புதன், ஜூன் 21, 2006

அல்ப சந்தோஷங்கள்

"வாழ்க்கை என்பது நீ மற்ற திட்டங்களை யோசிக்கும் நேரத்தில் நடப்பது" என்று எப்போதோ படித்தது. (Life is what happens to you while you're busy making other plans. John Lennon). இந்த பழமொழியை (Quote என்ற வார்த்தைக்கு தமிழில் பொருத்தமான சொல் இருக்கிறதா?) படித்தவுடன் ஒரே சிந்தனை - இது வரை வாழ்ந்த நாட்களிலே எத்தனை நாட்களை இது மாதிரி கோட்டை விட்டிருக்கிறேன் என்று.

இதுபோல இன்னுமொரு கொடேஷன்: "வாழ்க்கையின் குறிக்கோளே, குறிக்கோளோடு வாழ்வதுதான்". [The purpose of life is to live a life of purpose - Richard Leider] இதைப் படித்துவிட்டு ஒரே குழப்பம் - என் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்று ஓயாமல் சிந்தனை - நடுவே முதல் பழமொழி நினைவுக்கு வந்து, இந்த குறிக்கோள் பற்றிய யோசனையில் சில வாழ்க்கை மணிகளைத் தொலைத்துவிட்டேனோ என்ற குழப்பம்.
இப்படி எல்லாம் சிந்தனைகள் வந்து போய்க் கொண்டிருக்கும். அடிக்கடி திடீர் ஞானோதயம் வரும்; போகும். சில மாதங்களுக்கு முன் வந்த ஒரு ஞானோதயம் இது. வாழ்க்கை என்பது ஒரு பெரிய சந்தோஷத்தைத் தேடி அலைவது என்றில்லை. வழியில் ஆங்காங்கே வரும் - யாருக்கும் தீமையோ தொந்தரவோ தராத அல்ப சந்தோஷங்களிலும் ஒளிந்திருப்பதுதான் வாழ்க்கை.

உதாரணமாக எனக்கு காய்கறி நறுக்குவது - அதிலும் முக்கியமாக ஒரே சீரான அளவோடு நறுக்குவது பிடிக்கும். ஒரு வேளைக்கான வெண்டைக்காயை (அல்லது வேறு எந்தக் காய்கறியையோ) ஒரே சீராக நறுக்கி முடித்தால் வரும் திருப்தியிலும் என் சந்தோஷம் இருப்பதைப் பார்க்கிறேன். இதில் மட்டுமல்ல - புல்லை வெட்டுவதிலும், காரை சுத்தம் செய்வதிலும், அலுவலகத்தில் ஒரு மின் மடல் எழுதியவுடன், 'ஸ்பெல் செக்' செய்து ஒரு தவறும் இல்லை என்று கணினி சொல்லும் போதும் மனதுக்கு ஒரு திருப்தி வருகிறது. எல்லாமே பைசா செலவில்லாத அல்ப சந்தோஷம் தான் - இருந்தாலும் எனக்கு அது வேண்டியிருக்கிறது.

குடும்பத்தோடு லண்டன் சென்று இரண்டுவாரம் செலவு செய்து வந்த திருப்தியோடு இவைகளை என்னால் ஒப்பிட்டு பார்க்க முடியாவிட்டாலும், அல்லது இந்த மாதிரி அல்ப சந்தோஷங்கள் என் வாழ்க்கையின் குறிக்கோளாக இல்லாவிட்டாலும், வருடத்திற்கு ஒரு முறை வரும் ஒரு பெரும் சந்தோஷத்தோடு கூட, தினமும் கிடைக்கும் இரண்டு அல்லது மூன்று அல்ப சந்தோஷங்கள் என் தினசரி வாழ்க்கையை ஒரு உற்சாகத்தோடு நடத்த உதவுகிறது.

இப்போதெல்லாம் தினசரி வாழ்க்கையில் திருப்தியும், சந்தோஷமும், ஒரு விதமான contenment தரும் நிகழ்ச்சிகளை கொஞ்சம் உணர்ந்து பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். இந்த ஞானோதயம் எத்தனை நாள் இருக்கும் என்று தெரியவில்லை; இருக்கும் வரை தினசரி வாழ்க்கை டானிக் போல் இருக்கும் இந்த அல்ப சந்தோஷங்கள் வாழ்க!

திங்கள், ஜூன் 19, 2006

இங்கிலாந்துப் பயணம்

கிட்டத்தட்ட இரண்டு வாரம் லண்டன் பயணம் - குடும்பத்தோடு விடுமுறையில். இதற்கு முன் அலுவல் நிமித்தமாக மூன்று அல்லது நான்கு முறை வந்திருந்தாலும், விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் சுற்றிப் பார்க்க வருவது இதுவே முதல் முறை. பத்து வருடங்கள் அமெரிக்காவில் இருந்துவிட்ட படியால், இங்கு வந்தவுடன் அலுவலகம் சம்பந்தமில்லாத பொது வாழ்வில் தெரிந்த வித்தியாசங்கள் - அதனால் எனக்குத் தோன்றிய சிந்தனைகள் இங்கே.

அலுவலகத்தில் உள்ள வித்தியாசங்கள் - கூப்பிடும் முறை, செயல்படும் முறை அவ்வளவாக பாதிக்கவில்லை. ஆனால் பொதுவாழ்வில் இவைகளின் தீவிரம் அதிகம். உதாரணமாக நாங்கள் சென்ற இரயில் நிலையத்திலெல்லாம் தானியங்கிக் கருவி (பயணச்சீட்டு வழங்க) வைத்திருந்தார்கள். அதே சமயத்தில் அதன் அருகே ஒரு பணியாளர் நின்று கொண்டு கருவியை உபயோகிக்க உதவிக் கொண்டிருந்தார்! மனதுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. அதே சமயத்தில் ஸவுத்தாம்டன் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் போது, ஐந்து மணிக்கு கதவை இழுத்து மூடிவிட்டார்கள். வெளியே உட்கார நாற்காலி கிடையாது, கழிப்பிடம் அலுவலகத்திற்க்கு உள்ளே தான். அலுவலகத்திற்குள் பேருந்துப் பணியாளர்கள் நால்வர் அமர்ந்து பேசிக் கொண்டும், சுடொக்கு போட்டுக் கொண்டும், ஏதோ வேலை பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். கிட்டத்தட்ட 40 பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாய் வந்த பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். கடைசி வரை அந்தப் பணியாளர்கள் கதவைத் திறக்கவேயில்லை, பயணிகள் கண்ணாடி ஜன்னலைத் தட்டிக் கூப்பிட்ட போதும்!

நாங்கள் வந்திருக்கும் சமயம் உலகக் கோப்பை (கால் பந்து) ஜுரம். கார், வீடு, உடைகள், ஏன் முகத்திலும் கூட இங்கிலாந்துக் கொடி. நிறைய கார்களில் இரண்டு கொடிகள்; வசிக்கும் ஊcன இங்கிலாந்து, பிறந்த ஊரான பிரேசில் (அல்லது ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இன்ன பிற நாட்டுக் கொடிகள்)! வித்தியாசமாக இருந்தது.

செய்திகளில் முக்கியமான அரசியல், சமூகப் பிரச்சனை ஒரு நீதிபதி சட்டத்தில் உள்ளது போல ஒரு குற்றவாளிக்கு (child molestation) 'பரோல்' கொடுத்தது. அரசும் அரசியல் வாதிகளும், நீதிபதியைத் தாக்கி அறிக்கைகள் விட, நீதிபதி சார்பில் மற்ற வழக்குரைஞர்கள் சட்டம் இயற்றிய அரசைக் குற்றம் கூற, முடிவில் அரசு தரப்பில் ஒரு மந்திரியை அமெரிக்கா அனுப்பி அங்கு எப்படி இது போன்ற விஷயங்களை அரசும் சட்டமும் கண்காணிக்கிறது என்று அறியப் போவதாக செய்தி வந்திருக்கிறது. நாலு பாட்டும், இரண்டு சண்டைக்காட்சிகளும் சேர்த்தால் நம்மூர் சினிமா தான்!

இதைத் தவிர இரண்டு செய்திகள் - சென்ற வாரத்தில். 1. தவறான தகவல் அடிப்படையில் இங்கிலாந்துப் போலீஸ் ஒரு வீட்டில் புகுந்து ஒருவரை சுட்டும், அவரது சகோதரரை அடித்தும் கைது பண்ணி பத்து நாட்கள் முட்டிக்கு முட்டி தட்டி விசாரித்து பின் தவறு தெரிந்து விடுதலை செய்திருக்கிறார்கள். இந்த சகோதரர்கள் முஸ்லிம்! அதே வாரத்தில் இங்கிலாந்துப் போலீஸ் தலைவருக்கு ஒரு விருதும் வழங்கப் படுவதாக அறிவிப்பு வந்திருக்கிறது 2. இங்கிலாந்து ராணிக்கு 80 வயதாகிவிட்டது. பிரார்த்தனைக் கூட்டத்தில் தூங்கிய பிரதம மந்திரியின் மனைவியின் புகைப்படம் செய்தித் தாள்களில் வந்திருக்கிறது.

அமெரிக்காவைப் போல் மற்ற இன, மதங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் இங்கு அதிகம் இல்லை. வந்த இரண்டாம் நாள் அருகில் உள்ள பூங்காவில் மகளையும், என் மைத்துனன் குழந்தையையும் விளையாட அழைத்துச் சென்றிருந்த என் மனைவியிடம் ஒரு சிறுவனும், சிறுமியும் (பத்து - பதிமூன்று வயதிருக்கும்) 'You are all slaves, why dont you go to your country?' என்று கேட்டதில் உள்ள வருத்தம் கொஞ்சம் இன்னமும் இருக்கத்தான் செய்தாலும், மொத்ததில் குடும்பத்தோடு ஒன்றாக சந்தோஷமாக இருந்தது மகிழ்ச்சியையே தருகிறது.

திங்கள், ஜூன் 12, 2006

ஒலி

சிறிது நாட்களுக்கு முன் ஒளி பற்றி 'வண்ணங்கள்' என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டேன். அதன் தொடர்ச்சியாக இந்த 'ஒலி'. மன்னார்குடியில் படிக்கும் போது (+1), 'டியூனிங் ஃபோர்க்' சம்பந்தப் பட்ட ஒரு பௌதீக சோதனை - கம்பியில் சிறு பேப்பர் துண்டுகளை தொங்க விட்டு, Tuning Forkஐ ஒரு தட்டு தட்டி, எங்கு அந்தப் பேப்பர் எழும்பி விழுகிறது என்று பார்த்து, கணக்கெல்லாம் போட்டு, அலைவரிசை கண்டுபிடிக்கும் ஒரு சோதனை - நினைவுக்கு வருகிறது. வெண்பா இலக்கணம் சொல்லித்தந்த தமிழ் ஆசிரியர் சொன்னது 'அசையில்லாமல் இசை இல்லை'; நிச்சயமாகச் சொல்லலாம் அசைவில்லாமல் ஒலியில்லை என்று. காற்றிலுள்ள அணுக்கள் மூலமாக பரவுகின்ற அதிர்வே நாம் ஒலியைக் கேட்க உதவுகிறது.

இந்த ஒலியும் ஒரு அலைதான் - ஆனால் ஒளி போல் குறுக்குவாட்டில் போகாமல் நெடுக்கு வாட்டில் போகும். இதைவிட முக்கியமான வித்தியாசம் - ஒலி செல்வதற்கு ஏதாவது ஒரு ஊடகம் - carrier - தேவை. ஒளி வெற்றிடத்திலும் செல்லும், ஒலியால் முடியாது. அது மட்டுமல்ல; ஒலி செல்லும் வேகம் ஊடகத்தைப் பொறுத்தது. திடப் பொருள்களில் மிக வேகமாகவும், திரவப் பொருள்களில் அதை விட சற்று மெதுவாகவும், வாயுப்பொருள்களில் மிக மிக மெதுவாகவும் செல்லும். ஒலியின் அலைவரிசையை ஹெர்ட்ஸ் என்று குறிப்பார்கள் Heinrich Rudolph Hertz (1857-94) நினைவாக.
மனிதக் காதுகளுக்கு 20ல் இருந்து 20,000 ஹெர்ட்ஸ் வரை அலைவரிசையுடைய ஒலிகள் கேட்கும். சில விலங்குகளுக்கு - நீர்யானை, யானை, திமிங்கிலம் போன்றவை - "இன்ஃப்ரா" என்று சொல்லப்படும் 20 ஹெர்ட்ஸ்க்கும் குறைவான அலைவரிசைகளில் வரும் ஒலியையும் கேட்கும் திறமை உண்டு. நாய், பூனை, எலிகள் - "அல்ட்ரா" என்று சொல்லப்படும் 20,000 ஹெர்ட்ஸ்க்கும் மேலான அலைவரிசைகளில் வரும் ஒலியையும் கேட்கும் திறமை உண்டு. வௌவாலின் கேட்கும் திறன் பற்றி எல்லோருக்கும் தெரியும். பாம்புக்கு காதுகள் இல்லாவிட்டாலும், மகுடியிலிருந்து வரும் ஒலி அலைகளின் அதிர்வு, நிலத்திலிருந்து, அதன் உடலில் உள்ள எலும்புகள் மூலமாக அதன் மூளைக்கு செல்கின்றது என்று படித்ததாக நினைவு.

நம் காதுக்குள் வந்த ஒலி அதிர்வு, காதுக்குள் உள்ள திரவத்தை அதிர்வடையச் செய்கிறது; பின் அந்த அதிர்வே மூளைக்கு அனுப்பப்பட்டு நம்மால் ஒலியாக உணரப்படுகிறது. நாம் பேசும் போதோ, பாடும் போதோ நம்முடைய வாயிலிருந்து வரும் ஒலிவலைகள் காற்றின் மூலமாக காதை அடையும். அதே சமயத்தில் நம்முடைய வாய் எலும்புகளில் அந்த ஒலியலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் காதை அடைந்து, பின் மூளையை அடையும் போது, நம் குரலின் அடையாளம் நமக்கு ஒருவிதமாக மாற்றிக் காட்டப்படுகிறது - இரண்டுவிதமான அதிர்வுகளின் கலவையாக (காற்றின் மூலம் வந்த அதிர்வு + எலும்பின் மூலம் வந்த அதிர்வு). இதனாலேயே நம்முடைய குரலை பதிவு பண்ணிக் கேட்கும் போது கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறது. இந்த விஷயத்தைப் பற்றி ஸ்ரீகாந்த் மீனாக்ஷி சமீபத்தில் எழுதிய பதிவு இங்கே.

காதில் எல்லா உள் உறுப்புகளும் சரியாக வேலை செய்தாலும், சமயத்தில் பிறர் சொல்வது நமக்கு கேட்பதில்லை; முக்கியமான காரணம் மூளை அந்த சமயத்தில் வேறு ஏதாவது ஒரு காரியத்தில் மிகவும் நுணுக்கமாக ஈடுபட்டிருப்பதுதான். ஆர்க்கிமிடிஸ் இது போன்று ஒரு புதிரை தீர்க்க முயன்று கொண்டிருக்கையில், அருகில் வந்த ஒரு வீரனுக்கு உடன் பதில் சொல்லாததால் கொல்லப்பட்டார் என்று கேள்வி. வேறு வேலையில் ஈடுபடாவிட்டாலும் வரும் ஒலி அதிர்வுகளைப் பற்றி ஒரு விதமான பரிச்சயம் இருந்துவிட்டால், மூளை செயல்பட மறந்துவிடும்.

நாங்கள் மன்னார்குடியில் இருந்த வீட்டில் ஒரு அரதப் பழசான மின்விசிறி உண்டு. அது போடும் சத்தம் மிக அதிகம். முதலில் சங்கடமாய் இருந்தாலும், சில மாதங்கள் கழித்து தூங்குவதற்கு அந்த சத்தம் தொந்தரவாயில்லை; என் மூளை அந்த சத்தத்தை நிராகரித்து செயல்பட கற்றுக் கொண்டுவிட்டது. என் வீட்டம்மாவிடம் சில நாட்களுக்கு முன் இதை விவரித்தபோது அவங்களுக்கு வந்ததே கோபம். "நான் சொல்வதையெல்லாம் காதில் போட்டுக்கொள்வதும் இல்லாமல், என் குரலை இனம் பிரித்து உங்கள் மூளை நிராகரித்து விடுகிறது என்று சொல்ல என்ன தைரியம்" என்று! தவறு என் மீது தான். 'பேப்பர் குப்பைகளை எல்லாம் எடுத்து வையுங்கள்' என்று இரண்டு, மூன்று முறை கூறியது என் காதில் விழவில்லை; 'ஏன் விழவில்லை' என்ற அவங்க கேள்விக்கு எப்போதும் போல் அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு பேப்பரை எடுத்து வைக்காமல் அன்றைக்கு என்று இந்த விளக்கத்தைக் கொடுத்தேன். விளக்கம் சொல்லாமல் காது சரியில்லை என்று சமாளிக்காதது என் குற்றம் தானே!