வியாழன், ஆகஸ்ட் 31, 2006

காப்பி – 7

அப்படி இப்படி என்று அமெரிக்கா வந்தது 1997ல். வந்த முதல் வருடத்தில் வெறும் இன்ஸ்டன்ட் காப்பிதான் - டேஸ்டர்ஸ் சாய்ஸ். சுலபமாக ஒரு பீங்கான் கப்பில் பாதி தண்ணீர், பாதி பால், முக்கால் ஸ்பூன் சக்கரை, முக்கால் ஸ்பூன் காப்பிப் பொடி போட்டு, மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைத்தால் காப்பி தயார். நானும் என் மனைவி மட்டும் தான் வீட்டில், வேலைக்கு போகும் அவசரம் வேறு. அதனால் பில்டர் என்றெல்லாம் யோசிக்கக் கூட இல்லை. இந்த திடீர் தயாரிப்பிலும், கொஞ்சம் மாற்றங்கள் செய்தால், சுவை கூட வருவது போலத் தோன்றும். முதலில் தண்ணீரில் காப்பிப் பொடியைப் போட்டு மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைக்க வேண்டும். பின் தனிப் பாத்திரத்தில் (கண்ணாடி) பாலை கொஞ்சம் பொங்கும் வரை கொதிக்க வைத்து (ஒரு கப் பாலுக்கு கிட்டத்தட்ட மூன்று நிமிடம்), வெளியே எடுத்து ஆறியவுடன் பாலின் மேலிருக்கும் ஏட்டை எடுத்து விட வேண்டும். பின் இருக்கும் இன்ஸ்டன்ட் டிகாஷனையும், பாலையும் கலந்து சக்கரை போட்டு குடித்தால், கிட்டத்தட்ட பில்டர் காப்பி நினைவுக்கு வரும். இந்த முறை வார இறுதியில் பொழுது போகாமல் இருக்கும் போது தான் - மற்ற சமயங்களில் ஒரு நிமிடக் காப்பிதான்.

ஒரு வருடம் கழித்து இன்ஸ்டன்ட் போரடித்தவுடன், ஒரு காப்பி பில்டர் (மின்சார இயக்கம்) வாங்கினோம் - நான்கு கப் அளவில். பில்டரின் பின் பக்கம் மூடியைத் திறந்து தண்ணீர்; மேல்பக்கம் திறந்து, அங்கு இருக்கும் அறையில் முதலில் ஒரு தாளை வைத்து (பேப்பர் பில்டர்), வெறும் காப்பிப் பொடி (ஒரு கப்புக்கு ஒரு ஸ்பூன்) போட்டு, மறக்காமல் பில்டரின் அடியில் கண்ணாடிப் பாத்திரத்தையும் வைத்து, ஸ்விட்சைத் தட்டினால் மூன்று நிமிடங்களில் டிகாஷன் ரெடி. பின் அதில் பாலை ஊற்றி (பாலைக் காய்ச்சுவது நின்று போய், நேரே குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து ஊற்றுவது வந்து விட்டது), இன்னமும் சூடு வேண்டுமானால் முப்பது விநாடி மைக்ரோவேவ் செய்து குடிப்பது வழக்கத்திற்கு வந்தது. இந்த மின்சார பில்டரிலும் ஏகப்பட்ட வகைகள். ஒரு முறை கண்ணாடிப் பாத்திரம் தவறி விழுந்து உடைய வேறு ஒன்று வாங்கப் போனால், அந்த விலைக்கு புது பில்டரே வாங்களாம் என்று தோன்றி வேறு பில்டர் வாங்கினோம்.

இந்த மின்சார பில்டர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லியே ஆக வேண்டும். ஐந்து டாலரிலிருந்து நூற்றைம்பது டாலர் வரை பில்டர்கள் பாத்திருக்கிறேன் - அதைவும் விட அதிகமான விலையில் இருக்கின்றன என்றார் நண்பரொருவர். சில வெறும் காப்பி மட்டும் தான், சில காப்பசினோ, எஸ்பிரசோ என்று தினுசு தினுசாகக் கொடுக்கும். பில்டரில் கீழே டிகாஷன், சில மிஷினில் மேலே டிகாஷன் என்றெல்லாம் வகைகள். சாதாரண பில்டர்களுக்கு அனேகமாக தாள் தான் (பேப்பர் பில்டர்). சில டாலர் கடைகளில் ஒரு டாலருக்கு சீனாவில் செய்த பிளாஸ்டிக் பில்டர்கள் கிடைக்கும். முக்கால் வாசி பிராண்ட் பில்டர்களுக்கு அந்த பிராண்ட் கண்ணாடிப் பாத்திரம் தான் வேண்டும், டிகாஷனை எடுத்துக் கொள்ள - அதில் நிறைய காசு பண்ணுகிறார்கள். இன்னம் சிலவற்றுக்கு தாள் கூட அதே பிராண்டில் தான் வாங்க வேண்டும் (விலை மற்ற சாதாரண தாள்களை விட அதிகம்). பில்டர் ரிப்பேர் செய்யும் இடம் என்று எங்கும் நான் பார்த்தது இல்லை. வேலை செய்யவில்லை என்றால் தூக்கி குப்பையில் போட வேண்டியதுதான். கொஞ்ச நாட்களில் தண்ணீரில் இருக்கும் உப்பு படிந்து எப்படியும் ஒன்று அல்லது இரண்டு வருடத்துக்குள் மாற்ற வேண்டியிருக்கும் (உங்கள் வீட்டில் Water Softener இருந்தால் இன்னும் கொஞ்சம் அதிக நாள் வரும்).

நடுவில் ஒரு ஐந்து ஆறு மாதத்திற்கு, கடையிலிருந்து வறுத்த காப்பிக் கொட்டை வாங்கி ஒரு குட்டி மின்சார அரவை இயந்திரத்தில் அரைத்து காப்பி போட்டுக் குடித்தோம். இரண்டு பேர்தான் என்பதால் அது கொஞ்சம் போரடித்து, மறுபடி பொடியாகவே வாங்க ஆரம்பித்தோம். அந்த அரவை இயந்திரத்தில் சமயலுக்கு வேண்டிய பருப்பு, மிளகாய் எல்லாம் அரைத்துக் கொண்டிருந்தோம், அது ஒரு ‘நாள் இயங்க மாட்டேன்’ என்று நிற்கும் வரை. வெவ்வேறு பிராண்ட் காப்பிப் பொடி - வெவ்வேறு நாட்டுப் பொடி என்றெல்லாம் பரிசோதனை பண்ணிப் பார்த்துவிட்டு, இப்போது காஸ்ட்கோவில் போய் கொலம்பியா பொடி (பெரிய டப்பா) வாங்கி வருவது என்று வழக்கமாகிவிட்டது.

வீட்டில் இப்படி என்றால் வெளியே காப்பி குடிப்பது என்பது முதலில் உற்சாகமாக இருந்தது. அமெரிக்காவில் முதல் முறையாக வெளியே கடையில் காப்பி குடித்தால் முதலில் தாக்குவது அளவுதான் - உண்மையிலேயே ரொம்பப் பெரிசு. அதுவும் முக்கால் வாசி இடங்களில் அவர்கள் தருவது வெறும் டிகாஷன் தான். அதுவும் விளிம்பு வரை தந்துவிடுவார்கள். தனியாக வெளியே நாமே போய் பாலும் (அல்லது கிரீமோ), சக்கரையும் போட்டு ஒரு குச்சியால் சுற்றி சுற்றிக் கரைத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் எப்போது ஒரு கோப்பை வாங்கி இரண்டாகப் பகிர்ந்து தான் குடிப்பது வழக்கம். அதே சமயத்தில் கிட்டத்தட்ட அரை லிட்டர் காப்பி (அதுவும் கறுப்பு காப்பி - டிகாஷன்) குடிக்கும் பேர்வழிகளையும் பார்த்திருக்கிறேன்.

இதிலே காப்பியோடு கலந்து கொள்ள என்று எத்தனையோ சாமான்கள். சிலவற்றை (உ.ம். சின்னமன்) போட்டுக் கொண்டால், குடிப்பது காப்பியா, பாயசமா, அல்லது கஷாயமா என்று தெரியாமல் போய் விடும். நாங்கள் வந்த புதிதில் இந்த ஸ்டார்பக்ஸ் இவ்வளவு பிரபலம் இல்லை. இப்போது எங்கு பார்த்தாலும், அது தான். என்னவோ தெரியவில்லை நான்கு, ஐந்து முறை போய் குடித்த பிறகு (அப்பாடி என்ன விலை!) மறுமுறை போக ஆசை வரவில்லை.

நாங்கள் அரிசோனாவில் இருந்த போது நண்பர் ஒருவர் சொன்னது: "மாணவனாக வரும் போது டங்கின் டோனட், அல்லது தெருக் கடைகளில் காப்பி; பின் வீட்டிற்கு வந்தவுடன் இன்ஸ்டன்ட், அப்புறம் பில்டர், பின் கொட்டை அரைத்து பில்டர் காப்பி, கொஞ்ச நாளில் காடலாக் எல்லாம் பார்த்து, கூப்பன் சேகரித்து, கப்பசினோ மிஷின். இது ஒரு பரிணாம வளர்ச்சி. அப்புறம் டாக்டர் பார்த்து, ட்ரைகிளசரைட், சக்கரை என்றெல்லாம் பயமுறுத்த, சக்கரை இல்லாத காப்பி, ஒரு வேளை மட்டும் காப்பி, பின் மிஷினைப் பார்த்தாலே எரிச்சல் என்று முடியும்". இதற்காகவே நான் கப்பசினோ மிஷின் வாங்கவில்லை. ஆனால் இந்த வருட ஆரம்பத்தில் டாக்டர் ட்ரைகிளசரைட் என்று சொல்லிவிட்டார்! நானும் இந்த பரிணாம வளர்ச்சியிலிருந்து தப்ப முடியாதோ என்று தோன்றுகிறது!

அடுத்த பதிவில் காப்பி குடிக்கும் மக்களைப் பார்த்து நான் பெற்ற அனுபவங்கள்.

முந்தைய பதிவுகள்
காப்பி - 6
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1

14 கருத்துகள்:

கப்பி | Kappi சொன்னது…

//சிலவற்றை (உ.ம். சின்னமன்) போட்டுக் கொண்டால், குடிப்பது காப்பியா, பாயசமா, அல்லது கஷாயமா என்று தெரியாமல் போய் விடும்.//

அதுதாங்க மேட்டர்...பாதி நேரம் காபி குடிக்கறோமா வேற ஏதாவதான்னு சந்தேகம் வந்துடும் :))

வல்லிசிம்ஹன் சொன்னது…

ஓஹோ. செட்டில் ஆகியாச்சா காஃபி?
இதெல்லாம் நம்மைக் காப்பி இல்லாத வாழ்வுக்கு அழைத்துப் போகும் வழிகள்.

நல்ல காப்பி குடிக்க வாழ்த்துக்கள்.

ரங்கா - Ranga சொன்னது…

ஆமாம் கப்பி சார்,

காப்பின்னு பேரு மட்டுந்தான்.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

வள்ளி,

இன்னும் செட்டில் ஆகலைன்னுதான் நினைக்கிறேன் - காப்பியைப் பொறுத்தவரை. வாழ்த்துக்களுக்கு நன்றி.

ரங்கா.

இலவசக்கொத்தனார் சொன்னது…

ரங்கா சார்,

நம்மிடையே இன்னும் ஒரு பொது விஷயம் - ட்ரைக்ளிஸரடைஸ்!

நான் காப்பி வெறியானாய் இருந்து, பின் கிட்டத்தட்ட நிறுத்தியுமாகிவிட்டது. (ட்ரைக்ளிஸரடைஸுக்கு முன்னாடியே). இப்பொழுது எல்லாம் ஆபீஸ் போனால் க்ரீன் டீதான்.

ஆனால் நான் ஒரு ஹோப்லெஸ் ஸ்டார்பக்ஸ் அடிக்ட். காப்பி குடிப்பதானால் அங்குதான்!

ரங்கா - Ranga சொன்னது…

கிழிஞ்சுது போங்க - உங்களுக்கும் ட்ரைகிளசரைடா? ஏற்கனவே ஸ்ரீகாந்த் மீனாட்சிக்கும் இது இருக்குன்னு தெரிஞ்சு பதிவே போட்டார்.

நமக்கு ஸ்டார்பக்ஸ் மேல பிரியம் இல்லை. காசு நிறைய கொடுத்தும் காப்பிக்கு பதிலா நிறைய சென்டெல்லாம் போட்டுக்க் குடுக்கறாப் போல ஒரு நினைப்பு!

ரங்கா.

இலவசக்கொத்தனார் சொன்னது…

அதுல கொஞ்சம் சூட்சமம் இருக்கு. சரியான சரக்கை ஆர்டர் பண்ணுனா டேஸ்ட் சும்மா கும்முன்னு இருக்கும். :)

துளசி கோபால் சொன்னது…

அய்யோ ஒரு தடவை LA ஏர்போர்ட்டில் ஸ்டார்பக்ஸ் டபுள் ஸ்ட்ராங் வாங்கிக் குடிச்சுட்டு இருந்த தலைவலியை
ஜாஸ்தி ஆக்கிக்கிட்டேன்.
இப்போ இங்கேயும் ஸ்டார்பக்ஸ் வந்தாச்சு. நல்லாபோகுதாம்.

அது போட்டும். காஃபி மேக்கரில் கண்ணாடிக்குடுவை ஒடைஞ்சா, அந்த இடத்துலெ நம்ம எவர்சில்வர் கிண்ணம்கூட
வச்சு டிக்காஷன் பிடிச்சுக்கலாம். இது இன்னும் ச்சீப்:-))))

C L R ( calcium, Lime Rust) ன்னு ஒண்ணு விக்கறான், திரவ ரூபத்தில். இதைக் கொஞ்சம் குடுவையில் ஊத்திக்
கொஞ்சம் தண்ணீர் கலந்து வச்சால் எல்லா கறைகளும், வெள்ளையாப் படியுற உப்பெல்லாம் போயிருது.

எவர்சில்வர் பாத்திரத்துலெ உள்ளெ பிடிக்கற கறை உப்பு எல்லாம்கூடப் போயிருது. ஷவர் ஹெட்க்குக்கூட பயன்
படுத்துலாம். அடைப்பு சரியாயிரும்.

இந்தச் சனியன் காஃபியை விட்டு ஒழிக்கலாமுன்னா முடியலையே.

அரைச்சக்கரை போட்டு ஒரு ஸ்ட்ராங் ஃபில்ட்டர் காஃபி குடிச்சாத் தேவலைன்னு இருக்கு.

ரங்கா - Ranga சொன்னது…

தேசி பண்டிட்டில் சேர்த்ததற்கு நன்றி துளசி.

ஸ்டார்பக்ஸ் ரொம்ப நல்லாவே போகுது. அதுல ஒரு வேடிக்கை என்னன்ன ஸ்டார்பக்ஸ் ஐடியா குடுத்தவர் இன்னொரு கடையிலே வேலைக்கு இருந்தார். கடை முதலாளிகளுக்கு இந்த யோசனை பிடிக்கல. அதனாலே சொந்தமா ஆரம்பிச்சார்; கொஞ்ச நாளிலே நன்னா வியாபாரம் பெருகி, பழைய கடையையே விலைக்கு வாங்கிட்டார்! எல்லாம் காப்பியோட நேரம்!

இந்த கண்ணாடி குடுவை மாற்றுவது எளிதானது இல்லை. எனக்கும் முதலில் அதே எண்ணம்தான், கீழே ஒரு பாத்திரத்தை வைத்து பிடிச்சுக்கலாமேன்னு! ஆனா பில்டர்ல ஒரு பூட்டு சமாசாரம் இருக்கு. டிகாஷன் கீழ வரணுமுன்னா, அதற்கு தகுந்தா மாதிரி குடுவை மூடி இருந்தாத்தான், ஸ்டாப்பர் நகர்ந்து காப்பி கீழேயே வரும். இந்த பூட்டு (ஸ்டாப்பர்) அளவை ஒரே மாதிரி வைக்காம ஒவ்வொரு பிராண்டும் ஒவ்வொரு விதம். பில்டர் உபயோகிக்கணும்ன்னா வேற வழியே இல்லை - அந்த பிராண்ட் குடுவை வாங்குவதைத் தவிர!

CLR கூட வேண்டாம். கொஞ்சம் வெள்ளை வினிகர் போட்டாக் கூட உப்பு போயிடும். பிரச்சனை என்னன்னா, இந்த பில்டருக்குள்ள இருக்கும் குழாய்களில் உப்பு படிஞ்சுதுன்னா கழுவுவது கடினம். எந்த திரவத்தைப் போட்டாலும், அது இந்தக் குழாய்க்குள்ள மாட்டிக்கிட்டு, ஒரு ஐந்து, ஆறு முறை வெறும் தண்ணியாலே, காப்பிப் பொடி போடாம பில்டரை உபயோகிச்சுத்தான் கழுவணும். தண்ணி சரியில்லேன்னா, மறுபடியும் உப்பு! இந்த தொந்தரவுக்கு, ஒரு வருடத்துல தூக்கிப் போட்டுட்டு புது பில்டரே வாங்கிடலாம்.

இந்த தொடரை எழுத ஒரு உந்துதலே காப்பி குடிப்பதை விடுவதற்காகத்தான். விடுவதற்கு முன்னாலே, 'உடலாலும் (நாக்கு), மனதாலும் நன்றாக அனுபவித்து விட்டு விட்டுவிடலாம்' அப்படிங்கற எண்ணம்.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

இ.கொ.,

சரக்குன்னா வேறதான் தோணுது! ஸ்டார்பக்ஸுல இருக்கிற விதம் அத்தனையும் சாம்பிள் பண்ணிப் பார்க்க நாளும் அதிகமாகும், காசும் அதிகம் (விரயம்) ஆகும். நமக்கு வேண்டாம்பா இந்த விளையாட்டு!

ரங்கா.

பத்மா அர்விந்த் சொன்னது…

ரங்கா
உங்கள் காப்பி தொடரை ஆர்வமாக படிக்கிறேன். டிரைக்ளிசரைட் அதிகமாக இருந்தால், இரண்டு முறை நடப்பதையும் (20 நிமிடங்கள்), நெய் வெண்ணெய், கடலை எண்ணெY தவிர்த்து, ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்லுங்கள். அதேபோல 2% பாலுக்கும் மாறி, நிறைய வேக வைத்த காய்கறிகள் சேர்த்தும், பச்சரிசிக்கு பதில் பிரவுன் ரிசிக்கு மாறினாலும் சீக்கிரமே சரியாகிவிடும். நடுத்தர வயதுக்கு வரும் போது, நம்முடைய செரிமான சக்தி குறைவதும் சொகுசான வாழ்க்கையும் (சீஸ் போன்றவை சேர்வது) இதற்கு முக்கிய காரணமாக ஆசிய இந்தியர்களிடம் தெரிகிறது.

ரங்கா - Ranga சொன்னது…

விபரங்களுக்கும், குறைப்பதற்கான வழிகள் சொன்னதற்கும் நன்றி பத்மா. முன்பிருந்ததை விட இப்போது குறைந்திருக்கிறது. இந்த வருட இறுதியில் மறுமுறை பரிசோதிக்க வேண்டும் :-)

ரங்கா.

வல்லிசிம்ஹன் சொன்னது…

டிரை க்ளிசரைடு குறையணும்.
உங்களை விட்டுட்டுப் போயிடணும்.
நீங்க மறுபடி
காப்பி சாப்பிடணும்னு உங்களுக்கு
வாழ்த்து அனுப்புகிறேன்.
சுகர்-சக்கரைக்காக
உங்க ஊர் டி- காஃபினேடட்
எங்க பொண்ணு அனுப்பி, அதைப் பார்த்தே கசப்பு வந்து,
ஒரு வேளைக் காப்பிக்கு மாறி விட்டேன்.

ரங்கா - Ranga சொன்னது…

வள்ளி,

உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி :-) ட்ரைகிளசரைட் போனாலும், அனேகமாய் காப்பி குடிப்பதை விடுவது என்று முடிவு செய்து விட்டேன் - எப்போது என்று தான் தெரியாது!

டீ காஃபினேட்டட் என்று சொல்வது கிட்டத்தட்ட ஒரு மோசடி! மாய்ந்து மாய்ந்து குடிப்பதே இந்த கஃபைனுக்காகத்தான் - அது இல்லாமல் அது எப்படி காப்பியாகும்? எல்லாம் காசு பண்ணுகிற வேலையினால் வந்தது.

ரங்கா.