ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2006

காப்பி - 2

இராமநாதபுரத்தில் முதல் வகுப்பு முடித்தவுடன் சென்னை வந்தேன் - தந்தையாரின் உத்தியோக மாற்றம் காரணமாக. எல்லாமே புதுசு, காப்பிக்கு பால் உட்பட. அப்போதுதான் ஆவின் புட்டிப் பால் வந்திருந்த சமயம். வீட்டுக்கு ஒரு அட்டை - கலர் கலராக - ஒரு பாட்டிலா, இரண்டு பாட்டிலா என்று அடையாளம் காட்ட. எங்கள் தெருவில் நான்கு ஐந்து வீட்டுக்கு ஒரு அம்மாள் (பேர் தெரியாது; ஆயா என்றுதான் எல்லோரும் - அவரை விட வயதானவர் உட்பட- கூப்பிடுவோம்) மொத்தமாக அட்டையை எடுத்துக் கொண்டு போய் பாட்டில் அத்தனையும் இரண்டு பெரிய துணிப்பைகளில் போட்டு எடுத்து வந்து கொடுப்பார். பாட்டில் வெளியே அழுக்கு அதிகம், முதலில் பாட்டிலை தண்ணீரால் அலம்பிவிட்டுத்தான், மூடியையே திறப்போம். மூடி கலர் கலராக இருக்கும் அலுமினியத் தாள். அந்தக் காலத்தில் இந்த மூடியை எல்லாம் சேகரித்து, மாலையாகவோ, அல்லது நவராத்திரிக்கு கொலுவில் தோரணமாகவோ தொங்க விடாத வீடுகளே இல்லை; அப்படிப் பிரபலமான ஒரு மூடி.

புட்டிப் பாலின் வாசனை ஒரு விதமானது. பாட்டிலோடு, அதுவும் அதிக பாட்டில்கள் இருக்கும் பையோடு இருக்கையில் ஒரு வாசனை. பாட்டிலை அலம்பிவிட்டு, பாலை பாத்திரத்தில் விடும் போது வேறு விதமான வாசனை - கொஞ்சம் தாக்கம் குறைவாக. காய்ச்சியவுடன், மெல்லிய பால் வாசனை மட்டும் தான். அது மட்டுமல்ல, பாட்டிலுக்கு எவ்வளவு வேர்த்திருக்கிறது என்பதைப் பொறுத்தும் வாசனை கொஞ்சம் மாறும். பதப் படுத்தப்பட்டு, குளிர்வித்த பாலின் வாசனை (வேர்த்த பாட்டில்) கொஞ்சம் தூக்கலாக இருக்கும். ஆவின் அப்போதுதான் வந்திருந்தது என்பதால், அம்மா அதே தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் தினமும் கொஞ்சம் பால் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார் - ஒரு பிளான் B வேண்டாமா? அது கறந்த பால் என்பதால், வாங்கி வரும் பாத்திரத்தில் வேர்க்காது. ஔவையாருக்கு முருகன் கேட்ட 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' கேள்வி போல் 'வேர்த்த பால் வேண்டுமா? வேர்க்காத பால் வேண்டுமா'? என்று கேட்போம்! எந்தப் பால் என்பதைப் பொறுத்து காப்பியின் சுவை, வாசனை கொஞ்சம் மாறும்.

இந்த சமயத்தில் பில்டரும் பித்தளையிலிருந்து குட்டி எவர்சில்வருக்கு மாறியது. வீட்டிற்கு உறவினர் வந்தால் மட்டும் பித்தளை பில்டர் வந்தது - அதிகம் டிகாஷன் வேண்டுமே! காப்பிக் கொட்டை வாங்கி அரைப்பதும் குறைந்து, பொடியாகவே வாங்க ஆரம்பித்தோம். அப்பா தினம் வேலைக்காக பாரிஸ் கார்னர் சென்று வந்ததால் மாதத்தில் ஒரு முறை வாங்கி வருவார். குமுட்டி அடுப்பின் உபயோகமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது, கிரசின் ஸ்டவ் வந்ததால்.

நாங்கள் சென்னையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு வருவதற்கு சற்று முன்னால் புட்டிப் பாலோடு, பாலிதீன் பைகளில் பால் தருவதை ஆவின் ஆரம்பித்தது. இதில் ஆயாவுக்கு ரொம்ப சந்தோஷம். பைகளின் கனம் குறைந்தது, அதிக வீடுகளுக்கு பால் எடுத்து வர ஆரம்பித்ததால், ஆயாவுக்கும் வருமானம். மூடி சேர்ப்பது குறைந்தாலும், பழைய பால் கவர்களினால் வேறு உபயோகம் வந்ததால், அம்மாவுக்கும் சந்தோஷம்தான். பாலித்தீன் பையும் அழுக்குதான், அதனால் அதையும் முதலில் தண்ணீரால் அலம்பிவிட்டுத்தான் வெட்ட வேண்டும். ஆனால் பாலின் சுவையில் ஒரு மாறுதலும் இல்லை.

இதன் நடுவே, சென்னையிலேயே உறவினர் வீட்டுக்குப் (பெசன்ட் நகர் என்று நினைவு) போன போது, அவர்கள் வீட்டுக்கருகில் டோக்கன் போட்டால் பால் தரும் நிலையங்களைப் பார்த்து பிரமித்ததுண்டு. முதலில் ஒரு கவுண்டரில் பைசா கொடுத்து டோக்கன் வாங்க வேண்டும். பின் பாத்திரத்தை அருகில் உள்ள குழாய்க்கடியில் வைத்து பின்னர் அந்த டோக்கனை குழாய்க்கு அருகில் இருக்கும் ஒட்டையில் போட வேண்டும். பத்து செகண்டுக்குள் பால் குழாயிலிருந்து கீழேயுள்ள பாத்திரத்தில்! அந்த அறைக்குள் நின்று கொண்டு யாரோ டோக்கனைப் பெற்றுக் கொண்டு அளந்து பாலை குழாய் வழியாக விடுகிறார்கள் என்றும் நினைத்ததுண்டு. அது இயந்திரம் தான் என்று ஊர்ஜிதமானதும், சோடா பாட்டிலின் மூடியை தட்டை செய்து வெட்டிப் போட்டால் பால் வருமா என்று அந்த உறவினர் வீட்டுப் பையன்களோடு விவாதித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. இந்தப் பாலில் புட்டிப் பாலில் வாசனை இருக்காது, அதே சமயம் வெளியே வாங்கும் பாலின் வாசனையும் இருக்காது. சொல்லப் போனால் தனித்த வாசனையே இல்லாத பால்.

இந்தப் பதிவே கொஞ்சம் பெரிதாகிவிட்டதால், தஞ்சை ஜில்லாவில் வசித்த போது இருந்த காப்பி முறையைப் அடுத்த பதிவில் தருகிறேன்.

முந்தைய பதிவு - காப்பி 1

4 கருத்துகள்:

Alex Pandian சொன்னது…

சைக்கிளில் வரும் ம.கூ.பா.வ.நி பால்காரரின் அலம்பல்கள், அவரது அளவைகள், ஒரு பெரிய கண்டெயினர், சின்ன கண்டெயினர் போன்ற விஷயங்களும் வரும் என எதிர்பார்க்கிறேன். சுதர்சன் காபி, கணேசா காபி போன்ற காபிபொடி கடைகளின் மணமும், குணமும் பறிமாறப்படும் எனவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

துளசி கோபால் சொன்னது…

ரங்கா,
//பாலிதீன் பைகளில் பால் தருவதை ஆவின் ஆரம்பித்தது. இதில் ......//

இந்த மெஷீன் நிறுவினதில் கோபாலுக்கு பெரும்பங்கு இருக்கு. அவர்தான் அப்போ அந்த
மெஷீனை எர்ரெக்க்ட் செஞ்சு அதை அப்ப இருந்த முதலமைச்சர் கருணாநிதி ஆரம்பிச்சு
வச்சது எல்லாம் அந்தக் காலக்கட்டங்களில் வந்துக்கிட்டு இருந்த தமிழ்நாடு நியூஸ் ரீல்
சினிமா தியேட்டர்களில் படம் ஆரம்பிக்குமுன் காமிப்பாங்க அதுலே வந்தது.
( கோபாலும் சினிமாவுலே ஆக்ட் கொடுத்தார்ன்னு நாங்க கலாட்டா செஞ்சோம்)

மெஷீன் சரிவரவேலை செய்யுமுன்பு பரிசோதனை செஞ்ச ப்ளாஸ்டிக் பை பால்கள் அப்ப
நம்ம வீட்டுலே வெள்ளம்தான்:-))))

ரங்கா - Ranga சொன்னது…

துளசி,

அப்படியா...அட, எனக்கு தெரிஞ்சவங்க மூலமா வந்தது தானா இது! ரொம்ப சந்தோஷம்.

ஆயாவோட, என் அம்மாவோட சார்பா கோபால் சாருக்கு பெரிய நன்றி.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

அலெக்ஸ்,

நான் எழுதியதில் (மூன்றாம் பகுதி) ஏதாவது விட்டுப் போயிருந்தா பின்னூட்டத்தில சொல்லிடணும் :-)

ரங்கா.