சனி, ஆகஸ்ட் 19, 2006

காப்பி - 1

நிறைய இடங்களில் காபி என்று எழுதியதைப் பார்த்திருந்தாலும், எனக்கு காப்பி என்று எழுதியே பழகிவிட்டது; எது சரி? காபியா, காப்பியா? இந்த வருட ஆரம்பத்தில் எடுத்த ஒரு முடிவு ஒரு நாளைக்கு இரண்டு கோப்பைக்கு மேல் காப்பி குடிப்பதில்லை என்று. முப்பது வருடங்களுக்கு மேலாக இருக்கும் பழக்கத்தை சட்டென்று விட முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உத்தேசம். எப்போதாவது தான் சக்கரை சேர்த்துக் கொள்கிறேன். இன்னும் கொஞ்ச நாட்களில் (வருடங்களில்?) மொத்தமாக விட்டு விடலாம் என்று எண்ணம். காப்பி குடிப்பதை விடப் போகிறேன் என்பதால், இந்தப் பதிவுகள் ஒரு மாதிரியான நினைவு அஞ்சலி என்று வைத்துக் கொள்ளலாம்.

என் நினைவில் நிற்கிற காப்பி தொடர்பான விஷயங்களில் முதலாவது எது என்று யோசித்தால், நான்கு வயது இருக்கும் போது மாதத்திற்கு ஒரு முறை என் அம்மா காப்பிக் கொட்டைகளை வறுத்ததுதான். இராமநாதபுரத்தில் வடக்குத் தெருவில் எங்கள் வீடு. ஒரு விறகு அடுப்பில் இரும்பு வாணலியில் பச்சைக் கொட்டைகளைப் போட்டு அவை கருக்கும் வரை நன்கு வறுத்து, கூடத்தில் சுத்தம் செய்த தரையில் சூடு ஆறுவதற்காக பரப்பி வைப்பார்கள். புகையும், காப்பிக் கொட்டை வறுக்கும் வாசனையும் கலந்து வீடு முழுவதும் அடிக்கும். பொழுது போகாமல் அவ்வப் போது கசப்பான வறுபட்ட காப்பிக் கொட்டைகளைச் சாப்பிடுவேன். சூடு ஆறியதும், அந்தக் கொட்டைகளை ஒரு சின்னதான காப்பிக் கொட்டை அரைக்கும் மிஷினில் - ஒரு சமயத்தில் இரண்டு கைப்பிடி தான் அரைக்க முடியும் - அம்மாவுக்கு உதவியாக அரைப்பேன். அரைத்து தட்டில் விழும் பொடியை டப்பாவில் போட்டு வைப்பது அம்மாவின் வேலை - நான்கு வயதில் எனக்கு கீழே கொட்டத்தான் தெரியும்!

வறுத்த காப்பிக் கொட்டைக்கு இந்த மணம் என்றால், காப்பிக்கு வேறு விதமான வாசனை. அனேகமாக பாலைக் காய்ச்சுவது குமுட்டி அடுப்பில்தான். இரும்பில் ஒரு கோப்பை வடிவில் இருக்கும். கரியைப் போட்டு எரித்து, பாத்திரத்தை கரியின் மேல் வைத்து பாலைக் காய்ச்சுவார்கள். கரியைப் பற்ற வைக்க முதலில் சூடம், தேங்காய் நார்/மட்டை, மண்ணெண்ணை போன்றவைகள் உபயோகப் படுத்தப் படும். கரி நன்றாக எரிய அவ்வப் போது ஊத வேண்டியிருக்கும்.

காப்பி பில்டர் பித்தளையில் பெரிதாக இருக்கும். ஒரு முறை தொட்டு கை சுட்டுவிட்டதால் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத ஒன்று! முதலில் காப்பிப் பொடியைப் பில்டரின் மேல் பாத்திரத்தில் போட்டு, கொதிக்கின்ற வென்னீரை விட்டு, பின் ஒரு கைப்பிடியோடு இருக்கும் ஜல்லடைத் தட்டை போட வேண்டும். முதல் முறை மிக வேகமாக தண்ணீர் இறங்கிவிடும். மொத்தத் தண்ணீரும் இறங்கியபின், கீழ் பாத்திரத்தில் இருக்கும் டிகாஷனை மறுபடியும் மேல் பாத்திரத்தில் கொட்டி, இரண்டாம் முறை இறங்கிய டிகாஷனை காப்பிக்காக உபயோகிப்பார் அம்மா.

காய்ச்சின பாலோடு, காப்பி டிகாஷனையும் கலந்து, சக்கரை போட்டு, நுரை வரும்வரை நன்று ஆற்றி, தகுந்த சூடு வந்தவுடன் டம்ளர், டபராவில் தருவார்கள். குமுட்டி அடுப்பை ஊதும் போது எரிந்த தேங்காய் நாரோ, கரித்துண்டோ சமயத்தில் காப்பியில் கலந்து வரும். அந்த காப்பியின் மணமே ஒரு போதை தரும் - பால், காப்பிக் கொட்டை, எப்போதாவது மண்ணெண்ணை, கரி, சூடம் என்று ஒரு கதம்பமான வாசனை!

அடுத்த பதிவில் தஞ்சாவூர் ஜில்லாவில் வசித்த போதும், சென்னையில் வசித்த போதும் குடித்த காப்பி பற்றிய நினைவுகளை பதிகிறேன்.

9 கருத்துகள்:

Alex Pandian சொன்னது…

Super..! continue please.

- Alex

Boston Bala சொன்னது…

அலெக்ஸ் பாண்டியனாரை வழி மொழிகிறேன். ராத்திரிக்கு கூட காப்பி குடிக்கணும் போல மணந்து தூண்டும் பதிவு

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி அலெக்ஸ். தொடராக எழுதத்தான் எண்ணம் :-)

ரங்கா - Ranga சொன்னது…

பாராட்டுக்கு நன்றி பாலா.

ரங்கா - Ranga சொன்னது…

ஆமாம் அப்பு. பொறந்தது பரமக்குடிதான்.

ரங்கா.

கப்பி | Kappi சொன்னது…

அடுத்த பாகம் எப்போது??

எதிர்பார்ப்புடன்,
காபி ரசிகன் (நான் ப் இல்லாமலே எழுதி பழகிடுச்சுங்க ;)-)

ரங்கா - Ranga சொன்னது…

பாராட்டுக்கு நன்றி கப்பி பய அவர்களே! அடுத்த இரண்டு பாகங்கள் வந்தாச்சு.

ரங்கா.

நாமக்கல் சிபி சொன்னது…

ஒரு டீவிரவாதியான என்னைக் கூட காப்பி குடித்தால் என்ன என்று யோசிக்க வைத்து விட்டீர்கள்.

ரங்கா - Ranga சொன்னது…

சிபி,

வருத்தப் படாதீங்க. இது முடிஞ்சதும், 'சாயா' பத்தியும் எழுதலாம்னு ஒரு எண்ணம்.

ரங்கா.