ஒவ்வொரு புது பெற்றோருக்கும் தன் குழந்தையை எப்படி ‘ஐடியலாக’ (IDEAL) வளர்க்க வேண்டும் என்று நிச்சயம் எண்ணம் இருக்கும். குழந்தை வளர்ந்து பெரிதாகும் போது அவர்களுடைய ‘வளர்க்கும் முறை’ அந்த ‘வளர்க்கும் தர’த்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். இரண்டு (அல்லது மூன்று/நான்கு) குழந்தைகளுக்குப் பின் இந்த ‘தரம்’ மொத்தமும் மாறியிருக்கும். எனக்கும் இந்த மாதிரி நிறைய விஷயங்களில் ஒரு ‘தரம்’ வைத்திருந்து அவைகள் மாறி வருவதைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். இது அவ்வளவு சுவையாக இல்லை. பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் சொன்ன பொன் மொழி நினைவுக்கு வந்து படுத்துகிறது: 'வாழ்க்கை என்பது அனேகம் பேருக்கு இலட்சியத்திற்கும் நடைமுறைக்கும் நடக்கும் சமரசம்.'
Real life is, to most men, a perpetual compromise between the ideal and the possible – Bertrand Russell.
‘சிறு வயதில் குழந்தைகள் தெரிந்து கொள்வது அவர்கள் கேட்கும் கேள்வியில்தான் உள்ளது; அந்த ஆவலை (CURIOSITY) தடை செய்யக் கூடாது, அவர்களுக்கு உண்மையான பதிலை சொல்வதன் மூலம் அவர்களுடைய அறிவை வளர்க்க முடியும்’, என்றெல்லாம் எனக்கு ஒரு தீர்மானமான எண்ணம். ஆதலால் என் மகள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு உண்மையான விளக்கம் தர வேண்டும், அரை குறை பதில் சொல்லி சமாளிக்கவோ, அல்லது கோபிக்கவோ கூடாது என்றும் அவள் பேச ஆராம்பிப்பதற்கு முன் உறுதியாய் இருந்தேன். இதற்கு சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது நான் அதிகம் கேள்வி கேட்கிறேன் என்று சில ஆசிரியர்கள் என்னை கேள்வியே கேட்கக் கூடாது என்று படுத்தியதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
என் மகள் சிறு குழந்தையாய் பேச ஆரம்பித்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தபோது முதலில் அதிகம் கேட்ட கேள்வி ‘எங்கே?’ என்பது தான். ‘ஏன்’ ‘எப்படி’ என்பதெல்லாம் பின்னால் தான் வந்தது. அவள் கேட்ட நிறைய ‘எங்கே?’ கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. முடியவில்லை என்பதில் இரண்டு வகை – ஒன்று எனக்குத் தெரியும் என்று நான் நினைத்துக் கொண்டு அவளுக்கு புரிகிற மாதிரி விடை சொல்ல ஆரம்பித்து, அவளையும் குழப்பி, நானும் குழம்பியது; மற்றொன்று எனக்கு விடையே தெரியாத கேள்விகள்!
உதாரணமாக 'சூரியன் எங்கே போச்சு?' என்ற கேள்விக்கு, விபரமாக பந்தை வைத்து பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றெல்லாம் சொல்ல ஆரம்பிக்க அவளைக் குழப்பி வெறுப்பேற்றியதுதான் மிச்சம். இது முதல் வகை.
இரண்டாம் வகையில் - அதாவது எனக்கு உண்மையில் விடையே தெரியாத வகையில், சில கேள்விகளுக்கு கொஞ்சம் பொய் கலந்து சொல்லி சமாளிக்க ஆரம்பித்தேன். வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கையில் சாலையில் போன காரைப் பார்த்து ‘கார் எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு உண்மையில் எனக்கு பதில் தெரியாது; இருந்தாலும் ‘வீட்டுக்கு போச்சு’ என்று சொல்வேன் (பொய்தான் – இருந்தாலும் பாதகமில்லை என்ற நினைப்பு). இது வானத்தில் பறக்கும் பறவைக்கும் (‘அது தன்னோட கூட்டுக்கு போச்சு’) பொருந்தும். அந்த சமயத்தில் உண்மையாக இல்லாவிட்டாலும் இந்த மாதிரி விடைகள் பொருத்தமானவையாகவே இருக்கும்.
இதிலேயே கடினமான கேள்விகளை என் மகள் கேட்க ஆரம்பித்த போதுதான் பிரச்சனையே வந்தது எனக்கு. வீட்டில் தொலைக்காட்சி பெட்டியை அணைத்தவுடன் ‘படம் எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை. என் மண்டைக்குள் அந்தக் கேள்வி இன்னமும் குடைந்து கொண்டிருக்கிறது. படம் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளி பரப்பப் படும் போது அலைகள் ரூபத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் பார்க்க எனக்கு தொலைக்காட்சி பெட்டி தேவை. நான் தொலைக்காட்சி பெட்டியை அணைப்பதன் மூலம் படம் இல்லாமல் போய் விடுகிறதா என்ன? இது பூனை கண்ணை மூடிக் கொண்டு விட்டால் உலகம் இருண்டுவிடும் என்பதைப் போல இருக்கிறது. ‘எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. என் மகளிடம் 'தெரியாது' என்று சொன்னால், நான் பதில் தெரிந்து கொண்டே அவளுக்கு சொல்லவில்லை என்று கோபம் - அழுகை. வழக்கம் போல் என் மனைவி ‘காணாமல் போச்சு’ என்று பதில் சொல்லி அவளை சமாதானப் படுத்தினாள். இருந்தாலும் எனக்கு இந்தக் கேள்வி ஒரு புரியாத புதிராகவே இன்னமும் இருக்கிறது. உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.
இப்போதெல்லாம் என் மகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பை என் மனைவியிடமே விட்டு விட்டேன். இதே போல எனக்குள்ளேயே நிறையக் கேள்விகள் வர ஆரம்பித்துவிட்டன. உதாரணமாக இந்த வருடம் முடிந்து, அடுத்த வருடக் காலண்டரை மாட்டி, '2006 எங்கே போச்சு?' என்று யோசித்தால் பதில் கிடைக்கும் என்று தோன்றவில்லை. வயது ஆக ஆக எனக்குத் தெரியாதது அதிகமாவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. 'எங்கே?' கேள்விகளுக்கே இப்படி என்றால், 'ஏன்?' என்ற கேள்விக்கு நிச்சயமாக நான் அம்பேல்!!!
6 கருத்துகள்:
நல்லா எழுதியிருக்கீங ரங்கா அண்ணா. என் அனுபவம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. என் மகள் கேட்ட கேள்விகள் மிகுதியா 'ஏன்' என்பது தான். எதைச்சொன்னாலும் அடுத்து ஒரு ஏன் வரும். நாங்களும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டிருப்போம். இப்போது என் மாமனார் மாமியார் வந்திருக்கிறார்கள். அவள் கேட்கும் 'ஏன்' கேள்விகளுக்கு அவர்கள் ஒன்று 'அது அப்படித் தான்' என்று சொல்கிறார்கள்; அவர்கள் அவளையே திருப்பி 'ஏன்' என்று கேட்கிறார்கள். அதனால் அவர்கள் மேல் அவளுக்கு சினம் வருகிறது. சினந்து கொள்கிறாள். சில நேரம் அவர்கள் பேசிக் கொள்வதைப் பார்த்தால் சிரிப்பாகவும் இருக்கிறது.
கடைசி பத்தியில் எங்கேயோ போய்விட்டீர்கள். உண்மை தான். வயதாக வயதாக தெரியாதது நிறைய இருக்கிறது என்று தெரிந்து கொண்டே வருகிறது உண்மை தான்.
குமரன்,
உண்மைதான் - 'ஏன்' என்ற கேளிவிக்கு இருக்கும் ஒரு வலிமை மற்ற எந்தக் கேள்விக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. கேள்வி கேட்பதற்காக என் மகளை/மகனை கோபிப்பதில்லை என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறேன் - முக்கால் வாசி கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியாவிட்டாலும் கூட.
ரங்கா.
மேலும் ஒரு நகைச்சுவைப் பதிவுக்கு நன்றி!
ஜீவா - பாராட்டுக்கு நன்றி.
ரங்கா.
என் பதில் "எங்கிருந்து வந்ததோ" அங்கு போய்விட்டது.
வேறு வழியில்லை...
:-))
குமார்,
நீங்கள் சொன்ன பதில் போலவே சொல்லலாம் தான்...:-)
ரங்கா.
கருத்துரையிடுக