வியாழன், நவம்பர் 09, 2006

தேனீர் – 2

என்னுடைய பயிற்சியில் நான் செல்லாத இடம் - டீ எஸ்டேட் தான். நேராகப் போகாவிட்டாலும், டீ வளர்க்கும் முறை, இலை பறித்து டீ யாக அந்த இலைகளை மாற்றுவதை சித்திரப் படமாகப் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் நேரில் இன்னமும் பார்க்கவில்லையே என்ற குறை இருக்கத்தான் செய்கிறது.

டீ யில் நிறைய வகைகள் உண்டு. சிலவற்றிற்கு மணம் கூடுதலாக இருக்கும்; சிலவற்றிற்கு ருசி கூடுதலாக இருக்கும். இது ஒரு வசதி; எல்லோருக்கும் ஒரே சுவை பிடிக்கும் என்று சொல்ல முடியாதே. இப்படிப் பலவகைகள் இருந்தால் தான், பல கம்பெனிகள், பல வகைகள் (பிராண்டு), என்று எல்லோரும் கொஞ்சம் பணம் பண்ணலாம். சில டீ வகைகள் கனமாக இருக்கும்; சிலவற்றிற்கு இலை பெரிசு. இந்த டீ இலைகளை காய வைத்து, அதை ஒரு மாதிரியாக பொடி பண்ணினால் அதை 'டஸ்ட்' டீ என்பார்கள். இதே இலையை சீராக வெட்டி, முறுக்கி, சுருட்டினால் அது சி.டி.சி. (CTC = Cut, Turn, Curl) வகை. டீ வாங்கும் போது இது பற்றியெல்லாம் தெரியாது. கடையில் வாங்கும் போது, கடைக்காரர் விலை அதிகமான ஒரு வகையைக் காண்பித்து 'இது சி.டி.சி' என்று பெருமையாக சொன்னபோது, 'அப்படின்னா என்னாங்க?' என்று கேட்கக் கூச்சப்பட்டு, 'அப்ப அதே கொடுங்க' என்று ஜம்பமாய் பெருமையோடு வாங்கி வந்திருக்கிறேன்! வேலைக்கு சேர்ந்து, கல்கத்தாவில் கிதேர்புர் தொழிற்சாலையில், இது பற்றி 'ப்ளோர் சூப்பர்வைசர்' ரமேஷ் விளக்கியவுடன், 'அடச்சே - இதுக்காகவா அப்போது அதிகம் பைசா கொடுத்தேன்' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

முதலில் டீ ஏலம் பற்றி. ஏலத்திற்கு முன்னாலேயே, ஒவ்வொரு கம்பெனிக்கும், அந்த ஏலத்தில் வரும் டீ வகைகள் (எந்த தோட்டம், என்ன ரகம், எத்தனை கிலோ, குறைந்தபட்ச விலை) பற்றி விபரமாக செய்தி வந்து விடும். இதோடு, டீ தொழிற்சாலையில் உள்ள டீ இருப்பு நிலை, வரும் வார/மாத டீ திட்டம் (அதாங்க எந்த பிராண்ட் டீ எத்தனை பொட்டலம் போட வேண்டும் என்கிற பிளான்) எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, டீ வாங்கும் பிரிவில் உள்ள அதிகாரிகள் ஒரு திட்டம் தீட்டுவார்கள். அதில் ஏலத்திற்கு யார் போவது என்றும் முடிவெடுப்பார்கள். வழக்கமாக ஏலம் எடுக்கச் செல்லும் அதிகாரிக்கு 'உதவி' என்ற பெயரில் நான் கல்கத்தாவில் டீ ஏலத்திற்கு சென்றேன்.

இந்த ஏலத்திற்கு செல்லும் முன், எத்தனை கிலோ டீ வாங்க வேண்டும், எத்தனை ரூபாய் வரை செல்லலாம், எந்த எந்த வகை டீ வாங்க வேண்டும் என்றெல்லாம் டீ வாங்கும் பிரிவின் அதிகாரிகள் கலந்தாலோசித்து உருவாக்கிய திட்டத்தைப் பற்றி எனக்கு விளக்கினார், ஏலத்திற்கு செல்லும் அதிகாரி. இது ஒரு லேசான விஷயம் இல்லை. எல்லாவற்றிற்கும் - அதாவது, வாங்க வேண்டிய அளவு, வகை, விலை - குறைந்தபட்சம், அதிகபட்சம் என்றெல்லாம் ஒரு அட்டவணை போட்டு எடுத்துக் கொள்வோம். என் வேலை, டீ வாங்கும் அதிகாரி ஏலம் எடுத்தவுடன், எடை, விலை எல்லாவற்றையும் குறித்துக் கொண்டு, கணக்குப் போட்டு மொத்த திட்டத்தின் படி இருக்கிறோமா, இல்லையா என்று சரிபார்த்துக் கொண்டிருப்பது. இதை விட எனக்கு அந்த அதிகாரி சொன்ன ஒரு கண்டிப்பான விதி - 'தப்பித் தவறிக்கூட தலையை ஆட்டாதே, கையைத் தூக்காதே (மூக்கு அரித்தாலும் சொரியாதே!), ஒரு சிலையைப் போல இரு' என்பதுதான். ஒன்றும் புரியாவிட்டாலும், தலையை வேகமாக ஆட்டி விட்டு அவரோடு சென்றேன்.

அடுத்த பதிவில் நான் ஏலத்திற்குப் போன கதை.

முந்தைய பதிவு

தேனீர் – 1

10 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

//'தப்பித் தவறிக்கூட தலையை ஆட்டாதே, கையைத் தூக்காதே (மூக்கு அரித்தாலும் சொரியாதே!), ஒரு சிலையைப் போல இரு' //

500% கரெக்ட்.

ஒண்ணுக்கும் உதவாத ஸ்டூலை ஏலத்தில் 'இப்படி' எடுத்த அனுபவம் இருக்கு:-))))

இலவசக்கொத்தனார் சொன்னது…

என்னங்க நீங்களும் இப்படி சஸ்பென்ஸ் வெச்சு முடிக்கறீங்க? :)

ஏலம் பற்றி அறிந்து கொள்ள ஆவலாய் காத்திருக்கும் .....

(நான் ஒரு முறை டேன் டீ தோட்டத்திற்கு சென்றிருக்கிறேன். அங்கு இலைகள் பறிப்பதை பார்ப்பதற்கு அனுமதி தந்தவர்கள் அங்குள்ள பேக்டரி உள்ளே செல்ல அனுமதி மறுத்துவிட்டனர்)

நிர்மல் சொன்னது…

படிக்க டீ மாதிரி நல்லா இருக்கு.

ரங்கா - Ranga சொன்னது…

ஆமாங்க துளசி. என்னைக் கூப்பிட்டுப் போன அதிகாரி வங்காளத்தை சேர்ந்தவர் - தமிழ் தெரியாது. இல்லாவிட்டால் 'இடிச்ச புளி மாதிரி இரு' என்று ஒரு வாக்கியத்தில் சொல்லியிருப்பார்!

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

என்ன இப்படி சொல்லிட்டீங்க இ.கொ. எத்தனை சீரியல் டி.வி.ல பாத்திருப்போம்? இப்படி முடிக்கலேன்னா வர சொல்ப பேருக்கும் இந்த பதிவுத் தொடரைப் பற்றி நினைவே இருக்காதே?

நான் இரண்டு வேறு தொழிற்சாலைகளையும் பார்த்திருக்கிறேன்; ஆனால் தோட்டத்தைத் தான் பார்த்ததில்லை :-(
ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி நிர்மல்.

ரங்கா.

வடுவூர் குமார் சொன்னது…

இடிச்சபுளி பற்றி தெரிந்துகொள்வதற்கிடையில் போய் ஒரு டீ அருந்திவிட்டு வருகிறேன்.
துளசி, அந்த ஸ்டூலை பத்தி எழுதிட்டீங்களா?:-))
ஒரு சுட்டி கொடுக்கக்கூடாது?

மதி கந்தசாமி (Mathy) சொன்னது…

தொடர் அருமையாகச் செல்கிறது ரங்கா.

டீயைப்பற்றி விரிவாக எழுதுங்கன்னு போன இடுகையில் சொல்ல நினைத்துப் படித்துக்கொண்டே வரும்போது, நீங்களே விரிவாக எழுதப்போவதாகச் சொல்லிவிட்டீர்கள். :)

அடுத்த பகுதி எப்ப?

-மதி

ரங்கா - Ranga சொன்னது…

குமார்,

அமெரிக்காவிலே வளர்ந்த குழந்தைகளுக்கு 'பிடிச்ச ப்ளேடோவாய்' இரு என்று வேண்டுமானால் சொல்லலாம். :-]

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி மதி. இரண்டு மூன்று நாட்களுக்குள் அடுத்தடுத்த பதிவுகளைப் போட வேண்டும் என்று எண்ணம்.

ரங்கா.