ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2006

காப்பி – 5

சிறு வயதில் கல்யாணத்திற்கு போவதென்றால் படு குஷி. விதவிதமான சாப்பாடு, விளையாட்டு, முக்கியமாக எப்போது வேண்டுமானாலும் காப்பி! இந்தக் கல்யாணக் காப்பியின் ருசியே தனி. இருபது வருடங்களுக்கு முன்னால், தஞ்சாவூர் ஜில்லாவில் கல்யாணத்திற்கு கோட்டை அடுப்பு என்று ஒன்று போடுவார்கள். ஒன்று, ஒன்றரை அடி அகலமும், இரண்டு அடி ஆழமும் இருக்கும். நீளம் எத்தனை அண்டாக்களை வைத்து சமையல் நடக்கும் என்பதைப் பொறுத்து - ஒரு பத்து, பதினைந்தடியாவது இருக்கும். இந்த வாய்க்கால் போன்ற குழியின் மேல் அண்டா போன்ற பெரிய பாத்திரங்களை வைத்து, கீழே குழியில் விறகை எரித்து சமைப்பார்கள். அடுப்பில் முதலாவதாக ஆரம்பித்து, கடைசியாய் முடிப்பது காப்பியைத்தான். ஒரு அண்டாவில் வென்னீர் கொதிக்கும், அருகிலேயே பால். பெரிய பாத்திரத்தில், நல்ல வெள்ளைத்துணியைக் கட்டி, காப்பிப் பொடி போட்டு, டிகாஷன் இறங்கிக் கொண்டிருக்கும். சில சமயம் ஸ்பெஷலாக ஒரு பெரிய பித்தளை பில்டர் - ஒரே சமயத்தில் கால் கிலோ பொடி போடும் அளவு பெரிசு - ஒரு மூலையில் டிகாஷன் இறக்கிக் கொண்டிருப்பார்கள். கேட்டால் அது மாப்பிள்ளைக்கும், சம்பந்திக்கும் என்று சொல்வார்கள்.

இந்த கல்யாணக் காப்பியில் ஒரு பிரச்சனை என்னவென்றால், நமக்கு வேண்டிய தனிப் பாணியில் காப்பி கிடைக்காது. ஒரு வாளியிலோ, அல்லது கூஜாவிலோ போட்டு, எல்லோருக்கும் வினியோகம் செய்வார்கள். அதிலே ஏற்கனவே பாலும், சக்கரையும் கலந்திருப்பார்கள். கொஞ்சம் அதிகம் பாலோ, டிகாஷனோ வேண்டுமென்றால் அடுக்களையில் யாரையாவது தெரிந்து வைத்திருப்பது நல்லது. சிறு வயதிலேயே சட்ட திட்டங்களில் எங்கு ஓட்டை இருக்கிறது என்று பார்ப்பதில் நானும், என் ஒன்றுவிட்ட சகோதரனும் மிகுந்த ஆர்வம் காட்டுவோம். இருவருக்குமே காப்பி பிடிக்கும். இருவரும் யோசித்து, அடுக்களைக்கு சென்று, இல்லாத இரண்டு சம்பந்தி மாமாக்களுக்கு சக்கரை இல்லாத காப்பி வேண்டும் என்று கேட்டு, அவர்கள் அந்த ஸ்பெஷல் காப்பியைக் கொடுக்க, அதை நான் எடுத்து வந்தேன். இதே சமயத்தில் காப்பிக்கு கொஞ்சம் சக்கரை வேண்டும் என்று என் கஸின் வாங்கி வர, இருவருக்கும் சூப்பர் காப்பி. இந்த தகிடுதத்தம் எவரும் அறியாமல், குறைந்தது நான்கு கல்யாணங்களுக்கு தொடர்ந்தது.


புதிதாகப் போட்ட டிகாஷனில் கலந்த காப்பிக்கும், முன்னமேயே போட்டு அது ஆறிப் போய், மறுமுறை சுடவைக்கப்ப்பட்ட காப்பிக்கும் வித்தியாசம் உண்டு. கல்யாணத்தில், எப்போது பார்த்தாலும், அடுப்பு எரிந்து கொண்டிருப்பதாலும், அவர்கள் சூடு செய்யும் முறை கொஞ்சம் வித்தியசமானதாலும், அதைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம். முன்னமேயே போட்ட காப்பி ஆறிவிட்டால், அதை நேரடியாக அடுப்பில் சுட வைக்கக் கூடாது. வென்னீரைக் கொதிக்க வைத்து, அதில் காப்பியிருக்கும் பாத்திரத்தை வைத்து காப்பியை சூடாக்க வேண்டும். கல்யாணத்தில், காப்பியைப் போட்டு ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து விடுவார்கள். வினியோகிக்க வருபவர் அந்தக் காப்பியை ஒரு வாளியிலோ, கூஜாவிலோ எடுத்துக் கொண்டு வருவார். சூடு ஆறாமலிருக்க, அந்தப் பாத்திரத்தை அதை விட ஒரு பெரிய அண்டாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, மூடி வைத்து விடுவார்கள். இந்த வென்னீர் அண்டா அடுப்பில் இருக்கும்; ஆகையால் காப்பியும் எப்போதும் சூடாக இருக்கும். இது ஓரளவு காப்பி மணத்தினைப் பாதுகாப்பதால் அவ்வளவாக வித்தியாசம் தெரியாது.

ஆனால் காப்பியை சாப்பிடுகையில் வித்தியாசம் கொஞ்சம் தெரியும் - சாப்பிடுபவருக்கு காப்பியின் வெவ்வேறு ருசிகள் புரிந்திருந்தால். புதிதாகப் போட்ட காப்பியின் சூடும் சுவையும் வாய் முழுதும், முக்கியமாக நாக்கின் நுனியிலிருந்து, அடி வரை தெரியும். மறுமுறை சுடவைக்கப் படும் போது, சுவை கொஞ்சம் குறையும்; சூடும் முழுவதுமாகப் பரவாது. முக்கியமாக நுனிநாக்கில் காப்பியின் சூடு தெரியும்; முழுங்குகையில், வாயில் இருக்கும் கடைசி காப்பி தொண்டைக்குள் இறங்குகையில், அடி நாக்கில் சூடு தெரியாது. இது கிட்டத்தட்ட காப்பியின் வெளிப்புறம் சுடுவது போலவும், உட்புறம் சூடு இழந்து விட்டது போலவும் தோன்றும் (காப்பி திரவம், அதனால் உள் - வெளி என்பது கிடையாது என்றாலும், இதை வேறு எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை). இது விறகு அடுப்பினால் மட்டும் வருகிறது என்றில்லை; இங்கு 'மைக்ரோவேவ்' ஓவனில் வைத்து எடுத்தாலும், அதே நிலை தான். இது காப்பியின் தன்மை என்று நினைக்கிறேன். காப்பிக் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் டிகாஷன் கொஞ்ச நேரம் கழித்து வேறு நிலையை அடைகிறது; அதை மறு முறை மாற்ற இயலாது என்பது என் கருத்து. யாராவது விஞ்ஞானி ஆராச்சி செய்து சொன்னால் தேவலை.

காப்பி சாப்பிடுவதற்கு முன்னால் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் காப்பியின் சுவையை மாற்றுகிறது. இது முக்கியமாக கல்யாணத்திலும், ஓட்டல்களிலும் அனுபவித்திருக்கிறேன். காப்பிக்கு முன்பாக இனிப்பை சாப்பிட்டால், காப்பி அதிகம் கசக்கும் என்பது நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். அதே போல காப்பிக்கு முன்னால் அதிகமான காரம் சாப்பிட்டிருந்தால், சூடான காப்பி நாக்கில் உள்ள சுவை உணரும் செல்களைத் தாக்கும். இது எரியும் உணர்ச்சியை ஏற்படுத்தும். சமயத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தால் இரண்டு மூன்று வேளைகளுக்கு காப்பியின் சுவை வேறுபட்டு இருக்கும். அதே போல அதிகமான சூடோடு காப்பியை குடித்தால், நுனி நாக்கில் சுட்டு விடும்; இதனால் சிறு கரும் புள்ளிகளை நுனிநாக்கில் பார்க்கலாம். இது சரியாக 24 மணி நேரம் ஆகலாம். அது வரை காப்பியின் சுவை கோவிந்தா!

காலைக் காப்பியின் சுவை, நீங்கள் என்ன பற்பொடி, அல்லது பற்பசை உபயோகிக்கிறீர்கள் என்பதைப் பொருந்த்தது. நீங்கள் தினம் காலையில் பல் துலக்கிய பின்னால் தான் காப்பி குடிக்கிறீர்கள் என்றால் ஒரு நாள் இதை செய்து பாருங்கள். பற்பசையோ, பல் பொடியோ உபயோகிக்காமல், வாயை நன்கு தண்ணீரால் (முடிந்தால் வெது வெதுப்பான வென்னீரில்) கொப்பளித்து அலம்பி, பின் காப்பியை பருகிப் பாருங்கள். சுவை அதிகமாகத் தெரியும். பற்பசைகளில் இருக்கும் ப்ளோரைட் போன்ற சமாசாரங்கள், மற்றும் 'மௌத் பிரஷ்னர்' எனப்படும் வாசனை வஸ்துகள் வாயில் தங்கி விடுகின்றன. இவை நாக்கின் சுவையறியும் செல்களின் திறனை பாதிக்கிறது. ஆதலால், காப்பியின் சுவையும் மாறுகிறது. சிறு வயதில் ஒரு பரிசோதனை போல கோபால் பல்பொடி, வீக்கோ வஜ்ரதந்தி, கோல்கேட் பவுடர், கோல்கேட் பேஸ்ட், பினாகா (பின்னாளில் இதுவே சிபாகா), போர்ஹான்ஸ் என்றெல்லாம் உபயோகித்து காப்பி சாப்பிட்டு, வரும் வித்தியாசத்தை ஆராய்ந்திருக்கிறேன். இவைகளில் எதையாவது ஒன்றைத்தான் உபயோகிக்க வேண்டும் என்றால், வீக்கோ வஜ்ரதந்திக்குத் தான் என் ஓட்டு. இது எதுவுமே வேண்டாம் என்று வென்னீர் கொப்பளித்து காப்பி குடிப்பது அதை விட அருமை. குடித்து கொஞ்ச நேரம் கழித்து பல் துலக்கிக் கொள்ளலாம்.

அடுத்த பதிவில் இந்தியாவில் வேலை காரணமாக நான் சென்ற இடங்களில் குடித்த காப்பி பற்றியும், காப்பி பொடி (இன்ஸ்டன்ட்) தயார் செய்த ஒரு ஆலையில் தணிக்கைக்காக சென்றது பற்றியும் தருகிறேன்.

முந்தைய பதிவுகள்
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1

4 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

பயங்கர எக்ஸ்பெரிமெண்ட் எல்லாம் செஞ்சு பார்த்திருக்கீங்க:-))))

ரெண்டாம்தரம் சுடவச்ச காபி 'யக்'

எவர்சில்வர் ஃபில்டரைவிட பித்தளை ஃபில்டர்லெ போட்டால் சுவை கூடுனமாதிரி இருக்கு.

ரங்கா - Ranga சொன்னது…

துளசி,

அப்போது தொலைக்காட்சி இல்லை; நிறைய நேரம் இருந்தது - இந்த மாதிரி பரிசோதனை பண்ண :-)

பித்தளை பில்டர்ல வர சுவைக்கு, அதைக் கழுவும் முறையும் ஒரு காரணம். கொஞ்சம் கரித்தூள் (அல்லது செங்கல் தூள்), புளி இதெல்லாம் போட்டுக் கழுவும் போது என்னதான் நிறைய தண்ணீர் விட்டு அலம்பினாலும், கொஞ்சம் அந்த சமாசாரங்களில் சுவை வந்துடுது. எவர்சில்வருக்கு அனேகமா சோப்புதான் - அதனால டிகாஷன் சுவை வேறுபடுது. இதுக்கு நான் ஆராச்சில்லாம் பண்ணல - ஒரு ஊகம் தான்.

ரங்கா.

கப்பி பய சொன்னது…

//முன்னமேயே போட்ட காப்பி ஆறிவிட்டால், அதை நேரடியாக அடுப்பில் சுட வைக்கக் கூடாது. வென்னீரைக் கொதிக்க வைத்து, அதில் காப்பியிருக்கும் பாத்திரத்தை வைத்து காப்பியை சூடாக்க வேண்டும்.//

ஓ!!!

ஆனா சுட வச்ச காபி சுவை குறைவு தானே!!

ரங்கா - Ranga சொன்னது…

நிச்சயமா சுவை குறைவுதான். எவ்வளவு குறையுதுங்கறது சுட வைப்பதில இருக்கு :-)

ரங்கா.