ஞாயிறு, ஜனவரி 08, 2006

எதற்காக கொடுக்க வேண்டும் கிஸ்தி?


இந்த வருடம் (2006) ஜனவரியிலிருந்து நியூயார்க் மாநிலத்தில் ஒரு சிறு சட்ட திருத்தம் - மாநில வருமான வரிவிதிப்பில்.  செப்டம்பர் 11, 2001க்குப் பிறகு நியூயார்க் நகரத்திலிருந்த பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் பாதுகாப்பு கருதி தங்கள் அலுவலகப் பிரிவுகளை அண்டை மாநிலங்களான நியூஜெர்ஸிக்கும், கன்னக்டிகட்டுக்கும் பிரித்து அனுப்பின.  நியூயார்க் நகரத்தில் வேலை பார்க்கும் பலரும் (முக்கியமாக உயர் பதவியிலிருப்பவர்கள்) அருகிலிருக்கும் இவ்விரு மாநிலங்களிலும் தான் குடியிருக்கிறார்கள்.  முன்பெல்லாம் அவர்கள் இரு மாநிலங்களின் வருமான வரியும் கட்ட வேண்டியிருந்தது (வசிக்கும் மாநிலம், பணி புரியும் மாநிலம்).  இப்போது அவர்கள் வசிக்கும் மாநிலத்திலேயே அலுவலகப் பிரிவுகள் வந்து விட்டதால் வேலைக்காக நியூயார்க் நகரம் வருவது குறைந்து போய்விட்டது.  பணிக்காக வாரம் ஒரு முறை நியூயார்க் நகரம் வந்து போனாலும், அவர்களின் பிரதான அலுவலகம் அவர்கள் வசிக்கும் மாநிலத்திலேயே இருந்து விட்டதால் வரியும் இல்லை

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக நியூயார்க் மாநிலத்தின் வருமான வரி எதிர்பார்த்ததை விடக் குறைந்து போய்விட்டது. நிதிப் பற்றாக்குறையை சரிசெய்ய இந்த வருடம் முதல் நியூயார்க் மாநிலம் தீர்மானித்தது.  வேற்று மாநிலங்களில் பணி புரிபவர்கள் தங்கள் வேலை நிமித்தமாக வருடத்திற்கு பதிநான்கு நாட்களுக்கு மேல் நியூயார்க் வந்தால் வருமான வரி செலுத்த வேண்டும் என்று சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.  இந்த 'வேலை நாள்' கணக்கிற்கு, ஒரு நாள் முழுதும் நியூயார்க்கில் இருக்க வேண்டும் என்றில்லை - ஒரு மணி நேரம் போதும்!  பயிற்சி, கல்வி என்பது போன்ற விதிவிலக்கு இருந்தாலும், பெரும்பான்மையானவர்கள் இந்த பதிநான்கு நாள் இலக்கை எட்டிவிடுவார்கள், வருமானம் பெருகும் என்று நியூயார்க் மாநில அரசு நினைக்கின்றது.

பாதுகாப்பு செலவுகள் என்றெல்லாம் கூறப்படும் காரணங்களை கேட்டு, மேலோட்டமாகப் பார்த்தால் இது சரி என்று தோன்றினாலும், இதே போன்ற முடிவுகளை மற்ற மாநிலங்களும், ஏன் மற்ற நாடுகளும் எடுத்தால் என்னவாகும்?  அமெரிக்காவில் நிறைய இடங்களில் வசிப்பது ஒரு மாநிலம், பணி புரிவது ஒரு மாநிலம் என்று இருக்கிறது.  இதைத் தவிர்த்து பணிக்காக வேறு மாநிலங்களுக்குப் போவது என்பதும் மிக அதிகம்.  இப்படி ஒவ்வொரு மாநிலமும் வரி விதித்தால், வரியும் அதிகம், இதை மேற்பார்வை பார்த்து கணக்கு வைத்துக்கொள்ள வேண்டிய பணியும், இடைஞ்சல்களும் அதிகம்.

இதனால் உத்தியோக நிமித்த பயணங்கள் குறையும், வர்த்தகம் குறையும்.  மொத்தத்தில் இந்த மாதிரி வரி விதிப்பினால் வரும் வருமானத்தை விட, பயணக் குறைவால் ஏற்படும் வருமான இழப்பு அதிகம்.  இதைப் பார்த்து விட்டு நாடுகளும் இந்த மாதிரி முடிவெடுத்தால் குழப்பமும், கோபமும் தான் வரும். உதாரணத்திற்கு இந்தியாவிற்கு வரும் மேல்நாட்டு அதிகாரிகள் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது முக்கியமாக மென் பொருள் வியாபார நிறுவனங்களினால்.  இந்தியாவும், இம்மாதிரி பணி நிமித்தமாக இந்தியா வரும் அதிகாரிகள், இந்தியாவில் தங்கும் நாட்களுக்கு வரும் சம்பளத்தில் இந்திய வருமான வரி கட்ட வேண்டும் என்று கூறினால்?

வரும் வருமானத்தை வைத்து நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க முயற்சிப்பதை விடுத்து இம்மாதிரி புது வரிகள் விபரீதமான நினைப்பையும், விளைவுகளையும்தான் உருவாக்கும்.

3 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

அட சூப்பர் ஐடியாவா இருக்கே. விட்டா சம்பாதிக்கிறதுல 50% வரி கட்டியே போய்விடும்ன்னு நினைக்கிறேன்.

நீங்க சொன்னது சரிதான் ரங்காண்ணா. இப்படி ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நாடும் சட்டத் திருத்தம் கொண்டுவந்தா வருமானத்தை விட இழப்பு தான் அதிகமா இருக்கும். யாரும் இதை எதிர்த்து இன்னும் கோர்ட்டுக்குப் போகலையா?

Boston Bala சொன்னது…

அடப்பாவிங்களா..

ரங்கா - Ranga சொன்னது…

குமரன்,
இது வரை யாரும் நீதிமன்றம் போகலை - ஆனா எதிர்பார்க்கலாம் :-) எனக்குத் தெரிந்த வரை இந்த மாதிரி வரிகள் எல்லாம் பற்பசை மாதிரி - வெளியே கொண்டுவர முடியும், திரும்ப அனுப்பறது கஷ்டம். இந்த வரி இருக்கும் என்று தான் தோன்றுகிறது! :-(

பாலா - எனக்கும் கோபம் வருது; ஆனா திட்ட மனசு வரலை - அவங்க வேலையில் நான் இருந்தா இதே தான் செய்திருப்பேன் என்று நினைக்கிறேன்.