இரயில் - 3
நான் வளர்ந்த காலத்தில் விளையாட்டு பொம்மைகள் வீட்டில் அதிகம் கிடையாது. வாங்கித்தந்த பொம்மைகளைவிட நாங்களாய் உருவாக்கிக் கொண்ட விளையாட்டு பொம்மைகளைத் தான் அதிகம் விரும்பி உபயோகித்தோம் - நான் மட்டுமல்ல, தெருவில் வசித்த முக்கால் வாசி சிறுவர்கள் வீட்டு நிலைமையும் இதே போலத்தான். மொட்டைமாடியில் நின்று பட்டம் (வீட்டில் வரும் செய்தித்தாளில் செய்தது) விடுவது, மற்றும் விதவிதமான வண்டிகள் செய்து விளையாடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி - பட்டமோ, வண்டியோ, செய்தது நாம் தானே! விளையாடுவதை விட செய்த பொருள் நன்றாக இயங்கினால் சந்தோஷம் அதிகம்.
பட்டம் அனேகமாக கோடையில்தான். ரயில் வண்டி செய்வது அதிகமாக மழைக்காலத்தில் - வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அடைந்து கிடக்கையில் சிகரெட்டு டப்பா, தீப்பெட்டி கொண்டு வண்டிகள் செய்வோம். தீபாவளி சமயத்தில் அதிகம் தீப்பெட்டி கிடைக்கும். உள்ளிருக்கும் பெட்டியை பாதி திறந்து அடுத்த தீப்பெட்டியுடன் இணைத்தால் தொடர் வண்டி ரெடி. துணி தைக்கும் ஊசியால் (ஊசி முக்கியம்; குச்சியால் நேரடியாக ஓட்டை போட முயன்றால், பெட்டி உடைய வாய்ப்பு உண்டு) தீப்பெட்டியில் ஓட்டை போட்டு, தென்னங்குச்சியை நுழைத்து (அது தான் ஆக்சில் - Axle) சக்கரத்துக்கு எது கிடைக்கிறதோ - அது வெண்டைக்காயின் காம்பாக இருக்கட்டும், அல்லது சப்போட்டா பிஞ்சு இல்லை தென்னங்குறும்பை! - அதை இரண்டு பக்கங்களிலும் சொருகி எந்த வண்டி வேகமாகப் போகிறது என்று போட்டி போட்டுக் கொண்டிருப்போம்.
ஒரு முறை பள்ளியில் சாக்பீஸ் டப்பா ஒன்று - தக்கையான மர டப்பா - கிடைக்க, அதிலும் இதே போன்ற வித்தை காட்டி வண்டி செய்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. இந்த வண்டி விளையாட்டில் நிஜத்தை பிரதிபலிக்க சேர்த்த டிக்கட், வண்டியின் டிரைவர் வண்டி நிற்கும் நிலையப் பெயர் சொல்வது (வரிசையான பெயர்கள் - அது எழும்பூர் - தாம்பரம், அல்லது அம்பத்தூர் - பீச் வழித்தடமாக இருக்கும்) என்றெல்லாம் விதிமுறைகள் ஏற்படுத்தி விளையாடினோம்!
ஒரு முறை - 75ல் என்று நியாபகம் - வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு ரயில் புத்தக நிலையம் ஒன்று வந்து ஒரு வாரம் இருந்தது. இரண்டு/மூன்று பெட்டிகளை ஒரு புத்தகக் கடை போல மாற்றி ஒரு வாரம் நிலையத்தில் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்பா எங்களை அழைத்து சென்று புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். அதில் ஒன்று 'யார் அதிக பலசாலி?' - பத்து/பதினைந்து பக்கங்கள், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு படம், ஒரு சிறுவன் அப்பாவிடம் 'உலகிலேயே யார் அதிக பலசாலி' என்று கேட்க, அப்பா ஒவ்வொரு இடமாக ஆழைத்துச் செல்வது போல கதை - முதலில் யானை, பஸ், பின் ரயில் நிலையம், கிரேன், கப்பல் என்றெல்லாம் பார்த்து விட்டு கடைசில் இதை எல்லாம் இயக்கும் மனிதன் தான் அதிக பலசாலி என்று முடியும்.. அங்கு வாங்கின இன்னுமொரு புத்தகம் உள்ளங்கை அளவுதான் - ஆனால் நிறைய பக்கங்கள். எல்லாமே பாட்டுதான் - ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இல்லை நான்கு வரிகள். அதில் படித்த ஒரு ரயில் பாட்டு இன்னமும் நினைவில் இருக்கிறது.
ரயிலே ரயிலே ரயிலே
ரயிலும் சிறிது வேகமாய்ப் போனால்
மெயிலே மெயிலே மெயிலே
டிக்கட் டிக்கட் டிக்கட்
டிக்கட் இன்றி பயணம் சென்றால்
இக்கட் இக்கட் இக்கட்
பாலம் பாலம் பாலம்
பாலத்தின் மேல் பாராது போனால்
ஓலம் ஓலம் ஓலம்
என்று ஆரம்பிக்கும் - மொத்தம் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் ஒரு பாட்டுக்கு.
ரயிலைப் பார்த்து, கேட்டு, நுகர்ந்து அந்த அனுபவத்தை பின்னாளில் பள்ளி/கல்லூரியில் படித்த பாடங்களோடும், புத்தகங்களோடும் பொருத்தி புரிந்து கொண்டதையும் அடுத்த பதிவில் தருகிறேன்.
முன்பதிவுகள்
இரயில் – 1
இரயில் – 2
2 கருத்துகள்:
நீங்க எழுதுனதைப் படிச்ச பின்னாடி தான் நானும் ஓரிரு முறை இந்த தீப்பெட்டி வண்டி செய்து விளையாடிய நினைவு வருகிறது. :-)
குமரன்
நினைப்பை அசைபோடத்தானே இந்தப் பதிவே!:-)
கருத்துரையிடுக