செவ்வாய், நவம்பர் 21, 2006

தேநீர் – 7

இந்தப் பொட்டலங்களை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். காகிதம், பிளாஸ்டிக் மற்றும் இதர வகைகள் (மர டப்பா, இரும்பு/தகரம் டப்பாக்கள் போன்றவை). காகிதப் பொட்டலங்களில் அனேக வகைகள் உண்டு – முழுவதும் காகிதத்தால் ஆன பொட்டலத்திலிருந்து, காகிதத்தை மற்ற பொருட்களோடு சேர்த்து பொட்டலம் தயாரிப்பது வரை. இதில் சிறு வயதில் எனக்குப் பிடித்தது தோரணம் போல தொங்க விடப்படும் சிறு காகிதப் பொட்டலங்கள். உள்ளங்கை அளவே இருக்கும் சிறு காகிதப் பையில் டீத்தூள் இருக்கும், இந்தப் பைகளை மாவிலைத் தோரணம் போல ஒரு கயிற்றால் கட்டி கடைக் காரர்கள் தொங்க விட்டிருப்பார்கள். காகிதப் பையில் ஐந்து பைசா, பத்து பைசா சித்திரங்கள் இருக்கும். இந்தக் காகிதப் பைகளில் முக்கியமான இரண்டு விஷயங்கள் – செலவு குறைவு; ஆனால் சுவையையும், மணத்தையும் அதிகம் பாதுகாக்காது.

டீ வகைகளை விற்பனையில் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிப்பார்கள் – பாப்புலர் (POPULAR) மற்றும் பிரீமியம் (PREMIUM). வித்தியாசம் விலையில்; முதலாவது விலை குறைவு, வரும் லாபமும் குறைவு. டீத்தூள் தயாரிக்கும் முறையில் மூன்று வகைகள் – டஸ்ட் (DUST), CTC (CUT/TURN/CURL), மற்றும் முழு இலை (WHOLE LEAF) வகை. டஸ்ட் வகைகள் காகிதப் பொட்டலம் தான் – வெகு அரிதாக வேறு ஏதாவது வகையில் பொட்டலம் கட்டுவார்கள். CTC வகைகள் பெரும்பான்மையாக பிளாஸ்டிக்; முழு இலை வகைகள் அதிகமாக விற்பனையாவது உயர்தரக் காகிதம், மற்றும் இதர வகைகள் – டப்பாக்களில் (மரம், இரும்பு/தகரம் போன்றவை). இதுமாதிரி அமைவதற்கும் பொட்டலம் போடும் முறையும், அந்த டீத்தூள்களின் இயல்பும் ஒரு காரணம். அனேகமாக ‘பாப்புலர்’ என்று வகைப்படுத்தப்படும் குறைந்த விலைத் தேயிலைகள் இந்த மாதிரி காகிதப் பொட்டலங்களில்தான் வரும்.

காகிதப் பொட்டலம் போடும் இயந்திரங்கள் பொட்டலத்தை மடிக்கும் போது வரும் அழுத்தம் டீத்தூளையும் கொஞ்சம் பாதிக்கும். CTC மற்றும் முழு இலை வகைகள் இந்த அழுத்தத்தில் உடைய, பொடியாக வாய்ப்புக்கள் உண்டு. காகிதப் பொட்டலங்களின் உற்பத்தி செலவும் சற்று குறைவு. ஆதலால் டஸ்ட் டீ வகைகளை காகிதப் பொட்டலங்களில் போடுவது செலவையும் குறைக்கும் (பாப்புலர் வகைகளுக்கு இது முக்கியம் – டஸ்ட் டீ வகைகள் அனேகமாக பாப்புலர் வகைகள் தான் விலையில்), பொட்டல இயந்திரங்களினால் தரக் குறைவும் வராது.


இதிலேயே கொஞ்சம் அதிகம் விலைபோகும் தேயிலைக்கு, காகித டப்பா/பொட்டலத்திற்குள் அலுமினியப் பூச்சுடன் உள்ள தாளை வைத்து, அதனுள் டீத் தூளை வைத்து பொட்டலம் கட்டுவார்கள். இது காற்றுப்புகா வண்ணம் இருக்குமாதலால், சுவையும் மணமும் கொஞ்ச நாள் அதிகம் இருக்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் காகிதத்தை ஒட்டப் பயன்படுத்தப்படும் கோந்து. இந்த பசை சரியான அளவோடு இருப்பதோடு இல்லாமல், உள்ளே இருக்கும் டீத்தூளின் சுவையையோ, மணத்தையோ பாதிக்காமல் இருக்க வேண்டும். பொட்டலம் கட்டும் இயந்திரங்களில் இந்தப் பசை வைக்கப் பட்டிருக்கும். காகிதம் வெறும் தாளாகவே இயந்திரத்தில் வரும்; இயந்திரமே தாளை மடித்து பொட்டலம் ஆக்கி, டீத்தூளைப் போட்டு, பசை தடவி ஒட்டி விடும். பார்க்க மிகவும் அழகாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

4 கருத்துகள்:

இலவசக்கொத்தனார் சொன்னது…

//இயந்திரமே தாளை மடித்து பொட்டலம் ஆக்கி, டீத்தூளைப் போட்டு, பசை தடவி ஒட்டி விடும். பார்க்க மிகவும் அழகாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும்.//

ஒரு விடியோ இருந்தால் போடுங்களேன்.

வடுவூர் குமார் சொன்னது…

இங்கு வானொலி நிகழ்ச்சியில் ஒருவர் இந்த மாதிரி காகிதப்பைகளில் வரும் டீ தூள் மட்டமானவை என்றும் அதை வாங்குவதை தவிர்க்கவேண்டும் என்றும் சொன்னார்.உண்மையா?

ரங்கா - Ranga சொன்னது…

இ.கொ.

அப்போது போட்டோ கூட பிடிக்கலை என்கிற வருத்தம் இன்னமும் இருக்கிறது. இணையத்தில் தேடிப் பார்க்கிறேன். நீங்களும் தேடிப் பார்த்து, கிடைத்தால் சொல்லுங்கள்.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

குமார்,

இந்த மாதிரி பொதுப்படையான தீர்ப்புகளை நான் ஒத்துக் கொள்வதில்லை. நிறுவனங்கள் ஒவ்வொரு வகைக்கும் (பிராண்டு) எக்கச்சக்கமான பணம் செலவு செய்கின்றன - அந்த பிராண்டின் இமேஜை தக்க வைத்துக் கொள்ள. தெரிந்தே தரக் குறைவான டீயை யாரும் விற்பது இல்லை. இந்த டிப்-டிப் வகையில் மக்கள் டீத்தூளை நேராகப் பார்ப்பது இல்லை. கையில் எடுத்து டீ போடும் போது அதில் ஏதாவது மண் துகளோ அல்லது அசுத்தமோ இருந்தால் தெரிகிறது. பையில் இருக்கையில் தெரிய வாய்ப்பில்லை.

இரண்டாவது, தரம் என்பது ஒவ்வொருவரின் ரசனை, செலவழிக்கும் திறன் - இரண்டையும் பொறுத்தது. டிப் வகை டீயின் சுவை பிடிக்கவில்லை என்று தோன்றினால் வேறு உயர்ந்த பிராண்ட் டீ வாங்க வேண்டியதுதான். அதற்காக டிப் வகையை மட்டம் என்று சொல்லுவதை நான் ஒத்துக் கொள்ள முடியாது.

ரங்கா.