ஞாயிறு, மே 03, 2009

தந்தனத்தோம் கோமாளி (திரும்பி) வந்தானையா!

தந்தனத்தோம் கோமாளி (திரும்பி) வந்தானையா!

இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது நான் இணையத்தில் பதிந்து. முக்கிய காரணம் 2007ல் வேலை மாற்றம் (அதே அலுவலகம்; பணி வேறு). ஒரு வருடத்திற்குள் வேலை புரிந்து போய், அலுவலகத்தில் செலவழிக்கும் நேரம் குறைந்து போனாலும், திரும்பி வராததற்கு காரணம் சோம்பல். தவிர என் இணைய விடுப்பு யாருக்கும் பெரிய இழப்பாகத் தெரியவில்லை. இந்த இரண்டு வருடத்தில் அதிக பட்சம் ஐந்து அல்லது ஆறு விசாரணைகள் - ஏன் எழுதுவதில்லை என்று.

கடந்த ஒரு மாதத்தில் இரண்டு பேர் ரொம்பவும் வற்புறுத்தினார்கள் - அவர்கள் சொன்ன காரணங்கள் நிறைய இருந்தாலும், ஒரு காரணம் நிரம்பவும் ஆழமாக இருந்தது. "முயற்சி செய்யாத போது நூறு சதவீத வாய்ப்பையும் இழக்கிறாய்" என்பது தான் அது. You miss 100% of shots you don’t take! அதனால் தான் இந்த மறு நுழைவு!

சொந்த வாழ்க்கையில் இந்த இரண்டு வருடங்களில் பெரிய மாறுதல் ஏதும் இல்லை. அதே வீடு, வேலை (ஆண்டவன் புண்ணியத்தில் இன்னமும் வேலை இருக்கிறது!), தினசரி வாழ்க்கை. பிள்ளைகள் பெரிதாகி வருகிறார்கள் - அதில் அனேக மாற்றங்கள்; வாழ்க்கையில் பெற்றோர் பணி சம்பந்தமான கல்வி இன்னமும் தொடருகிறது - பிள்ளைகளின் தயவால்.

வெளியே மாற்றங்கள் அதிகம் - புது ஜனாதிபதி இங்கே! உலகமும் முழுவதும் இந்த "எகானமி" படுத்தும் பாடு தாங்கவில்லை. பொருளாதாரத்தில் (பொருள் + ஆதாரம்) - பொருளும் இல்லை; ஆதாரமும் இல்லை போல் தெரிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விண்கலத்தில் ஏறி 'வியாழன்' கோளுக்குச் (குரு - ஜாதக கணிப்பில் அவர் தான் செல்வத்தை குறிப்பவர்) சென்று, இப்போது திரும்பினால், விண்வெளியில் இருந்து பார்க்கும் போது பூமி அப்படியே தான் இருப்பது போல் தெரியும். இந்த இரண்டு வருடங்களில் புதிதாக பெரிய மலையோ, கடலோ வரவில்லை - இயற்கையின் செயலில் இரண்டு வருடங்களில் பெரிய மாற்றம் இல்லை; குரு தந்த செல்வத்தில் குறைவு இல்லை.

ஆனால் மனித இனத்தால் உருவாக்கப் பட்ட இந்த பொருளாதரம், பணம் என்ற விஷயங்களில் தலைகீழ் மாற்றம். மொத்த உலக சொத்து இருப்பில் (GDP) பத்து சதவீதம் குறைந்து போயிற்று என்கிறார்கள். எங்கே போயிற்று என்று யாரும் புரியும்படி சொல்ல மாட்டேன் என்கிறார்கள். கீதாசாரம் தான் துணைக்கு வருகிறது!

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்!
இந்த மாற்றம் உலக நியதியாகும்.

7 கருத்துகள்:

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//உலக சொத்து இருப்பில் (GDP) பத்து சதவீதம் குறைந்து போயிற்று என்கிறார்கள். எங்கே போயிற்று என்று யாரும் புரியும்படி சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.

கீதாசாரம் தான் துணைக்கு வருகிறது!//

ஹா ஹா ஹா!
எப்படி-ன்னும் சொல்லுங்க!

எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது = Sub prime Mortgages! :)

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது = Foreclosure வீடு! :)

மீள்வரவுக்கு நல்வரவு-ங்க ரங்கா! :)

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி KRS.

நீங்க சொல்கிறா மாதிரிதான் - பொருத்தமான உதாரணங்கள்.

பிகு: உங்க தொலைபேசி எண்ணை மின்னஞ்சலில் அனுப்புங்களேன்!

இலவசக்கொத்தனார் சொன்னது…

வாங்க ரங்கா!! தொடர்ந்து எழுத நேரம் கிடைக்க வாழ்த்துகள்!!

வல்லிசிம்ஹன் சொன்னது…

மீள் வரவு நல்வரவாகுக.
வேலை இனும் இருக்கிறது.....நல்ல விஷயம்,
குழந்தைகள் நலமாக இருக்கிறார்கள் இன்னும் நல்ல விஷயம், இந்த பெற்றோர் பாடம் தான் புரியவில்லை. தங்கள் வீட்டில் அன்னைதான் பாடம் நடத்துவதாகக் கேள்விப்பட்டோம்.:)))

எப்படியிருந்தலும் ,நல்ல எழுத்துகளையும் ''பசு''மையான நினைவு நிகழ்ச்சிகளையும் அள்ளி வழங்க வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

குமரன் (Kumaran) சொன்னது…

வாங்க ரங்காண்ணா. எழுதாட்டியும் படிச்சுகிட்டு தான் இருந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். சரியா? :-)

காபி, டீ எல்லாம் குடுச்சுட்டு விரைவா தொடர்ச்சியா எழுதிக்கிட்டு வாங்க; படிக்கிறோம். :-)

ரங்கா - Ranga சொன்னது…

இ.கொ., வல்லியம்மா, குமரன் - நல்வரவு தந்ததற்கு நன்றி.

வல்லியம்மா - என் மகனும், மகளும் ஒரு தந்தைக்கு நடத்தும் பாடத்தைப் பற்றி எழுதினேன் :-)

ரங்கா.

வல்லிசிம்ஹன் சொன்னது…

அப்படியே அப்பாவை உரித்து வைத்திருக்கிறதுன்னு இதைத் தான் சொல்வார்கள்:)