செவ்வாய், டிசம்பர் 27, 2005

தெரியாமல் தெரிந்தது

சென்ற வாரம் இராமநாதன் ‘தத்து(பி)த்துவம் - 2: பிஸியாலஜி’ என்ற தலைப்பில் நம் உடலினுள் இருக்கும் அறிவைப் பற்றி எழுதியிருந்தார். நம்மால் வார்த்தைகளால் சொல்ல முடியாவிட்டாலும், உடலினுள் நடக்கும் நிறைய விஷயங்கள் (உதாரணமாக 'பார்ப்பது') சிக்கலானவை; இந்த மாதிரி செயல்கள் (உள் அறிவுகள்) நமக்கு வார்த்தைகளால் (வெளி அறிவு) விளக்க முடியாமல் ஒரு விதமான 'கம்யூனிகேஷன் கேப்' இருக்கிறது என்றும், இந்த 'பார்டிஷண்' பற்றி கவலைப்படவேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

அவர் பதிவில் கூறியிருந்த சில விஷயங்கள் பற்றி நான் யோசித்ததுண்டு. அந்த மாதிரி யோசித்தவைகளை (குருட்டு யோசனையை) ஒரு பதிவாகவே போட்டு விட்டேன்.

நமக்கு தெரிந்த அறிவை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று புற அரிவு (தெரிந்து தெரிந்தது - வெளியறிவு); நம்மால் வார்த்தைகளால் விளக்க முடிந்தால் அது இவ்வகையைச் சாரும். இரண்டாவது உள்ளறிவு (தெரியாமல் தெரிந்தது) - இராமநாதன் எழுதிய 'பார்ப்பது' இந்த வகையைச் சாரும். நம்முடலில் நம் வெளியறிவின் ஆணையை எதிர்பாராமல், இருதயம் துடிப்பது, நுரையீரலில் காற்றிலிருந்து பிராணவாயுவைப் பிரித்து இரத்தத்துடன் கலப்பது போன்ற காரியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த மாதிரி காரியங்களில் ஏதாவது சின்னத் தடங்கல்கள் வந்தால் கொஞ்சம் மாற்றிக் கொண்டு (கொட்டாவி - நம்முடலின் பிராணவாயு அளவைக் கூட்டிக் கொள்ள என்று படித்ததாக ஞாபகம்) தொடர்ந்து தொந்தரவில்லாமல் நடத்திக்கொள்ளும் சாமர்த்தியமும் உண்டு. இதெல்லாம் நம் புற அறிவுக்கு தெரிந்திருக்கவேண்டும் என்றில்லை; நிறையப் பேருக்கு இது தெரியாது (நான் உள்பட). அதே சமயத்தில் நம்முடலில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கிறபடியால், நமக்கு இது பற்றித் தெரிந்திருக்க வேண்டும்; இந்த அறிவு நம் உடலின் ஒரு பாகத்தில் பதிந்திருக்க வேண்டும்.

இந்த உள்ளறிவில் இருக்கும் விபரங்கள் நம் புற அறிவோடு சேராமல் ஒரு தடுப்பு இருக்கிறது. இந்த தடுப்பைப் பற்றி - முக்கியமாக இந்த தடுப்பை நீக்குவது பற்றி தெரிந்துவிட்டால் எவ்வளவோ நல்லதாகப் போய்விடும். என் மருத்துவ நண்பர் ஒருவர் சொன்னது - 'யார் வேண்டுமானாலும் மருந்து கொடுத்துவிடலாம்; வியாதி என்ன என்று தெரிந்து கொண்டுவிட்டால். அங்கே தான் சிக்கலே ஆரம்பம்'. இந்த 'Diagnosis’ சிக்கலுக்கு நாம் ஒரு தீர்வு கொண்டுவந்து விடலாம். நாம் மருத்துவரிடம் போய் 'கண் மங்கலாகத் தெரிகிறது, வலிக்கிறது' என்றெல்லாம் சொல்வதற்குப் பதிலாக 'Na+ (sodium) stay open in photoreceptor when LIGHT is being absorbed' என்று சொல்லலாம் :-] (நன்றி இராமநாதன்!)

இது முதல் கட்டம் - நாம் 'எப்படி' என்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளலாம் (கண் எப்படிப் பார்க்கிறது? காது எப்படிக் கேட்கிறது). அடுத்த கட்டமாக பிற உயிர்களில் உள்ள சில சக்திகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் (நம்மை விட நாய் ஏன் அதிகமாக மோப்பம் பிடிக்கிறது?); அடுத்து தாவரம் (எப்படி சூரிய ஒளியிலிருந்து உணவு தயாரிப்பது?).

இந்த மாதிரி 'எப்படி' கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்தால் 'ஏன்' என்ற கேள்விக்கும் விடை கிடைக்கலாம் (காது ஏன் சில ஒலியலைகளை மட்டும் கேட்கிறது?) இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் தேடத் தேட நம் புற அறிவும் வளரும்; நமக்கும் நன்மையுண்டாகும் - உண்மைதானே? ஆகையால் இந்த உள்ளறிவு - வெளியறிவு தடுப்பின் கதவு எங்கே? எப்படித் திறப்பது என்று யாராவது ஆராய்ந்து சொன்னால் தேவலை.

இங்கே இலக்கு 'பார்ப்பது'. அதை நான் எப்போதோ அடைந்துவிட்டாலும், 'பார்ப்பது' என்ற பயணத்தை ஆராய்ந்ததில் சில சிந்தனைச் சந்தோஷங்கள்.

2 கருத்துகள்:

rv சொன்னது…

ரங்கா,
மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நான் சொல்ல வந்தது ஒரு வித லாடுலபக்கு தத்துவமே. பிஸியாலஜியை பொருத்தவரைக்கும்.

அதுவே மருத்துவப்படிப்பில் பிஸியாலஜி முடிந்த அடுத்தவருடம் pathology வரும். அப்போது நான் சொன்னது தவிடுபொடியாகிவிடும். எப்படி நார்மலாக இயங்குகிறது என்று தெரிந்தால்தானே எது abnormal என்று புரியும் இல்லியா? இதுதான் நான் சொன்னதை உடைப்பதற்கு சிறந்த ஆயுதம். அதை தாணு செய்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், செய்யவில்லை. :)

//'யார் வேண்டுமானாலும் மருந்து கொடுத்துவிடலாம்; வியாதி என்ன என்று தெரிந்து கொண்டுவிட்டால். அங்கே தான் சிக்கலே ஆரம்பம்'. //
:))))

//பதில் தேடத் தேட நம் புற அறிவும் வளரும்//
கண்டிப்பாய். தேடல் தானே வாழ்க்கை. பயலாஜிக்கலாக சரியான பார்ட்னரை தேடுகிறோம். சோஷியலாக சிலவற்றை தேடுகிறோம். ஸ்பிரிட்சுவலாக தேடிக்கொண்டேயிருக்கிறோம். தேடல் நின்றால் மனித குலத்திற்கே stagnation தான்.

//'Na+ (sodium) stay open in photoreceptor when LIGHT is being absorbed' என்று சொல்லலாம் :-] (நன்றி இராமநாதன்!)
//
மற்றும்
//இந்த உள்ளறிவு - வெளியறிவு தடுப்பின் கதவு எங்கே? எப்படித் திறப்பது என்று யாராவது ஆராய்ந்து சொன்னால் தேவலை.
//
உண்ட வீட்டுக்கே ரெண்டகம்??? :P

இந்த வாரத் தத்து(பி)த்துவமும் போட்டாச்சே? இன்னும் பாக்கலியோ??

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி இராமனாதன் - மிக விபரமாக பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்.

"உண்ட வீட்டுக்கே ரெண்டகம்?"
நான் அப்படி நினைக்கவில்லை. சம்பந்தமில்லாத சிம்டங்களைச் சொல்லி ஒரு மருத்துவரின் திறமையை தேவையற்ற பரிசோதனைகளில் வீணடிக்காமல் இன்னும் உபயோகமாகப் பயன்படுத்தலாமே என்றுதான் நினைத்தேன்.

இப்போதுதான் தங்கள் பதிவைப் பார்த்தேன் ;-)