனால் சென்னையில் இருந்த முறையிலிருந்து பெரிய மாற்றம்.

பட்டுக்கோட்டை, மன்னார்குடி போன்ற இடங்களில் பால் வருவது அருகிலுள்ள கிராமங்களில் இருக்கும் சொசைட்டிகள் மூலமாக. சைக்கிள் காரியரில் ஒரு பெரிய பாத்திரத்தில் (குழாய் வைத்தது), காலையிலும், மாலையிலும் எடுத்து வருவார்கள். ஒவ்வொரு சைக்கிளுக்கும் ஒரு பெரிய மணி, சைக்கிள் பாரில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். காலால் பெடலை மிதித்துக் கொண்டே தெரு முனை வரும் போது, கால் முட்டியாலேயே அந்த மணியை அடிப்பார்கள். மணி சத்தத்தை வைத்துக் கொண்டே,‘எடமேலையூர் பால்’, ‘மதுக்கூர் பால்’, ‘சொசைட்டி பால்’ (மன்னார்குடி) என்றேல்லாம் சொல்லுவோம். இதில் மதுக்கூர் பாலும், எடமேலையூர் பாலும் பதப்படுத்தப் படாதவை - அருமையான வாசனை.

இந்த காரியரிலும் இரண்டு வகை. சாதாரண அளவுள்ள காரியரில் ஒரு பாத்திரம் தான் வரும். மன்னார்குடி சொசைட்டி பால் இந்த வகையைச் சார்ந்தது. மதுக்கூரிலிருந்து வரும் பால் காரியர்களில் சில சற்று வித்தியாசமானவை. இந்த சைக்கிள்களில் பின்புறக் காரியர் கொஞ்சம் பெரிசு (ஓகே சோப் விளம்பரம் போல: உண்மையிலேயே ரொம்பப் பெரிசு). சைக்கிளிலில் இருக்கும் இரும்புச்சட்டம் போதாதென்று, சில கட்டைகளையும் முட்டுக் கொடுத்து வைக்கப் பட்டிருக்கும். இதில் இரண்டு பால் பாத்திரங்கள் - ஒன்று வழக்கமான அளவு, மற்றொன்று கொஞ்சம் சிறிசு. அனேமாக எருமைப் பால் தான் பெரிய காரியரில் இருக்கும். பதப் படுத்தப் பட்டதென்றால் எருமைப் பாலும், பசும் பாலும் சேர்ந்த கலவை தான். இந்த சின்னப் பாத்திரத்தில் ஸ்பெஷல் பால் (பசும் பால்); சற்று விலையும் அதிகம். பால் வினியோகம் செய்து வரும் இவர்களிடம் சற்று பேச்சுக் கொடுத்தால் விசித்திரமான விஷயங்களும், சமயத்தில் வம்புகளும் கிடைக்கும்.

மதுக்கூரிலிருந்து மன்னார்குடி வரும் சாலை தார் ரோடு - ஆனால் ரொம்பவும் அகலமானது அல்ல. தார் ரோடுக்கு இரு புறமும் வெறும் மணலும், தூசியும் தான், எப்போதாவது கடினமான தரை. இரு பேருந்துகள் இந்தச் சாலையில் எதிரெதிராக வந்து விட்டால் எழுதாத சட்டம், ஒரு பக்க சக்கரங்கள் தார் ரோடிலும் மற்றொரு பக்க சக்கரங்கள் மணலிலும் தான் போக வேண்டும். இந்த எட்டு, பத்து கிலோமிட்டர் பயத்தில் பத்து முறையாவது, இந்த பால் சைக்கிள்கள் மணலில் இறங்க வேண்டியிருக்கும். சைக்கிளிலிருந்து இறங்கி தள்ளிக் கொண்டு, பேருந்து போன பின் மறுபடி உதைத்து ஏறி வர வேண்டியது தான். நிச்சயமாக எளிதானது இல்லை. அறுவடைக் காலத்தில், நெற்போர் அடிக்க அனேகமாக இந்த தார் சாலைகளைத்தான் உபயோகிப்பார்கள். காய்ந்த நெற்பயிரின் மேல் சைக்கிளை ஒட்டி வருவது, ஓட்டுபவருக்கு வெறுப்பேற்றும் விஷயம். கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் ஒரு பெரிய பித்தளை பாத்திரத்தில் பாலை எடுத்து வைத்துக் கொண்டு சைக்கிளை இப்படி லாவகமாக ஓட்டி வந்த அந்த பெரும் உழைப்பாளிகளை இப்போது நினைத்தாலும் மனதில் ஒரு மரியாதை வருகிறது!

நிறைய வீடுகளில் காப்பிக் கொட்டை வாங்கி அரைக்கும் வழக்கம் இருந்தது. பொடியாகவே கடையில் வாங்கி வருவது சுலபமானதாக இருந்ததாலும், சென்னையில் நான்கு ஆண்டுகள் பொடி வாங்கிப் பழகிவிட்டதாலும், எங்கள் வீட்டில் அரைப்பது பற்றி யோசிக்கக் கூட இல்லை. மன்னார்குடியில் நிறைய பிரபலமான காப்பிக் கடைகள் இருந்தாலும், தேசிய மேல் நிலைப் பள்ளிக்கு எதிரில் 'சுதர்ஸன் காபி' கடையில் தான் பொடி வாங்குவோம். ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் நிரந்தர வாடிக்கைக்காரர்களுக்கு மட்டும் 'டெய்லி ஷீட்' காலண்டர் கிடைக்கும். 'ப்ளாண்டேஷன் ஏ', 'பீப்ரி' என்று இரண்டு வகைக் கொட்டைகள். தனியாகக் கேட்டு சிக்கரி கலந்து கொள்ளலாம். எங்கள் வீட்டில் சிக்கரி கிடையாது; எப்போதும் பீப்ரி கொட்டைகள் தான். இந்தக் காப்பிக்கும் மணம் உண்டு, கொஞ்சம் வித்தியாசமானது. பால் வாசனை தூக்கலாக தெரியும். அடுப்பு குமுட்டி இல்லை - அப்போது பிரபலமான 'நூதன்' ஸ்டவ்! எங்கள் உறவினர் டில்லி போய் வந்த போது வாங்கி வந்தது. கிரசின் வாசனை எல்லாம் இல்லை - வெறும் காப்பியும் பாலும் தான்; ஆகையால் போதை இல்லை! காப்பி பில்டரும் பித்தளையில் இருந்து எவர்சில்வருக்கு மொத்தமாக மாறியது; பித்தளை பில்டர் பரண் ஏறியது.

அடுத்த பதிவில் பயணங்களின் போது இரயில் நிலையத்தில், தெருவோரக் கடைகளில், ஒட்டல்களில் குடித்த காப்பியைப் பற்றி பதிகிறேன்.

முந்தைய பதிவுகள்
காப்பி 1
காப்பி 2

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2006

காப்பி - 2

இராமநாதபுரத்தில் முதல் வகுப்பு முடித்தவுடன் சென்னை வந்தேன் - தந்தையாரின் உத்தியோக மாற்றம் காரணமாக. எல்லாமே புதுசு, காப்பிக்கு பால் உட்பட. அப்போதுதான் ஆவின் புட்டிப் பால் வந்திருந்த சமயம். வீட்டுக்கு ஒரு அட்டை - கலர் கலராக - ஒரு பாட்டிலா, இரண்டு பாட்டிலா என்று அடையாளம் காட்ட. எங்கள் தெருவில் நான்கு ஐந்து வீட்டுக்கு ஒரு அம்மாள் (பேர் தெரியாது; ஆயா என்றுதான் எல்லோரும் - அவரை விட வயதானவர் உட்பட- கூப்பிடுவோம்) மொத்தமாக அட்டையை எடுத்துக் கொண்டு போய் பாட்டில் அத்தனையும் இரண்டு பெரிய துணிப்பைகளில் போட்டு எடுத்து வந்து கொடுப்பார். பாட்டில் வெளியே அழுக்கு அதிகம், முதலில் பாட்டிலை தண்ணீரால் அலம்பிவிட்டுத்தான், மூடியையே திறப்போம். மூடி கலர் கலராக இருக்கும் அலுமினியத் தாள். அந்தக் காலத்தில் இந்த மூடியை எல்லாம் சேகரித்து, மாலையாகவோ, அல்லது நவராத்திரிக்கு கொலுவில் தோரணமாகவோ தொங்க விடாத வீடுகளே இல்லை; அப்படிப் பிரபலமான ஒரு மூடி.

புட்டிப் பாலின் வாசனை ஒரு விதமானது. பாட்டிலோடு, அதுவும் அதிக பாட்டில்கள் இருக்கும் பையோடு இருக்கையில் ஒரு வாசனை. பாட்டிலை அலம்பிவிட்டு, பாலை பாத்திரத்தில் விடும் போது வேறு விதமான வாசனை - கொஞ்சம் தாக்கம் குறைவாக. காய்ச்சியவுடன், மெல்லிய பால் வாசனை மட்டும் தான். அது மட்டுமல்ல, பாட்டிலுக்கு எவ்வளவு வேர்த்திருக்கிறது என்பதைப் பொறுத்தும் வாசனை கொஞ்சம் மாறும். பதப் படுத்தப்பட்டு, குளிர்வித்த பாலின் வாசனை (வேர்த்த பாட்டில்) கொஞ்சம் தூக்கலாக இருக்கும். ஆவின் அப்போதுதான் வந்திருந்தது என்பதால், அம்மா அதே தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் தினமும் கொஞ்சம் பால் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார் - ஒரு பிளான் B வேண்டாமா? அது கறந்த பால் என்பதால், வாங்கி வரும் பாத்திரத்தில் வேர்க்காது. ஔவையாருக்கு முருகன் கேட்ட 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' கேள்வி போல் 'வேர்த்த பால் வேண்டுமா? வேர்க்காத பால் வேண்டுமா'? என்று கேட்போம்! எந்தப் பால் என்பதைப் பொறுத்து காப்பியின் சுவை, வாசனை கொஞ்சம் மாறும்.

இந்த சமயத்தில் பில்டரும் பித்தளையிலிருந்து குட்டி எவர்சில்வருக்கு மாறியது. வீட்டிற்கு உறவினர் வந்தால் மட்டும் பித்தளை பில்டர் வந்தது - அதிகம் டிகாஷன் வேண்டுமே! காப்பிக் கொட்டை வாங்கி அரைப்பதும் குறைந்து, பொடியாகவே வாங்க ஆரம்பித்தோம். அப்பா தினம் வேலைக்காக பாரிஸ் கார்னர் சென்று வந்ததால் மாதத்தில் ஒரு முறை வாங்கி வருவார். குமுட்டி அடுப்பின் உபயோகமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது, கிரசின் ஸ்டவ் வந்ததால்.

நாங்கள் சென்னையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு வருவதற்கு சற்று முன்னால் புட்டிப் பாலோடு, பாலிதீன் பைகளில் பால் தருவதை ஆவின் ஆரம்பித்தது. இதில் ஆயாவுக்கு ரொம்ப சந்தோஷம். பைகளின் கனம் குறைந்தது, அதிக வீடுகளுக்கு பால் எடுத்து வர ஆரம்பித்ததால், ஆயாவுக்கும் வருமானம். மூடி சேர்ப்பது குறைந்தாலும், பழைய பால் கவர்களினால் வேறு உபயோகம் வந்ததால், அம்மாவுக்கும் சந்தோஷம்தான். பாலித்தீன் பையும் அழுக்குதான், அதனால் அதையும் முதலில் தண்ணீரால் அலம்பிவிட்டுத்தான் வெட்ட வேண்டும். ஆனால் பாலின் சுவையில் ஒரு மாறுதலும் இல்லை.

இதன் நடுவே, சென்னையிலேயே உறவினர் வீட்டுக்குப் (பெசன்ட் நகர் என்று நினைவு) போன போது, அவர்கள் வீட்டுக்கருகில் டோக்கன் போட்டால் பால் தரும் நிலையங்களைப் பார்த்து பிரமித்ததுண்டு. முதலில் ஒரு கவுண்டரில் பைசா கொடுத்து டோக்கன் வாங்க வேண்டும். பின் பாத்திரத்தை அருகில் உள்ள குழாய்க்கடியில் வைத்து பின்னர் அந்த டோக்கனை குழாய்க்கு அருகில் இருக்கும் ஒட்டையில் போட வேண்டும். பத்து செகண்டுக்குள் பால் குழாயிலிருந்து கீழேயுள்ள பாத்திரத்தில்! அந்த அறைக்குள் நின்று கொண்டு யாரோ டோக்கனைப் பெற்றுக் கொண்டு அளந்து பாலை குழாய் வழியாக விடுகிறார்கள் என்றும் நினைத்ததுண்டு. அது இயந்திரம் தான் என்று ஊர்ஜிதமானதும், சோடா பாட்டிலின் மூடியை தட்டை செய்து வெட்டிப் போட்டால் பால் வருமா என்று அந்த உறவினர் வீட்டுப் பையன்களோடு விவாதித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. இந்தப் பாலில் புட்டிப் பாலில் வாசனை இருக்காது, அதே சமயம் வெளியே வாங்கும் பாலின் வாசனையும் இருக்காது. சொல்லப் போனால் தனித்த வாசனையே இல்லாத பால்.

இந்தப் பதிவே கொஞ்சம் பெரிதாகிவிட்டதால், தஞ்சை ஜில்லாவில் வசித்த போது இருந்த காப்பி முறையைப் அடுத்த பதிவில் தருகிறேன்.

முந்தைய பதிவு - காப்பி 1

சனி, ஆகஸ்ட் 19, 2006

காப்பி - 1

நிறைய இடங்களில் காபி என்று எழுதியதைப் பார்த்திருந்தாலும், எனக்கு காப்பி என்று எழுதியே பழகிவிட்டது; எது சரி? காபியா, காப்பியா? இந்த வருட ஆரம்பத்தில் எடுத்த ஒரு முடிவு ஒரு நாளைக்கு இரண்டு கோப்பைக்கு மேல் காப்பி குடிப்பதில்லை என்று. முப்பது வருடங்களுக்கு மேலாக இருக்கும் பழக்கத்தை சட்டென்று விட முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உத்தேசம். எப்போதாவது தான் சக்கரை சேர்த்துக் கொள்கிறேன். இன்னும் கொஞ்ச நாட்களில் (வருடங்களில்?) மொத்தமாக விட்டு விடலாம் என்று எண்ணம். காப்பி குடிப்பதை விடப் போகிறேன் என்பதால், இந்தப் பதிவுகள் ஒரு மாதிரியான நினைவு அஞ்சலி என்று வைத்துக் கொள்ளலாம்.

என் நினைவில் நிற்கிற காப்பி தொடர்பான விஷயங்களில் முதலாவது எது என்று யோசித்தால், நான்கு வயது இருக்கும் போது மாதத்திற்கு ஒரு முறை என் அம்மா காப்பிக் கொட்டைகளை வறுத்ததுதான். இராமநாதபுரத்தில் வடக்குத் தெருவில் எங்கள் வீடு. ஒரு விறகு அடுப்பில் இரும்பு வாணலியில் பச்சைக் கொட்டைகளைப் போட்டு அவை கருக்கும் வரை நன்கு வறுத்து, கூடத்தில் சுத்தம் செய்த தரையில் சூடு ஆறுவதற்காக பரப்பி வைப்பார்கள். புகையும், காப்பிக் கொட்டை வறுக்கும் வாசனையும் கலந்து வீடு முழுவதும் அடிக்கும். பொழுது போகாமல் அவ்வப் போது கசப்பான வறுபட்ட காப்பிக் கொட்டைகளைச் சாப்பிடுவேன். சூடு ஆறியதும், அந்தக் கொட்டைகளை ஒரு சின்னதான காப்பிக் கொட்டை அரைக்கும் மிஷினில் - ஒரு சமயத்தில் இரண்டு கைப்பிடி தான் அரைக்க முடியும் - அம்மாவுக்கு உதவியாக அரைப்பேன். அரைத்து தட்டில் விழும் பொடியை டப்பாவில் போட்டு வைப்பது அம்மாவின் வேலை - நான்கு வயதில் எனக்கு கீழே கொட்டத்தான் தெரியும்!

வறுத்த காப்பிக் கொட்டைக்கு இந்த மணம் என்றால், காப்பிக்கு வேறு விதமான வாசனை. அனேகமாக பாலைக் காய்ச்சுவது குமுட்டி அடுப்பில்தான். இரும்பில் ஒரு கோப்பை வடிவில் இருக்கும். கரியைப் போட்டு எரித்து, பாத்திரத்தை கரியின் மேல் வைத்து பாலைக் காய்ச்சுவார்கள். கரியைப் பற்ற வைக்க முதலில் சூடம், தேங்காய் நார்/மட்டை, மண்ணெண்ணை போன்றவைகள் உபயோகப் படுத்தப் படும். கரி நன்றாக எரிய அவ்வப் போது ஊத வேண்டியிருக்கும்.

காப்பி பில்டர் பித்தளையில் பெரிதாக இருக்கும். ஒரு முறை தொட்டு கை சுட்டுவிட்டதால் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத ஒன்று! முதலில் காப்பிப் பொடியைப் பில்டரின் மேல் பாத்திரத்தில் போட்டு, கொதிக்கின்ற வென்னீரை விட்டு, பின் ஒரு கைப்பிடியோடு இருக்கும் ஜல்லடைத் தட்டை போட வேண்டும். முதல் முறை மிக வேகமாக தண்ணீர் இறங்கிவிடும். மொத்தத் தண்ணீரும் இறங்கியபின், கீழ் பாத்திரத்தில் இருக்கும் டிகாஷனை மறுபடியும் மேல் பாத்திரத்தில் கொட்டி, இரண்டாம் முறை இறங்கிய டிகாஷனை காப்பிக்காக உபயோகிப்பார் அம்மா.

காய்ச்சின பாலோடு, காப்பி டிகாஷனையும் கலந்து, சக்கரை போட்டு, நுரை வரும்வரை நன்று ஆற்றி, தகுந்த சூடு வந்தவுடன் டம்ளர், டபராவில் தருவார்கள். குமுட்டி அடுப்பை ஊதும் போது எரிந்த தேங்காய் நாரோ, கரித்துண்டோ சமயத்தில் காப்பியில் கலந்து வரும். அந்த காப்பியின் மணமே ஒரு போதை தரும் - பால், காப்பிக் கொட்டை, எப்போதாவது மண்ணெண்ணை, கரி, சூடம் என்று ஒரு கதம்பமான வாசனை!

அடுத்த பதிவில் தஞ்சாவூர் ஜில்லாவில் வசித்த போதும், சென்னையில் வசித்த போதும் குடித்த காப்பி பற்றிய நினைவுகளை பதிகிறேன்.

திங்கள், ஆகஸ்ட் 14, 2006

மூன்று வரி ஆறு வார்த்தை

இரண்டு மூன்று வாரங்களாக தொலைக்காட்சியிலும், இணையத்திலும் பார்த்த, படித்த சில செய்திகளின் விளைவு - இந்த மூன்று மூன்றுவரி ஆறு வார்த்தைக் கவிதைகள்.

மௌனத்தின் இரைச்சல்
கேட்க முடியவில்லை!
ஊமையின் பாஷை.

விஷப் புரளி
சாக்கடையில் சோறு!
பசியோடு பார்வை.

தியாகியா தீவிரவாதியா?
எப்படி அழைத்தாலும்
போனது உயிர்தானே!