திங்கள், அக்டோபர் 24, 2005

450 ரூபாய் கேள்வி!

அரிசோனாவில் இருக்கும் என் நண்பர் கூலநாதனுடன் சென்ற வாரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் மகன் பள்ளி முடித்து, கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பங்கள் வாங்கி வந்திருந்ததாகவும், அதில் கண்ட சில கேள்விகள் மிகவும் யோசிக்க வைத்ததாகவும் சொன்னார். அவர் சொன்ன ஒரு கேள்வியை இங்கே தருகிறேன். ஒரு 17 - 18 வயது மாணவனாக (அல்லது மாணவியாக) நினைத்து இதற்கு பதில் தேடவும்! உங்கள் பதிலை இங்கு பின்னூட்டமிடவும்.

கேள்வி: உங்களுக்கு $10.00 (இந்திய ரூபாய் - 450.00, அல்லது பிரிட்டன் பவுண்ட் 7:00) தரப்படுகிறது. அதை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு நாளை வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாகக் கழிக்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்?

சனி, அக்டோபர் 22, 2005

வெண்டைக்காய்!

வழக்கம் போல் இந்த வாரமும் சனிக்கிழமை காலை காய்கறி வாங்க ஓக் மரச் சாலையில் உள்ள இந்தியக் கடைக்கு சென்றேன். கோவைக்காய்களைப் பொறுக்கி கொண்டிருக்கையில், அருகே மற்றொரு தேசி. செல் பேசியில் யாருடனோ உணர்ச்சிப்பூர்வமான உரையாடல். மறுபுறம் பேசுபவரின் குரல் கேட்காவிட்டாலும் இவர் குரல் அருகிலிருந்த எல்லோருக்கும் கேட்டது. உணர்ச்சிகரமாக எப்படி 'எந்த விஷயத்திற்கும் ஒரு ஒழுங்கு வேண்டும்' என்று போதித்துக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டே வெண்டைக்காய்களின் முனைகளை ஒடித்து ஒடித்துப் பார்த்து, பொறுக்கி பையில் போட்டுக் கொண்டிருந்தார். எடுத்துக் கொண்ட காய்களை விட ஒடித்தவை அதிகம். முடிந்ததும் நகர்ந்து போகையில் கீழே கிடந்த ஒரு வெண்டைக்காய் மிதிபட்டது (அவர் பொறுக்குகையில் கீழே விழுந்ததுதான்). திட்டிக் கொண்டே சென்றார் - செல் பேசியின் எதிர் முனையில் இருந்தவருக்கு எப்படி 'காய்கறி வாங்குமிடம் சுத்தமாக இல்லை' என்ற விபரமான வர்ணனையோடு!

எனக்கு காய்கறி வாங்கும் போது உடைத்துப் போடப்பட்ட வெண்டைக்காய்களை எடுக்கப் பிடிக்காது! முக்கியமான காரணம் மற்றொருவர் நிராகரித்ததை ஏன் எடுக்க வேண்டும் என்பதுதான். அதைவிட அதிகமன கோபம் உடைப்பவர் மீது வரும். செல்பேசியில் போதித்துக் கொண்டிருந்த அவரை நிறுத்தி சூடாக ஏதாவது சொல்லலாம் என்று ஒரு நிமிட யோசனை. ஆனால் 'வேலியோடு போகிற ஓணான்' ஞாபகம் வந்தது - அதனால் வெண்டைக்காய் எடுக்காமல் மற்ற காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்

புதன், அக்டோபர் 19, 2005

பிரதிபிம்பம் - கண்ணாடி மனிதன்

பல ஆண்டுகளுக்கு முன் படித்து மனதில் தங்கிய ஒரு ஆங்கிலக் கவிதை. முயன்றவரை மொழிபெயர்த்து தந்திருக்கிறேன்.

பிரதிபிம்பம் - கண்ணாடி மனிதன்


வாழ்க்கையில் வேண்டியதை போட்டியிட்டு வென்றாலும்
வையகமே உன்னையிங்கு மன்னவனாய் வரித்தாலும்
கண்ணாடி முன்னின்று தெரிபவனை சற்றுப்பார்
தோன்றுபவன் உன்னிடம் தெரிவிப்பது என்னவென்று.

தந்தையுமல்ல, தாயுமல்ல, தாலிகட்டிய தாரமுமல்ல
தக்கதொரு தீர்ப்பதனைத் தந்துன்னை தயவிக்க
உண்மையிலே பெருந்தீர்ப்பு தயங்காமல் தருபவன்
உறங்காமல் பார்க்கின்றான் கண்ணாடி உள்ளிருந்து.

பொறுப்போடு நீதுதிக்க மற்றல்லர்; நீமதிக்க
இறுதிவரை வருவதனால் அறுதியிட்டு கூறுபவன்.
பழியில்லை வாழ்வினிலே கடுந்துயரை வென்றிட்டாய்,
விழிபார்த்து உன்மதிபார்த்து நண்பனாயவன் வந்திட்டால்.

சூதிட்டு ஆட்டத்தால் நாட்டையே நீவென்றாலும்
வாதிட்டு நாட்டமுடன் புகழையே நீபெற்றாலும்
நின்றவனின் கண்நோக்கி நிற்கநீயும் தவறினால்
தோன்றியவன் கருத்தினிலே கழிசடையே ஆகிடுவாய்.

உலகத்தின் கண்மறைத்து வளமுடனே வளர்ந்தாலும்
தலைமுறையாய் பெருமைகளை உவப்புடனே பெற்றாலும்
உறுதியற்று அஞ்சிநீ தோன்றியவனைத் துரோகித்தால்
இறுதியாய் மிஞ்சுவதோ கண்ணீரும் கனநெஞ்சும்.


ஆங்கில மூலம் இங்கே: http://www.rayhunt.com/man.htm

வியாழன், அக்டோபர் 06, 2005

'திருவிளையாடல்'

சென்ற வாரம் நான் பார்த்த தமிழ்ப் படம் 'திருவிளையாடல்'. நடிகர் திலகம், நடிகையர் திலகம், திரு. பாலையா நடித்த ஒரு அருமையான படம். தருமியாக வந்து சிரிக்க வைத்த நாகேஷ், ஔவையாக வந்த திரு. கே.பி. சுந்தராம்பாள் இன்றும் மனதில் நிற்கிறார்கள். முக்கியமாக சிவாஜியின் முகபாவம் (குறிப்பாக பாட்டும் நானே பாடும் போதும், நக்கீரரோடு வாதிடும் போதும்), அருமையான இசையோடு கூடிய பாடல்கள். பாதிப் படத்திற்கு நானும் என் மனைவியும் வசனம் சொல்லிக்கொண்டே வந்தோம்!

இம்முறை படத்தைப் பார்த்தபின் ஐந்து நாட்களாக ஒரே யோசனை. இறைவன் இந்த மாதிரியெல்லாம் விளையாடுவாரா? படத்திற்காக கதை கொஞ்சம் ஜனரஞ்சகமாக மாறியிருந்தாலும் 'இறைவன் ஏன் சோதிக்க வேண்டும்? ஏன் சுற்றி வளைத்து காரியங்கள் செய்ய வேண்டும்?' என்றெல்லாம் யோசனை. உதாரணமாக ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்க எண்ணினால், போட்டியில் பாடும் போது அவர் குரலைக் கெடுத்திருக்கலாம்! தருமிக்கு பணம் வேண்டுமென்றால் ஒரு புதையல் கிடைத்திருக்க வழி செய்திருக்கலாம். ஒரே குழப்பம்.

நடுவில் திரு. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசம் (சி.டி.) கேட்டேன். அதில் அவர் ஓரிடத்தில் 'இறைவன் செய்யும் எல்லா விஷயங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அவர் ஸ்வாமி - நாமெல்லாம் தொண்டர்கள். ஸ்வாமி செய்யும் எல்லாமும் நமக்குப் புரிந்துவிட்டால் நமக்கும் அவருக்கும் தொண்டன் - ஸ்வாமி என்னும் உறவே இல்லாமல் போய்விடும்' என்கிறார். உண்மைதான்.

யோசித்ததில் என் வாழ்க்கையில், பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் சொல்வது போல:
"கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துள்ளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை" வரை வந்தாயிற்று. இனிமேல் எப்படிப் போகுமோ? யாருக்குத் தெரியும்?