ஞாயிறு, ஜூன் 21, 2009

இரயில் - 7

இரயில் - 7

டீசலோடு கிரசின் கலந்து புகை கக்கும் லொட்டை பேருந்துகள் தரும் எரிச்சலோடு கலந்த வாசனையைத் தவிர பேருந்து நிலையத்திற்கு என்று தனித்த வாசனை இல்லை. ஆனால் ரயில் நிலைய மணமே தனி. இந்த மணத்தை விபரிப்பது கடினம்; இருந்தாலும் முயற்சிக்கிறேன். மூடிய, பெரிய நிலையங்களில் இந்த மணம் தூக்கலாக இருக்கும். அதிலும் கரி வண்டிகள் அதிகமாக இருந்தால் இதை சுலபமாக உணரலாம். உதாரணமாக திருச்சி ஜங்க்ஷன் நிலையத்தில் இருக்கும் மணம் (இது திறந்த வெளி நிலையமாக இருப்பினும்), கொஞ்ச தொலைவில் இருக்கும் பேருந்து நிலைத்தில் இருக்காது. இது கொஞ்சம் கொல்லப் பட்டறை வாசனை, குமிட்டி அடுப்பு வாசனை (அதிலும் கரிதான்) எல்லாம் கலந்து இருக்கும்.

சென்னையில் எழும்பூர் நிலையமானாலும் சரி அல்லது சென்ட்ரல் நிலையமாக இருந்தாலும் சரி, மணம் ஒன்று தான். இந்த மணத்தில் ஒரு விதமான 'ரேஞ்ஜ்' - விகிதாசார வித்தியாசம், இருக்கும். சென்ட்ரல் அல்லது எழும்பூர் நிலையத்தில் நிற்கும் எந்த தொலைதூர பயண ரயிலிலும் இதை நீங்கள் உணர முடியும். ரயில் கிளம்பும் முன் பிளாட்பாரத்தில் ஒரு முனையிலிருந்து அடுத்த முனை வரை நீங்கள் நடக்கையில் இந்த வித்தியாசத்தை உணரலாம். அதிலும் கண்ணையும், காதையும் மூடிக்கொண்டு நடந்தால் அதிகமாகவே இந்த வாசனை வித்தியாசம் தெரியும். எது மேலாவது இடித்துக் கொண்டு விழுந்தால் நான் பொருப்பல்ல.

இஞ்ஜினைக் கடக்கையில் வரும் கொல்லப் பட்டறை வாசனை, நீராவி அல்லது வெப்பம் தரும் வாசனை வித்தியாசம், சரக்குப் பெட்டியைத் தாண்டும் போது வரும் வாசனை (அதிலும் மீன், கருவாடு போன்ற சரக்கு இருக்கையில் வரும் வாசனை), சமையல் வண்டியைத் (அல்லது பிளாட்பாரத்தில் இருக்கும் சாப்பாட்டுக் கடையைத்) தாண்டுகையில் வரும் வாசனை, குளிர் பதன பெட்டியைத் தாண்டுகையில் மட்டுப் படும் வாசனை என்றெல்லாம் வகை பிரித்து உணர முடியும். அதிலும் இரவு நேர ரயில் நிலைய வாசனை, தூக்கலானது. காரணம் சப்தம் குறைவு; வெப்பம் குறைவு என்று என் ஊகம்.

இத்தனை வித்தியாசம் சரக்கு ரயிலில் வராது. அதில் வரும் வாசனை பெரும்பான்மையாக அதில் வரும் சரக்கைப் பொருத்தது. உரங்கள் ஏற்றி வரும் சரக்குப் பெட்டிக்கும், இரும்பு சாமான்கள் கொண்டு வரும் பெட்டிக்கும் உள்ள வித்தியாசம் கொஞ்சம் அருகே சென்றால் தான் தெரியும். ரயில் பெட்டிக்குள் ஏறினால் ரயில் இருக்கும் இடம், பருவம் பொருத்து வித்தியாசம் வேறுபடும். உதாரணமாக குளிர்காலத்தில் தெற்கே (தமிழ்நாட்டில்) ரயில் பெட்டியின் வாசம், வடக்கே (சண்டீகர்) இருக்கும் வாசத்தில் இருந்து அதிகம் வேறுபடும். மத்தியப் பிரதேசத்தில் தகிக்கும் கோடையில் குளிர் பதனப் படுத்தப் படாத பெட்டியில் பிரயாணம் செய்தால் வியர்வை வாசனை தவிர வேறு எதுவும் தெரியாது. அதே வண்டி ரயில் நிலையத்தை அடைந்தவுடன் கீழே இறங்கி பிளாட்பாரத்தில் உலவுகையில் வரும் வாசனை - சுகந்தம்!!

ரயில் தான் இப்படி என்றால் நிலையத்தின் வாசனை வேறுபாடுகள் அருமை. அதிலும் சாப்பாட்டுக் கடைகள், உணவு வாசனைகள் மிகவும் ரசிக்க வேண்டியவை. சிலருக்கு சில வாசனைகள் பிடிக்காது; அதனால் வாசனை மட்டம், கெட்ட வாசனை என்பார்கள். நானும் அப்படித்தான் பேசியிருக்கிறேன். ரொம்ப வருடம் கழித்து அரிசோனா பீனிக்ஸில் வியட்நாமிலிருந்து குடிபெயர்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் "வாசனையில் நல்லது கெட்டது இல்லை. உனக்கு சில வகை பிடித்திருக்கிறது; சில வகை பிடிக்கவில்லை. வாசனையில் மொத்தம் இரண்டு வகை தான் - இருக்கிறது; இல்லை - No good or bad smell; just there is smell or no smell" என்றார். அது மனதில் ஆழமாகப் பதிந்து போனது. அதனால் தான் இந்தப் பதிவில் வியர்வையும், கருவாடும் 'வாசனை'!

ஸ்ரீரங்க ரயில் நிலையத்தில் கிடைக்கும் பூரி-உருளைக் கிழங்கு வாசனை, சென்னை-தில்லி தடத்தில் ரயிலில் கிடைக்கும் மசால் வடை வாசனை, பீகார் ரயில்களில் கிடைக்கும் குடுவை டீ வாசனை என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியாவில் அனுபவித்த வித்தியாசமான அனேக வாசனைகளை நியூயார்க் ரயில் நிலையங்களில் என்னால் உணர முடியவில்லை. அனைத்து வண்டிகளும் குளிர் பதனப் படுத்தப் பட்டு, மூடியே இருக்கின்றன. சரக்கு ரயிலை தூர இருந்து தான் பார்க்க முடிகிறது. என் கணிப்பில் அறிவியல் ஆராய்ச்சியில் கண், காது புலன்கள் சம்பந்தப்பட்ட விஷங்களுக்கு தந்த முக்கியத்துவம் மூக்கு சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு இல்லை. அதனால் என்னால் முடிந்த தொண்டு, வாசனைக்கென்று ஒரு பதிவு.

அடுத்த பதிவில் ரயில் பயணத்தில் பார்த்த, பாதித்த உறவுகள் பற்றி.

முந்தைய பதிவுகள்:இரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5 இரயில் - 6

கருத்துகள் இல்லை: