ஞாயிறு, செப்டம்பர் 03, 2006

காப்பி – 9

காப்பியின் காரணமாக எனக்குள் எழுந்த உணர்ச்சிகள் அதிகம். முதலில் என்னை வெறுப்பேற்றும் சில விஷயங்கள். சிலர் காப்பி அருந்தும் போது 'சர்ர்ர்'ரென்று உறிஞ்சுவார்கள். எனக்கு, சிறு வயதில் மாதவனூர் கிராமத்தில், மாட்டுக்கு தவிட்டுத்தண்ணீர் காட்டுகையில் அது நாக்கை நீக்கி உறிஞ்சிக் குடிக்கும் நினைவுதான் வரும். நிச்சயம் எனக்கு கோபம் வரும்; கட்டுப் படுத்திக் கொள்வேன். இரண்டாவதாக சிலர் காப்பியை நிரம்பக் குடித்துவிட்டு, மிக அருகே நின்று பேசுவார்கள். அவர்கள் வார்த்தையெல்லாம் காப்பி மணம். இதுவும் எனக்கு கோபத்தை வரவழைக்கும் ஒரு விஷயம். இந்த இரண்டைத் தவிர இப்போதெல்லாம் வரும் மற்ற உணர்ச்சிகள் ஒரு விதமான சந்தோஷமும், ஆச்சரியமும் தான். நான் விரும்பிக் குடிக்கையிலே சந்தோஷம்; இந்தக் காப்பி சம்பந்தமான நினைவுகள் தரும் ஆச்சரியம்.

மன்னார்குடியில் இந்தக் காப்பிக்காக, சீக்கிரமே எழுந்து, பால் காரர் தெரு முனையில் வரும் போதே மடக்கி பால் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அவசரமாக வருவோம். காப்பியின் மேல் அவ்வளவு ஒரு பற்று (வெறி). இது எனக்கு மட்டுமல்ல; தெருவில் உள்ள முக்கால்வாசி வீடுகளில் அந்த சொசைட்டி பால் தான். பால் வர கொஞ்சம் தாமதமாகிவிட்டால், தெரு முனையில் ஒரு பெரிய கும்பலே பாத்திரங்களோடு காத்திருக்கும்! எல்லொருக்கும், காலைக் காப்பியின் மேல் அவ்வளவு ஒரு பிடிப்பு. பண்டிகைக் காலங்களில், பால் தட்டுப் பாடு காரணமாக, பால் காரர் கொஞ்சம் கடுபிடியாக இருப்பார். மற்ற நாளில் அவர் முகத்தில் இருக்கும் சிரிப்பு மறைந்து, கோபம் தெரியும். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டு வாசலில் தான் வந்து பால் வாங்க வேண்டும் என்று சொல்லிவிடுவார்! தெருவில் அனேகம் பேர் முகத்தில் கோபம் தான் தெரியும். அதைப் பார்க்கும் போது ஒரு டம்ளர் காப்பி எப்படி மனிதர்களை மாற்றுகிறது என்று மிக நன்றாகத் தெரிந்து கொள்ளலாம்.

சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது காப்பி சூடாக இல்லை என்றலோ, அல்லது பாலோ, சக்கரையோ குறைவு (அல்லது அதிகம்) என்றோ அம்மாவோடு சண்டை போட்டிருக்கிறேன், கோபித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்க்கையில் கொஞ்சம் குற்ற உணர்வும், அதிக வருத்தமும் வருகிறது - இப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று. இப்போது, முதல் வேளை போட்ட காப்பி (சமயத்தில் முதல் நாள் மாலை பொட்டதாக் கூட இருக்கும்), அதிகமாக இருந்து விட்டால், அதிகம் யோசிக்காமல், அதை எடுத்து, பால் கலந்து, மைக்ரோவேவ் செய்து சாப்பிடுகிறேன். இதை 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்று எடுத்துக் கொள்வதா, அல்லது, நான் வளர்ந்து கொஞ்சம் மனிதனாயிருக்கிறேன் என்று எடுத்துக் கொள்வதா என்று தெரியவில்லை.

அலுவலகத்தில் எத்தனை முறை “I am not in a good mood; I need coffee” என்று ஒரு சாக்கு வார்த்தையைக் கேட்டிருப்பேன்! சிறு குழந்தையாக் இருக்கையில் யாரும் காப்பி குடித்ததில்லை. அப்போது மட்டும் மூடு நன்றாக இல்லையா என்ன? இந்த காப்பி பழக்கமும், மூக்குப் பொடி அல்லது புகையிலை போடும் பழக்கமும் ஒன்றே! மனித உடம்பில், மனத்தில் ஒரு தேவையை ஏற்படுத்திக் கொண்டு, அந்த தேவைக்கு கடைசியில் அடிமை போலாகி, தேவை பூர்த்தியாகாத போது கோபம் வந்து, அதனால் கூட இருப்பவர்களின் நிம்மதியையும் குலைத்து தன்னையும் வருத்திக் கொள்வது ஒரு விதமான பைத்தியக்காரத்தனம். இதை நானும் செய்திருக்கிறேன். உணர்ந்து ஒப்புக் கொள்ள கொஞ்ச வருடங்கள் ஆகி விட்டன. இருந்தாலும், இந்த வஸ்து தந்த சந்தோஷங்களை பொய் என்று ஒதுக்கவும் முடியவில்லை. அதன் விளைவே இந்தத் தொடர்.

இப்போது மனம் கொஞ்சம் பக்குவப் பட்டு இருக்கிறது. இதற்காக 'வீட்டிலே யாருக்கும் காப்பி கிடையாது; இருந்தால் தானே குடிக்கிறோம்' என்றெல்லாம் கிளம்பப் போவதில்லை. அது 'சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்னும் நரியின் கதைதான். சென்ற பதினெட்டு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக சக்கரையை நிறுத்தி, அளவையும் குறைத்து, இப்போது ஒரு நாளைக்கு ஒரு கோப்பை என்று வந்திருக்கிறேன். ஒரு முடிவுரை போல் காப்பியைப் பற்றி பதிந்து விட்டு, பழக்கத்தை விட்டு விடலாம் என்று எண்ணம். இந்தப் பதிவோடு, காப்பி தொடரும் முடிகிறது - ஒரு விதத்தில் என் காப்பிக் கடையும் மூடுகிறது. இதில் வருத்தம் இல்லை :-) உணர்ந்து, அறிந்து எடுத்த முடிவு - ஆகையால் ஒரு விதமான அமைதியும் முழுமையும் தெரிகிறது.

பின்னூட்டமிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

முந்தைய பதிவுகள்
காப்பி - 8
காப்பி - 7
காப்பி - 6
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1

8 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

திரு ரங்கா
காப்பி,மூக்குப்பொடி & புகையிலை-இதில் ஒன்று இன்றும் என் அப்பாவை விட மாட்டேன் என்கிறது.
அவர் இங்கு வந்த போது அது தீர்ந்து, கிடைக்காமல் கஷ்டப்பட்டேன்.நல்ல வேலை நமது மக்கள் வழிகாட்டல் எனக்கு வழிகாட்டியது.:-))

கப்பி | Kappi சொன்னது…

அருமையான தொடர்...

நன்றி ரங்கா!!

துளசி கோபால் சொன்னது…

பாண்டி பஸார் லேயும் ஒரு காபிப் பொடிக் கடை இருக்கு.
வாசனை புடிச்சுக்கிட்டே அங்கெ போய் சேர்ந்திருக்கேன்:-))))


நாலஞ்சு வயச்சா இருக்கும்போதே நான் காபிக்கு அலைவேனாம். குழந்தையாச்சேன்னு
பால், ஹார்லிக்ஸ் எல்லாம் கொடுத்தால் 'த்தூ.......

குடும்பம் பெருசு. அதனாலெ காப்பி கலக்கறதே ஒரு குண்டான்லே. எல்லார் டம்பளரிலும்
ஊத்துன்னதுக்கு அப்புறம், அந்தக் காலிக் குண்டானைத் தூக்கி வச்சுக்கிட்டு எல்லா டம்பளரில்
இருந்தும் கொஞ்சம் ஊத்தச் சொல்வேன். இப்படிக் கலெக்ட் ஆனதோட என்னோட காபியையும்
ஊத்தி ஆத்து ஆத்துன்னு நுரைவர ஆத்திக்கிட்டே இருப்பேனாம். அப்புறம் குண்டான்
நிறையக் காப்பி!!!!

இதெல்லாம் இப்ப அடங்கி ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு ஆகி இருக்கு.
எல்லாம் 'குந்தினியா குரங்கே உன் சந்தடியெல்லாம் அடங்க'ன்னு:-))))

இந்தத் தொடரை ரொம்ப ரசிச்சேன் ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

என்ன குமார், திரு. என்று அடைமொழியெல்லாம் போட்டுக் கூப்பிடறீங்க :-) உண்மைதான், என் உறவினர் சிலர் இந்தமாதிரி வெற்றிலை, புகையிலை என்றெல்லாம் பழக்கிக் கொண்டு, தானும் கஷ்டப்பட்டு, மற்றவர்களையும் கஷ்டப் படுத்தினார்கள். சில பழக்கங்களிலிருந்து மீளவது கடினம்தான்.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

துளசி,

உங்களுக்கும் இந்த தொடர் பிடித்திருந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. சின்ன வயசில காப்பிக்கு எங்க வீட்டிலயும் தடைதான். ரொம்ப அடம் பண்ணினதால, அப்பா ஆபீஸ் போனப்பறம் அம்மா கொஞ்சமா டிகாஷன் விட்டு பாலைத் தருவாங்க. உங்களோட 'ஆளுக்கு கொஞ்சம் காப்பி' யோசனை நல்லா இருக்கு :-)

நீங்க குரங்கப் பத்தி சொன்னவுடனே வேற ஒண்ணு நினைவுக்கு வருது - 'வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்' அப்படின்னு ஒரு கதை உண்டு. அது போல காப்பியும், கொஞ்சம் கொஞ்சமா மாறி கடைசில குரங்குக்கு கையில மேளம் கிடைச்ச மாதிரி, எனக்கு இந்தத் தொடர் வந்து சேர்ந்திருக்கு; காப்பி காலி!


ரங்கா.

இலவசக்கொத்தனார் சொன்னது…

நானும் துளசி டீச்சர் சொல்லறதுதான்.

//இந்தத் தொடரை ரொம்ப ரசிச்சேன் ரங்கா.//

:-D

ரங்கா - Ranga சொன்னது…

இ.கொ.,

உங்களுக்கு பிடித்தது பற்றி மகிழ்ச்சி.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

கப்பி சார்

பாராட்டுக்கு மிக்க நன்றி :-)

ரங்கா.