ஞாயிறு, ஜூன் 28, 2009

இரயில் - 8

இரயில் - 8

ரயில் பயண உறவுகள் என்றவுடன் முன்பு தொலைக்காட்சியில் வந்த 'ரயில் சினேகம்' போன்ற ஏதாவது கதை இருக்கும் என்று நினைக்க வேண்டாம். ரயில் பயணங்களில் பார்த்த, பேசிய மனிதர்கள் நிறைய பேர்களை பயணம் முடிந்த சில நாட்களில் (பல சமயம் சில நிமிஷங்களுக்குள்) மறந்திருக்கிறேன். அபூர்வமாக சில முகங்கள், வார்த்தைகள் இன்னமும் நினைவில் இருக்கின்றன. அனேகமாக இந்த மாதிரி பாதித்த நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட மனிதர்கள் பெயர் தெரியாது; அல்லது மறந்திருக்கும்.

ரயில் பயண சந்திப்புகள் இரண்டு வகை: தொலைதூர பயணத்தில் - குறைந்தது ஒரு நாள், ஒரு இரவு - அதே பெட்டியில் கூட வருபவர்களோடு நடக்கும் சம்பாஷணைகள், முதல் வகை. குறைந்த தூர, ஆனால் தினப்படி நடத்தும் பயணங்களில் (உதாரணமாக அலுவலகம் சென்று வர) சந்திப்புகள், கருத்துப் பறிமாறல்கள் - இரண்டாம் வகை. முதலாம் வகை பெரும்பான்மையாக ஒரு வித கட்டாயத்தால், பொழுது போக வழியில்லாமல் நடப்பவை. இது ஒரு விதமான புகைப்படம் போல - படம் அழகாயிருந்தால், வித்தியாசமாக இருந்தால் நினைப்பில் இருக்கும். இரண்டாம் வகையில் ஒரு விதமான தொடர்ச்சி, வளர்தல், மாற்றம் உண்டு; கிட்டத்தட்ட ஒரு தொலைக்காட்சி சீரியல் போல. பிடிக்கவில்லை என்றால் பெட்டி, நேரம் மாற்ற முடியும்.

விபரம் புரியாத (நான் மூன்றாவது அல்லது நான்காவது படித்த போது என்று நினைக்கிறேன்) வயதில் எழும்பூர்-தாம்பரம் தடத்தில், மின் வண்டியில் என் வயதே ஒத்த ஒரு சிறுவன், கண்ணில்லாத ஒரு பெண்மணியுடன் (அம்மா?), பாடிக் கொண்டே மற்றவர்களிடம் காசுக்காக டப்பாவை குலுக்கிக் கொண்டே போனது இன்னமும் நினைவில் இருக்கிறது (பாட்டு:அச்சமயம் புதிதாக வந்த 'மேலும் கீழும் கோடுகள் போடு, அதுதான் ஓவியம்'). இப்பவும் அந்தப் பாட்டு கேட்கையில் மனதில் ஒரு விதமான குழப்பம் கேள்விதான் – “ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? என்ன காரணம்?” என்று! இன்னமும் விடை கிடைக்கவில்லை.

93 - 96 வட நாட்டு வாசத்தில் வருடா வருடம் சென்னை-டில்லி ரயில் பிரயாணம் இரு முறையாவது வரும். நடுப் பயணத்தில் (வண்டி அனேகமாக நாக்பூருக்கு அருகே இருக்கும்), கால் நடக்க முடியாத (போலியோ) வாலிபர் ரயில் பெட்டி தரையை ஒரு பிரஷ் கொண்டு சுத்தம் செய்து காசு கேட்பார் - சலனம் அதிகம் இல்லாத முகம், தாடி; சோகம், வருத்தம் தெரியாது; ஒரு விதமான 'கடமையைச் செய்கிறேன்' என்பது போல பாவம். பெயர் தெரியாது; அதே பிரயாணங்களில் காப்பி, வடை போன்று சாப்பாடு கொண்டு வரும் ஊழியர் ஒருவருடைய முகமும் நினைப்பில் இருக்கிறது. நெற்றியில் விபூதி, சிறிய மீசை, எப்போதும் சிரித்த முகம்; சில்லறை இல்லாவிட்டாலும் கடுப்படிக்காமல், நினைவில் வைத்துக் கொண்டு பாக்கி கொண்டு கொடுப்பது இல்லை, வந்து பாக்கி காசை வாங்கிக் கொள்வது என்று பொறுமையாக செய்பவர். இருவருமே கீதையில் வரும் சிதப்பிரஞ்ஞன் சுலோகம் நினைப்புக்கு வரவழைப்பார்கள்.

2003ல் பிரிட்ஜ்வாட்டர் நிலையத்திலிருந்து நூவர்க் செல்கையில் தினமும் பார்த்த ஒரு வித்தியாசமான பேர்வழி. பெட்டியில் யாராவது தும்மினால், இருமினால் கோபம் பொத்துக் கொண்டு வரும் இவருக்கு (சுத்தம், சுகாதாரத்தில் அளவு கடந்த பைத்தியம் என்று சொல்லலாம்). இவரைப் பற்றி தெரிந்தவர் எவரும் அருகே அமர மாட்டார்கள். அது மட்டுமல்ல, வண்டி நூவர்க் நிலையம் அருகே செல்கையில் அந்தப் பெட்டியில் முதல் ஆளாக இறங்க வேண்டும் என்பதற்காக முன்னமேயே எழுந்து கதவருகே நின்று கொள்வார். ஒரு முறை இன்னுமொரு பிரயாணி தெரிந்தோ, தெரியாமலோ முதலில் சென்று நின்று கொள்ள, இவர் முகத்தைப் பார்ர்க சகிக்கவில்லை (உண்மையில் கொஞ்சம் பயமே வந்தது; ஏதாவது இசகு பிசகாக செய்து வைக்கப் போகிறாரே என்று).

மொத்தத்தில் ரயில் என்ற வாகனம் என் வாழ்க்கையில், சிந்தனையில் நிறைய பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று. தில்லி ரயில் மியூசியம், மற்றும் லண்டன் அறிவியல் மியூசியம் என்று சென்று பார்த்து மகிழ்ந்த நினைப்புகள் இன்னமும் பசுமையாக இருக்கிறது. ரயில் பற்றிய இந்தப் பதிவும் நிலையத்திற்கு வந்து விட்டது.

அடுத்த வாரம் வேறு விஷயம் பார்க்கலாம்.

முந்தைய பதிவுகள்:
இரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5 இரயில் - 6 இரயில் - 7

2 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

தொடர்வண்டியைப் பற்றிய நினைவுகள் நன்றாக இருந்தன ரங்காண்ணா.

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி குமரன்.