சனி, பிப்ரவரி 26, 2011

இலக்கு - 4

இலக்கு - 4

வாழ்க்கை என்று பார்க்கும் போது இதன் ஆரம்பமும், முடிவும் இங்குதான் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மருத்துவப் பார்வையில், அல்லது ஒரு நாட்டு சட்ட ரீதியாக ஒரு உயிரின் தொடக்கமும், முடிவும் (இறப்பு) வரையறுக்கப்பட்டு விவரிக்கப்பட்டாலும், அது முழுமையான ஒன்று என ஒப்புக்கொள்ள முடியவில்லை. சிவவாக்கியர் அந்நாளில் கேட்டது:
"பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே?
பிறந்து மண்ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே?"

அவரே வேறொரு பாட்டில் இன்னமும் சொல்கிறார்:
"உடம்பு உயிர் எடுத்ததோ, உயிர் உடம்பு எடுத்ததோ
உடம்பு உயிர் எடுத்தபோது, உருவம் ஏது செப்புவீர்
உடம்பு உயிர் இறந்தபோது உயிர் இறப்பது இல்லையே
உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே!"

வளர்வதில் திறன் சம்பந்தப்பட்ட அறிவு வளர்ச்சியையும் சேர்த்துப் பார்த்தாலும், அதையும் தவிர பேரறிவாய், ஞானத்தைத் தேடும் எண்ணம் வருகிறது. இதை வளர்ச்சி என்று கூறி நிறுத்த முடியவில்லை. இந்தப் பேரறிவு வாழ்தல், மகிழ்தல், வளர்தல் இவைகளைப் பற்றி மட்டுமல்லாமல் இவைகளையும் தாண்டி ஒரு முழுமையை நோக்கிச் செல்லும் விஷயமாகவே எண்ணத் தோன்றுகிறது. ஒரு உயிரின் பயணம் இந்த பூமியில் பிறப்பதில் தான் ஆரம்பிக்கிறது என்று உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. அதே போல அந்தப் பயண முடிவும் இறப்பில் நின்று விடுகிறது என்றும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் பயணத்தில் ஒரு துண்டு, பகுதி 1968ல் பிறந்து ஆரம்பித்து இருக்கிறது. அதற்கு முன்னம் செய்த பயணம் நினைப்பில் இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

கல்லூரிப் படிப்பு முடிந்து இந்துஸ்தான் லீவரில் பணிபுரிய ஆரம்பித்த காலத்தில் அலெக்ஸ்பாண்டியன் தயவில் 'பெரி மேசன்' கதைகள் அறிமுகமாயிற்று. அதில் ஒரு கதையில் 'பிறப்பு-இறப்பு' தொடர்பாக பேசிக் கொண்டு வருகையில், எப்படி நினைப்பு இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பற்றியும் பெரி மேசன் விளக்குவதாக வரும். அந்தக் கதை (பெயர் உட்பட) மறந்து விட்டாலும், இந்தப் பகுதி மட்டும் நன்றாக நினைப்பில் இருக்கிறது. நாம் தூங்கி எழுகையில் நம் தூக்கத்துக்கு முன்னால் நடந்த அனைத்து விஷயங்களும் மறந்து விடும் என்று ஒரு வைத்துக் கொள்வோம். அப்படி நடந்தால் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒரு பிறப்பு போலத் தெரியும். கற்றுக் கொண்ட விஷயங்களையே மறுபடி கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அதே போல ஒரு உயிர் பிறக்கும் போது முன் பயணங்களைப் பற்றி மறந்து விடுகிறது என்பது போல இந்தப் பகுதியில் விளக்கம் வரும்.

இந்தக் கதையில் வந்த இந்தப் பகுதியால் பின்னாளில் நிறைய யோசித்திருக்கிறேன் - அதைப் பற்றி பின்னால். இந்த யோசனைகளில் ஒரு குறிப்பிட்ட விஷயம், நினைப்பு, அதன் முக்கியத்துவம். வளர்ச்சியில் ஒரு திறனைக் கற்றுக் கொள்ளுகையில், அது கார் ஒட்டுவதாக இருக்கலாம், அல்லது பியானோ வாசிப்பதாக இருக்கலாம், அந்தத் திறனைப் பற்றிய விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூளை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறது. இதற்கு புலன்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியம். பியானோ வாசிக்கையில், வரும் ஒலியை தரம் பிரித்து உணரவே பயிற்சி வேண்டியிருக்கிறது, முதல் மாதத்திலிருந்து இரண்டாம் மாதத்திற்கு என் செவியில் பெரிய வளர்ச்சி இல்லை; ஆனால் இந்தப் பயிற்சியில் செவியும், மூளையும் சேர்ந்து ஒலியின் தரம் பிரிப்பதில் முன்னேற்றம் அடைகிறது. நினைப்பு என்று ஒன்று இல்லையென்றால் இந்த தரம் பிரிக்கும் அறிவு தேக்கி வைக்கப்பட்டிருக்காது.

நினைப்பு திறனைப் பற்றிய அறிவை தேக்கி வைக்கும் பாத்திரம். அந்தப் பாத்திரத்தில் எதைத் தேக்கி வைப்பது என்பது என் முடிவைப் பொறுத்தது. இது வளர்ச்சிக்கு முக்கியம். அதே சமயத்தில் என் முடிவோடு சம்பந்தப்படாமல் என் உடல் இயங்கத் தேவையான திறனை, அறிவை அதுவாகவே சேர்த்து வைத்திருக்கிறது, எனக்குத் தெரியாமலேயே - உதாரணம்: என் இதய இயக்கம். இருதயம் பற்றி அறிந்து கொண்டதே பள்ளியில் படிக்கும் போதுதான். இப்போது அதன் இயக்கம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது, இருந்தும் இயங்கம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. எனக்குள் இயல்பாக இயங்குவதைப் பற்றி அறிந்து கொள்ளவும் என் முயற்சி தேவையாயிருக்கிறது. ஒரு இருதய மருத்துவர், இருதயத்தைப் பற்றி அறிந்து கொள்ள நான்கிலிருந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. இதேபோல மூளை, கண், கால் என்றெல்லாம் அறிந்து கொள்ள நிறைய வருடங்கள் ஆகும். என்னைப் பற்றித் தெரிந்து கொள்ளவே என் வாழ்நாள் போதாது. இத்தனையும் சேர்த்து வைக்க என் நினைப்பு பாத்திரமும் போதாதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அறிவை, திறனைப் பெருக்கிக் கொள்வதில் நேரம், முயற்சி என்று எத்தனை செலவழித்தாலும், ஒவ்வொரு அறிவும் நிச்சயமாகத் தரும் பாடம் 'எனக்கு அறிந்து கொள்ள வேண்டியது அதிகம்' என்பதுதான்.

சரி இது எல்லாமே தெரிந்து கொண்டு விடுகிறேன் என்றூ ஒரு பேச்சுக்காக வைத்துக் கொள்வோம். அப்படித் தெரிந்து கொண்டாலும் முழுமை வரும் என்று தோன்றவில்லை. கவிஞர் கண்ணதாசன் சொன்னது:
"ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
மனிதன் இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்".

பத்திரகிரியார் சொன்னது:
“ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின்
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம்?”

இந்தத் திறன் சம்பந்தமான அறிவுகளையெல்லாம் தாண்டி, மூல காரணத்தை, இந்த 'ஏன்' என்ற கேள்விக்கான விடை தரும் அறிவை ஞானம் என்றழைக்கலாம். இந்த மூலத்தை, அறிந்தே அறியும் அறிவை, அறிந்து கொள்ள ஆசை! மீண்டும் பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல்களில் இருந்து ஒரு பாடல்:

“அறிவை அறிவால் அறிந்தே அறியும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பது இனி எக்காலம்?”

இன்னமும் அந்த ஞானம் வரவில்லை - அதனால் இந்த 'அறிதல்' என்னுடய இலக்குகளில் ஒன்று.

வெள்ளி, பிப்ரவரி 18, 2011

இலக்கு - 3

இலக்கு - 3

"வாழ்தல்", "மகிழ்தல்" இலக்குகளைப் பற்றி விபரமாக எழுதுவதற்கு முன்னால் அடுத்த இலக்குகளைப் பற்றியும் சொல்லி விடுகிறேன். பிறப்பதற்கு முன்னாலேயே கருவிலேயே தொடங்குகிற ஒரு செயல் வளர்ச்சி. விந்துவும், முட்டையும் ஒன்றாகி வந்த ஒரு செல், இரண்டாகி, நான்காகி, வளர ஆரம்பிக்கிறது. பிறந்த பின்னும் தொடர்கின்ற இச்செயல் இறப்பு வரை நடக்கின்ற விஷயந்தான். உடலளவில் ஆரம்பித்த இந்த வளர்ச்சி, ஒரு நிலையில் அறிவு, திறன், கலை என்றெல்லாம் உள்ளடக்கி பெரிதாகிறது. உலகில் உள்ள உயிரனைத்திற்கும் வளர்ச்சி பொது. வளர்ச்சியே வளர்ந்து வரும் திறத்தை, தன்னளவில் வளர்வதோடு மட்டுமல்லாமல் தன் இனமே வளர்வதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதை, பரிணாம வளர்ச்சி என்றழைக்கிறோம்!

ஒரு உயிர் உருவாகிப் பின் பிறந்ததே கரு வளர்ச்சியில் வந்ததுதான். இந்த ஆரம்ப வளர்ச்சியில் அந்த உயிரின் பங்கு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது:
"நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா?
இல்லை என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?"

ஆனால் "வாழ்தல்" ஆரம்பித்த பிறகு காலம் செல்லச் செல்ல நானெடுக்கும் முடிவுகள், என் செயல்களின் விளைவுகள் என் வளர்ச்சியை, அதன் திசை, வேகத்தைப் பாதிக்கிறது என்று தெரிகிறது. அது மழையில் நனைந்தால் ஜலதோஷம் வருவதில் ஆரம்பித்து, உணவில், உடற்பயிற்சியில் ஒழுங்கில்லாத காரணத்தால் சக்கரை வியாதி வருவது வரை அனேக விஷயங்களில் வெளிப்படுகிறது. அதே சமயத்தில் என் முடிவுகளோ, விருப்பங்களோ நேரடியாக சம்பந்தப்படாமல் வளரும் விஷயங்களும் இருக்கின்றன. குழந்தையாயிருக்கையில் நான் முடிவெடுத்து என் முடி வளரவில்லை; இப்போது நான் விரும்பினாலும் வளர மாட்டேன் என்கிறது!

வாழ்தலுக்கும், வளர்தலுக்கும் என்ன வித்தியாசம்? ஏன் இரண்டு இலக்குகளாகப் பார்க்க வேண்டும்? இவ்வுடலைப் பொறுத்தவரை வாழ்தல் இல்லாமல் வளர்தல் இல்லை. வாழ்வதற்காக நாம் எடுக்கும் முடிவுகளில், செயல்களில் வளர்ச்சி தானாக வருகிறது. உதாரணம் - வாழ்வதற்காக உணவு வேண்டும்; உண்பதனால் உடல் தானாக வளருகிறது. உடலைப் பொறுத்தவரை வாழ்தலுக்கும், வளர்தலுக்கும் வித்தியாசம் அதிகமாகத் தெரியாவிட்டாலும், அறிவு, திறன் சம்பந்தப்பட்ட விஷங்களில் வித்தியாசம் நிச்சயம் தெரிகிறது. ஒரு திறனைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அதை செயலாக்குவதாலேயே வளர்ச்சி வருகிறது. வெறுமனே வாழ்வதற்கு அந்தத் திறன் தேவையில்லாமல் இருக்கலாம்; அந்தத் திறனைக் கற்க வளர்ச்சியோ, மகிழ்ச்சியோ காரணமாக இருக்கலாம்!

இந்த வளர்ச்சியில் முக்கியமான ஒரு விஷயம் காலம், நேரம். எப்படி காலம் ஒரு அம்பு போல முன்னோக்கி மட்டும் செல்கின்றதோ அதே போல வளர்ச்சியும் ஒரே திசையிலேயே நடக்கிறது. பள்ளியில் படிக்கையில் மனப்பாடம் செய்து (பரீட்சைக்கு கட்டாயம் வரும்!) எழுதிய இரண்டு உயிர் வளர்ச்சி பற்றிய பாடங்கள் இன்னமும் நினைப்பில் இருக்கிறது. ஒன்று கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சி ஆவது; இரண்டு தவளையில் வளர்ச்சிப் பருவம், நிறைய படங்களுடன் (அதனால் ஐந்து அல்லது பத்து மதிப்பெண் கேள்வியாக வரும்). முட்டை, தலைப்பிரட்டை, வாலுள்ள தவளை, பெரிய வாலில்லாத தவளை எல்லாம் ஒரு குட்டையைச் சுற்றி இருப்பதாக வரைந்திருக்கிறேன் (தவளை உருளைக்கிழங்கு போலத் தான் தெரியும், நான் வரைந்தால்). இதில் முட்டை காணோம், தலைப்பிரட்டை காணோம் என்று ஒவ்வொரு பருவத்தை மட்டும் பார்த்தால் வளர்ச்சியில்லை; மொத்தமாக முட்டையிலிருந்து தலைப்பிரட்டை, அதிலிருந்து தவளை என்று பார்த்தால் வளர்ச்சி தெரியும்.

வண்ணத்துப் பூச்சி, தவளையைப் பொறுத்தவரை இந்த வளர்ச்சி, உடல் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. புழுவாக கூட்டில் வாசம் செய்ய ஆரம்பித்தாலும், வண்ணங்கள் நிறைந்த இறக்கைகளுடன் பூச்சியாக வெளியே வருகிறது. கால்களில்லாமல், நீரில் நீந்திவந்த தலைப்பிரட்டை, நீரிலும், நிலத்திலும் வாசம் செய்யவும், நீந்தவும், தவ்விச் செல்லவும் கால்களோடு தவளையாக வளர்வதும் பிரமிக்க வைக்கும் அதிசயம்தான். இந்த மாற்றத்தில், வளர்ச்சியில் ஒரு நோக்கம், முழுமை தெரிகிறது. என் உடல் வளர்ச்சியில், மாற்றத்தில் இந்த மாதிரி பிரமிக்க வைக்கும் விதமாக மாற்றம் வந்ததில்லை. அதே சமயத்தில் இது வரை அனுபவித்து, உணர்ந்து, அறிந்து கொண்ட விஷயங்களை, என் அறிவில், மனதில் வந்த வளர்ச்சியை சற்று பின் தள்ளி நின்று மொத்தமாகப் பார்க்கையில் நிச்சயம் பிரமிப்பு வருகிறது. இன்னமும் வளர வேண்டும் என்கிற உந்துதலும் இருக்கிறது.

குழந்தையாக இருக்கையில் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் வயது ஆக ஆக மாறுகின்றதோ, அதே போன்ற மாற்றம் வளர்ச்சிக்கும் வருகின்றது. இந்த மாற்றம் ஒரு விதமான இழப்பை ஒத்திருக்கிறது. எப்படி வண்ணத்துப்பூச்சி புழுவை இழக்கிறதோ, தவளை தலைப்பிரட்டையை இழக்கிறதோ, அதே போல நானும் என் வளர்ச்சியில் நிறைய இழந்திருக்கிறேன். அறிவால், அறியாமையை, அந்த அறியாமை தந்த வெகுளித்தனத்தை இழப்பதையும் இந்த வகையில் சேர்க்கலாம்.

யோசித்துப் பார்க்கையில் இழப்பதற்கு தைரியம் இல்லாத போது வளர்ச்சிக்கான வாய்ப்பும் குறைகிறது. முதன் முதலில் பள்ளியில் விட்டு விட்டு அம்மா வீடு திரும்பிச் சென்றவுடன் மனதில் வந்த பயம் தொடர்ந்திருந்தால், படிப்பு என்பதே ஒரு மாதிரியாகத் திரும்பியிருக்கும். வாழ்தலுக்கும், வளர்தலுக்கும் இந்த 'இழக்கும் தைரியம்' ஒரு முக்கியமான வித்தியாசம் என்று கருதுகிறேன். 'வாழ வேண்டும்' என்று நோக்குகையில் இம்மாதிரியான 'இழக்கும் தைரியம்' தேவையாயிருக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு. ஆனால் வளர்வதற்கு இது தேவையான ஒன்றாகி விடுகிறது.

சுற்றுப்புற சூழ்நிலைகள் காலப் போக்கில் மாறிக் கொண்டே வருகிறது. இது வரை கற்ற கல்வியும், திறனும், அறிவும், காலம் முடியும் வரை துணைக்கு வரும் என்று முடிவெடுத்து நிறுத்திவிட முடியாது என்று தோன்றுகிறது. இவை வளரவில்லை என்றால் வாழ்தலும் பாதிக்கப்படும். அதனால் வளர்ச்சி என்பது எனக்கு மட்டுமல்ல, என் சந்ததிக்கும் அத்தியாவசமாகி விடுகிறது. இந்த வளர்ச்சியில் என்னுடைய ஆக்கபூர்வமான சம்பந்தம், முடிவுகள் பெரும் பங்கு வகிப்பதால், “வளர்தல்” என் இலக்குகளில் ஒன்று.

மேலும் அடுத்த வாரம்.

வெள்ளி, பிப்ரவரி 11, 2011

இலக்கு - 2

இலக்கு - 2

அதே குழந்தை பசி நீங்கியபின் தெரிவிக்கும் உணர்வு சந்தோஷம் - சிரிப்பின் மூலமாக. வளர வளர பசி நீங்கியதால் மட்டும் அது சிரிப்பதில்லை. ஒரு கிலுகிலுப்பை, பொம்மை என்றெல்லாம் அதன் தேவை வளர ஆரம்பிக்கிறது. யோசிக்க, பேச தெரிய ஆரம்பிக்கும் முன்னமே, பசி நீங்கியவுடன் வேறெதையோ தேட ஆரம்பிக்கும் தன்மை வந்து விடுகிறது. தன்னைத் தூக்கி கொஞ்ச வேண்டும், பாட்டு கேட்க வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டுக் கேட்கத் தொடங்கும் முன்னமே அதன் புலன்களுக்கு சுகம் தரும் விஷங்களைத் தேடத் துவங்குகிறது. இந்த 'சுகம் தேடல்' புலன்களில் ஆரம்பித்தாலும், வளர வளர புலன்களைத் தாண்டி, சிந்தனை, நினைப்பு போன்ற மனது/மூளை சம்பந்தப்பட்ட சமாசாரங்களையும் உள்ளடக்க ஆரம்பிக்கிறது. இந்த மாதிரி 'சுகம் தேடல்' தேவைகளின் பூர்த்தியில் கிடைக்கும் உணர்வை "மகிழ்ச்சி" என்று சொல்லலாம்.

மகிழ்ச்சியின் முதலாவது நிலை புலன்கள் தெரிவிக்கும் உணர்ச்சிகளால் வரும் சுகம், இதம். பண்டைய நூல்களில் நம் உடம்பின் ஐந்து புலன்களை ஞானேந்திரியம் என்றும் (செவி, கண், மூக்கு, நாக்கு, மெய்), இந்தப் புலன்கள் மூலமாக அறியப்படும் உணர்வுகளை தன்மாத்திரை (சப்தம், ரூபம், கந்தம், ரசம், ஸ்பரிசம்) என்றும் குறிப்பிடுகிறார்கள். ஞானேந்திரியங்களின் வேலை, எந்தப் பொருளையும், தன்மாத்திரைகளாக விவரித்து மூளைக்கு அனுப்புவதுதான். ஒரு உயிருக்கு ஒரு சமயத்தில் எந்த தன்மாத்திரை இதம் அளிக்கிறதோ, அதுவே 'மகிழ்ச்சியின்' காரணமாகிறது. சிலருக்கு சில புலன்களின் உணர்ச்சி தரும் சுகம், மற்ற புலன்களின் உணர்ச்சிகளால் வரும் சுகத்தை விட அதிகமாக இருக்கும்; அதனால் முக்கியத்துவமும் மாறலாம். சிலருக்கு சங்கீதம், சிலருக்கு சாப்பாடு - சந்தோஷம் எதில் தான் வரும் என்று சொல்ல முடியாது! இந்த சுகங்களில் ஒன்று பெரியது மற்றொன்று சிறியது என்றெல்லாம் தரம் பிரிக்க முடியாது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது "மகிழ்ச்சி" என்பது ஒரு கூட்டுப் பொருள் - இதற்கு புலன், புலனுக்கு இதம் தரும் மற்றொரு பொருள், புலனின் உணர்வைப் புரிந்து கொண்டு ரசிக்கும் மனம்/மூளை, என்று மூன்றும் சேர்ந்தால் தான் மகிழ்ச்சி. இந்த மூன்றும் ஒருவருக்கு எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதே போல இந்த மூன்றும் இரண்டு மனிதர்களுக்கு ஒன்றே போல இருப்பதில்லை. ஒவ்வொருவரைப் பொறுத்து இது மாறுபடும். சிறுவயதில் மன்னார்குடியில் கோடையில் பனிக்கட்டியைக் கையில் எடுக்கையில் வந்த சுகம், மகிழ்ச்சி இப்போது முழங்கால் அளவு பனியை வீட்டு வாசலில் இருந்து எடுத்துப் போடுகையில் எனக்கு நிச்சயமாக இல்லை!

இந்த முதல் நிலை மகிழ்ச்சியிலும் இரு பிரிவுகள். ஞானேந்திரியம் நேரடியாக சம்பந்தப்பட்டுத் தரும் தன்மாத்திரை மகிழ்ச்சி - ஒரு பிரிவு, ஞானேந்திரியம் நேரடியாக சம்பந்தப்படாத மகிழ்ச்சி - மற்றொரு பிரிவு. சுருக்கமாக சொல்லப்போனால், ஞானேந்திரியங்களின் நேரடியான துணையில்லாமல் தன்மாத்திரைகள் தரும் இதத்தை மூளை அடைந்தால் வரும் மகிழ்ச்சி, முதல் மகிழ்சியின் ஒரு மாறுபட்ட பிரிவு. உதாரணமாக நல்ல பாட்டைக் கேட்கையில் வரும் மகிழ்ச்சி முதலாம் பிரிவு - காது கேட்டு, பொருள் புரிந்து, மனம் மகிழ்கிறது. இரவு படுக்கையிலே விளக்கணைத்து விட்டு, உறக்கம் வரும்முன், கேட்ட பாட்டில் மனதைக் கவர்ந்த இடங்களை நினைத்துப் பார்த்து மகிழ்வது இரண்டாம் பிரிவு. காது கேட்பதற்கு பாட்டு இல்லையென்றாலும், கேட்ட போது ஏற்பட்ட உணர்வை மனது/மூளை நினைவாலே வரவழைக்கிறது. ஞானேந்திரியம் நேரடியாக சம்பந்தப்படாத தன்மாத்திரை உணர்வு!

நேரடியாக சம்பந்தப்படாது போனாலும், ஞானேந்திரங்கள் இல்லாமல் தன்மாத்திரை பற்றி மூளை தாமாக அறிய முடியாது. தன்மாத்திரை உணர்வை மூளை அடைய வேண்டுமானால் ஞானேந்திர்யங்கள் அவசியம் தேவை. நினைப்பாலே மூளை தன்மாத்திரை தரும் உணர்ச்சியை புதிதாக உண்டு பண்ண முடியாது; ஏற்கனவே அனுபவித்திருந்த ஒரு உணர்வின் நினைப்பிலிருந்துதான் உருவாக்க முடியும். ஞானேந்திரியம் இல்லையென்றால் தன்மாத்திரையும் இல்லை. இந்த ஞானேந்திரியங்கள், அவை உணரும் பொருள்கள் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன - ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை - ஒரு உயிருக்கு. இந்த சம்பந்தம் பற்றி நான் எழுதிய ஒரு கவிதை இங்கே:

வண்ணமிங்கு இலையென்றால் பார்வை தேவையில்லையே
பார்வையிங்கு இல்லையென்றால் வண்ணமுந்தான் இல்லையே

சப்தமிங்கு இலையென்றால் செவியின் தேவையில்லையே
செவியுமிங்கு இல்லையென்றால் சப்தமுந்தான் இல்லையே

வாசமிங்கு இலையென்றால் நாசியின் தேவையில்லையே
நாசியிங்கு இல்லையென்றால் வாசமுந்தான் இல்லையே

சுவைகளில்லை என்றுபோனால் நாவின் தேவையில்லையே
நாவுமிங்கு இல்லையென்றால் சுவைகளுந்தான் இல்லையே

தீண்டப்பொருளும் இல்லையென்றால் உணர்வின் தேவையில்லையே
உணர்வும் அற்றுப்போனாலே தீண்டுதலிங்கே இல்லையே

மகிழ்ச்சியின் இரண்டாவது நிலை எந்தப் புலனுமே சம்பந்தப் படாத - வெறும் நினைவு/மூளை/மனது சம்பந்தமான விஷயம். அதாவது, தன்மாத்திரை தாண்டிய சுகம், மகிழ்ச்சி. உதாரணம் - ஒரு கடினமான புதிரை மனதினுள் ஆராய்ந்து, விடை கண்டுபிடிக்கையில் வரும் மகிழ்ச்சி. ஒருவிதத்தில் இது வசதியான மகிழ்ச்சி - காரணம் இதிலிருக்கும் சுதந்திரம். புலன்கள் தாமாக மகிழ்சியைத் தர முடியாது - அதற்கு இதம் தரும் பொருளும் வேண்டும். பொருள் மட்டும் இருந்தால் போதாது, அதை உணரும் புலனும் வேண்டும். ஆனால் மனதிலே நினைவாலே தோன்றும் மகிழ்ச்சிக்கு நம் நினைவு, மனம் மட்டும் போதும்.

சிவவாக்கியர் சொன்ன சொல் நினைப்புக்கு வருகிறது:
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே!

இந்த முக்கியத்துவம் மாறுபட்டாலும், சுகத்தை, மகிழ்ச்சியை மொத்தமுமாகத் துறந்தவர்களை நான் பார்த்ததில்லை. புலன்கள் சம்பந்தப்படாத மனது, நினைவு தொடர்பான சுகங்களை அறிந்து கொள்ள ஆரம்பிக்கையில், புலன்கள் சம்பந்தமான தேவைகளில், சுகங்களில் செலவிடும் நேரம் குறைகிறது. இருந்தாலும் இந்த "மகிழ்ச்சி தேடுதல்” (சுருக்கமாக “மகிழ்தல்” என்று அழைக்கலாம்) இறப்பு வரை ஒருவருக்கு உந்துதலாக இருக்கிறது.

இதனால் என்னளவில் "மகிழ்தல்" வாழ்வின் இரண்டாம் இலக்கு. இதைப் பற்றி மேலும் அடுத்த வாரம்.

இலக்கு - 1

வெள்ளி, பிப்ரவரி 04, 2011

இலக்கு - 1

இலக்கு - 1

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான இலக்குகள் இருக்கலாம்; இருக்கின்றன. தினசரி வாழ்க்கையில் அன்றாட காரியங்களில் ஆரம்பித்து (ஏழு மணி வண்டி பிடிக்க வேண்டும்) வார/மாத/தொலைநோக்கு பார்வைவரை (ஒருமுறையாவது தாஜ்மகால் பார்க்க வேண்டும்), பல விதமான இலக்குகள். ஆனால் மொத்த வாழ்க்கைக்கும் இலக்கு என்ன என்று யோசித்தால் வெகு சிலருக்கே விடை கிடைக்கிறது. இதிலும் இரு நிலைகள் - என் ஒருவனுடைய வாழ்விற்கு என்ன இலக்கு? மொத்த மனித வர்க்கத்திற்கு/பிறவிக்கு ஒரு இலக்கு உண்டா? அல்லது இந்த வாழ்க்கை என்பது இலக்கற்ற, ஒருவிதமான வேதியல், உயிரியல் சம்பந்தப்பட்ட பரிணாம வளர்ச்சி மட்டும்தானா? நாளாக நாளாக கேள்விகள், அதுவும் சமீபகாலத்தில் இந்த மாதிரிக் கேள்விகள் தொடர்பான யோசனைகள் அதிகமாகி விட்டன. இதை மத்திய வயதுப் பிரச்சனை – mid life crisis – என்று கருதி ஒதுக்க முடியவில்லை. இந்தத் தொடரில் என் யோசனையில் தோன்றிய எண்ணங்களை, பிரதிபலிப்புகளைப் பதிய உத்தேசம்.

உயிர் வாழத் தேவையான விஷயங்கள் (காற்று, உணவு போன்ற சமாசாரங்கள்) இல்லை (அல்லது குறைவு) என்றால் இந்த 'இலக்கென்ன?' கேள்விக்கு விடை எளிது. அந்த மாதிரி சமயங்களில் வாழ்க்கையின் இலக்கு 'உயிர் வாழத் தேவையான விஷயங்களைப் பெறுவது'. எப்போது ஒரு விஷயம் 'தேவை' என்று நினைக்கிறோமோ அப்போது அது இலக்காகிறது. இந்த தேவைகளைப் பற்றி மாஸ்லோ என்பவர் ஒருவிதமான வகைப்படுத்திய சித்தாந்தத்தைச் சொல்ல, அதைப் பற்றி நிறையப் பேர் எழுதிவிட்டார்கள். இதில் அந்த சித்தாந்தம் சரி என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்; சரியல்ல என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்! தேவைகளை இந்த மாதிரி வகைப்படுத்துவதில் எனக்கு அதிக நாட்டமில்லை. வகைப்படுத்துவதால் புரிந்து கொள்வது எளிதாக இருந்தாலும், இந்த வகைகள் எல்லொருக்கும் தொடர்ச்சியாக வருவதாகத் தோன்றவில்லை. தேவைகளை இந்த மாதிரி வகைப்படுத்துவதற்கு பதிலாக மனதில் தோன்றும் உணர்வுகளை வைத்து விவரித்தால், 'இலக்காக எதை நினைக்கிறோம்' என்பது புரிபடலாம்.

குழந்தையாய் பிறக்கையிலே இருக்கும் உணர்வுகள், வளர்ந்து மனிதனாக மாறுகையில் நிச்சயமாக மாறுபடுகின்றன. குழந்தையாய் இருக்கையிலே பசிக்காக அழுவது இயல்பாக வருகிறது. குழந்தைக்கு தேவை என்ன என்று பகுத்தறிந்து சொல்ல வராவிட்டாலும், அதன் உடலில், மூளையில் இருக்கும் இயல்பான செயல்பாடு அழுகையை வரவழைத்து தனக்கு வேண்டிய தேவையை ஒருவிதமாய் தெரியப் படுத்துகிறது. இந்த பசி விஷயம் பிறந்ததில் ஆரம்பித்து, இறக்கும் வரை தொடர்கிறது - இதனால் ஒரு விதத்தில் முதல் இலக்காக, தேவையாக, 'பசி' வந்து விடுகிறது. இங்கே பசி என்பதை 'உணவுத் தேவை' என்பதோடு மட்டும் நிறுத்தாமல், உயிர் வாழ அத்தியாவசியமான எல்லாவிதமான தேவைகளையும் - காற்று, நீர் உட்பட - உணர்த்தும் விதமாகவே உபயோகிக்கிறேன். இதனால் என் கருத்தில் “பசித் தேவை பூர்த்தியே” முதலாவதாக வரும் இலக்கு!

குழந்தை வளர வளர சுற்றுப்புற சூழ்நிலைகள் புரிய ஆரம்பிக்கின்றன. தன் உடலுக்கு எதெது தீங்கு விளைவிக்கும் என்றும் புரிய ஆரம்பிக்கிறது. பசிக்கு பால் தேவை, ஆனால் பால் சூடாக இருந்தால் ஒரு உறிஞ்சலுக்குப் பிறகு நிறுத்திவிடத் தெரிகிறது. வாழ்க்கையில் உடலுக்கும், உயிருக்கும் வரக்கூடிய அபாயங்கள் புரியப் புரிய அந்த அபாயங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற தேவையும் தெரிய ஆரம்பிக்கிறது. இவைகளை தனியாக வகைப்படுத்தாமல் 'பசித் தேவை பூர்த்தி'யின் ஒரு பாதியாகவே கருதுகிறேன். எப்படி தேவை என்று கருதி "சேர்க்க வேண்டியவை" பட்டியலிட ஆரம்பிக்கிறோமோ, அதே போல "சேர்க்கக் கூடாதவை" என்று ஒரு பட்டியலும் தயாரிக்க ஆரம்பிக்கிறோம்.

இந்தப் பட்டியல் வாழ்க்கையில் நம் அறிவும் அனுபவமும் வளர வளர பெரிதாகிக் கொண்டே வருகிறது. சேர்க்க வேண்டியது - உணவு; விலக்க வேண்டியது - விஷம்; என்ற ரீதியில் உடல், உயிர் காக்கும்/ தாக்கும் சமாசாரங்களை நம் அறிவு நினைவில் தேக்க ஆரம்பிக்கிறது. உடலுக்கும், உயிருக்கும் வரும் அபாயமெல்லாவற்றையுமே 'விலக்க வேண்டியவை' என்ற பட்டியலில் சேர்க்கலாம். ஒரு தேவையை முழுதாகப் புரிந்து கொள்ள சேர்க்க வேண்டியதைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது; விலக்க வேண்டியவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். சேர்ப்பதும், விலக்குவதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. உணவு சேர்க்க வேண்டியவை பக்கம் இருந்தாலும், அளவு அதிகமானாலோ, தரம் குலைந்து போனாலோ அதே உணவு விலக்க வேண்டியவை பக்கம் தானாக சென்றுவிடும். வளர வளர இந்த "பசித் தேவை பூர்த்தி" இலக்கு மாறாவிட்டாலும், இந்தத் தேவையின் புரிதல் பெரிதாகி முழுமையை நோக்கி வளர்கிறது. இந்தப் புரிதல் இறக்கும் வரை தொடர்கிறது. இதையே "வாழ வேண்டும்" அல்லது சுருக்கமாக "வாழ்தல்" என்றழைக்கலாம்.

இறைவன் (அல்லது இயற்கை) வீணாக எதையும் செய்வதாகத் தோன்றவில்லை. ஒரு உயிரைப் பிறக்க வைத்ததற்கும் ஏதாவது காரணம் இருக்க வேண்டும். அதனால் இந்த வாழ்க்கை என்பது இலக்கற்ற, ஒருவிதமான வேதியல், உயிரியல் சம்பந்தப்பட்ட பரிணாம வளர்ச்சி மட்டும்தான் என்று எண்ணி வாழ முடியவில்லை. என் பிறப்பின் காரணம் தெரியவில்லை. அந்தக் காரணம் தெரிந்தால் இவ்வாழ்கையின் முக்கியமான இலக்கும் தெரிந்துவிடும். அந்தக் காரணம் தெரியும் வரை, பிறந்த அந்த உயிரை தொடர்ந்து வாழ்ந்திருக்க என்ன தேவையோ அதுவே முதல் இலக்காகிறது. அதனால் என்னளவில் முதல் இலக்கு "வாழ்தல்"!

முன்பு எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள்:

இலக்கை நோக்கிப் பயணித்தேன்
பயணத்தில் வந்தது தெளிவு
இப்போது பயணமே இலக்கு!

அடுத்த வாரம் தொடர்கிறேன்.