செவ்வாய், ஜூலை 12, 2011

இலக்கு – 10

இலக்கு – 10

வளர்ச்சி உயிரினங்களின் இயல்பு. தாமாக வளரும் உடலுறுப்புகளையும், அவ்வாறு வளராத திறன்களையும் முயன்று வளர்த்திக் கொள்வது தவறாகத் தோன்றவில்லை. வளர்ச்சியடைவது தவறாகத் தோன்றாவிட்டாலும், எது வளர்ச்சி என்று அறுதியிட்டுக் கூறுவது அவ்வளவு சுலபமான விஷயமாகத் தோன்றவில்லை. காலப் பயணத்தில் முன்பிருந்த நிலையை விட தரம் உயர்ந்தால் அது வளர்ச்சியின் அடையாளம். முன்னாளில் படித்த ஒரு ஆங்கிலப் பழமொழி: ‘Life is change. Growth is optional. Choose wisely.’ "வாழ்க்கை மாற்றங்கள் நிரம்பியது. வளர்ச்சி நம் இஷ்டத்திற்கு விடப்பட்டது. அறிவுணர்ந்து தேர்ந்தெடு!"

கவிஞர் கண்ணதாசன் தன்னுடைய 'காலக் கணிதம்' என்ற கவிதையில் இவ்வாறு எழுதியிருக்கிறார்:
“கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்தே ஏகுமென் சாலை”.

மனித வாழ்க்கையில் நிரந்தரமான ஒன்று மாற்றம் - அது வளர்ச்சியை நோக்கிச் செல்லாத போது ஏமாற்றம் தான். மாற்றம் இல்லாமல் இருக்க முடியாது. இந்த மாற்றம் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் விதமாக நாம் மாற்ற முயல வேண்டும். இலக்காக வளர்ச்சியைக் கருதும் போது ஒரு பொறுப்பு வருகிறது. மாற்றங்கள் விதியின் விளைவு என்று எடுத்துக் கொண்டாலும், அதன் திசையை, வளர்ச்சியைத் நிர்ணயிக்கும் கருவியாக என் முடிவுகள், நடப்புகள் அமைய வேண்டும் என்ற தூண்டுதல் வருகிறது.

அதே சமயத்தில் எப்படி வளர்கிறோம் என்பது முக்கியமானது. உடலளவில் 'இயக்க ஊக்கிகள்' என்றழைக்கப்படும் ஊக்க மருந்துகள் (Steroids) உடலுறுப்புகளில் உடனடி வளர்ச்சியைத் தந்தாலும் பின்னாளில் அதிகமான உடலுபாதைகளைத் தருவதை நாம் காண்கிறோம். குறைவளிக்கும் பக்க விளைவுகள் தராத வழிமுறைகள் தரும் வளர்ச்சியே உன்னதமானது. முன்பு எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள்:


முன்னேற்றம் வேண்டி நாகரீகமானேன்
மாறியபின் வந்தது தெளிவு
நாகரீகத்தில் இல்லை முன்னேற்றம்.

வளர்ச்சி என்று கருதி தவறான வழிமுறைகளை அறியாமல் தேர்ந்தெடுப்பது சகஜம். இதைத் தவிர்க்க அறிவை வளர்ப்பது அவசியம். ஆதலால் இங்கு வளர்ச்சிக்கு அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. எந்த விஷயத்தையும் அறிந்து கொள்ளுதல் தவறு என்று வாதிட முடியாது. என்னைப் பொருத்தவரையில் வளர்ச்சியும் அறிதலும் ஒன்றை ஒன்று ஒத்திப் பிணைந்திருக்கின்றன. இரண்டுமே ஒரு உயிரின் வாழ்வுக்கு அத்தியாவசமானது. இவைகளை இலக்காகத் கொள்ளுதல் தவறில்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது: "அறிவு வளர்ச்சி பிறப்பில் தொடங்கி இறப்பில் தான் முடிய வேண்டும்". ‘Intellectual growth should commence at birth and cease only at death.’

இந்த அறிவு வளர்ச்சி எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை சிந்திக்கையில், பாரதியாரின் ஒரு பாடல் - அறிவே தெய்வம் என்ற தலைப்பில் எழுதியது - நினைப்புக்கு வருகிறது.

“ஆயிரந் தெய்வங்க ளுண்டென்று தேடி
அலையு மறிவிலிகாள் - பல்
லாயிரம் வேத மறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கு மதியிலிகாள் - எத
னூடுநின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?”

அறிவே தெய்வம் என்று பாரதி எழுதியதற்கும், 'அனுபவமே தெய்வம்' என்று பொருள் வருமாறு கண்ணதாசன் எழுதியதற்கும் (நீ மணி நான் ஒலி) அதிக வித்தியாசம் இல்லை. அனுபவம் அறிவாக மாறுகிறது. அதே சமயத்தில் அனுபவம் மட்டுமே அறிவாக மாறுவதில்லை. இம்மானுவேல் கன்ட் சொன்னது: 'நம்முடைய அறிவனைத்தும் அனுபவத்தில் தொடங்கினாலும், அனுபவத்தால் மட்டுமே விளைந்ததாகக் கருத முடியாது'. [That all our knowledge begins with experiences, it by no means follows that all arises out of experience – Immanuel Kant in Critique of Pure Reason]. அனுபவத்தால் தோன்றிய அறிவை ஆராய்ந்து, அசைபோட்டு, உறுமாற்றி ஞானமாக்கி வைப்பதும் அறிவுதான்.

முதல் இலக்கான 'வாழ்தல்' சரியா, அதனை அடையும் முறை சரியா என்ற கேள்விகளை விட இரண்டாம் இலக்கான மகிழ்ச்சி சரியா அதனை அடையும் முறை சரியா என்ற கேள்விகள் கடினமானதாக இருக்கின்றன. இதைப் பற்றி யோசிக்கையில் என் அறிவு, அனுபவப் பற்றாக்குறை நிதர்சனமாகத் தெரிகிறது. இந்தக் கேள்விகளுக்கு பதில் தேட ஆரம்பிக்கையில் வளர்ச்சியும் வருகிறது. பதில் தேடும் பயணத்தில், பதில் கிடைக்கையில், அறிவும் வளர்கிறது. மொத்தத்தில் இந்தப் பதிவுத் தொடரை எழுத ஆரம்பித்து, சுய தேடலில் கேள்விகள் கேட்டு, பதில் தேடிப் படித்த புத்தகங்களால் என்னுள் ஒரு வளர்ச்சியையும், அதனால் ஒரு மகிழ்ச்சி வந்ததையும் உணர்கிறேன்.

இந்த அறிவை, வளர்ச்சியை இலக்காக நான் எடுத்துக் கொண்டது தவறு என்று வாதிட எந்தக் காரணமும் தோன்றாததால், இவைகள் சரியான இலக்குகள்தான் என்று கருதுகிறேன். இவைகளை அடையும் முறைகளில் சரி எது என்று யோசிக்கையில், இந்தவிதமான குறிப்பிட்ட முறைதான் சிறந்தது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மாறாக எந்த விதமான செய்கைகளைச் செய்து வளர்ச்சியையோ அறிவையோ பெறுதல் சரியல்ல என்று குறித்துச் சொல்ல முடிகிறது.

வளர்ச்சியாலும், பெற்ற அறிவினாலும் என்னுடைய கடமைகளில் குறைவு வந்தால் இந்த வளரச்சியை, அறிவை அடைந்த முறை சரியான ஒன்றாக இருக்க முடியாது. அதே போல வந்த வளர்ச்சியாலும், அறிவாலும், என்னால் மற்றவர்களுக்குக் கிடைத்து வந்த உதவியும், சந்தோஷமும் குறைந்து போனால் அந்த வளர்ச்சியில், அறிவில் முழுமை இல்லை; அதை அடைந்த முறை சரியல்ல என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் எந்த விதமான வளர்ச்சியாலும், அறிவாலும் எனக்கு மட்டும் மகிழ்ச்சி வராமல், மற்றவர்களுக்கும் ஆதாயம் (அது அவர்களின் மகிழ்ச்சியாகவோ அல்லது வேறு விதமான உதவியாகவோ இருக்கலாம்) உண்டானால் அந்த வளர்ச்சியில், அறிவில் முழுமை இருக்கிறது; அதை அடைந்த முறை சரி என்று சொல்லலாம்.

வாழ்தலில் ஆரம்பித்து, மகிழ்ச்சி, வளர்ச்சி என்று மொத்தமாகப் பார்க்கும் போது அனைத்திலுமே என்னோடு மட்டும் நின்று விடாமல் மற்றவர்களின் சுக-துக்கங்களையும், இன்னமும் சொல்லப் போனால் மற்ற உயிரினங்களின் வாழ்வு, மகிழ்ச்சி, வளர்ச்சியைப் பேணும் விதமாக என் இலக்கையடையும் வழிமுறைகள் அமைய வேண்டும் என்று புரிகிறது. இந்த இலக்குகளை அடையும் வழிமுறைதான் என் வாழ்க்கை என்று பார்க்க ஆரம்பித்தால் புத்தர் சொன்னது போல பிற உயிர்களுக்கு இன்னல் தராத வாழ்க்கையை நடத்த முடியும் என்றும் தோன்றுகிறது. அம்மாதிரியான வாழ்க்கையில் ஒரு முழுமையையும், திருப்தியையும் அடைய முடியும் என்றும் நம்பிக்கை வருகிறது.

என் இலக்குகளை அடையும் வழிமுறைகள் சரியாக அமைந்து விட்டால் என் மகிழ்ச்சியும் மற்ற உயிர்களின் மகிழ்ச்சியும் ஒன்றாகி விடுகிறது; எனக்கும் மற்ற உயிர்களுக்கும் ஒரு பிணைப்பைப் பார்க்க முடியும். இதனால் 'நான்' என்ற குறுகிய உணர்வு குறைந்து, என் ஒருவனின் சுக-துக்கங்களுக்காக மட்டும் வாழாமல் இருக்க முடியும் என்றும் தோன்றுகிறது. இது ஒருவிதத்தில் 'தன்னையே வெல்லும் விதம்'! பாரதியாரின் ஆத்ம ஜெயம் என்ற கவிதையிலிருந்து சில வரிகள்:

"என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ -
தன்னைவென் றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்று முணர்ந்தபின்னும்
தன்னைவென் றாளும் திறமை பெறாதிங்குத்
தாழ்வுற்று நிற்போமோ?"

என் வாழ்வு, என் மகிழ்ச்சி, என் வளர்ச்சி என்று இலக்குகளை வரையறுக்க ஆரம்பித்தாலும், விவேகானந்தர் சொன்னது போல அதை அடையும் முறை பற்றி சிந்தித்ததில் சரியான முறையில் அந்த இலக்குகளை அடைய 'நான்' என்ற உணர்வு குறைவது அவசியம் என்று தெரிகிறது. இதை எந்த அளவுக்கு நான் அடையப் போகிறேன் என்று தெரியாது - காலம் தான் சொல்ல வேண்டும். இருந்தாலும், இதை எனக்குள்ளே யோசித்து, நானே உணர்ந்ததே ஒரு விதத்தில் திருப்தி தரும் விஷயம். இதுவும் ஒரு வளர்ச்சிதான். இன்னமும் வளர ஆசை!!!

இப்பதிவுடன் இந்தத் தொடர் நிறைந்தது.