ஞாயிறு, ஜூலை 24, 2005

பயணமே இலக்கு!

பள்ளியில் படிக்கும் போது மனதைப் பற்றிய கவிதைகளில் ஒன்று கண்ணதாசனின் "நீ மணி - நான் ஒலி!" பின்பு கல்லுரியில் படிக்கையில் ஸென் புத்தக் கதைகள் மற்றும் சித்தர் பாடல்கள் (முக்கியமாக சிவவாக்கியர்) என்னை யோசிக்க வைத்தன. இவைகளின் பாதிப்புதான் இந்தக் கவிதை.

பயணமே இலக்கு

இலக்கை நோக்கி பயணித்தேன்
பயணத்தில் வந்தது தெளிவு
இப்போது பயணமே இலக்கு

தேர்வில் வெல்லப்பாடம் படித்தேன்
வென்றபின் வந்தது அறிவு
வெல்ல வேண்டியது தேர்வல்ல

பதில்தேடிப் படிக்க ஆரம்பித்தேன்
படிக்கப்படிக்க வளர்ந்தது கேள்வி
இப்போது படிப்பே கேள்வி

மற்றவர் பாராட்டவே ஆசைப்பட்டேன்
ஆசைப்பட்டு உழைத்ததில் புரிந்தது
உழைப்பே உண்மைப் பாராட்டு

குடும்பத்திற்காக செல்வம் சேர்த்தேன்
சேர்த்தபின் வந்தது தெளிவு
இப்போது குடும்பமே செல்வம்

குழந்தையைக் கடிந்தேன் பொறுமையில்லையென்று
அழுகை நின்றபின் புரிந்தது
எனக்குத்தான் இல்லை பொறுமை

நிம்மதிதேடி வெளியில் அலைந்தேன்
அலைந்து களைத்தபின் புரிந்தது
உள்ளே பெறுவதுதான் நிம்மதி

சுத்தம்வேண்டி கங்கையில் மூழ்கினேன்
மூழ்கி எழுந்ததும் தெரிந்தது
சுத்தம் கங்கையில் இல்லை

முன்னேற்றம் வேண்டி நாகரீகமானேன்
மாறியபின் வந்தது தெளிவு
நாகரீகத்தில் இல்லை முன்னேற்றம்

தனிமைக்கு பயந்து கூட்டம் தேடினேன்
கூட்டத்தில் இருக்கையில் புரிந்தது
தனிமை மனதினுள்ளே என்று

விரதங்களிருந்து மலைகளேறினேன் இறைவனைத்தேடி
தேடிக்களைத்தபின் வந்தது ஞானம்
தேடவேண்டிய இடம் உள்ளேயென்று

4 கருத்துகள்:

இப்னு ஹம்துன் சொன்னது…

அட!

ரங்கா - Ranga சொன்னது…

தங்கள் 'அட!' தெரிவிப்பது வியப்பா? பாராட்டா? தெரியவில்லை ;-) பின்னூட்டமிட்டதற்கு நன்றி!

Ramya Nageswaran சொன்னது…

யோசிக்க வைக்கும் வரிகள். பாராட்டுக்கள்.

ரங்கா - Ranga சொன்னது…

வாசகன், ரம்யா,

பின்னூட்டமிட்டதற்கு நன்றி!