சனி, டிசம்பர் 03, 2005

எந்த சட்டம் நியாயம்?

சமீபத்தில் ஸ்ரீகாந்த் மீனாட்சி அபு சலேம் இந்தியாவுக்கு விசாரணைக்காக கொண்டு வரப்பட்டதைப் பற்றி எழுதியிருந்தார் (குற்றம் இங்கே, தண்டனை எங்கே?) . இந்த வாரம் இராமநாதனும், ஷ்ரேயாவும், சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தியதற்காகான குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியக் குடிமகனைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

இந்த வழக்குகளில் முக்கியமான பிரச்சனை 'எந்த சட்டம் செல்லும்?' என்பதுதான். குற்றம் நடைபெற்ற நாட்டு சட்டமா? அல்லது, குற்றமிழைத்தவர் நாட்டு சட்டமா? அபு சலேம் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும், அவருக்கு இந்திய சட்டத்தில் கிடைக்க வேண்டிய தண்டனை கிடைக்காது - அதாவது குற்றம் நடந்த நாட்டு நீதி/தண்டனை கிடைக்காது! வான் ஙுவென்க்கு கிடைத்தது குற்றம் நடந்த நாட்டு நீதி/தண்டனை. எது சரி?

எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும், மெக்ஸிகோ நாட்டு போதை மருந்து கடத்தும் கூட்டங்களுக்கு எதிராக அமெரிக்க அரசு நிறைய நடவடிக்கைகள் எடுத்தது. அதில் மெக்ஸிகோ நாட்டு சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் உண்டு. 1992ல் அமெரிக்க உயர் நீதி மன்றம் 6க்கு 3 என்ற பெரும்பான்மையில் மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்க ஏஜென்ட்களால் கடத்தி வரப்பட்ட ஹம்பர்டோ அல்வாரிஸ்-மக்கெய்ன் மீதுள்ள "குற்றச்சாட்டை விஜாரித்து தீர்ப்பளிக்கும் உரிமை, மெக்ஸிகோ சட்டத்திற்கு விரோதமாக கடத்தப்பட்டதால் குறைந்துவிடாது" என்று தீர்ப்பளித்தது. அப்போது தலைமை நீதிபதி சமீபத்தில் காலமான வில்லியம் ரென்குயிஸ்ட் இதை ஆதரித்து தீர்ப்பளித்தார். விபரங்களுக்கு: http://www.crf-usa.org/bria/bria10_4.html

அதாவது, அமெரிக்க சட்டத்திற்கு எதிராக ஒருவர் செயல்பட்டதாக ஒருவர் மீது குற்றமிருந்தால் அவர் எந்த நாட்டிலிருந்தாலும், அவரை அமெரிக்க உளவுப் பிரிவோ அல்லது எந்த ஒரு அரசு சம்பந்தப்பட்ட ஊழியரோ குற்றம் சாட்டப்பட்டவரை கடத்தி வந்தால், அமெரிக்க நீதிமன்றங்கள் அந்த வழக்குகளை விசாரிப்பதோ அல்லது தீர்ப்பு வழங்குவதோ தவறில்லை; குற்றம் சாட்டப்பட்டவரை கடத்துவது தவறில்லை. இந்த தீர்ப்பின் உண்மையான விளக்கம், நாடுகளுக்கு இடையே இருக்கும் ஒப்பந்தங்கள் (அபு சலேமுக்கு இந்த மாதிரி ஒப்பந்தம் தான் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது) மீறப்படலாம் என்பதுதான். கடத்தல் குற்றம்; ஆனால் குற்றம் விசாரிக்கவே கடத்த வேண்டிய நிலை கொஞ்சம் பயமூட்டத்தான் செய்கிறது.

உலகம் முழுவதற்கும் ஒரு பொதுப் படையான சமூக சட்டம் வந்தால் இது போன்ற பிரச்சனைகள் அதிகம் வராது. அந்த மாதிரி ஒரு நிலை வருமா? ஒரு நாட்டுக்குள்ளேயே பொது சட்டம் கொண்டுவர முடியவில்லை - மதங்களின் ஆக்கிரமிப்பு, ஓட்டுக்காக அரசியல்வாதிகளின் பாரபட்சம் என்பவை எல்லா நாட்டிலும் இருந்து வருகிறது. அதுவரையில் இந்த மாதிரி குழப்பங்கள் இருந்து கொண்டு தான் இருக்கும்.

2 கருத்துகள்:

Srikanth சொன்னது…

சுவாரசியமான பதிவு, அமெரிக்காவின் இந்தத் தீர்ப்பு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குற்றவாளிகளைக் கடத்தி வருவது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. ஆனால், அது தவிர, ஒரு நாட்டின் இறையாண்மை என்பதை மதிக்கும் விதத்தில், குற்றம் நடந்த நாட்டின் சட்டங்கள் அதை விசாரிப்பதில் செல்லுபடியாகும் என்பதே சரி என்று தோன்றுகிறது. அதை மற்ற நாடுகளும் மதிக்க வேண்டும், அதில் தான் பிரச்னை.

ரங்கா - Ranga சொன்னது…

ஸ்ரீகாந்த்,
கடத்துவது இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சி.ஐ.ஏ. வின் ரகசிய சிறைகள், இத்தாலி நாட்டின் வழக்கு, விடுதலையான ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு குடிமகன்களின் வழக்கு என்று நிறைய விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெளியே தெரிவதே இவ்வளவு என்றால், நடப்பது எவ்வளவோ?

ரங்கா.