புதன், நவம்பர் 08, 2006

தேனீர் – 1

இப்போதெல்லாம் காப்பிக்கு பதிலாக ஒரு நாளைக்கு ஒரு கோப்பை தேனீர் குடிக்கிறேன். டீ, சாய், சாயா என்றெல்லாம் பாசமாக அழைக்கப் படும் தேனீருக்கும், தேனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. சொல்லப் போனால் இரண்டும் எதிரெதிர் - ஒன்று கசக்கும், மற்றொன்று இனிக்கும். ஒன்றை சூடாகத்தான் குடிக்க வேண்டும், மற்றொன்றை அப்படியே குடிக்கலாம் (தேன் கூட்டிலிருந்து - தேனடையிலிருந்து - எடுத்த பிறகுதான்). இருந்தாலும், பால் கலக்காத தேனீரில், தேனைக் கலந்து குடித்தால் ஜலதோஷத்திலிருந்து விடுதலை என்று சொல்வார்கள். நான் பரிசோதனை செய்து பார்த்ததில்லை.

சிறுவயதில் வீட்டில் டீ கிடையாது; காப்பிதான். கொஞ்சம் வளர்ந்து பள்ளியில் படிக்கும் காலத்தில் வீட்டில் டீ வந்தது. அதுவும் 'டஸ்ட்’ டீ. காரணம் பட்டுக்கோட்டையில் வசிக்கும் போது அருகே ஒரு தூரத்து உறவினரும் பட்டுக்கோட்டைக்கு உத்தியோக மாற்றலாகி வந்தார். அவர் ப்ரூக்பாண்ட் கம்பெனியில் வேலை செய்ததால், வீட்டிற்கு வந்த போது டீயின் பெருமைகளை சொல்ல, முதல் முதலாக என் வாழ்வில் நுழைந்தது டீ. பாத்திரத்தில் தண்ணீரை வைத்து, டீத்தூளைப் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, பால், சக்கரை கலந்து குடித்தோம். இருந்தாலும், இது வழக்கமாக ஆகாமல், உறவினர் வீட்டிற்கு வரும்போது அவருக்கு கொடுப்பதற்காக என்று மட்டும் டீ உபயோகப்பட்டது. அப்போது தெரியாது, இந்த டீதான் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பொருளாக மாறப் போகிறது என்று.

அக்கவுன்டன்சி (C.A.) முடித்து முதல் வேலை ஹின்துஸ்தான் லீவரில் மேலாண்மை பயிற்சியாளராக (அதாங்க Management Trainee) சேர்ந்தேன். மும்பாயில் சேர்ந்த உடனேயே என்னை லிப்டன் நிறுவனத்திற்கு மாற்றினார்கள். அப்போது லிப்டனில் இருந்த இரண்டு பெரிய பிரிவுகள் - டீயும், எண்ணை சம்பந்தமான (டால்டா, வனஸ்பதி, மில்கானா மற்றும் இன்ன பிற பொருட்கள்) பிரிவும் தான். இதைத் தவிர மாட்டு/கோழித் தீவனப் பிரிவும் இருந்தது. இந்த பதினெட்டு மாத பயிற்சியில் பெரும்பான்மையான காலத்தை தேனீர்ப் பிரிவிலேயே கழித்தேன். ஏலத்தில் டீ வாங்குவது, பின் தொழிற்சாலையில் 'ப்ளெண்ட்' (Blend) என்று சொல்லப் படும் கலவை நிர்ணயிப்பது, கலப்பது, பொட்டலம் கட்டுவது (அதாங்க Packing), பின் பொட்டலத்தை வினியோகஸ்தர்களுக்கு எந்த வழியாக அனுப்பி வைப்பது (Logistics), எப்படி கொள்முதல் வினியோகஸ்தர்களிடமிருந்து (C&FA), டிஸ்ட்ரிபியூட்டர்கள் (Distributors) என்று சொல்லப்படும் சிறு வினியோகஸ்தர்களுக்கு, பின் அங்கிருந்து கடைகளுக்கு அனுப்புவது, இந்த மொத்த விஷயத்தையும் எப்படி கண்காணித்து கணக்கு எழுதுவது (Accounting) என்று ஒவ்வொன்றாகப் பயிற்சி.

கம்பெனியின் வியாபார ரகசியங்களைத் தராமல், இங்கு சில பகுதிகளாக தேனீர் பொட்டலம் பிறக்கும் கதையையும், சில சுவாரசியமான சங்கதிகளையும் தரலாம் என்று எண்ணம். முன்பு என் பதிவுக்கு வந்து காப்பி குடித்த (படித்த) அனைவரும் இந்த தேனீர் கடை(தை)க்கும் வருவீர்கள் என்று நம்புகிறேன்.

பின் குறிப்பு: இது ஒரு நினைவஞ்சலி அல்ல; இந்த தொடர் முடிந்ததும் டீ குடிப்பதை நிறுத்துவதாக இல்லை.

12 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

இதை படித்துக்கொண்டிருக்கும் போதே "ஏலத்தில் இருந்து - பொட்டலமாக" மாறுவதை எழுதச்சொல்லி கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.
நீங்களே சொல்லிட்டீங்க.- எதிர்பார்க்கிறோம்.
நாளுக்கு 2 டீ என்பதிலிருந்து ஒன்றாக குறைத்து பல வித ருசிகளுடன் அனுபவித்துகொண்டிருக்கோம்.

இலவசக்கொத்தனார் சொன்னது…

ரங்கா,

இன்னும் ஒரு ஒற்றுமை. நான் சி.ஏ. படிக்கும் பொழுது கடைசி வருஷம் Industrial Training ஹிந்துஸ்தான் லீவர் சென்னை ப்ராஞ்ச் ஆபீஸில்தான் இருந்தேன்! கிளை கணக்கரின் கீழ்தான் வேலை செய்தேன்.

துளசி கோபால் சொன்னது…

அதெல்லாம் 'டாண்'ன்னு 'டீக்கடை'க்கும் வந்துட்டொம்லே:-))

அப்பெல்லாம் பரிட்சைக்குப் படிக்கும்போது 'டீ'தான். ஏன்னா தூக்கம் வராதாம்!!
அதையும் குடிச்சுட்டுத் தூங்கிவிழுந்தது வேற விஷயம்:-)

ரங்கா - Ranga சொன்னது…

குமார்,

பின்னூட்டத்திற்கு நன்றி :-) உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத்தான் எண்ணம்.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

இ.கொ.,

இன்னுமொருமுறை எ.பொ.இ.பொ (தங்கவேலு ஸ்டைல் - அறிவாளி படம்).

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

ஆமாங்க துளசி. என் தம்பி பரீட்சைக்குப் படிக்கும் போது இப்படித் தான் சொல்லி ஒரு பிளாஸ்க் நிறைய காப்பி போட்டு வைத்துக் கொள்வான். நான் அந்தக் காப்பிக்காகவே கொஞ்ச நேரம் முழித்துக் கொண்டு இருப்பேன் :)

ரங்கா.

குமரன் (Kumaran) சொன்னது…

ரங்காண்ணா. தேத்தண்ணியைப் பத்தி படிக்க வந்துட்டேன்ல. காப்பிக்குச் சொன்னது தான் தேநீருக்கும். ரெண்டையுமே நான் குடிக்கிறதில்லை. எப்பவோ எப்பவாவது லெமன் டீ இல்லாட்டி ஹெர்பல் டீ முயன்றுபார்ப்பதுண்டு. சாயா? நோ யா தான். :-)

பெயரில்லா சொன்னது…

As usual your post is excellent.

We all looking forward to reading your upcoming post.

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி குமரன். உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தபின் ஒரு கேள்வி....தேனீரா அல்லது தேநீரா?

ரங்கா.

பி.கு. தேத்தண்ணீர் - வார்த்தை அழகாய் இருக்கிறது - இது பால் கலக்கும் முன் இருக்கும் (டிகாஷன்) நிலையைக் குறிக்கிறதா?

ரங்கா - Ranga சொன்னது…

Thank you Anonymous :-)

Ranga.

குமரன் (Kumaran) சொன்னது…

தேயிலையிலிருந்து தயாரிப்பது என்பதால் அதற்குத் தே நீர் என்று பெயர் வைத்தார்கள் ரங்கா அண்ணா. கிராமங்களில் அதனையே தேத்தண்ணி என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். தேநீரைத் தேனீர் என்று பலர் எழுதப் போய் நீங்களும் அதனைத் தேன்+நீர் என்று எண்ணிக்கொண்டீர்கள். :-)

ரங்கா - Ranga சொன்னது…

குமரன்,

விளக்கத்திற்கு நன்றி; திருத்தி விட்டேன்.

மூன்றாம் பதிவிலிருந்து தேனீர் - தேநீராகிறது :-)

ரங்கா.