வியாழன், நவம்பர் 23, 2006

தேநீர் – 8

அடுத்ததாக CTC வகை. CTC வகைகள் இரண்டு வகைகளிலும் - பாப்புலர், பிரீமியம் – வரும். இந்த டீத் தூள்களை உன்னிப்பாகப் பார்த்தால் ஒரு விதமான உருண்டை போலத் தெரியும். இதை ஒரு ஊசியால் நெம்பினால் நீளமான இலை போல விரியும். அழுத்தினால் இவைகள் பொடியாக வாய்ப்பு உண்டு. இவற்றை பிளாஸ்டிக் பைகளில் பொட்டலம் போடுவது சுலபமானது. காகிதப் பொட்டலமும் போடலாம் – பொட்டலம் போடும் இயந்திரம் உயர் தரமானதாக இருந்தால். பிளாஸ்டிக் பொட்டலம் போடும் மிஷினையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பிளாஸ்டிக் தாள் ஒரு உருளையாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இயந்திரத்தின் மேலே டீத்தூள் இருக்கும். இயங்கும் போது, பிளாஸ்டிக் தாளை ஒரு பை போல மடித்து, டீத்தூளை அளந்து கொட்டி, பின் சூடான கம்பியின் மூலம் பிளாஸ்டிக் பையை உருக்கி ஒட்டி பையை அனுப்பும். ஆங்கிலத்தில் இதை HEAT SEALING என்று சொல்வார்கள். இதிலும் வெப்பம் இருந்தாலும், இயந்திர அமைப்பினால் டீத்தூளுக்கு பாதிப்பு இருக்காது. இந்தப் பிளாஸ்டிக் பைகள் ஒரு மாலை போல வந்து கொண்டிருக்கும். பத்து, பத்தாக எண்ணி, இயந்திரத்தை இயக்குபவர்கள் அதை பிரித்து, காகித அட்டை டப்பாக்களில் போட்டு மூடி அனுப்புவார்கள்.

முழு இலை தேயிலை வகைகள் விலை அதிகம். அவற்றின் தனி சிறப்பு மணம்தான். ஆதலால் இந்த வகைகளை காற்றுப் புகாத வகையிலேயே பொட்டலம் போடுவார்கள். அது மர டப்பாவோ அல்லது தகர டப்பாவோ – உள்ளே காற்று செல்லக் கூடாது. காகிதப் பொட்டலங்களும் உண்டு. இது சாதாரணக் காகிதமாய் இருக்காது – அலுமினியப் பூச்சுடன் கூடிய உயர் வகைக் காகிதம். காகித அட்டையின் தரமும் உயர்வாகவே இருக்கும். இந்த டப்பா வகைகள் ரொம்பவும் அதிகம் செய்ய மாட்டார்கள். மற்ற வகைகள் மாதிரி இவைகள் டன் கணக்கில் விற்காது - வாங்க ஆளும் பணமும் வேண்டுமே! பொட்டலம் போட உபயோகிக்கும் இயந்திரத்தை நன்கு கண்காணிப்பார்கள். தவிர தேர்ந்த தொழிலாளிகள் மட்டுமே இந்த வகைகளுக்கு பொட்டலம் போட வருவார்கள். தரக் குறைவும், இழப்பும் இருக்கக் கூடாது என்பதற்காக.

நான் அப்போது இந்த ‘டிப் டிப்’ வகை பொட்டலங்களை உருவாக்குவதைப் பார்க்கவில்லை; சில வருடங்கள் கழித்து வேறு ஒரு ஆலையில் தான் பார்த்தேன். காகித பொட்டலங்களின் இயந்திரங்களுக்கும், இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை. ‘டிப்’ பையும் ஒரு விதமான காகிதத்தில் தான் செய்யப் படுகிறது. இயந்திரமே காகிதப் பையில் டீத்தூளைப் போட்டு, நூலை வைத்து, ஸ்டேப்லரால் பின்னைக் குத்தி அனுப்பி விடும். ஐம்பதோ, நூறோ வந்தவுடன், ஒரு டப்பாவில் போட்டு அனுப்பி விடுவார்கள்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 7
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

4 கருத்துகள்:

இலவசக்கொத்தனார் சொன்னது…

இந்த ஹெர்பல் டீ, க்ரீன் டீ எல்லாம் சொல்லறாங்களே. அது பத்தியும் சொல்லுங்க.

எங்க அலுவலகத்தில் மல்லிகையுடன் க்ரீன் டீ அப்படின்னு ஒண்ணு இருக்கு. ரொம்ப நல்லா இருக்கு.

வடுவூர் குமார் சொன்னது…

இந்த டிப் டிப் வகையில் ஒரு பிரச்சனையையும் இங்கு பார்த்தேன்.தெரியாத்தனமாக தண்ணீர் அதன் மேல் சிதறிவிட்டால் அவ்வளவு தான். தேநீரில் கலரும் கிடைக்காது,சுவையும் போய்விடும்.தூக்கிப்போடுவது தான் உத்தமம்.

ரங்கா - Ranga சொன்னது…

இ.கொ.

ஹெர்பல் டீ என்பதில் பல வகை இருக்கிறது. இதில் முக்கால்வாசி ஒரு மாதிரியான மார்க்கெட்டிங் (பம்மாத்து) வேலை. டீ யே கிடையாது; வெறும் ஹெர்ப் தான். வெவ்வேறு வகையான மூலிகைகளை (இலை, தழைகளை) டீ மாதிரி திரவமாகத் தந்தால் அது ஹெர்பல் டீ.

இந்த க்ரீன் டீ என்பது தேயிலை தான். தயாரிக்கும் முறையில் தான் வேறுபாடு. சாதாரண (கறுப்பு) டீத் தூளை தோட்டத்தில் பறித்தவுடன் ஒரு மாதிரி ஊற வைத்து பதப்படுத்தி பொடி செய்வார்கள். இந்த க்ரீன் டீ வகையில் ஊற வைப்பதற்கு பதிலாக நீராவியால் பதப்படுத்துவார்கள். சில பேர் இது மாதிரி செய்வதால் ஆக்ஸிடைஸ் ஆகாமல் சத்து டீயில் இருக்கும் என்று சொல்லி க்ரீன் டீ என்று விற்பனை செய்கிறார்கள். காப்பியில் எப்படி சின்னமன் மாதிரி பொருளெல்லாம் போடுகிறோமோ அதே போல டீயிலும் சகட்டுமேனிக்கு மற்ற பொருட்களை கலந்து விற்பனை செய்கிறார்கள். வாங்குவதற்கு ஆளிருக்கும் வரை இது மாதிரி நிறைய வரும்.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

குமார்,

ஆமாம். டீப் பைக்குத் தெரியாதல்லவா - நீங்கள் தெரியாத்தனமாக தண்ணிரை தெளித்தீர்களா அல்லது அதன் இயல்பான வேலைக்கு (டீத் தண்ணீர் தயாரிக்க) தயார்ப்படுத்துகிறீர்களா என்று. அதனால் தண்ணீர் பட்டவுடன், அது அதிகமான ஈரப்பதமாக இருந்தாலும் சரி, அது டீத்தண்ணீராக மாற்றப்படும். இது டிப் டிப் வகைகளுக்கு மட்டுமல்ல, வெறும் பொட்டலத்திலிருந்து வீட்டு டப்பாவில் போட்டு வைக்கும் போதும் கவனிக்க வேண்டிய ஒன்று. டப்பா ஈரமாக இருந்தால் டீ அம்பேல்.

ரங்கா.