வியாழன், நவம்பர் 16, 2006

தேநீர் - 5

இப்படி ஒரு வழியாக தேயிலைத் தோட்டத்திலிருந்து கிளம்பி, ஏலத்தில் கூவாமல், விரல், கை தூக்கி, தலையாட்டி எடுக்கப்பட்டு, மூன்று பேரால் மதிப்பிடப்பட்டு தொழிற்சாலையில் வந்திறங்கிய தேயிலைத் தூள்/இலை பொட்டலம் ஆவதற்குமுன் தேற வேண்டிய இன்னுமொரு தேர்வு - கலவை (அதாங்க BLENDING). நாம் கடையில் வாங்கும் டீப் பொட்டலம் ஒரே ஒரு தோட்டத்திலிருந்து வரும் ஒரே வகை டீயாக இருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு. காரணம் ஒரு பிராண்ட் என்று வரும் போது, அதனுடைய சுவை, மணம், நிறம் போன்ற குணங்கள் ஒரே சீராக இருக்க வேண்டும். ஒரு தோட்டத்தில் இந்த அளவு தேயிலை வளர வாய்ப்பில்லை. அதனால் எல்லா வகை (BRAND) டீப் பொட்டலங்களும் ஒரு குறிப்பிட்ட கலவைதான்.

இதைப் பற்றி சொல்வதற்கு முன்னால் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பௌதீக விளக்கம் - பல்க் டென்சிடி - (உள்ளடர்த்தி?). ஒரு லிட்டர் குவளையில் நீங்கள் வேர்க்கடலையை நிரப்பி, மற்றொரு லிட்டர் குவளையில் கோலிக்குண்டுகளை நிரப்பி இரண்டையும் எடை பார்த்தால், அனேகமாக கோலிக்குண்டுகள் இருக்கும் தட்டு கீழே போகும். கோலி, கடலை இரண்டும் ஒரு லிட்டர் அளவு தான் இருந்தாலும் அவற்றின் உள்ளடர்த்தி வேறுபடுவதால் இந்த விளைவு - கோலிக்குண்டின் எடை அதிகம். சரி இதற்கும் டீக்கும் என்ன சம்பந்தம்? இருக்கே! ஒவ்வொரு தோட்டத் தேயிலையும் இந்த உள்ளடர்த்தியில் வேறுபடும். டீப் பொட்டலங்களை நாம் எடை போட்டு வாங்கினாலும், ஒரு பொட்டலத்தில் டீ குறைவாக - அதாவது பத்து ஸ்பூனுக்கு பதிலாக ஒன்பது ஸ்பூன் டீ இருந்தால், உடனே நமக்கு கோபம்தான் வரும். டீக் கம்பெனியில் இருந்து ஆரம்பித்து, தெருமுனையில் இருக்கும் டீ விற்ற பெட்டிக்கடைக்காரர் வரை எல்லோரையும் திட்டித் தீர்த்திருப்போம் - ஏமாற்றுகிறார்கள் என்று. அந்த டீப் பொட்டலத்தை எடை போட்டுப் பார்த்தால் ஒன்றும் குறைவு இருக்காது - அளவு குறைந்ததற்கு காரணம் அந்த டீ வகை உள்ளடர்த்தி அதிகமாய் இருப்பதால் தான். என்னதான் பௌதீக விளக்கமெல்லாம் கொடுத்தாலும், வீட்டில் டீ போடும் அம்மாவின் முடிவுக்கு அப்பீலேது? அதனால் எல்லாக் கம்பெனியும், பௌதீகப் பாடம் எடுப்பதற்கு பதிலாக, இந்த டீக் கலவை கலப்பதற்கு முன்பாக ஒரு சாம்பிள் எடுத்து, இந்த உள்ளடர்த்தியை நிர்ணயம் செய்வார்கள். பொட்டலத்தில் எடையும், அளவும் கொஞ்சம் சீராக இருக்குமாறு வருவதற்கு உள்ளடர்த்தி ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் இருந்தால் நலம் என்று இதை நிர்ணயிப்பார்கள்.

ஆக ஒரு கலவைக்கு வேண்டிய முக்கியமான மூன்று குணங்கள்: சுவை, உள்ளடர்த்தி, விலை! இந்த சுவையில் நீங்கள் மணம், நிறம் போன்ற டீத் தன்மைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு விலை இருக்கும். மக்கள் மனதில் இந்த பிராண்ட் பற்றிய ஒரு நிர்ணயமும் இருக்கும் - இதன் மணம் நன்றாக இருக்கும், ஆனால் ஒன்றரை ஸ்பூன் போட வேண்டியிருக்கும் - என்றெல்லாம் வீட்டில் சொல்வார்கள். அந்த குறிப்பிட்ட பிராண்ட் கலவை செய்யும் போது, அதற்கு ஏற்ற சுவையும் (மணம், நிறம் உட்பட), உள்ளடர்த்தியும், விலையும் (அதாவது உற்பத்தி செய்ய ஆகும் செலவு - COST) வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உள்ளடர்த்தி மிகவும் குறைந்து போனால், பொட்டலத்தின் அளவை விட அதிகம் டீ போட வேண்டிய நிலை வந்து, பொட்டலம் கட்டுவதில் பிரச்சனை வரும்.

ஒரு கலவைக்கு இத்தனை தோட்டத் தேயிலைதான் என்று வரையறை கிடையாது - எத்தனை வேண்டுமானாலும் கலக்கலாம். ஆனால் கலவையில் தேயிலை வகைகள் அதிகம் ஆக ஆக, கலக்கும் நேரமும் அதிகமாகும். காரணம் கலவைகள் செஸ்ட் அளவில் நடக்கும்; ஒரு செஸ்ட் நாற்பது கிலோவுக்கும் அதிகம் - பொட்டலம் 250 கிராம்! ஒவ்வொரு பொட்டலத்திலும் சீரான கலவை வருவிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. வீட்டில் ஒரு டப்பா ரவா லாடு செய்ய ரவையும் சக்கரையும் கலப்பதிலேயே சமயத்தில் குளறுபடி வந்து, லாடு ரவையாகவோ, அல்லது சக்கரையாகவோ வந்து சேரும்! தொழிற்சாலையில் ஒரு லாரி நிறையா 250 கிராம் பொட்டலம் கட்ட வேண்டும் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இது எவ்வளவு கடினமான விஷயம் என்று புரியும்!
கிட்டத்தட்ட புலி, ஆடு, புல்லுக்கட்டு கதைதான்! இது சரியாக வரவில்லை என்றால் நஷ்டம் தான் - அது சுவை சரியில்லாததாலோ, அல்லது உற்பத்தி செய்யும் செலவு விற்கும் விலையை விட அதிகமாவதாலோ, அல்லது பொட்டலம் கட்டுவதில் பிரச்சனை வருவதாலோ இருக்கலாம். தொழிற்சாலையில் இந்த கலவையை நிர்ணயிப்பது ஒரு முக்கியமான வேலை என்பதை இன்னும் விபரமாகச் சொல்லத் தேவையில்லை.

இப்படியாக பதம் நிர்ணயம் செய்யப்பட்டு இந்த கலவை விகிதாசாரம் தொழிற்சாலையில் உள்ள சூப்பர்வைசருக்குப் போகும். அவரின் பொறுப்பு, அரைக் கிலோவிற்கு இவர்கள் செய்த கலவையை, ஒரு லாரி, அல்லது இரண்டு லாரி அளவுக்கு செய்து, பொட்டலம் போட அனுப்புவது! இதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

முந்தைய பதிவுகள்

தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

2 கருத்துகள்:

இலவசக்கொத்தனார் சொன்னது…

இந்த கலவை எப்பொழுது நிர்ணயிக்கப் படுகிறது? ஓவ்வொரு வருடமும் அவர்களுக்கு அதே தோட்டத்தில் இருந்து டீத்தூள் கிடைக்கும் என்று நிச்சயம் இல்லையே. அல்லது அந்த தோட்டத்தின் தரம் அதே போல் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லையே.

அப்படி இருக்கும் போது ஒரு ப்ராண்டின் மணம் சுவை மாறாது எப்படி பார்த்துக் கொள்கிறார்கள்?

ரங்கா - Ranga சொன்னது…

இ.கொ.

இந்த பிராண்டுக்கு இந்த கலவை என்பது ஒரு விதமான Strategic Decision.

இதை நிர்ணயிப்பது ஒரு குழு - Marketing, purchase, finance, production - என்று எல்லாவிதமான முக்கியஸ்தர்களும் சேர்ந்து நிர்ணயிப்பார்கள். வெகு அரிதாக இந்த கலவையில் மாற்றமும் செய்வார்கள் - changing the blend - அப்போது ஒரு புது விளம்பரம், marketing campaign எல்லாம் வரும் - 'புதிய XXX', 'புத்துணர்வு மிக்க XXX' என்றெல்லம் அடைமொழியோடு வரும். இதை இன்னமும் விரிவாக மார்க்கெட்டிங்க் பதிவில் சொல்கிறேன்.

டீயின் சுவையை ஒரு பொது அளவுகோலுக்கு மாற்றிவிட்டால், எந்தத் தோட்டத்து தேயிலையையும் வகைப்படுத்த முடியும். அப்புறம் கலவை ஒரு equation தான்.

இரண்டு வெவ்வேறான சூட்டுடன் கூடிய திரவத்தை ஒன்றாகக் கலந்தால் வரும் திரவத்தின் வெப்பத்தை எப்படி formula கொண்டு அளப்போமோ T(V) = (t1v1 + t2v2) / (v1+v2)

அதே போல டீயைக் கலந்தால் கலவை. A2 = 0.5A1 + 0.5A3. இதற்கு மேலும் விளக்கினால் நிறுவனத்திலிருந்து புகார் வரும் - எதற்கு வம்பு.