புதன், டிசம்பர் 20, 2006

ஓணான் வாயில் புகையிலை - ஏன்?

மன்னார்குடியில் பள்ளியின் பெரிய விளையாட்டு மைதானம் பள்ளிக்கு அருகில் இல்லாமல் கொஞ்சம் தொலைவில் இருக்கும். எல்லோரிடமும் சைக்கிள் இருக்காது; கிரிக்கெட் விளையாட மைதானத்துக்குப் போக வேண்டும் என்றால் நிறையப் பேர் கும்பலாக நடந்துதான் போவோம். சந்தடியான தெருவெல்லாம் தாண்டி, அதிகம் ஆள் நடமாட்டமில்லாத பாதையில் போகும் போது, சிலருக்கு ஒரு முக்கியமான விளையாட்டு ஓணானைப் பிடித்து, அதன் வாயில் கொஞ்சம் புகையிலையோ அல்லது கீழே கிடக்கும் பீடி/சிகரெட்டின் தூளையோ (அதுவும் புகையிலைதானே) போட்டு, ஓணான் தள்ளாடுவதைப் பார்ப்பது. இதை செய்யும் தைரியம் சிலருக்குத்தான் உண்டு; எனக்கு அதைப் பார்க்கக் கூட அவ்வளவாக வராது. கொஞ்சம் ஒதுங்கியே சென்று விடுவேன். அப்போதெல்லாம் தோன்றிய கேள்வி 'இதை ஏன் செய்கிறார்கள்?' என்பதுதான்.

நண்பர்களிடம் கேட்டால் வந்த பதிலெல்லாம் 'என் அண்ணன் செய்தேன் என்று சொன்னான்; நானும் அதேபோல விளையாடுகிறேன்' என்ற ரீதியிலேயே இருந்தது. அண்ணன்களைக் கேட்டால், அவர்களும் 'முந்தைய தலைமுறையில் செய்ததாக சொன்னார்கள்; அதான் நானும் செய்தேன்' என்றுதான் சொல்லுவார்கள். இருபது வருடங்களுக்கும் மேலாக பதில் தெரியாத இந்தக் கேள்விக்கு இந்த வாரம் எதிர்பாராத விதமாக ஒரு பதில் கிடைத்தது. அதைத்தான் இங்கு பதிகிறேன். இந்த பதில் எத்தனை தூரம் சரி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்தக் கதை ஆப்ரிக்கப் பழங்குடியினரிடமிருந்து வந்தது. ஸூலூ இன மக்களிடையே இந்தக் கதை பழங்காலந்தொட்டு சொல்லப்பட்டு வருகிறது என்று 1913-ல் வெளியான ‘The Belief in Immortality and the Worship of the Dead, Volume I’ என்ற புத்தகத்தில் சர் ஜேம்ஸ் ஜார்ஜ் ப்ரேசர் (Sir James George Frazer) சொல்லியிருக்கிறார்!

வெகுகாலத்துக்கு முன்னால் கடவுள் (உன்குலுன்குலு - UNKULUNKULU) பூமிக்கு ஒரு ஓணனை அனுப்பி மக்களிடையே அவர்கள் இறக்காமல் இருக்குமாறு சொல்லச் சொன்னாராம். ஓணானும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்ததாம். வழியிலே அங்கும் இங்கும் அலைந்து விட்டு பழங்களைச் சாப்பிட்டு படுத்துக் கொண்டிருந்ததாம். இதற்கிடையே கடவுளும் யோசித்து, ஒரு பல்லியையும் அனுப்ப, அது மக்களிடத்திலே வந்து ‘நீங்கள் இறக்குமாறு கடவுள் சொன்னார்’ என்று சொல்லியதாம். இகைக் கேட்ட மக்களும் இறக்க ஆரம்பித்தனராம். கொஞ்ச நாள் கழித்து ஓணானும் மெதுவாக வந்து ‘கடவுள் உங்களையெல்லாம் இறக்காமல் இருக்கச் சொன்னார்’ என்று சொன்னதாம். ஆனால் மக்களோ ‘உனக்கு முன்பாகவே பல்லி வந்து எங்களை இறக்கச் சொல்லிவிட்டது’ என்று சொல்லி – தொடர்ந்து இறக்க ஆரம்பித்தார்களாம். அவர்களுடைய சந்ததியினர் எல்லாம் இதனாலேயே தாமதமாக வந்த ஓணானைப் பழிவாங்க, அதன் வாயில் புகையிலையைப் போட்டு அதைத் துன்புறுத்துகிறார்களாம்.

நம் ஊரிலே மட்டும் தான் இந்த மாதிரி செய்கிறார்கள் என்று நினைத்தால், காலங்காலமாக ஆப்ரிக்காவிலும் இதே போல செய்திருக்கிறார்கள், மற்றும் ஒரு கதையும் இருக்கிறது என்பதைப் படிக்க ஆச்சரியமாக இருந்தது. உங்களுக்கு இது போல ஏதாவது கதை தெரியுமா?

10 கருத்துகள்:

ஜி சொன்னது…

அட... நான் கூட சின்ன வயசுல பாத்திருக்கேன். ஓணான அடிச்சி, அத கயிறுல கட்டி தொங்க உட்டு, அது மேல மூச்சா போஞ்சி (மயக்கத்த தெளிவுபடுத்துறாங்களாம்), அப்புறம் மூக்குப்பொடி போடுவானுங்க.. அது பாவம் துடிச்சிட்டு இருக்கும்...

ரங்கா - Ranga சொன்னது…

ஜி,

ஆமாங்க. ரொம்ப பாவமா இருக்கும். ஒரு பிராணியை சித்திரவதை பண்ணுவது சரியல்ல - என்னதான் கதை கட்டினாலும். இரண்டு வேறு வேறு கண்டங்களிலே இந்த மாதிரி ஒரே பிராணியை அதுவும் ஒரே மாதிரி சித்திரவதை செய்திருக்காங்க அப்படிங்கறது தான் கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு.

ரங்கா.

வடுவூர் குமார் சொன்னது…

நாகப்பட்டினத்தில் சுருட்டு/புகையிலை கொடுப்பதில்லை.காசு அதிகமோ என்னவோ?
ஒரு முறை பல பசங்களுடன் சேர்ந்து கல்லெறிந்து அடிக்க முற்பட்டபோது,அப்பா பார்த்துவிட்டு செம மாத்து வாங்கியது தான் ஞாபகம் வருகிறது.
ஓணானால் அடி வாங்கிய முதல் ஆளாக நான் இருக்கக்கூடும்.கின்னஸியில் இடம் பெற்றிருக்குமா என்று தெரியவில்லை. :-))
ஆனால் நீங்கள் சொன்ன கதை வித்தியாசமாக பல மையில் தொலைவிலும் நடப்பது போல வந்த கதை அதிசியமாகத்தான் இருக்கிறது.

குமரன் (Kumaran) சொன்னது…

ஓணானைப் பார்த்ததுண்டு. ஆனால் பிடித்து விளையாடியதில்லை. அதனால நீங்கள் சொல்றது தெரியலை ரங்கா அண்ணா. ஆப்பிரிக்க கதை நல்லா இருக்கு. :-)

ரங்கா - Ranga சொன்னது…

குமார்,

பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்க சொல்கிறா மாதிரி இப்போ பல மைல் தொலைவில் இருந்தாலும், ஒரு காலத்தில் பூமியின் அத்தனை நிலப் பரப்பும் ஒண்ணாத்தான் இருந்தது அப்படின்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க! அது ஒரு காரணமோ என்னமோ!

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

குமரன்,

அந்தப் புத்தகத்தில் இன்னும் பல கதைகள் இருக்கு. உதாரணத்துக்கு ஒருவர் இறந்துவிட்டால், அந்த குடும்பத்தவர்கள் (மகன், கணவர்) தலையை மொட்டை போட்டுக்கொண்டு, கடலில் குளித்து விட்டு வருவார்களாம் - இதுவும் ஒரு ஆப்ரிக்கப் பழங்குடி இனத்தவரிடம் காணப்படுகின்ற சடங்குதான்.

ரங்கா.

இலவசக்கொத்தனார் சொன்னது…

ஓணானை விடுங்க. தும்பி வாலில் கயிறு கட்டி, அந்த கயிற்றின் மறு முனையில் ஒரு கல்லைக் கட்டி அந்த தும்பியை ஒரு கார்கோ ஹெலிக்காப்டராக மாற்றுவார்களா? அதைச் சொல்லுங்க!

ரங்கா - Ranga சொன்னது…

இ.கொ.

இந்த பதிலே எதிர்பாராதவிதமாக கிடைத்த ஒன்று. நிச்சயம் தும்பியின் வாலில் கயிறு கட்டுவதற்கும் ஏதாவது கதை இருக்கும். கிடைத்தால் நிச்சயம் பதில் தருகிறேன்.

ரங்கா.

Hariharan # 03985177737685368452 சொன்னது…

இராமயணத்தில் இராமன் இலங்கைக்குப் பாலம் கட்டும் சமயத்தில் அணில் கூட சிறு கல் எடுத்துவந்து உதவியது. ஆனால் ஓணான் ஒண்ணுக்குப் போய் உதவி செய்யாமல் உபத்திரவம் செய்ததாக தமிழகத்தில் வழக்குக் கதை இருக்கிறது!

காலகாலமாக ஓணான் இந்தியாவில் குறிப்பாகத் இராமயணத்தில் வரும் இலங்கைப் பாலத்தின் அருகாமையிலிருக்கும் தமிழகத்தில் இம்மாதிரி துன்புறுத்தப்படுவது என்பது நமது புராண இதிகாசக் கதைகளால் தான்! :-))

ரங்கா - Ranga சொன்னது…

கதை பற்றி சொன்னதற்கு நன்றி ஹரிஹரன். எனக்கு இது தெரியாது. ஒரு விலங்கை துன்புறுத்துவதற்காக கதைகள் என்ன சொன்னாலும் மனது ஏற்க மாட்டேன் என்கிறது. அதே சமயத்தில் தொலைதூர இடங்களிலும், ஒரு குறிப்பிட்ட பிராணியை அதுவும் ஒரே மாதிரி துன்புறுத்துவது (வேறு வேறு கதையாக இருந்தாலும்) கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கிறது.

ரங்கா.