ஒரு வழியாக எலத்தை முடித்து விட்டு தொழிற்சாலை வந்து சேர்ந்தோம். மறு நாள் அவர் சொன்ன மாதிரியே என்னை டீ டெஸ்டிங் பிரிவுக்கு அழைத்து சென்று நடப்பதை விளக்கினார். இந்த ருசி பார்க்கும் பிரிவில் நிறைய டீ குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். சொல்லப்போனால் இது ஒரு கொடுமையான வேலை - முக்கியமாக டீயை ருசித்துக் குடிப்போருக்கு. முதலில் இங்கு டீ வெறும் டீத் தண்ணீர்தான் – அதாவது தேத்தண்ணீர் (நன்றி குமரன்) - சக்கரை, பால் போன்று எதுவும் கலந்திருக்காது. இரண்டாவதாக, ஒரு பெரிய ஸ்பூன் அளவுக்கு தேத்தண்ணீரை எடுத்து வாயில் வைத்து கொஞ்சம் கொப்பளிப்பது போல செய்து, துப்பி விடுவார்கள். அந்த கொஞ்ச நேரத்தில் அந்த டீயின் சுவையை நிர்ணயம் செய்து மார்க் கொடுப்பார்கள். ஒரு சமயத்தில் இருபதிலிருந்து நாற்பது கோப்பைகள் வரை தேத்தண்ணீர்கள் சாம்பிளாக இருக்கும்.
இந்த மாதிரியான சுவை நிர்ணயம் செய்ய ஒருவர் மட்டும் போதாது, அந்தப் பிரிவில் இருக்கும் அதிகாரிகளில் குறைந்தது மூன்று பேராவது அதே சாம்பிள்களை சுவைத்து தனித் தனியே மதிப்பெண்கள் போடுவார்கள். அப்புறமாக அதை கொஞ்சம் அலசிப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவார்கள். இந்த மாதிரி சுவை நிர்ணயம் செய்யும் அதிகாரிகள் சுவைப்பதற்கு முன்னால் கொஞ்ச நேரத்திற்கு (ஒன்று அல்லது இரண்டு மணி நேரம்) சுவை தூக்கலான பண்டம் எதுவும் சாப்பிட மாட்டார்கள்; புகை பிடிக்க மாட்டார்கள்.
இந்த சுவை பார்க்கும் இடமே கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு பெரிய அறையில் மேசையில் அத்தனை சாம்பிள்களும் (கோப்பையில் டீத் தண்ணீராக) வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு சாம்பிளுக்கும் சமயத்தில் இரண்டு கோப்பைகள் (அல்லது மூன்று கோப்பைகள் கூட) இருக்கும். சுவை பார்க்கும் அதிகாரி ஒரு வெள்ளைத் துணியை முன்புறம் கட்டிக்கொண்டு படு சீரியசாக மூஞ்சியை வைத்துக் கொண்டு வருவார். சிலருக்கு சத்தம் இருக்கக் கூடாது - அதனால் கதவெல்லாம் மூடியிருக்கும். அவருக்கு துணையாக இரண்டு பேர் வருவார்கள். ஒருவர் கையில் ஒரு காகிதக் கத்தை (அட்டையோடு); அதில் அவர் ருசிபார்ப்பவர் சொல்லும் எண்ணை அல்லது ரகத்தைக் குறித்துக் கொள்வார். அந்த காகிதக் கத்தையில் அனைத்து சாம்பிள் நம்பரும், அது எந்த இடத்திலிருந்து வந்தது என்றும் எழுதியிருக்கும். ஆனால் ருசிபார்ப்பவருக்கு சாம்பிள் நம்பர் எழுதியிருக்கும் கோப்பை லேபிள் மட்டும் தான் தெரியும்.
கூட வரும் மற்றொருவர் கையில் ஒரு பெரிய பாத்திரம் இருக்கும். திருவிளையாடல் படத்தில் ஹேமநாத பாகவதராக வரும் பாலையா வெற்றிலை துப்புவதற்காக, அவர் சிஷ்யர் ஒருவர் ஒரு பாத்திரத்தை எடுத்து வருவாரே - நினைவிருக்கிறதா? அதே போலத் தான் இவரும் பாத்திரத்தை எடுத்து வருவார். ருசிபார்ப்பவர் வரிசையாக இருக்கும் கோப்பைகளில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் விட்டுக் கொண்டு கொஞ்சம் கொப்பளித்து, இந்த பாத்திரத்தில் துப்பிவிட்டு ஒரு எழுத்தையும், எண்ணிக்கையையும் சொல்வார்; அதை மற்றொருவர் குறித்துக் கொள்வார். இந்த அதிகாரி அத்தனை கோப்பையையும் முடித்தவுடன், அதே பிரிவிலுள்ள மற்றொரு அதிகாரி இதே போல ருசிபார்த்து சொல்வார். இது போல குறைந்தது மூன்று முறை நடக்கும். பின் அத்தனை முடிவையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். மூன்று பேரும் ஒரே மதிப்பு தந்திருந்தால் வேலை சுலபம். சமயத்தில் இருவர் ஒரே மதிப்பு தந்திருப்பார்; ஒருவர் கொஞ்சம் மாற்றி மதிப்பு தந்திருப்பார். அவர் மறுமுறை அந்த சாம்பிளை ருசிபார்த்து மற்றவர்களோடு ஒத்துக் கொண்டால் பெரும்பான்மை மதிப்பு செல்லும். மூவருமே ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தலைமை ருசிபார்க்கும் அதிகாரி வந்து ருசிபார்த்து அவர் தரும் நிர்ணயமே முடிவாகும். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கே எக்கச்சக்க டென்ஷன்! இத்தனைக்கும் எனக்கு டீ சாப்பிட அவ்வளவாகப் பிடிக்காது - அதுவும் பால், சக்கரை இல்லாமல்! ருசிபார்ப்பவருக்கும் எண்ணிக்கையை அலசி ஆராய்பவருக்கும் எப்படி இருந்திருக்கும்!!
இந்த மாதிரி ருசிபார்க்கப் படும் தேநீர் சாம்பிள்கள் வருவதை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். ஏலத்திற்கு வரும் தோட்டத் தேயிலை, பின் தொழிற்சாலையில் பிளண்ட் என சொல்லப்படும் கலவை நிர்ணயம் செய்யும் போது பிராண்ட் (வகை) ருசி வருகிறதா என்று நிர்ணயம் செய்ய வருபவை, பின் மற்ற நிறுவன பிராண்ட்கள், அதிலும் புதிதாக வந்த வகைகளின் சுவை நிர்ணயம் செய்ய வருபவை. இவற்றில் உள்ள முக்கியமான வித்தியாசம் - முதல் வகையில் வருபவை ஒரு தோட்டத் தேயிலை, இரண்டாம் மூன்றாம் வகையில் பல தோட்டத் தேயிலை வகைகள் கலந்திருக்கும். அதைத் தவிர சில வகைகளில் டீ மசாலா எல்லாம் வேறு கலந்திருப்பார்கள். இப்படி வாரத்திற்கு நூற்றுக்கும் மேல் சுவை பார்ப்பது என்பது என்னைப் பொறுத்தவரை கொஞ்சம் கடினமான வேலைதான். என்னை 'ருசிபார்க்கிறாயா' என்று கேட்டார்கள் - 'வேண்டாம்' என்று வேகமாகத் தலையாட்டிக் கொண்டே சொன்னேன்...சிரித்துக் கொண்டே 'சரி' என்று சொல்லிவிட்டார்கள்.
அடுத்த பதிவில் கலவை போடுவது பற்றி.
முந்தைய பதிவுகள்
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1
6 கருத்துகள்:
சீக்கிரம். சீக்கிரம். மேல சொல்லுங்க.
சுவையான அனுபவம் தான்.
இந்த மாதிரி பலர் தங்கள் தொழில் அனுபவங்களை எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்??
பேஜார் புடிச்ச வேலை. பாவம்.
வீட்டுலே அவர் 'டீ' குடிக்கவே மாட்டாருன்னு நம்பறேன்:-)
இ.கொ.
நீங்க வேற - உட்கார்ந்து எழுத தொடர்ச்சியா நேரம் கிடைப்பது குறைவு. ஒரு தடவை எழுதிட்டு ஒரு நாள் கழித்துத் தான் பதியறேன் - ஏதாவது விட்டுப் போயிடக்கூடாதே என்று. :-)
ரங்கா.
குமார்,
உண்மைதான்; நல்லாத்தான் இருக்கும். ஏன் நீங்க ஆரம்பிக்கக் கூடாது :-)?
ரங்கா.
இல்லீங்க துளசி.
அந்தப் பிரிவிலே இருந்த நாலு அதிகாரிக்கும் டீ ரொம்பவே பிடிக்கும். மூன்று பேர் வெறும் தேத்தண்ணிதான் - அதுல எலுமிச்சம் பழம் பிழிந்து குடிப்பாங்க. இன்னுமொருவர் பால் சக்கரை போட்டுத்தான் குடிப்பார். இதைப் பற்றி டீ குடிப்பதைப் பற்றி பதியும் போது விரிவா சொல்கிறேன்.
ரங்கா.
கருத்துரையிடுக