ஞாயிறு, டிசம்பர் 31, 2006

ஒரு இரயில் பயணத்தில் - 3

“அப்படி இப்படின்னு 2006 முடிஞ்சு போச்சு. இந்த வருஷத்திலதான் எத்தனை மாற்றம். வருஷ ஆரம்பத்துல டெஸ்ட்ல ஹாட்ரிக் எடுத்த பதான் வருஷ முடிவுல டெஸ்ட் டீம்லேயே காணோம். சென்னையில, பங்களூரில வருஷ ஆரம்பத்தில ஆட்சி செஞ்சவங்க இப்ப இல்ல. நாம கூட வருஷ ஆரம்பத்துல அமெரிக்கா வருவோம்ன்னு நினைக்கல. இப்ப என்னடான்னா குளிர்ல நியூயார்க்ல எக்கச்சக்கத்துக்கு துணி போத்திக்கிட்டு வேலைக்கு ஓடறோம். ”

“நிறைய விஷயம் மாறவே இல்லையே. பதான் இருந்த அந்த டெஸ்ட்லயும் தோல்வி; இல்லாத வருஷக் கடைசி டெஸ்ட்லயும் தோல்வி. வருஷ ஆரம்பத்துல கர்நாடகாவோடதான் தண்ணிச் சண்டை; இப்போ கேரளாவோட கூட. எனக்கு வருஷ ஆரம்பத்துல இருந்த கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை"

“அப்படி என்ன சந்தேகம் உனக்கு?”

“குழந்தை பிறந்ததும் பெற்றவங்களை அம்மான்னு கூப்பிடறோம். இதே முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் வகையில், முட்டை இட்டவுடன் அம்மாவாகுமா இல்லை முட்டை பொரிஞ்சு குஞ்சு வந்தவுடன் அம்மாவாகுமா? அதே மாதிரி முதலில் இட்ட முட்டையிலிருந்து வருவது அண்ணா/அக்காவா இல்லை முதலில் பொரியும் முட்டையில் இருப்பது அண்ணா/அக்காவாகுமா?”

“மூளையை எதுக்குத்தான் செலவழிக்கறதுன்னு உனக்கு புரிய மாட்டேங்குது. இப்போ இது ரொம்ப முக்கியமா? ஒரு வருஷமா இந்தக் கேள்வியத்தான் யோசிச்சியா?”

“தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லு; அதை விட்டுட்டு ஏன் கேள்வி கேட்கிறேன்னு விதண்டாவாதம் பண்ணாதே”

“தெரியலைப்பா; ஆளை விடு. எனக்கு வர சந்தேகம், கேள்வியெல்லாம் இல்லாத ஒண்ணைப் பத்தி யோசிக்கிற விதம் இல்லை. இருக்கிற விஷயங்களிலே வர கேள்விக்கே உனக்கு பதில் தெரிய மாட்டேங்குது. இந்த அழகுல - முட்டை வந்தா அம்மாவா? முட்டை பொரிஞ்சா அம்மாவா? - இப்படி ஒரு கேள்வி”

“நீ அப்படி என்ன கேள்வி கேட்டே எனக்கு பதில் சொல்ல வராத மாதிரி?”

“பாட்டுல ராகம் எப்படி கண்டு பிடிக்கறதுன்னு கேட்டேன்ல? நீ என்ன சொன்ன?”

“உனக்கு பாடிக் காமிச்சு, என் MP3 ப்ளேயரும் கொடுத்து கேட்கச் சொன்னேனே? இன்னுமா விளங்கல?”

"இப்படித்தான் நீ சொல்லிட்டுப் போயிடுவே. உன்னை நம்பி, உன் MP3 ப்ளேயர்ல ஒரே ராகத்துல இருக்கற பாட்டா செலக்ட் பண்ணி கேட்டேன். எல்லாப் பாட்டும் வித்தியாசமாத்தான் இருக்கு - ரெண்டு பாட்டு கூட ஒரே மாதிரி தெரியலே"

"என்ன ராகத்துல கேட்டே?"

"ராகமாலிகா. உங்கிட்ட இருக்கிறதுல அதிகமான பாட்டு அந்த ராகத்துல தான் இருக்கு. ராகமாலிகா ராகம் ரொம்ப பாப்புலரா?”

"தெரியலேன்னா கேட்டுத் தெரிஞ்சுக்கணும். இப்படி லூசாட்டம் ஏதாவது சொல்லக்கூடாது. ராகமாலிகா ராகம் இல்ல. அது நம்ப ஊர்ல சொல்ற கதம்ப மாலை மாதிரி. கதம்பம்ன்னு பூ கிடையாது. நிறைய பூக்களை கலந்து மாலையா கட்டினா கதம்பம். அதே மாதிரி நிறைய ராகங்களை உபயோகிச்சு ஒரு பாட்டு பாடினா அது ராகமாலிகா"

"ஓகோ - காலைல குடிக்கிற பஞ்ச் மாதிரியா? பஞ்ச்ன்னு ஒரு பழம் கிடையாது - ஆனா பஞ்ச்க்குள்ள நிறைய பழரசம் – சரிதானே?"

"உனக்கு சாப்பாட்டு உதாரணம் தான் கொடுக்கணும். சரி பஞ்ச் இல்ல கதம்ப சாதம் மாதிரின்னு வச்சுக்கோயேன். பாட்டுல இருக்கிற வெவ்வேறு பகுதியை வெவ்வேறு ராகத்துல பாடினா அது ராகமாலிகா."

"ஆமா - 'ராகம்: ராகமாலிகா' அப்படின்னு போட்டா வேற என்னன்னு நினைச்சுக்கிறது. பேசாமா ‘கதம்பம்’ன்னு போடலாம்ல? இதெல்லாங்கூட என்னை மாதிரி ஒரு அறிவுஜீவி வந்து தான் சொல்ல வேண்டியிருக்கு. நீ என்னடான்னா, முதலில் வந்த முட்டை அண்ணாவா, இல்லை முதலில் பொரிஞ்ச முட்டை அண்ணாவான்னு கேள்வி கேக்கற!"

“யோசிச்சுப் பாரு மனுஷங்க மட்டும் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் வகையா இருந்திருந்தா எத்தனை குழப்பம், கேசு வந்திருக்கும்?"

“ஏன் இந்தக் கேள்வியோடு நிறுத்திட்டே? மனுஷனுக்கு கொம்பு முளைச்சா எப்படி இருக்கும்? அப்படின்னு ஆராய்ச்சி பண்ண வேண்டியதுதானே?”

“அதைப் பத்தியும் யோசிச்சிருக்கேனே. கொம்பை வளர்க்கலாமா இல்லையா என்பதில ஒவ்வொரு மதமும் ஒவ்வோண்ணு சொல்லும் - சில பேர் கொம்பு சாத்தானோட வடிவம்ன்னு சொல்லி வெட்டிப்பாங்க, சிலர் அது ‘கடவுள் தந்தது; வெட்டக்கூடாது’ அப்படின்னு சொல்லி வளர்ப்பாங்க. ஒரு மதம் கொம்பை மூடணும்ன்னு சொல்லும், இன்னொரு மதம் கடவுள் தந்ததை மூடக்கூடாதுன்னு சொல்லும். மதச் சண்டைகள் வருவதற்கு இன்னுமொரு காரணம் கிடைக்கும்.

சிலர் கொம்புக்கு நெயில் பாலிஷ் மாதிரி கொம்பு பாலிஷ் போட்டுப்பாங்க. சிலர் கொம்புக்கு தங்கம், வெள்ளில நகை பண்ணிப் போட்டுப்பாங்க. தொப்பி வகையில நிறைய மாற்றம் வரும்; விளையாட்டுகளில், முக்கியமா ரக்பில, ஹெல்மெட் வித்தியாசமா இருக்கும். ஸ்பெயின்ல மாட்டைக் கத்தியால குத்தி கொல்றத்துக்கு பதிலா, கொம்பால முட்டிக் கொல்லும் விளையாட்டு வரலாம். பேப்பர்ல 'கொம்பால் குத்திக் கொலை'ன்னு தலைப்பு வரும்.”

"எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். உன்னைப் போய் கேள்வி கேட்டேனே! நல்ல வேளை ஸ்டேஷன் வந்தாச்சு. இறங்கலாம் வா."

செவ்வாய், டிசம்பர் 26, 2006

ஒரு இரயில் பயணத்தில் - 2

"சும்மா சொல்லக்கூடாது, இந்த குளிர் விடுமுறையும், சின்ன வயசில நாம பள்ளியிலே படிக்கறச்சே அனுபவிச்ச கோடை விடுமுறை மாதிரி நல்லாவே இருக்கு"

"ஆமா. ரயில்ல உட்கார இடம் கிடைக்குது; அலுவலகத்தில ஆள் இல்ல. என்ன எக்கச்சக்கமா கோட், மப்ளர், ஸ்வெட்டர்ன்னு ஒரு குட்டி பீரோ துணி போட்டுக்கிட்டு போக வேண்டியிருக்கு"

"ரொம்ப அலுத்துக்காதே. வெள்ளிக்கிழமை மீட்டிங்ல என்ன சொன்னாங்க?"

"ஆங் - சொல்ல மறந்துட்டேனே. இந்த வார மீட்டிங்ல பாதுஷா சூப்பர்!"

"என்ன சொன்னாங்கன்னுதானே கேட்டேன்; என்ன மென்னாங்கன்னா கேட்டேன்? அது சரி உனக்கு சாப்பாட்டப் பத்தி யோசிக்காம இருக்க முடியாதே. டோனட்ன்னு சொல்லேன்; பாதுஷாவாம்!"

"இரண்டையும் ஒரே மாதிரி தான் செய்யறாங்க. என்ன பாதுஷா கொஞ்சம் வெயிட்டா இருக்கும்; டோனட் கொஞ்சம் லேசு. எதோ நட் போல்ட திங்கறா மாதிரி சொல்ல வேண்டாமேன்னு பாதுஷான்னு தமிழ்ல சொல்றேன். மீட்டிங்ல ஒண்ணும் பெரிசா சொல்லல. வழக்கம் போல 'ஹாப்பி ஹாலிடேஸ்; சீ யூ இன் த நியூ இயர்' அப்படின்னு சொன்னாங்க. ஏன் கேக்கற?"

"இல்ல செலவக் குறைக்க நம்ம மாதிரி கான்ட்ராக்டருக்கெல்லாம் கட்டாய விடுமுறை தரப் போறாங்கன்னு ஒரு வதந்தி இருந்தது"

"என்னடா அக்குறும்பு. இவங்களுக்குத்தானே பண்டிகை; நமக்கு இல்லையே? நமக்கு ஆபீஸ் வந்தாத்தானே துட்டு?"

"அதான் தெரியுமே. ஆபீஸ்ல இவங்க ஆளே இருக்கறதில்லே; நம்மை மாதிரி கான்ட்ராக்டர் வேலை செய்யாம சம்பளம் வாங்கறதப் பார்க்க பொறுக்கலே!"

"அவ்வளவு சந்தேகமா இருந்தா இவங்கள்ல நாலு பேர் வேலைக்கு வரட்டுமே. நானா வேணாங்கறேன்?"

"சரி அதை விடு. இந்த வருடம் இந்த மாதிரி ஏதும் பண்ணலை. அடுத்த வருடம் நாம் இங்க இருக்கமோ இல்லையோ!"

"இன்னுமொரு முக்கியமான விஷயம். அடுத்த மீட்டிங்ல இருந்து 'சுகர் ப்ரீ' சாமானும் இருக்குமாம்! நம்ம டிப்பார்ட்மென்ட்ல புதுசா வந்திருக்கற மக்கள்ல யாருக்கோ சுகர் இருக்காம். கேட்டவுடனே இனிமே பத்திய மீட்டிங்தானோன்னு கொஞ்சம் பயந்துட்டேன். அதனாலே நைசா விசாரிச்சுட்டேன்; நல்ல வேளை சக்கரை சாமானும் உண்டு."

"என்னதான் இருந்தாலும் இந்த ஊரிலே எல்லாரையும் அனுசரிச்சுத்தான் போறாங்க. மற்றவங்களோட சாப்பாட்டுப் பிரச்சனைகளையும் யோசிக்கிறாங்க. அப்படி இருக்கறப்பவே, காப்பியை மேல கொட்டிக்கிட்டு கம்பெனி மேல கேஸ் போடறாங்க"

"கேஸ்னு சொன்னதும் நினைவுக்கு வருது. இங்கிலாந்துல ஒரு வேர்ஹவுஸ்ல வேல செஞ்ச மனுஷன் தலையில அடிபட்டிடுச்சாம். அதுக்கப்புறம் அந்தாளு பலான படம் பார்க்கறது, பொண்ணுங்கள டாவடிக்கறதுன்னு ஆரம்பிச்சுட்டானாம். இந்த மாதிரி பண்ணத்துக்கு காரணமே தலைல அடிபட்டதுதான், அதனால கம்பெனிதான் நஷ்ட ஈடு கொடுக்கணும்னு கேசும் போட்டு ஜெயிச்சுட்டானாம்"

"அடப்பாவி. இவன் டாவடிக்கறத்துக்கு இவன் காரணம் இல்லையா? இது மட்டும் நம்மூர் அரசியல் வாதிகளுக்கு தெரிஞ்சது, போச்சு. பண்ற அத்தனை அயோக்கியத்தனத்துக்கும் காரணம் நான் கீழ விழுந்து அடி பட்டுக்கிட்டதுதான் காரணம்னு சொல்லி தப்பிச்சுக்குவாங்க"

"ஏன் அரசியல்வாதிகளை மட்டும் சொல்ற. வீட்டில சின்னப்பசங்கள்ல இருந்து கிழங்கட்டை வரை எல்லோரும் ‘தலைல இடிச்சுக்கிட்டேன்; அதனால நான் காரணம் இல்லை’ன்னு சொல்லிக்கிட்டு எல்லா விதமான தப்பும் பண்ணுவாங்க"

"சரி அதை விடு. சுக்வீந்தர ஏன் பிராஜக்ட்லேர்ந்து எடுத்துட்டாங்க? இத்தனைக்கும் அவனுக்கு இங்க்லீஷ் நல்லா பேச/எழுத வரும்l தவிர அவனுக்கு ரிகொயர்மென்ட்டெல்லாம் நல்லாப் புரியுமே?"

"ஆனா கோடெழுத வரலையே? கோடும் எழுதாம, நல்லாவும் பேசினா இவனுக்கு கோடெழுத தெரியலங்கறது மத்தவங்களுக்கு நல்லா தெரிஞ்சுடுதே! நம்ம இர்பான் பதான் மாதிரி தான். போலிங் போட டீம்ல எடுத்தா 'நான் நல்லா பேட் பண்றேன்' அப்படின்னு சொன்னா வச்சுக்குவாங்களா?"

"சரி. ஸ்டேஷன் வந்தாச்சு, இறங்கலாம் வா."

ஞாயிறு, டிசம்பர் 24, 2006

படம் எங்கே போச்சு?

ஒவ்வொரு புது பெற்றோருக்கும் தன் குழந்தையை எப்படி ‘ஐடியலாக’ (IDEAL) வளர்க்க வேண்டும் என்று நிச்சயம் எண்ணம் இருக்கும். குழந்தை வளர்ந்து பெரிதாகும் போது அவர்களுடைய ‘வளர்க்கும் முறை’ அந்த ‘வளர்க்கும் தர’த்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். இரண்டு (அல்லது மூன்று/நான்கு) குழந்தைகளுக்குப் பின் இந்த ‘தரம்’ மொத்தமும் மாறியிருக்கும். எனக்கும் இந்த மாதிரி நிறைய விஷயங்களில் ஒரு ‘தரம்’ வைத்திருந்து அவைகள் மாறி வருவதைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். இது அவ்வளவு சுவையாக இல்லை. பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் சொன்ன பொன் மொழி நினைவுக்கு வந்து படுத்துகிறது: 'வாழ்க்கை என்பது அனேகம் பேருக்கு இலட்சியத்திற்கும் நடைமுறைக்கும் நடக்கும் சமரசம்.'

Real life is, to most men, a perpetual compromise between the ideal and the possible – Bertrand Russell.

‘சிறு வயதில் குழந்தைகள் தெரிந்து கொள்வது அவர்கள் கேட்கும் கேள்வியில்தான் உள்ளது; அந்த ஆவலை (CURIOSITY) தடை செய்யக் கூடாது, அவர்களுக்கு உண்மையான பதிலை சொல்வதன் மூலம் அவர்களுடைய அறிவை வளர்க்க முடியும்’, என்றெல்லாம் எனக்கு ஒரு தீர்மானமான எண்ணம். ஆதலால் என் மகள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு உண்மையான விளக்கம் தர வேண்டும், அரை குறை பதில் சொல்லி சமாளிக்கவோ, அல்லது கோபிக்கவோ கூடாது என்றும் அவள் பேச ஆராம்பிப்பதற்கு முன் உறுதியாய் இருந்தேன். இதற்கு சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது நான் அதிகம் கேள்வி கேட்கிறேன் என்று சில ஆசிரியர்கள் என்னை கேள்வியே கேட்கக் கூடாது என்று படுத்தியதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

என் மகள் சிறு குழந்தையாய் பேச ஆரம்பித்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தபோது முதலில் அதிகம் கேட்ட கேள்வி ‘எங்கே?’ என்பது தான். ‘ஏன்’ ‘எப்படி’ என்பதெல்லாம் பின்னால் தான் வந்தது. அவள் கேட்ட நிறைய ‘எங்கே?’ கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. முடியவில்லை என்பதில் இரண்டு வகை – ஒன்று எனக்குத் தெரியும் என்று நான் நினைத்துக் கொண்டு அவளுக்கு புரிகிற மாதிரி விடை சொல்ல ஆரம்பித்து, அவளையும் குழப்பி, நானும் குழம்பியது; மற்றொன்று எனக்கு விடையே தெரியாத கேள்விகள்!

உதாரணமாக 'சூரியன் எங்கே போச்சு?' என்ற கேள்விக்கு, விபரமாக பந்தை வைத்து பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றெல்லாம் சொல்ல ஆரம்பிக்க அவளைக் குழப்பி வெறுப்பேற்றியதுதான் மிச்சம். இது முதல் வகை.

இரண்டாம் வகையில் - அதாவது எனக்கு உண்மையில் விடையே தெரியாத வகையில், சில கேள்விகளுக்கு கொஞ்சம் பொய் கலந்து சொல்லி சமாளிக்க ஆரம்பித்தேன். வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கையில் சாலையில் போன காரைப் பார்த்து ‘கார் எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு உண்மையில் எனக்கு பதில் தெரியாது; இருந்தாலும் ‘வீட்டுக்கு போச்சு’ என்று சொல்வேன் (பொய்தான் – இருந்தாலும் பாதகமில்லை என்ற நினைப்பு). இது வானத்தில் பறக்கும் பறவைக்கும் (‘அது தன்னோட கூட்டுக்கு போச்சு’) பொருந்தும். அந்த சமயத்தில் உண்மையாக இல்லாவிட்டாலும் இந்த மாதிரி விடைகள் பொருத்தமானவையாகவே இருக்கும்.

இதிலேயே கடினமான கேள்விகளை என் மகள் கேட்க ஆரம்பித்த போதுதான் பிரச்சனையே வந்தது எனக்கு. வீட்டில் தொலைக்காட்சி பெட்டியை அணைத்தவுடன் ‘படம் எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை. என் மண்டைக்குள் அந்தக் கேள்வி இன்னமும் குடைந்து கொண்டிருக்கிறது. படம் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளி பரப்பப் படும் போது அலைகள் ரூபத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் பார்க்க எனக்கு தொலைக்காட்சி பெட்டி தேவை. நான் தொலைக்காட்சி பெட்டியை அணைப்பதன் மூலம் படம் இல்லாமல் போய் விடுகிறதா என்ன? இது பூனை கண்ணை மூடிக் கொண்டு விட்டால் உலகம் இருண்டுவிடும் என்பதைப் போல இருக்கிறது. ‘எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. என் மகளிடம் 'தெரியாது' என்று சொன்னால், நான் பதில் தெரிந்து கொண்டே அவளுக்கு சொல்லவில்லை என்று கோபம் - அழுகை. வழக்கம் போல் என் மனைவி ‘காணாமல் போச்சு’ என்று பதில் சொல்லி அவளை சமாதானப் படுத்தினாள். இருந்தாலும் எனக்கு இந்தக் கேள்வி ஒரு புரியாத புதிராகவே இன்னமும் இருக்கிறது. உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

இப்போதெல்லாம் என் மகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பை என் மனைவியிடமே விட்டு விட்டேன். இதே போல எனக்குள்ளேயே நிறையக் கேள்விகள் வர ஆரம்பித்துவிட்டன. உதாரணமாக இந்த வருடம் முடிந்து, அடுத்த வருடக் காலண்டரை மாட்டி, '2006 எங்கே போச்சு?' என்று யோசித்தால் பதில் கிடைக்கும் என்று தோன்றவில்லை. வயது ஆக ஆக எனக்குத் தெரியாதது அதிகமாவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. 'எங்கே?' கேள்விகளுக்கே இப்படி என்றால், 'ஏன்?' என்ற கேள்விக்கு நிச்சயமாக நான் அம்பேல்!!!

புதன், டிசம்பர் 20, 2006

ஓணான் வாயில் புகையிலை - ஏன்?

மன்னார்குடியில் பள்ளியின் பெரிய விளையாட்டு மைதானம் பள்ளிக்கு அருகில் இல்லாமல் கொஞ்சம் தொலைவில் இருக்கும். எல்லோரிடமும் சைக்கிள் இருக்காது; கிரிக்கெட் விளையாட மைதானத்துக்குப் போக வேண்டும் என்றால் நிறையப் பேர் கும்பலாக நடந்துதான் போவோம். சந்தடியான தெருவெல்லாம் தாண்டி, அதிகம் ஆள் நடமாட்டமில்லாத பாதையில் போகும் போது, சிலருக்கு ஒரு முக்கியமான விளையாட்டு ஓணானைப் பிடித்து, அதன் வாயில் கொஞ்சம் புகையிலையோ அல்லது கீழே கிடக்கும் பீடி/சிகரெட்டின் தூளையோ (அதுவும் புகையிலைதானே) போட்டு, ஓணான் தள்ளாடுவதைப் பார்ப்பது. இதை செய்யும் தைரியம் சிலருக்குத்தான் உண்டு; எனக்கு அதைப் பார்க்கக் கூட அவ்வளவாக வராது. கொஞ்சம் ஒதுங்கியே சென்று விடுவேன். அப்போதெல்லாம் தோன்றிய கேள்வி 'இதை ஏன் செய்கிறார்கள்?' என்பதுதான்.

நண்பர்களிடம் கேட்டால் வந்த பதிலெல்லாம் 'என் அண்ணன் செய்தேன் என்று சொன்னான்; நானும் அதேபோல விளையாடுகிறேன்' என்ற ரீதியிலேயே இருந்தது. அண்ணன்களைக் கேட்டால், அவர்களும் 'முந்தைய தலைமுறையில் செய்ததாக சொன்னார்கள்; அதான் நானும் செய்தேன்' என்றுதான் சொல்லுவார்கள். இருபது வருடங்களுக்கும் மேலாக பதில் தெரியாத இந்தக் கேள்விக்கு இந்த வாரம் எதிர்பாராத விதமாக ஒரு பதில் கிடைத்தது. அதைத்தான் இங்கு பதிகிறேன். இந்த பதில் எத்தனை தூரம் சரி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்தக் கதை ஆப்ரிக்கப் பழங்குடியினரிடமிருந்து வந்தது. ஸூலூ இன மக்களிடையே இந்தக் கதை பழங்காலந்தொட்டு சொல்லப்பட்டு வருகிறது என்று 1913-ல் வெளியான ‘The Belief in Immortality and the Worship of the Dead, Volume I’ என்ற புத்தகத்தில் சர் ஜேம்ஸ் ஜார்ஜ் ப்ரேசர் (Sir James George Frazer) சொல்லியிருக்கிறார்!

வெகுகாலத்துக்கு முன்னால் கடவுள் (உன்குலுன்குலு - UNKULUNKULU) பூமிக்கு ஒரு ஓணனை அனுப்பி மக்களிடையே அவர்கள் இறக்காமல் இருக்குமாறு சொல்லச் சொன்னாராம். ஓணானும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்ததாம். வழியிலே அங்கும் இங்கும் அலைந்து விட்டு பழங்களைச் சாப்பிட்டு படுத்துக் கொண்டிருந்ததாம். இதற்கிடையே கடவுளும் யோசித்து, ஒரு பல்லியையும் அனுப்ப, அது மக்களிடத்திலே வந்து ‘நீங்கள் இறக்குமாறு கடவுள் சொன்னார்’ என்று சொல்லியதாம். இகைக் கேட்ட மக்களும் இறக்க ஆரம்பித்தனராம். கொஞ்ச நாள் கழித்து ஓணானும் மெதுவாக வந்து ‘கடவுள் உங்களையெல்லாம் இறக்காமல் இருக்கச் சொன்னார்’ என்று சொன்னதாம். ஆனால் மக்களோ ‘உனக்கு முன்பாகவே பல்லி வந்து எங்களை இறக்கச் சொல்லிவிட்டது’ என்று சொல்லி – தொடர்ந்து இறக்க ஆரம்பித்தார்களாம். அவர்களுடைய சந்ததியினர் எல்லாம் இதனாலேயே தாமதமாக வந்த ஓணானைப் பழிவாங்க, அதன் வாயில் புகையிலையைப் போட்டு அதைத் துன்புறுத்துகிறார்களாம்.

நம் ஊரிலே மட்டும் தான் இந்த மாதிரி செய்கிறார்கள் என்று நினைத்தால், காலங்காலமாக ஆப்ரிக்காவிலும் இதே போல செய்திருக்கிறார்கள், மற்றும் ஒரு கதையும் இருக்கிறது என்பதைப் படிக்க ஆச்சரியமாக இருந்தது. உங்களுக்கு இது போல ஏதாவது கதை தெரியுமா?

வெள்ளி, டிசம்பர் 08, 2006

ஒரு இரயில் பயணத்தில்...

ரயிலில் நியூயார்க் வரும் போது கணிப்பொறித் துறையில் வேலை செய்யும் இரு தமிழ் பேசும் வாலிபர்கள் என் காதில் விழுகிற மாதிரி பேசிக் கொண்டு வந்த உரையாடல்.

“கொஞ்சம் முன்னாலேயே கிளம்பலாம்னு இதுக்குதான் சொன்னேன். இப்படி மூச்சு வாங்க ஓடி வரவேண்டாமில்லையா?”

“கொஞ்சம் வேகமா நடந்தாக் கூட ஒனக்கு மூச்சு வாங்கும்; ஒழுங்கா சாப்பிட்டாத்தானே?”

“சாப்பாட்டைப் பத்தி பேசி வெறுப்பேத்தாதே. அந்தக் குழந்தையைப் பாரு; நம்மைப் பார்த்து சிரிக்கிற மாதிரி இருக்கு”.

“அழகா இருக்குல்ல – அது சிரிக்கறச்சே. நல்ல ஆப்பிள் மாதிரி கன்னம்”

“மறுபடியும் சாப்பாடா? ஏன் கன்னத்தில 440-ஸ்டிக்கர் ஒட்டிருக்கா?”

“ஆங் – ஆப்பிள்ன்ன ஒடனே நினைவுக்கு வருது, சப்ஜி மண்டில இனிமே 440 வாங்க கூடாது – ஒரு பவுண்டு 99 சென்ட்; இருந்தாலும் ஆப்பிள் ஒரே மாவா இருக்கு. பவுண்டுக்கு 1.19 கொடுத்தாலும், 460 தான் வாங்கணும்”.

“எனக்கு தெரிஞ்சு கடையில இருக்கிற காஷியரத் தவிர இந்த லேபிள் ஸ்டிக்கர் எல்லாம் பார்க்கிற ஒரே ஆள் நீதாம்ப்பா. எப்படித்தான் சாப்பாட்டு விஷயத்தில மட்டும் இதெல்லாம் கரெக்டா நினைப்புல வச்சுக்கறயோ?”

“பின்ன – உன்னோட ஒரே ரூம்ல இருந்தா யாருக்குத்தான் சாப்பாடு விஷயம் மறக்கும். காலைல பிரேக் ஃபாஸ்ட்ன்னு சொல்லிட்டு, அரை டம்ளர் ஜூஸ் – அதுவும் எல்லாப் பழத்தையும் ஒண்ணா போட்டு கலக்கி கொடுக்கற பன்ச். அப்புறம் சீரியல்ன்னு சொல்லிட்டு சோளச் சீவல். கொஞ்சம் ஏமாந்தா வெறும் டப்பாவைக் காட்டியே அனுப்பிடுவே”

“கார்ன்பிளேக்குன்னு சொல்லேன் - சோளச்சீவல்ன்னு சொன்னா குழப்பமா இருக்குல்ல?”

“கார்ன்பிளேக்குன்னு சொன்னா ரொம்ப பெரிசா ஏதோ சாப்பிடறா மாதிரி தோணும். சோளச்சீவல்ன்னு சொன்னாத்தான் அது சாப்பிடப் பத்தாதுன்னு புரியும்”

“இங்க இருக்கப்போறது ஐந்து மாசமோ அல்லது ஆறு மாசமோ. கொஞ்சம் காசு சேர்த்தால் ஊருக்கு போய் செலவழிக்கலாம் இல்லையா?”

“அதுக்குன்னு இப்படியா? ஒரு டோஸ்ட், பேகல் இல்ல மப்பின் இப்படின்னு எதையாவது சாப்பிடலாம்ல”

“நீயும் நானும் சைவம். மத்தியானத்துக்கு காண்டீன்ல சான்ட்விச்னு இதே பிரட்டும், தக்காளி வெங்காயமும்தான். அதை காலையிலயும் சாப்பிடணுமா? சரி விடு. எப்பப் பார்த்தாலும் நீ சாப்பாட்டைப் பத்தி மட்டும் தான் யோசிக்கற. ஆமா நேத்து மத்தியானம் உன் சீட்டுக்கு வந்தப்போ நீ இல்லையே – ஓபியா?”

“அதெல்லாம் இல்லை, நம்ப சுக்வீந்தருக்கு கோடெழுத கொஞ்சம் ஹெல்ப் பண்ண போயிருந்தேன்”

“நீ அவனுக்கு கோடெழுத போனியா? நீயே காப்பி-பேஸ்ட் கேசு – சொந்தமா என்னிக்கு கோடெழுதியிருக்கே?”

“என்னோட பாலிசியே ‘DON’T REINVENT THE WHEEL’ தான். எவ்வளவு அழகா நான் ரீயூஸ் பண்றேன்?”

“ஆமா – எல்லாத்தையும் வகைக்கு தகுந்தா மாதிரி வோர்டுல காப்பி-பேஸ்ட் பண்ணி வச்சுருக்கே. அதைத் தவிர்த்து கூகுள்ல தேடி கோடு சேக்கற! கேட்டா ‘பெஸ்ட் பிராக்டீஸ் லைப்ரரின்னு’ பந்தவா சொல்றே. அதுவும் ஒரு பிளாஷ் டிரைவ்ல வேற. டிப் டாப்பா பேன்ட், சட்டை, கோட்டு. அவனவன் ஒனக்குத்தான் எல்லாந் தெரியும்ன்னு வந்து நிக்கறான். எல்லாம் நேரம்.”

“ஆள் பாதி ஆடை பாதின்னு நீ கேட்டதில்லையா? ஆமா நீ ஏன் ரெகுலரா ஷேவ் கூட பண்ணறதில்லை? காசு செலவாயிடுமின்னா? இல்ல காதல் தோல்வியா?”

“கிண்டலா? நான் ஷேவ் பண்ணாததற்கு ரெண்டு காரணம். ஒண்ணு குளிர் – காலங்கார்த்தால எவன் சில்லுன்னு தண்ணிய மூஞ்சில அப்பிக்கறது? இரண்டாவது – நீ சொன்ன மாதிரி ‘ஆள் பாதி ஆடை பாதி’ - வேலைக்கு ஏத்த ஒப்பனை”

“வேலைக்கு ஏத்த ஒப்பனையா?”

“ஆமா – நான் பண்றது டெஸ்டிங். ஒன்னை மாதிரி காப்பி-பேஸ்ட் கோடன்க கிட்ட போய் ‘நீ பண்ணது தப்பு’ன்னு சொல்லற வேலை! அப்ப போய் டிப்-டாப்ப ஷேவ், டிரஸ் பண்ணிக்கிட்டு ‘ஹாய்!, உன் கோடுல மிஸ்டேக்’ன்னு சொன்னா அவனவனுக்கு பத்திக்கும். அதுக்காகத்தான் நானே ரெண்டு நாள் தாடியோட போயி ‘தப்பு நடந்துடுச்சுன்னு’ சோகமா சொன்னா, என்னை திட்ட மாட்டானுங்க”

“ஏதோ இஷ்டத்துக்கு பீலா வுடரே – காலையில பாத்ருமுக்குள்ள போனா வர ஒரு மணி நேரம் ஆவுது வெளிய வர. ஆனா ஷேவ் பண்ண தண்ணி சில்லுன்னு இருக்குன்னு ரீல் விடர”

“சத்தமா பேசாத; அந்த சின்னப் பையன் நம்மையேபாத்து சிரிச்சுக்கிட்டு இருக்கான்”

“யாரு அந்த ஆப்பிள் கன்னமா”

“மறுபடியும் சாப்பாடா?”

ரயில் நியுவர்க் நிலையத்திற்கு வந்து சேர, அவர்கள் இருவரும் இறங்கினார்கள். மறுமுறை அந்த இருவரையும் பார்த்தால் சொல்கிறேன்.

புதன், டிசம்பர் 06, 2006

தேநீர் – 13

இந்த இறுதிப் பகுதியில் தேநீர் பற்றிய சில பொது விஷயங்களைத் தந்திருக்கிறேன். முதலில் வடுவூர் குமாரின் கேள்வி பற்றி.

இந்தியாவில் டீ ஏலம் நிலைநிறுத்தப்பட்ட ஒரு அமைப்பு. இந்த அமைப்பில் பங்கேற்க சில சட்ட திட்டங்கள் உண்டு – ஏலம் எடுப்போரும், டீயை விற்போரும் இந்த சட்ட திட்டத்திற்கு உட்பட்டே ஆக வேண்டும். யார் வேண்டுமானாலும் ஏலம் எடுக்கலாம், இந்த சட்ட திட்டங்களௌக்கு உட்பட்டு இருக்கும் வரை. ஏலம் எடுத்தவருக்கும், விடுபவருக்கும் சில பொறுப்புகள் உண்டு – ஏலம் விடுபவர், குறிப்பிட்ட அளவு தேயிலையை ஏலம் எடுத்தவருக்கு இத்தனை நாட்களுக்குள் (சாதாரணமாக 72 மணி நேரம்; ஏலம் எடுப்பவருடன் பேசி ஒத்துக்கொண்டால் இந்த கால நிர்ணயம் மாறலாம்) கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கனவே ஒத்துக்கொண்ட அளவு அபராதம் கட்ட வேண்டும். அதே போல ஏலம் எடுத்தவர், அதே போல குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பணத்தையும் செலுத்த வேண்டும் – தவறினால் அதற்கும் அபராதம் (வட்டி) உண்டு. ஏலம் நடத்தும் அமைப்பு இதையெல்லாம் அதன் செயல்பாட்டு ஆவணங்களில் விபரமாக விளக்கியிருக்கும். ஏதாவது பிரச்சனை வந்தால் ஆர்பிட்ரெஷன் (Arbitration) என்று சொல்லப்படும், ஒரு நடு நிலை வகிப்பவர் கூறும் தீர்ப்பை இரு தரப்பாரும் ஏற்க வேண்டும்.

ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரை அதனுடைய டீ பொட்டலங்கள் எப்போது விற்பனையாகிறது என்பது மிக முக்கியம். தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட தேயிலையின் சுவை, ருசி ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் – இது இயற்கை. முதலில் தோட்டத்தில் டீத் தூளாக்கப் பட்டு, ஏலத்தின் மூலமாக தொழிற்சாலைக்கு வந்து, பொட்டலமாகி, மொத்த வினியோகஸ்தரிடம் வந்து, பின் அங்கிருந்து சில்லறை வினியோகஸ்தர்கள் மூலமாக உங்கள் தெருமுனை கடைக்கு வருகிறது. பின் நீங்கள் வாங்கி தினம் இரண்டு-நான்கு ஸ்பூன் கணக்கில் டீயாக அருந்தப் படுகிறது. இதில் நேரம் முக்கியம் – இரண்டு காரணங்களால். ஒன்று டீயின் சுவை குறைவு. இரண்டாவது நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்த 72 மணி நேரத்தில் பணத்தை கொடுத்தாக வேண்டும். நம் போன்ற உபயோகிப்பவர்கள் டீ வாங்கி பணம் கொடுக்கும் வரை நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும் – காலம் அதிகமாக முதலுக்கு வட்டியும் அதிகம்.

நிறுவனங்களே உங்களுக்கு விற்பது என்று எடுத்துக் கொண்டால் ரொம்ப நாள் காத்திருக்க வேண்டும். ஆதலால் அவர்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு தன் பொட்டலங்களை விற்று விடுவார்கள். அந்த மாதிரி விற்கும் போதே பணமும் நிறுவனத்துக்கு வந்து விடும். முக்கால் வாசி நிறுவனக்கள் சில்லறை வினியோகஸ்தர்களிடம் இருந்து நிறுவனத்தின் பெயரில் முன்னமேயே கையொப்பமிட்ட காசோலைகளை வங்கி பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். மொத்த வினியோகஸ்தர்களிடம் இருந்து பொட்டலங்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு அனுப்பப் படும் போது இந்த காசோலைகள் வங்கிகளில் நிறுவனங்கள் கணக்கில் போடப்படும். பொருளை காசு கொடுத்து வாங்கி கடைகளுக்கு விற்பதால் இந்த சில்லறை வினியோகஸ்தர்களுக்கு வரும்படி வேண்டும்; அதே போல் தெரு முனையில் இருக்கும் கடைக்காரரும், தன் சொந்தக் காசைப் போட்டு பொட்டலம் வாங்குவதால் அவருக்கும் வரும்படி வேண்டும். இதை எல்லாம் கணக்கில் வைத்து, கடையில் நீங்களும் நானும் வாங்கும் விலையிலிருந்து, கொஞ்சம் குறைவாகவே நிறுவனக்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு விற்கும். இது போதாதென்று, நிறுவன இருப்பு அதிகமானால் ‘தற்காலிக விலைக் குறைப்பு’, மற்றும் ‘சிறப்புத் தள்ளுபடி’ என்றெல்லாம் சொல்லி நிறுவனக்கள் விற்பனையைப் பெருக்க முயலும்.

இது மட்டுமல்லாமல் இந்த பொட்டலங்களை ஒவ்வொரு இடமாக அனுப்பி, ஏற்றி இறக்குவதால் வரும் சேதம், நாள் கடந்து போனதால் விற்க முடியாமல் திரும்பி வரும் சரக்கு (அனேகமாக அனைத்து நிறுவனங்களும், கடைக்காரர்களிடம் இருந்து இதை ஏற்றுக் கொள்ளும்; இதை கமிஷனாக (அளவைப் பொறுத்து) கடையிலிருந்து திரும்ப பெற்றுக் கொள்ளும் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு நிறுவனங்கள் தந்து விடும்), என்றெல்லாம் வேறு செலவு. உற்பத்தி செய்யும் செலவோடு, இவற்றையெல்லாம் அனுமானித்து, விற்கும் விலையை நிர்ணயிப்பது அவ்வளவு சுலபமல்ல. அடிக்கடி விலயையும் மாற்ற முடியாது. ஒட்ட வேண்டிய லேபலில் இருந்து எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். இத்தனையும் மீறி இந்த வியாபாரத்தில் பணம் பண்ணுவதற்கு கொஞ்சம் திறமை வேன்டும்.

என்னுடைய பயிற்சியின் போது இரண்டு வாரங்கள் விற்பனைப் பிரிவில் இருந்தேன். விற்கும் அதிகாரியுடன் (Sales Manager) மொத்த வினியோகஸ்தர் (C&FA), சில்லறை வினியோகஸ்தர் (Distributor), மற்றும் கடைகள் (Shops) எல்லாம் போயிருக்கிறேன். இந்த அதிகாரி அவர்களோடு விற்பனைக்காக ஹிந்தியில் பேசுவதை (மிரட்டல், கெஞ்சல், கொஞ்சல், புகழ்ச்சி, பேரம் - எல்லாம் உண்டு) கேட்டு பிரமித்துப் போயிருக்கிறேன். அவரோடு சேர்ந்து டீ விளம்பரத் தோரணம் (YELLOW LABEL) கட்டியிருக்கிறேன். அவர் தொலைபேசியில் உயர் அதிகாரிகளுடன் தற்காலிக விலைக் குறைப்புக்காக போராடியதைக் கேட்டிருக்கிறேன் (உயர் அதிகாரி மறுத்தது வேறு விஷயம்; போதாக் குறைக்கு உங்களுக்கு - என்னையும் சேர்த்துத்தான் - விற்கத் தெரியவில்லை என்று அவர் கோபிக்க வேறு செய்தார்). இந்த இரண்டு வார பயிற்சி முடிந்ததும் எனக்கு நிச்சயமாய் தெரிந்த ஒரு விஷயம் - என்னால் இந்த விற்பன வேலையை செய்ய வராது, முடியாது என்பதுதான்!

இந்தியாவில் தேயிலை உற்பத்தி கிட்டத்தட்ட 9 லக்ஷம் மெட்ரிக் டன் (90,00,00,000 கிலோ - 90 கோடி கிலோ). 2003-ம் வருடத்தில் வட இந்தியாவில் 66.36 கோடி கிலோவும், தென் இந்தியாவில் 19.34 கோடி கிலோவும் விளைந்தது (மொத்தம் 85.7 கோடி கிலோ). இதில் பெரும்பான்மை சதவீதம் ஏலத்தின் மூலமாகத் தான் விற்பனையாகின. கிட்டத்தட்ட 20 கோடி கிலோ ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த விற்பனை முறை ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. எத்தனையோ சின்னச் சின்ன மாற்றங்கள் வந்தாலும், இந்த அடிப்படை விற்பனை முறை நூறு வருடங்களுக்கும் மேலாக மாறாமல் இருக்கிறது. அதே போல தேயிலையிலிருந்து டீத் தூள் செய்வதிலும் மிகப் பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை – க்ரீன் டீ என்று சொல்லப்படும் நீராவி மூலம் பதப்படுத்தப்படும் முறையைத் தவிர.

இருபது – முப்பது வருடங்களுக்கு முன் இந்தியா உலகிலேயே அதிக டீ உற்பத்தி பண்ணும் நாடாகவும், ஏற்றுமதி பண்ணும் நாடகவும் இருந்தது. சமீப காலங்களில் கென்யா, இலங்கை போன்ற நாடுகள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. 2004ல் இந்தியாவின் டீ உற்பத்தி 4.3% குறைந்திருக்கிறது – முக்கிய காரணங்கள் தட்பவெப்ப நிலை மாறுதல் மற்றும் அஸ்ஸாமில் கிட்டத்தட்ட 70 தோட்டங்கள் மூடப்பட்டது. ஏற்றுமதியில் க்ரீன் டீ உற்பத்தியினால் சீனா முன்னணிக்கு வந்திருக்கிறது. விபரங்களுக்கு இங்கே. இந்தியாவில் விளையும் டீ உலக உற்பத்தியில் கால் பங்குக்கும் சிறிது அதிகம். இணையத்தில் டீ பற்றி அனேகச் செய்திகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு டீ பற்றிய ஒரு ப்ளாக்.

பொறுமையாக இத்தனை பதிவையும் படித்தவர்களுக்கு என் அனுதாபம் கலந்த நன்றி :-).

தேநீர் – 12; தேநீர் – 11; தேநீர் – 10; தேநீர் – 9; தேநீர் – 8; தேநீர் – 7; தேநீர் – 6; தேநீர் – 5; தேநீர் – 4; தேநீர் – 3; தேநீர் – 2; தேநீர் – 1

ஞாயிறு, டிசம்பர் 03, 2006

தேநீர் – 12

மார்க்கெட்டிங்

தோட்டத்தில் வளரும் செடியிலிருந்து இலையைப் பறித்து டீத் தூளாகவும் செய்து தருவது டீ எஸ்டேட் என்று சொல்லப்படும் தோட்டங்களே. இருபது வருடங்களுக்கு முன்பு வரை, தோட்டங்களே நேரடியாக டீயை பருகும் மக்களுக்கு விற்பனை செய்ததில்லை. தோட்டங்கள் ஏலத்தின் மூலமாக டீத்தூள்களைக் கலந்து பொட்டலம் கட்டி விற்கும் நிறுவனங்களுக்கு விற்பதை மட்டுமே செய்து வந்தன. இந்த பொட்டலம் கட்டுவது தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய விஷயம் என்று சொல்ல முடியாது. இதைப் புரிந்து கொண்ட தோட்டங்கள், இந்த டீத்தூளை நாமே ஏன் பொட்டலம் போட்டு நேரடியாக விற்கக் கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தன. இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இந்தியாவில் டீத்தூள் பொட்டலம் போடும் நிறுவனங்கள் அதிகம் இல்லை. பெரிய அளவில் மூன்று அல்லது நான்கு நிறுவனங்கள்; பிராண்டு என்று பார்த்தால் இருபது/முப்பது இருக்கும்.

இப்போது எத்தனையோ வகைகள் வந்து விட்டன. நிறைய தோட்டங்கள் ‘தோட்டத்து தேயிலையின் புத்துணர்வு’ என்று தங்களிடமே தோட்டம் இருக்கிறது என்ற ஒரு விஷயத்தை வித்தியாசமாகக் காட்ட ஆரம்பித்தன. பொட்டலம் போடும் வியாபாரம் இருக்க முக்கிய காரணம், இயற்கையின் படைப்பில் வரும் வித விதமான தேயிலைகளை இன்னமும் அதிகமான எண்ணிக்கையில் கலவையாக்க முடியும் என்பதால் தான். இரண்டே தோட்டங்கள் இருந்தால் கூட, இந்த இரண்டையும் எத்தனை விகிதாசாரத்தில் கலக்கிறோம் என்பதிலேயே நாம் நிறைய வகைகளை (பிராண்ட்) உருவாக்க முடியும். இந்த ஒரு சமாசாரத்தில் தான் மொத்த பொட்டல வியாபாரமும் அடங்கியிருக்கிறது.

மூன்று, நான்கு தோட்டத்திலிருந்து தேயிலையை வாங்கி கலந்து கொடுக்கிறேன் என்று நான் சொன்னால் யாரும் என்னிடம் வர மாட்டார்கள். அதற்காக எனக்கு மார்க்கெட்டிங் பிரிவின் ‘அறிவு’ தேவை. அவர்கள் உங்களிடம் வந்து இந்த டீ குடித்தால் களைப்பு போகும், புத்துணர்வு வரும், என்று சொன்னால், நீங்கள் வந்து கொஞ்சம் போணி பண்ணுவீர்கள். அதற்காகத்தான் இந்தப் பிரிவு.

இவ்வளவுதானா என்று நினைக்க வேண்டாம். ஒரு பெரிய நிறுவனத்திற்கு பத்து, இருபது பிராண்டு தேவை. இவைகளுக்குள் முரண்பாடு வராத மாதிரி, அதே சமயம் ஒவ்வொரு வகையும் (பிராண்டு) ஒரு தனி விசேஷத்தை சொல்வது போலவும் கதை கட்டுவது அவ்வளவு எளிதல்ல. முடிந்தால் மற்ற நிறுவன பிராண்டை கொஞ்சம் மட்டம் தட்டி, சொந்த பிராண்டை கொஞ்சம் தூக்கிப் பேசினால் விற்பனை பெருகலாம். இதற்காக இவர்கள் செய்யும் செலவுதான் எத்தனை. இந்தப் பிரிவு மட்டும் இல்லையென்றால், நாட்டில் பெரிய அளவில் பொருளாதாரத்தில் தாக்கம் இருக்கும் – அது சுவரில் டீப்பொட்டலப் படம் வரைபவரிலிருந்து, வீட்டில் நீங்கள் டீ குடித்துக்கோண்டே ஆவலாகப் பார்க்கும் தொலைக்காட்ச்சித் தொடர் வரை.

ஒரு கலவைக்கு எந்த மாதிரி குணம் இருக்கிறது என்பதை நிர்ணயித்து (குணம் என்பது பொதுவான சொல் – அது சுவை, மணம், நிறம், அது தரும் உணர்ச்சி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்), அந்த குணத்தை மக்கள் மனதிலே பதியுமாறு விளம்பரங்கள் தயாரிப்பது, போட்டிகள் நடத்துவது போன்றவை மார்க்கெட்டிங் பிரிவின் வேலை. இந்த விளம்பரங்களுக்கு வெளி நிறுவனங்களை அணுகி, அங்கு இருக்கும் கவிஞர்கள், கலைஞர்களின் திறமையால் ஒரு துண்டுப் படத்தையோ, பாடலையோ, அந்தக் கலவையின் குணத்தை பறைசாற்றும் விதமாக தருவிப்பது என்பது ஒரு பெரிய விஷயம். அது டீத்தோட்டத்தில் ஓடும் பி.டி. உஷாவா (கண்ணன் தேவன் டீ), அல்லது தபலா வாசிக்கும் ஜாகீர் ஹூசேனா (தாஜ் மஹல் டீ) என்றெல்லாம் நிர்ணயிப்பது இவர்கள் தான்.

மற்ற நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இதில் ஒரு பெரிய வித்தியாசம், இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை. ஒரு விளம்பரம் முக்கியமான மொழிகள் அத்தனையிலும் வருவது நலம் - அது செலவையும் குறைக்கும், இந்தியா முழுவதும் டீயை விற்க உதவும். இந்த மாதிரி ஒரு பிரச்சனை அனேகமாக மற்ற நாடுகளில் கிடையாது. பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்க உதவுமாறு ஒரு சிறு கவிதை எழுதுவது ரொம்பவும் கஷ்டம். இதற்காகவே இந்திய மார்க்கெட்டிங் பிரிவுக்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம்.

சமயத்தில் சில விளம்பரங்கள் ஒரு மொழியில் மட்டும் பிரபலமாவதும் உண்டு. இதில் எனக்குப் பிடித்த ஒரு விளம்பரக் கவிதை:

Dip – Dip
Add the Sugar; and the milk
And its ready to sip
Do you want it stronger? Dip a little longer
Dip – Dip – Dip
And its ready to sip

உங்களுக்குப் பிடித்த டீ விளம்பரங்களை பின்னூட்டமிடுங்கள்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 11
தேநீர் – 10
தேநீர் – 9
தேநீர் – 8
தேநீர் – 7
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1