ஞாயிறு, ஜூலை 05, 2009

யோசிக்கும் மொழி

யோசிக்கும் மொழி

யோசனை என்பது ஒருவிதமான கற்பனையே. மூளையில் ஏதோ ஒரு மூலை, நாம் யோசிக்கும் போது இயங்குகிறது. யோசனைகள் பல வகை. என் கணிப்பில் இவைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: 1. விடை தேடும் வகை 2. அசை போடும் வகை 3. ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை. ஒரு பிரச்சனையை தீர்க்க, வழிதேட முயல்கையில் வரும் சிந்தனைகள், ஒரு நல்ல நிகழ்ச்சி, திரைப்படம் பற்றி நினைத்து அசைபோட்டு இன்பமுறுகையில் வரும் சிந்தனையை விட வித்தியாசமானது. இதிலும், ஒரு சுய படைப்பில், அது கதையோ, கவிதையோ வரும் சிந்தனை கிட்டத்தட்ட ஒரு பிரச்சனையைத் தீர்க்க வரும் சிந்தனை போலிருந்தாலும், கொஞ்சம் மாறுபட்டது. படைப்பைப் பற்றி, அல்லது இயற்கையைப் பற்றி வரும் யோசனைகள், சிந்தனைகள் இந்த மாதிரியே.

சிறுவயதில் என் யோசனைகளில் அதிகமான நேரம் இந்த கற்பனை, ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகையிலும், விடை தேடும் வகையிலும் சென்றது. வளர்ந்து படிக்கும் காலத்தில், முக்கியமாக பரீட்சை நடக்கும் காலத்திற்கருகில் விடை தேடும் வகையிலேயே அதிக நேரம் சென்றது. இப்போதெல்லாம், அசைபோடும் வகையில் அதிக நேரமும், கொஞ்சம் பிரதிபலிப்பிலும் செல்லுகிறது. இதில் நான் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று நினைக்கிறேன்; எனக்குத் தெரிந்த பல பேர்கள் இது போன்றே நேர விகிதாசார வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த யோசனையில் ஒரு வித்தியாசத்தை இப்போதெல்லாம் பார்க்கிறேன். சிறு வயதில் சிந்தனைகள் தமிழிலேயே இருந்தன. அயல்நாட்டு வாசம், வேலை காரணமாக ஆங்கிலம் அதிகமாக பேசப் போக, இப்போதெல்லாம் சில விதமான சிந்தனைகள் - முக்கியமாக அலுவலக சம்பந்தமான விடை தேடும் வகையில் சிந்தனை ஆங்கிலத்திலேயே வருகிறது. இதுவும் நாடு விட்டு நாடு வந்த அனைவரும் உணர்ந்ததுதான் என்று நினைக்கிறேன்; நிச்சயமாகத் தெரியவில்லை. சமீப காலமாக அசைபோடும் கற்பனைகள் தவிர, மற்ற அனைத்து சிந்தனைகளும் ஆங்கிலத்திலேயெ இருப்பதைப் பார்க்கிறேன்.

இதையெல்லாம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் (இந்த யோசனையே ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகைதான்) தோன்றிய கேள்விகள் - யோசனைக்கு மொழி தேவையா? எந்த மொழி சிந்தனைக்கு அதிகம் உதவும்? இந்தக் கேள்விகளைப் பற்றி நான் ஆராய்ந்ததே இந்தப் பதிவும், இதன் தொடர் பதிவும்.

இங்கு நான் யோசனை, சிந்தனை, நினைப்பு என்ற வார்த்தைகளை ஒன்றே போல பாவித்து, மாற்றி மாற்றி எழுதியிருந்தாலும், இவற்றுக்குள் வித்தியாசம் இருக்க வேண்டும். குழப்பத்தைக் குறைப்பதற்காக, இந்தப் பதிவில் இதற்குப் பின் ஒவ்வொரு வகைக்கும் தனி வார்த்தையை உபயோகித்திருக்கிறேன்:
1. விடை தேடும் வகை – Problem solving - யோசனை;
2. அசை போடும் வகை – Thought/memory - நினைப்பு
3. ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை – Reflection/analysis - சிந்தனை

முதலில் யோசனை: இந்த வகைக்கு முக்கிய தேவை ஒரு பிரச்சனை அல்லது தீர்க்க வேண்டிய புதிர். வாழ்க்கையில் பெரும்பான்மையான சமயம் இந்த பிரச்சனையே ஒரு மொழி மூலமாகத் தான் நம் மூளைக்குத் தெரிய வருவதால், அது சம்பந்தமான யோசனையும் அந்த மொழியிலேயே வருவது இயல்பு. சிறுவயதில் நான் தமிழ்நாட்டில் தமிழிலேயே பேசி, கல்வி கற்றதால், அப்போது தமிழில் இந்த யோசனை இருந்ததும், இப்போது அலுவலகத்தில் ஆங்கிலத்திலேயே பேசி பணிபுரிவதால், இப்போது ஆங்கிலத்தில் இந்த யோசனை வருவதும் இயல்பே. மொத்தத்தில் பிரச்சனை எந்த மொழியோ அந்த மொழியே யோசனைக்கும் உதவும்.

இதில் ஒரு சங்கடம். குழந்தையாக இருந்த போதும் பிரச்சனைகள் இருந்திருக்கும், உ.ம். பசி. அப்போது மூளையில் யோசனை இருந்ததா? குழந்தை அழுது பால் குடிக்கையில் நிச்சயம் யோசனை இருந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது. ஆனால் குழந்தைக்கு மொழி தெரியாதே - யோசனை எந்த மொழி?

அடுத்த வாரம் தொடர்கிறேன்.

கருத்துகள் இல்லை: