சனி, மே 16, 2009

இரயில் – 2

இரயில் – 2

இராமநாதபுரத்தில் வீடு இரயில் நிலையம் அருகில் இல்லை; அதனால் பார்ப்பதே அபூர்வம். அனேகமாக வீதியில் (வடக்கு வீதி) செல்லும் மாட்டு வண்டிதான். எப்போதாவது கார், ஜீப். திண்ணையில் உட்கார்ந்து அதிகம் பார்த்தது சைக்கிள் தான். அதே தெருவில் எங்கள் பெரியப்பாவும் இருந்தார்; அவரிடம் ஒரு ஜீப் இருந்தது (உப்பளத்துக்கு சென்று வர). அதில் ஏறி அமர்ந்து ஓட்டுவது போல கற்பனை செய்து விளையாடுவது ஒரு முக்கியமான பொழுதுபோக்கு.

சென்னை வந்து முதலில் குடிபுகுந்தது, வில்லிவாக்கம் தேவர் தெருவில். அந்தத் தெருவின் வடக்கு வரிசையில் எங்கள் வீடு - வீடு என்றால் ஒரு வீட்டில் வீட்டுக்காரரையும் சேர்த்து நான்கு குடித்தனங்கள்; அதில் நாங்களும் ஒன்று. வீட்டிற்கு கொல்லைப்புறம் ஒரு பாதை; அதைத் தாண்டி இரயில் நிலையம். வீட்டுக்காரருக்கும் மற்றுமொரு குடித்தனக்காரருக்கும் இந்திய ரயில்வேயில் தான் வேலை - பெரம்பூர் லோகோவொர்க்ஸ். இருவரும் ரயில் தண்டவாளத்தை ஒட்டி நடந்தே வேலைக்குச் செல்வார்கள். வீட்டின் கொல்லையில் சில தென்னை மரங்கள், ஒரு மாமரம் (சின்னது) இரண்டு பெரிய சப்போட்டா மரங்கள், ஒரு பவழ மல்லி, மற்றும் சில பெயர் தெரியாத சில்லறை மரங்கள். இதைத் தவிர கொத்து கொத்தாக சிவப்பு நிறத்தில் பூக்கும் ஒரு புதர் போன்ற பெரிய செடி/மரம் - பேரெல்லாம் நினைவில்லை. யாராவது கேட்டால் பெரிய மரம், சின்ன மரம் என்றுதான் சொல்லத் தெரியும் - டெனிஸ் த மெனஸ் கார்ட்டூனில் டெனிஸ் சொல்வது போல! அங்கு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு இரயிலை வேடிக்கை பார்ப்பது ஒரு விளையாட்டு.

அப்போதெல்லாம் இரயில் எண்ணிக்கை அதிகம் கிடையாது; மொத்தமாக நான்கு அல்லது ஐந்து, இல்லை அதிக பட்சம் ஆறு இரயில் தான் பார்க்க முடியும் மாலை வேளையில். அதிலும் இரண்டு சரக்கு வண்டியாக இருக்கும். அதில் என்ஜினையும், கார்டு பெட்டியையும் தவிர பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது. ஆனால் எண்ணிக்கை அதிகம்; அதிலும் எப்போதாவது ஒரு டாங்கரோ, அல்லது இராணுவ வண்டிகளை ஏற்றி செல்லும் திறந்த வெளிப்பெட்டிகள் (open carriages) வந்தால் ஒரு குஷி.

என் அப்பாவிற்கு பாரிஸ் கார்னர் அருகே அலுவலகம்; அதனால் வில்லிவாக்கத்தில்ருந்து இரயில் பிடித்து 'பீச்' நிலையம் போவார். எனக்கும் என் தம்பிக்கும் காலை அவர் கிளம்பும் ரயிலை கண்டிப்பாகப் பார்த்தே ஆக வேண்டும். ஒரு வருடம் கழித்து அவர் வேலை நேரம் இரண்டாவது ஷிப்ட் மாற, அவர் போவதும் தெரியாது, வருவதும் தெரியாது! நாங்கள் பள்ளியில் இருக்கையில் அவர் வீட்டிலிருந்து புறப்படுவார். எட்டு அல்லது எட்டரைக்கு நாங்கள் தூங்கிவிடுவோம்; அவர் வருவதோ 'அறிவாளி' படத்தில் தங்கவேலு மனைவி சொல்வது போல 'பேய் அலையற' நேரம்!

சென்னையில் உறவினர்கள் அதிகம்; மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது விசேஷம்! அவர் எங்களை குடும்பத்தோடு குரோம்பேட்டை, அல்லது நங்கநல்லூர், மாம்பலம் என்று அழைத்து செல்வார். ரயில் - பஸ் என்று மாற்றி மாற்றி அழைத்துப் போக வேண்டும் என்று சொல்லிவிடுவோம் - அப்போது தானே நிறைய டிக்கட் கிடைக்கும். டிக்கட் சேர்ப்பதில் எனக்கும் என் தம்பிக்கும் போட்டி வேறு உண்டே! எங்களுக்காக பேருந்தில் வில்லிவாக்கத்திலிருந்து எழும்பூர் (பல்லவன் - எண் பதினாறு); எழும்பூரிலிருந்து மாம்பலம், மீனம்பாக்கம் (அப்போது பழவந்தாங்கல் ரயில் நிலையம் வரவில்லை) அல்லது கிரோம்பேட்டை (ரயில் நிலையத்தில் 'கி', கடைகளில் 'கு' - இப்பவும் இந்த பெயர் குழப்பத்தைப் பார்க்கலாம்) வரையில் மின் வண்டியில் செல்ல வேண்டும்! எனக்கும் என் தம்பிக்கும் எழும்பூரிலிருந்து தாம்பரம் வரை உள்ள அனைத்து ரயில் நிலையப் பெயர்களும் வரிசையாக அத்துப்படி. எங்கள் ரயில் விளையாட்டில் நிஜத்தைப் பிரதிபலிக்க இது உதவியாக இருந்தது.

தீப்பெட்டி, சிகரெட் டப்பா ரயில் வண்டிகள் செய்த கதைகளையும் டிக்கட் சம்பந்தமான அனுபவத்தையும் (பாட்டு கூட உண்டு) அடுத்த வார பதிவில் தருகிறேன்.

முன்பதிவு
இரயில் – 1

கருத்துகள் இல்லை: